அமல ஐகாரத்தின் பிரமஞான ரகசியம்

நிலம், நீர், காற்று, அக்கினி, ஆகாயம் என்ற ஐந்து பூதங்கள்தான் ஐந்து காரங்கள் ஆகும். காரம் என்றால் வெப்பம் – தேயு என்று பொருள். தேயுதான் அக்கினி எனப்படும். அக்கினிதான் மூலமாகும் – நடு அரசாகும். ஐந்து காரமே ஐகாரமாகும்.

இந்த ஐகாரம் அமலமாகத்தான் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். எந்தக் காலத்திலும் இயக்கம் என்ற அசைவினை உடையதாக இருக்கும். அந்த அசைவினால் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் தன்மையைக் கொண்டது. இதனால் இந்த ஐகாரத்தை வேதம் என்றார்கள் பிரமஞானிகள். இறைவனின் வடிவம் அமல வடிவமே ஆகும். இதைத்தான் ஆதி என்றும் சிவப்பொருள் என்றும் பழம்பொருள் என்றும் முன்னோர்களால் கூறப்பட்டது. இறைவனின் திருவடியே ஆதிப் பழம்பொருளாகும்.

இந்த ஐகாரம்தான் ஞானசத்தியின் வடிவமாகத் திகழும் நந்தியாகிய குருநாதரின் திருவடி ; என்றும் குறைவுபடாமல் எவற்றை உண்டாக்க நினைத்தாலும் அவற்றை உண்டாக்கவும் உண்டாக்கியதைத் தனக்குள்ளே மீட்டுக் கொள்ளவும் ஆற்றல் கொண்டதாகும். இது அனைத்து ஆற்றல்களையும் தனக்குள்ளே கொண்டிருக்கிறது. பிரிவேயில்லாத இந்த ஆதி அமல ஐகாரமாகிய பஞ்சகாரம் – பஞ்சக்கரம் – பஞ்சாக்கரம் – பஞ்சாட்சரம் பரந்து விரிந்திருக்கும் நிறைகளை உடையது. இதுதான் வியாப்பியம் என்று சொல்லப்படுவது. அனைத்திற்கும் மூல காரணம் பதி என்பதே.

ஐகாரத்தில் ஒவ்வொரு காரமுட்ம இன்ன இன்ன நிறை எனப் பிரிந்து பஞ்சீகரணித்து வியாபகம் பெற்றதுதான் நமது ஆன்மாவாகும். இதுவே பசு ஆகும். வியாபகத்தில் வியாபகமாய் விளங்குவது அதாவது காரியத்தில் காரியமாய் விளங்குவது தூலமாகிய சிவை – திரோதானம். இதுதான் பாசம். பதி – பசு – பாசம் என்பது என்றுமே உள்ளதாகும். இவை அநாதியாகவே இருப்பவைகளாகும்.

அறிவறிவு என்ற அறிவும் அனாதி

அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி

அறிவினைக் கட்டிய பாசம் அனாதி

அறிவு பதியிற் பிறப்பறும் தானே (தி.ம.)

இந்த அமல ஐகாரமாகிய வியாப்பியத்திலிருந்து நிறை பிரிந்து பஞ்சீகரணித்து வியாபகம் பெற்ற அசுத்த நிறைக்கு ஆன்மாவானது பிரிவுபடாத மேற்படி அமல ஐகாரத்தோடு திரும்ப வந்து சேர்வதற்கு அதற்கு அறியும் தன்மை கிடையாது. அதனால், வேதம் என்னும் ஒலிவடிவாய் விளங்கும் ஆதி அமல ஐகாரமானது, நிறை பிரிந்து பஞ்சீகரணித்து வியாபகம் பெற்ற ஆன்ம நிறையில் – அசுத்த நிறையில் அவ்வான்மா தன்னிடம் மீண்டும் திரும்புவதற்கு நிறையாகிய வேதமானது தன்னை ஒலிவடிவாகத் தன்னை வியாபித்துக் கொண்டு, “நீங்கள் என்னிடமிருந்து சென்றுவிட்டீர்கள். ஆனால், ரொம்ப தூரம் சென்று விடாதீர்கள். தூரம் சென்று திகைத்துப் போய் நின்றுவிடாதீர்கள். நீங்கள் இதுவரை சென்ற பாதை உங்களுக்குத் தெரியாது. அதனால் இன்ன இன்ன தடம் சென்றீர்கள். வேறு தடவழியே சென்று விடாதீர்கள். வேறு தடத்தில் புகுந்து விடாதீர்கள். புக வேண்டாம். திரும்பி இத்தடத்தின் வழியே வாருங்கள், வாருங்கள், வந்து எம்மீது குவிந்துவிடுங்கள்” என்று ஒலி வடிவாய் ஒலியாகிய சப்தமிட்டு அனவரதம் கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றது. ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அனவரத தாண்டவத்தை செய்து கொண்டே இருக்கிறது.

மேலே கூறிய ஆதி அமல ஐகாரமாகிய ஐந்து காரம் என்பதுதான் ஐந்து அக்கரம் – பஞ்ச அக்கரம் – பஞ்சாட்சரம் – இறைவனின் திருவடி. இது ஆரூர் கமலத்தின் மத்தியில் ஓயாது அசைந்து கொண்டும் நடனம் செய்து கொண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றோர் நமது கண்மணியைத்தான் “நமச்சிவாய”, “சிவாய நம” என்று இந்த ஆதி அமல ஐகாரத்தையே காட்டாமல் காட்டி கௌணமாக தேவாரம், திருவாசகம், திருமந்திரம் முதலிய ஞான மெய்ந்நூல்களில் திருவாய் மலர்ந்தருளிச் சென்றுள்ளார்கள். இந்த அரிய பெரிய வேத உண்மைகளை அவர்களே சொல்லாமல் சொல்லி அருளினார்கள் என்றால், சிற்றறிவினைக் கொண்ட நாமெல்லோரும் இதை மேலும் விவரிக்கத்தான் முடியுமோ? இருந்தும் எம் சிற்றறிவுக்கு எட்டியும் அனுபவத்திற்கு வந்ததுமாகிய சிலவற்றை மட்டும் இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே.

