
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. (திருமந்திரம்)
இங்கே பிரமஞான மெய்ப்பொருளை அறிந்து கொள்வதற்காகவும் கற்றுக் கொள்வதற்காகவும் வந்திருக்கக்கூடிய அனைத்து ஆன்ம உயிர்களுக்கும் எங்களுடைய ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் சார்பாகவும் எமக்கு பிரமஞானத்தைக் கற்றுக் கொடுத்து வரும் சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களின் சார்பாகவும் வரவேற்று எமது திருவடி வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கின்றோம். இப்பேச்சுரையை கேட்கும் அனைத்து ஆன்மாக்களும் பரிபூரண பிரமஞானத்தை பெற்று இறையோடு ஒளியாக கலந்திட வேண்டுகின்றோம். சரி, வாருங்கள் அகவலின் ஆழ்ந்த மெய்ப்பொருளுக்குள் பயணம் செய்வோம்.
தேகத்தில் ஐந்து கைகளையும் யானை போன்ற முகத்தினையும் அந்த முகத்தில் சந்திரனின் வளர்பிறை போன்ற பற்களைக் கொண்டதுமான நந்தியாகிய சிவனின் மகனாகவும் பிரமஞானத்தை இளம்கொழுந்தாகவும் கொண்ட விநாயகப் பெருமானை, மகா கணபதியை, வாஞ்ச கல்ப கணபதியை புந்தியாகிய என் திருவடிகளில் வைத்து போற்றி மகிழ்கின்றேன்.
கணபதியின் ஐந்தாவது கரம்தான் தும்பிக்கை. இது அப்படியொரு அருமையான ஞானச் சொல்லாகும். தும்பிக்கையை தும்பி + கை என்று பிரித்துப் பொருள் காணலாம். தும்பி என்றால் அது தும்பி இனத்தைச் சார்ந்த ஒரு வண்டினமாகும். வண்டினம் எழுப்புகின்ற ஒலி முரரொலி என்பார்கள். அது கேட்பதற்கு ஹ்ரீங்கார ஒலியைப் போலவே இருக்கும். எனவே, கணபதியின் ஐந்தாவது கை என்பது ஹ்ரீங்கார நாதத்தைக் குறிக்கும். இவ்வொலிதான் நெற்றிக்கண்ணின் வழியே நம் உயிரை அடையக்கூடிய நாத வடிவமாகும்.
நந்தி என்பது நம் + தீ என்று பொருள். தீ என்ற ஒளியானது நம் தேகத்தில் உள்ளே நுழைவதும் வெளியேறுவதும் நமது கண்களாகிய திருவடிகளில்தான். திருவடிகள் இருப்பது நமது நெற்றிப் பகுதியில். இந்த நெற்றிப் பகுதியில் இருந்துதான் அதாவது சிவத்தின் நெற்றிக் கண்ணிலிருந்துதான் முருகன் பிறந்தான். அந்த முருகன் நெற்றிக் கண்ணாகிய ஞானக் கண்ணில் பிறந்த காரணத்தினாலும் கணபதிக்கு இளையவன் என்பதாலும் அவனை ஞானக் கொழுந்து என்றார் திருமூலர். இப்படிப்பட்ட விநாயகப் பெருமானையும் முருகப் பெருமானையும் என்னுடைய புந்தியாகிய திருவடிகளில் வைத்து போற்றி மகிழ்கின்றேன் என்று பாடிச் சென்றார் நம் தமிழ் முப்பாட்டனாகிய திருமூலர் அவர்கள்.
எந்நாட்டவர்க்கும் இறைவனானத் தென்னாடு உடைய சிவத்தை அடைவதற்குச் சித்தர் பெருமக்களும், ஞானிகளும், ரிஷிகளும், முனிவர்களும், யோகியர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் கடுமையாக பிரமஞானத் தவத்தில் ஈடுபட்டு, சொல்லில் வார்க்க முடியாத பேரின்ப ஊற்றினை நித்தம்நித்தம் அவரவர் பிரணவத்தில் உச்சி முகர்ந்து உண்டுப் பருகி, அருந்தி, திளைத்து வருகிறார்கள். இது நமது இந்தியத் திருநாட்டின் அசைக்க முடியாத தெய்வீக சத்தியங்களாகும்.
இறைவனை பல வழிகளில் அடையலாமா? இல்லை ஒரே வழியின் மூலமாக அடையலாமா? என்ற கேள்விகள் காலங்காலமாக பலரால் இன்றுவரை கேட்கப்பட்டுக் கொண்டுதான் இருந்து வருகிறது.
விரல்கள் தொட்டுவிடும் தூரத்தைவிட இமை தொட்டுவிடும் வெகு அருகாமையில்தான் மௌனமாக நமக்குள் சிவம் வீற்றிருக்கிறான். இமை தொட்டுவிடும் இறைவன் இருக்கின்றான். அதனால் இவனைப் பிடிமின் ; மற்றவை தவிர்மின்.
