
அகத்தியர் அடுக்குநிலை போதம் – 4
நஞ்சணிந்தான் முகந்தான் ஐந்தும் எங்கே?
ஞானக் கண் மற்றக்கண் மூன்றும் எங்கே?
அஞ்ச உயிர்தனைக் கெடுக்கும் எமன் எங்கே?
ஆயிரங் கண் இந்திரனார் தாமும் எங்கே?
பஞ்சறிவால் நின்ற பராசக்தி எங்கே?
பதினாலு லோகம் எனும் அதுதான் எங்கே?
வஞ்சம் அற பொருளறிந்து சொல்வாராகில்
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே! (6)
1) நஞ்சு அணிந்தான் முகம்தான் ஐந்தும் எங்கே?
நஞ்சு என்றால் விஷம். உயிரைக் கொல்லக் கூடியதுதான் நஞ்சாகும். அந்த நஞ்சையே இறைவன் தன் ஐந்து முகங்களாகக் கொண்டிருக்கிறான். இறைவனின் ஐந்து முகங்கள் என்பவை சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்பவை. இதை சைவ சித்தாந்தம் மிக விரிவாக எடுத்துச் சொல்லும். ஆனால், இறைவனான சிவத்திற்கு ஒரேயொரு முகம்தான் உண்டு. அந்த ஒரே முகத்தில் ஐந்து சத்திகள் தனித்தனியே நிறைந்து காணப்படுவதால், அதை ஐந்து முகங்கள் என்கிறார் அகத்தியப் பெருமான். அந்த ஒரு முகம் எது தெரியுமா மாணவர்களே? அதுதான் இறைவனையும் நாம் சிவன், விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி, சனி, குரு, இலட்சுமி, இந்திரன், மித்ரன், வருணன், யமன், வாயு, அக்னி, ஆப: என்று பல பெயர்களால் அழைக்கிறோம். மேற்கூறிய நாமங்கள் யாவும் இறைவனின் குணங்களையோ, தத்துவங்களையே குறிப்பனவே அல்லாமல் உருவங்களை அல்ல. மேலும் மற்ற எல்லா பெயர்களும் இறைவனின் நிஜ நாமமான ஓம் என்பதிலிருந்தே வெளி வந்தன. ஓம் இறைவனின் மிக முக்கியமான, தன்னியற்கையான நாமம். மற்ற நாமங்களெல்லாம் குணவாகுப் பெயர்களே!
ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க “ஓம்” என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது. வால்மீகி மூல இராமாயணத்தில் இராமன்பிரான் காலையில் எழுந்து ஓங்காரத்தை உபாசனை செய்தார் என்று சொல்லியிருக்க. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நாமோ வெறும் இராம நாமம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எங்கேயாவது இறைவன் என் நாமத்தை உச்சரித்து வாருங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? ராம நாமத்தை உச்சரிப்பது இராமபிரான் செய்ததற்கு எதிரானச் செயலாக உள்ளது. இராமபிரானைப் போல தினமும் நாம் ஓங்காரத்தைச் செபித்து வர வேண்டாமா, சொல்லுங்கள்.
இறைவனின் முகங்கள் ஐந்து சைவ சித்தாந்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அந்த ஐந்து செயல்பாடுகளும் ஓரிடத்திலேயே ஒரு முகத்திலேயே அடங்கி இருக்கின்றன. அந்த இறைவனின் ஒரேயொரு முகம்தான் ஓங்காரம் என்பது. ஓம் என்ற ஒலிதான் இறைவனின் திருமுகம். இந்த திருமுகத்தில்தான் அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் என்ற ஐந்து ஆற்றல்கள் தனித்தனிச் செயல்பாடுகளாக ஒரே இடத்திலேயே நிலை கொண்டிருக்கின்றன.
நஞ்சை அணிந்தவன் யார்? நஞ்சு எது? அதுதான் மும்மலங்கள். மும்மலங்கள் தான் நஞ்சாக, இருட்டாக மெய்ப்பொருளைக் கவர்ந்து போர்த்திக் கொண்டு, நம்மை ஞானம் அடையவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. மெய்ப்பொருளின் மையப்புள்ளியில் பரவிந்துவாக இறைவன் இருக்கிறான். அவனுக்கு மேற்புறத்தில் நஞ்சாகிய மும்மலங்கள் இருள் சூழ்ந்து மூடியிருக்கின்றன. பரவிந்துவின் மேல் நஞ்சுகள் அமைந்திருப்பதால், பரவிந்துவான சிவம் நஞ்சை அணிந்ததாகச் சொல்லப்பட்டது, அகத்தியப் பெருமானால். மெய்ப்பொருள்தான் நஞ்சை அணிந்த சிவத்தின் முகம். அதன் ஆற்றல் வடிவம் ஓங்காரமாகும். ஓங்காரமே சிவத்தின் ரூபமாகும்.
