
தேகம் அருட்பெருஞ்சோதியாவது எப்படி?
அருண உதயம் என்றால் என்ன?
தேகம் அருட்பெருஞ்சோதியாவது எப்படி?
பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் ஞானவுரை – 76
ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்
Dr.ருத்ர ஷிவதா,
பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்.
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம். எல்லாம் வல்ல எம் சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் பொன்னடி திருவடிகளை தொட்டு வணங்கி, இப்பேச்சுரையை ஆரம்பிக்கின்றோம். இன்று நாம் பேசவிருக்கும் தலைப்பு “அருண உதயம் என்றால் என்ன? நமது சரீரம் அருட்பெருஞ்சோதியாவது எப்படி?” என்பதைப் பற்றித்தான்.
ஓ…..ம் ஓ…..ம் ஓ……ம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் !! திருச்சிற்றம்பலம் !!!
அருணோதயம் என்றால் என்ன? அதுதான் சூரிய உதயம் – ஆதித்யன் உதயம் என்று சொல்லப்படுவது. அருண + உதயம் = அருணோதயம். அருணன் என்றால் சூரியன் என்று பொருள். பிரபஞ்சத்தில் அருணன் உதயமாகும்போது இருள் நீங்கிவிடுவதைப் போல, நமக்குள் ஆதவன் உதயமாகும்போது நமது மாயா இருள்கள் முற்றாக நீங்கிவிடும். உலகின் சகல உயிரினங்களும் அருணோதயத்தால் பெரும்பயனை அடைந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரபஞ்சத்திற்கு எது ஒத்ததோ, அதுவே நம் தேகத்திற்கும் ஒத்தவையாகும். காரணம் பிரபஞ்சத் தத்துவமும் உடற்தத்துவமும் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருப்பதே.
பிரபஞ்சத்தில் சூரியன் உதயமாவதைப் போல, நமது தேகத்திற்குள்ளும் சூரியன் உதயமாகிடத்தான் வேண்டும். அப்பொழுதுதான் நமது அகத்திற்குள் இருக்கும் இருளானது அகன்று போகும். நமது அறியாமை – அஞ்ஞானம் நீங்கும் – முன்னிலைகளின் இயல்பு வாய்மையாக அறியப்படும். பின்வரும் பாடல் இதை உறுதிப்படுத்திடும்.
இருக்கு வேதம் இவ்வாறு சொல்கிறது. அதைச் சிறிது செவி மடுப்போம். வாருங்கள்.
வானுறு தமஞ் சதிப்பான், வயங்குயிர் உணர்த்தித் தானே
ஈனமார்ந்து ஒளிக்கு மல்லை ஏகுவித்து உகங்கள் மாந்தர்
ஊனமில் வகைபடைத்த அவற்றினை உடைத்துச் சாரன்
தான்உகர் காந்தை தன்கண் கொண்டுஒளி சார்த்துவாளே
(இருக்கு வேதம் – அஷ்டகம்-1, அத்தியாயம்-6, 11வது செய்யுள்)
அதாவது இருளை அழிக்கும் காரனாகிய சூரியனது காந்தையும், வானத்தின்கண் உள்ள இருளை ஒழிப்பவளுமாகிய உஷை எல்லாப் பிராணிகளையும் உறக்கத்தை உணர்த்தித் தானாகவே ஒளிந்து கொள்ளுகிற இருட்டையோட்டி, மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள (கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்னும்) கால நிர்மாணங்களைப் போவதும் வருவதுமாக இம்சித்துத் தனது சொந்தப் பிரகாசத்தினால் விளங்குவாள்.
யுகம் என்பது காலவளவை. “ஸ்வஸாரம்” என்னும் வடமொழிப் பதத்திற்கு உடன்பிறப்பு என்று பொருள் கூறுவர். இரவும் உஷஸூம் உடன் பிறப்புக்களாகும். ஆனால், சாயணரோ, “ஸ்வயமேவ ஸாந்தீம் நிசாம்” = தானே போகும் நிசியை என்பார். “சாரன், ஜாரன்ராத்ரே : ஜாயிது: ஸூர்யன்” இரவை மறையும்படி செய்பவன், அதாவது சூரியன் என்பார் சாயணர். சாயணர் என்றால் வித்யாரண்யர் என்பவராவர்.
நமது தேகத்தில் அருணன் எனப்படுவது எதுவென்றால், அதுதான் “உற்ற ஆக்கையின் உறுபொருள்” ஆகிய சிவம் என்னும் செம்பொருள் என்பது. நந்தி ஒளி – அமல ஒளி – அமல நிறை – அமர ஐகாரம் எனப்படுவது இதுவே ஆகும். பின்வரும் பிரமாணங்கள் நம் உடலகத்து ஒளிர்கின்ற சிவம் என்னும் செஞ்ஞாயிற்றின் இயல்பை நன்கு புலப்படுத்தும்.
இன்றுஉனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற்று இன்மை
சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றுநீ அல்லை அன்றிஒன்று இல்லை
யார்உன்னை அறியகிற் பாரே. (கோயில் திருப்பதிகம் – 7)
பொழிப்புரை : இது பிரமஞான அறிவை வெளிப்படுத்தும் திருவாசகத்தில் வரும் பாசுரம். இப்பாசுரத்தை திருவாசகத்தின் இருதயமான பாசுரம் என்பார் ஒரு அறிஞர். எனது ஆன்மா சிறிது சிறிதாகப் மும்மலத் திரயங்களிலிருந்து விடுபட்டுத் மேல்நோக்கிச் செல்லச் செல்ல அணுவாகத் தேய்ந்து முத்தி நிலையை அடைந்தது. அந்த நிலையில் வேறொரு பொருளை அறியாமலும் விரும்பாமலும் அனுபவிக்காமலும் இவ்வுலகையும் மறந்து என்னையும் மறந்து நிற்கின்றேன். அழகிய இருதயக் குகையாம் திருப்பெருந் துறையில் வாசம் செய்யும் பரமேசுவரனே ! அந்நிலையில் உன்னையே மெய்யுணர்வு களால் அனுபவித்து அனுபவித்து உனது திருவடிக்குள் அடங்கி நிற்கின்றேன். அப்போது எனக்கு நீ அருள் செய்யும் காலம் வந்துவிட்டது என்று என்மீது கருணை கூர்ந்து அதிகாலையில் முளைத்து எழுந்து மேலே செல்கின்ற சூரியனைப் போல, உனது பேரொளியான அருட்கலைகளை வீசிக்கொண்டு, எனது அறியாமையாகிய மாயா மலங்களின் இருளை நீக்கி என் திருவடிகளுக்குள் நின்றாய். இதன் காரணமாக நான் உன்னையன்றி வேறு எந்தப் பொருளும் சத்திய மெய்ப் பொருள் ஆகாது என்ற பிரம ஞானத்தை நான் மெய்யுணர்வுகளால் பெற்றது, உனது திருவருளால் அன்றிக் கருவிகளின் வழியாகவோ தற்போதத்தின் வழியாகவோ இல்லை என்பதை உணர்ந்து விட்டேன். அவ்வாறு உனது அருட்கலைகளை என்மீது அருளிய உனது பெருங்கருணையை என்னவென்று புகழ்வேன் ! நீ இவ்வுலகப் பொருட்களுக்குள் ஒரு பொருளாக இல்லை என்றாலும், நீ இல்லாத பொருளே இவ்வுலகில் இல்லை என்று உன்னைக் காண்பவர் யாராவது இருக்கின்றார்களோ? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஞான மெய்ப்பொருளுரை : சூரியனைக் கண்டதும் இருள் எல்லாம் பறந்து ஓடிவிடும். ஒளியானது இருளை விரட்டிவிடும் குணத்தைக் கொண்டது. நாம் ஞானத்தை அடையவிடாமல் மும்மலத் திரயங்கள் நம் திருவடிகளில் இருந்துகொண்டு, இருட்டாகிய அஞ்ஞானத் தத்துவங்களை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே வருகின்றது. எப்போது இரு திருவடிகளும் மகாரத் திருவடியில் ஒன்று சேர்கிறதோ அப்போதும், அபான வாயு ஆவிநிலை பெற்று பிரணவத்தின் உச்சிக்கு சென்றடையுமோ அப்போதும்தான் சிதாகாயத்தின் மேலுள்ள சிற்சபையில் இருக்கும் சிவம் அருளொளியாக வெளித் தோன்றுவார். அந்த சிவ ஒளியால்தான் மும்மலங்கள் எரிந்து நாசமடையும். மும்மலங்கள் உண்டாக்கும் அஞ்ஞான இருட்டை எரித்தொழிப்பதற்கு உன்னைவிட யாராலும் இயலாது என்பதைத்தான், “இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின்தன்மை நீயலாற் பிறிதுமற்று இன்மை” என்றார்.