திருமூலர், மாணிக்கவாசகர் காலத்திற்குப் பின் வந்த தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் போன்றோரும் தேவாரப் பாடல்களில் இறைவனை அடையும் பிரமஞானத் தவத்தையும் அதற்கான மார்க்கங்களையும் தந்திரமாகவும் சூக்குமமாகவும் பல இடங்களில் நன்கு பொருள் விளங்கும்படி வெளிப்படையாகவும் பாடிச் சென்றுள்ளார்கள். ஆனால், இவர்கள் இறைபத்தியில் பத்தியுணர்வூட்டும் பாடல்களில் ஆங்காங்கே சாகாக் கல்வியைப் பற்றியும் பாடிச் சென்றுள்ளார்கள்.
சித்தர் என்ற நிலையை அடைந்த அத்தனை சித்தர் பெருமக்களும் பிரமஞானத் தவத்தின் மூலமாக சுத்தத் தேகத்தையும், பிரணவத் தேகத்தையும் பெற்று இறுதியாக ஞான ஒளிதேகத்தைப் பெற்றவர்களே. இதில் ஒளியுடலைப் பெறாது அழியா உடலைப் பெற்ற சித்தர்களும் உண்டு. அவர்களின் சீவசமாதிகள் பலவும் நம் இந்திய திருநாட்டிலும் வெளிநாடுகளிலும் உண்டு. உடலைவிட்டு உயிர் வெளியேறாது உடலுக்குள் உயிர் அடங்கி மௌன நிலையில் இருந்திடும் தெய்வீக நிலையே சீவசமாதியாகும். இச்சமாதி நிலை பெற்றவர்களின் உடலில் வெப்பம் குறைந்துபோய் குளிர்ச்சி நிலையை அடைவதில்லை. இவர்களின் தேகம் எப்பொழுதும் மனிதனுக்கு இருக்கும் தேக வெப்பநிலையைப் போலவே இருந்துவரும். உடலில் சூடு இருந்தால், உயிர் வெளியே செல்லவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். பிணமாகிவிட்ட தேகமே குளிர்ச்சி நிலையில் இருக்கும். உள்ளே சிவம் இருக்கும் வரையில் உடல் சவமாவதில்லை ; மீறி சவமாகிவிட்ட உடலில் சிவம் என்றுமே இருப்பதில்லை.
இவ்வாறு சாகாக் கல்வியைப் பற்றிய அரிதினும் அரிதான ஞான நூல்கள் சிலவே தற்போது நமக்கு கிடைத்துள்ளன. அவைகளுள் தவிர்க்க முடியாத பிரமஞானி களில் ஔவைத் தாய் அவர்கள் தவிர்க்கவே முடியாத ஒருவராவார். ஆனால், இச்செய்தி எத்தனை பேருக்குத் தெரியும் என்பதுதான் தெரியவில்லை.
இன்றுவரை உலகெல்லாம் கொண்டாடும் ஒரு உலகப் பொதுமறையான திருக்குறளை இவ்வுலகுக்குக் கொடுத்து விட்டுச் சென்ற தெய்வப் புலவரான திருவள்ளுவர், அவர் எழுதிய திருக்குறளிலே அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் பற்றி 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களில் பாடியவர் ஏன் தமிழ்ச் சமுதாயத்தின் அரிய ஞானப் பொக்கிசமான சாகாக் கல்வியைப் பற்றி தனித்து ஞானப் பாலினை பாடிச் செல்லவில்லை? இக்கேள்வி எம்முள் சதா மூண்டுகொண்டே எரிந்து கொண்டிருந்தது. திருக்குறளில் ஆங்காங்கே சில குறட்பாக்களில் சாகாக் கல்வியை பற்றி சொல்லப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அவைகளில் சாகாக் கல்வியை அடைவதற்காக பிரயோக தந்திர முறைகள் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை.
இக்குறைதனை களைந்திட திருவள்ளுவர் அப்பெரிய பொறுப்பினை அவரின் மூத்த சகோதரியான ஔவைத் தாய்க்கு விட்டுச் சென்றிருக்கிறார் என்று ஔவைத் தாயின் வரலாற்றை ஆய்வு செய்யும்போது எம் சற்குருவின் வழிகாட்டலால் அறிய நேர்ந்தது. அப்பணியினை ஔவைத் தாயும் சிவத்தை அடைய மனிதன் பெற வேண்டிய ஞான ஒளியுடலை எப்படி திருவடி அருளும் பிரமஞானத்தால் பெற முடியும் என்று கல்லினைச் செதுக்கிடும் உளிபோல ஒவ்வொரு பாக்களிலும் நம்மை நாமே செதுக்கிக் கொள்ளும் அற்புத ஞான முத்துக்களை நமக்காக அவரே மூழ்கி மூழ்கி முத்தெடுத்து மாலையாகத் தொடுத்து அதற்கு ஞானக்குறள் என்றும் விநாயகர் அகவல் என்றும் பெயரிட்டு நம் கழுத்தினில் ஞான மாலையாக அணிவித்து சென்றுள்ளார்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே (தி.ம.85)
என்ற திருமூலரின் வாக்கினை உந்திக்கமலத்தில் இருத்தியே இந்தப் பிரமஞானக் கர்மத்தைச் செய்திட விளைந்தோம்.
