
இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!
இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனி ( 8 ) என்பது.
நெஞ்சு என்றாலே அது திருவடிகளைத்தான் குறிக்கிறது. நெஞ்சு என்றால் அது மார்பல்லவா. மார்பில்தான் கொங்கைகள் என்ற தனங்கள் இருக்கும். தாய்ப்பால் சுரப்பது தாயின் மார்பில். ஆனால், ஞானப்பால் சுரப்பது உண்ணாமுலையாகிய திருவடிகளில். மார்பிபில் காணப்படும் முலைகள் உண்ணக் கூடியது. திருவடிகளாகக் காணப்படும் முலைகளோ உண்ண முடியாத நிலையில் இருப்பது. திருவடிகளை தனியே வெளியே எடுத்து கைகளில் வைத்துப் பார்க்கும்போது, அது சிறுமுலைகளைப் போலவே இருப்பதால், திருவடிகளை பிரமஞானிகள் உண்ணாமுலை என்றார்கள். அப்படிப்பட்ட திருவடிகளைத்தான் நெஞ்சு என்ற வார்த்தையில் ஞானத்தை மறைத்து வைத்தார்கள். நீல மேனி என்பது அமுதம் நீலநிறமானது என்பதால், அமுதத்தால் ஆன தேகம் என்பதைத்தான் நீலமேனி என்றார் ஔவைத்தாய். அமுதக்கலைகளால் நிறைந்த உண்ணாமுலைகளை தன் தேகத்தில் கொண்ட விநாயகப் பெருமானே என்று இதற்கு பொருளாகும்.
அடுத்த வரி நான்ற வாயும் நால் இருபுயமும் ( 9 ) என்பது.
தொங்குகின்ற திருவாய் என்பது கண்ணிமைகள் கீழ்நோக்கிக் கொண்டிருக்கும் போது, இதழ்கள் மூடியிருக்கும் வாயினைப் போன்றே கண்ணிமைகள் இருக்கும். வாய் திறப்பதைப் போலத்தான் கண்ணிமைகள் பார்க்கப்படும்போது கீழிலிருந்து மேல்நோக்கி விரிந்து வரும்.
நான்கு இருபுயங்கள். அதாவது எட்டு புயங்கள். புயங்கள் என்றால் தோள்கள், 4X2 = 8 திருத் தோள்களும் என்று பொருள். திருவடிகளைக் கொண்டு செய்யப்படும் ஞானச் சாதனைகளில் ஒன்றுதான் தோள்களை வைத்துக் கொண்டுச் செய்யப்படும் சுடராழித் தவம். நமது தோள்கள் இருக்கும் பகுதியை நோக்கி திருவடியின் பார்வையைத் திருப்பி, தோள்களின் உச்சிமீது ஆடாது அடையாது செய்யப்படும் ஞானச் சாதனையைத்தான் நான்ற வாயும் நாலிரு புயமும் என்று பாடினார் ஔவைத்தாய்.
அடுத்ததாக மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) என்பது.
மனிதர்களுக்கு இரண்டு கண்கள் உள்ளதை அனைவரும் அறிந்திருக்கிறோம். நமது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இந்த மூன்றாம் கண்ணைப் பற்றி நிறைய விசயங்களை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அங்கங்கே மூன்றாம் கண்ணான நெற்றிக் கண்ணை திறப்பது எப்படி என்றெல்லாம் பலவகையான ஆன்மீக வகுப்புகள் நடக்கத்தான் செய்கின்றன. மூன்றாம் கண்ணாகிய மகாரத் திருவடிகள் பிரமஞானத் தவத்தைச் செய்யக் கூடிய அனைத்து ஞானச் சாதகர்களுக்கும் குருவருளால் திறந்து விடப்படும். உங்கள் மூன்றாம் கண்ணை உங்கள் புறக்கண்களைக் கொண்டே உங்களால் தரிசிக்க முடியும். இதுதான் பிரமஞானத் தவத்தின் ஆச்சரியங்களில் ஒன்று. முறைப்படியான பிரமஞானத் தவத்தைக் கற்றுக்கொள்ளும்போது, இந்த மூன்றாம் கண்ணானது குறைந்தது 3 நாட்களில் அதிகபட்சம் 10 நாட்களுக்குள்ளாக திறந்து விடும். அந்த மூன்றாம் திருவடியை நேருக்கு நேராகப் பார்க்கும்போது அவ்வளவு பெரிய ஆனந்தம் எங்கிருந்துதான் வருமென்றே தெரியாது, அப்படியொரு ஆனந்தக் கூத்தாடுவீர்கள் நீங்கள் அனைவரும்.
இந்த மூன்றாம் கண்ணைப் பற்றி மாணிக்கவாசகர் சொல்வதை முதலில் கேட்கலாம்.
கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி (சிவபுராணம் – 21, 22 வரிகள்)
பொருள் : நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன். சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று என்று நெற்றியிலே மூன்றாவது கண்ணைக் கொண்டிருக்கும் சிவத்தை நோக்கியே மாணிக்கவாசகர் உள்ளம் உருகி இவ்வாறு பாடியிருக்கிறார்.