இதை நான் பிரமஞானத் தவத்தைச் செய்யும்போது, திருவடிகளின் இணைப்பினால் என் மனம் இல்லாது போகும் நிலை உருவாகும். அப்போது நினைவுகளும் மனமும் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன் என்பதைத்தான், “நினைப்பற நினைந்தேன்” என்றார்.
சாதகர்கள் சுடராழித் தவத்தால் திருவடியின் சுழிமுனை நாடிக்குள் நுழைந்து, அடுத்து வச்சிர நாடிக்குள் நுழைந்து, அதற்கடுத்து சித்ரிணி நாடிக்குள் நுழைந்து, அதற்கும் அடுத்ததாக பிரமநாடிக்குள் நுழைந்து உயிரொளியைத் தொடும்போது, மும்மலங்களின் அஞ்ஞானப் பதிவுகள் அணு, அணுவாகத் தேய்ந்து போய்விட்டிருக்கும். இதன்பின்தான் உயிர்க்கூட்டிலிருக்கும் சிவக்கலைகள் உதித்தெழும்பி வெளியே வரும் என்பதைத்தான், “சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே” என்றார்.
இறைவன் தனித்திருக்கும்போது ஒளியாக உருவமற்றும், சத்தியோடு இணைந்திருக்கும்போது உருவமாகவும் தோன்றுவதால், “ஒன்றுநீ அல்லை அன்றி ஒன்று இல்லை” என்றார்.
மேற்கண்ட பிரமஞான அனுபவங்களையும் மெய்யுணர்வுகளையும் பிரமஞானத் தவத்தைச் செய்யும் ஞானச் சாதகர்கள் மட்டுமே அவர்களின் மெய்யுணர்வுகளால் அனுபவித்திருப்பார்கள் ; அனுபவிப்பார்கள். இதைத்தான், “யார் உன்னை அறியகிற் பாரே” என்றார்.
இதைத்தான் பின்வரும் திருமந்திரம் சொல்கிறது. அதைப் பார்க்கலாம், வாருங்கள்.
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமாறு எங்ஙனே (தி.ம.2944)
அதைப் போலத்தான் ஒரு தாய் தன் கணவனோடு கூடிய இன்பத்தை எப்படி தன் மகள் கேட்கும்போது சொல்ல முடியாதோ, அதைப் போல இறைவனாகிய கணவனுடன் மனைவியாகிய நம் கண்மணி புணரும்போது உண்டாகும் பேரின்பச் சுகத்தை வார்த்தைகளில் வடித்துவிட முடியுமா, என்ன? வள்ளற்பெருமான் திருவாயால் இறைவனோடு புணர்ந்து இன்புற்று அருள்பெற்ற நிலையை அருள்விளக்க மாலையாக நமக்காகப் பாடிக் கொடுத்துள்ளார். அந்த ஞானப் புணர்வில் திளைக்கலாம், வாருங்கள்.
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள்அமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்துஎன் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
தெய்வ நடத்தரசே நான் செய்மொழி ஏற்றருளே. (1)
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்துஎன் துன்பமெலாம் தவிர்த்தஅருள் அமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
திகழ்ந்துஅழியாது ஓங்கஅருள்சித்தே மெய்ச்சத்தே
வரைந்துஎன்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
கதிக்கு வழிகாட்டுகின்ற கண்ணே என்கண்ணில்
கலந்த மணியே மணியில் கலந்த கதிர்ஒளியே
விதிக்கும் உலகுயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீங்கனியே
இதுவரை வள்ளற்பெருமான் அருட்கவியாகப் பாடியதைக் கேட்டோம். நம்முடைய மாணிக்கவாசகப் பெருமான் உருகி, உருகிப் பாடுவதைக் கேட்போமா.
இரந்துஇரந்து உருக என்மனத்து உள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியும் கமலச் சேவடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்த ஆகாயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண்டு இன்றே. (கோயில் திருப்பதிகம் – 6)
பொழிப்புரை : உன்னுடைய திருவருளை வேண்டி வேண்டி என் திருவடிகள் உருகுவதால் அங்கு தோன்றுகின்ற ஒளியே ! அசையா நாட்டம் கொண்ட விண்ணவர் களின் சிரத்தின்மீது பிரகாசிக்கின்ற சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை உடையவனே ! அழகிய பிரணவக் குகையாகிய திருப்பெருந்துறையில் வீற்றிருக் கின்ற பரமேசுவரனே ! எங்கும் பரவியுள்ள ஆகாயம், நீர், நிலம், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களாகவும் அவை அல்லாதவனும் ஆகி, அந்தந்தப் பூதங்களில் மறைந்து அருள் உருவமாக இருக்கின்ற ஒப்பற்றவனே! இப்பொழுதே உன்னைக் கண்ணாரக் கண்டு கொண்டு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஞான மெய்ப்பொருளுரை : மனித தேகத்தில் தூலவடிவில் இருக்கும் பஞ்சபூதச் சத்திகள், சூக்கும தேகத்திற்குள்ளாக மறைந்து காணப்படுகின்றன. இதனால் சூக்கும தேகத்தை ஒப்பற்ற தேகம் என்பதைத்தான், “நிரந்தர ஆகாயம், நீர், நிலம், தீ, கால் ஆய் அவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே” என்றார்.
ஐம்பூதத்திற்கும் ஆதாரமாகிய கலைகளை உருவாகக் கொண்டவன் என்பதாலும், அந்த உருவம் எளிதில் புலனாகாமையாலும், “ஆங்கே கரந்ததோர் உருவே” என்றார். அருட்சார்பு பற்றிய திருவுரு என்பதால் “ஓருருவே” என்றார்.
சிவத்தைத் திருவடிகளால் சிதாகாயத்தில் கண்ணாரக் கண்டு இன்புற வேண்டும் என்பதைத்தான், “உன்னைக் கண்ணுறக் கண்டுகொண்டு இன்றே” என்றார்.
“இருதய கமலத்துள் வாசம் செய்து கொண்டு எவன் அன்னத்தைப் புஜிக்கிறானோ, அந்த அக்கினியே ஆகாசத்தில் சூரிய தேஜஸாக இருந்து கொண்டு காலன் என்கிற பெயரை அடைந்து கண்ணுக்குக் காணப்படாமல் சகல பிராணிகளையும் அன்னமாகப் பக்ஷிக்கிறான்…… பிரமத்துக்கு மூர்த்தம், அமூர்த்தம் என மூர்த்தமோ (உருவமோ அது அசத்தியமானது. அமூர்த்தம் எதுவோ அது சத்தியமானது. இதுதான் பிரமம். அதே தேஜஸ். எது தேஜஸோ அது சூரியன். இந்த சூரியன்தான் ஓம் என்கிற ஆத்மா ஆனவன். அந்த சூரியன் (பிரணவமாகிய) தன்னை மூன்றுவிதமாகச் செய்தான். ஓம் என்றது மூன்று மாத்திரைகள். (அவையாவன – அ, உ, ம்.) இவைகள்தான் இந்த மூன்று மாத்திரைகள் தான் அவயவங்கள். இவைகளினாலே இந்தப் பிரபஞ்சம் குறுக்கும் நெடுக்குமாய் (குறுக்கும் நெடுக்குமாய் செய்யப்பட்டிருக்கும் துணிபோல) சேர்க்கப்பட்டிருக்கிறது. இது ‘நான்’ என்று சூரியன் சொன்னான். இந்த ஆதித்தனை ஓங்காரம் என்று தியானம் செய்யுங்கள். உங்களுடைய ஆத்மாவைச் சூரியனிடத்தில் சேருங்கள். ஆத்மாவை சூரியனிடத்திலும் சூரியனை ஆத்மாவிடத்திலும் சேர்த்து ஏகமாய்ப் பாவியுங்கள். இந்த விசயத்தைக் குறித்துச் சாந்தோக்கிய உபநிடதத்திலும் (1-5) சொல்லப் பட்டிருக்கிறது.
இருக்கு வேதம்
அஷ்டகம் 3, அத்தியாயம் 7.
336 (40) மண்டலம் – 4, அனுவாகம் – 3, சூக்தம் – 8, இருக்குக்கள் – 5.