ஔவைத்தாய் அவர்கள் பாடிய இந்த ஞானக்குறளுக்கு 2020 ஆம் ஆண்டில் ஞான மெய்ப்பொருளுரை எழுதி வெளியிட்டோம். அந்நூல் இரண்டாம் பதிப்பில் அச்சில் இருந்து வருகிறது. தற்போது அவரின் மற்றொரு பாடலான விநாயகர் அகவலுக்கு இப்போது உங்கள் முன்னே ஞான மெய்ப்பொருள் உரை சொல்லும் பெரும்பாக்கியம் எமக்கு கிட்டியுள்ளது கண்டு யாம் உண்மையிலேயே ஆனந்தப் பரவசம் கொள்கின்றோம்.
ஔவைத் தாயை இன்று நம் தமிழ் சமுதாயத்தில் அறியாதவர் எவரும் இல்லை என்றே கூறிவிடலாம். அத்தனை தன்னிகரில்லா புகழ் பெற்றவர் ஔவைத்தாய். அவரின் வாழ்க்கையைப் பற்றிய சில அரிய செய்திகளை இங்கு சொல்லி மகிழ விழைகின்றோம்.
பிறந்தபோதே கவி பாடிய அற்புதம்
சோழ வளநாட்டில் உறையூர் என்ற ஊரில் ஆதி என்ற தாய்க்கும், பகவன் என்ற தந்தைக்கும் பிறந்த பெண்தான் ஔவை. இவரின் உடன்பிறந்த தம்பிதான் திருவள்ளுவர். ஔவை பிறந்த பின்பு, பெற்றோர்களுக்கிடையில் இருந்த உறுதிமொழியின்படி, ஔவையை அவ்வூரில் உள்ள சாவடியில் விட்டுவிட்டுப் பிரிந்து போனார்கள். அப்போது தாய் ஆதி பிறந்த மகளைப் பார்த்துப் பிரிந்து செல்கிறோமே என்று அழுது கண்ணீர் வடிக்க, பிறந்த குழந்தையாக இருந்த ஔவையோ பிறவி ஞானத்தினால்,
இட்டமுன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவனும் செத்துவிட்டானோ – முட்டமுட்டப்
பஞ்சமே ஆனாலும் பாரம்அவனுக்கு அன்னாய்
நெஞ்சமே அஞ்சாதே நீ
“தாயே, மனதால் இசைந்து எனது தலையில் இப்படித் தான் வினைப் பயன்களை அனுபவிக்க வேண்டும் என்று என் விதியை எழுதிவிட்ட சிவன் மரணம் அடையவில்லையே, வாழ்வில் மிகவும் கடுமையான வறுமை, பஞ்சம் ஏற்பட்டு விட்டாலும், எம்மைக் காக்க வேண்டிய கடமை அந்த சிவனுக்கே ஆகும். அதனால் தாயே, நீ உன் உள்ளத்தில் என்னைப் பற்றிய பயத்தை வைத்துக் கொண்டிருக்காதே” என்று அழுத தாயின் கண்ணீரைத் துடைக்கும்படி ஒரு வெண்பாவைப் பாடினார். இச்சம்பவத்திலேயே பிறவியிலேயே தெய்வ அருள் பெற்ற பெண்மகளாக ஔவைத்தாய் வாழ்ந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
காலங்கள் உருண்டோட, பருவமும் உருண்டு திரண்டு வருமல்லவா. அப்படி ஔவையும் குழந்தையிலிருந்து பருவப் பெண்ணாக ஒரு பாணரால் வளர்க்கப்பட்டு வந்தார். பாட்டுப் பாடி பிழைப்பு நடத்துபவர்களே பாணர்கள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டார்கள்.
விநாயகர் அகவலுக்கு மெய்ப்பொருள் காண்பதற்கு முன்னாடி நாம ஒரு விசயத்தை இங்கே புரிந்து உணர்ந்து கொண்டுவிட வேண்டும். கி.பி.2 முதல் கி.பி.18 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் ஆறு ஔவையார்கள் வாழ்ந்து கவிகளைப் புனைந்து கொடுத்துச் சென்றதாக நாம் தமிழறிஞர்களின் ஆய்விலிருந்தும் ஒப்புமைக் கருத்துக்களிலிருந்தும் பெற முடிகிறது. ஒரு சிலர் ஆய்வில் ஔவையார் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருசிலர் ஆய்வில் அவர் இடைச்சங்கக் காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அதியமானுக்கும் ஔவைக்கும் இடையே ஒரு அற்புதமான புரிதல், பேரன்பு கொண்ட நட்பு இருந்ததை நாம் யாரும் மறுப்பதற்கில்லை. அந்த அதியமான் வாழ்ந்த காலமாக ஒரு கல்வெட்டு ஆவணமாகக் கிடைத்திருக்கிறது. அதியமான என்ற மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு ஆகும் அது. தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு அதியமான் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. “சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி” என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள். அதனால் ஔவைத் தாயின் காலமும் இந்த