
முத்திக்கு முதற்படியான
அருந்தல் – பொருந்தல் – அனந்தல்
(விதைக்குள் விதை – டெலிகிராம் வகுப்பு – 29.06.2023)
திருவருட்பிரகாச வள்ளற்பெருமான் அவர்கள் அவரின் திருவாயால் சொன்ன அமுதமொழிகள் இவைகள் :
- சீவகாருண்யத்தால் ஒரு மனிதனுக்கு பிரமனின் ஆயுள் உண்டாகும்.
(கிரேத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் இந்த நான்கு யுகங்களும் கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் (43,20,000) மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது பிரம்மாவிற்கு பேராயுள் இந்த பேராயுள் நூறு சென்றால் பிரம்மாவிற்கு ஆயுள் முடியும்.)
- இறைவன்மீது கொண்ட பாச வைராக்கியத்தால் திருமாலின் ஆயுள் உண்டாகும்.
- ஈசுவர பத்தியால் ருத்திரனின் ஆயுள் உண்டாகும்.
- ஆனால் பிரமஞானத்தால் என்றும் அழியாத சுவர்ண தேகம் முதலியவைகளைப் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.
இந்த செய்திகளை யாம் சொல்லவில்லை. வள்ளற்பெருமான் அவர்கள் அவர் கைப்பட எழுதிய சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் என்ற தலைப்பில் வரும் மெய்வாக்குகள் இவைகள். சந்தேகம் கொள்வோர் அங்கு சென்று படித்து உண்மை நிலையை உணர்ந்து கொள்ளலாம். உரைநடைப்பகுதியில் 486 ஆம் பக்கத்தில் 103 வது தலைப்பில் சொல்லப்பட்ட ஞானமாகும் இது.
பிரமஞானப் பொற்சபையின் மாணவர்கள் எந்தவித ஆயுள்நிலையை அடையப் போகிறார்கள் என்பதை இதை கேட்கும், படிக்கும் மாணவர்கள் நன்கு உணர்ந்து உள்ளுக்குள் தெளிந்து கொள்ளலாம்.
வள்ளற்பெருமான் பெற்றது பிரமனின் ஆயுளையா? திருமாலின் ஆயுளையா? ருத்திரனின் ஆயுளையா? அல்லது தன் தூல தேகத்தை பொன்னொளியாக மாற்றிக் கொண்ட என்றும் அழியாத சுவர்ண தேகத்தையா? இதற்கான பதிலை நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அத்தனை சன்மார்க்கிகளும் இதை நன்றாக உள்வாங்கிக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். சீவகாருண்யமும் பரோபகாரமும் மட்டும் போதும். நாம் இறவா நிலையைப் பெற்றுவிடலாம் என்று இறுமாந்து போய்க் கொண்டிருக்காதீர்கள். இவ்விரண்டும் மோட்சத்திற்கான திறவுகோல் என்று மட்டுமே வள்ளற்பெருமான் அருளியிருக்கிறார். ஆனால், நீங்கள் என்றும் அழியாத பொன்தேகத்தை – சுவர்ண தேகத்தைப் பெற வேண்டுமென்றால், அவரைப் போல பிரமஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். அவர் தவம் செய்தே இவ்வாற்றலைப் பெற்றிருக்கிறார் என்று அவரே பல இடங்களில் சொல்லி யிருக்கிறார். மூன்று பாடல்களை மட்டும் இங்கே எடுத்துக்காட்டுக்காக தருகின்றோம்.
- நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
தானே வந்து என்னைத் தடுத்தாண்டான் – ஊனே
புகுந்தான் என்உள்ளம் புகுந்தான் உயிரில்
புகுந்தான் கருணை புரிந்து.
- நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாடடைந்தேன் – நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
- சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற்காட்ட நேராவே – நேத்திரங்கள்
சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணம் என்றே
உற்றிங்கு அறிந்தேன் உவந்து.
நீங்கள் செய்யக்கூடிய பிரமஞானத் தவமானது உங்களுக்கு கண்டிப்பாக பிரமஞானத்தை அருளியே தீரும். உங்களுக்கு பிரமஞானத்தை அருளுவதால்தான், இக்கலைக்கு பிரமஞானத் தவம் என்றும் சுடராழித் தவம் என்றும் பெயர் சூட்டினார்கள் நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள்.
- பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்களை நம் தேகத்தின் பஞ்சபூதங்களோடு புணரும் செயல்பாடுதான், பிரணவக் கிரியா என்பது. இங்கே நிலத் தத்துவம் செயல்படுத்தப் படுகிறது. அன்னமய கோசம் அழகாய் பூக்கும் தவம் இது. நம் ஸ்தூல உடல் அன்னத்தால் தோன்றி, அன்னத்தால் வளர்ந்து, அன்னத்தின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை அன்னமய கோசம் உணர்த்துகிறது. அன்னத்தால் ஆன தேகத்தை கிளர்ந்தெழச் செய்யும் ஆற்றல் இந்த பிராணக் கிரியாவிற்கு நிரம்ப உண்டு.