பிரமஞானத் தவச் சாதனைகளில் திருவடிகளைக் கொண்டு செய்யப்படும் நிலைப்பாட்டில் மூன்று திருவடிகளும் அதாவது கண்களும் பங்குகொள்ளும். வலது பக்கத் திருவடியை அகாரம் என்றும், இடது பக்கத் திருவடியை உகாரம் என்றும், புருவமத்தியில் தோன்றும் திருவடியை மகாரம் என்று பிரமஞானிகள் அழைத்தார்கள். அதன்படி நம் ஒவ்வொருவருக்கும் முகத்தில் இரண்டு கண்களும் நெற்றியில் ஒரு கண்ணும் அமைந்திருக்கின்றன. இதைத்தான் மூன்று கண்ணும் என்றார் ஔவை.
மும்மதச் சுவடு என்பது மூவகை மதங்கள் அவை விட்டுச் செல்லும் சுவடுகள் என்னவென்பதைப் பார்க்கலாம். மும்மதங்கள் என்பது ஆணவம், மாயை, கன்மம் என்பவைகளாகும். சைவ சித்தாந்தமும் இந்த மும்மலங்களை ஒத்துக் கொள்கிறது. இதில் சொல்லப்படும் மாயையும் கன்மமும் வெளிப்புற திருவடிகளில் அமைந்திருக்கின்றன. ஆணவமோ நம் உயிர் இருக்கும் ஆன்மக்கூட்டை ஒரு போர்வை போல போர்த்து மூடிக் கொண்டிருக்கின்றன. ஆணவத்தை எரித்து அழிக்காமல் ஆன்மாவிற்குள் இருக்கும் உயிரொளியைப் பார்க்கவே முடியாது. அதனால் மூன்று கண்ணும் நன்றாகப் பார்க்கவும் வேண்டும் ; இயங்கவும் வேண்டும் என்றால், இந்த மும்மதங்களாகிய ஆணவம், மாயை, கன்மங்கள் முற்றாக நம் திருவடிகளைவிட்டு வெளியேறியாக வேண்டும். அதனால் அவைகளை நாம் ஞானத் தீயினால் எரித்து சாம்பலாக்க வேண்டும். இந்த மும்மலங்கள் திருவடிகளை விட்டு நீங்கியபிறகு, அவைகள் அவற்றின் சுவடுகள் சிலவற்றை விட்டுத்தான் போகும். அந்தப் பதிவுகளாகியச் சுவடுகள்கூட உயிர்க்கூட்டைச் சுற்றிலும் அமைந்திருக்கக் கூடாது என்பதைத்தான் மும்மதச் சுவடும் என்றார் ஔவை. சரி, மூன்று மலங்களை எரித்தொழிக்க வேண்டும் என்று சொல்கிறார்களே, எங்கேயாவது எந்த நூலிலாவது அந்த மும்மலங்களை இவ்வாறெல்லாம் செய்து நீக்கிக் கொள்ளலாம், எரித்துவிடலாம் என்று ஏதாவது ஒரு ஞானத் தந்திரத்தைச் சொல்லியிருக்கிறார்களா என்பதை சற்றே அனைவரும் யோசித்துப் பாருங்கள்.
ஆனால், இதையெல்லாம் சீர்தூக்கி ஆராய்ந்து ஆய்வு செய்து, பிரமஞானத்தில் கண்டுபிடித்த விசயங்களை – பேரருள் ஞானங்களை நமது ஆதித் தமிழ்ச் சித்தர்கள் பிரமஞானத் தவம் என்ற ஒரு ஞான ஒழுங்குமுறையை கட்டமைத்து, இந்த பிரமஞானத் தவத்தைச் செய்திட்டால் மும்மலங்கள் தானாகவே எரிந்து சாம்பாலாகிப் போகின்றன என்பதை அத்தனைச் சித்தர்களும் பயன்படுத்தி அவற்றின் சத்தியத்தை ஞான நூல்களாக பதிவு செய்து ஆவணப்படுத்திச் சென்றிருக்கிறார்கள்.
அதையே தன் வாழ்வியலாகக் கடைபிடித்து பிரமஞானத்தை அடைந்திட்ட ஔவைத் தாயும் அவர் பெற்ற ஞான அமுதத்தை நாமும் பருகிட வேண்டும் என்ற உயர்நோக்கில் விநாயகர் அகவலை வழங்கியிருக்கிறார். இந்த மூன்றாம் கண் கொண்டே மும்மதங்களை எரித்தொழிக்க முடியும் என்பதைத்தான், மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) என்றார்கள்.