இந்த உலகத்தில் வியாப்பியம், வியாபகம் என்பவை என்றும் இருந்து கொண்டிருப்பவைகள்தான். வியாப்பியம் என்பது அசைவற்ற இடமாகும். அதாவது அசையாமல் அசைந்து கொண்டிருக்கும் இடம். வியாப்பியத்தின் முடிவும் வியாபகத்தின் ஆரம்பமும் சேர்ந்த இடம்தான் இருவினை என்னும் உடலுயிர் அற்று அதாவது அவைகள் சமநிலை பெற்று நின்ற இடமாகும். நிறைகோலாகிய மைய முள்ளானது எந்தப்பக்கமும் சாயாது வெளி இயக்கம் என்னும் வெளிப்படையான இயக்கம் இல்லாமல், உள் இயக்கம் என்னும் நிறைகொண்டு அசையாமல் அசைந்து நிற்கும் இடமாகும்.

அந்த மையமுள் நிறையைக் காட்டும். நிறையைக் காட்டுவதும் நிறையும் அதுவே ஆகும். அந்த நிறைதான் சிவம். நிறையே அமல ஐகாரம். இந்த அமல ஐகாரத்து நின்றும் நிறை பிரிந்து பஞ்சீகரணித்து வியாபகம் பெற்றது இந்த உலகம். வியாபகம் குற்றமுடையதாக இருக்கிறது. குற்றம் எதனால் என்றால், நிறை பேதத்தால் ஆனது என்பதால். நிறை பிரிந்து வியாபகம் பெறாமல் முன் வியாப்பியமாகிய “ம்” என்றே அது இருந்தது. இதுவே ஆதியும் அந்தமும் ஆகும். எதற்கு ஆதி என்றால், வியாபகத்துக்கு ஆதி. எதற்கு அந்தம் என்றால், வியாப்பியத்துக்கு அந்தம். மகரம் என்பது மட்டும்தான் உள் இயக்கம் உடையது. கௌண இயக்கம் உடையது.

இதிலிருந்து நிறை பிரிந்து பஞ்சீகரணித்து வியாபகம் பெற்றபோது வியாபகம் என்னும் அசைவு பெற்றபோது, அந்த அசைவென்னும் இயக்கத்தால் பலவித நாதங்களாகவும் ஒலிகளாகவும் விரிந்தது. வியாப்பியம் ஆரியம் எனவும் ; வியாபகம் தமிழ் எனவும் கூறப்பட்டது.

பதி, பசு, பாசம் என்பன வியாப்பிய, வியாபகங்களுள் அடங்கும். வியாப்பியம்தான் பதி ; வியாபகம்தான் பசு. பாசம் என்பது இந்த இரண்டையும் கொண்டது. எந்த இடத்திலிருந்து நிறை பிரிந்து வியாபகம் பெற்றதோ அந்த இடத்தை மீண்டும் அடைவதுதான் முத்தி எனப்படுவது. வியாபகத்தால்தான் நிறை பேதம் உண்டாகும். பேதம் என்பது குற்றம் – அழுக்கு – அசுத்தம் – பங்கம் என்பது. இதுதான் பாசம் எனப்படுவது.

நிறை பிரிந்ததனால் பங்கமடைந்து வியாபகம் பெற்ற அசுத்த நிறையாகிய ஆன்மாவானது, அமலமடைந்து மீண்டும் நிறை பிரிந்து வியாபகம் பெற்ற இடத்தை அடைவது எப்படி என்றால், அது தன்னை மீட்குமாறும் பூரணப்படுத்துமாறும் தன் சரீரத்தில் வேத வடிவாய் – அணுவடிவாய் – வித்தாய் விளங்கும் பதியை – அப்பன் திருவடித் தாமரைக் காணுதல் வேண்டும் – அந்தத் திருவடிகளைப் பற்றுதல் வேண்டும் – பற்றிப் படியேற்றம் பெறவேண்டும்.

ஆரூர்ப் பங்கச தள மத்தியில் நடனமாடிக் கொண்டிருக்கும் அப்பன் திருவடித் தாமரையைக் காண்பது எப்படி? பற்றுவது எப்படி? ஆரூர் எங்குள்ளது? அது நமது சரீரத்தில் தான் இருக்க வேண்டுமல்லவா.

பங்கம் என்றால் குற்றம். அசம் என்றால் சேறு. அழுக்கு என்றால் மலிந்த சேற்றின் இடத்தில் பங்கஜ தளம் என்னும் தாமரையின் வித்து ஊன்றப்பட்டு, அவ்வித்து குற்றம் பொருந்திய சேற்றினுள் இருந்தும், பங்கமாகிய சேறு தன்னைப் பற்றித் தன்னில் கலக்காது அச்சேற்றினுள் விளங்கும் அமல உஷ்ணம் அதாவது சுத்த அக்கினியில் பஞ்சீகரணிக்கப்பட்டு, அங்கு உரம் பெற்றுப் பின் முளைத்து விளைந்து ஏறி அந்த அசுத்தத்திலிருந்தும் மலர்ந்து தோன்றிக் குற்றமற்றதாகக் காணப்பட்டது எப்படியோ, அப்படி பங்க அசமான – அழுக்குச் சேறான பிண்டமாகிய தேகத்திற்குள்ளும் மறைந்து வித்தாக விளங்கும் ஆசான் – குரு – சிவம் – மறைந்து இருந்த மறையாது இருந்த மறை என்னும் ஆசான், அப்பிண்டம் சாதக யோகங்களால் நிறை கண்டு பஞ்சீகரணிக்கப்பட்டால் விரைந்து கிரகித்துக் கொள்ளப்படும்.

