ஓ………………ம் ஓ………………ம் ஓ…………………ம்
சாகா வரமும் தனித்த பேரறிவும்
மாகாதலில் சிவவல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு
நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே
சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தான்அந்தமிலாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே
சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதலாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே (அகவல் : 1255-1290)
அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி
வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !
குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !
நமது விதைக்குள் விதை தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞானப் பறவைகளுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு அமுத வாழ்வுக்கு அறமும் தவமும் என்பதைப் பற்றித்தான். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம்.
நமது குருகுலத்தின் ஆதி குருவான திருமூலரின் வாக்கே நமக்கெல்லாம் வசிஷ்டரின் வாக்காகும். திருமூலர் சொல்வது அந்த சிவமே சொன்னது போல. அவரின் திருமந்திரத்தைக் காணலாமா.
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடில் புகழோன்
விளைக்கும் தவம்அறம் மேற்துணை ஆமே (திருமந்திரம் – 258)
கர்ம வினைகளால் நிறைந்திருக்கும் இந்த வினைக்கடலில் நாம் நீந்திக் கரையேறி களைப்பெல்லாம் நீங்கிப் புத்துணர்ச்சி பெற்றிட இரண்டு வழிகள் உள்ளன. ஒருவழி – அழியாப் புகழுடைய பரமேசுவரன், நமக்கும் நம்மை சேர்ந்தோர்க்கும் காண்பிக்கும் ஒரு வழியான பிரமஞானத் தவ நெறி ; மற்றொரு வழி இல்லறம் ஆகும். இந்த இரண்டு வழிகள்தான் சிறப்பாக நம்மை வழிநடத்தி அழைத்துச் சென்று மறுமைக்கு அதாவது மறுபிறப்பில்லாத நிலைக்கு உயர்த்தும் ஞான வழிகள் என்கின்றார் திருமூலர். எவ்வளவு சத்தியம் பாருங்கள் திருமூலரின் வாக்கில். அதனால் நாம் அனைவருமே இல்லறத்தில் இருந்து அறவாழ்வை மேற்கொண்டு கொண்டே, பிரமஞானத் தவ வாழ்வையும் தைலதாரை போல நம் உயிரின் ஜீவன் முத்தீக்காக தவம் செய்து கொண்டே இருக்க வேண்டும். எதுவரை என்றால், உயிர் நிலைக்கும்வரை. அவ்வளவுதான். இந்த திருமந்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டால், உங்களின் அனைவரின் அத்தனை கர்மாக்களும் அழிந்து பிறவிப் பெரும்பயனை அடைந்தே தீர்வார் எம்மைப் போல என்பதை சத்தியத்திலும் சத்தியமாகச் சொல்லிக் கொள்கின்றோம்.
தன்னை அறிந்திட்ட மெய்ஞ்ஞானிகள் அனைவருமே தவத்தின் வழியேதான் சென்று தங்கள் வாழ்வை பூரணமாக்கிக் கொள்கிறார்கள். அது எப்படி என்றால், திருமூலர் சொல்வதைக் கேளுங்கள்.
தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே (திருமந்திரம் – 257)
தன்னை அறியும் அறிவை அடைந்த அறிவையே தெய்வமாக மதிக்கக்கூடிய மனிதர்களாகிய பிரமஞானிகள், அவர்கள் வாழ்வில் எப்போதுமே பிரமஞானத் தவத்தின் வழியேதான் சென்று கொண்டிருக்கிறார்கள். நாமும் அத்தவ வாழ்வில் பயணம் செல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். நாமெல்லாம் இந்த உடலை எப்படி நினைக்கின்றோம் என்றால், உடல்தான் பிரதானம் – முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி உடலையே முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு எமதர்மன் ‘நான்தான் உங்கள் தெய்வம்’ என்று மரணத்தருவாயில் வந்து உணர்த்தி நிற்பான். அதனால் தவவாழ்வை மேற்கொண்டு வரும்போது சிவமே நம் இறைவனாக இருப்பான் ; மாறாக தவ வாழ்வை மேற்கொள்ளாமல் உடலே பிரதானம் என்று வாழ்ந்து வந்தால் எமன்தான் இறைவனாக வந்து நம் உயிர் கவர்ந்து செல்வான். அதனால் தவம்தான் நம்மை மரணத்திலிருந்து காக்கும் கற்பக அமுது என்பதை இப்போது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா, அன்பர்களே.
அப்படி வரக்கூடிய எமன் எப்படி வருவான் என்பதை திருமூலர் சொல்வதைக் கேளுங்கள்.
தன்னை அறியாது தான்நலர் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்லதவம் செய்யும் நீரே (திருமந்திரம் – 255)
வலிமை கொண்ட எமதர்மன் நம் உயிரைக் கவர்ந்து செல்ல வரும்போது, நாம் யார்? எத்துணை சக்தி படைத்தவர்? நம் பதவி, அந்தஸ்து, கௌரவம் என்ன? என்பதை எல்லாம் அவன் பார்க்கவே மாட்டான். நாம் நல்லவரா? கெட்டவரா? என்பதைப் பற்றியெல்லாம் எமனுக்கு கவலையே இல்லை. நம்முடைய வயதும் அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை. எதைப்பற்றியும் சற்றும் யோசிக்காமல் நம் உயிரைக் கவர்ந்து சென்றுவிடுவான். அந்த எமன் நம் உயிரைக் கவர்வதற்கு வருமுன்னே நாம் அமுதக்காற்றின் ஆற்றலோடு கூடிய நல்ல பிரமஞானத் தவத்தை செய்து, தேகத்தின் அளவினைவிட உயிராற்றலின் அளவினைப் பெருக்கிக் கொண்டுவிட வேண்டும். அப்போதுதான் எமனால் நம் உடலுக்குள் இருக்கும் உயிரைக் கவர்ந்து செல்ல முடியும் ; ஆனால் நம் தேகம் உயிருக்குள் இருக்குமேயானால், எமனால் நம் உயிரைத் தாண்டி உடலைக் கவர்ந்து செல்ல இயலாது.
காரணம் நம் உயிருக்குள் இறைவனின் பேருயிர் இருக்கின்ற காரணத்தால், நம் உயிர் தாண்டி, இறைவனின் பேருயிர் தாண்டி, அதற்குள்ளே இருக்கும் நம் தூல தேகத்தை எமனால் கவரவே முடியாது. இதுதான் சிவப்பிரம இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்து உணர்ந்து வாழ்வில் அனுபவப்பூர்வமாக முழுமையாக வாழ வேண்டுமென்றால், நீங்கள் அனைவரும் பிரமஞானத் தவத்தை செய்தே ஆக வேண்டும். பிரபஞ்சத்தின் உயிர் விதியே இதுதான். இந்த உயிர் விதியை பின்பற்றி சித்தி அடைபவர்கள்தான் சித்தர்கள், பிரமஞானிகள், ரிஷிகள், மஹரிஷிகள் ஆகிய அனைவரும். நீங்கள் இப்போது என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வாழ்வின் இறுதிநிலை அமையும்.