அடுத்த வரி இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் (11) என்பது. இங்கே ஔவைத் தாய் எதற்காக இரண்டு செவிகளையும் பொன்னால் ஒளிவீசுகின்ற முடியையும் சொன்னார் என்றால், இறைவன் நாத வடிவானவன், நாதம் என்றால் ஒலி. இந்த உலகமே ஒளி மற்றும் ஒலிகளால் ஆனவைதான். இதை யாராலும் மறுக்க இயலாது. அந்த ஒலியாக நாதமாக இறைவனே இருக்கின்றான் எனும்போது, நாமும் நாதமாகத்தான் இருக்க வேண்டுமல்லவா. அந்த நாதத்தை உள்வாங்க ஒரு கருவி வேண்டுமல்லவா. அக்கருவிதான் செவிகள். நமக்கிருக்கும் செவிகள் அதாவது காதுகள் வெளிப்புற உலகில் உண்டாகக் கூடிய சப்தங்களை மட்டும்தான் கேட்க முடியும். ஆனால், ஆன்மாவின் நாதத்தை – உயிர் எழுப்பும் சப்தத்தை நம்மால் கேட்க இயலாதல்லவா. நாம்தான் நம் சுய இருப்பில் இருப்பதேயில்லையே. உயிர் நம்மைக் கூப்பிட்டாலும் நாம் உயிரருகில் இருந்தாலல்லவா காது கேட்கும். நாம்தான் நம் உயிரை விட்டு பல ஆயிரம் மைல் தாண்டி இருக்கின்றோமே. அதனால் உயிர் எழுப்பும் நாதத்தை நம்மால் எப்படி கேட்க முடியும்? கேட்க முடியாதல்லவா. ஒரு உதாரணச் சான்றைப் பார்க்கலாம், வாருங்கள்.
விநாயகர் நான்மணி மாலையில், மகாகவி பாரதியார், “கணபதியின் திருவடியைச் சிந்தையில் வைத்து போற்றினால் என்னென்ன நமக்குக் கைகூடும்” என்று ஒரு பட்டியலே தந்திருக்கிறார். அதை என்னவென்று பார்க்கலாம்.
உட்செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும்
அக்கினி தோன்றும் ஆண்மை வலியுறும்
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
துச்சமென்று எண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்று ஓங்கலாம்
அச்சந் தீரும், அமுதம் விளையும்
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம் இஃது உணர்வீரே
இதிலுள்ள பல சொற்கள் ஆழ்ந்த ஞானப்பொருண்மை கொண்டவை என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறது. கட்செவி என்ற சொல். இதைப் பாம்பு என்றே பலர் பொருள் கொள்கிறார்கள். ஆனால், இது குண்டொளி ஆற்றலுக்கான குறியீடாகும். வெறும் பாம்பைக் கைகளில் எடுக்கவா கணபதியைப் பாரதி பாடியிருப்பார் ?? கணபதியின் அருளால் திருவடிகளில் மறைந்திருக்கும் குண்டொளி ஆற்றலை நெறிப்படுத்தி வெளிப்படுத்தும்போதுதான் பாரதி சொல்ல வரும் ஞானம் நமக்கெல்லாம் தெளிவாக விளங்கிடும்.
அடுத்தபடியாக கேனோபநிடதம் சொல்வதையும் சிறிது செவிமடுப்போம்.
“எதைக் கண்களால் காண முடியாதோ, எந்த சக்தியால் இயக்கப்படக் கண்கள் காண்கின்றனவோ அதுவே பிரம்மம் ஆகும்”.
“அதேபோல், எதைச் செவிகள் கேட்கமுடியாதோ, எந்த சக்தியால் இயக்கப்படச் செவிகள் கேட்கின்றனவோ அதுவே பிரம்மம் ஆகும்”.
“எனவே, பிரம்மம் என்னும் உயிர்ச்சக்தியானது கண்ணுக்குக் கண்ணாகவும், செவிக்கு செவியாகவும், மூச்சுக்கு மூச்சாகவும், பேச்சுக்குப் பேச்சாகவும் விளங்குகிறது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் உடலின் மீது பற்றறுப்பர்; அமரவாழ்வு எய்துவர்” என்கிறது. கேனோபநிடதம் சொல்லிய ஞானத்தைப் பார்த்தீர்களா, அதனால்தான் வேதத்தின் சாரமாக – சாறாக உபநிடதங்கள் கருதப்படுகின்றன.
கேனோபநிடதம் இந்த விடையைப் பகர்வதற்கு மூலக் காரணமாக விளங்கிய கேள்வி ‘கேன?’ என்பதே. வடமொழியில் ‘கேன?’ என்றால் ‘யாரால்?’ என்று அர்த்தம். இக்கேள்வியுடன் தொடங்கியதால் தான் இதற்குக் கேனோபனிடதம் என்று பெயர் என்று சொல்வர்.
நாம் பொதுவாகக் ‘கண்கள் காண்கின்றன’ என்கிறோம். ஆனால் உண்மையில் கண்களா காண்கின்றன? இல்லையே! கண்களை இயக்கும் அமரசக்தி ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர்தான் பிரம்மம். இவ்வாறு கண்ணுக்குக் கண்ணாகவும் செவிக்குச் செவியாகவும் இருக்கும் இந்தப் மெய்ப்பொருளைத் தான் அகக்கண் என்றும் உட்செவி என்றும் பாரதியார் குறிப்பிடுகிறார் என்றே கருதத் தோன்றுகிறது. ‘உட்செவி திறக்கும் அகக்கண் ஒளிதரும்’ என்று சொல்லும் போது ‘இயங்கும் உடல் அல்லேன்; இயக்கும் பிரம்மம் நான்’ என்று தியானிக்க, தவம் செய்ய ஆரம்பித்துவிட்டால், நம் உள்ளொளி பெருகி உயிர்ச்சக்தி ஒளிவிட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்துவிடும் என்பதையே பாரதியார் அழகாகப் பாடிக் கொடுத்திருக்கிறார்.