அம்ஸனொளி சார்தலத்தே அமர்கின்றோன்
வசுவென்றே அந்தரிட்சத்து
இம்சையற விருப்பவன், ஹோதா வேதி
தனில் உறைவோன், இலத்தமர்ந்து
செம்மை பெறு மதிதி, நரரிடையுறைவோன்
சிறந்தவிடம் சேர்வோன், மெய்ம்மை
கம்மிவற்றில் உறைபவன்நீர் பசு, ரிதங்கற்
பிறந்தவன் மெய்காட்டு மூழே.
பொருள் : எல்லாவிடத்தும் செல்லும் ஹம்ஸன் ஒளிநிறைந்த இடத்தே ஸூர்யனாக அமர்பவனாம் ; அந்தரிட்சத்தில் வாயுவாக அமர்பவனாம் ; (பூமியிலுள்ள) வேதிஸ்தானத்தில் ஹோதாவாகிய (அதிகினியாக) அமர்பவனாம் ; மனிதர்களுக்கு இடையே சைதன்ய ரூபமாக) அமர்பவனாம் ; சிறந்த சூரிய மண்டலத்தில் அமர்பவனாம் ; ரிதமாகிய ஸத்தியத்தில் உறைபவனாம் ; கம் ஆகிய வியோமத்தியில் உறைபவனாம் ; தண்ணீரில் (வடவையாகப் பிறந்தவனாம்) ; பசுக்களிடத்திதுப் (கிரணங்களிடத்து என்றபடி) பிறந்தவனாம் ; ரிதத்தினிடத்துப் (ஸத்யம், யக்ஞம், விதி அல்லது ஊழ், பிரஹ்மம் இவற்றுள் எதையேனும் கொள்ளுக) பிறந்தவனாம் ; உண்மையைக் காட்டும் ரிதமே அவனாம் என்றவாறு.
பிருகதாரண்ய உபநிடத தாத்பர்ய வர்ணனம் :
என் பேச்சு என் மனதில் வேரூன்றட்டும். என் பேச்சில் என் மனம் வேரூன்றட்டும். பிரம்மன் எனக்கு தன்னை வெளிப்படுத்தட்டும். என் மனமும் பேச்சும் வேதங்களின் உண்மையைப் புரிந்துகொள்ள எனக்கு உதவட்டும்.
நான் கேட்டது என்னைக் கைவிடாதே. இரவும் பகலும் தொடர்ந்து கல்வியில் என்னைக் கழிக்கட்டும். உண்மை என்று நினைக்கிறேன். நான் உண்மை பேசுகிறேன். அந்த உண்மை என்னைக் காக்கட்டும். அது ஆசிரியரைக் காக்கட்டும், என்னைக் காக்கட்டும், ஆசிரியரைக் காக்கட்டும். ஆதி தெய்வீக, ஆதி பௌடிக் மற்றும் ஆதி அசுரக் குழப்பங்களுக்கு எதிராக அமைதி நிலவட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
ஓம். அவர் நம் இருவரையும் (ஆசிரியர் மற்றும் கற்பித்தவர்.) முக்தியின் பேரின்பத்தை அனுபவிக்கச் செய்வாராக. வேதாகமத்தின் உண்மையான அர்த்தத்தைக் கண்டறிய நாம் இருவரும் முயற்சி செய்வோம். நம் கல்வி பலனளிக்கட்டும். நாம் ஒருபோதும் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
அது முழுமையானது. இது முழுமை. முழுமையிலிருந்து, முழுமை வெளிப்படுகிறது. முழுமையிலிருந்து முழுமை மறுக்கப்படும்போது எஞ்சியிருப்பது மீண்டும் முழுமையே. ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
என் உறுப்புகள், பேச்சு, பிராணன், கண், காது மற்றும் என் ஐம்புலன்களின் சக்தி அனைத்தும் வலுவாக வளரட்டும். அனைத்தும் உபநிடதங்களின் பிராமணம். பிராமணத்தை நான் ஒருபோதும் மறுக்கக்கூடாது. பிராமணன் என்னை ஒருபோதும் கைவிடக்கூடாது. அந்த உறவு நிலைத்திருக் கட்டும். உபநிடதத்தில் சொல்லப்பட்ட நற்குணங்கள் எனக்குள் வேரூன்றட்டும். அவர்கள் என்னில் இளைப்பாறட்டும். ஓம் அமைதி, அமைதி மற்றும் அமைதி.
ஓம். வணக்கத்திற்குரியவர்களே, மங்களகரமானதை எங்கள் காதுகள் கேட்கட்டும். எது சுபம் என்று பார்க்கலாம். உமது புகழைப் பாடுவோம், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்நாளை முழு ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் வாழ்வோம். வேதத்தில் போற்றப்படும் இந்திரன், அனைத்தையும் அறிந்தவனாகிய பூஷன், எல்லாத் தீங்குகளிலிருந்தும் காக்கும் தர்க்ஷ்யனையும், நமது ஆன்மீகப் பொலிவைக் காக்கும் பிருஹஸ்பதியையும், நமது வேதப் படிப்பிலும், அதில் உள்ள உண்மைகளைப் பயிற்சி செய்வதிலும் செழிப்பைக் காக்கட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
வேதங்களில் முதன்மையானவனும், அவற்றிலுள்ள அமிர்தத்தை விட மேலானவனுமான, எல்லாவற்றுக்கும் இறைவனான அவன் எனக்கு ஞானத்தை அருளட்டும். அழியாமைக்கு வழிவகுக்கும் பிரம்மத்தைப் பற்றிய அறிவால் நான் அலங்கரிக்கப்படுகிறேன். (பிரம்மனைப் பற்றி தியானம் செய்வதற்காக) என் உடல் வலுவாகவும், வீரியமாகவும் ஆகட்டும். என் நாவு எப்பொழுதும் மகிழ்ச்சியான வார்த்தைகளை உச்சரிக்கட்டும். நான் என் காதுகளால் நிறைய கேட்கலாம். நீ உலகக் கறைகளால் மறைக்கப்பட்ட (மற்றும் அற்ப புத்திகளால் வெளிப்படுத்தப்படாத) பிரம்மனின் சீதை. நான் கற்றுக்கொண்டதை நான் ஒருபோதும் மறக்கக்கூடாது. ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
வணக்கங்கள். என் மனமும் இவை அனைத்தும் (உடல், இந்திரியங்கள், பிராணன்கள் போன்றவை) நன்றாகவும் நன்றாகவும் இருக்கட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
நான் மரத்தை (சம்சாரத்தை) அழிப்பவன். என் புகழ் குன்றின் உச்சியைப் போல் உயர்ந்தது. நான், சாராம்சத்தில், சூரியனைப் போல தூய்மையானவன். நான் உயர்ந்த பொக்கிஷம். நான் அனைத்து ஞானி, அழியாத மற்றும் அழியாதவன். இது திரிசங்கு உணர்தல். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
இந்த பிரபஞ்சத்தை ஆதியில் படைத்தவனும், வேதங்கள் யாரைப் புகழ்ந்து பாடுகிறானோ, அவனிடம் என் புத்தி பிரம்மஞானத்தால் பிரகாசிக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையிலும் நம்பிக்கையிலும் அடைக்கலம் புகுகிறேன். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
சூரியன் (மித்ரா) நமக்கு நல்லவராக இருக்கட்டும்! வருணன் நமக்கு நன்மை செய்வானாக! சூரியன் (ஆர்யமா) நமக்கு நல்லவராக இருக்கட்டும்! இந்திரனும் பிருஹஸ்பதியும் நமக்கு நன்மை செய்யட்டும்! மகத்தான முன்னேற்றங்களை உடைய விஷ்ணு நமக்கு நன்மை செய்வாயாக! பிரம்மனுக்கு வணக்கம்! வாயுவே, உமக்கு நமஸ்காரங்கள், உண்மையில் நீயே கண்ணுக்குத் தெரியும் பிரம்மன்! நான் உன்னைக் காணக்கூடிய பிரம்மன் என்று அறிவிப்பேன்; நான் உன்னை நீதிமான் என்று அழைப்பேன்! நான் உன்னை உண்மை என்று அழைப்பேன்! அவர் என்னைக் காப்பாராக! அவர் ஆசிரியரைப் பாதுகாக்கட்டும்! அவர் என்னைக் காப்பாராக! அவர் ஆசிரியரைப் பாதுகாக்கட்டும்! ஓம் சாந்தி, சாந்தி. சமாதானம்.