அதியமான் மன்னன் வாழ்ந்த காலமாகவே இருக்க வேண்டும் என்றே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், ஔவையை ஆராய்ச்சி செய்தவர்கள் அனைவரும் ஒரு விசயத்தை மறந்துவிட்டு வேறுபக்கம் போய்விட்டார்கள். அவர்கள் மறந்துவிட்ட விசயம்தான் மெய்வழிப் பாதை செல்லும் மெய்வழிக் கலை என்பது. இந்த மெய்வழிக் கல்வியை பரிபூரணமாகக் கற்று அதில் முழுமையான தேர்ச்சி பெற்று தான் வாழும் காலத்தே ஒளியுடலில் நிறைவு பெற்று இறைவனோடு ஒளியாகக் கலந்தவர்தான் ஔவைத்தாய் அவர்கள். ஔவைத்தாய் ஞான ஒளிதேகத்தைப் பெற்றவர் என்பதை மேற்கண்ட தமிழறிஞர்கள் ஆய்வு செய்யவே இல்லை. ஔவை மெய்வழிக் கல்வியில் தேர்ச்சி பெறாவிட்டால், விநாயகர் அகவலாகட்டும், ஞானக் குறளாகட்டும் அவரால் அனுபவப்படாமல் உணர்வுபூர்வமாக பாடியிருக்க முடியுமா, சொல்லுங்கள். ஒருவர் ஒளி தேகத்தை அடைந்து விட்டால், அவருக்கு இறப்பென்பதே இல்லை அல்லவா. அப்படியிருக்க, இறவாத வரம் பெற்ற ஔவைத்தாய் பல்வேறு காலங்களில் ஒரே தேகத்தோடு வாழாமல் இருந்திருப்பாரா, என்ன? அதனால் மேற்கண்ட கல்வெட்டு ஆய்விலிருந்து ஔவைத்தாயின் காலம் அதியமான் வாழ்ந்ததாகக் குறிக்கும் கி.மு.3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்குள் இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரின் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்று எடுத்துக் கொண்டால், அவர் பாடி அருளிய இந்த விநாயகர் அகவல் மற்றும் ஞானக்குறளுக்கு வயது இன்றோடு 1824 ஆண்டுகளாகின்றன.
நல்லது. இனி நாம அகவலுக்குள் பிரவேசிக்கலாம் வாருங்கள்.
ஔவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல்
விநாயகர் அகவலையும், ஞானக் குறளையும் பாடியது ஔவைத்தாய் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இதில் ஞானக்குறளைப் பற்றி 100-க்கு 95 பேருக்கு விவரம் தெரியாது. ஞானக்குறளுக்கு மெய்ப்பொருள் உரை எழுதி யாம் 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட போது நிறைய புலவர்கள், தமிழறிஞர்கள் ஔவை ஞானக்குறள் பாடியிருக்கிறாரா என்றே சந்தேகத்தோடு கேட்டு, அதன்பின் நூலினைப் பெற்று படித்து பெருமகிழ்வு கொண்டார்கள்.
இந்த இரண்டு ஞான நூல்களையும் பாடியது ஔவைத்தாய் என்றபோது, இதில் எதை முதலில் பாடினார்? இரண்டாவதாக எதைப் பாடினார்? என்ற கேள்வி எமக்குள் சில நாட்களுக்கு முன்பு வட்டமிட ஆரம்பித்தது. அதற்கான விடையும் கிடைத்தது. விநாயகர் அகவல் சொல்லப்பட்டவிதம், அதன் கருப்பொருள் ஆகிய இவ்விரண்டையும் ஞானக் குறளின் கட்டமைப்போடும், அதனின் கருப்பொருளோடும் பொருத்திப் பார்த்தபோது, ஔவைத்தாயின் மகா ஞானம் கண்டு விக்கித்துப் போய்விட்டோம். எப்படி என்பதை இங்கே உங்களோடு முதல்முறையாக பகிர்ந்து கொள்கின்றோம்.
ஔவைத்தாய் இந்த இரண்டு நூல்களையும் ஒரே காரணத்திற்காகவே இயற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. எம்முடைய ஆய்விலிருந்து அவர் விநாயகர் அகவலைத்தான் முதலில் பாடியிருக்க முடியும் என்றே தோன்றியது. இதற்கடுத்தபடியாகத்தான் ஞானக்குறளைப் பாடியிருக்க வேண்டும். ஏனென்றால், விநாயகர் அகவலில் ஒரு பாத்திரத்தைப் பாடியவர், ஞானக்குறளில் அப்பாத்திரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தி மெய்யுணர்வுகளைப் பெற வேண்டும் என்பதை பலவித தந்திர முறைகளோடும் செய்முறைகளோடும் அனுபவப்படும்படி எளிமையாகப் பாடிக் கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்ததும் எம்மால் அடைந்த பேரின்பத்திற்கு அளவே இல்லை எனலாம்.