அதேபோல், பாரதியின் கவிதையில் இறுதி இரண்டு அடிகளில் சொல்லும் அமரத்துவத்தையும் கேனோபநிடதம் சொல்லும் இறவாத் தன்மையையும் ஒப்பு நோக்கிப் பார்க்கலாம்.
உபநிடதம் சொல்லும் இம்மெய்ம்மையை அருணாசல அட்சர மணமாலையில் ஸ்ரீரமணரும் இவ்வாறு அருள்வதைக் காணலாம்:
கண்ணுக்குக் கண்ணாய் கண்ணின்றிக்
காண்உனைக் காணுவது எவர்பார் அருணாசலா!
அதனால் நமது சிரசிற்குள் கேட்கும் உயிர் நாதத்தை உட்செவி என்றும் அகச்செவி என்றும் கட்செவி என்றும் அழைக்கப்படும் செவிகளே கேட்கும் என்பதைத்தான், ஔவைத் தாய் இரண்டு செவியும் என்றார்.
அந்த இரண்டு செவிகளும் எங்கே விளங்குகின்றன என்றால், நம் சிரசிற்குள் பொன்னொளிகளாக விளங்கக் கூடிய இடத்திலே திருச்சிற்றம்பலத்திலே பொன்முடியானது ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன என்பதைத்தான், இலங்கு பொன்முடியும் (11) என்றார் ஔவைத்தாய். உயிர் விளங்கும் இடமே திருச்சிற்றம்பலமாகும். திருச்சிற்றம்பலத்தை திரு + சித்து + அம்பலம் எனப் பிரித்துப் பொருள் காணலாம். சித்து அம்பலம்தான் நாளடைவில் சித்தம்பலமாகி, அதன்பின் சிதம்பரம் என மருவியது. இப்போது இருக்கும் சிதம்பரம் என்ற ஊர் திருச்சிற்றம்பலம் இருக்கும் ஊராகும். அதுவே சிவன் விளையாடும் நடராஜ நடன ஊராகும். நிற்க.
அடுத்த வரி திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும் என்றது.
முப்புரி நூல் என்பது மூன்று நூல்களை இணைத்து மார்பில் அணியக்கூடிய ஒரு சம்பிரதாயச் செயல். முப்புரி என்பதை முதலில் பதம் பிரித்துப் பாருங்கள்.
முப்புரி = முப்பூ + உரி.
மூன்று பூக்கள் தான் முப்பூ. உரி என்றால் நம் வீட்டில் வெண்ணெய், நெய் முதலியவற்றை தலைக்கு மேலே சில கயிறுகளால் கட்டி தொங்கவிட்டு, அதில் பானைகளை பத்திரமாகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள். அந்த பானைகள் கயிறுகளால் தொங்கிக் கொண்டிருக்கும் இல்லையா, அதைத்தான் உரிப் பானை என்பார்கள். உரியில் பானை. ஆக உரி என்றால் தலைக்கு மேலே கயிறுகளால் தொங்கும் பானைகள் என்பதாகும். இந்த கயிறுகள் மூன்று பிரிவாக இருக்கும். இதைத்தான் முப்புரி நூல் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இங்கே பானை என்பது நமது மார்பாகிய திருவடிகளாகும். திருவடிகளாகிய கண்கள் பானையைப் போல உருண்டையாக இருக்கிறதல்லவா. அந்த உரியில் இருக்கும் கயிறுகள்தான் நமது வெண்விழிப் பூ, கருவிழிப் பூ, கண்மணிப் பூ. இந்த மூன்று பூக்களைத்தான் முப்பூ உரி அதாவது திரண்ட முப்புரி நூல் என்றும் பானையாகிய திருவடிகளை திகழொளி மார்பும் (12) என்றார் ஔவைத்தாய். எவ்வளவு ஞான இரகசியம் பாருங்கள் இச்சொல்லுக்கு.
அடுத்த ஞான வரிகள் சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான (13) என்றது.
முதலில் பதம் என்றால் என்னவென்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருவதும், தொடர்ந்து வந்து பொருள் தருவதும் பதம் என்று நன்னூல் இலக்கியம் வரையறுத்துள்ளது.
நன்னூல் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். நன்னூலானது, தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் உரையையும் முதல் நூலாகக் கொண்ட வழிநூலாகும். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சரி பதம் என்ற சொல்லை ஆராய்வோம். அவ்வாறு ஓர்எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருமானால் அது ஓர்எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது. பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர் எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது.