- ரிக்-வேதம்:- ஐதரேய உபநிஷத் : “பிரஜ்ஞானம் பிரம்மம் – தூய உணர்வு அல்லது அறிவு பிரம்மம்.”அறிவு அல்லது மாறாக நுண்ணறிவு என்பது ஒருவர் பார்க்கும், கேட்கும், உணரும் அல்லது பிரிக்கும் மற்றும் சுவை அல்லது வெறுப்பை அறிவது. தெய்வங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் இந்த ஒரு புத்திசாலித்தனம் பிரம்மன் மட்டுமே. இந்த வாக்யா துவக்கத்தின் நோக்கத்தை விளக்குகிறது மற்றும் அனுபவத்துடன் தொடர்புடையது. இது பிரம்மத்தின் தன்மையை விளக்குகிறது. ஆத்மா என்பது பிரஜ்னானா அல்லது தூய உணர்வு, மனிதனின் அத்தியாவசிய சுயம். வாக்கியமானது அனுபவ வாக்யா, பிரயோஜனபரா, ஸ்வரூபபோதா அல்லது லக்ஷண வாக்யா என்று பலவிதமாக அழைக்கப்படுகிறது.
- யஜுர்-வேதம்:- பிருஹதாரண்யக உபநிஷத் : “அஹம் பிரம்மா அஸ்மி – நான் பிரம்மன்”. அம்பிகையின் நோக்கம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நான்’ என்ற சொல், அறிவின் ஊடகமாகவும், புத்தியின் சாட்சியாகவும் இந்த உடலில் வசிக்கும் முழு பரமாத்மாவைக் குறிக்கிறது. ‘பிரம்மன்’ என்ற சொல் உச்ச ஆத்மாவைக் குறிக்கிறது. ‘ஆம்’ என்ற சொல் அவர்களின் அடையாளத்தைக் குறிக்கிறது. இந்த வாக்கியம் அபயாசா, விஷயபாரா அல்லது அனுபவ வாக்யா என்று பலவிதமாக அழைக்கப்படுகிறது.
- சாம-வேதம்:- சாந்தோக்ய உபநிஷத்: “தத் த்வம் அசி – நீ அது ஆகிறாய்.”இது பகுதிக்கும் முழுமைக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. ஒரு வினாடியின்றி ஒன்றேயும், பெயரும் வடிவமும் இல்லாத அந்த இருத்தல் ‘அது’ என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. கேட்டவரின் (சிஷ்யரின்) உடலின் பின்புறம் மற்றும் இந்திரியங்களின் பின்புறத்தில் இருக்கும் பொருள் அல்லது உண்மை ‘நீ’ என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. கலை என்ற சொல் அவர்களின் அடையாளத்தைக் குறிக்கிறது. அந்த அடையாளத்தை அனுபவிக்க வேண்டும். இந்த வாக்கியம் உபதேசம் அல்லது சம்பந்தபர வாக்கியம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது.
- அதர்வ-வேதம்:- மாண்டூக்ய உபநிஷத்: “அயம் ஆத்மா பிரம்மா – இந்த ஆத்மா பிரம்மன்.”சுய-பிரகாசத்தின் நேரடி அறிதல் ‘இது’ என்ற வார்த்தையால் குறிக்கப்படுகிறது. அஹங்காரா முதல் உடல் வரை எல்லாவற்றின் பின்பகுதியிலும் இருப்பது ‘ஆத்மன்’ எனப்படும். ‘பிரம்மன்’ என்ற சொல், முழுப் பிரபஞ்சத்தின் பின்பகுதியிலும், சுயம்பிரகாசமாகவும் இருக்கும் அந்த மாபெரும் உண்மையைக் குறிக்கிறது. இந்த சாக்ஷாத்கார வாக்கியம் பிரம்ம ஞானத்தை அளிக்கிறது. இந்த அனுபவபோத வாக்யா, தியானத்தின் மூலம் உள் உள்ளுணர்வு அனுபவத்தை அல்லது உள்ளார்ந்த சுயத்தின் நேரடி உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த வாக்கியம் தர்சனம் அல்லது விதிவாக்கியம், அதிகாரிபரா அல்லது அபரோக்ஷ அநுபூதி வாக்யா என்று பலவிதமாக அழைக்கப்படுகிறது.
கடவுள் இருக்கு, யஜுர், சாமம் என்னும் மூன்று வேத வடிவினராக இருக்கின்றார். தினத்தின் முதற்பாகத்தில் இருக்கு வேத வடிவமாய் நிற்பார். தினத்தின் மத்திம பாகத்தில் யஜுர் வேத ரூபமாய் நிற்பார். அந்திய பாகத்தில் அதர்வ அங்கிசத்தோடு வடிய சாமவேதமாய் ஒளிரா நிற்பார். உலகத்தின் கண்ணே பிரசித்தமாய் மது, புருஷர்களின் ஆனந்தத்திற்குக் காரணமாவது போல, வசு முதலிய தேவதைகளுக்கு ஆனந்த ஹேதுவாயும், சர்வ கர்மங்களின் பலத்தைக் கொடுப்பதுமாகிய ஆதித்திய ரூப மதுவின் கண் எப்போதும் விளங்கா நிற்பார். அந்த ஆதித்ய ரூப மதுவானது இரத்தம், சுக்கிலம், கிருஷ்ணம், அதிகிருஷ்ணம், குஹ்யம் என்னும் ஐந்து பிரகாசங்களோடு கூடியிருக்கும். கூறிய முறையே இரத்தாதி ரூபங்களையுடைய இருக்கு, யஜூர், சாமம், அதர்வாங்கிரசம், உபநிஷத் என்னும் ஐந்து வகையாய் வேதரூப வண்டினங்களால் சேர்க்கப் பெற்றது. உலகின் கண்ணே தேனீயானது புஷ்பங்களிடத்தே மந்திர வடிவமாய் அடைந்து யாகாதி கர்மங்களின் சூக்ஷும அவஸ்தை வடிவ புண்ணிய ரூப வதிர்ஷ்டமாகிய ரசத்தை ஆதித்ய மதுவின்கண் கொணடு சேர்க்கும்.
இவ்வாறு வரும் உபநிடதப் பிரமாணங்கள் பல உள்ளன. விரிப்பின் பெருகும் என்பதால் உபநிடதங்களைப் பற்றி இந்த மட்டும் போதும் என்று முடித்துக் கொள்ளலாம்.
நமது சரீரமாகிய இல்லினுள் அருணோதயம் காண்பதே அவ் இல்லைத் திறத்தல் – துறத்தல் என்பது. துறத்தல் துரத்தல் என்பன ஒன்றுதான். துரத்தல் என்றால் என்ன? அதுதான் மாயையாகிய திரையை – மறைப்பை நீக்குதல் என்பது – கபாடம் திறத்தல் என்பது – மறைக்காட்டுக் கதவம் திறத்தல் என்பது. கதவம் திறத்தலால் கன்னிவனம் அடையப்படும் – கன்னிவனம் என்னும் ஐவனம் அடையப்படும். வாய்மையான வேத ஆரணியம் இதுவே என்க.
கன்னிவனம் அடைதலால்தான் அருணோதயம் காணப்படும் – சிவம் என்னும் செம்பொருள் – அமலநந்தி ஒளி காணப்படும். மறையாய் இருக்கும் சிவம் – கபாடித்திருக்கும் சிவம் காணப்படும். கடவுளைக் காண்பதென்பது இதுவே என்க.
இதனால் ஆகும் பேறு என்ன? எனில், அதன் அருமை பெருமையை யாரே இயம்ப வல்லார்? பின்வரும் பிரமாணம் இவ்வுண்மையை நன்கு புலப்படுத்தும்.
மெய்த்தாளகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டு ஆரும் திறந்து அறிவாரில்லை
பொய்த்தாள் இடும் பையைப் பொய்யறநீ விட்டங்கு
அத்தா டிறக்கி அரும்பேறு அதாமே (தி.ம.)
வம்புபழுத்த மலர்ப்பழம் ஒன்று உண்டு
தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டாது
அம்புகொண்டு எய்திட்ட கலத்து உரத்திடில்
செம்பொற் சிவகதி சென்று எய்தலாமே (தி.ம.)
மேலை அணாவில் விரைந்துஇரு காலிடிற்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞானம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே (தி.ம.)
இன்னது இதுவென்று இறைவன் திறம்அதனைச்
சொன்னமறையும் துணிந்து அறியாது அம்மானை
சொன்ன மறையும் துணிந்து அறியாதுஆமாயின்
கன்னிவனம் அடைந்தால் காணலாம் அம்மானை
கண்டார் பிறிதொன்றும் காணார்காண் அம்மானை. (தனிப்பாடல்)
மேலே காட்டிய பிரமாணங்களால் கதவம் திறந்து மறைக்காடு என்னும் கன்னிவனம் அடையப் பெற்றோரே – அடைதலால் சிவம் என்னும் செஞ்ஞாயிற்றைக் காணப் பெற்றோரே பிணி, மூப்புச், சாக்காடும், பிறவியும் ஒழித்து நித்தியத்துவம் அடைதல் திருவருள் ஆணை ஆதல் நன்கு வற்புறுத்தப்பட்டதை கண்டு கொள்ள வேண்டும்.