தமிழர் வாழ்வியலின் மூன்று கோட்பாடுகளாக அமைந்தவை அறம், பொருள், இன்பம் என்பன. இவை மூன்றிலும் அறம் தலைமை உடையது.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல (புறம் – 31)
எனக் கோவூர்கிழார் அறத்தின் தலைமை கூறுவார். அறம் என்னும் சொல்லுக்கு கடமை, தருமம், கற்பு, புண்ணியம், அறநூல், அறக்கடவுள், அறச்சாலை, தருமதேவதை, யமன், ஞானம், நோன்பு, நல்வினை எனப் பொருள் உரைக்கும் அகராதி. அறம் என்பதற்குச் சுருங்கக்கூறின், “நல்லவை செய்தலும் அல்லவை கடிதலும்’’ எனலாம். தமிழர் தம் வாழ்வின் துறைதோறும் அறத்தை மையமாகக் கொண்டிருந்தனர். இல்லறம், துறவறம், காதலறம், போரறம், அரசியலறம் என அறம் என்பது எல்லாச் செயல்களிலும் நீக்கமற நிறைந்து நின்றது. வாழ்க்கையில் கடைப்பிடிக்கத்தக்க அறங்கள் பல உள்ளன. பற்பல நற்பண்புகளெல்லாம் அறத்தின் பன்முகங்களாகவே எண்ணப்பட்டிருக்கின்றன.
சங்க காலத்திலிருந்து இன்று வரையிலான தமிழிலக்கியங்கள் அறத்தின் மாட்சிமைகளை நன்கு விளக்குகின்றன. தொட்டிற் பருவத்திலிருந்தே அறம் தொடங்கி விடுகிறது. “கொடையும் தயையும் பிறவிக்குணம்” என்று ஒளவையார் பிறப்பிலிருந்தே அறப்பண்புகள் மலர்வதைக் காட்டுவார்.
பண்புமிக்க செல்வர் வீட்டுக் குழந்தை, புலவர் ஒருவருக்குத் தன் கையில் இருந்த நடைவண்டியையே கொடைப் பொருளாகக் கொடுத்ததாம். உள்ளம் சிலிர்த்த அவர், “நடை கற்குமுன் கொடை கற்றாயே’’ என்று பாடினாராம். பிறப்புத் தொடங்கி வாழ்க்கை முடியும் வரை மனித வாழ்வு அறத்தொடு இயங்குவதாக அமைய வேண்டும் என்பது தமிழிலக்கியத்தின் நுவல் பொருளாகும்.
சங்ககாலம், அவரவர் தம் கடமையை முறையாக ஆற்றுவதை அறமாக எண்ணியது. இதைப் புலவர் பொன்முடியார் (புறம் – 312) பட்டியலிட்டுள்ளார்.
மேலும், சங்ககாலம் கொடையறத்தில் பீடுற நின்ற பெருமைக்குரியது. பாரி, பேகன், ஆய், அதியன், ஓரி, காரி, நள்ளி என்னும் கடையெழுவள்ளல்கள் ஒருவரை ஒருவர் புகழில் விஞ்சுமளவு கொடை நேர்ந்தமை கூறப்படும். இதற்கு மேலும் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? அரியணை இருந்த அரசன் எல்லாம் துறந்து காட்டில் கிடந்து நலிந்த நிலையிலும் இரந்து வந்த புலவனுக்குத் தலையைக் கொடுக்க முன்வந்த குமணன் செயல் (புறம் 165) கொடையறத்தின் உச்ச நிலையாகும்.
உயிரிரக்கம் என்னும் பண்பே அறத்தின் மையக்கரு. பசித்தவர்க்கு எல்லாம் உணவு வழங்கிய அறம் சிறுகுடிப்பண்ணனில் தொடங்கி வள்ளலார் வரையில் வரலாற்றில் பொன்போலப் பொலியக் காணலாம்.
அறம் உயிர்க்குத் துணையாவது எனத் திருக்குறள் (குறள்-31) மொழியக் காண்போம். அறம் என்பது நினைவு, சொல், செயல் என்னும் மூன்றானும் செய்யப்படுவது எனினும், மனமே அதாவது நினைவே அறத்தின் மிக இன்றியமையா தளமாகும்.
மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (குறள்-34)
என இதன் தலைமைக் கூறப்பெறும். திருவள்ளுவர் அறத்திற்கு விளக்கம் கூறுகையில்,
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (குறள்-35)
என்று நான்கு வகையால் அறம் குற்றப்படாவாறு கூறினார்.
இல்வாழ்வின் முதுகெலும்பாக அமைந்தது அறம். துறவறம் செய்வார் தம் கருமம் செய்வார். இல்லறம் புரிவார் துறந்தார், துவ்வாதவர், இறந்தார் என எல்லா வகையினார்க்கும் துணையாக அமைவர். அன்பு என்பது இல்வாழ்வின் பண்பு என்றும், அறம் அதன் பயன் என்றும் கூறியமை (குறள் 45) இல்லறத்தின் இரு நாடிகளைத் தெளிவாகப் புலப்படுத்திய பாங்கைத் தெரிவிக்கும்.
இளங்கோவடிகள் அரசியல் அறம் காட்டினார். “செல்லுயிர் கொடுத்தேனும் செங்கோலை வளையாது நிமிர்த்துவது அரசியல் அறமாகும்’’ என்பதை உணர்த்தினார்.
மணிமேகலை “பசித்துயர் போக்குவதைத் தலையாய அறம்” ஆகப் (மணி.13) போற்றியது.
மணிமேகலையும் ஆபுத்திரனும் மக்கள் பசி துடைத்த சமயநெறிக் காலத்தில், திருக்கோயில் பணி செய்தலும், விருந்தோம்பலும், ஆதரவற்றாரைப் பேணலும், கருணை கூர்ந்து யாவருக்கும் வேண்டுவன ஈதலும் அறமெனப் போற்றப்பட்டன. பெரியபுராணம் காட்டும் இளையான்குடி மாறனார் வரலாறு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இடைக்காலத்தும் பிற்காலத்தும் எல்லோருக்கும் உணவு வழங்கல் பேரறமாக விளங்கியது. சமணரும், கிறிஸ்தவரும் கல்வி புகட்டுதலாகிய அறத்தில் கருத்துச் செலுத்தினர். மாணவர்க்குச் சுவடிகளைக் கொடுத்தல் சமணர் அறமாக விளங்கியது.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்’’ என்று தொடங்கிய மகாகவி பாரதியார், “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றதே பிற்காலத்தில் தலையாய அறமாகப் போற்றப்பட்டது. யாவரும் கல்வி கற்கும் நிலையே தமிழர்க்கு வேண்டுவது என்றார் பாவேந்தர். இன்றியமையாப் பேரறமாக இன்று ஏழைக்கு அறிவூட்டல் திகழ்கின்றது.
மக்களுக்குத் துயரம் என்றதும் களமிறங்கி கடமை ஆற்றுவார் ஒரு திரைப்படத்தில் மாவட்ட ஆட்சியராக வரும் கதாநாயகி. எனவே, கடமையாற்றுவதுதான் அறம்.
இது தேர்தல் நேரம். ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டும் என்பது உரிமை மட்டுமல்ல, கடமையும் ஆகும். யார் மக்களுக்குக் கடமையாற்றுவார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்; அதுதான் தேர்தல் அறம். அறம் தவறின் நாம் மனிதர்கள் அல்லர்; மரம்.