ஔவைத்தாய் இந்த இரண்டு நூல்களின் வழியாக இவ்வுலக உயிர்களுக்கு சொல்ல வந்த ஞானம் என்னவென்றால், முதலில் உலக ஆன்மாக்கள் அனைத்தும் பிரமஞானத்தை அடைவதற்கான மெய்க்கருவி எது என்பதை முதலில் தெரிந்து கொண்டு, ஒரு சற்குருவின் மூலமாக ஞானத் தீக்ஷை பெற்று, அந்த மெய்க்கருவியைக் கொண்டு மெய்வழிக் கல்வியான சாகாக் கல்வியை அடைந்துவிடவேண்டும் என்பதுதான். ஞானத்தை அடைவதற்கான மெய்க்கருவி என்பது நமது திருவடிகள் என்றும் ; அந்தத் திருவடிகளின் மூலமாக செய்யப்படும் பிரமஞானத் தவங்கள்தான் நம்மை இறைவனோடு ஒளியுடலாகக் கலப்பிக்க வைக்கும் சாகாக் கல்வி என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதனால் நம் அனைவருக்குமே நாம் சிவஞானத்தை, பிரமஞானத்தை அடைவதற்கு திருவடிகளும், அதில் ஆற்றப்படும் பிரமஞானத் தவங்களும் மிக மிக அவசியம், முக்கியம் என்பதை ஔவைத்தாய் விநாயகர் அகவலிலிருந்து ஆரம்பித்து வைக்கிறார். நாம் எதைச் செய்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கித்தான் ஆரம்பிப்போம் என்பது தமிழர்களின் மரபல்லவா. அதன்படியே ஔவைத்தாயும் நாம் பிரமஞானத்தை அடைவதற்காக விநாயகப் பெருமானை ஓடி வந்து அமுதத்தை, பிரமஞானத்தைக் கொடுத்திட வேண்டுமென்று தமிழால் அகவி அழைக்கின்றார்.
இனி, விநாயகர் அகவலுக்குள் பிரவேசிக்கலாம் வாருங்கள்.
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)
விநாயகர் அகவலின் முதற்சொல்லே சீதக் களபம்தான். அடுத்த வார்த்தையை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும். அச்சொல் செந்தாமரைப் பூம்பாதம் என்பதுதான்.
சீதம் என்றால் குளிர்ச்சி பொருந்திய என்று பொருள்படுகிறது. இதுபற்றி திருமந்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.
சிவனும் சக்தியும் வெம்மையும் குளிா்ச்சியும் ஆக இருந்து இவ்வுலகைக் காத்து வருகின்றார்கள்.
புண்ணிய நந்தி பொருந்தி உலகுஎங்கும்
தண்ணிய மானை வளா்ந்திடும் சத்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலா்ந்தெழு பூவிலே. (தி.ம.387)
பொருள் : சிவபெருமான் அறிவின் மயமாய் எல்லாப் பொருள்களிலும் பொருந்தியுள்ளான். குளிா்ச்சி பொருந்திய மாயா காாியப்பொருளைக் காத்தருள்கின்றான். சத்தியும் கண்ணோட்டமுடன் எல்லாவற்றிலும் கலந்து, தாங்கும் தன்மையுடன் வியாகிருதியிலே விாிந்து எழுவாள்.
கண் இயல்பு என்பது இரக்கம். மண் இயல்பு என்பது தாங்கும் தன்மை.
சிவம் புவனங்களில் பொருந்தி விளங்கும். சக்தி அவற்றில் பொருந்தி வெப்பத்தை நீக்கும் குளிா்ச்சிபோல் இருந்து வளா்ப்பாள். நந்தி- சிவபெருமான்.
வியாகிருதி – மேல் ஏழ் உலகையும் கூறும் மந்திரங்கள்.
களபம் என்றால் சந்தனக் கலவைச் சாந்து பூசிய பாதம் என்றும் யானைக் குட்டி என்றும் இருபொருள்படுகிறது. ஔவைத் தாய் இந்த விநாயகர் அகவலைப் பாட ஆரம்பித்ததும், கணபதி எவ்வாறு அழைக்கிறார் என்றால், எப்போதும் ஆனந்தமாக அமுதமே வடிவாக இருக்கக் கூடிய யானைக் குட்டியே என்னை நோக்கி ஓடி வா என்றே ஆனந்தமாக அழைக்கின்றார் நமது பிரமஞானியாக வாழ்ந்த ஔவைத்தாய். கணபதி வா என்று அழைத்தால் அவரைப் புகழ்ந்து பாடி ஆடி அழைப்பது நமது தமிழக மரபல்லவா. அப்படித்தான் ஔவைத்தாய் அவர்கள் விநாயகப் பெருமானை, என் உயிரில் அமுதமாய் விளங்கும் யானைக்குட்டியே ஓடி வா வா என்றழைக்கிறார். இந்த அமுதம் என்ற வார்த்தையை இங்கே எதற்காகப் பயன்படுத்தினோம் என்றால், அமுதம் எப்போதும் குளிர்ச்சியாக மட்டுமே இருக்கக் கூடியது. வெப்பங்களில் இரு வகைகள் உண்டு. ஒரு வெப்பம் – சுடு வெப்பம் அதாவது சுடுகின்ற வெப்பம். அது சூரியனிலிருந்து வருகின்ற வெப்பம். மற்றொரு வெப்பம் – தண்வெப்பம் அதாவது குளிர்ச்சியான வெப்பம். சுடு வெப்பம் எப்போதுமே தேகத்தை – உடலை அழிக்கக் கூடியது.