எனவே, ஒருவன் குரு நெறியைக் கடைபிடித்து ஒழுகிப் படியேற்றம் பெற்றுவிட்டால், அவன் நிறையைப் பெறுவான். நிறையைப் பெறுவது என்றால், தன் சிரசிற்குள்ளே மலர்ந்திருக்கும் தாமரை மலரைப் போன்ற இறைவனின் திருவடிகளை அடைவதாகும். இதைத்தான் வேதங்கள் மறைந்திருந்த திருவடி என்று சொல்கிறது.

சேறு என்பது பூமியையும் சூரியன் என்பது வெப்பத்தையும் குறிக்கின்றன. நீரின் மேல் அக்கினி இருக்கும். ஆனால், அக்கினியோ வாயு இல்லாமல் வடிவத்தைப் பெறாது. வாயுவோ ஆகாயத்தில் தோன்றியது. எனவே, ஐகாரம் என்னும் பஞ்சபூதம் அசுத்த பௌதிக தனு நிறையோடு பஞ்சீகரணிக்கப்பட்டால், ஆரூர்ப்பங்கச தள மத்தியில் நடனமாடிக் கொண்டிருக்கும் அப்பனாம் சிவத்தின் திருவடித் தாமரையைக் காணலாம் என்பது நமக்கு தெளிவாகிறது.

கோகழியாகிய கடலை – சரீரத்தை – முன்னிலையை – உப்பை – உப்பில் இருக்கும் துப்பை நீக்கிக் கடந்து அதன் மத்தியில் இருக்கும் குருவிடம் அடைந்து நீர் உப்புச் சமம் பெற முப்பு முடித்தல் என்று சொல்லப்படுவது, இந்த முப்பு என்னும் குரு முடித்தல் என்பது அவ்வளவு எளிதான செயலன்று.

ஆசான் குருவின் சரீர நிறை அறிந்து, அதன் அசைவுகளின் இயல்பு அறிந்து, வினைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு விதிக்கப்படும் விதிகளை வழுவற அனுட்டித்து, முன்னிலைகளை நிறைகண்டு பஞ்சீகரணித்து அனுபவிப்பதால் அதாவது அருந்துவதால் மேலே கூறிய அமல ஐகார ஒலியை – வேதத்தை அடையப் பெற்ற சகச நிட்டையாளர் சரீரதம் அணுஅணுவாக துப்பு நீங்கி – குற்றம் நீங்கி – பங்கம் நீங்கி – அசுத்த நிறை நீங்கி தேகம் அமலமடையும் – அதாவது சுத்த தேகத்தைப் பெறும். இதைத்தான் திருமூலர் அவர்கள்,

எளிய வாது செய்வார் எங்கள்ஈசனை

ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்

தெளிய ஓதிச் சிவாய நம எனும்

குளிகை இட்டுப்பொன் ஆக்குவன் கூட்டையே (தி.ம.2659)

எங்கள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை உண்மை உணர்விலாதவர் எளியானாகக் கருதிச் சொற்போர் செய்வர். அவர் ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்னும் ஒழுகலாற்று முறையினை முற்றும் மறந்தோராவர். சொற்போர் – வாது. அவன் எல்லா ஒளிக்கும் ஒளி கொடுத்துக் கொண்டு தான் இயல்பாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அறிவுப் பேரொளியாவன். அவனைப் பேரன்புடன் நினைத்து இடையறாது உருகு மனத்தராய் இருப்பவர் சிவனடியாராவர். அவர் சிவகுருவின் திருவருளால் தெளிந்து ‘சிவயநம’ என்னும் நுண்மைத் திருவைந்தெழுத்தை இடையறாது கணிப்பர். அங்ஙனம் கணித்தலால் சிவபெருமான் அப்பொருண் மறையினையே நற்குளிகையாகக் கொண்டு அவ்வுயிரையும் அவ்வுயிரின் உடம்பினையும் மாற்றுயர்ந்த செம்பொன்னாம் வண்ணம் செய்தருள்வன். அஃதாவது அவ்வுயிரையும் உடம்பினையும் சிவமாக்கியருளல். குளிகை: செம்பைப் பொன்னாக்கும் சீரிய கருவி. ‘சிவயநம’ என (2550) நோன்பு நெறியில் நிற்பார் மேற்கொள்ள வேண்டிய நுண்மறை.

(அ. சி.) பொன்னாக்குவன் கூட்டை – உடம்பு பொன்போல் ஒளி வீசும். குளிகை – மந்திரம் என்றவாறு அருளிச் செய்துள்ளார்.

சிவாய நம எனும் குளிகைதான் அமல ஐகார ஒலி. அசுத்த பௌதிகங்கள் கெட்டுச் சுத்த பௌதிகமாக மாறுதல்தான் பொன்னாக மாறுதல். சிவாய நம எனும் குளிகையே அமல ஐகார ஒலியே – அமல நிறையே நமது அசுத்த பௌதிக தனுவைச் செம்பொற் தனுவாக மாற்றுவது ; புலால் துருத்தியைப் பூந்துருத்தி ஆக்குவது. அசுத்த நிறையாகிய கூற்றனை உதைத்து மீண்டும் வாரா நெறியின்கண் சென்றடைவதாகும். பின்வரும் பிரமாணப் பாடல்கள் இதை உணர்த்தும்.

சொன்ன கிரௌஞ்ச கிரியூடு உருவத் துளைத்தவைவேன்

மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தை உற்று

நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு

என்னை மறந்து இருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே (கந்தலங்காரம்-19)

சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழிறேங் கடம்பின்

மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மன மாமயிலோன்

வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்

கால்பட்டு அழிந்தது இங்குஎன்றலை மேலயன் கையெழுத்தே (கந்தலங்காரம்-40)

சுத்த நந்தி நாதமாகிய அமல ஐகார ஒலியை – எம்பெருமான் முன்பு முழங்கு முரசைக் கேட்டு, அந்த ஆசானை – எம்பெருமானை – மதியாகிய பதியை – பதியாகிய பெருந்துறையானை எவ்விதத்தும் அடைய வேண்டும் என்ற இலட்சியம் வாய்மையாகப் பூண்டு தன் அகத்துள்ளே தேட வேண்டும்.