“பரா நந்தி ஆணையே” என ஆணை தந்தவர் எம் அண்ணலாகிய திருமூலர் அல்லவா? வேத உண்மை இதுவே. இதனை அறியாது மனப்பான்மையால் வேறு தடம் புகுந்து உடல் பிணமானபின் நித்தியத்துவம் அடையலாம் – சிவகதி பெறலாம் என அரற்றி அமைவார் அறியாமையை என்னவென்று கூறுவது?
அருணன் உதயமானால் இருள் ஒழிந்துவிடும் என யாவரும் எளிதாகக் கூறுவார்கள். அருணனை உதயமாகும்படி செய்வது என்றால் எளிதன்று. சற்குருநாதனால் அருளப்படும் சாதக யோகங்களால்தான் “கைத்தாள்” என்னும் “தீக்கை”யால்தான் வாய்மையான ஒழுக்கத்தினால்தான் இச்செயல் கைவரப்பெற வேண்டும். அருணோதயம் ஆனபோது தான் அகவிருள் எனும் அஞ்ஞானம் அகலும் – யாவற்றையும் இருந்தாங்கிருந்து உள்ளவாறே அறியும் ஆற்றல் உடையதாகும் – ஞான நேத்திரம் உளதாகும் என்க. இதனைப் பெற்றாலன்றி நாம் ஒன்றையும் வாய்மையாக அறியமுடியாது. இவ் அக ஒளியை – மைய முள்ளை – அகக்கண்ணைப் பெறாதவிடத்து நாமெல்லாம் குருடர்களே – அஞ்ஞானிகளே.
இருளில் பழுதையைப் பாம்பென்று மயங்கி அஞ்சி ஓடியவன் சூரியன் உதயமானதும் அதனைப் பழுதை எனக்கண்டு மயக்கம் தீர்ந்து இன்பமடைகின்றான். இதுபோலவே நம்முள்ளும் அருணோதயமானபோது தான் மாயையின் வரலாறு அறியப்படும். இது கைவரப் பெறாது இருளாகிய மாயை வலையில் அகப்பட்டு மயங்கி நின்று “மாயை எப்படி வந்தது? அது உள்பொருளா? இல்பொருளா? இல்பொருளா?” என்று இன்னோரன்ன பலவற்றைச் சாதலடையக்கற்ற குட்டிக் கல்வி வன்மையால் உழறிக் குழறிச் சர்ச்சை விளைப்பதால் உண்மை கண்டு மேன்மை அடைய முடியுமா? முடியாது. மயக்கம் என்னும் அறியாமையால் வாதம் புரிந்து சாதலை அடைவதே அன்றி பயன் என்று ஒன்றுமில்லை.
தம்முள்ளே அருணோதயம் ஆகப் பெற்றவரே மாயையைக் கண்டவர் – வென்றவர் – அடிப்படுத்தியவர் ; விதியை வென்றவர் – காலனை வென்றவர் எனலாம். அருணோதயம் ஆக பின்னேயே முன்னிலைகளைப் பகுத்தறியும் வன்மை நமக்கு உளதாகும். இந்த அருணோதயமே குரு தரிசனம் – நம்முள்ளே குரு தரிசனம் பெறுதல் என்பது. இந்த அருணோதயம் பெறுவதற்கே மெய்யடியார்கள் பலகாலம் அரும்பாடுபடுகின்றனர். அவர்கள் அதனால் அடைந்த துன்பங்கள் நம்முடைய சிந்தனை சொற் செயல்களுக்கு அளவுபடுவனவாகுமா? பின்வரும் பிரமாணங்கள் இவ் வண்மையை நன்கு புலப்படுத்தும்.
திருவாசகம்
ஏனை யாவரும் எய்திடல் உற்றுமற்று
இன்ன இன்னதென்று அறியாத
தேனை யானையைக் கரும்பின் இன்தேறலைச்
சிவனை என் சிவலோகக்
கோனை மானன நோக்கி தன் கூறனைக்
குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யானிருந்து ஓம்புகின்றேன்
கெடுவேன் உயிரோய் ஆதே (திருச்சதகம்-ஆத்மசுத்தி, செ.8)
பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்
உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கு இலாததோர் இன்பமே வரும்
துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கு இலாததொர் வித்து மேல்
விளையாமல் என்வினை ஒத்தபின்
கணக்கு இலாத் திருக்கோலம் நீவந்து
காட்டினாய் கழுக் குன்றிலே. (திருக்கழுக்குன்றம்-1)
பொழிப்புரை : நல்லார் பொல்லார் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஏற்பப் பெய்யும் மழையினைப் போல,அவரவர் செய்யும் வினைக்குத் தக்க அருள்மாரி பெய்துவரும் மாறுபாடில்லாதவனே! அழகிய பெருவழியான திருப்பெருந் துறையில் விளங்கும் பரமேசுவரனே ! உன் திருநாமங்களையே பேசும் மெய்யன்பர்களுக்கு உண்டாகும் துன்பங்களை முழுமையாகத் துடைத்து அதனால் உண்டாகும் இணையற்ற இன்ப வடிவாகத் திகழ்பவனே! ஈரம் உலர்ந்து போகாத தனித்தன்மையுடைய பிறவி விதையான விந்துவானது மோகத்தினால் வெளிப்படாமல் இருக்கும்படி எனக்கு இருவினை ஒப்புக்குகொள்ளும்படி வந்த பிறகு, என்னுடைய துன்பத்தை நீக்கித் தேகத்தின் ஆயுளை அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் அளவில் அடங்காத் திருவடிவத்தை பிரணவ மலை உச்சியான திருக்கழுக்குன்றத்தே நீ காட்டி அருளினாய்.
ஞான மெய்ப்பொருளுரை : பிணக்கு= நெருக்கம், சண்டை; மாறுபாடு, இணக்கு = இணங்கு என்பதன் விகாரம், சேர்த்தல். ஒப்பு. உணக்குதல்= வாடுதல், வற்றுதல், காய்தல் ; வித்து = விந்து ; மேல் விளையாமல் = வெளிப்படாமல் ; ஓர் = தனியியல்புடைய. கழுகு = ஆயுளை குறிப்பதற்கு உண்டான பறவை ; குன்று = பிரணவக் குன்று ; கணக்கிலா = அகண்டமான.
ஞானப் பொருள்கள் அனைத்தும் திருவடியின் மத்தியப் பாகமான மெய்ப்பொருளில்தான் அமைந்திருப்பதால், அந்த ஞானப் பொருள்கள் விரிந்தும் அகன்றும் காட்டிக் கொண்டிருப்பதால், “பிணக்கிலாத பெருந்துறை” என்றார்.
சாதகன் பிரமஞானத் தவத்தை செய்யும்போது, அவனது பிரணவக் குகையில் இருந்து ஞான சொரூபங்கள் தெய்வாம்சமாக தோன்றி நிற்கும். இக்காட்சிகளை சாதகன் கண்கொட்டாது விழித்த நிலையிலேயே பார்த்துக் கொண்டிருப்பான் என்பதைத்தான், “இணக்கு இலாததோர் இன்பமே வரும்” என்றார்.
சாதகன் நன்றாகச் சுடராழித் தவத்தைச் செய்யக் கற்றுக்கொண்டுவிட்டால், அவனுக்கு இரு திருவடிகளையும் மகாரத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதற்கு எந்தவித சிரமமும் இருக்காது. அந்நிலை வாய்ப்பின் அவனுக்கு பிரணவக் குகையை திறக்கும் தேவை இல்லாது போய்விடும் என்பதைத்தான், “இணக்கிலாத” என்றார்.
சுடராழித் தவத்தில் சாதகன் அடையும் ஆன்ம தரிசனத்தைத்தான், “ஓரின்பமே வரும்” என்றார்.
பிரமஞானத் தவத்தில் மும்மலங்கள் எரிந்து நாசமாவதைத்தான், “துன்பமே துடைத்து” என்றார்.
வாடுதல் இல்லாத தன்மையைக் கொண்ட விந்துவைத்தான், “உனக்கிலாததோர் வித்து” என்றார்.