குளிர்ச்சியான தண் வெப்பமோ தேகத்தை அழியாமல் பாதுகாக்கக் கூடியது. குளிர்ச்சியில் இருக்கும் ஒரு பொருள் என்றும் அழிவதேயில்லை. அதற்காக சமையற் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க நாம் இன்றைக்கு குளிர்சாதனப் பெட்டிகளை (ஃபிரிட்ஜ்களை) பயன்படுத்தி வருகிறோம். அதுபோல் நமது தேகத்திற்குள்ளே அதாவது மூளைக்குள்ளே குளிர்ச்சியான தண்வெப்பமே, தேகத்திற்கு வெளியே அதாவது தேகத்தின் மேற்புறங்களில் சுடுவெப்பமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேகம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால், நமது சிரசிற்குள்ளே அதாவது தலைக்குள்ளே இருந்து நம் உடலை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரின் குளிர்ச்சியான அமுத வெப்பத்தை உடலெங்கும் செலுத்தி விட வேண்டும். அதுதான் நமது தேகம் அழியாமல் இருப்பதற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு உபாயம் – தந்திரம். இந்த தந்திர முறையை விநாயகர் அகவலைப் படிக்கக் கூடிய அனைத்து பக்தர்களும் அன்பர்களும் அடைய வேண்டுமென்றே ஔவைத்தாய் இவ்வாறு ஞானப்பொருளை உள்ளடக்கிய சொற்களை விநாயகர் அகவல் முழுக்க போட்டுப் பாடியிருக்கிறாள். அதனால் சீதக் களபம் என்றால் அமுதமே வடிவான அழகிய யானைக் குட்டியான விநாயகப் பெருமானே என்னை ஆசிர்வதிக்க அருள்பாலிக்க ஓடி வா என்றழைக்கிறார் ஔவைத்தாய். நாமும் அவ்வாறே ஞானப் பொருள் புரிந்து இனி ஒவ்வொரு அழைப்போமாக.
அடுத்த வார்த்தைக்குச் செல்வோம்.
செந்தாமரை பூம்பாதம் என்ற வார்த்தை. அந்த விநாயகன் செந்தாமரைப் பூப் போன்ற பாதங்களை அதாவது திருவடிகளைக் கொண்டிருக்கிறான் என்கிறார்.
செம்மை நிறத்தில் இருக்கக் கூடிய அழகிய திருவடிகள் என்று பொருள். இங்கே பாதம் என்றால் அது திருவடிகளை மட்டுமே குறிக்கும் ஒரு ஞானச் சொல்லாகும். பாதம் என்றால் அது நமது கால் என்றே அனைவரும் இதுநாள்வரையிலும் நினைத்து வாழ்ந்து வருகிறோம். பாதத்தை பூவைப் போன்றிருக்கிறது என்று சொல்வது சரியான பொருளைக் கொண்டிருக்கிறதா என்பதை நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாதம் என்பது நமது கால்களைக் குறிக்கிறதல்லவா. அது எப்படி பூவைப் போல இருக்கும்? பூவின் குணம் நமது பாதங்களுக்கு உண்டா? பூவின் குணம் அது சூரியனைக் கண்டால் விரியும் ; சூரியன் மறைந்தால் சுருங்கும். விரிவதும், சுருங்குவதும் தான் பூக்களின் குணம். இதை இயற்கை தந்த பரிசு பூக்களுக்கு.
ஆனால், நமது கால்களாகிய பாதங்கள் பூக்களைப் போல சுருங்கி விரியுமா, சொல்லுங்கள் பார்க்கலாம். அப்படியென்றால், பாதம் என்பது திருவடிகளை மட்டும்தான் குறிக்க வேண்டும் ; அப்படித்தான் குறிப்பதாக திருமூலம் உட்பட்ட அனைத்து பிரமஞானிகளும் சொல்லி இருக்கிறார்கள்.
அடுத்த வார்த்தை அந்த பூப் போன்ற பாதம் செந்தாமரைப் பூவாக இருப்பதாகவும் ஔவைத்தாய் பாடுகிறார். செந்தாமரை எப்போதாவது நமது பாதங்களாகுமா? செந்தாமரைக்கு எத்தனை இதழ்கள் இருக்கிறது. நமது பாதங்களுக்கு அப்படி பல இதழ்கள் இருக்கிறதா? இதழ்கள் என்றால் அது சுருங்கும், விரியும். அப்படி பாதங்களில் இருக்கும் விரல்கள் சுருங்கி, விரியுமா? அதுவும் இல்லை அல்லவா. மேலும், செந்தாமரை எங்கே இருக்கும்? அது நீர் இருக்கும் குளங்களில்தானே இருக்கும். நமது பாதங்கள் எப்போதும் நீருள்ள குளத்திலா இருந்து கொண்டிருக்கிறது? சற்றே சிந்திக்கவும் அன்பர்களே. ஆனால், ஔவைத்தாய் அவர்கள் நமது பாதம் என்ற திருவடிகள் செந்தாமரை இருக்கும் நீருள்ள குளத்தில் இருப்பதாகப் பாடியிருக்கிறார்.
