
நான் யார்?
இன்று அதிகாலை நமது சற்குரு மொழிந்தது – பிரமஞானத் தவத்தின் உச்சம் (10.08.2023)
நீ தேடுவது, உன்னிலிருந்து பிரிக்கப்பட்ட வேறொன்றா அது? உன்னிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றை வேண்டுமானால் நீ தேடலாம். ஆனால் நீயாகவே இருக்கும் ஒன்றினைப் போய் நீ எப்படி வெளியே தேட முற்பட முடியும்? வேறு அனைத்தும் தேடப்படும் வகையில் உன்னுடைய சுயத்தினையும் நீ தேட முடியாது. ஏனென்றால், இந்த விசயத்தில் தேடுகிறவனுக்கும் தேடப்படும் பொருளுக்கும் வித்தியாசம் கிடையாது. உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் வேண்டுமானால் நீ வெளியே தேடலாம். ஆனால், உன்னையே நீ வெளியில் தேட முடியாது. உள்ளே உறையும் தனது சுயம் என்ன என்பதை வெளியே தேடிக் கொண்டு செல்பவன், அவனுடைய சுயம் எனும் சத்தியத்திலிருந்து மிகவும் விலகி வெகுதூரம் போய் விடுகின்றான். இந்த உண்மையை முழுதும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் தேடுதல் என்பது சாத்தியப்படும்.
பொருள் சார்ந்தவற்றை இவ்வுலகில் நீங்கள் வேண்டினால், அவற்றை நீங்கள் வெளியுலகில்தான் தேடிப் பிடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, தனக்குள் தான் அடங்கி, கலக்கப்படாமல், படபடப்போ பரபரப்போ இன்றி மாற வேண்டும். நீங்கள் என்னவோ அந்த சத்திய நிஜத்தை, முழு நிசப்தத்திலும், எதுவும் அற்ற காலியான மனநிலைமையிலும்தான் காண முடியும். நினைவிருக்கட்டும்….. தேடுதல்கூட ஒருவகையில் இறுக்கம்தான். வேட்கைதான், தாகந்தான், படபடப்புதான். சுயம் என்பது வேட்கையில் அலையும்போது அனுபவப்படாது. ஆன்மா, பதைபதைப்பான புத்திக்குள் புலப்படாது. இதுதான் இங்குள்ள ஒரு சிரமம். வேட்கை என்பது, ஏதோவொன்றாய் நாம் ஆகிவிடத் துடிப்பது அல்லது எதுவோ கைசேர நாம் பிரயத்தனப்படுவது. ஆனால், ஆன்மா என்பதோ ஏற்கனவே அடையப்பட்டு விட்ட ஒன்று. கைகூடிவிட்ட ஒன்று. ஆன்மா என்பதுதான் நான், என் சுயம். வேட்கையும் ஆன்மாவும் இருவேறு துருவங்கள். அவை எதிரெதிர் பரிமாணங்கள்.
ஆன்மா என்பது அடையப்படக் கூடியது. ஆனால் அது தேடப்படும் ஒரு பொருளாக ஆகாது என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மாவைப் பொறுத்தமட்டில் எந்தவிதமான தாகமும் அதற்கு இருக்க முடியாது. உலக மாயா காரியங்களுக்குத்தான் ஆசையும், தேவையும். ஆன்மாவுக்கு அல்ல. காமம் நிறைந்த சிற்றின்பத்தை நாடுவதும் ஆசைதான் ; காமமற்ற பேரின்பத்தை தேடுவதும் ஆசைதான். காசுக்காக ஓடுவதும் ஆசைதான் ; தியானம், தவத்திற்காக உட்கார்ந்து விடுவதும் ஆசைதான். பதவி, பெருமைகளுக்காக உலகத்தோடு ஒட்டுறவாடுவதும் ஆசைதான் ; இறைமையை உணர்வதற்காக உலகை உதறுவதும் ஆசைதான்.