மேகம் சூரியனை சந்திரனை மறைத்திருப்பது போல, அஞ்ஞானமாகிய இருள் சத்தாகிய சரீரத்துள் விளைந்திருக்கும் ஆசானை மறைத்திருக்கும். இந்த அழுக்கைத்தான் அசுத்த நிறை – பங்கம் – பாசம் – மலம் என்று சொல்லப்படுவது. இது சுத்த நிறையில் கலந்து பிரிபடாது இருக்கும். இலட்சியமாகிய ஆராமை என்னும் சுத்த அக்கினியை ஊட்ட ஊட்ட அந்த அசுத்த அழுக்கு சுத்தத்தில் நின்று விலகி ஒருபால் ஒதுங்கி நிற்கும். இலட்சியமே ஞானாக்கினியாக இருந்து அந்த அழுக்கை – இருட்டை – அஞ்ஞானத்தை விலகச் செய்யும். அப்படி விலகச் செய்தபோது, அங்கு ஆசான் தரிசனம் உண்டாகும். ஆரூரும் இதுவேயாகும்.

அந்த ஆரூர்ப்பேறு எம்பெருமான் அருளாலன்றி அவன் அருளுபதேசத்தின்படி ஒழுகுதலாலன்றி மனோதர்மத்தால் ஆகும் எனக் கருதுவது அறியாமையே. “அவனன்றி ஊர்புகுமாறு அறியேனே” என்று அருளினார் திருமூலர். இத்தன்மை வாய்ந்த பிரமஞானத் தவத்தோர்க்கே தாம் அடியவர் என்பாராய் “திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று அருளிச் செய்தார்கள் தம்பிரான்தோழர் அவர்கள்.

தேகத்திலிருந்து இந்த அசுத்த நிறை நீங்கப் பெறுவதைத்தான், “நந்தி விலகுதல்”, “மாடு விலகுதல்” என்றார்கள் நம் முன்னோர்கள். இது பரிபாசையாகச் சொல்லப்பட்ட மெய்ப்பொருள் வார்த்தைகளாகும். நந்தனாருக்கு நந்தி விலகிச் சிவதரிசனம் கொடுத்தது என்ற உண்மையை நன்றாக ஆராய்ந்து உற்று நோக்குங்கள். இம்மாடுதான் அசுத்த பௌதிக உடம்பு, இவ்வுடம்பு இறைவனின் சந்நிதானத்தை சுத்த நந்தி ஒளியால் காணப்படும் பெருந்துறையை மறைத்துக் கொண்டு நிற்பது.

சீவ சுபாவத்தாலும் சீவ இயற்கையாலும் அபிமானத்தாலும்தான் அகப்பற்றும் புறப்பற்றும் உண்டாகின்றன. இவைகளை மேலோர் மறைத்து மறைத்துப் பேசுவார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்ாறல், இதை சரீர பாவனை என்றும் சொல்லலாம். சரீர பாவனை அல்லது சரீர ஞாபகம் என்பதே “நான்” என்பதற்கு வித்து. இதிலிருந்துதான் பல அனர்த்தங்கள் விளைந்து வந்தன.

சரீரம்தான் நந்தி. இதுவே ஈசுவரனை நமக்கு மறைத்துக் கொண்டிருப்பது. இந்தச் சரீரம் ஒழிந்தால் அதாவது இதன் ஞாபகம் அகன்றால் – மாறினால் – நந்தியம் பெருமான் திருவருள் பெற்றால் – நந்தி ஒளி கண்டால் பெருந்துறைத் தரிசனம் – ஆரூர்த் தரிசனம் உண்டு என்றே வேதங்கள் முழங்குகின்றன. இந்த நிலை உண்டாகுவதற்கு திருவருட் சகாயம் முக்கியமாகும். இதற்கு குருநாதன் வழிகாட்டப்பட்ட, கற்பிக்கப்பட்ட விதிப்படி ஒழுக வேண்டும். அவ்வாறு ஒழுகினால் கர்மங்களெல்லாம் சாங்கோபாங்கமாய் சரீரத்தை விட்டு அகன்று போய்விடுகின்றன.

எத்தனையோ சென்மங்களுக்கு வித்தாக இருக்கக் கூடிய வினைகளெல்லாம் அம்மையப்பர் அருளால் லேசமான அனுபவமாய் வந்து சரீரத்தை விட்டு அகலவே சரீர பாவனை நீங்கிப் போய்விடும். ஞான சற்குருவின் விதிப்படி முன்னிலைகளை நிறைகண்டு பஞ்சீகரணித்து அமல ஐகார ஒலியை அடைந்து அசுத்த நிறை எனும் களிம்பு சுண்ணமாக மாறப் பெறாதவர்கள் அசுத்த பௌதிக நிறை செம்பொன் செய் சுண்ணமாகப் பெறும் மெய்ந்நெறியை அறியாத உலகமாக்கள் “கடவுளைக் கண்டோம்”, “கூற்றனை வென்றோம்”, “முத்தி வாயிலில் இருக்கின்றோம்” என்று கூறுவது வெறும் வெற்று வார்த்தைகளன்றி வேறொன்றுமில்லை.

