
அகத்தியப் பெருமானின் அடுக்குநிலை போதம் – 1
யாரை குருவாக ஏற்றுக்கொள்ளலாம்?? என்று அகத்திய முனிவர் அருளிச் செய்த அடுக்குநிலை போதம் என்ற ஞானப் பெட்டகத்தைப் படிக்கலாம்.
சொல் பிறந்த இடம் எங்கே? முப்பாழ் எங்கே?
துவார பாலகர்கள் எங்கே? முதற்பாழ் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே? வைகுந்தம் எங்கே!
நாரணனும் ஆலிலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூதம் ஒடுக்கம் எங்கே?
ஆறைந்து யிதழ்ரெண்டு முளைத்த தெங்கே!
சொல்ல வல்லாருண்டானா லவரை நாமும்!
தொழுது குருவெனப் பணிந்து வணங்கலாமே! (1)
உந்தியெனும் நிலையெங்கும் அறுகோணம் எங்கே?
ஓங்கார நிலை எங்கே? உற்றவிடமும் எங்கே?
மந்திரமுஞ் சாஸ்திரமும் பிறந்தது எங்கே?
மறை நாலும் விரித்த வயன் தானும் எங்கே?
முந்தி வரும் கணபதியும் பிறந்தது எங்கே?
முக்கோண முனை எங்கே? அடிதான் எங்கே?
இந்தவகைப் பொருள் அறிந்து சொல்வார் தம்மை
இறைவன் என்றே கருதி இயம்பலாமே! (2)
பற்பதத்தில் பொங்கி வரும் வழிதான் எங்கே?
பரிந்து முறை கொண்டு நின்ற அறிவும் எங்கே?
உற்பனமாங் கருநின்று விளைந்தது எங்கே?
ஒருபாதம் தூக்கி நின்ற அடையாளம் எங்கே?
தற்பரமாயாகி நின்ற நிலைதான் எங்கே?
சர்வ உயிராய் எடுத்த சிவனும் எங்கே?
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்
தம்மை இறைவன் என்றே கருதி இயம்பலாமே! (3)
அடிமுடியும் நடுவான நிலையும் எங்கே?
அறுசுவையும் கொண்டு ஒழித்த இடமும் எங்கே?
வடிவான ஐந்தலை மாணிக்கம் எங்கே?
வரையான ஊமை என்னும் எழுத்தும் எங்கே?
இடமாகஆடி நின்ற பாதம் எங்கே?
இச்சையுடன் பேசிநின்ற எழுத்தும் எங்கே?
அடைவாய் இப்பொருளறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குருவென்று நம்பலாமே! (4)
சற்குருவும் சந்நிதியும் ஆனது எங்கே?
சாகாத கால் எங்கே? வேகாத் தலையும் எங்கே?
முப்பொருளும் ஒரு பொருளாய் நின்றது எங்கே?
முனை எங்கே? தலை எங்கே? முகமும் எங்கே?
நற்கமலமாய் ஆயிரத்தெட்டு இதழும் எங்கே?
நாலுகை ஒருபாதம் ஆனது எங்கே?
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்
தம்மை இறைவன் என்றே கருதி இயம்பலாமே! (5)
நஞ்சணிந்தான் முகந்தான் ஐந்தும் எங்கே?
ஞானக் கண் மற்றக்கண் மூன்றும் எங்கே?
அஞ்ச உயிர்தனைக் கெடுக்கும் எமன் எங்கே?
ஆயிரங் கண் இந்திரனார் தாமும் எங்கே?
பஞ்சறிவால் நின்ற பராசக்தி எங்கே?
பதினாலு லோகம் எனும் அதுதான் எங்கே?
வஞ்சம் அற பொருளறிந்து சொல்வாராகில்
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே! (6)
நகை பிறந்த இடம் எங்கே? கோபம் எங்கே?
நரம் ஏழா நரகம் ஆனது எங்கே?
திகைத்து மறந்திடம் எங்கே? நினைப்பும் எங்கே?
தீராத குறை வந்து சூழ்ந்தது எங்கே?
பகைத்த இடந்தான் எங்கே? ஒழுக்கம் எங்கே?
பகலிரவு இருந்த இடந்தான் எங்கே?
வகை பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்தம்மை
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே! (7)
ஆறுகால் முகம் ஆறும் ஆனது எங்கே?
அறுபத்து நாலுகலை நின்றது எங்கே?
சீருகால் பன்னிரண்டில் கழிந்தது எங்கே?
செத்திடமும் சாகாது இருந்த இடமும் எங்கே?
பூருவ நீயிருந்து வந்து பிறந்திடம் தானும் எங்கே?
புந்திதனில் அம்பத்தோர் அச்சரமும் எங்கே?
வேறு பொருளுரையாது உள்ளபடியே சொல்வார்
மெல்லடியிலே பணிந்து மெலியலாமே! (8)
ஆதியிற் சந்திரனும் பிறந்தது எங்கே?
அவர் ஒடுங்கி நிற்கும் அது இடமும் எங்கே?
சாதிபல ஒன்றாகக் கண்டது எங்கே?
சத்தி சிவம் என்று பிரியாதது எங்கே?
ஓதி உணர்ந்த பூசை மறந்தது எங்கே?
உச்சிட்ட நிட்டத்தே இடமும் எங்கே?
சோதிபோல் ஞானமொழி பெற்ற பேர்கள்
சொல்லியது எல்லாம் உடலில் சொல்லுவாறே! (9)
இருள்பிறந்த இடம் எங்கே? ஒடுக்கிடமும் எங்கே?
இரண்டு திரிசங்கு நின்ற இடமும் எங்கே?
அருள்பிறந்து பாடி நின்ற இடமும் எங்கே?
அறுத்தடைத்த வாசல் ஒன்று கண்டது எங்கே?
திருபிறந்த இடம் எங்கே? எழுகிணறும் எங்கே?
திருக் கிணற்றை இறைக்கின்ற ஏத்தம் எங்கே?
விருப்பமுடன் அடுக்கு நிலைப் போதகத்தை
விளம்பினோம் மெய்ஞ்ஞான அறிவுள்ளோர்க்கே! (10)