- பிரபஞ்சத்தின் பிராணனை நம் உயிருக்குள் செலுத்தி, உயிரொளியை மேலும் பிரகாசிக்க வைத்துக் கொண்டிருப்பதுதான், பிராணக் கிரியா என்பது. இங்கே காற்றுத் தத்துவம் செயல்படுத்தப்படுகிறது. பிராணமய கோசம் பிரமிப்பாய் உயிருக்குள் நுழையும் தவம் இது. வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள் பிராணன் மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள் ஆகியவை பிராணமய கோசத்தால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும். பிராணமயக் கோசத்தை விரிவடையச் செய்ய இந்த பிராணக் கிரியா உங்களுக்கு முழுமையாகப் பயன்படும்.
- நம் உயிரை, அதன் ஒளிச்சத்தியை மேலும் திடப்படுத்தவும் ஓங்காரத்தின் அதிர்வலைகளை உயிருக்குள் செலுத்தும் சீவகாந்த ஆற்றல்தான் மகாமந்திரக் கிரியா என்பது. இதில் நீர்த் தத்துவம் செயல்படுத்தப்படுகிறது. மலங்கள் நிர்மலமாகி, விமலநிலைத் தோன்றும் மனோமயக் கோசம் இது. உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவைகள் தான் மனோமய கோசம் எனப்படும். இந்த மகாமந்திரக் கிரியா மனோமயக் கோசத்தை வென்றெடுத்து சாதகனை உயிருக்குள் செல்லும் மெய்வழிப் பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
- தேகத்தை விமலதேகமாக்குவதற்காக, அமுதக்காற்றை சுழிமுனை நாடி வழியே உயிருக்குள் கொண்டு சென்று, உயிர் ஆற்றலை மென்மேலும் விரிவடையச் செய்து, உயிரொளியின் கொள்ளவை தேகம் முழுவதும் முட்டும் அளவுக்கு ரசவாதத்தைச் செய்து தேகத்தை ஒளிதேகம் ஆக்குவதுதான் சுடராழிக் கிரியா என்பது. இங்கே அக்கினித் தத்துவம் செயல்படுத்தப்படுகிறது. எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எது மெய்? எது பொய்? எது நிலைக்காது ? எது நிலைக்கும்? எது மெய்வழி? எது மெய்வழிச் சாலை? எது மெய்யறிவு? எது பொய்யறிவு? எது சத்தியம்? எது அசத்தியம்? எது பிரமம்? எது உயிரொளி? எது இறைவன்? எது சிவம்? போன்ற தர்க்கரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும். இத்தவத்தைச் செய்து வரும்போது, சாதகன் விஞ்ஞானமயக் கோசத்தைத் தாண்டி மெய்ஞ்ஞானக் கோசத்திற்குள் நுழைந்துவிடுவான். அதற்கடுத்து அவனுக்குள் ஆனந்தம் மட்டும் நிலைகொண்டிருக்கும்.
- தனக்குள் தன்னை உணர்ந்திட வெட்டவெளியோடு தன்னை இணைத்துக் கொண்டு, தன்னைப் பிறப்பித்துக் கொள்வதுதான் பிரமசாந்திக் கிரியா என்பது. ஆனந்தமய கோசம் என்பது இந்த அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. காரணம் இங்கே ஆகாயத் தத்துவம் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் என்று சொல்லலாம். தன்னை, தன் மெய்யறிவை, தன் உயிரொளி ஆற்றலை இறையொளியோடு புணர வைக்கும் மெய்வழிப் பாதைகள் இங்கே தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும். இவையெல்லாம் உயிருக்குள் ஒருவித அமைதியை, நிச்சலனத்தை, பேரமைதியை உண்டுபண்ணிவிடுவதால், இது பிரமசாந்தி நிலை என அழைத்தார்கள் நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள்.
அனைத்தும் சேர்ந்ததுதான் நம் வாழ்வு என்பதையும் அந்த வாழ்வு ஆனந்தமயமாக இருக்க வேண்டுமென்பதையும் எந்த ஒன்றுடனும் நாம் தேங்கி நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக மெய்யுணர்வில் உணர்பவர்கள் இந்த ஐந்து கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பதுதான் இதன் உட்பொருள் – மெய்ப்பொருள்.
தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணர்த்தப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிராணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் ஆனந்தம் பிரம்மணோ வியஜானாத் என்று ஆனந்தமே பிரம்மம் என முடிவாகச் சொல்லி தைத்ரிய உபநிடதம் முடியும்.
அருந்தல் – பொருந்தல் – அனந்தல் என்றால் என்ன? அவை தான் தூலமாகித் தடித்து விளங்கக்கூடிய பொருட்களை அதாவது உணவுப் பொருட்களை நிறைமுறையோடு அருந்துவதும், அவ்வாறு அருந்தியது தேகத்தில் பொருந்துவதால் அஞ்ஞானமாகிய அழுக்கு என்னும் மாயை அணு அணுவாய் அனந்தல் அடைதலும் ஆகும். அனந்தல் என்றால் கெடுதல் – கெட்டுத் திரிதல் எனப் பொருள்படும். அதாவது பாசமே அருளாய் – ஞானமாய் மாற்றமடைதல் – பயன்படுதல் என்பது. நாம் அருந்தும் உணவானது நன்கு சீரணமாகி உடல் அணுக்களில் நிறை முறையோடு பொருந்தும்படி அமைந்துவிட்டால், அனந்தல் என்ற துன்பம் தேகத்திற்கு ஏற்படாது. மாறாக இருக்கும்பட்சத்தில் தேகம் பிணி, மூப்புச் சாக்காடுகளால் துன்பப்பட்டு இறக்கும்.