சிற்றின்பத்திற்கு என்றாலும் சரி, ஞானம் என்ற பேரின்பத்திற்கு என்றாலும் சரி, எதற்காக ஆனாலும், வேட்கை என்பதற்கு வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஆசைதான். எந்த ஆசையும் பேராசையே. ஆசை என்பது பற்று ; சிறைப்படுத்தும் விலங்கு ; பந்தம். வேட்கை என்றால் என்ன என்பது நமக்குப் புரிந்துவிடும்போது நாம் வேட்கையிலிருந்து விடுவிக்கப்படுவோம். ஏனென்றால், இந்த புரிதல்தான் ஆசையின் வலி கொடுக்கும் இயல்பினை அவனுக்கு வெளிப்படுத்துகின்றது. வலி என்றால் என்ன என விளங்கிக் கொள்வதுதான் வலியிலிருந்து கிடைக்கும் விடுதலை. வலியை அனுபவித்துவிட்ட பிறகு அதனை ஏற்படுத்துவதன் மேல் ஒருவரும் ஆசை கொள்ள மாட்டார்கள்.
பிறகு, வேட்கை இல்லாத அக்கணத்தில், ஆசையால் சிந்தனை தொந்தரவு பண்ணப்படாத அந்நொடியில், நீங்கள் எதையும் தேடாத அந்த நேரத்தில், அந்த உயர்ந்த கணப்பொழுதில், அந்த அமைதியான, ஆழ்ந்த, நிசப்தமான மனோநிலையில், நீங்கள் யார் எனும் சுயத்தினை அதிகாரப்பூர்வமாக நீங்கள் அனுபவிப்பீர்கள். வேட்கை மறைந்து விடும்போது, ஆன்மா தானாய் பூத்து மலர்ந்துவிடும். ஞானம் என்பது எந்த உள்ளடக்கமும் இல்லாத ஓர் மெய்யுணர்வு. வெற்றிடம். காலி. ஞானம் ஒரு வெற்றிட பிரக்ஞை. தூய பிரக்ஞை. பரிசுத்த உணர்வு. இந்த நிசப்தமான அமைதி தருணத்தில, சத்தியத்துக்கான கதவு திறந்து கொள்கின்றது. வெற்றிடமாகிப் போகும் புத்தியில்தான் சத்தியம் உணரப்படுகின்றது. இதன் விளைவாக ஒருவனுடைய முழு வாழ்க்கையுமே உருமாற்றம் கொள்கின்றது.
இந்த வெற்றிட நிலைமையை, இந்த ஞான அனுபவத்தை, ஒருவன் தியானத்தால், தவத்தால் கிடைக்கப் பெறுகின்றான். ஆனால், தவம் என்று பொதுவாய் எது விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதோ உண்மையில் அது தவமல்ல. அதுவும்கூட சிந்திப்பதற்கான ஒருவகைதான். அந்த சிந்தனை ஒரு நற்சிந்தனையாக, ஆன்மா அல்லது இறைவன் சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம். இருந்தாலும்கூட அது சிந்தனைதான். எதைப்பற்றிய சிந்தனை என்பது ஒரு பொருட்டு கிடையாது. சொல்லப்போனால், சிந்தனை என்பதன் அடிப்படைக் குணமே புறம் சார்ந்ததுதான். எது சுயம் கிடையாதோ அதனுடன் அது தொடர்பு கொண்டு நிற்கும். சுயம் என்பது குறித்து எவ்விதமான சிந்தனையும், எண்ணமும், பிரக்ஞையும் இருக்க முடியாது. ஏனென்றால், சிந்தனை இடம் பெற இரண்டு விசயங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று – சிந்திக்கும் நீங்கள். இரண்டு – நீங்கள் எதைச் சிந்திக்கிறீர்களோ அது. ஆக சிந்தனை ஓர் இருமைப் பண்பு கொண்டது. இதனால்தான் சிந்தனை என்பது உங்களை இருமை கடந்து ஒரேயோர் இறைமையாய் தனித்து நிற்கும் ராஜாங்கமான ஆன்மா எனும் ஒருமைக்கு அழைத்துப் போவதேயில்லை. உள்ளூர நீங்கள் விழுந்து, ஆழ்ந்து சென்று, இருமை அற்ற ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கு தவம்தான் வழியே அன்றி, சிந்திப்பது கிடையாது.