ஐந்து ஞானேந்திரியங்கள் (புலன்கள்) ஆன்மாவோடு தொடர்பு கொண்டு சுவை (நாக்கு), ஒளி (கண்கள்), தொடுஉணர்ச்சி (தோல்), ஓசை (காது), நுகர்தல் (மூக்கு) – என்பதை அனுபவிப்பது – ‘ஜாக்ர அவஸ்தை’
அதைவிடப் பெரியது ‘ஸ்வப்ன அவஸ்தை’. அது ‘கனவு’ என்னும் மனவுலகம். அங்கே புலன்கள் தடை இன்றிவிரைந்து எங்கும் தாவும்.
இந்த இரண்டு அவஸ்தைகளும் நிலை இல்லாத சலனத்தில் இருக்கும். இந்த சலனத்தில், சொற்களுக்கு ஆட்சி உண்டு.
ஸுஷுப்தி என்ற ஆழ்ந்த உரக்க நிலையில் சொற்களின் ஆட்சி சோர்வடைந்து மங்கிவிடும். எனினும் இது ஒரு மறதிநிலை. இதனாலும் பயன் இல்லை.
மனம் பிராணனின் அடங்கி, சித்தம் மெய்ஞ்ஞான அருள் உணர்வில் ஒன்றி நிற்பது தான் ‘துரிய’ நிலை. இந்த நான்காம் நிலையில், உயிரானது கணபதியை உணரமுடியும். இந்த நிலையை அடையும் ஞானிகள் இரவு-பகல் என்ற காலவிகாரத்தைக் கடந்து நிற்பவர்களாவர். இன்பம்-துன்பம் என்ற மன விகாரத்தை வென்றவர்கள், இறப்பு-பிறப்பு என்ற உயிரின் விகாரத்தை ஒழித்தவர்கள். துவைத விகாரங்களைக் கடந்தவர்கள்.
மேலான அந்த உணர்வில் மெய்ஞ்ஞானம் மேவும். இது ‘துரியாதீத’ நிலை. அந்த இடத்தில் அற்புதம் பல வெளியாக, அருள் ஒளி வெள்ளத்தின் நடுவில் அமர்ந்திருப்பவன்தான் நம் ஆனைமுக கணபதி.
திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) தனித் திருத்தாண்டகத்தில் இந்த மூர்த்தியை, ‘ஞானமூர்த்தி, சொலற்கரிய சூழலாய், கற்பகமே’ என்றெல்லாம் அன்புடன் புகழ்கிறார். அந்த பாடல்:
‘நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை!
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யானுன்னை விடுவே னல்லேன்!
கனகமா மணிநிறத்தெங் கடவுளானே!
ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் – எனும் ஐவரினும் கடந்த துரிய சிவத்தின் ஸ்வரூபமே கணபதிஎன்கிறது ஸ்காந்தபுராணம். அப்பெருமானுக்கு அருவம், உருவம், அருவுருவம் என்பவை அவர் தாங்கும்அருட்கோலங்கள். இதையே அதர்வசீர்ஷமும் ‘த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்வமஸி’, த்வம் ப்ரஹ்மாஸ்த்வம்,விஷ்ணுஸ்த்வம், ருத்ரஸ்த்வம் இந்த்ரஸ் த்வம் ” – என்கிறது.
அநாதி நித்ய தெய்வம் அவர். உயிர்கள் உய்வடைய மெய்ஞ்ஞான திருமேனி தாங்கி அற்புதமாக வெளிப்பட்டுஅன்பர்களுக்கு அருள்பாலிப்பவர். திரிகரணமும் ஒருமித்தாலன்றி அப்பரமனை தரிசிப்பது ஆவதில்லை. காணும்போது கரி முகம் (யானை முகம்), ஊன்றி நோக்கினால், ஞான ஆகாயம். அழுந்தி உணர்ந்தால் – பிரணவ ஸ்வரூபமான ஞானக் கனல் இவர் திருவுரு. இந்த இரண்டு அடிகள் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ்ஞான என்பதை எவ்வளவு இரத்தின சுருக்கமாக எவ்வளவு அழகாக செய்திகளை அறிவிக்கின்றன! இப்பகுதியை படிக்கும்போதே நம்உள்ளுணர்வு, பரவசம் மிகுந்து பாடுகின்றது அல்லவா!
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறு – நாம் எல்லோரும் அறிந்து உய்ய அரிய ஒருதிருவுருவம் கொண்டது. திருமேனியின் உறுப்புகள் ஒவ்வொன்றினும், எண்ணிறந்த தத்துவங்கள் இருக்கின்றன.
தோற்றம் என்பது பிறப்பு ; மறைவு என்பது இறப்பு. தோன்றும் துரியம் ஒருநாள் மறைந்துதான் தீரவேண்டும் அல்லவா. துரியம் எளிதாக சொல்வதென்றால் தியானத்தில் / தவத்தில் உயிர் எங்கிருந்து செயல்படுகிறது என்கிற நிலை. துரியம் என்பது ஐந்து அவத்தைகளுள் ஒன்று.
நனவு : இது வடமொழியில் சாக்கிரம் என்ற சொல்லப்படும். இந்நிலையில் உயிர் புருவ நடுவிலிருந்து செயல்படும்.