இந்த அருந்தல் பொருந்தல் என்பவைகள் சீவர்களுக்கு மிகவும் இன்றியமை யாதவைகளாகும். நாம் இயற்கை நெறியோடு நின்று இயற்கை வடிவான இறைவனை நமக்குத் தேடி அடைந்திட வேண்டும்.
இந்த அருந்தல் – பொருந்தலை அடையப் பெறாதவன் முத்தி வாயிலை அடையவே முடியாது. இதை நீங்கள் தவிர்த்தால் முத்தி வாயிலையும் இறைவனின் அழகிய சிற்றம்பலத் திருவடிகளையும அடைவது என்பது முயற்கொம்பாகும்.
இந்த அருந்தல் – பொருந்தல்களால்தான் நாம் கர்மவினைப் பதிவுகளான கட்டுக்கள் அறப்பெற்று, வீடுபேற்றை அடைய முடியும் என்று கூறினால், இன்றைய காலத்தில் எத்தனை பேர் நம்பப் போகிறீர்கள் என்று தெரியவில்லை.
நிறைமுறையோடு அன்னத்தை அருந்தி, அதை தேகத்தோடு உறவுபடுத்தி மேன்மை பெற முடியாமல் இறந்து போவதுதான் இன்றைய காலத்தில் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. மாயையை – பிரபஞ்சத்தை – தென்புலத்தை உறவுபடுத்தி வென்றபின்தான் விதியை வென்றபின்தான் மாயாதீதமாகிய பதியை – பற்றற்ற இடத்தை அடைய முடியும், அடைந்து “அதுவாக” முடியும்.
அறுசுவையுடைய அன்னம்தான் தூல, சூக்கும சரீரங்களின் மேன்மைக்கு இன்றியமையாதது என்பது சகல போகங்களுக்கும் ஆதாரமாக இந்த அன்னம் தான் இருக்கிறது என்பது நமது ரிக் வேதத்தால் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலை இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. … இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனதே நம் உடல். இந்த தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்….
துவர்ப்பு : இரத்தத்தைப் பெருகச் செய்கிறது.
இனிப்பு – தசைகளை வளர்க்கிறது.
புளிப்பு – கொழுப்பை உற்பத்திச் செய்கிறது.
கார்ப்பு – எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது.
கசப்பு – நரம்புகளை பலப்படுத்துகிறது.
உவர்ப்பு – உமிழ்நீரைச் சுரக்கச் செய்கிறது.
உடல் தாதுக்களை பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
உண்ணுதற்கு உயர்வோங்கிய தந்தையே
நண்ணுமத்த நலத்துறு பாலக
எண்ணிஉன்னை அழகில் உதிப்பமால்
எண்ணி எந்துணை யாளனாய் எய்துக
அதாவது உண்ணற்கு இனிமையுள்ள அன்னமாகிய தந்தையே ! மதத்தை ஊட்டும் சோமமாகிய தந்தையே ! உன்னை அடைந்து நாங்கள் அழகாகத் துதிப்போம். எங்களுக்குத் துணையாளனாக இருப்பாயாக.
இவ்வாறு அன்னத்தின் மேன்மைகளைப் பற்றிய ஏராளமான பாடல்கள் நம் தமிழில் உண்டு. இரண்டு மட்டும் போதும் என்று இத்தோடு நிறுத்திக் கொள்கின்றோம்.
நமக்கு நம் பெற்றோர்களால் கிடைக்கப்பெற்ற தூலதேகம் என்பது அன்னமயக் கோசத்தைக் குறிக்கிறது.
அன்னத்தால் ஆயஉடம்பின் பயன் எல்லாம்
முன்னோனைக் காட்டி விடும் (ஔ.ஞா.கு. உடம்பின் பயன் – 10)
என்றார் நம் ஆதிசத்தியின் அவதாரமான ஔவைத்தாய். இதனுடைய பொருள் பலருக்கும் ஆச்சரியத்தைத் தரக்கூடியதாக இருக்கும். வெறும் சாப்பாட்டை சாப்பிடுவதால் இறைவனைக் காண முடியுமா, எப்படி? இது என்ன ஆச்சரியம்! உணவை அறவை ஒழித்துப் பட்டினிக் கிடப்பதால் தானே இறைவனின் அருளைப் பெற முடியும்? என்கிறார்களே. தன் விருப்பப்படி புஷ்டியான சுவையான உணவுகளை உண்பதினால்தான் மேன்மை அடைய முடியும் என்கிறார்கள் மற்றோர். ஆனால், வேதம் இவ்வாறு உரைக்கவில்லை.
ஐம்புல நுகர்ச்சி நிறை முறை தழுவி நிற்கவேண்டும் என்றுதான் வேதம் முறையிடுகிறது. சீவர்கள் சரீரப் பிறப்பின் நிலைமையைக் குறித்து நமது ஔவைத்தாய், அவர் அருளிய ஞானக்குறளில் முதலாவது அத்தியாயமாகக் கூறியிருப்பதைக் காணும்போது, “அன்னத்தின் பயன் கடவுளைக் காண்டல்” என்னும் வேத உண்மை புலப்படுத்துகிறது. பின்வரும் பிரமாணமே இதற்கு ஆதாரம், உதாரணமாகும்.