சிந்தனையும், தவமும் முழுக்க முழுக்க எதிரெதிர் திசைகளில் போகின்றன. ஒன்று வெளியுலகம் சார்ந்து போவது. மற்றது உள் மன ஆழத்தை நோக்கி செல்வது. மற்றது என்ன என்பதனை விளங்கிக் கொள்ள வழி, சிந்தனை, சுயம் – ஆன்மா – அது என்ன என்பதை அறிந்து கொள்ள வழி, தவம். ஆனால் பொதுவாக சிந்தனை, ஆழ்ந்த யோசிப்பு, இதுதான் தவம் எனக் கொள்ளப்பட்டுள்ளது. எதுவும் செய்யாத ஒரு நிலையில் இருப்பதுதான் தவம். தவம் என்பது எதையோ செய்வதல்ல. ஒரு நிலையில் ஆணியில் அறைந்தாற்போல நிலைபெற்று விடுவது அது. ஒருவனுடைய சுயம் எனும் ஆன்மாவில் போய் நிலைத்து நிற்பதாகும் தவம்.
நாம் நமது பல்வேறு நடவடிக்கைகளால் புற உலகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்கிறோம். எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையால், நாம் நம்முடைய சொந்தமான சுயத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றோம். எதுவும் செய்யாத ஒரு நிலையில் நாம் யார் என்பதனை விளங்கிக் கொள்கின்றோம். மாறாக, அனைத்து விதமான விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு உழன்று கொண்டிருக்கும்போது, நாம் நம் சுயத்தினைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தையே இழந்து விடுகின்றோம். நாம் இருக்கிறோம் என்பதையேகூட மறந்து போகின்றோம்.
நம்முடைய வேலைகளும் அவற்றுக்கான ஓட்டங்களும் மிக நெடியவை. நமது உடல் வேண்டுமானால் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால், நம் சிந்தனையும் புத்தியும் ஓய்வெடுத்துக் கொள்வதே இல்லை. விழித்திருக்கும்போது நாம் சிந்திக்கிறோம். தூங்கும்போது கனவு காண்கிறோம். இடைவிடாது இவ்வாறு நாம் செய்து கொண்டேயிருப்பதால், நாம் யார் என்பதை நாம் விமரிசையாய் மறந்து விடுகின்றோம். நம்முடைய தினசரி நடவடிக்கைளுக்கு மத்தியிலேயே நாம் யார் எனும் அறிதலை இழந்து விடுகின்றோம். விளங்கிக் கொள்ள முடியாத என்ன ஓர் ஆச்சரியம் இது. ஆனால், இதுதான் நிஜம். நாம் தொலைந்து விட்டோம். ஒரு பெரிய திருவிழா கூட்டத்தில் அல்ல. நம் சொந்தச் சிந்தனைகளாலும், நம்முடைய கனவுகளாலும், நம்முடைய தினசரி பணிகளாலும், நடவடிக்கைகளாலும் நாம் நமக்குள்ளேயே தொலைந்து நிற்கின்றோம்.