கனவு : சொப்பனம் என்று கூறப்படும். இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர்
செயல்படும்.
உறக்கம் : சுழுத்தி என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
பேருறக்கம் : இது துரியம் என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து செயல்படும்.
உயிர்ப்படக்கம் : துரியாதீதம் என்று கூறப்படும். இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து செயல்படும்.
துரியம் – பொறி புலன்கள் வேலை செய்யாது சத்தி நிரம்பியபின் விழிப்பும் வராது. ஆனால், அதித உணர்வு என்ற பிரபஞ்ச உணர்வு நிலை உருவாகும். அப்பொழுது மூளையில் காமா அலை என்னும் சிறப்பு அலை உருவாகும். இது பிரபஞ்சத் தொடர்பை ஏற்படுத்தும். இந்த அலை நிலையில் பிற சித்தர்களுடன் தொடர்பு ஏற்படும். இந்த நிலை கோமா நிலையுடன் ஒப்பிடலாம். கோமா நிலையில் காமா அலை உருவாகாது ; பிரபஞ்சத் தொடர்பும் ஏற்படாது. புறத் தோற்றத்தில் இரண்டும் ஓன்று போல் இருக்கும். அப்போது சொற்பதங்களை கடந்த நிலை தானே சித்திக்க ஆரம்பித்திடும்.
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர்சோதி
அரிய துரியம் அதில்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூதி அகத்தில் உள்ளானே (தி.ம.2940)
துரியங்கள் சிவதுரியம், பரதுரியம், சீவதுரியம் என மூன்றுண்டு.
துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே (தி.ம.2863)
எல்லாம் தன்னுள்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்று எய்தும்அன்றே (தி.ம.2308)
பிரமஞானத் தவத்தால் சாதகன் துரியத்தைத் தாண்டுவதையும், அவ்வாறு தாண்டியபிறகு துரியாதீத நிலை ஏற்படும்போது, அங்கே ஒரு சோதிச் சுடர் தோன்றி மிளிர ஆரம்பிக்கும் என்பதைத்தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவனை, “துரியமும் இறந்த சுடரே போற்றி” என்றார்.
அதனால்தான் ஔவைத்தாய் அவர்கள் ஒருவருக்கு துரிய நிலை கிட்டும்போது சொற்களின் பொருள்களோ, பதமோ சிந்தனையில் இருக்காது என்பதைத்தான், “சொற்பதம் கடந்த துரிய” என்றார்.
அடுத்து இந்த சொற்களையும் அதன் பொருள்களையும் கடந்த சித்த நிலை வாய்க்கும்போது, சாதகனுக்குள் எது மெய்? எது பொய்? என்ற சீர்தூக்கிப் பார்க்கும் கற்றறிவு உண்டாகிடும். மெய்யாகிய உயிரை அடையக்கூடிய வழிகளெல்லாம் எவையவைகளோ அவைகள்தான் உண்மையான மெய்வழிப் பாதையாகும் என்பதை சாதகன் உணர்ந்து கொள்வான். நம் உயிரை அறிய உதவக்கூடிய – வழிகாட்டி உணர வைக்கக்கூடிய தெளிந்த அறிவு எதுவோ அதுவே ஞானமாகும். மெய்யைக் காட்டிக் கொடுப்பதால் அது மெய்ஞ்ஞானம் என்றழைக்கப்படுகிறது.
திருமூலர் சொல்லும் மெய்ஞ்ஞானத்தை நாம் முதலில் அறிந்து கொண்டால்தான் நம்மால் உண்மையில் மெய்ஞ்ஞானம் என்னவென்பதை உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்.
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே (திருமந்திரம் – 2355)
அதாவது தன்னுடைய உண்மைநிலை அதாவது நானே சிவத்தின் சொரூபம் – சிவத்தின் பிள்ளை என்பதைப் புரிந்துக்கொண்டு தன் வாழ்வில் தன்னை அறிய உதவக்கூடிய பிரமஞானத் தவத்தைச் செய்து கொண்டு வருபவனுக்கு எந்த ஒரு கேடும் வருவதில்லை! அந்த உண்மைநிலையை அறியாமல் போகின்ற காரணத்தினால்தான் அவன் தன்னை அறிந்து கொள்ளும் அறிவை அறியாமலேயே கெட்டுப் போகின்றான். அந்த உண்மைநிலையை – தான் யார் என்ற சத்தியத்தை – தான் நாத ஒளிவான இறைவனின் பிள்ளை என்பதை உணர்ந்து அறியக்கூடிய அறிவினை தனக்குள் அறிந்து கொண்டு விட்டால், அவன் தன்னையே இறையாக நினைத்து பூஜை செய்து அர்ச்சித்துக் கொள்வானே. இன்றைக்கு இவ்வுலகில் இருக்கக் கூடிய பெரும் பிரச்சினை என்ன தெரியுமா அன்பர்களே, ஒவ்வொருவரும் தான் யார்? எதற்காக இந்த மனிதப் பிறவியை எடுத்திருக்கின்றோம்? நம் பிறப்பின் நோக்கம் என்ன? அதை அடைந்து இன்புறும் ஞான வழிதான் என்ன? என்பதையெல்லாம் அறிந்து கொள்ளாமல், 100 சதவிகிதம் அறியாமலேயே வாழ்ந்து, அறியாமையிலேயே இறந்து போவதுதான். வேறு என்ன சொல்ல? ரொம்பவும் வேதனையாக இருக்கிறது, உலக உயிர்களின் இந்நிலைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும்போது.