2) ஞானக்கண் மற்றக்கண் மூன்றும் எங்கே?
ஞானக் கண் என்பது மூன்றாவது கண்ணிற்கு அடுத்து வெளிப்படுகின்ற கண்ணாகும். மூன்றாவது கண்ணிற்கு அடுத்து ஞானக்கண் தோன்றும். ஞானக் கண்ணுக்கு அடுத்து உயிர்க்கண் தோன்றும். உயிர்க்கண்ணுக்கு அடுத்து நெற்றிக் கண்ணாகிய அருட்கண் தோன்றும். இவையெல்லாம் பிரமஞானத் தவத்தால் கடந்து, கடந்து சென்று அடைய வேண்டிய பிரமஞான வழிகளாகும். இதை விளக்கினால் புரியாது. அனுபவித்தே உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொறு கண்ணும் வெவ்வேறு வடிவத்தில் தோன்றி நம் கண்முன்னே காட்சியளிக்கும். அவை விளக்கிட அனுமதி இல்லை. இதை வைத்து பொய்க் கதைகளை அவிழ்த்து விடுவார்கள் நம்மவர்கள். அதனால் சொல்வதற்கு ஏதுயில்லை. பிரமஞானத் தவத்தில் முதலில் மூன்றாவது தோன்ற வேண்டும். அது நம் கண்ணைப் போன்றே ஒரு குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட வடிவில், குறிப்பிட்ட உருவத்தில், குறிப்பிட்ட தருணத்தில் தோன்றும். ஏறக்குறைய அனைத்து மாணவர்களும் இந்நிலையை தொட்டு அடைந்திருக்கிறார்கள். தவத்தால் எப்போது நெற்றிக் கண் என்ற அருட்கண்ணை ஒருவன் பெறுகிறானோ, அப்போதுதான் அவன் அருளாளனாக மாறுவான். அவனே உலக உயிர்களுக்கு தொண்டாற்றுவான். நம் வள்ளற்பெருமானைப் போல. அவருக்கு அருட்கண் தோன்றியதே அவரின் இந்நிலைக்கு முழுக் காரணமாகும். இத்தோடு போதும். இதில் எண்ணிலடங்கா ஞான ரகசியங்கள் பூடகமாய் மறைந்தே இருக்கின்றன. மறைத்தே வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் பரிபூரணமான முழுத் தகுதிநிலையை தவத்தில் அடையும்போது உங்களுக்கு இதுபற்றி சிறிது விளக்கப்படும்.
3) அஞ்சு உயிர்தனைக் கொடுக்கும் எமனும் எங்கே?