அமல ஐகார ஒலியை அடையப் பெற்ற பிரமஞானத் தவத்தார்கள் தமது தூலம் அமல ஒளிமயமாகப் பெற்று அதனோடு உலகம் கண்டு போற்ற மறைந்து உண்மைச் சைவ முத்திநிலையை அடைவார்கள். திருவாசகம், திருமந்திரம், ஔவை ஞானக்குறள், தேவாரம் எல்லாம் பிரமஞானத்தை அடைந்த அந்த மகா பிரமஞானிகளின் உண்மை பிரமமுத்தி நிலையைத்தான் இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதுவரை சொல்லப்பட்டவைகளால் அமல ஐகாரமே பஞ்சாக்கரம் என்பதும், வியாப்பிய வியாபகங்களாகிய பதி, பசு, பாச உண்மைகளும், பௌதிக தனு நிறையோடு பஞ்சீகரணிக்கப் பட்டால், நம் அப்பன் பரமேசுவரனின் திருவடித் தாமரை காணப்படும் என்பதும், அமல ஐகார ஒலியை அடையப் பெற்ற சகச பிரமஞானத் தவத்தார்கள் தூலம் பிணமாக விழாது சூக்குமமாய் பிரமஞான சத்தி வடிவமாக மறைய அவர் உண்மை பிரமச் சைவமுத்திநிலையை அடைவார்கள் என்பது சத்தியத்திலும் சத்தியமே.

நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்

தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்

தானேவந்து எனதுள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான்

ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே (திருவாசகம்-553)

சிவாயநம என்று சிந்தித்து இருப்பார்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்

விதியே மதியாய் விடும் (நல்வழியில் 15வது பாட்டில் ஔவைத்தாய்)

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவ சிவ என்னச் சிவகதி தானே (தி.ம.

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்
தேனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.
(தேவாரப் பாடல்)

மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
(தேவாரப் பாடல்)

மந்திரங்கள் ஆனவெலாம் அருளிச் செய்து மற்றவற்றின்

வைதிக நூற் சடங்கின் வந்த சிந்தை மயக்குறும்

ஐயம் தெளிய எல்லாம் செழுமறையோர்க்கு அருளியவர்

தெளியும் ஆற்றலால் முந்தை முதல் மந்திரங்கள்

எல்லாம் தோன்றும் முதலாகும் முதல்வனார் எழுத்து அஞ்சென்பார்

அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று

அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார் (பெரியபுராணம் – 2164)

காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேத நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சி வாயவே (தேவாரத்தில் திருஞான சம்மந்தர்)

நான்செய்த புண்ணியம் யாதோ சிவாய நமவெனவே

ஊன்செய்த நாவைக் கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவரார்

வான்செய்த நான்முகத்தோனும் திருநெடுமாலும் மற்றைத்

தேன்செய்த கற்பகத் தேவனும் தேவரும் செய்ய அரிதே (திருவருட்பா-2260)

வள்ளற்பெருமான் அவர்கள் உரைநடைப்பகுதியில் 556ஆவது பக்கத்தில் பின்வருமாறு சொல்லப்படுவதை நீங்களே கேளுங்கள்.

“இந்த மனிதப் பிறவி எடுத்தது சிவத்தின் திருவருளைப் பெறுவதற்கே. எவ்வகைப் பிரயாசத்தினாலாவது அந்த சிவத்தின் அருளை அடைய வேண்டும். அந்த அருள் எவ்வகையால் வரும் என்றால் – எல்லா உயிர்களிடத்திலும் தயவும் பிரபஞ்சத்தில் வெறுப்பும் சிவத்தின் இடத்தில் அன்பும் மாறாது நம்மிடத்தில் இருந்துவிட்டால், அவ்வருள் நம்மை வந்தடையும். நாமும் அதனை அடைந்து எதிரற்ற சுகத்தில் இருப்போம். இது சத்தியம். இனி மேற்குறித்த சாதனத்தை நாம் பெறுவதற்கு சிவபஞ்சாட்சரத் தவமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே, இடைவிடாது நல்ல மனத்தோடு அதனை தியானிக்க வேண்டும்”.

560 ஆவது பக்கத்தில், “நாம் சிவபெருமான் திருவடிகளுக்கு அடிமையானோம். நமக்கு ஒருவிதத்தாலும் குறைவில்லை. இது உண்மை. சிரஞ்சீவி. சிரஞ்சீவி”.

561 ஆவது பக்கத்தில், “நம்மை எழுபிறப்பென்னும் பெருங்கடலைக் கடப்பித்துப் பேரின்பம் என்னும் கரையில் ஏற்றும் சைவப் பதியிற் தெய்வப் புணையாத வாய்த்த திருமந்திரமாகிய பஞ்சாக்கரத்தை இடைவிடாது சிந்தித்துக் கொண்டும் சிவபிரான் திருவடிகளைப் பாவித்துக் கொண்டும் வருவது முக்கியத்தினும் முக்கியம்”.

571 ஆவது பக்கத்தில், “நமக்கு எவ்விதத்தாலும் சிவபெருமான் திருவடியும் சிவபஞ்சாட்சரியும் அன்றி பேறு சகாயமில்லை. ஆகலில் அவைகளை இடைவிடாது சிந்திக்க வேண்டும்”.

587 ஆவது பக்கத்தில், “திருவருள் சாட்சியாகத் திருவடிக் கண்ணன்றி வேறொன்றையும் என் மனம் விரும்புகிறதாகத் தோன்றவில்லை”.

593 ஆவது பக்கத்தில், “சிவசிந்தனையும் ஜீவ கருணையும் கைவிடாது ஓங்குக. வேறு விடயங்களைச் சந்தி செய்யும் பந்த சந்தி சத்தியாலே மாறாது விழித்திருக்க”.

598 ஆவது பக்கத்தில், “தாங்கள் தேகம் முதலியவற்றில் சாக்கிரதை உடையவராய் சிவத்தியான சகிதராக இருங்கள்”.