சாந்தோக்கிய உபநிடத தாற்பரிய வர்ணன வாக்கியங்கள் :
தத்தமது வருணாச்சிரம அனுசாரம் அடைவுற்ற அன்னபானாதி விடயக் கவர்ச்சி ஆகாரமாம்.
அஃது யாவனுக்கு இராகத்துவேசமற்ற மதியானே பாவமற்றுத் தூய்தாமோ, அவன் மனமே தூய்தாம்.
அவ் ஆகார சுத்தியின்றிச் சித்த சுத்தி உண்டாகாதாம்.
“ஆகார சுத்தியுடைய புருசனுக்குப் பாவ கருமத்தே பிரீதி உண்டாகாததே போல, பீஜ யோனி விவகாரம் என்னும் மூன்றன் சுத்தி உடையவனுக்கு ஆபத்துக் காலத்திலும் பாவ கருமத்தின் கண்ணே பிரீதி உண்டாகாதாம். ஈண்டுப் பிதிர்குலம் பீஜமாம். மாதுர் குலம் யோனியாம். பதார்த்தங்களின் கிரகண பரித்தியாகம் விவகாரமாம்.”
இவ்வாறு ஆகார விவகார பீஜயோனி என்னும் நான்கின் சுத்தியால் சித்த சுத்தி அடைந்தவன் ஒருகாலத்தும் பாவகருமத்தே செல்ல மாட்டான். பாவ கருமமே சித்த ஏகாக்கிரப் பிரதிபந்தமாகும். ஆகாராதிகளின் சுத்தியால் பாவ கருமங்கள் அற்றவாகும்போது ஒருமையை அடைவான். ஒருமையை உற்றவன் பிரமவேத்தாவய ஆசிரியரின் உபதேசத்தால் விரைவாகவே தன் பூமா வடிவ ஆன்மாவை தரிசித்து நிற்பான்.
மேலே கூறப்பட்ட ஆகாரங்கள் அருந்தல்-பொருந்தல்களில் அடங்கும். ஆகாரம் = அருந்தல். பீஜயோனி விவகாரம் = பொருந்தல். இவை இன்றியமையாதவை. எதற்கென்றால் முத்தி வாயிலில் அடி வைப்பதற்காக. ஆகார பீஜ யோனி எனும் இம்மூன்றிற்கும் “விவகாரம்” இன்றியமையாதது. விவகாரம் “கிரகண தோச பரித்தியாகம்” எனப்படும். அதாவது சுத்தி எனப்படும்.
பஞ்சேந்திரியங்களால் நுகரப்படுபவைகள் எல்லாம் அன்னம் என்னுட்ம சப்தத்தால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. அன்னம் – உண்ணப்படுவது, நுகரப்படுவது என்பதாகும். அதாவது அன்னம் என்றால் உணவு.
“உண்ணல் என்பது தன்மயப் படுத்தல்” (நூற்றொகை விளக்கம் – சூத்திரம்-24)
முத்தி வாயிலில் அடி எடுத்து வைப்பதற்கு அருந்தல் – பொருந்தல்கள் இன்றியமையாதவையாகும் என்பதை பின்வரும் சுருதிகள் நிரூபித்துக் காட்டுகின்றன.
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் இங்கிலை
அஞ்சும் அடக்கில் சேதனம் ஒன்றிட்ட
அஞ்சும் அடக்கா அறிவை அறிந்தேனே (தி.ம.2820)
செம்பொன் செய் சுண்ணம் இடித்தல் – “நாதற்குச் சுண்ணம் இடித்து நாமே” என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருப்பொற்சுண்ணம் என்ற பதிகத்தில்
வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயி னாருக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
என்று பாடி எல்லாம் உணர்ந்த அந்த திருச்சிற்றம்பலவாணனுக்கு நீராடல் பொருட்டு பொன்னைப் போன்ற வாசனைப் பொடிகளை நாம் இடித்துக் கொடுப்போம் என்று தோழிகள் பேசிக் கொள்வதாகப் பிரமஞானத்தை எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகப் பெருமான் அவர்கள்.
திருவாசகத்தைப் பேச ஆரம்பித்தேன் என்றால் யாம் எம்மை மறந்து விடுவோம். அப்புறம் நீங்கள் எல்லோரும் 5 மணி நேரமாவது நேரத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் திருவாசகத் தேனை இத்தோடு நிறுத்தி வைப்போம்.
“கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்
மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற் பேறரே”
(திருமாற்பேறு – திருக்குறுந்தொகை-5) என்னும் அப்பர் திருமறைப் பொருளும் இதுதான்.
சற்குருவே பவரோக வைத்தியன். அவரே சீவர்கள் சடபேதம் கர்மபேதங்களை அறிந்து ஏற்ற சாதகங்களால் அருந்தல்-பொருந்தல்களாகிய விதிகளால் வாதம் புரிய வல்லவனாவான். பிண நாற்றம் நாறும் புலால் துரத்திகளை பிணி, மூப்பு, சாக்காடுகள் நீங்கிப் பூமணம் கமழும் பூந்துருத்திகளாக மாற்ற வல்லவன் சற்குரு அன்றி வேறு எவரும் இல்லை இவ்வுலகில். இதை நீங்கள் நன்றாக உணர்ந்திருக்க வேண்டுகின்றோம்.