அறம் என்ற சொல்லானது அறுத்தல் என்ற வினைச்சொல்லினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சொல்லாகும் (அறு+அம்=அறம்).
அறு + அம் = அறம்
எவற்றை அறுக்க (விட்டொழிக்க) வேண்டும். இதோ வள்ளுவரே கூறுகின்றார்.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.” (குறள் : 35)
அதாவது அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் அறுப்பதே அறம் எனப்படும் என்கின்றார் வள்ளுவர்.
இன்னொரு இடத்தில் வள்ளுவன் “மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும்” என்கின்றார். இதனையே பின்வரும் குறள் காட்டுகின்றது.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.” – (குறள்-34)
மணிமேகலையும் அறத்திற்கு விளக்கம் கொடுக்கின்றார்.
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்”.
இந்த ‘அறம்’ என்ற சொல்லிற்கு ஓரளவிற்கு சரிநிகரான சொல்லாக கிரேக்கச் சொல்லான ‘Ethics’ காணப்படுகின்றது. ‘தர்மம்’ என்ற வடசொல்லிற்கு நிகராக அறத்தை கருதுவது தவறு, ஏனெனில் தர்மம் ஆட்களிற்கேற்ப வேறுபடும். அதாவது ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிற்காகப் பொய் சொல்லுவது தொழில் தர்மம் என்பார்கள். ஆனால், அது அறமாகாது. அறம் எப்பொழுதும் பொது நன்மை கருதியே காணப்படும். எமக்கு எது தேவையோ அதுவே தர்மமாகும் எனக் கூறுவதுபோல அறத்தை வளைக்க முடியாது. அதனால்தான் மனு சுமிர்தியினை (Manusmriti ) மனுதர்மம், மனுநீதி என்றெல்லாம் அழைப்பார்கள்.
ஔவைத்தாய் அறம் செய்க என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். அறம் செய்ய விரும்பு என்று சொன்னால் இது சரியா?
நாம் செய்யும் அறத்தை முழு விருப்பத்தோடு செய்யவேண்டும். அதுதான் அறமாகும். விருப்பம் இல்லாமல் செய்யும் செயல்களெல்லாம் அறமாகாது.
அறம் செய்க என்பது செயல் சார்ந்தது.
அறம் செய விரும்பு என்பது மனம் சார்ந்தது.
மேலும் இங்கு அறம் என்றால் பொருள் மட்டுமல்ல. சொல்லாலும், செயலாலும், மனத்தாலும் உதவுவதும் அறம் தான். எனவே இங்கு அறம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆகக்கூடியது இல்லை. ஏழைகளும் அவர்களால் ஆன சொல், செயல், மனத்தால் ஆன அறத்தைச்செய்யலாம். செய்வதை விரும்பிச்செய்ய வேண்டும். அப்போதுதான் மீண்டும் மீண்டும் செய்ய மனம் விரும்பும். அறம் தொடரும்.
இதன் காரணமாகவே அறம் செய விரும்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருக்குறள் கூறும் அறக்கருத்துக்கள்
திருக்குறள் எல்லாக் காலத்திலும் மனித வாழ்வுக்கு ஏற்றவாறு அறக்கருத்துக்களை இரண்டு வரிகளில் பதிவு செய்திருக்கும் உயரிய நூலாகும்.
வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறம், துறவறம் எனப் பகுத்து இல்லறத்துக்கு முதன்மை கொடுத்து இருவகையாருக்கும் தனித்தனியாகவும் பொதுவாகவும் அறங்கள் கூறியுள்ளர்.
இன்முகத்துடன் விருந்தினரை வரவேற்றல், பணிவான பேச்சு, நன்றியறிதல், தன்னடக்கம், பொறாமையின்மை, பயனில பேசாமை, தீயன செய்ய மனம் கூசுதல், உலக நடைமுறையறிந்து செயல்படல், தக்கார்க்கு தல், அதன்வழித் தகுதியான புகழ் பெறல், இவை இல்லறத்தாரின் பண்புகளாக அமைகின்றன.
“நன்னயம் செய்து விடல்” “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்ற குறட்பாக்கள் சமுதாயத்தில் மக்கள் கூடி வாழத் தேவையான அறத்தைக் கூறுகின்றன.
சங்க இலக்கியங்களில் அறம்
சங்க இலக்கியங்களில் ‘அறம்’ என்ற கருத்தாக்கம் பரவலாக இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கியங்கள் அனைத்தும் அகத்தையும், புறத்தையும் பாடினாலும் அவற்றோடு அறத்தை இணைத்தே பாடியுள்ளனர்.
“அறநெறி இதுவென தெளிதல் வேண்டும்” என்பதனை ஐங்குறுநூற்றில் அறநெறி இதுவெனத் தெளிந்த என தெளிவுபடுத்தப்படுகின்றது.
அகநானூறில் “அறங்கடைப்படா வாழ்க்கை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நற்றிணையில் “அறனுமன்றே ஆக்கமும் தேயும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அறத்தோடு வாழ வேண்டும் என்பதனை புலவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அறத்தின் நன்மை
இவ்வுலகில் ஒருவனுக்கு அறம் செய்வதை காட்டிலும் மிகுந்த செல்வம் இல்லை. அறமானது அறிவு வரும்போது காக்கும் அழியாத துணையாகும். அறம் மனிதனின் ஆயுள் காலத்தை கூட்டும்.
அறத்தினைப் பின்டுபற்றினால் மதிப்பும் செல்வமும் வளரும். நல் வழியில் செல்வதற்கு துணை நிற்கின்றது. அறத்தினால் வாழ்வுக்கு நன்மை விளையும். மனிதனுடைய மலர்ச்சிக்கு பயனை தரும் ஒழுக்கம் மிகவும் பயனுடையதாகும்.
மனிதன் தன் வாழ்வில் அறத்தினைக் கடைப்பிடிப்பது இன்றியமையாத தாகும். ஒழுக்கமுள்ள வாழ்வினை வாழ்ந்து வாழ்வில் வளம்பெற அறப்பண்புகளை நம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நம் முன்னோர்கள் கூறிய அறக்கருத்துக்களை அறநூல்களிலிருந்து கற்று வாழ்வில் நலம்பெறுவோமாக!
அறம் வெல்லும் மறம் வீழும்’ என்ற பொதுப் புத்தி நிலவுகிற தமிழர் வரலாற்றில் உண்மையிலே அறம் இருக்கிறதா? யோசிக்க வேண்டியுள்ளது. சங்க இலக்கியப் படைப்புகள் முதலாகத் தமிழிலக்கியப் பரப்பில் பெரிதும் வலியுறுத்தப்படும் சொல் அறம். பூமியில் மனித இருப்பு, காலங்காலமாக எதிர் கொள்கிற சமூகரீதியிலான பிரச்சினைகளையும், தனிமனிதச் சிக்கல்களையும் கடந்து சென்றிட அறத்தை முன்னிறுத்துவது வழக்கமாக உள்ளது. அறம் என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற நுண்ணரசியல் வலுவானது. அறத்தின் இன்னொரு எதிரிணையான விதியானது, பிறப்பு, பால் அடிப்படையில் ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக விதிக்கப்பட்டுள்ளது என்ற வைதிக இந்து மதத்தின் கருத்து, இன்றளவும் தமிழர் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது. விதியின் விளையாட்டு, விதியை வெல்ல முடியுமா? விதியின் கைப்பாவை போன்ற சொல்லாடல்கள் கவனத்திற் குரியன. அறம் என்ற சொல்லானது ஆட்சியதி காரத்தில் இருந்து ஆள்கிறவர்களின் நலன்களைப் பேணுவதற்காகப் பெரிய அளவில் பயன்பட்டுள்ளது.