இந்தத் திருவடிகள் என்று சொல்கிறோம், இல்லையா. இந்தத் திருவடிகள் எந்தப் பொருளைக் குறிக்கிறது என்பதை நீங்கள் சற்றே யோசிக்க வேண்டுகிறோம். திருவடி என்பது வேறு ; பாதம் என்பது வேறு. திருவடிகள் பாதங்களாகா. அதேபோல பாதங்கள் திருவடிகளாகா. இறைவன் பாதங்களை நாம் திருவடிகள் என்றே அழைக்கின்றோம், அப்படி அழைக்கும்படி ஆக்கப்பட்டிருக்கிறோம், அப்படி ஆக்கும்படி கட்டமைக்கப் பட்டிருக்கிறோம். நாம் இதுநாள் வரை படித்துவந்த ஆன்மீக நூல்களில் பல்வேறு கட்டங்களில் இந்தத் திருவடிகளை பாதங்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது, சில பல அஞ்ஞானிகளால். திருவடிகள் என்பது நமது இரு கண்களையே குறிக்கிறது. இந்த ஞான மெய்ப்பொருளை இனிமேல் நீங்கள் அனைவரும் மறக்கவே கூடாது என்பதற்கே இந்த இரகசியத்தைச் சொல்கின்றோம். எம்முடைய மாணவர்களும் மெய்ப்பொருளைப் பிடித்து மெய்வழிச் சாலையில் பயணம் செய்யக்கூடிய அன்பர்களும் இந்த திருவடி வார்த்தையின் பொருளை நன்றாக உணர்ந்திருப்பார்கள். உலக மக்களும் இந்த ஞானப் பொருள் விளக்கங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றே இங்கே இந்த ஏகன் அநேகன் தளத்தில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய திருவாளர் முத்துராமன் அவர்களின் பணிவான வேண்டுகோளுக்கிணங்க இங்கே உரையாற்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எனவே, இந் உரை முழுக்க நாம் எங்கெல்லாம் திருவடிகள் என்று சொல்கிறோமோ, அங்கெல்லாம் உங்களுக்கு உங்களுடைய இரு கண்கள்தான் நினைவுக்குள் மலர்ந்திட வேண்டும்.
சரி, அடுத்த சொற்பதத்தில் முழுகுவோம், வாருங்கள்.
இந்த விநாயகர் அகவல் முழுக்கவே ஞானம், ஞானம், பிரமஞானம் மட்டும்தான் நிறைந்திருக்கிறது. அன்றைய மக்களின் மனநிலைக்கேற்பவும், ஒரு கவிஞர், புலவர் தான் சொல்ல வரும் கருத்தை வேறொரு பொருள்மீது உவமைப்படுத்தி அவர் சொல்ல வரும் கருத்தை ஏற்றிக் கூறும் வழக்கம் ஒன்றுண்டு. இதை தமிழறிஞர்கள் நன்கு அறிவார்கள். அப்படித்தான் நமது தமிழில் காணப்படும் அத்தனை ஞான நூல்களிலும் இப்படி பிரமஞானத்தின் பொருளை பக்தி என்ற பதத்தில் உருவேற்றி, உவமைப்படுத்தி ஞானத்தைப் பக்தியாகக் கொடுத்துச் சென்றார்கள் நம் முன்னோர்கள். அதனால் பக்தி என்பது நமக்குள் இருக்கக் கூடிய ஞானத்தை வெளிப்படுத்தும் ஒரு அகக்கருவி என்பதை நாம் இங்கே இவ்விடத்தில் இப்பொழுதிலிருந்து நன்றாக புரிந்து கொண்டுவிட வேண்டும்.
அடுத்த சொல் சிலம்பு பலவிசை பாட என்பது.
சிலம்பு என்றால் சதங்கையென்னும் அணிகலம் என்றும் பொருள் காணலாம்.
சிலம்பு என்ற சொல்லை சில் + அம்பு என்றும் பிரித்துப் பொருள் காண வேண்டும். சில் என்பதை சில என்று பொருள் கொள்ள வேண்டும். அம்பு என்றால் உங்களுக்கு நன்றாக தெரியும். கன்னியர்கள் கடைக்கண்ணில் காளையர்களை நோக்கி அன்புக் கணைகளை – அன்பு அம்புகளை எய்வார்கள் என்று நாம் இலக்கியத்தில் படித்திருக்கிறோம் அல்லவா. கண்களால்தான் அந்த அம்புகளை கன்னியர்கள் ஆண்களை நோக்கி வீசுவார்கள். அதனால் இங்கே சிலம்பு என்பதை திருவடிகளாகிய கண்களில் விடக்கூடிய அம்புகள் என்று பொருள் காண வேண்டும்.
இதற்கு உதாரணமாக ஒரு திருப்புகழ் பாடல் ஒன்று.