மாறுபாடு இல்லாத உண்டி மருத்துண்ணி
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
என்பதனால் சாக்காடு நீங்கி நித்தியத்துவம் அடைவதற்கு அருந்தல் என்னும் உணவே முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.
மாறுபாடு இல்லாத உண்டி என்பது சரீர பௌதிக நிறைக்கு இணக்கமான உணவு என்று பொருள். மறுத்தல் என்பது பஞ்சேந்திரிய நுகர்ச்சியை நிறையுட் புகுத்துதலாகும்.
துற்றவை துறந்த வெற்றுயிர்ஆக்கை
அருந்தவர் காட்சியுட் டிருந்த ஒளித்தும் (திருவாசகம் – திருஅண்டப்பகுதி)
என்பன முதலியவற்றாலும் அருந்தல்-பொருந்தல்கள் கடைப்பிடிக்காதவர் எத்துணைப் பெரிய தவத்தை உடையவர்கள் என உலகமே புகழ்ந்தாலும், அவர்களுக்கு முத்தி வாயில் என்பது குதிரைக் கொம்பே என்பதை நன்றாக நீங்கள் அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும்.
பையவே கொடுபோந்து பாசமெனும் தாழ் உருவி
உய்யு நெறி காட்டு வித்திட்டு (திருவாசகம் – அச்சோப் பதிகம்-7)
என்னும் திருமறை அருந்தல் பொருந்தல்களால் மாணிக்கவாசகர் மேன்மையடைந்த இவ்வுண்மைகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
பஞ்சேந்திரிய நுகர்ச்சிகளை அறவே வெறுப்பதாலும், பெண்களைக் கைவிட்டுக் காட்டுப் போவதாலும் துறவு என்பது கைகூடிவிடுமா? சொல்லுங்கள். ஒருக்காலும் இல்லை. நல்லுணர்ச்சியாகிய ஞான உணர்ச்சியும் ஆக்கம் பெற இயலாது.
இன்றைய காலத்தில் இந்த அருந்தல், பொருந்தல் விதிகள் காலத்தால் வெறுக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அறியப்படாததாகவும் மாறிவிட்டது. நிறையுட் புகுத்தும் நெறியறியாது நாவிற்குச் சுவைபடும் உணவுகளையே எளிதாகப் பெறக் கூடியவைகளாக இருப்பதாலுரும், அனைவரும் அவரவர் விருப்பம்போல அவகாசம் இன்றி நிறை முறை இன்றி அருந்தியும் பட்டினி கிடந்தும் வளி முதலாகிய எண்ணிய மூன்றும் (வாதம், பித்தம், சிலேத்துமம்) அவர்களுக்கு நோயினை செய்துவிட செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். உடலம் வம்பு பழுத்து மாண்டு போகிறார்கள். வம்பு பழுத்து உடலம் மாண்டு போதல் கூடாது என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குலாப்பத்தின் 5, 6வது பாடலில்
பேரும் குணமும் பிணிப்புறும் இப்பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாம்
சேரும் வகையாற் சிவன் கருணைத் தேன்பருகி
ஆரும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே (குலாப்பத்து-5)
கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துஉடலம் மாண்டு இங்ஙன் போகாமே
நம்பும்என் சிந்தை நணுகும்வண்ணம் நான்அணுகும்
அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. (குலாப்பத்து-6)
இதற்கு மேல் ஒரு கவி உண்டா? பாடல் உண்டா? சொல்லுங்கள். வாசிக்கும் போதே மனம் கரைகிறது ; கண்கள் பணிக்கின்றன ; காதுகள் செவிமடுத்து மான்போல நின்று போகிறது ; உயிரே உருகி கரைய ஆரம்பிக்கிறது. உங்கள் அனைவரும் ஒரு பிரம சத்திய ரகசியத்தைச் சொல்லிக் கொள்ள விளைகின்றேன். உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா, மாணவர்களே. திருவாசகத்தின் ஒவ்வொரு எழுத்தும், வார்த்தையும் உங்கள் உயிரையே தட்டித் தூக்கிக் கொண்டாடும் ஓங்காரத்தின் அதிர்வெண்களைக் கொண்டவை. இதை திருவாசகத்திற்கு ஞான மெய்ப்பொருளை எழுதிக் கொண்டிருக்கும் யாம் ஒவ்வொரு நாளும் மெய்யுணர்வாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அதனால் யாம் திருவாசகத்திற்கு ஞானமெய்ப்பொருளுரையை எழுதி முடித்ததும் அந்த உயிர் மலரும் திருவாசகத்தை வாங்கிப் படித்துப் படித்து உங்கள் உயிரை ஒவ்வொரு நாளும் தட்டித் தட்டி எழுப்பிக் கொண்டே இருங்கள். உங்கள் தேகம் அதனால் சுத்த தேகத்தை தானாகவே அடைய ஆரம்பிக்கும். கூடவே இந்த அருந்தல் பொருந்தல்களை பின்பற்ற ஆரம்பித்தீர் என்றால், எல்லாம் செயல்கூடும் எம்ஆணை அம்பலத்தே என்பது போல எல்லாம் கைகூடி வரும் உங்களுக்கு.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (திருக்குறள்-942)
முன் உண்ட உணவு சீரணமாதலைப் பொறுமையோடு காத்திருந்து, பசி தோன்றியபின் மேல் உண்ணுதலை ஒருவன் செய்து வருவானேயாகில், அவன் உடம்பு நோயின்றி இருக்கும். அதனால் அவ்வுடம்பிற்கு மருந்து என்பதொன்று தேவைப்படாது. அற்றது போற்றி உண்ணின் என்பது எது தேவையில்லையோ அதைத் தவிர்த்து உண்ணும் உணவே நோய் தீர்க்கும் மருந்தாகும். ஆனால், நாம் இன்று உண்ணும் உணவுகளில் தேவைப்படாத, வேண்டாத உணவுகளே அதிகமிருக்கின்றன. நமது விருப்பத்தின் காரணமாகவும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் தேவையற்ற உணவுகளை உண்டு உடம்பை நோய்க்கு உள்ளாக்கி வருகிறோம். ஆனால், பிரமஞானிகளும், பிரமஞானச் சாதனைகளைச் செய்து வருவோர்களும் தம் தேகத்திற்கு எது தேவை என்பதை அறிந்து கொண்டு உணவை போற்றி உண்பார்கள். இவர்கள் மிகச் சிலரே இவ்வுலகில் இருக்கின்றார்கள். “ஞானம்தான் வந்திடினும் பசித்தொழியப் புசியோம், நமனார்க்கு இங்கேது கவை நாமிருக்கும் இடத்தே” என்றார் ஒரு சித்தர். பெயர் தெரியவில்லை. குரு சொல்ல கேட்டு வந்திருக்கிறோம்.