விந்தும் நாதமும் உலக உற்பத்திக்காக மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், மானிடங்கள் இந்த அரிய ஞானப் பொருளை காமம், மோகம் என்ற உணர்வுகளில் தொலைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு காமத்திலும், மோகத்திலும் உயிரணுக்களை சேதம் செய்யாமல், தவத்தினால் பரவிந்துவாகவும், பரநாதமாகவும் மாற்றிவிட்டால், நல்வினைகள் உண்டாகி இறைவனை சென்றடைந்திடும் நிலையைத்தான், “வித்து மேல் விளையாமல் என்வினை ஒத்தபின்” என்றார்.
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயிர்க்கு எலாம்
அந்தமும் ஆதியு மாமந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே (தி.ம.1969)
என்ற திருமந்திரப் பாடலை நன்கு உற்று நோக்கவும்.
சிவ உருவமானது எண்ணற்ற வடிவங்களாக, உருவங்களாக மாறி, மாறி தோன்றிக் கொண்டேதான் இருக்கும் என்பதைத்தான், “கணக்கிலாத் திருக்கோலம்” என்றார்.
மாணிக்கவாசகர் சொல்லும் கழுகு என்ற சொல் ஏற்கனவே இராமாயணத்தில் சடாயு, சம்பாதி என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேகத்தின் ஆயுள் எல்லையைக் குறிப்பிட இந்த சடாயு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேகத்தின் ஆயுள்கணக்கை பிரமஞானத் தவத்தின் மூலமாக கடந்து போகும் நிலைதான் சிரஞ்சீவி நிலையாகும். இதைத்தான் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் பிரமஞானம் என்ற சிரஞ்சீவிக் கல்வியை இவ்வுலகுக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். பத்துதலை கொண்ட இராவணன் என்ற மனதினால், சடாயுவின் இறக்கை வெட்டப்பட்டது. இதுதான் ஆயுளின் எல்லை. வெட்டுதல் என்பது ஆயுளின் முடிவுநிலை. ஆயுள் முடிந்ததும் நம்மால் எதுவும் செய்ய முடியாமல் சவமாய் கிடப்போம் இல்லையா. ஆனால், சடாயுவிற்கு ஒவ்வொரு நாளும் இறக்கை வளர்ந்து வந்து ஒருநாள் பறக்கும் ஆற்றலைப் பெற்று நிற்கும். அதுதான் சிரஞ்சீவி நிலை. இதைப்போலத்தான், மனித தேகத்தின் தசைகளைப் பிடுங்கித் தின்னும் கழுகைத்தான் மனித ஆயுளை முடிக்கும் பறவையாகக் காட்டப்பட்டது. திருவடியின் பிரணவக் குன்றில் கழுகு இருப்பதைத்தான், “கழுக்குன்றிலே” என்றார்.
இந்தப் பிரமாணங்கள் எல்லாம் அருணோதயமாகிய குருவின் தரிசனத்தையே குறித்தது. இதுவே அமல முதற்படி ; முத்திக்கு வாசற்படி. புறத்தே அருணோதயம் ஆவதற்கு அறிகுறியாகப் புள்ளொலி முதலியன கேட்கப்படும். அகத்தும் இவ்வாறே நாதங்கள் கேட்கப்படும்.
“உள்ளொலி நாதப் புள்ளொலி முழங்க” என ஆன்றோர்கள் கூறியுள்ளதை அறிக.
இருளறை திறந்த பெருவெளி மண்டபத்து
உயர்நா தாந்தத் திருமலர் அமளியிற்
புளகமெய் போர்ப்ப மொழிதடு மாற
உள்ளொலி நாதப் புள்ளொலி முழங்க
35 ஞானவார் அமுத பானமது ஆர்ந்து
நாதங்கள் சிவ சன்னிதானத்தில் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதால் அச் சிவ சந்நிதானத்தை அடைபவர்களால் அவை கேட்கப்பட வேண்டியது ஒருதலையே ஆகும். தம்முள்ளே அருணோதயம் ஆதற்கேற்ற அறிகுறி காணப்பட்டபோது தான் மணிவாசகர் திருப்பள்ளியெழுச்சித் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். பின்வரும் திருவாக்குகள் இந்த உண்மையை நன்கு புலப்படுத்தும்.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகைஒளி ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல்தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்து அருளாயே. (திருப்பள்ளியெழுச்சி-3)
பொழிப்புரை : அழகிய பிரணவக் கமலமாகிய திருப்பெருந்துறையில் வீற்றிருக்குஞ் சிவபெருமானே, யாவரும் அறிவதற்கு அரிதானவனே, கருணையால் மெய்யடியாராகிய எங்களுக்கு எளிதாக வந்து அருள் செய்பவனே! பொழுது புலர்வதை உணர்த்த வேண்டி அழகிய பூங்காவனக் குயில்கள் கூவுகின்றது. கோழிகளும் பொழுது விடிவதைக் காட்டிக் கூவுகின்றன. பிறவகைப் பறவை இனங்களும் ஒலித்து விட்டன. சங்குகள் நாதத்தை முழங்குகின்றன. சித்திரத்தைத் தீட்டும் நட்சத்திர வெளிச்சங்கள் ஆகாயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. உதயத்தின் ஒளியானது நிலத்தின்கண் வந்து விழ ஆரம்பிக்கின்றது. எம்பெருமானே, துயில் நீங்கி எங்கள்பால் அன்போடு தெய்வ நன்மையைக் கொடுக்கும் வீரம் செறிந்த ஞானக் கழலாகிய பிறவி அறுக்கும் உனது நல்ல திருவடிகள் இரண்டையும் காட்டி அருள்வாயாக.
ஞான மெய்ப்பொருளுரை : குருகு = பறவை. தாரகை = விண்மீன். நல்தாள் = பிறவியறுத்து வீடளிக்கும் நன்மையுடைய தாள். ஒருப்படுகின்றது = தோற்றுகின்றது. ‘விருப்பொடு நமக்கு’ என்பதற்கு நமக்கு விருப்பம் உண்டாகுமாறு எனப்பொருள் கொண்டு ‘ஒருப்படுகின்றது’ என்று முடிப்பதும் உண்டு.
திருவடியில் இருக்கும் அனாகத இடத்தை குயிலாகக் கற்பித்தார். அதனால் அங்கு நின்றெழும் நாதத்தின் ஒலியை குயிலின் ஓசை போல இருப்பதால், பூஞ்சோலைகளில் வாழும் குயில்களை, “பூங்குயில்” என்றார்.
பிரணவக் குகையில்தான் அடிப்பகுதியில் அபான வாயு இருந்து கொண்டிருக்கிறது. சுடராழித் தவத்தால் இவை திரவ நிலையிலிருந்து ஆவி நிலைக்கு மாறும்போது அங்கே ஒரு நாதம் தோன்றும். அது ஒரு சிறு மேக கர்ஜனையைப் போல இருக்கும். அந்த அபான வாயு ஆவிநிலையில் பிரணவத்தின் உச்சிக்குச் சென்று பிராணனோடு ஒன்றுசேரும்போது பிரணவமானது அதன் கலைகளை வெளிப்படுத்தும். அப்போது அங்கே மற்றொரு நாதம் வெளிக்கிளம்பும். அது எப்படி இருக்கும் என்றால், கோழிகள் அதன் இரக்கைகளை நன்றாக விரித்துச் சப்திப்பதுபோல இருப்பதால், “கூவின கோழி” என்றார்.
இவ்வாறு அபானனும் பிராணனும் பிரணவத்தின் உச்சியில் ஒன்றுசேர்வதால், அதன் கலைக்கூட்டங்கள் தொடர்ந்து நாதத்தை எழுப்பிக் கொண்டே ஆகாயத் தத்துவமான சிதாகாயத்தில் பறந்து கொண்டே இருக்கும் என்பதைத்தான், “குருகுகள் இயம்பின” என்றார்.
அப்போது பிரபஞ்சம் எங்கும் ‘ம்’ என்ற நாதம் சங்கின் சப்தத்தைப் போல இருப்பதைத்தான், “சங்கம் இயம்பின” என்றார்.
திருவடிகளின் சிதாகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஒளிகள் அழகிய ஓவியங்களை உண்டாக்கியபடியால், “ஓவின தாரகை ஒளி” என்றார்.
திருவடிகளில் வெளிப்படுகின்ற அத்தனை ஒளிகளும் பிரணவத்தின் உச்சியில்தான் ஒன்று சேரும் என்பதைத்தான், “ஒளி உதயத்து ஒருப்படுகின்றது” என்றார்.