திருப்புகழ் #1019 அருணகிரிநாதர்
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி
சற்று ஏற பார்த்து சில பணிவிடை ஏவி
சில் தாபத்து ஆக்கை பொருள் கொடு பித்து ஏறி கூப்பிட்டவர் பரிசு
எட்டாமல் தூர்த்தத்து அலைபடு சிறு காலை
உற்றார் பெற்றார்க்கு பெரிது ஒரு பற்றாய் பூட்டு கயிறு கொடு
உச்சாயத்து ஆக்கை தொழிலொடு தடுமாறி
உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி காய் அ தீ பட்டு எரி உடல்
உக்கேன் மெய்க்கு ஆட்டை தவிர்வதும் ஒரு நாளே
வற்றா முற்றா பச்சிள முலையில் பால் கை பார்த்து தரும் ஒரு
மை காம கோட்ட குல மயில் தரு பாலா
மத்து ஓசை போக்கில் தயிர் உறி நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம்
வைத்து ஆடி காட்டி பருகு அரி மருகோனே
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை
கற்றார் சொல் கேட்க தனி வழி வருவோனே
கை சூல கூற்றை கணை மதனை தூள் பட்டு ஆர்ப்ப கனல் பொழி
கர்த்தாவுக்கு ஏற்க பொருள் அருள் பெருமாளே
சில் தாபத்து ஆக்கை பொருள் கொடு பித்து ஏறி கூப்பிட்டவர் பரிசு என்றால், வேலைகளைக் கட்டளை இட்டு, அற்பமான காம தாகம் கொண்ட உடலை விற்றுப் பொருளைச் சம்பாதித்து, காமப் பித்தை வருவோருக்கு ஏற்றிக் கூப்பிடும் விலைமாதர்களுக்குக் கொடுக்க வேண்டிய கொடைப் பொருள் கிட்டாமையால்,
அடுத்த வரி பலவிசை பாட என்பது. இந்த துதிகளை பக்தி என்ற அம்புகளால் நமது கண்களால் விநாயகப் பெருமானை நோக்கி எய்து கொண்டே இருக்க வேண்டும். இசையை தொடர்ந்து பாடிக் கொண்டிருப்பதைப் போல ஒரே இணக்கமாக இந்த அம்பெய்துதல் நிகழ வேண்டும். அதைத்தான் பலவிசை பாட என்றார் ஔவைத்தாய்.
அடுத்த வரி பொன்னரை ஞாணும் என்பது. பொன் அரை ஞாண். ஞாண் என்றால் அது நாண் என்ற மூன்று சுழி ண்-ஐ வரக்கூடிய நாணைக் குறிக்கிறது. நாண் என்றால் வில்லினை இழுத்துக் கட்டி வைக்கும் கயிறு என்று பொருள். இங்கே வில் என்பது நமது இரு புருவங்களைக் குறிக்கும். இந்த புருவங்கள் எப்படி வில்லாகும் என்பதற்கு பாரதிதாசன் பாடல் உதாரணமாக இருக்கிறது. அவர் “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்”. கண்கள் என்பது திருவடிகளைக் குறிப்பதாலும், அந்தக் கண்களின் வழியாகத்தான் அம்புகளை எய்ய முடியும் என்றிருக்கும்போது, அம்புகளை எய்ய வேண்டிய வில்லும் அங்கேதானே இருக்க வேண்டும். அந்த வில்தான் நமது இரு புருவங்கள். இரண்டு புருவங்களையும் இழுத்து கட்டி வைக்க ஒரு கயிறு அதாவது நாண் தேவை அல்லவா. அந்த நாண் என்ற கயிறு வேறொன்றுமில்லை அது நமது கண்களில் இருக்கக் கூடிய இமை முடிகள்தான். இமைகளை எந்த அளவுக்கு கீழ் நோக்கி கொண்டு வந்து திடீரென்று மேல்நோக்கி விரிக்கிறோமோ, அப்போது புருவங்கள் என்ற வில்லிருந்து கண்கள் என்ற திருவடிகளின் ஊடாக அம்புகள் விண்ணை நோக்கி, நாம் வைத்த இலக்கை நோக்கி சரேலென்று பாய்ந்து செல்லும். அப்போது அம்புகள் எழுப்பும் ஓசை – நாதம் – ஒலிகளைத்தான் ஔவைத்தாய் அவர்கள் பாதச்சிலம்பு பலவிசை பாட என்றார். இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கின்றோம்.
அடுத்த வார்த்தை பூந்துகில் ஆடையும் என்பது. துகில் என்றால் ஆடை என்றும் பொருளுண்டு ; வெண்மையான ஒளி என்றும் பொருள் உள்ளது. இதற்கு ஆதாரம் நமது இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.
அவிர் துகில் புரையும் அம் வெள்ளருவி – குறிஞ்சிப் பாடல் 55 (ஐந்திணைகளில் குறிஞ்சித் திணை முதலாவது திணையாகும். இது மலையும் மலையைச் சார்ந்த பகுதிகளைக் குறிப்பதாகும்.)
அதாவது ஒளிவிடும் வெண்மையான ஆடையைப் போலிருக்கும் அழகிய வெண்ணிற அருவியில் என்று பொருள் மேற்கண்ட சங்கப் பாடலுக்கு.
அதாவது நமது திருவடிகளாகிய கண்களில் பூவினைப் போன்ற மென்மையான ஒளி பொருந்திய ஆடை ஒன்று உள்ளது. அதுதான் நமது வெண்ணிற விழிகளாகும். இந்த வெண்ணிற விழிகளைத்தான் ஔவைத்தாய் பூந்துகில் ஆடை என்றார். ஒளியான ஊடுருவிச் செல்ல உடலில் இருக்கக் கூடிய ஒரேயொரு உறுப்பு நமது கண்கள் மட்டுமே என்பதை யாரும் இங்கே மறுப்பாரில்லை. மறுப்பவர்கள் இருப்பின், இப்பேச்சுரை முடித்ததும் எம்மோடு சிந்தித்து உரையாடலாம். நல்லது.
நல்லது, மீண்டும் நாம் நாளை சந்தித்து கலந்துரையாடுவோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து
உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!