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு (திருக்குறள்-943)
முன் உண்ட உணவு சீரணமானால், பின் உண்ணும் உணவை மிகுதியாகவும் குறைவின்றி வேண்டிய அளவினை அறிந்தே உண்ண வேண்டும். காயமாகியப் பெண்ணைத் தனக்கு உரிமையாகப் பெற்ற அறிஞன் அக்காயப் பெண் தனக்கு நிலைக்கும்படியாக செய்யக் கூடிய சாதகம் அதுவே ஆகும். இங்கே ஒரு விசயத்தை நீங்கள் நன்கு உணர வேண்டும். அது என்னவென்றால், அற்றது போற்றி அளவறிந்து உண்ணும் உணவுதான் காயசித்தி அளிப்பதற்கேற்ற சிறந்த கற்பமாகும். இதை விட்டுவிட்டு பட்டினி கிடப்பதும் நிறை முறையின்றியும் அளவறியாமலும் உண்டுவந்தால் அது காயசித்தியை அளிக்கும் சாதகமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆருயிர் மருந்தாகிய அருந்தலை அன்னத்தை நிறையறிந்து இனமறிந்து அளவறிந்து உண்பதைத்தான் “கற்பம் சாப்பிடுதல்” என்பார்கள் ஆதித் தமிழ்ச் சித்தர்கள். இந்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளாமல் காடுகளிலும் பிற இடங்களிலும் இருந்து கொண்டு பட்டினியாலும் பிறவற்றாலும் “துற்றவை துறந்த வெற்றுயிராக்கை”யராய் மெய்யுணர்ச்சி கைவரப் பெறாமல் அசேதனத்துவமடைந்து கடைசியாக தென்புலக் கோமானுக்கு நல்விருந்தாகிப் பிறவி வலைப்படுவது சரியாக இருக்குமா? நீங்களே சிறிது யோசித்துப் பாருங்கள். தென்புலக் கோமான் என்பது எமனைக் குறிக்கும் சொல்லாகும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து (திருக்குறள்-944)
முன் உண்ட உணவு சீரணமானதைக் குறிகளால் நன்குணர்ந்து, மிக்க பசி உண்டானபின், சரீர பௌதிக நிறைக்கு மாறுபாடில்லாத உணவுகளை குருநெறியானும் அனுபவ முகத்தானும் கண்டு அறிந்தனவற்றை மதி வைராக்கியத்தோடு தவறாது உண்ண வேண்டும்.
தனது காயப் பெண்ணை நிலைக்கச் செய்யும் பக்குவமுடையவன் அக்காயமாகிய சரீரத்தில் எந்த எந்த பௌதிகங்கள் எவ்வெவ்வகையான ஏற்ற இறக்க நிறையாகப் பொலிந்திருக்கின்றதோ அவ் அவ் நிறையைக் குறைக்கவும் கூட்டவும் வேண்டி, அவ் அவ் நிறைகள் சமப்படுதல் வேண்டி ஏற்ற ஏற்ற உணவுகளாகிய கற்பங்களையே உண்ணுதல் இன்றியமையாததாதலின் “மாறல்ல துய்க்க” என வற்புறுத்தப்பட்டது.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல்நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (திருக்குறள்-946)
தனது சரீர பௌதிக நிறைகளின் இறக்கத்தையும் ஏற்றத்தையும் அறியப் பெற்று அவை சமப்படுதற்கேற்ற உணவுகளை உண்ணும் மதிப் பொலிவுடையவர்களுக்கு இன்பம் இடையறாது நிற்பதைப் போல, நிறையும் இனமும் அறியாது பல பிறப்புகளுக்கு வித்தாக விளங்கும் விருப்பத்தினால் விலங்குகள் போல நேர்ந்த நேர்ந்தவாறு அளவு கடந்த உணவை உண்பவனிடத்தில் துன்பம் இடையறாது நிற்கும். பௌதிக நிறையறிந்து ஏற்ற உணவுகளை அருந்துபவர்கள் இடையறா இன்பத்தை அடைவார்கள். தம் விருப்பப்படி உண்பவர்கள் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள்.