புத்திக்குள் இப்படித் திசை தெரியாது அல்லாடுவதில் இருந்தும், நாமே உருவாக்கிக் கொண்டுள்ள இந்த நெரிசலில் இருந்தும் நம்மை நாமே அகழ்ந்து ஆராய்ந்து விளங்கிக் கொள்ள, தவம் ஒன்றுதான் வழி. தவம், ஒரு நிகழ்வாக இருக்க முடியாது. அதன் இயல்பு அப்படி. அது ஒரு பரபரப்பான வேலை கிடையாது. எவ்வித சிந்தனைகளாலும் சூழப்படாத புத்தியைக் குறிப்பதாகுவதுதான் தவம் என்பது. எதையும் செய்யாதிருப்பதைத்தான் நாம் பழகிக் கொண்டு வரவேண்டும். தவம் என்ற சொல், எதையோ செய்வது எனும் பொருளைத் தருகின்றது. ஆனால், எதையும் செய்வதைக் குறிப்பதல்ல தவம். ‘நாம் தவம் செய்து கொண்டிருந்தேன்’ என்று சொல்வது தவறு. ‘நான் தவத்தில் இருந்தேன்’ என்பதுதான் சரியான வார்த்தை.
அன்பினைப் போன்றது தவம். ஒருத்தர் அன்பாய் இருக்கலாம், அன்பில் இருக்கலாம். அன்பினை அவரால் செய்ய முடியாது. அன்பையும் கருணையையும் அவரால் பண்ண முடியாது. இதனால்தான் தவம் என்பது புத்தியின் ஒரு நிலைப்பாடு – ஒரு தளம் என்று சொல்கிறேன். நாம் இங்கே குருகுலத்தில் கூடியிருப்பது எதையோ ஒன்றினை செய்வதற்காக அல்ல. மாறாக, எவ்விதமான இயக்கங்களும் அற்ற, தூய்மை குறைந்த எதுவும் இடம் பெற இயலாத ஓர் உன்னத தளத்தில், வெறுமனே போய் ஏறி அமர்ந்து கொண்டு, அதனை அப்படியே அனுபவிக்க, ஆன்மாவின் பரிசுத்த ஜ்வாலை மட்டுமே இருக்கும் புத்தியின் பிரதேசம் இது. ‘நான் ஒரு’ எனும் சிந்தனைகூட அற்றுப்போகும் தளம் இது. ஆன்மா மட்டுமே மிஞ்சியிருக்க, ‘நான்’ என்பதே கரைந்து போயிருக்கும் இறைமைப் பகுதியிது.
இதுவே சூனியம், வெற்றிடம். இங்கு நாம், நாம் சார்ந்திருக்கும் உலகத்தை காண்பது கிடையாது. சத்தியத்தைக் காண்கிறோம். இந்த வெற்றிடத்தில்தான், இந்த கண்மணியின் கருந்துளையில்தான், உங்களை யார் என்று நீங்கள் அறிந்து கொள்வதைத் தடுத்து நின்ற தடுப்புச் சுவரானது தவிடுபொடியாகின்றது. இளங்காலையில் உதிக்கும் கதிரவனாய் ஞானம் உங்களில் எழுகின்றது. இதுதான் ஞானப் பார்வை. தவம் என்பது எதுவும் செய்யாதிருப்பது. செய்தல் என்பது நாம் பண்ண நினைத்தால் பண்ணுவது….. பண்ண நினைக்காவிட்டால் விட்டுவிடுவது. ஆனால், சுயத்தின் இயல்பு செய்தல் எனும் வகையில் சேராது. அது பண்ணுவதும் அல்ல….. பண்ணாமல் விட்டுவிடுவதும் அல்ல.
உதாரணத்துக்கு பார்ப்பதையும் கேட்பதையும் எடுத்துக் கொள்வோம். இவ்விரண்டுமே நம்முடைய இயல்புகள். நாம் ஏதும் பண்ணாமல் இருந்தாலும் இவையிரண்டும் இருக்கும். நமது சுயமான இவ்விரு இயல்புகளும் இடைவிடாது நம்முள்ளேயே உள்ளளன. நிரந்தரமாகவும் இடைவிடாதும் நம்முள் இருப்பதைத்தான் சுய இயல்பு என்கிறோம். இந்த சுய இயல்பு, நம்முடைய படைப்பு அல்ல. இது நம்முடைய அடிப்படை. நம் அஸ்திவாரம். நாம்தான் இது. நாம் இதை படைப்பது கிடையாது. அதனால் நிலை நிற்கின்றோம். ஆகவேதான், நம்மை நிலைநிறுத்தி வைத்துள்ள இதை, நாம் தர்மம் என்கின்றோம். தர்மா என்றால் சுய இயல்பு. சுயத்தின் இயல்பு. தர்மா என்றால் சத்தியத்தின் இருப்பு, ஆன்மா.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளால், நம்முடைய இந்த இடைவிடாத சுய இயல்பு அமுக்கப்பட்டுள்ளதைப் போல, சூரியன் மேகங்களால் மூடப்பட்டுள்ளதைப் போல, நாம் நம்முடைய நடவடிக்கைகளால் மூடி வைக்கப்பட்டுள்ளோம். மேற்பரப்பில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைகள், ஆழத்திலுள்ள ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளன. ஒப்புயர்வற்ற சமுத்திரத்தின் அடியாழத்து ரகசியங்களை பைசா பெறாத அலைகள் மறைத்துக் கொண்டு பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. மாசுபடாத இறைமை, ஒன்றுக்கும் உதவாத நமது நடவடிக்கைகளால் அமுக்கப்பட்டுள்ளது என்பதும், கண்ணில் விழுந்த ஒரு சிறு தூசி மலைகளையே மறைத்து விடுவதும் என்பதுதான் விந்தையிலும் விந்தையாய், புரியாத புதிராய் இருக்கிறது.
ஆனால், அலைகள் இருப்பதனால் சமுத்திரங்கள் காய்ந்து போய் விடுவது இல்லை. சொல்லப் போனால் அலைகளில் இருக்கும் அதே உயிர்ப்புத்தான் சமுத்திரத்தின் அடியாழத்திலும் நிலை கொண்டுள்ளது. ஞானம் எய்தியவர்கள், அலைகளிலும் சமுத்திரத்தை அடையாளம் காண்பார்கள். ஆனால், பிறரோ, அலைகள் அடங்கும்வரை காத்திருப்பார்கள். சமுத்திரத்தின் நிசப்த அமைதியை அவர்களால் அலைகள் அடங்கிய பிறகுதான் காண முடியும். எப்போது அலைகள் அடங்குவது? இவர்கள் எப்போது ஞானத்தை அடைவது?
ஆக, அரவமற்ற, சாந்தமும் கருணையும் ததும்பும், சலனமேயில்லாத ’தூய அறிதல்தான் நம் சுய இயல்பு. சுய இயல்பு என்பதற்குள் நாமே முன்வந்து குதித்து விட வேண்டும். அலைகளைப் பற்றி நாம் கவலைப்படாமல் கடலுக்குள் குதித்து விட வேண்டும். நமக்குள் எங்கு சுயம் உள்ளது? நம்முடைய ஆன்மா சிரசிற்குள்ளே எங்குள்ளது? இறைமை உள்ளுக்குள் எங்கே உறைந்து கொண்டிருக்கிறது? என்பதை அதன் ஆழத்துக்குப் போய்தான் நாம் கண்டாக வேண்டும்.
அலைகளற்ற மேலும் சலனங்கள் அற்ற இப்பிரக்ஞை எப்போதும் நம்முள் இடம் பெற்றுதான் இருக்கிறது. ஆனால், நாம்தான் அவ்விடத்தில் இல்லாமல் எங்கேயோ இருந்து கொண்டிருக்கிறோம். அதிலிருந்து நாம் விலகித் திரும்பிக் கொண்டு எதிர்த்திசையில் நிற்கின்றோம். வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம். உலகத்தை, உலகத்து பொருட்களை நாம் கவனித்துக் கொண்டு நிற்கின்றோம். ஆனால், ஒரு விசயத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நாம் பார்க்கிறோம். எது பார்க்கப்படுகின்றதோ, அது உலகம். ஆனால், உள்ளேயிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே அவன் உலகம் கிடையாது. அதுவே நமது சுயம் என்ற ஆன்மா.
எந்தப் பொருளை பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அந்தப் பொருளுடன் நாம் பார்க்கும் செயல் அடையாளம் காணப்படுமேயானால், அதுவே சிந்தனை, எண்ணம். ஆனால், பார்க்கும் செயல், பார்க்கப்படும் பொருளோடு சம்பந்தப்படாது அந்த பரப்பிரம்மம் நோக்கி திரும்பி இருந்தால், அதுவே தவம்.
பார்த்தல் என்பது எண்ணத்திலும் இடம் பெறுகின்றது. தவத்திலும் இடம் பெறுகின்றது. ஆனால், முன்னதில் பொருள் சார்ந்தும் பின்னதில் அப்படி இல்லாமலும் அமைகின்றது. இருந்தாலும் நாம் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் சரி அல்லது தவ உலகத்தில் இருந்தாலும் சரி…. செயல்களில் உழன்று கொண்டிருந்தாலும் சரி அல்லது அவற்றிலிருந்து சுதந்திரம் அடைந்தவர்களாக ஆகியிருந்தாலும் சரி…. ‘பார்த்தல்’ என்பது நிரந்தரம். விழித்திருந்தால் நாம் உலகத்தைப் பார்க்கிறோம். தூங்கினால் கனவினைப் பார்க்கிறோம். தவத்தில் நாம் நம்முடைய சுய ஆன்மாவை பார்க்கிறோம். ஆனால், இந்த மூன்றிலும் ‘பார்த்தல்’ நிரந்தரமாய் இடம் பெறுகின்றது. ‘பார்த்தல்’ என்பது நிரந்தரமானது, இடைவிடாதது. இது நம் ஆன்மாவின் இயல்பு. எந்நிலையிலும் இது இல்லாமல் போனதில்லை. அதனால் நம்மை, நமக்குள் காணவும், நம்மை அறிந்து கொள்ளவும், நம் உயிரைக் காணவும், நம் உயிர்க்கூடான ஆன்மாவைக் காணவும், உயிருக்குள் ஒளியாக – சுடராக – சோதியாக – அருட்பெருஞ்சோதியாக இருக்கும் இறையை காணவும் ‘பார்த்தல்’ என்ற சுடராழி நிகழ்வில் நாம் சதா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிரமஞானக் குருகுலக் கல்வியில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. எதை பார்ப்பது? எப்படி பார்ப்பது? எதற்காக பார்ப்பது? என்பதற்கெல்லாம் விடை சற்குருவின் திருநாவில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
இப்படி நம்மை நமக்குள் பார்க்கும் சுடராழியால், நாம் யார் என்பதைத் தெரிந்து கொண்டு யார் நீ என்ற கேள்விக்கு உயிரே பதிலாக இருப்பதைக் கண்டு கண்டு, விண்டு விண்டு, சதா பேரின்பத்திலேயே திளைத்துக் கொண்டிருக்கலாம் வாருங்கள், என் அன்பு மாணவ, மாணவியர்களே. நாம் அனைவரும் நம் உயிரொளி உலகத்தில் பயணம் செய்வோம். இந்தப் பயணத்தை நம் பிரமஞானக் குருகுலத்திலிருந்து இனிதே தொடங்கி, உயிரில் கரைந்து உயிராய் மலர்ந்திட தவப்பரணி பாடுவோம் வாருங்கள் என் அன்புச் செல்வங்களே.
உங்களிடமிருந்து பணிவோடு விடைபெற்றுக் கொள்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபையிலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!!
திருச்சிற்றம்பலம் !!!
திருச்சிற்றம்பலம் !!!