மேலே சொல்லப்பட்ட செயல்பாடுகள் எல்லாம் சுடராழித் தவத்தின்போது சாதகனுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஞானக் கர்ம அனுபவங்களாகும். சுடராழித் தவத்தினால்தான் அபான வாயுவானது ஆவிநிலையை அடைந்து அமுதக் காற்றின் துணையோடு பிரணவத்தின் உச்சியை சென்றடையும். அமுதக்காற்றின் உதவியில்லாமல் அபானனால் பிரணவத்தை சென்றடைய இயலாது. அந்த அமுதக்காற்று வருகின்ற நேரம் குயில்களும், மயில்களும், கோழிகளும், மற்ற பறவைகளும், பிரபஞ்சமும் விழித்தெழும் அந்த அதிகாலை நேரம்தான். அதனால்தான் மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி என்று இந்த பதிகப் பாடல்களை அமுதக்காற்று வரும் வேளையில் பாடி ஒவ்வொரு தினந்தோறும் ஞானச் சாதனைகளைச் செய்து சிவத்தின் திருவடிகளைக் கண்டு அவனோடு கலந்திட வேண்டும் என்று, “விருப்பொடு நமக்குத் தேவ நற்செறி கழல் தாளிணைக் காட்டாய்” என்றார்.
தேவ – தெய்வ. செறி – நெருங்கிய. தாளிணை – இணைந்த திருவடிகள். சிவபெருமான் பிரமஞானத் தவத்தைச் செய்வோர்களுக்கு எளிதாகவும், செய்யார்களுக்கு அரிதாகவும் வெளிப்படுவதைத்தான், “யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்” என்றார்.
உரிய சாதகங்களைக் கைக்கொண்டு (பிரமஞானத் தவங்களை) வழுவற ஒழுகினமையால் தம்முள்ளே அருணோதயம் ஆதற்கேற்ற குறிகள் காணப்பட்டு – நாத ஒலியாகிய வேத ஒலி கேட்கப்பட்டு, அதனால் “எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே” என மணிவாசகர் வேண்டியமை மேலே காட்டிய பிரமாணங்களால் நன்கு புலப்படும். அருணோதயம் ஆன பின்னேயே வாய்மையான தொண்டு புரிதற்கேற்ற காலமும் உளதாகும்.
அதுபழச் சுவைஎன அமுதுஎன அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்குஎழுந்து அருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்து அருளாயே. (திருப்பள்ளியெழுச்சி-7)
பொழிப்புரை : இறைவன் முழுமுதற் பழம்பொருளானவன் ; அந்த பழம்பொருளின் சுவை பழத்தின் சுவையை ஒத்திருக்கும் எனவும் ; அச்சுவை அமுதம் எனவும்; அதை அறிய முடியாதது எனவும், அறிதற்கு எளிதானது எனவும் தேவர்களும் அறிந்திடாமல் இருக்கின்றார்கள். அந்த பழம்பொருளான சிவப்பொருளே சிவத்தின் அழகிய உருவாய் இருக்கிறது. இவன், அவன் என்றெல்லாம் சொல்வது எங்களை ஆட்கொண்டு இங்கே எழுந்தருளும்படியான இன்பத்தை உண்டாக்கும் தேன் மிகுந்த சோலை சூழ்ந்த அழகிய திருஉத்தரகோச மங்கையில் உறைவோனே! அழகிய இருதயக் குகையான திருப்பெருந்துறையுறை மன்னனே ! நாங்கள் பிரமஞானத் தொண்டைச் செய்வதற்கான மெய்வழி எதுவென்று உன்னைக்கேட்டு அதன்படி நடப்போம். எம்பெருமானே ! நித்திரை விட்டு எழுந்தருளுகவே !
ஞான மெய்ப்பொருளுரை : நமது தேகத்தில் அழியா நிலையில் இருக்கும் தெய்வத் தத்துவங்களைத்தான் அமரநிலை கொண்டது என்போம். இதை அறிந்தவர்களை “அமரர்” என்றும் ; அறிந்திருக்காதவர்களை “அறியார்” என்றும் சொல்லப்பட்டது.
இறைவன் எப்படி இருப்பான் என்றால், அவன் ஞானப்பழமாக இருப்பான் என்றார் என் குருநாதர். அந்தப் பழம் புளிக்குமா? இனிக்குமா? கசக்குமா? என்றேன். இவ்வுரையாடல் 35 ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரியில் மலையில் நடந்தது. அப்போது எமக்கு வயது 21. குரு பதிலுரைக்க ஆரம்பித்தார். “மகனே, அஞ்ஞானத்தோடு இறைவனை சுவைப்பவர்களுக்கு புளிப்பார். மெய்ஞ்ஞானத்தோடு பிரமஞானத் தவத்தோடு சுவைப்பவர்களுக்கு இனிப்பார். இறைவன் என்ற உயர் பிரபஞ்ச ஆற்றலை ஏற்க மறுப்போர்க்கு கசப்பார்” என்றார். எனவே, பிரமஞானத் தவத்தில் இருப்போர்க்கு இறைவன் இனிப்பாக சுவைப்பார். ஏன் தெரியுமா? அவர்களுக்குத்தான் அமுதம் சுரக்க ஆரம்பித்துவிடுமே. அமுதம் இனிப்புச் சுவை அல்லவா ; தேனின் சுவையல்லவா ; கரும்புச் சாறின் சுவையல்லவா ; தேனில் ஊறவைத்த பலாச்சுளையின் சுவையல்லவா இறைவன். அமுதத்தைச் சுவைப்போர் அமரர்கள் என்ற தேவர்களாவார்கள் என்பதைத்தான், “அதுபழச்சுவை என அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்” என்றார்.
இறைவனை ஒளியாகத் தன்னுள்ளே கண்டபிறகு, இறைவனின் திருவுருவம் ஒளிதான், அது இதுதான் என அறிந்து கொள்வதைத்தான், “இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே” என்றார்.
சுடராழித் தவத்தால் இறைவன் சாதகனுக்குள் அருட்கலையாக எழுந்து, ஒளிவீசி அருள் செய்வான் என்பதைத்தான், “எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்” என்றார்.
திருவடியின் ஈசானிய திக்கில் ஈசன் வாழ்ந்து கொண்டிருப்பதைத்தான், “உத்தரகோச மங்கை உள்ளாய்” என்றார். உத்தரகோச மங்கை என்றால் ஈசானிய திசை எனப்படும்.
இறைவன் இருக்கும் கோயிலின் வாசற்படி எங்கே இருக்கிறது என்றாவது யாராவது இதுநாள்வரை சிந்தித்திருக்கிறோமா? உடனே அனைவரும் கோயில் என்ற இடத்திற்கு குதிரை வேகத்தில் செல்லாதீர்கள். யாம் கேட்பது உங்கள் தேகத்திற்குள். உங்கள் தேகத்தில் எது கோயில்? எது கோபுரம்? எது கொடிக்கம்பம்? எது பலிபீடம்? எது கருவறை? எது இறைவன்? கருவறைக்கு முன்னே இருபுறமும் இருக்கும் துவாரபாலகர்கள் யார்? அவர்கள் எதற்காக கருவறையின் இருபுறமும் சதா நின்று கொண்டிருக்கிறார்கள்?
ஐயர், பூசாரி என்போர் எதற்காக மணியை இடது கையிலும், கற்பூரத் தீபத்தை வலதுகையிலும் ஒலித்துக் காட்டுகிறார்? தீபாராதனைக் காட்டுவதற்கு முன்பு ஏன் மணி சத்தத்தை எழுப்புகிறார்கள்? கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டு ஏன் நந்தி அமர்ந்திருக்கிறார்? சண்டிகேசுவரர் ஏன் மௌனத்தில் இருந்து கொண்டிருக்கிறார்?
சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஏன் ஈசானிய திக்கில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன? உற்சவமூர்த்தி வீதிகளில் உலா வரும்போது, சப்பரத்தில் ஏற்றிக்கொண்டு செல்வார்கள். அதற்கு முன்னிலையில் இரு பக்கமும் பந்தத் தீயை எடுத்துக் கொண்டு இருவர் செல்வர். கூடவே பத்துவித மேள, தாளங்களை இசைத்துக் கொண்டுச் செல்வார்கள்.