சரீரமாகிய பூமியில் பஞ்ச பௌதிகங்களாகிய பஞ்ச திணைகள் ஏற்று இழிவடைந்து நிறை பேதித்து நிற்றலே பிணி, மூப்புச் சாக்காடுகளுக்குக் காரணமாகும். நிறை பேதித்தலே திணை மயக்கமாகும். திணை மயக்கங்களை அறிவது மிகவும் கடினம். ஒரு திணையை மற்றொரு திணையாக மாற்றுவதும் அரிதிலும் அரிதான செயலாகும். சற்குரு அன்றி இது முடியும் காரியமன்று. சற்குருவை அடைந்து, அவர் மெய்வழியை அனுட்டிக்கும் இந்த அருந்தல் பொருந்தல்களால் திணை மயக்கம் தீர்ந்து பௌதிகங்கள் சமப்படுவதால் பேரின்பமாகிய வீடு பேற்றின்பம் இடையறாது கிடைக்கும். இதன் காரணமாக முத்தி வாயிலை அடைவதற்கு ஏற்ற அரிய பெரிய சாதகமாகிய அருந்தல் பொருந்தல் என்னும் வேத உண்மையே “மருந்து” என்னும் அதிகாரத்தில் தேவரால் முக்கியமாகக் கூறப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உணவெனப்படுவது நிலத்தொரு நீரே” எனப் பிறர் கூறியதையும் அறிந்து கொள்ள வேண்டும். “பூ நீர்” என்னும் சித்தர் பரிபாசையின் உண்மைப் பொருள். இதை இங்கு சிறிது எண்ணிக்கொள்ள வேண்டும். பூ நீர் என்பது கண்மணிப் பூவிற்குள் இருக்கக் கூடிய பிராண நீராகும். இதுவே பூநீர். வெளியே காண்பதெல்லாம் பூநீர் அல்ல. அவை மறைபொருள் வார்த்தை. உலகோர் இதை புரிந்து கொள்ள வேண்டுகின்றோம்.
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
வண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
கண் அறியாமல் நழுவு கின்றாரே (திருமந்திரம்-)
இந்த அருந்தல் பொருந்தல் என்னும் அரிய பெரிய சாதகங்களால் என்ன பயன்பாடுகள் என்றால், சரீரத்திற்குள் இருக்கக் கூடிய அழுக்குகள் நீங்க ஒன்பது வாசலாலும் சோரும் மலங்கள் விமலமாக இறைவன் குடிபுகக்கூடியதாக அமைய வேண்டும். இதற்கு அறிகுறி என்னவென்றால், உண்ணும் உணவும் மலசலமும் சம நிறை கொள்ளுதல் என்பதாகும். அவ்வாறு சம நிறை கொண்டால் தேகத்திற்கு ஆயுட்பெருக்கம் உண்டாகும். பிணநாற்றம் நாறும் இப்புலால் துருத்தி பூமணம் கமழும் பூந்துருத்தியாகும் – பொன்மயமான தேகமாகும் – ரக்ஷக தேகமாக மாறும். இதுதான் முத்திவாயில் – அமல தேகத்தின் முதற்படி. இவ்வாறு விமலமடைந்த தேகத்தைக் கொண்டோர்களின் தேக ஆற்றலை – ஆன்ம ஆற்றலை இறப்பை அடைந்து கொண்டிருக்கும் மக்களால் அளவிட முடியுமா? சொல்லுங்கள்.
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள (திருக்குறள் – 1101)
பிரமஞானத் தீக்ஷையின்போது பஞ்சபூதச் சத்திகள் திருவடிகளில் இருப்பதை எம் மாணவர்களுக்கு புரியும்படியாக சொல்லியுள்ளோம். அதற்கு ஆதாரமான திருக்குறள் வெண்பா இதுதான். ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்று திருவள்ளுவரும் சொல்வதிலிருந்து, அவரும் பிரமஞானத் தவத்தைச் செய்திட்ட ஆதித் தமிழ்ச் சித்தர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிற்று.
ஒரு சூக்கும ரகசியத்தைச் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்திடலாம். நாம் சாப்பிடும் உணவுகளில் நிறை முறைகளில் இல்லாது போனால், அவ்வுணவே நஞ்சாக மாறி தேகத்தை நட்டப்படுத்தும். இந்த நஞ்சானது தூல தேகத்தையும் அல்லாது சூக்கும தேகத்தையும் நஞ்சாக மாற்ற ஆரம்பிக்கும். காரணம் சாப்பிட்ட உணவு நன்கு பஞ்சீகரணம் செய்யப்படாவிட்டால், அது சூக்கும தேகத்தில் தேங்க ஆரம்பிக்கும். சூக்கும தேகம் ஒளிதேகமாகும். ஒளி தேகம் ஏன் நம் தேகத்தில் வெளிப்படாமல் இருக்கிறதென்றால், இப்படி சீரணமாகாத உணவின் நஞ்சுகளால்தான். நஞ்சை உண்பது சிவத்தின் வேலையல்லவா. அதனால் இந்த நஞ்சைக் கொண்டுபோய் சிவத்திடம் சேர்ப்பித்து விட்டால், சிவத்தின் அருட்கலைகளால் நஞ்சு அமிர்தமாக மாறிப் போகும்.