வேதங்களும், ஆகமங்களும் இந்த ஐம்பத்தோரு எழுத்தில் அடங்கும். இவற்றைப் பற்றி மேலும் ஆழ்ந்து சிந்தித்தால் அவ்வனைத்தும் திருவைந்தெழுத்தில் அடங்கும் என்கிறார் திருமூலர். இவ்வைந்தெழுத்தே தூல ஐந்தெழுத்து எனப்படும். இதனையே மாணிக்கவாசகர் “நமச்சிவாய வாழ்க” என்று அருளிச் செய்தார். “நாதன் நாமம் நமச்சிவாயவே” என்றார் திருஞானசம்பந்தர். “நற்றுணையாவது நமச்சிவாயவே” என்றார் திருநாவுக்கரசர். “நந்திநாமம் நமச்சிவாயவே” என்றார் திருஞானசம்பந்தர். திருவைந்தெழுத்தாவது உலகிலும், உயிரிலும், உடலிலும் பரவி நிற்கும். உள்ளத்தோடு தோய்ந்திருப்பது ஐந்தெழுத்தாகும். உடலிலுள்ள ஆதாரங்களில் நிலைத்து நிற்பது ஐந்தெழுத்தாகும். இவற்றை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் மந்திரங்களை உணர்ந்த பெரியார்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எழுப்பும் ஒலி பேச்சின் வடிவாக வெளிவருகின்றது. சாதாரணமாக அது தொண்டையிலிருந்து கிளம்புகின்றது என்று நினைக்கின்றோம். உடல்கூறு வல்லுநர்கள் அவ்வாறே நமக்குத் தெரிவிக்கின்றனர். நம்முடைய முன்னோர்கள் இவ்வாறு கருதவில்லை. நமது காதுகளுக்குப் புலனாகாத ஒலி நமது உடலிலேயே பரவி நிற்கின்றது என்று கூறினார்கள். மூலாதாரம் முதல் வயிறு வரை இந்த ஒலி சூக்கும நிலையில் நிற்கின்றது. வயிறு முதல் நெஞ்சு வரை சற்று கேட்கக்கூடிய வகையில், ஆனால் உள்ளத்தோடு கலந்ததாய், நிற்கின்றது. நெஞ்சு முதல் கழுத்து வரை இருக்கின்ற இடத்தில் எழுத்துடன் கலக்க ஆரம்பிக்கின்றது. பின்னர் கழுத்துக்கு மேல் அது பேச்சொலியாக எழும்புகின்றது.

இவ்வாறேதான் நமது வாயினால் உச்சரிக்கப்படும் ஐந்தெழுத்தும் உடலின் அடிப்பாகத்திலிருந்து கிளம்புகின்றது. செவிப்புலனுக்கு அப்பாற்பட்ட ஒலியாக நம் உடலிலேயே பிறந்து, பின்னர் முடிவாக நமச்சிவாய என்கின்ற ஒலியுடன் வாயிலிருந்து எழும்பும், இதிலிருந்து, இறையுணர்வின் அடிப்படையிலேயே இறைவனுடைய திருநாமம் நம்முள் தோன்றி பேச்சொலியாக எழும்பும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஓசை, ஒலி ஆகியவற்றின் நுட்பமான நிலைகளைப் பற்றி அனுபவம் பெற்ற சாதகர்களிடமிருந்து கேட்டு, அறிந்து, பயிற்சி செய்து, பலன்களைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த நுட்பமான ஐந்தெழுத்து ஒலியானது நம்முடைய சுவாசத்திலும் அமுதக்காற்றிலும் சேர்ந்து நிற்கின்றது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பார் திருமூலர். நமது திருவடிகளில் வலது, நடு, இடது பக்கங்களில் மூன்று நாடிகள் உள்ளன. அமுதக்காற்றானது இந்த வலது, இடது, நாடிகளில் உட்சென்று வெளி வருவதே திருவைந்தெழுத்தின் ரகசியப் பாதையாக இருக்கின்றது. இதை உணர்ந்து நமது அமுதக்காற்றில் திருவைந்தெழுத்தை ஓதும் மார்க்கமாகச் செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர்.

சிவாயநம என்பது சூக்கும ஐந்தெழுத்தாகும். அதில் ‘சி’ என்பது சிவன், ‘வ’ என்பது சக்தி ‘ய’ என்பது உயிர், ‘ந’ என்பது மலம், ‘ம’ என்பது மாயை ஆகும். சூக்கும திருவைந்தெழுத்து இறைவனுடைய அருட்சக்தியாகும் என்பார் திருமூலர். ஐந்தெழுத்தை ஓதுவதால் துன்பத்தைக் கொடுக்கும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து மலங்களும் நீங்கும். நம்முடைய வினைகள் ஒழியும். நமது இறப்புக்கும், பிறப்புக்கும் காரணமாக இருந்துவரும் பாசம் எனும் மும்மலங்கள் உயிரைப் பற்றாது நிற்கும். மும்மலங்கள் நீங்கியபொழுது உயிரானது சிவத்தின் தன்மையையும் பெற்று, அதுவும் சிவ ஒளியாகவே மாறிவிடும். உயிரும் சிவமும் அப்போதுதான் ஒன்றாவார்கள். இதுதான் சிரஞ்சீவி நிலை.

எனவே, இந்த பேச்சுரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு நமது குருபரம்பரையில் வந்து கொண்டிருக்கும் ஒரு பிரமஞான சிவ ரகசியத்தை இங்கே வெளிப்படுத்துகின்றோம். நன்றாக உயிரில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த பிரமஞான சிவமான திருவைந்தெழுத்தை எவ்வாறு ஓத வேண்டும்? நம என்ற எழுத்துக்களை நாவினுள் கழுத்துப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கவேண்டும் என்கின்றார் திருமூலர். நம என்னும் எழுத்துக்கள் மலத்தைக் குறிக்கின்றன. சிவ என்னும் எழுத்தைச் கண்மணிக்குள் நிறுத்தி வைக்க வேண்டும். சிவ என்னும் எழுத்துக்கள் சிவத்தையும், சக்தியையும் குறிக்கும். ஆகவே, இந்த எழுத்து நிலையாகக் கண்மணியின் ஒளிக்குள் வைக்கப்பட வேண்டும். அதாவது, நம்முடைய நான்கு அந்தக்கரணங்களில் சிந்தையானது உயிருக்கு உயிராக நிற்கும் இறைவனுடைய திருவடிகளை அடையும் தகுதியைப் பெற்றது. அந்தச் சிந்தையில் வெவ்வேறு எண்ணங்களை அடைத்து, நிரப்பி வைக்காமல் சிவ என்னும் நாமத்தையே பரவச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தானாகவே சிந்தையானது சிவனிடத்தில் ஒடுங்கும். நமது வினைக்கடன்கள் தீரும். இறைவனுடைய திருவருள் கிடைக்கும். அதனால் இறை உண்மையைப் பற்றித் தெளிவு தோன்றும். மனத்திலே அறிவு ஒளி சுடர்விட்டுப் பிரகாசிக்கும். இறப்பு, பிறப்பு என்கின்ற சூழலை விட்டு அகலலாம்.