அஞ்சு உயிர் என்பது ஐந்து கோசங்களைக் குறிக்கிறது. இந்த ஐந்து கோசங்களிலும் உயிரின் ஐவகை மெய்ச்சுடர்கள் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. 1.அன்னமய கோசம், 2.பிராணமய கோசம், 3.மனோமய கோசம், 4.விஞ்ஞானமய கோசம், 5.ஆனந்தமய கோசம். இந்த கோசங்களில் உயிரின் அடுத்தடுத்த உயிர்நிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பிரமஞானத் தவத்தைச் செய்யும் சாதகர்கள் இந்த ஒவ்வொரு கோசங்களிலும் உயிரின் வெளிப்பாடுகளை முழு மெய்யுணர்வுகளாக உணர்ந்து விடுவார்கள். சென்ற சென்மத்தின் நினைவுகள், அதற்கு முன்சென்ம நினைவுகள், பின் பிறப்பெடுக்கும் சென்மத்தின் நினைவுகள் என அனைத்தும் இந்த கோசங்களில் மென்பொருளாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சாதகன் முதலில் இக்கோசங்களை வென்றெடுக்க கற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இந்த ஐந்து உயிர் நிலைகளைத் தாண்டிச் செல்ல முடியும். எமக் பாசக்கயிறை வீசுவது இந்த கோசங்களின்மீதுதான். நமக்கு ஏதாவது பிரச்சினை வந்தது என்றால், என் ஐஞ்சு உயிரும் ஆடிப்போயிடிச்சு என்று அடிக்கடி சொல்வோமே, அது இங்கே நடக்கும் மாறுகளால்தான். நமக்கு பிரச்சினைகள் வருவதும், துன்பங்கள் நேருவதும், ஆரோக்கியம் குறைவதும், நோய் வருவதும், இன்பம் வருவதும், மகிழ்ச்சிப் பொங்குவதும், ஞானம் கிடைப்பதும் இக்கோசங்களின் மாறுபாடுகளால்தான். எதிர்மறை விளைவுகள் நமக்கு நடக்கும் போதெல்லாம், இக்கோசங்களைப் படம் எடுத்துப் பாருங்கள். நிறைய இடங்களில் துளைகள் அதாவது ஓட்டைகள் ஏற்பட்டிருக்கும். ஆனந்தம், பரவசம், மகிழ்ச்சி, ஞானம் வரும் போது படம் எடுத்துப் பாருங்கள். அக்கோசங்கள் அனைத்தும ஒளிக்கலைகளால் பிரகாசமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும்.
4) ஆயிரங்கண்ணி இந்திரனார் எங்கே?
ஆயிரம் கண்ணி என்றால் ஆயிரம் கண் கொண்டது என்று பொருள். இந்த ஆயிரம் கண்ணும் இந்திரனிடம் இருப்பதால்தான், இந்திரனின் மேனியெங்கும் யோனிகளாக இருப்பதாக தவறாகப் பொருள் கொள்ளப்பட்டது. இந்திரனிடம் இருப்பது யோகிகளல்ல. அவை அனைத்தும் திருவடிகள். இரண்டு திருவடிகளும் எப்போது ஒன்று சேருமோ, அப்போதுதான் மூன்றாவது திருவடியான மகாரம் தோன்றும். அகாரம் 8 எண்ணிக்கை ; உகாரம் 2 எண்ணிக்கை. மகாரத்தில் இவ்விரு எண்ணிக்கைகளும் ஒன்றுகூடி 10 எண்ணிக்கையில் நிற்கும். மகாரம் என்பது 10 எண்ணிக்கையாகும். இந்த மகாரத்தில் இந்த 10 எண்ணிக்கையானது மகாரத்தில் அகாரம் என்றும் ; மகாரத்தில் உகாரம் என்றும் ; மகாரத்தில் மகாரம் என்றும் மூன்று மூன்று பிரிவுகளாக விரிவடைந்து கொண்டே போகும். அதாவது 10x10x10 = 1000 என மகாரத்தில் திருவடிகளின் ஆற்றல்கள் விரிவடைந்து போகும். இந்த மூன்று வகை ஆற்றல்களும் விரிவடைந்த பின், மெய்ப்பொருளின் உச்சிப் பகுதியான பிரணவத்தின் மேற்பகுதியில் ஒருங்கே ஒளிவிட்டு சதா பிரகாசித்துக் கொண்டே இருக்கும் இந்த ஒளி மிகுந்த உலகத்தைத்தான் சொர்க்கலோகம் என்றும் இந்திர லோகம் என்றும் சித்தர்களும் ஞானிகளும் கூறுகிறார்கள். சொர்க்கத்திற்கு அதிபதி இந்திரன் அல்லவா. அதனால்தான் பிரணவத்தின் உச்சிப்பகுதி இந்திரன் ஆண்டு கொண்டிருக்கும் சொர்க்க லோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் நின்று செய்யப்படும் சுடராழித் தவத்தால் உடலெங்கும் ஆனந்தப் பரவச நிலைகள் தோன்றி, உடலை மயிர்க்கூச்செறிய வைத்துக் கொண்டிருக்கும். இந்த மெய்யுணர்வு நிலைகளைத்தான் சொர்க்கம் என்றார்கள் ஆதித் தமிழ்ச் சித்தர்கள். உடலும் உடலும் இணைந்தால் வருவது சிற்றின்பம். இங்கே உயிரும் உயிரும் இணைந்தால் வருவது பேரின்பம். இதைத்தான் இந்திர இன்பம், அமுத இன்பம் என்று மறைபொருளாகச் சொல்கிறார், அகத்தியப் பெருமான் அவர்கள்.
5) பஞ்ச அறிவால் நின்ற பராசத்தி எங்கே?
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான். இந்த பராசத்தி என்பவள் சிவத்தின் ஞான மனைவி அல்லவா. அவள் இருக்கும் இடம் என்பதுதான் கேள்வி. ஈசானிய மூலையில் இருப்பவன் சிவம். ஆனால், பார்வதியான பராசத்தியோ தென்கிழக்கு மூலையான அக்கினி மூலையில் இருந்து கொண்டு, நமது பார்வையின் சத்தியாக இருக்கிறாள். திருவடி என்பது சிவமாக, ஒளியாக இருக்கிறது. அந்த திருவடியின் பார்வை சத்தியாக பஞ்சபூத ஆற்றலாக இருப்பவள் பார்வதியான பராசத்தி. அந்த பராசத்தியினால் நாம் இவ்வுலகைப் பார்க்கிறோம், பஞ்சபூதங்களைப் பார்க்கிறோம், ஏன் நாம் சுடராழியில் இவளைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பராசத்தி இருப்பது நமது திருவடியின் தென்கிழக்கு மூலையான அக்கினித் திசையாகும். இங்கே செய்யப்படும் பிரமஞானத் தவங்கள் 11 இருக்கின்றது. அகத்தியப் பெருமானால் எமக்கு வழங்கப்பட்ட ஞானத் தந்திரங்கள் இவை.
6) பதினாலு லோகம் தான் எங்கே?
பதினான்கு லோகம் = மேல் உலகம் ஏழு + கீழ் உலகம் ஏழு. இவ்விரண்டையும் கூட்டினால் 14 உலகங்கள் வரும். மேல் உலகம் என்பது சிரசில் அமைந்திருக்கும் நிலைப்பாடுகள். கீழ் உலகம் என்பது
பூமிக்கு மேலே உள்ள உலங்கள்
7. சத்யலோகம் – பிரம்ம தேவன் இருக்கிறார்
6. தபோலோகம் – தேவதைகள் இருக்கின்றனர்
5. ஜனோலோகம் – பித்ருக்கள் வசிக்கிறார்கள்
4. மஹர்லோகம் – இந்திரன் உள்ளிட்ட தேவர்கள்
3. சுவர்லோகம் – முனிவர்கள் வசிக்கிறார்கள்
2. புவர்லோகம் – கிரகங்கள், நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் வசிக்கிறார்கள்
1. பூலோகம் – மனிதர்கள் வசிக்கும் பிரபஞ்சம்.
பாதாளம் எனும் பூமிக்கு கீழே உள்ள 7 உலகங்கள்
1. அதல லோகம் –
2. விதல லோகம் – அரக்கர்கள் வாழும் இடம்.
3. சுதலலோகம் – அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தான, தர்மங்களால்
உயர்ந்தவரை உலகளந்த வாமனனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி
4. தலாதல லோகம் – மாயாவிகள் வாழும் உலகம்
5. மகாதல லோகம் – நல்ல செயல்கள் பல செய்து புகழ்பெற்ற அசுரர்கள்
6. பாதாள லோகம் – வாசுகி உள்ளிட்ட பாம்புகள் வாழும் உலகம்
7. ரஸாதல லோகம் – அசுர குருக்கள் வாழும் உலகம்.
ஆக மொத்தம் நாம் வாழும் உலகம் உள்பட 14 லோகங்கள் உள்ளன.
இந்த 14 உலகங்களும் நமது திருவடிகளில் அமைந்திருக்கின்றன. எப்படி என்றால், மெய்ப்பொருளின் உச்சியில் இருக்கும் பிரணவத்தில் அணு வடிவிலான ஏழு துளைகள் அதிசூக்குமமாக அமைந்திருக்கின்றன. அத்துளைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்ததுபோல் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்துளைகள்தான் மேல் உலகம் என்று மறைத்துச் சொல்லப்பட்டது.
அதேபோல பிரணவத்தின் கீழ்ப்பகுதியில் அபான வாயு இருக்கும் இடத்தில் ஒன்றின்கீழ் ஒன்றாக ஏழு துளைகள் அதி சூக்குமமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்துளைகள்தான் கீழ் இருக்கும் உலகம் அதாவது பாதாள லோகம் என்று சொல்லப்பட்டது.