எப்படி என்கிறீர்களா? இப்ப யாம் சொல்லப்போகும் இரகசியத்தை நன்றாக செவிமடுத்து உள்வாங்கிக் கொண்டு மனனம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் மெய்யறிவில் நின்று கேளுங்கள்.
அமலம் என்னும் ‘அகாரம்’ ஆனது, ம்ருதத்தின் அதாவது நஞ்சின் வாயிலில் நிற்கும்போது, அந்த ம்ருதத்தை அமல அக்கினியில் ஆகுதியாக கொடுத்தால் ‘ம்ருதம்’ ‘அம்ருதமாக’ மாற்றப்பட்டுவிடும். அவ்வளவுதாங்க. இதுதான் மிகப்பெரிய பிரமஞான ரகசியம். இதுதான் நஞ்சை அமுதமாக மாற்றும் ரசவாத வித்தை.
ரசத்தை வாதம் என்ற பொன்னாக மாற்ற வேண்டுமென்றால் நீங்கள் இந்த சூத்திரத்தைத்தான் பயன்படுத்தியே ஆகவேண்டும். வேறெந்த நுட்பமோ, தந்திரமோ, சாத்திரமோ, வேதச் சொற்களோ, உபநிடதச் சொற்களோ உங்களை அமல தேகமாக்காது, ஆக்காது, ஆக்காது. மெய்யறிவுடையோர் புரிந்து கொள்வர். மற்றையோர் மறைந்து போவர்.
இதன் சூக்கும ரகசியங்களைத் தெரிந்து கொள்ள அத்தனை பேருக்கும் ஆவல் இருக்கிறதா என்பது தெரியவில்லை. உங்கள் அனைவருக்கும் அந்த ஆவல் கொழுந்து விட்டு எரியத் தலைப்படின் பிறகு சொல்வோம். அதுவரை யாம் மௌனம் காத்திருப்போம். நீங்கள் இந்த தேவ ரகசியத்தைத் அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் அல்லது அடுத்த ஆண்டுவரை தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டியிருக்கும், தொடர்ந்து நீங்கள் இந்த டெலிகிராம் தளத்தில் வந்து கொண்டிருக்கும்பட்சத்தில். தனித்தும், விழித்தும், பசித்திருப்போருக்கே இவ்அமுத உணவு வழங்கப்படும்.
இந்த டெலிகிராம் அலைவரிசை தளத்தில் யாம் சொல்லிக் கொண்டிருக்கும் ஞானங்கள் எல்லாம் எம் சற்குரு சுந்தரானந்த மகரிஷி அவர்கள் எமது 20 அகவை முதல் 25வது அகவை வரை சதுரகிரி மலையிலும் பொதிகை மலையிலும் மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியிலும் உயிருக்குள் செலுத்தி பதித்த பிரமஞானங்களாகும். பிரமஞானத் தவத்தை உலகெங்கும் உள்ள மனித உயிர்களுக்குள் செலுத்தி விதைத்துப் பயிராக்க வேண்டும் என்ற மிகப்பெரும் கனவோடும் இலக்கோடும் தொடர்ந்து உரையாற்றி வருகின்றோம். இப்பேச்சுரைகள் ஒரு சாதாரண மானிடன் வாயால் சொன்னது என்று எடுத்துக் கொண்டு, மெய்ப்பொருளின் கருவறையை விட்டுவிடாதீர்கள். பேசும் வாய் எம்முடையதாக இருக்கலாம் ; ஆனால் அதன் ஞானங்கள் ஆதித்தமிழ்ச் சித்தர்களுடையது. எம் அறிவையும் தேகத்தையும் ஐம்புலன் உணர்வுகளையும் தாண்டித் தான் உரையாற்றுகின்றோம் என்பதை சமீபகாலத்தில்தான் யாம் எமக்குள்ளே கண்டுணர்ந்தோம். அதனால் இந்த பேச்சுரைகளை புறந்தள்ளாமல் உயிருக்குள் தள்ளிவிட்டால் ஞான விளைச்சல் அபரிமிதமாக இருந்து, உங்கள் தேகத்தை அமுதமாக்கும்.
- துவர்ப்பு – உடல் நலத்துக்கு மிகவும் உகந்த சுவை. விருப்பு, வெறுப்பு இல்லாதது. வியர்வை, இரத்தப்போக்கு, வயிற்றுப் போக்குகளை சரிசெய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவைகளாகும். இவற்றை நாம் விரும்பி சாப்பிட வேண்டும்.
- இனிப்பு – மனதுக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளைக்கிழங்கு, கேரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்றவை இனிப்புச் சுவைக்கு ஏற்ற உணவுகளாகும்.
- புளிப்பு – உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால் பற்களைப் பாதிக்கும். நெஞ்சு எரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்சக்கீரை, இட்லி,தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்ட உணவுகளாகும்.
- காரம் – பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். இரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவைகளாகும்.
- கசப்பு – பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை இது. ஆனாலும், உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.
- உவர்ப்பு – அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
இலையில் உணவு முழுமையாகப் பரிமாறப்பட்டபின், முதலில் உண்ண வேண்டியது 1.இனிப்பு, அடுத்ததாகப் 2.புளிப்பு, 3.உப்பு, 4.காரம், 5.கசப்புச் சுவைகளை உண்டபின், இறுதியாகத் 6.துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.