ஓம் ஒலியின் இரகசியங்கள்

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேத காலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம் ; இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை ; அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் (Sipna College of Engineering and Technology, Amaravathi) பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்பவர்கள், தொழிற்சாலை அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஆகிய  அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!

உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (Wavelet Transforms, Time-frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி (EEG) அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஓம் ஒலியினால் மின்செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி (EEG) சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னும் பின்னும்  நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா விஷ்ணு, ருத்ரன் ஆகியோர் செய்வதை சைவ சித்தாந்தம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் ஆகியவை பிரம்மா, விஷ்ணு, ருத்ரனைத்தான் குறிக்கின்றன என்பதையும் கண்டறிந்தார்கள்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்சத்தின் ஆற்றல்கள் நேரடியாக அதிர்வலைகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம் உதிக்கும் “அ” உச்சரிப்பு அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும்  “ம்” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துவதைக் கண்டார்கள். ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிரபஞ்சத்தின் பிராண ஆற்றல்கள் உடல் முழுவதும் அலை அலையாகப் பாய்ந்து செல்வதைக் கண்டார்கள்.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் காரணம். கடந்த 29.05.1999 அன்று தொலைபேசியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்க வாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது. அவருக்கு ஸ்பீச் தெரபி (Speech Therapy) எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் இரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் (Hyper Tension) மற்றும் அதிக மன அழுத்தமே எனத் தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போகும்போதுதான், அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.

இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.

அமைதியான ஒரு அறையில் 44.1 Hertz சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோ போன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன. 20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில், ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது என்றும், எதன் மீதும் செய்யப்படும் கவனக் குவிப்பு அதிகரிக்கிறது என்றும் கண்டறியப்பட்டது.

ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

  1. மூலாதாரத்தில் 256 Hertz-ம் ,
  2. ஸ்வாதிஷ்டானத்தில் 288 Hertz-ம்,
  3. மணிபூரத்தில் 320 Hertz-ம்,
  4. அனாகதத்தில் (இதயம்) 341.3 Hertz-ம்,
  5. விசுத்தாவில் (தொண்டை) 384 Hertz-ம்,
  6. ஆக்ஞாவில் (மூன்றாவது கண்) 426.7 Hertz-ம்,
  7. சஹஸ்ராரத்தில் 480 Hertz-ம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும்

புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தைஉச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை சமன்பாடு, நெகிழ்வுத்தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது. இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள் சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓம்-ன் பெருமையை விஞ்ஞானரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர். அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே. இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மந்திரங்களின் மகிமை பற்றிய அறிவியல்பூர்வமாக இவ்வுலகிற்கு இன்னும் அதிகமாக வருகை தரவுள்ளன.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!