பொதுவாக மதங்கள் வலியுறுத்துகிற ஐம்புலன்களை அடக்கியடுக்குதல் என்ற நடத்தையானது அறமெனப் போற்றப்பட்டதில், உடைமைச் சமூகம் வலுவடைந்த சூழலில், அடக்கியடுக்கப்பட்ட அடிமை உடல் களை உருவாக்குதல் அடங்கியுள்ளது. அறம் என்பது விளிம்புநிலையினருக்குச் சார்பானது என்ற கருத்தியல் ஒருவகையில் நம்பிக்கை சார்ந்தது. தீமையை எதிர்த்திடும் ஆற்றல் அறத்தின் வயப்பட்டது என்ற பொதுப்புத்தி காரணமாகத்தான் ஒடுக்கப்பட்டோர் வரலாறு முழுக்க அடங்கி இருக்கின்றனர். இன்றைய இளைய தலைமுறையினருக்கு அறம் பற்றிய பிரக்ஞையோ புரிதலோ இருந்திட வாய்ப்பு இல்லை. நுகர்பொருள் பண்பாட்டில் எல்லாம் சந்தைக்கானதாக மாற்றப்படுகிற நிலையில், மதிப்பீடுகளின் வீழ்ச்சியும் தொடங்கியுள்ளது. என்றாலும் படைப்பு சார்ந்து இயங்குகிற சில படைப்பாளர்கள் அறத்தின் மாண்பைப் போற்றுகின்றனர்; எழுத்தின் வழியாகக் கண்டறிந்த உண்மைகளைச் சித்திரிக்கும்போது, அறச்சீற்றமடைகின்றனர்.
அடுத்தபடியாக தவம் என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம்.
தவம் (Tapas), ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளும் தவம் எனப்படும். உடலையும், மனதையும் உருக்கி செய்யப்படும் நோன்பு, தியானம், விரதங்கள், பாதயாத்திரை, தீர்த்த யாத்திரை, பூஜை, ஜெபம், ஓதுதல் முதலியன தவத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
தவ முறைகள் :
கிருஷ்ணர் உடல், பேச்சு மற்றும் மனதால் செய்யப்படும் தவ முறைகளை விளக்குகிறார்.
உடலால் செய்யப்படும் தவம் (காயக தவம்) : நேரம் தவறாது செயல்படுவது, அளித்த வாக்கை நிறைவேற்றுவது, பூசைகள் செய்வது, தானம் அளிப்பது போன்றவைகள் காயக தவமாகும்.
பேச்சால் செய்யப்படும் தவம் (வாசிக தவம்) : தெரிந்த உண்மையை மட்டும் பேசுதல், இனிமையாகவும், மென்மையாகவும் பேசுதல், பிறர் மனம் புண்படாது பேசுதல், கேட்பவருக்கு நன்மை பயக்கூடியது மட்டும் பேசுதலே வாசிக தவமாகும். வாசிகத் தவத்தின் பயனால் உண்டாகும் பேச்சுக் கட்டுப்பாடு, ஆன்மீக முன்னேற்றத்தை மேம்படுத்தும்.
மனதின் தவம் (மானச தவம்) : மனதில் தீய எண்ணங்களை விட்டு விட்டு, தூய எண்ணங்களுடன், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுதலே மானச தவமாகும்.
உபநிடதங்களில் தவம் :
வேதாந்தமாகிய உபநிடதங்கள், சீவமாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத அறிவை அடைவதே தவத்தின் நோக்கம் எனக் கூறுகிறது.
சமயச் சடங்குகளின் மூலம் இறைவனுக்கு படையல்களைப் படைப்பதை விட, ஆத்மா எனும் தன்னை அறிதலின் மூலமே மனநிறைவு எனும் மோட்சத்தை, தவ வாழ்வினால் அடைகிறார்கள் என சாந்தோக்கிய உபநிடதம் கூறுகிறது.
நான் யார் ? (ஆத்மா) என்பதை அறிய, தவம், தியானம், தியாகம், நம்பிக்கை மற்றும் வேதாந்த விசாரணை மூலம் அறிந்து, தானும் பிரம்மமும் ஒன்றே என்ற அத்வைத அறிவை அடைவதே தவம் ஆகும் என சுவேதாஸ்வதர உபநிடதம் குறிப்பிடுகிறது.
முண்டக உபநிடதத்தின் 3.1.5-6-ஆம் பகுதிகள் தவத்தினால் ஆத்ம அறிவை பெறும் ஒரு ஆன்மீக சாதகனுக்கு மோட்சம் எனும் மனநிறைவு கிடைக்கிறது எனக் கூறுகிறது.
ஆதிசங்கரர் தனது நூற்களில், சமயச் சடங்குகளை விட, தவத்திற்கே முன்னுரிமை வழங்குகிறார். சாதாரண தவ வாழ்வை விட, ஆத்ம ஞானத்தின் மூலம் பிரம்மத்தின் இயற்கையை அறிவதே சிறந்த அறிவுபூர்வமான தவம் எனக் கூறுகிறார்.
நவீன காலத்தில்
நவீன காலத்தில் தவ வாழ்க்கை மேற்கொள்வதற்காக, கங்கை ஆறு பாயும் இடங் களான ரிஷிகேஷ், ஹரித்துவார், உத்தரகாசி, வாரணாசி போன்ற புனிதமான பகுதிகளில், இந்துசமய பிரம்மச்சாரிகளுக்கும், இளம் துறவிகளுக்கும், வேதாந்தக் கல்வியுடன், தவம், தியானப் பயிற்சிகளையும் வழங்குகிறது. ஆனாலும், அங்கெல்லாம் பரிபூரணமான பிரமஞானத் தவங்களை ஞான நூல்களின் ஆதாரமாகவும் ஒளிதேகம் பெற்ற பிரமஞானிகளின் வாழ்க்கையையும் எடுத்துச் சொல்ல மறந்துவிட்டது போலவே இன்றைய வாழ்க்கைச் சூழல் அமைந்திருக்கிறது.
இந்நிலைமையை மாற்ற வேண்டும் என்று கருதியே ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அருளாசியினாலும் அனுக்கிரகத்தாலும் ஆசிர்வாதத்தாலும் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகரில் பிரமஞானப் பொற்சபை குருகுலத்தை ஆரம்பித்து, அங்கு வரும் மாணவர்களுக்கு முறைப்படியான குருகுலப் பரம்பரையின் வழிவந்த அடியேன் பிரமஞானத் தீக்ஷையினை அளித்து, அவர்களின் மூன்றாவது திருவடியை திறப்பித்து, அவர்கள் காணவும் செய்து பிரமஞானத் தவத்தைக் கொடுத்து வருகின்றோம்.
கலியுக பிரம்ம ஞானமே பிரம்ம ஞானக் கிரியா
இவ்வுலகத்தில் மறைக்கப்பட்ட பிரம்ம சத்தியத்தை முதலில் எம் குருதேவரின் ஆசிர்வாத்த்தோடும் அனுமதியோடும் உங்களுக்கு இங்கே பிரம்மஞானக் குருகுலத்தில் கற்றுக் கொடுக்கிறோம்.
இக்கலையைக் கற்றோர் முடிவாய் பிரம்ம ஞானத்தைக் கற்றிருப்பார்கள். பிரம்ம ஞானமாய் உருமாறியிருப்பார்கள். அதுதான் இக்கலையின் அதிசயமே. உங்கள் உயிரை நீங்களே நேருக்கு நேராக கண்டு இன்புறுவீர்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்குக் கிடைக்கும் ஞான அனுபவங்கள் இவற்றை பறைசாற்றி வந்து கொண்டிருக்கும். இதற்கு எம் மாணவர்களே உங்களுக்கு சாட்சிப் பத்திரமாக இருக்கிறார்கள்.
பிறவியை அறுப்போரே இப்பிரம்ம ஞானத்தைத் தேடி வந்து சேர்வார்கள். சென்ற பிறவியில் விட்டகுறை தொட்ட குறையாக இக்கலை இப்பிறவியில் அவர்களை வந்தடையும். இக்கலையைப் பெற்றோர் பெரும்புண்ணியமும் தவமும் செய்திருக்க வேண்டும். அல்லார்க்கு இக்கலை கண்ணில்கூட தென்படுவது இல்லை. சும்மா வருமோ ஞானம்? சும்மா கிடைக்குமோ தவம்?
பிரமஞானக் கிரியாவைப் போல உங்கள் பிறப்பின் கர்மப் பதிவுகளையும் வினைப் பதிவுகளையும் பிராரப்த (முற்பிறவிகளில்) மற்றும் சஞ்சிதக் (இப்பிறவியில்) கர்மங்களையும் சுட்டறுக்கும் ஞான யோகக் கல்வி இவ்வுலகிலேயே இல்லை. ஒவ்வொரு யோகமும், ஞானமும் பல்வேறு செய்திகளையும் அனுபவங்களையும் சொல்லிச் செல்கின்றனவே அன்றி, அவை உங்கள் உயிரான பிரம்மத்திற்குள் சென்று தைத்து நிற்பதேயில்லை. ஆனால், பிரம்ம ஞானக் கிரியா உங்கள் உயிரின் ஆதிமூலத்தையே அசைத்து, அசைத்து, ஊதி, ஊதி உயிரின் ஒளியைப் பெரிதாக்கி, பெரிதாக்கி மண்ணுக்கும் விண்ணுக்குமாய் பிரம்ம ஒளியைப் பிரகாசிக்க வைத்திடும்.
இக்கலை உங்கள் உயிரைத் தூண்டி சுயம்பிரகாசமாய் சுடர்விட்டுப் பிரகாசிக்க வைத்திடும். உயிரைத் தூண்டும்போதே உங்கள் ஒலியாற்றல்களும் தூண்டப்படுவதை தசவித நாதங்களாய் உங்கள் காதுகளினாலேயே கேட்பீர்கள். உங்கள் உயிரின் ஒளியை ஒளிப் பிரகாசத்தை உங்கள் ஊனக்கண் கொண்டே காண்பீர்கள். இங்கே மறைப்பு ஏதும் இல்லை. சத்தியத்தை நேருக்கு நேராக சந்திப்பீர்கள். சந்தித்தப்பின் அதில் கரைந்தே போய்விடுவீர்கள்.
அனைவருக்கும் தனித்தனி சத்தியம் என்றெல்லாம் இவ்வுலகில் இறைவனால் படைக்கப்படவில்லை. அனைவருக்கும் ஒரே ஒரு சத்தியம்தான். இறைவனுக்கும் அதே நியதிதான். அதுதான் திருவடி மெய்ப்பொருள். உங்கள் வாழ்வின் மெய்மையை, உண்மையை, சத்தியத்தைச் சொல்லும் ஒரே வித்தை, ஒரே கலை இந்த பிரம்மஞானக் கிரியா மட்டுமே.
இந்த பிரம்ம ஞானக் கிரியா உங்களை உங்கள் உயிரோடு சேர்த்து வைக்கும். உங்களை உங்கள் ஆன்மாவிற்கு அடையாளம் காட்டுவிக்கும். உங்களை இறை ஆன்மாவோடு கலப்பிக்க வைத்திடும். உங்களை உங்கள் உயிரின் ஒளியோடு பிரகாசிக்க வைத்திடும். உங்களை அங்கே நடனமாடிக் கொண்டிருக்கும் தில்லைக் கூத்தனோடு நடனமாட வைத்திடும். நடனத்திற்குத் தாளமிட வைக்கும் ஒலிச் சந்தங்களோடு உங்களை ஒலிப்பிக்க வைத்திடும். அங்கே தெரியும் அக்கினிக் குஞ்சோடு கலந்து தண்வெப்பமாய் சுடர்ந்து கொண்டிருப்பீர்கள்.
இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் யார் என்ற கேள்வி சூரியனைக் கண்ட பனிநீரைப் போல கரைந்து போய், அங்கே அவ்விடத்திலேயே ஞானமாய் முளைவிட ஆரம்பிப்பீர்கள். இந்நிகழ்வுகள் தொடர்கதையாய் அரங்கேறி வரும்போது, உங்கள் உயிருக்குள் குருவால் விதைக்கப்பட்ட ஞான விதைகள் ஒவ்வொரு ஞான இலைகளாக துளிர்விட்டு வளர்ந்து பூப்பூத்து காய் காய்த்து ஞாக்கனிகளாக திரண்டு நிற்கும்போது, அங்கே நீங்கள் பிரம்ம ஞானச் சுடராய் இறைவனின் ஆன்ம சிம்மாசனத்தில் வீற்றிருப்பீர்கள்.
பிரம்ம ஞானக் கிரியா உங்கள் மனதை வென்றெடுக்கும் கலைகளோடு பேசும். உங்கள் உயிரோடு பேசும். உங்கள் ஆன்மாவோடு பேசும். உங்கள் உயிரின் ஒளியோடு கூடும். ஒலிக்கலைகளோடு இழைந்திடும். சுவாசிக்கும் காற்றோடு கரைந்து போகும். உயர்காந்தப் பிராணனோடு ஒன்றிணைந்திடும். சுழுமுனை நாடியைத் தூண்டிடும். சித்ரிணி நாடியோடு சிங்காரிக்கும். பிரம்ம நாடியோடு பின்னிப் பிணைந்திடும்.
இந்த பிரம்ம நாடியைப் பிடித்திடும்வரை உங்கள் பிரம்ம ஞானத் திருவடி தவம் தொடர்ந்து கொண்டிருக்கும். என்றைக்கு பிரம்ம நாடியை அடைவீர்களோ, அன்றைக்கு பிரம்ம ஞானம் சித்தித்திடும். பிரம்ம நாடியைத் தூண்டவும் அந்நாடி எங்கே இருக்கிறதென்று அடையாளம் காணவுமே பலகோடி ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும். சுழிமுனையையே தொட்டுப் பார்க்காத மனிதன் எங்கே பிரம்ம நாடியைத் தீண்டிவிட முடியும்?
ஆனால், இங்கே நம் சற்குருவின் பரிபூரண ஆசீர்வாத்த்தாலும் கருணையினாலும் உங்களுக்கு உங்கள் பிரம்மத்தைத் தொட்டுப் பார்த்தும் முகர்ந்தும் ஆடிப் பாடி மகிழ்ந்து உறவு கொண்டாடிட பிரம்ம ஞானக் கிரியா ஒளிவுமறைவின்றி கற்றுத் தரப்படுகிறது.
பிரம்ம ஞானக் கிரியாக்களில் என்ன நடக்கிறது?
பிரம்ம ஞானக் கிரியாவில் உங்கள் மெய்ப்பொருளின் ஊசிமுனை துவாரத்தின் வழியே ஒளியாற்றல்கள் உள்ளே சென்று உள்ளிருக்கும் வெட்டவெளியில் நின்றுகொண்டு, விண்ணிலுள்ள ஆறான நெருப்பாற்றை அங்கு வந்து சேர்ப்பித்துவிடும். இதுதான் விண்ணாறு, நெருப்பாறு எனப்படுவது.
இந்த ஊசிமுனை துவார உள்பாதையே மயிர்ப்பாலம். அது வழியே நெருப்பாறு பாய்ந்து வரும். அக்னி கலையிலிருந்து ஒளி வெள்ளம் வரும். அந்த ஒளிதான் தண்ணொளி (தண்+ஒளி=தண்ணொளி). தண் என்றால் குளிர்ச்சி, குளிர்ச்சியான என்று பொருள். விண்ணில் பாய்ந்து வரும் சுடர் நெருப்பு. அது ஒரு சுகமான அக்னியாகும். குளிர்ச்சி பொருந்திய தீ. அதுவே நம் சுயம்ஜோதி ஆகும். சுயம்ஜோதி என்றாலே அது சுகமான, குளிர்ச்சியான தீ, ஜோதி என்று பொருள்.
அப்படி நம் திருவடியின்கண் உள்ள மெய்ப்பொருளின் வழியாக ஒளியாற்றல் ஊடுருவி நம் ஆத்ம ஸ்தானத்தை அடையும் போது அங்கே பிரம்ம ஒளியானது மகிழ்ந்து, மகிழ்ந்து, ஊடாடி, ஊடாடி நம் திருநடனத்தை அதிகப்படுத்தும். அப்போது பிரம்ம ஒளியின் அசைவினால் ஏற்படும் உராய்தலில் நாதங்கள் (ஒலிகள்) நமக்குள் கேட்க ஆரம்பிக்கும். அந்நாதங்கள் பத்துவிதமாக உள்ளதாக நம் சித்தர்கள் வகைப்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அவை இதோ –
“மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே”
ஒளியைக் கண்டு, ஒலியைக் கேட்டு தனக்குள் பேரின்பம் கொள்வோரே வாலையாம் புவனேஸ்வரியின் தரிசனத்தைக் காண்பார்கள். இது எம் குருநாதர் மொழிந்தது. இது சத்தியத்திலும் சத்தியம். குருவால் எமக்கு அருளப்பட்ட அருள்ஞான அனுபவம் இது. நித்தமும் இப்பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். குரு எமக்கு வழங்கிய அருட்கொடை, வரம் என்றுகூட சொல்லலாம்.
பிரம்ம ஞானத் தவம் செய்வோர் நாதம் கேட்கும்போது, அவ்விடத்திலேயே அதாவது கேட்கும் இடத்திலேயே நிலைத்து நங்கூரம்போல நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் விடமுண்ட கண்டனை, நடராஜ மூர்த்தியை, அருட்பெருஞ் சோதியைக் கண்ணாரக் காண முடியும்.
நாதத்தின் முடிவில்தான் இந்த ஒளி தரிசனம் தானே இயல்பாய் நடக்கும். இது தானே பூத்து அருளப்படும் நிலை. இதை தவத்தால் பெற முடியாது. தவத்தின் மெய்விழிப்பைப் பொறுத்து இறையால் அருளப்படும் கொடை இது. இவையெல்லாம் பிரம்ம ஞானக் கிரியாவின் அற்புதங்களில் ஒன்றுதான். அநேக அற்புதங்களும் ஆச்சரியங்களும் மெய் விதிர்க்கும் இரகசிய சூட்சுமங்களும் அநேகம் அநேகம் உண்டு.
ஒவ்வொன்றாக இந்த பிரம்ம ஞானக் கிரியாவில் அனுபவித்து அனுபவித்து மகிழ்ந்து போவீர்கள். தமிழ்ச் சொற்கள்கூட இந்த பரவச பேரின்ப மகிழ்நிலையினை இப்படித்தான் இருக்கிறது என்று வரையறுத்துவிட இயலாது. அதுதான் பிரம்மஞானக் கிரியாவின் உச்ச இரகசியம்.
அறிவுள்ளோர் அறிந்து கொள்ளட்டும், புத்தியுள்ளோர் பிழைத்துக் கொள்ளட்டும், ஞானம் வேண்டுவோர் நாடிப் பெற்றுக் கொள்ளட்டும் என்றே பிரம்ம ஞானக் கிரியா இக்கலியுகத்தில் வெளிப்படுத்த இக்குருகுலத்திற்கு மட்டும் ஆதித் தமிழ்ச் சித்தர்களால் அனுமதிக்கப்பட்டிருந்தது.
பிரமஞானக் கிரியாவிற்கு ஆதாரமான சித்தர்களின் பாடல்களில் சிலவற்றை இங்கே சொல்கிறோம். கேளுங்கள் அன்பர்களே.
பட்டினத்தார் பாடல்
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசை யன்றோ குருநாதன் மொழிந்ததுவே”
“கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடல்அருகே நிற்கும் கரும்பூ”
திருமூலர் பாடல்கள்
“விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்என்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்நின்று அறுக்கஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டி களிம்பு அறுத்தானே”
“ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னை
கண்ணாரப் பார்த்துக் கலந்து அங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே”
“அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்
கண்டசிவனும் என்கண் அன்றி இல்லையே”
“எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உண்நாடிக்கு உள்ளே ஒளியுற நோக்கினால்
கண்நாடி போலக் கலந்து நின்றானே”
“மூக்குநுனியில் கண்மூடாமல் தான் நோக்கி
காக்கு மனது கலங்காமல் நெற்றியை
ஆக்கும் மனதை அசையாமல் தான் ஊன்றித்
தீர்க்கமாய் நெற்றிக் கண்ணும் திறந்திடே”
தாயுமானவர் பாடல்கள்
“காணும் கண்ணில் கலந்த கண்ணே”
“கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணுகின்றவர் நான்தொழும் தெய்வமே”
ஔவை ஞானக்குறள்
“புருவத்திடை இருந்து புண்ணியனைக் கண்டால்
உருவற்று நிற்கும் உடம்பு”
“நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளிகாணில்
முற்றும் அழியாது உடம்பு”
வள்ளலார் பாடல்கள்
“நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை”
கூர்மானந்த சித்தர் பாடல்
“கடினமென்று தள்ளாதே மரண யோகம்
கண்மூக்கு மத்தியிலே கருதிப்பாரு
துடிமிகுந்த சுழிமுனையின் ஊடுதாக்கு
சூரியனும் சந்திரனும் ஒன்றாய்ப் போகும்
குடியிருப்பு சாக்கரத்தின் கோட்டையாச்சு
கோடி கற்ப காலயுகம் வாழலாச்சு”
மனிதனுக்கு முதலில் உயிர் இரக்கம் மிகமிகத் தேவை. உயிர் இரக்கமே வடிவாகி ஒருவன் தொண்டு செய்யும்போது எல்லா உயிர்களும் இன்பமுற திருநடனம் செய்யும் இறைவனின் அருள் சுத்த நடனம் செய்யும் இறைவனின் அருள்-ஜோதி ஸ்தம்பத்தின் வழியே இறங்கி மேல்நிலைக் குண்டலினியைத் தூண்ட, அந்த ஆற்றல் ஓங்கார பீடித்தின் வழியே இறங்கி, உச்சியின் மேலே உள்ள ஆயிரத்து எட்டு இதழ் கமலமாகிய சகஸ்ராரத்தை மலரச் செய்து, அதற்கு கீழே உள்ள படிக மேடை எனப்படும் நெற்றியை அடைந்து ஒளி அனுபவத்தை உண்டாக்கி, அதன்பின் மரணத்தை வெல்லுதல் இறந்தவர்களை எழுப்புதல் முதலான சித்திகளை விளைவிக்கிறது.