இவையெல்லாம் நமக்கு என்ன சொல்ல வருகின்றன? என்பதை எத்தனைபேர் சிந்தித்திருக்கிறோம். யாரிடமாவது இதுபற்றி வினவினோமா? பதில் கிடைத்ததா? பதில் தெரியாமல் எத்தனை காலத்திற்குத்தான் கோயில், கோயில் என்று கோயில் சொல்லும் ஞானச் செல்வங்களை தெரிந்து கொள்ளாமல் விட்டில் பூச்சிகளைப் போலவும், விலங்கினங்களைப் போலவும் பறவைகளைப் போலவும் செத்து மடிந்து கொண்டிருக்கப் போகிறோம். இதற்கான அத்தனை பதில்களையும் இறைவன் ஒரேயொரு புள்ளியில்தான் நமக்குள் வைத்திருக்கின்றான். அந்த புள்ளி இருக்கும் குகையில்தான் இறைவன் திருப்பெருந்துறைவனாக உறைந்து கொண்டிருக்கிறான் என்பதைத்தான், “திருப்பெருந்துறை மன்னா” என்றார். மேற்கண்ட கேள்விகளை இந்நூலைப் படித்துவிட்டு எம்மிடம் பேசுங்கள், விளக்கி உண்மை மெய்ப்பொருளைக் காட்டிக் கொடுக்கின்றோம்.
மேற்கண்ட அத்தனை கேள்விகளுக்கும் எது மெய்வழி என்பதைக் குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதைத்தான், “எது எமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்” என்றார்.
தம்முள்ளே அருணோதயம் ஆகப் பெற்ற மெய்யடியாரே தாம் நினைத்தவற்றை எல்லாம் நிறைமுறையோடு அனுபவித்து, அவாவினை விண்டு உபரதி பெற்று உண்மைத் துறவிகளாய்ச் சீவகாருண்ய மூர்த்திகளாய்ச் செயற்கரிய செய்வார் பெரியோர்.
எம்பெருமான் உடலிடம் கொள்ள, அதனால் உடலுயிர் பூரண அமலமடையப் பெறுவதும் அருணோதயமான பின்னேயே உளதாகும். நம்முள்ளே அருணன் உதயமானதும் பிண்டத்துள்ள அசுத்த நிறை ஒழிந்து, ஆலம் என்னும் விஷம் அமுதமாக மாறி, ஊன் ஒளிமயமாகும் – உடல் ஊனம் நீங்கி ஒளி வடிவாகும் என்பது.
இருக்கு வேதத்தில் பின்வருமாறு சொல்லப்பட்ட பிரமாணத்தைக் கவனிக்கலாம்.
சூரியனிடத்தில் தொங்குவிப்பன்யான் விடத்தை கள்ளை
ஏருற விற்போன் தோற்பை தம்முளஃதமைத்தல் ஒப்ப
சாரல் அனவனும் சாவை, யாமுமே அதனைச் சாரோம்
தூரமன்னவன் தன்பாதை அரியினால் சுமக்கப் பெற்றோன்
ஆரு மாதுரியத் தேனாய் ஆக்கினான் உன்னை மெய்யே (10ம் செய்யுள்)
அதாவது கள்ளைச் செய்து விற்பவன் தோற்பைகளில் அக்கள்ளை ஊற்றி தொங்கவிட்டு வைப்பதுபோல, நான் விஷத்தைச் சூரிய வட்டத்தில் தொங்கவிட்டு வைப்பேன். அவ்விஷம் பட்ட காரணத்தால் அவன் சாகமாட்டான். அச்சூரியனுடைய அருளுண்மையால் யாமும் சாகமாட்டோம். அவனுடைய பாதை வெகுதூரத்தில் உள்ளது. விஷமே ! அரியென்னும் குதிரைகள் சுமந்து செல்லும் அச்சூரியன் உன்னை இனிமை வாய்ந்த மதுவாக மாற்றிவிட்டான்.
இதனால் பிணி, மூப்புச் சாக்காடும், பிறவியும் ஒழிந்து நித்தியத்துவம் உளதாதல் என்பது திண்ணம். அருணன் உதயமாகி அதன் ஆக்கத்தால் ஊனம் ஒழிந்தோர்க்குச் சாதல் என்பதேது? ஊனம் நீங்கிய உடலம் பிணமாகி விழுமா? விழும் என்பது இயற்கை விரோதமல்லவா? ஊனமற்ற வடிவத்துக்குச் சாதலைத் தரும் “ஐ” எது? சாதலைத் தரும் “ஐ” என்றால் என்ன? அது தான் சா+ஐ = சாயை என்பது. சாயையாகத் தோன்றுவது ஊனமே அல்லவா? ஊனமற்ற வடிவமே நிழற்சாயை இல்லாத வடிவம் – பிரணவ வடிவம் என்பது. இவ்வடிவமுடைய சீவன்முத்தரே ஞானாகாசத்தில் மறைதற்கு உரியவராவர். மெய்யடியார்கள் உடலம் பிணமாகி விழுமாயின் அவர் உடலகத்துச் சிவம் எனும் அமலப் பேரொளி – அமல அக்கினி ஆக்கமுற்றதால் பயன் என்ன? அருணன் உதயமாகி ஆக்கமுறாமையால் ஊனம் நீங்கப் பெறாத உலகமாக்கள் உடலமே பிணமாகி விழுகிறது. மெய்யடியார்கள் உடலகத்து ஆக்கமுற்ற அருணன், அருணனாகிய அமலப் பேரொளியானது ஊனம் யாவற்றையும் விழுங்கி ஒளிமயமாக்கி, யாவும் தானேயாக அனைத்தும் நிறைந்த அருவமான அகண்டாகார அருட்பெருஞ்சோதியோடு ஒன்றாய் நின்றிடும் என்பதை அறிந்து கொள்க. விசுவக்கிராசம் என்பது இதுதான். அருளாய் வெளியாய் உலகு கண்டு போற்ற மறைதல் என்னும் உண்மை முத்திநிலை இதுவே என அறிய வேண்டும்.
அளந்து துரியத்து அறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்டது ஒழித்துக்
கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே (தி.ம.2592)
இரும்பிடை நீரென என்னைஉள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்துள் உளானே (தி.ம.2592)
கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும்உன் ஓதும் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்குஞ் சிவபெரு மானே (தி.ம.2593)
விசுவக்கிராசம் என்றால் என்ன? அதுதான் அருட்பெருஞ்சோதி என்னும் அமல அக்கினியானது – சிவபரஞ்சுடரானது உலகத்தை விழுங்குதல் – பிண்டமாகிய உடலுயிரை விழுங்குதல் என்பது. (விசுவம் – உலகம் ; கிராசம் – பற்றுதல், விழுங்குதல்) நம் உடலகத்துச் சோதி ஆக்கமுற்றதனால் உண்டாகும் பயன் – அருணோதயத்தினால் உண்டாகும் பயன் இதுவே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அருணன் உதயமாகி ஆக்கமுறுவதால் அன்றிப் பிறவாறு மாயா சம்பந்தம் நீங்கப் பெறுதல் – ஊனம் ஒழிதல் – மாயையைக் கடத்தல் – நித்தியத்துவம் பெறுதல் என்பது முயற்கொம்பேயாகும், அது பித்தன் கூற்றாகவே முடியும்.
உலகில் உள்ள இடுகுறித் தலங்களில் அதிகாலையில் நிகழும் திருப்பள்ளியெழுச்சி விழவும் பூசையும் இவ் அருணோதயத்தைக் குறிக்கும் கற்பனையேயாகும். ஏனைய ஆலயக் கிரியைகளும் இதுபோன்ற அரிய பெரிய உண்மைகளையே குறிக்கின்றன. எனவே, கற்பனைகளால் உண்மை கடைப்பிடித்து மேன்மையடைவதே முறையாகும். அன்றி அவற்றைப் புறக்கணிக்கத் துணிவதும் அவற்றையே உண்மை என நம்பி அமைவதும் மேன்மையடையும் திறனாகாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை கூறியவற்றிலிருந்து அருணோதயம் பெறுவதின் அருமையும், ஊனத்தை – ஊனமாகிய மாயையை ஒளிமயமாக்கித் தானாகச் செய்யும் அவ் அருணன் என்னும் சிவபரஞ்சுடரின் இயல்பும், நம்முள்ளே அருணோதயம் ஆகி ஆக்கமுறுவதால் அன்றி வேறு எவ்வாறாயினும் ஊனம் நீங்குதல் – பிறவி ஒழிதல் – முத்தியடைதல் என்பது அசம்பாவிதமே என்பதும், அருணன் ஆக்கமுறப் பெற்றோர்களின் உடலானது ஊனம் நீங்கி, ஒளிமயமாய் அகண்டாகார அருட்பெருஞ்சோதியுடன் ஒன்றாவதே அன்றிப் பிணமாகி விழுதல் என்பது இயற்கை விரோதமே என்பதை நாம் இப்பேச்சுரையிலிருந்து முடிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இப்பேச்சுரையை இனிதே முடித்து அமைகின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து
ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடனாகிய
உங்கள் ருத்ர ஷிவதா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !