திருவாசகத்தின் அழகும் ஞானமும்

இறையம்சத்தோடு கூடிய கவிதைகள் இவ்வுலகில் நிரம்ப உண்டு. உலக இலக்கியங்களில் ஒரு முழுமையான ஞானத்தைக் கொண்டிருக்கும் இலக்கிய ஞான நூல்கள் உண்டென்றால், நம் தாய்த் தமிழில் பாடப்பட்ட, பிரமஞானச் சொற்களை தன் தெய்வக் கரங்களிலே அச்சாணி கொண்டு, எல்லாம் வல்ல அந்த பரமேசுவரனாலே எழுதப்பட்ட, தலைமை பீடத்தில் மணிமகுடமாக இருக்கும் நமது உயிர்மலரும் தமிழ் வேதமான திருவாசகத்தை மட்டுமே சாரும். அத்தனை பெருமையுடைத்து நம் திருவாசகம்.


மனிதனுக்காக மனிதன் சொன்னது திருக்குறள்.
மனிதனுக்காக கடவுள் சொன்னது பகவத்கீதை.
கடவுளுக்காக மனிதன் பாடியதுதான் திருவாசகம்.

மற்றெந்த நூல்களுக்கும் இல்லாத ஒரேயொரு பெருமை உண்டென்றால், அது மனிதன் பாடப் பாட இறைவனே அவனின் தெய்வத் திருக்கரங்களால் எழுதினான் என்றால், அந்த பாடல்களின் ஒவ்வொரு சீரும் அடியும் எவ்வளவு தெய்வீக ஞானத்தோடு திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை இங்கே நாம் ஆழ்ந்துப் பார்த்திட வேண்டும்.

ஒரு நூல் எப்படி இருக்க வேண்டுமென்றால், அது கற்போர், படிப்போர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கு உயர்ந்த ஞானநெறியை பரிபூரணமாய்க் கொடுப்பதாக இருக்க வேண்டும். இத்திருவாசகத்தின் அத்தனைப் பாடல்களும் எளிமையாகவும் இனிமையாகவும் ஞானத்தோடும் ஆனந்தப் பரவசத்தோடும் பாடப்பட்டு, நமது உணர்வுகளையெல்லாம் மெல்ல மெல்லக் கரைத்து, கரைத்து கண்களில் தாரை தாரையாய் கண்ணீரைப் பெருக்கி, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இல்லாத சொல்லும் மனமும் உணர்வும் கடந்த ஒரு தொன்மையான ஆனந்தப் பேரின்பத்தை அடையச் செய்து விடுகிறது. இது வேறெந்த நூல்களைப் படிப்பதாலோ, கற்பதாலோ ஏற்பட்டிருக்கக் கூடுமா என்பதை நாம் இங்கே சிந்திக்க வேண்டும்.

இத் தமிழ் வேதமான திருவாசகத்தில் எதை விடுவது? எதைப் பிடிப்பது? இதை உணர்வுநிலையில் நின்று படிக்கும்போது உணர்வற்றுப் போகிறோம் ; காதலாகிக் கசிந்துப் படிக்கும்போது இறைவன்மீது கொள்ளைக் காதலாகிப் போகிறோம் ; வார்த்தைகளின் பொருளுணர்ந்து படிக்கும்போது மனதிற்குள் வார்த்தையற்றுப் போகிறோம் ; அறிவுநிலையில் நின்று சிந்திக்கும்போது அங்கே அறிவு அற்றுப்போய் போகிறோம் ; முடிவைத் தேடும் ஆன்மாக்களுக்கு அங்கே முடிவில்லா ஞானம் கிடைக்கப் பெறுகிறோம் ; துன்பத்தில் உழலும் மக்களுக்கு அங்கே சொர்க்கலோகம் கிடைத்துவிடுகிறது ; விடியலைத் தேடும் சாதகர்களுக்கு கதிரவனே கிடைத்து விடுகிறான் ; இருளில் வாழும் மனிதர்களுக்கு அங்கே அணையா விளக்கே கிடைத்து விடுகிறது. என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது? இத்திருவாசகப் பெருமைகளை, சிறப்புகளை. சொல்லில் வடித்துவிட இதுவென்ன கற்சிலையா? பாட்டில் சொல்லிவிட இதுவென்ன காவியமா? கால, தேச, வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கும் பிரமஞானம், இங்கே ஒவ்வொரு பாட்டிலும் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறது, வற்றாத சீவநதியாக.

பிரமஞானம் என்ற கடலைக் கண்டு அதனோடு இரண்டறக் கரைந்துபோகும் தந்திரத்தை, சூக்குமத்தை நமக்குள்ளே விதைத்து விட்டு அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலை, இங்கே நமக்கு ஒவ்வொரு பதிகத்திலும் அள்ள அள்ளக் குறையாமல் கொட்டிக் கிடக்கின்றது. திருவாசகம் என்பதை திரு+வாச(ம்)+அகம் எனப் பிரித்துப் பொருள் காண முற்பட்டால், அகமாகிய உயிரில் திருவாகிய இறைவன் வாசம் செய்து கொண்டிருக்கிறான் என்பது புரிய வரும். உயிரில் வாழும் ஈசனை – சிவத்தை – பழம்பொருளை – சிவப்பொருளை – மெய்ப்பொருளை எவ்வாறு கண்டு, அவனோடு உறவாடி, காதலாகி மகிழ்ந்து கண்ணீர் சிந்தி, புணர்ந்து சிவமாகவே மாறலாம் என்பதைச் சொல்வதுதான் திருவாசகத்தின் கருப்பொருளே.

இங்கே நீங்கள் திருவாசகத்தைக் கற்கப் போவதில்லை. உங்களை நீங்களே கற்றுக்கொள்ளப் போகிறீர்கள். திருவாசகத்தின் அழகை, செழுமையை கண்டு ரசிக்கப் போவதில்லை. மாறாக உங்களை நீங்களே கண்டு உங்கள் சூக்கும அழகினை, உயிரின் செழுமையைக் காணப் போகிறீர்கள். உங்களை உங்களுக்குள் தொலைத்த இடத்தைக் காண வைப்பதுதான் திருவாசகம். இறைவனை எப்படியெல்லாம் காதலிக்கலாம்? எப்படி அவனோடு புணர்ந்து இன்புறலாம்? என்பதைச் சொல்லிக் கொடுக்கும் திருவாசகம். புணர்தல் என்பது உடலில் நடக்கும் நிகழ்வல்ல ; அது உயிருக்குள் உயிர் சேர்ந்து இன்புறும் அற்புத நிகழ்வு. அதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

திருவாசகத்தை நினைக்கும்தோறும், அன்பு பொதிந்திருக்கும் திருப்பாடல்களை ஓதுந்தோறும், உள்ளம் அணுஅணுவாக சிவானுபவத்தில் திளைத்துத் திளைத்து, கண்ணீர் சொரிந்து கொண்டே இருக்கும் தெய்வீக சாந்நித்யத்துவத்தை நீங்கள் அடைவீர்கள். கண்ணீர் ஊற்றெடுக்கும்போது உங்களுக்குள் நீங்களே கரைந்து போய், நீங்கள் ‘நான்’ என்ற உணர்வற்று, பரவச உணர்வில் தென்றல் காற்றில் ஆடுவதைப் போல மகிழ்ந்திருப்பீர்கள்.

‘வாசகம் வல்லார் முன் நின்று வாய் திறக்க வல்லார்?’ என்ற வாசகம் திருவாசகத்தின் பெருமையை நமக்குக் காட்டுகிறது. ‘யாவரும் விரும்பும் பண் இனிமை மிக்க தெய்வப் புகழ்மாலை’ என்றே இதை மொழிந்து விடலாம். இத்திருவாசகம் பற்றி சிவத்திரு மறைமலை அடிகளார் அவர்கள், “இனித் திருவாசகம் என்பது, பிறிதொன்றற்கு இல்லாத அழகினை உடைய வாசகம்” என்றும், “திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு” எனவும் கூறியுள்ளதைக் காண்க. எந்த ஒன்றிற்கும் இல்லாத சிறப்பினை உடையதுதான் திருவாசகம் என்பது இதனால் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆசிரியர் சிவஞான யோகி அவர்கள், “திருவாசகம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ; இதனை ஆகுபெயர் என்பாரும் உண்டு ; இருப்பினும் உண்மையாகப் பார்க்கும்போது இது அன்மொழித் தொகையே அல்லாது ஆகுபெயர் அல்ல என்பதை உணர்க” என்றே கூறியுள்ளது பொருத்தமுடையதாகத்தான் இருக்கிறது.

“தன்னைக் கற்பவர்களின் உள்ளத்தை உருகச் செய்து, அவர்களை ஞானப் பேரின்பத்தின்பால் கொண்டு சென்று ஆழ்த்திவிடுவதில் எந்த நூலுக்கும் இல்லாத அழகினை உடையதாக நம் திருவாசகம் விளங்குகிறது. இதைவிட மேலான அழகினைப் பெற்ற வேறொரு நூல் இவ்வுலகில் இல்லை என்பதுதான் நமக்குப் பதிலாக இதுநாள்வரை கிடைத்து வருகிறது. அன்பும் பத்தியும் இறைத் தேடலும் பிரமஞானமும் பொதிந்த இதன் பாசுரங்களை ஓதுந்தோறும், நினைக்குந்தோறும், நெஞ்சம் நெக்குருகக் கண்ணீர் பெருக்கெடுத்து, நாவினைக் குழறச் செய்து மெய்ப்பரவசத்தால் மயிர்க் கூச்சத்தால் சிலிர்ப்ப ஞானப் பேரின்பத்தை காட்டாற்று வெள்ளத்தைப் போல எழுதுவதும், பாடுவதும் யாவரால் முடியும் என்பதை மற்ற நூல்களைப் படிக்கும்போதும் ஓதும்போதும் நினைக்கும்தோறும் பிரித்துணர்ந்திட முடியும் என்பது ஒன்றே இத்திருவாசகம் மற்ற நூல்களுக்கு இல்லாத அழகினை உடையது என்பது தெளியப்படும்” என்று சிவத்திரு மறைமலை அடிகளார் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உயிர் மலரும் தமிழ் வேதமான திருவாசகம், நமது தமிழ்நாட்டிலும் தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் வெளிநாடுகளிலும், சைவத்தைப் பின்பற்றும் சமயத்தார்களால் வழிபாட்டு நூலாகத்தான் இதுநாள் வரை இருந்து வருகிறது. இனி அந்நிலை மாறி, திருவாசத்தை ஓதும் மக்களின் உயிர்களை, உயிர் மலரை மலர வைக்கும் ஞான நூலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதியே, இத்திருவாசகம் பாடப்பெற்ற மெய்ப்பொருள் ரகசியத்தை எம் சற்குருவின் அனுமதியோடு உடைத்து வெளிப்படுத்தி இங்கே உங்கள்முன் சமர்ப்பித்திருக்கின்றோம், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நம் பூட்டனுக்கும் பூட்டனான தமிழ்க்குலத்தின் குலகுருவான திருமூலரின் வாய்மொழிக்கிணங்க. இனிமேல் திருவாசகம் பத்திப் பனுவல்ல ; அது முக்காலத்தையும் கடந்து நிற்கும் பிரமஞானப் பனுவல். நம் உயிர்களை மலர வைக்கும் ஆனந்தத் தடாகம்.

ஒரு ஆன்மாவை ஒரு நூலால் உணர்வு நிலைக்கு கொண்டு வந்து மலரச் செய்துவிட முடியுமா என்றால், அது கண்டிப்பாக நம் திருவாசகத்தால் முடியும். முடித்தும் காட்டப்பட்டுள்ளது. அதனால்தான் திருவாசகத்தைப் பாடி முடித்தக் கையோடு சிதம்பரம் நடராசர் சன்னதியில் “இதோ அதுதான் இதற்கான உண்மையான மெய்ப்பொருள்” என்று விரல்களால் சுட்டிக்காட்டியக் கையோடு தன் பூதவுடல் ஒளியாகி சிவத்தோடு கரைந்து போனார் மாணிக்காவசகப் பெருமான். இதைவிட இந்நூல் பிரமஞானத்தின் அற்புதப் பொக்கிசம் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டியிருக்கிறது. அறிஞர் பெருமக்கள் நன்றாக இதை சிந்தித்துப் பார்க்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.

இத்திருவாசகம் சமய நூலாக இருந்து நின்றுவிடாமல், அதையும் தாண்டி இலக்கிய நலம் பொதிந்த நூலாகவும், தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. வலிமையான இருளில் கட்டுண்டு கிடக்கக்கூடிய ஒரு ஆன்மா, பிரபஞ்சப் பேரொளியைத் தேடி, தனக்குள்ளே இருக்கும் பிரணவத்தின் உச்சியை நோக்கிச் செல்லும்போது, அதனுடைய வழிப்பயணங்களில் அதற்கேற்படும் பலவகையான ஆனந்த நிகழ்வுகளையும் சத்திய மெய்யுணர்வுகளையும் பரவசக் கூத்தாக தெள்ளுதமிழ் ஓசைகளால் திருப்பதிகங்களில் எடுத்தோதுகின்ற இத்தெய்வக் கவிதைகள் மாணிக்க வாசகப் பெருமானின் பிரமஞான தவ வாழ்க்கையைத்தான் அனைத்துப் பாசுரங்களிலும் காட்டி நிற்கிறது.

தனக்குள்ளே தன்னைத் தேடி அலையும் ஒரு ஆன்மா, எங்கோ ஒரு க்ஷணத்தில் தன்னைக் கண்டு ஆனந்தக் கூத்தாடிப் பாடும் திருக்கவிதை களாகத்தான் நம் திருவாசகம் காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி மாணிக்கவாசகர் ஓரிடத்தில்,


இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பமைத்து
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து (திருவாசகம் – 625)

என்று, “பேரின்பம் பெருகிறது, எவ்வாறு இது நடந்து எனப் பார்த்தேன் ; என்னைத் தொன்றுதொட்டு சூழ்ந்து வரும் கர்மவினைகளாம் இருளானது எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது ; இந்த இருளானது எவ்வாறு ஓடி ஒளிந்து கொண்டது எனப்பார்த்தால் எனக்குள்ளே அன்பு சுரந்து உயிர்ச்சோதியை கண்டபோது நிகழ்ந்தது எனக் கண்டுகொண்டேன். இது என்ன ! இப்படி நிகழ்ந்துவிட்டதே எனப் பார்த்தேன் ; அழகிய பெருவழியான பிரணவக் குகைக்குள்ளே பரவிந்துவாக இருக்கக்கூடிய சிவத்தின்மீது கொண்ட சிந்தனைகளால் இது நிகழ்ந்திருக்கிறது எனக் கண்டு மகிழ்ந்தே போனேன்” என்று பாடியிருக்கும் அழகு இருக்கிறதே, அதுதான் ஞானத்தில் முளைத்திட்ட உயிர்மலர்.

திருவாசகம் எங்கும் சிவபெருமான் தன்னை ஆட்கொண்டு அருளிய ஆனந்த நிலைகளையும், அப்பேரருளுக்கு நாம் என்னதான் கைம்மாறு செய்துவிடப் போகிறோம் என்ற ஏக்க உணர்வுகளையும் தனக்குள்ளே சிவம் மலரும்போது அவரின் ஆனந்த ஒளி நடனத்தையும் அந்த ஒளிநடனத்தின் போது தனது சிரசிற்குள்ளே கேட்கும் பிரமநாத ஓசைகளையும் கண்டும் கேட்கும் பேரானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்து வருவதையும், அவ்வாறு சிவநடனத்தைத் தனக்குள்ளே காணாது இருக்கும் காலங்களில் சிவன் தன்னைவிட்டுச் சென்றுவிட்டாரோ? தன்னைப் பாராமுகமாய் வைத்து விட்டாரோ? தன்னைக் கடைக்கோடியில் தனியாக அனாதையாக புலம்பித் தவிக்கும்படி செய்து விட்டாரோ? தாய்ப்பசு இல்லாது ஏங்கித் தவிக்கும் கன்றினைப் போல ஆக்கிவிட்டாரோ? என்று அவரின் பொறுக்க முடியாத ஆற்றொணாத் துன்பத்தை, ஆற்றாமையை, இயலாமையை, வாழ முடியாமையை, செத்துவிட நினைத்தமையை நினைத்து நினைத்து உருகி உருகி அவர் பாடும் தெய்வக் கவிகள் நம்மை நெருப்பாய் சுட்டுக் கொண்டே இருப்பதை இந்நூலில் அல்லாது வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சிகளாகும்.

திருவாசகம் நாள்தோறும் ஓதுதலே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். திருவாசகச் சொற்கள் தெய்வாம்சம் கொண்ட சொற்கள். அவை அதிக ஆற்றலை தன்னகத்தே கொண்டிருப்பவை. ஒளிதேகத்தை அடைந்த மாணிக்கவாசகரின் உயிரில் பூத்திட்ட ஞான மலர்கள் அவை. ஒவ்வொரு சொல்லும் நம் உயிரைச் சென்று தாக்கும் அன்புக் கணைகளாகும். அமுதக்காற்றின் துணைகொண்டு உயிரை சதா தாக்கிக் கொண்டு வந்தால், ஒரு நேரத்தில் நமது உயிர்க்கமலம் தன் ஆயிரம் இதழ்களை விரித்து, மணம் வீச ஆரம்பித்துவிடும். அப்போது உயிருக்குள் கமழும் ஒளிக்கலைகள் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் பரவி நம் தேகத்தை ஒளிதேகமாக்கும். உயிர் ஒளியாகத்தான் இருக்கிறது. ஆனால், கூம்பிப்போய் கிடக்கிறது. அதை மலர வைத்தால் ஒன்றே போதும். உயிரின் நறுமணம் உடலின் மரபணுக்கள் அத்தனையையும் ஒளியணுக்களாக்கி, தேகத்தை நித்தியமாக்கிவிடும். அதனால்,


திருவாசகம் ஓதினால் சிவஞானம் சித்திக்கும்.
திருவாசகம் ஓதினால் பரஞானம் சித்திக்கும்.
திருவாசகம் ஓதினால் நெற்றிக்கண் தோன்றிடும்.
திருவாசகம் ஓதினால் அருட்கலைகள் சித்திக்கும்.
திருவாசகம் ஓதினால் அமுதத்தேன் ஊற்றெடுக்கும்.
அமுதத்தேன் ஊற்றெடுத்தால் அருட்கலைகள் சித்திக்கும்.
அருட்கலைகள் சித்தித்தால் ஞான ஒளிதேகம் சித்திக்கும்.

அதனால் திருவாசகத்தை நாள்தோறும் ஓதுக, ஊன் கலந்து, உயிர்கலந்து என்று பணிவோடு சொல்லி இந்த முன்னுரையை குருவருளால் இனிதே நிறைவு செய்கின்றோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!