இப்போது நாம் சொல்லப் போகும் சிவ ரகசியம் எம்மை எம் சற்குரு தம்மம்பட்டி கிராமத்தில் ஆட்கொண்டபோது சொல்லிப் பிரமிக்க வைத்ததின் காரணமாக, யாம் அவரோடு சதுரகிரி மலைக்குப் பயணமாகிச் சென்றோம். எம் தேகத்தின் உணர்வுகளை இல்லாமல் செய்வதற்காகவும், மனம் இயங்காமல் செய்து, அதை அழிப்பதற்காகவும், சிந்தை முழுக்க சிவத்தின் அருட்கலைகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்பதற்காக, இந்த சிவ ரகசிய மந்திரத்தை உபதேசிக்கப் பெறக்கூடிய பெரும்புண்ணியத்தை யாம் பெற்றோம். அதுவும் குருவருளும் திருவருளும் நடத்திய திருவிளையாடலே.

ஒருநாள் குரு எம்மை கோவணம் கட்டிக்கொண்டு வரச்சொன்னார். கோவணத்தோடு வந்து நின்றேன். அருவியில் குளித்து வரச் சொன்னார். குளித்து வந்து நின்றேன். அந்தப் பாறைமீது போய் நில் என்றார். நின்றேன். மதியம் 12, 1 மணி இருக்கும். நீ யார் எனக் கேட்டார். நான் எதையும் யோசிக்காமல் உங்கள் சீடன் என்றார். சீடன் யார் என்றார். சீடன் வாலையின் பிள்ளை என்றேன். வாலை யார் என்றார். வாலைதான் எம் உயிர் என்றேன். உன் உயிர் எதுவென்றார். அது நீங்கள்தான் என்றேன். அவ்வளவுதான் எம் சற்குரு அப்படியே ஓடிவந்து எம்மை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினார். எம் சற்குரு அழுது யாம் இதுவரை பார்க்கவில்லை, அந்த ஒரு தருணத்தைத் தவிர. மகனே, இப்போதுதான் நீ அந்த பிரமத்தின் ஒளிக்கலைகளை உன் உயிருக்குள் நிறைத்துக் கொள்வதற்கு தகுதியுடையவனாக இருக்கின்றாய். பிரமம் வேறு ; சிவம் வேறில்லை. இரண்டும் ஒன்றே. அந்த இரண்டும் உம் உயிருக்குள்ளேயே இருக்கிறது. உயிரை பீடித்து ஞானத்தை அடையவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கக் கூடிய ஐந்து மலங்களையும் ஐந்து எழுத்து அதி பிரமசூக்கும சிவ மந்திரத்தால் பார்வை எனும் அம்பால் எய்தி எரித்தொழிக்க வேண்டும் மகனே. இன்று, இக்கணத்தில் அந்த பிரம்மாஸ்திர சிவ பஞ்சாட்சரத்தை உபதேசிக்கின்றேன் என்று கூறி, எம் உயிருக்குள் அந்த சிவ விதையை ஊன்ற ஆரம்பித்தார். அதைக் கேட்க, கேட்க எம் உடம்பெல்லாம் வலிப்பு நோய் வந்ததைப் போல துடிதுடிக்க ஆரம்பித்தது. சுமார் 15 நிமிடம் இருக்கும். உடம்பெங்கும் ஒரு துள்ளல், துடிப்பு, பரவசம், ஆனந்தம், மெய்சிலிர்ப்பு, புளகாங்கிதம் மின்னலாகப் பிரவாகம் எடுத்து ஓட ஆரம்பித்து விட்டது. எம் சற்குருவோ எம்மைத் தொடர்ந்து இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த நிகழ்வை அவர் தடுப்பதற்கு எந்தப் பிரயத்தனமும் செய்யவில்லை. எனக்கோ நமக்கு வலிப்பு வந்து விட்டதோ என்று நினைக்க ஆரம்பித்தேன். நேரம் செல்லச் செல்ல எனக்குள் ஒரு அமைதி, பூப் பூக்கும் நறுமணம் உண்டாகி, எம் உடம்பே கிட்டத்தட்ட 50 அடி தூரத்துக்கு விரிந்து சூரியனைப் போல ஆயிரம் கைகளை விரித்துக் கொண்டு நிற்பதைப் போல ஆயிற்று. இதென்ன ஆச்சரியம், குருவிடம் சொன்னேன். குருவே, எம் உடம்பு விரிந்து கொண்டே போகிறது. வெடித்துவிடப் போகிறது என்றேன். அப்போதும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் செய்கையும் இல்லை. தொடர்ந்து எம் உடல் விரிந்துகொண்டே போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு மரத்தின் உச்சிக்கிளையும் நானும் சமஅளவில் இருந்தோம். எம் கைகளால் அம்மரக்கிளைத் தொட்டு உணர்ந்தேன். ஆனால், எம் சற்குருவின் திருவடிப் பார்வையோ இம்மியும் மாறாமல் எம் உயிர் இருக்கும் கூட்டை மட்டுமே தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் நான் என்னுடைய அனைத்து சிந்தனைகளையும் எண்ணங்களையும் எண்ண ஓட்டங்களையும் தூக்கிப் போட்டுவிட்டு, எம் சற்குருவின் திருவடிகளிலிருந்து வந்து கொண்டிருந்த ஒளிக்கலைகளை உற்றுப் பார்த்து உள்வாங்க யத்தனித்தேன். நான் இவ்வாறு யத்தனித்த அக்கணமே எமக்குள் ஒரு வெடிப்பு உண்டாது. எம் உடல் வெடித்துச் சிதறியதைப் போன்ற ஒரு பரவச உணர்வு நிகழ ஆரம்பித்தது. அந்த பரவசத்தில் எம்மை ஒப்புக்கொடுக்காமல் தொடர்ந்து குருவின் திருவடிகளிலேயே எம் பார்வையை இமைக்காமல் செலுத்திக் கொண்டிருந்தேன். அப்போது எம் குரு எம்மைப் பார்த்து மகனே, இந்த அதி பிரமஞான சிவ பஞ்சாட்சரத்தைப் பெறுவாயாக என்று கூறி, இவ்வாறு அந்த பிரமஞான ரகசிய பஞ்சாட்சரத்தை உபதேசித்தார். எம் சற்குருவிடம் அனுமதி பெற்றே இங்கே உங்களுக்கு மறைக்காமல் சொல்ல விழைகின்றோம்.