இதற்கான தீர்வை திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருப்பதைக் காண்போம்.
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன்
விளைக்கும் தவம்அறம் மேற்துணை ஆமே (திருமந்திரம் – 258)
கர்ம வினைகளால் நிறைந்திருக்கும் இந்த வினைக்கடலில் நாம் நீந்திக் கரையேறி களைப்பெல்லாம் நீங்கிப் புத்துணர்ச்சி பெற்றிட இரண்டு வழிகள் உள்ளன. ஒருவழி – அழியாப் புகழுடைய பரமேசுவரன், நமக்கும் நம்மை சேர்ந்தோர்க்கும் காண்பிக்கும் ஒரு வழியான பிரமஞானத் தவ நெறி ; மற்றொரு வழி இல்லறம் ஆகும். இந்த இரண்டு வழிகள்தான் சிறப்பாக நம்மை வழிநடத்தி அழைத்துச் சென்று மறுமைக்கு அதாவது மறுபிறப்பில்லாத நிலைக்கு உயர்த்தும் ஞான வழிகள் என்கின்றார் திருமூலர். எவ்வளவு சத்தியம் பாருங்கள் திருமூலரின் வாக்கில். அதனால் நாம் அனைவருமே இல்லறத்தில் இருந்து அறவாழ்வை மேற்கொண்டு கொண்டே, பிரமஞானத் தவ வாழ்வையும் தைலதாரை போல நம் உயிரின் ஜீவன் முத்தீக்காக தவம் செய்து கொண்டே இருக்க வேண்டும். எதுவரை என்றால், உயிர் நிலைக்கும்வரை. அவ்வளவுதான். இந்த திருமந்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டால், உங்களின் அனைவரின் அத்தனை கர்மாக்களும் அழிந்து பிறவிப் பெரும்பயனை அடைந்தே தீர்வார் எம்மைப் போல என்பதை சத்தியத்திலும் சத்தியமாகச் சொல்லிக் கொள்கின்றோம்.
தன்னை அறிந்திட்ட மெய்ஞ்ஞானிகள் அனைவருமே தவத்தின் வழியேதான் சென்று தங்கள் வாழ்வை பூரணமாக்கிக் கொள்கிறார்கள். அது எப்படி என்றால், திருமூலர் சொல்வதைக் கேளுங்கள்.
தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே (திருமந்திரம் – 257)
தன்னை அறியும் அறிவை அடைந்த அறிவையே தெய்வமாக மதிக்கக்கூடிய மனிதர்களாகிய பிரமஞானிகள், அவர்கள் வாழ்வில் எப்போதுமே பிரமஞானத் தவத்தின் வழியேதான் சென்று கொண்டிருக்கிறார்கள். நாமும் அத்தவ வாழ்வில் பயணம் செல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். நாமெல்லாம் இந்த உடலை எப்படி நினைக்கின்றோம் என்றால், உடல்தான் பிரதானம் – முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி உடலையே முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு எமதர்மன் ‘நான்தான் உங்கள் தெய்வம்’ என்று மரணத்தருவாயில் வந்து உணர்த்தி நிற்பான். அதனால் தவவாழ்வை மேற்கொண்டு வரும்போது சிவமே நம் இறைவனாக இருப்பான் ; மாறாக தவ வாழ்வை மேற்கொள்ளாமல் உடலே பிரதானம் என்று வாழ்ந்து வந்தால் எமன்தான் இறைவனாக வந்து நம் உயிர் கவர்ந்து செல்வான். அதனால் தவம்தான் நம்மை மரணத்திலிருந்து காக்கும் கற்பக அமுது என்பதை இப்போது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா, அன்பர்களே.
அப்படி வரக்கூடிய எமன் எப்படி வருவான் என்பதை திருமூலர் சொல்வதைக் கேளுங்கள்.
தன்னை அறியாது தான்நலர் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்லதவம் செய்யும் நீரே (திருமந்திரம் – 255)
வலிமை கொண்ட எமதர்மன் நம் உயிரைக் கவர்ந்து செல்ல வரும்போது, நாம் யார்? எத்துணை சக்தி படைத்தவர்? நம் பதவி, அந்தஸ்து, கௌரவம் என்ன? என்பதை எல்லாம் அவன் பார்க்கவே மாட்டான். நாம் நல்லவரா? கெட்டவரா? என்பதைப் பற்றியெல்லாம் எமனுக்கு கவலையே இல்லை. நம்முடைய வயதும் அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை. எதைப்பற்றியும் சற்றும் யோசிக்காமல் நம் உயிரைக் கவர்ந்து சென்றுவிடுவான். அந்த எமன் நம் உயிரைக் கவர்வதற்கு வருமுன்னே நாம் அமுதக்காற்றின் ஆற்றலோடு கூடிய நல்ல பிரமஞானத் தவத்தை செய்து, தேகத்தின் அளவினைவிட உயிராற்றலின் அளவினைப் பெருக்கிக் கொண்டுவிட வேண்டும். அப்போதுதான் எமனால் நம் உடலுக்குள் இருக்கும் உயிரைக் கவர்ந்து செல்ல முடியும் ; ஆனால் நம் தேகம் உயிருக்குள் இருக்குமேயானால், எமனால் நம் உயிரைத் தாண்டி உடலைக் கவர்ந்து செல்ல இயலாது. காரணம் நம் உயிருக்குள் இறைவனின் பேருயிர் இருக்கின்ற காரணத்தால், நம் உயிர் தாண்டி, இறைவனின் பேருயிர் தாண்டி, அதற்குள்ளே இருக்கும் நம் தூல தேகத்தை எமனால் கவரவே முடியாது. இதுதான் சிவப்பிரம இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்து உணர்ந்து வாழ்வில் அனுபவப்பூர்வமாக முழுமையாக வாழ வேண்டுமென்றால், நீங்கள் அனைவரும் பிரமஞானத் தவத்தை செய்தே ஆக வேண்டும். பிரபஞ்சத்தின் உயிர் விதியே இதுதான். இந்த உயிர் விதியை பின்பற்றி சித்தி அடைபவர்கள்தான் சித்தர்கள், பிரமஞானிகள், ரிஷிகள், மஹரிஷிகள் ஆகிய அனைவரும். நீங்கள் இப்போது என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வாழ்வின் இறுதிநிலை அமையும்.
அறத்தை எப்படி வழுவாது பின்பற்றி வருவேண்டுபதை திருவள்ளுவர் சொல்வதை சற்று செவி மடுப்போம்.
அறம் என்ற சொல்லானது அறுத்தல் என்ற வினைச்சொல்லினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சொல்லாகும் (அறு+அம்=அறம்).
அறு + அம் = அறம்.
எவற்றை அறுக்க (விட்டொழிக்க) வேண்டும். இதோ வள்ளுவனே கூறுகின்றார்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (திருக்குறள் : 35)
அதாவது அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் அறுப்பதே அறம் எனப்படும் என்கின்றார் வள்ளுவர்.
இந்த நான்கையும் அறுத்தெரிந்து விட்டால், நாம் அம் நிலையை அடைவோம். அதாவது அகாரமாகிய ‘அ’ஐயும், மகர மெய்யாகிய ‘ம்’ஐயும் அடைந்து இன்புறுவோம். ‘அ’ என்ற அகாரம் என்பது சூரியக்கலைகளாகும். ‘ம்’ என்பது மூன்றாவது திருவடியில் இருக்கும் அக்கினிக் கலைகளாகும். எப்போது சூரியக் கலையும் அக்கினிக் கலையும் ஒன்றாக இணைகிறதோ, அப்போது நாம் உயிர்க்கூட்டை அடைந்து அமுதத்தைச் சுவைப்பதற்கு தயாராகுவோம். இந்நிலையைத்தான் பிரமஞானிகளும் சித்தர்களும் அறம் என்றார்கள்.
உலக வாழ்விற்கான அறம் என்பது பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகியவைகளை செய்யாது இருப்பதாகும்.
ஞான வாழ்விற்கான அறம் என்பது நமது திருவடிகளில் இருக்கக் கூடிய சூரியக் கலையையும் அக்கினிக் கலையையும் ஒன்று சேர்த்து, அக்கலைகளை நம் உயிர்க்கூட்டில் நிறைப்பதாகும். ஞான வாழ்வில் தவமும் அறமும் ஒரே செயலைத்தான் குறிக்கிறது. ஒரே பயணத்தைத்தான் குறிக்கிறது.
மேற்கண்ட தவ நெறியும் அறநெறியும் நமக்குள் கைவல்யமாகும்போது, நம் உயிரை அது இன்னதென்று அறிய வைக்கக் கூடிய சொற்களையும் அதைத்தாண்டி பலவித பொருட்களையும் கடந்து துரிய நிலையை அடைந்திடுவோம் என்பதைத்தான், “சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான” என்றார் நம் ஔவைத்தாய்.
இப்படிப்பட்ட நமது ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பிரமஞானங்களை கடந்த 3 ஆண்டுகளாக பிரமஞானப் பொற்சபை குருகுலம் என்ற அமைப்பை உண்டாக்கி, உலக மக்களின் ஞான விடுதலைப் பேற்றிற்காக
@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai என்ற வலையொளி தளத்திலும்
www.bramagnanaporsabai.com என்ற வலைப்பூத் தளத்திலும்
பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும் கொடுத்து வருகின்றோம். அங்கு சென்று நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் நீங்கள் முழுமையாக அறிந்து உணர்ந்து இன்புறலாம் என்று சொல்லி இப்பேச்சுரையை நிறைவு செய்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து
உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!