“சிவ சிவ சிவ சிவ சிவாய நமஓம்”

இதுதான் அந்த பிரம்மாஸ்திர சிவ பஞ்சாட்சரம். இந்த மந்திரத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்பதைப் போல இந்த பிரம்மாஸ்திர சிவ பஞ்சாட்சரம் ஒன்றுதான் உங்கள் ஐந்து மலங்களையும் கட்டறுத்து, உங்கள் பிறப்பறுத்து, உங்கள் அசுத்த தேகத்தை சுத்த தேகமாக்கி, புலால் துருத்தியான உங்கள் தேகத்தை திருப்பூம்துருத்தியாக மாற்றும் மகா மகா வல்லமை வாய்ந்தது.

இந்த பிரம்மாஸ்திர பஞ்சாட்சரத்தை நீங்கள் எவ்வாறு சொல்லி வரவேண்டுமென்றால், பிரமஞானத் தீக்ஷை பெற்ற மாணவர்கள் அவர்களின் ஐவகைத் தவத்தை முறையாக குரு சொல்லியபடி செய்துமுடித்து, காலை 04.30 மணியிலிருந்து 05.00 மணிக்குள் இதை அகாரத் திருவடியின் மெய்ப்பொருளுக்குள் தெரியும் ஒளிக்குள் நின்றுகொண்டு சொல்லிக் கொண்டு வரவேண்டும். வாய் விட்டும் சொல்லாம் ; வாய் மூடியும் சொல்லிக் கொள்ளலாம்.

தீக்ஷை பெறாத அன்பர்கள் ஒரு கண்ணாடிக்கு முன்பு அமர்ந்து கொண்டு ஒரு நெய் தீபம் அல்லது எண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, அந்த தீபத்தை உற்றுப் பார்த்தபடி இம்மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும். நேரம் காலை 04.30 மணி முதல் 05.00 மணிக்குள்.

இரு தரப்பினரும் எவ்வளவு நேரம் முடிகிறதோ அவ்வளவு நேரம் சொல்லி வரலாம்.

பிறப்பை அறுப்போருக்கும், ஞானத்தைப் பெற விழைவோருக்கும், உயிரைப் பார்க்க நினைப்போருக்கும், சிவ அருட்கலைகளை வெளிப்படுத்தி, சிவத்தோடு தம்மைக் கரைத்துக் கொள்ள எண்ணுவோருக்கும் ஆன பிரம்மாஸ்திர சிவ பஞ்சாட்சரம் இது. இது நீங்கள் கேட்கும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட அனைத்து விசயங்களையும் வெற்றியாக உங்களுக்குக் கொடுத்திடும். இது நமது ஆதித் தமிழ்ச் சித்தர்களின் ரகசியக் கலையாகும். எச்செயல் செய்தாலும் ஏதவத்தை பட்டாலும் இந்த மந்திரம் உங்கள் உடலைவிட்டுப் போகவே கூடாது. உங்கள் உயிரில் நிற்கக்கூடிய ஒரே மந்திரம் இது ஒன்றுதான் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மந்திரம்தான் உங்கள் உயிரை விழிப்படைய வைத்துக் கொண்டே இருக்கும். உங்கள் உயிர் எவ்வளவு நேரம் விழிப்புநிலையில் இருக்க வேண்டுமோ, அவ்வளவு நேரம் மட்டும் இம்மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தால் போதும். யாம் ஒவ்வொரு நொடியும் உயிரில் நின்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். சொல்கிறோம் என்பதைவிட சுவாசமே அதுவாகவே மாறிப் போய்விட்டது. நாம் நினைக்காவிட்டாலும், எண்ணாவிட்டாலும் இது தானாகவே நடந்து கொண்டே இருக்கிறது. தூக்கத்திலும் இந்த மந்திரத்தின் நாதம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த மந்திரத்தின் நாதம் சதா ஒலித்துக் கொண்டே இருப்பின், உயிரானது உறங்கவே முடியாது. உயிர் சிவத் துடிப்பிலேயே இருந்துவிடும். இந்த அதிர்வலைகளை உயிருக்குள் நிரந்தரமாகக் கடத்த வேண்டுமென்றால், மேலே சொல்லியபடி செய்துவர வேண்டும். இதுவரை இம்மந்திரம் உலகோர்க்கு வெளிப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இப்போதும் வெளிப்படுத்திவிட்டோம்.

நீங்கள் பிரமஞானத் தவத்தில் பரிபூரண சித்தியைப் பெற வேண்டுமென்றால், இம் மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் அனுபவமே உங்கள் ஆதாரம், சாட்சி எல்லாம்.

நேரம் அதிகமாகின்ற காரணத்தால் இத்தோடு இவ்வுரையை முடித்துக் கொள்கின்றோம். மீண்டும் அடுத்த பேச்சுரையில் சந்திக்கலாம்.

பிரமஞான பொற்சபையிலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

திருச்சிற்றம்பலம்