பிரம்ம ஞானத் தவம் செய்யும்போது மாணவர்களுக்கு பல நிறங்கள் தோன்றுவதாகக் கூறுகிறார்கள். அது உண்மைதான். அவரவர்களின் தவத்தின் தன்மைக்கு ஏற்ப நிறங்களில் வேறுபாடுகள் உண்டாகின்றன.
பச்சைநிற ஒளி தோன்றினால் அவர்களிடம் தெய்வீக ஞானத்தின் செயலாற்றல் உண்டாகிவிட்டது என்று பொருள்.
நீலநிற ஒளி தோன்றினால் அவர்களிடம் ஆன்மீக உணர்வு உண்டாகியிருக்கும்.
பொன்னிற ஒளி தோன்றினால் அவர்களிடம் ஆன்மீக ஆற்றல் அதிகரித்திருக்கும்.
வெண்மைநிற ஒளி தோன்றிவிட்டால், அவர்களிடம் தெய்வீக ஞானத்தின் ஆற்றல் உருப்பெற்றுவிட்டது என்று பொருள் கொள்ள வேண்டும்.
உடல் தூல நிலையில் இருக்கும்வரை சாவைத் தள்ளிப் போடவே முடியாது. ஆனால், ஒளி நிலைக்கு உடலைத் தயார்படுத்திவிட்டால், ஒளியை எவற்றாலும் அழித்துவிட முடியாது. ஏனென்றால், பிரபஞ்சத்தின் வடிவமே ஒளிதோனே. ஒளியினை ஒளிகொண்டுதான் அறிந்து கொள்ள முடியும்.
ஒளி என்றால் வெளிச்சம் என்று ஒரு பொருளுண்டு. வெளிச்சத்தை எப்படி அழிப்பது? சூரியன் இருக்கும்வரை இவ்வுலகில் வெளிச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதனால்தான் ஒளி தேகத்தை அடைவதுதான் சன்மார்க்கம் என்றார் வள்ளலார் அவர்கள். “தினகரன் போன்ற தேகம் வேண்டும்” என்பார் வள்ளலார். தினகரன் என்றால் சூரியன்.
தேகம் ஒளியாக மாற வேண்டுமென்றால், அது சாதாரண விசயமா என்ன? உயிரானது ஒளியாகத்தான் மனிதனுக்குள் அமைந்திருக்கிறது. ஆனால், உடல் தூலமாகத்தான் இருக்கிறது. அதாவது ஒரு பொருளைப் போன்று அமைந்திருக்கிறது.
இந்த உடலுக்குள் இருக்கும் ஒளியானது உடலின் ஒவ்வொரு செல்களையும் ஊடுருவி ஒளிச்செல்களாக மாறினால்தான், ஒளியுடல் அமைய வாய்ப்பு. என்றால், உடலிலிருந்து உயிரை, உயிரின் ஒளியை தனியே பிரித்தெடுக்க மனிதன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். உயிரைப் பிரித்தெடுத்து விட்டால், இவ்வுடலுக்கு மரணம் நேர்ந்துவிடாதா? மரணம் ஏற்படாவண்ணம் பிரிக்க வேண்டும்.
பாலிலிருந்து வெண்ணையைப் பிரித்தெடுப்பது போல. வெண்ணையைப் பிரித்தப்பின், வெண்ணெய் பாலோடு ஒட்டாமல் மிதந்துகொண்டு இருக்கும். உடலிலிருந்து உயிரைப் பிரித்தெடுத்தப் பின், உயிர் தனியாக இருக்கும். ஆனால், உடலில் ஒட்டாமல். இப்படி பிரித்தெடுக்கப்பட்ட உயிராகிய வெண்ணையை தவக்கனலால் உருக்க வேண்டும். வெண்ணெய் உருகினால் அது உடலுக்குள்ளேதான் எங்கேயாவது ஓரிடத்தில் வழிந்து ஓடும். அந்த இடம்தான் நம் தொண்டைப்பகுதி. வெண்ணெய் உருகும் இடம்தான் உயிர் இருக்கும் இடமான பிணியல் சுரப்பி. பிணியல்தான் உயிர்வாசம் செய்யும் இடம்.
“அற்றார் பிறவி அவர்இரு கண்களை
வைத்தார் புருவத்து இடையே நோக்கி
ஒத்தே இருக்க உலகெல்லாம் தெரியும்
எத்தாலும் சாவில்லை இறைய வாமே” (திருமந்திரம்-553)
“விழித்து மிகுபார்த்திடவே பொறிதான்வீசும்
முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும்
சுழுத்தியிலே போகாமல் ஒருமனதாய் நின்றால்
சத்தமென்ற நாதவொலி காதில் கேழ்க்கும் (அகத்தியர் ஞானம்-2.17)
“ஓங்காரக் கம்பத்தின் உச்சிமேலே
உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
ஆங்காரக் கோபத்தை அடக்கி விட்டே
ஆனந்த வெள்ளத்தைத் தாங்கிக் கொண்டே
போங்காலஞ் சாங்காலம் ரண்டு மறவே
புருவமைய சுழிமுனைதனிலே
தூங்காமற் தூங்கியே சுகம் பெறவே” (பாம்பாட்டிச் சித்தர்)
இவ்வாறு நம் இரு திருவடிகளை விழித்துப் பார்ப்பதன்மூலம் தூங்காமல் தூங்கும் கலையினைக் கற்றுக் கொள்ளலாம். சாவில்லாமல் வாழலாம். பிறப்பு என்பதை இல்லாமல் செய்து விடலாம்.
நம் உயிரின் திருவடி இந்த பிணியல் சுரப்பியில் இருக்கிறது. ஆனால், பிணியல் முழு விழிப்பு நிலையில் இல்லை. பிணியலை இயங்கவிடாமல் எண்ணிக்கையற்ற கர்மவினைப் பதிவுகள் மலையளவு சாம்பலைப் போல இந்த பிணியலின்மேல் எண்ணில் அடங்காத உயரத்தில் குவிந்து பிணியலை அழுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த சாம்பலின் அடி ஆழத்தில்தான் இந்த பிணியல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. மேலே படர்ந்து போர்த்தியுள்ள சாம்பல்களின் அழுத்தத்தால் நம் புறவிழிகளுக்கு இந்த பிணியலில் இருக்கும் நம் உயிரொளியானது புலப்படாமலேயே இருக்கிறது.
நீறுபூத்த நெருப்பின் மீதுள்ள சாம்பலை நாம் எப்படி வாயால் ஊதியோ அல்லது வேறு உபாயத்தால் விசிறி நீக்கும் போது உள்ளே இருக்கும் கனல் நெருப்பு திக்கென்று பற்றிக் கொண்டு எரிய ஆரம்பிக்கும்.
அதைப் போல இந்த பிணியலின் மேல் படர்ந்துள்ள சாம்பலை ஊதி, ஊதி, விசிறி, விசிறிவிடும் தந்திரத்தை யார் கற்றுக் கொண்டிருக்கின்றாரோ, அவரே சித்தன் ஆவார். “ஊதுகிற ஊத்தறிந்தவனே சித்தன்” என்பது சித்தர் மொழி. பிணியலில் இருக்கும் சாம்பலை ஊதியே அகற்றிவிடும் கலையைக் கற்றவனே சித்தன். எப்படி ஊதுவது? எதைக்கொண்டு ஊதுவது?
நம் உடலுக்குள் ஒரு அணுவடிவில்தான் நம் உயிரானது இருக்கிறது. உடலுக்குள் உயிர் அமைந்துள்ளது. உயிர் ஒளிநிலையில்தான் உள்ளது. ஒளி அணையாமல் இருக்க காற்று அவசியம். நம் உயிரொளி அணையாமல் நித்தமும் எரிந்து கொண்டிருக்க பிராணக் காற்று முக்கியம். ஆக உயிரொளிக்குப் பிராணன் அவசியமாகிறது.
இந்தப் பிராணனை மண்டை ஓட்டின் நடுப்புள்ளியில் அமைந்துள்ள உயிரொளிக்கு எப்படி அனுப்பி வைப்பது? கொஞ்சம் கொஞ்சமாக கொல்லன் பட்டறையில் உள்ள ஊது உலையைப் போல பிராணனை உள்ளிழுத்து தொண்டையில் அண்ணாக்குக்கு மேலே உள்ள பிரம்மரந்திரத்தில் ஊதி, ஊதி அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். இதை கிரியா யோகமும் வாசியோகமும் நன்றாக செய்து கொண்டிருக்கிறது. கிரியா யோகத்திலும் வாசி யோகத்திலும் பிராணனே பிரதானம். ஆனால், பிரம்ம ஞானக் கிரியாவில் ஒளியே பிரதானம்.
ஒளியை, ஒளிக்கொண்டுதான் தூண்ட முடியும். அறிவியலும் இதைத்தான் சொல்கிறது.
நம் இரு திருவடிகளில் இருக்கும் ஒளிக்கதிர்களைக் கொண்டு, பிணியலில் இருக்கும் உயிரொளியைத் தூண்டிவிட்டு எரிய வைக்க வேண்டும். அவ்வளவுதான், நீங்கள் செய்ய வேண்டியது. ஒளிக்கதிர்களை பிணியலுக்கு அனுப்பும்போதே அமுதப் பிராணக் காற்றையும் சேர்த்து அனுப்பி வைத்தால், பிணியல் நன்றாக ஒளிவிட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்துவிடும்.
உயிரொளி அணு வடிவத்திலிருந்து சிறிதுசிறிதாக பெரிதாகிக் கொண்டே வரும். பிரம்ம ஞானக் கிரியா தவம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். பிராணக் கிரியா யோகமும் முதிர்ச்சி அடைந்துகொண்டே வரவேண்டும். பிராணக் கிரியாவும் பிரம்ம ஞானக் கிரியாவும் காற்றையும் ஒளியையும்போல, தேகத்தில் இணைபிரியாத அசுவினி குமாரர்கள் இவர்களே ஆவார்கள்.
பிராணக் கிரியா யோகம் செய்யும்போது, நம் உடலானது அமுதக் காற்றை உற்பத்தி செய்து கொண்டே வரும். பிரம்ம ஞானக் கிரியா செய்து வரும்போது, நம் ஒளியின் ஆற்றல்வீச்சுகள் ஒவ்வொரு நாளும் பெரிதாகிக் கொண்டே வரும்.
அமுதக்காற்றால் உயிரொளியின் வடிவம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் நம் உடலின் எண்சாண் அளவினைவிட பெரிதாகிப் போய்க் கொண்டு போய், உயிரொளி ஆற்றலானது உடலையே மூடிவிடும்.
பின் உடலுக்கு வெளியே உயிரொளி ஆற்றல் பரவ ஆரம்பிக்கும். பல அடி தூரம்வரை உயிரொளி ஆற்றல் உடலை விட்டுப் படர்ந்து விரிந்து கொண்டிருக்கும். அப்போது நம் உடலானது உயிருக்குள் இருப்பதைக் காணலாம். இந்நிலை அடைவதற்கு முன் நம் உயிரானது உடலுக்குள்தான் இருந்தது. இந்நிலை அடைந்ததும் நம் உடலானது நம் உயிருக்குள் அடங்கி இருப்பதைக் காணலாம்.
இப்படி நம் உயிராற்றலை வளர்த்தெடுப்பதுதான் பிரமஞானத் தவமே தவிர, உடலை வளர்ப்பதல்ல.
முதலில் கிரியா யோகத்தில் உள்ளிழுக்கப்படும் காற்றானது, நேரடியாக பிணியல் இருக்கும் இடம் சென்று தாக்க வேண்டும். கிரியா பிராணாயாமம் செய்யும்போது நம் கவனம் முழுக்க கூடஸ்தாவின் மையப்புள்ளியில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கிரியா பாடங்களில் தெளிவாக கற்றுக் கொடுக்கின்றோம்.
கவனம் வைப்பது என்பது எண்ணத்தை கூடஸ்தாவிலேயே நிலை நிறுத்தி வைத்திருப்பது ஆகும். இப்போது நம் எண்ணத்தையும் பிணியலுக்குக் கொண்டு போய் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்படி உள்ளிழுக்கும் பிராணக் காற்றாலும் எண்ணத்தாலும் பிணியலைத் தாக்கித் தாக்கி அதிர்வடைய வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வறு தாக்கிக் கொண்டே வரும்போது, அவ்விடத்தைச் சுற்றியுள்ள கபம் எனும் கோழைச் சளியானது முதலில் முழுமையாக வெளியேறத் துவங்கும்.
கபம் அகன்றால் எமன் வரமாட்டான். ஒவ்வொருவருக்கும் கபமே எமனாகும். தொண்டையில் கபம் கட்டாமல் மனிதனுக்கு உயிர் வெளியேறுவதே இல்லை.
கபம் நீங்கிவிட்டால், உறக்கம் போய்விடும். பின் பிணியலைச் சுற்றியுள்ள அறியாமைச் சாம்பல் வினைப்பயன்கள் எல்லாம் ஒவ்வொன்றாக எரிந்து சாம்பலாகிக் கொண்டே வரும். சாம்பல்கள் இல்லாது போய்விடும்போது திருவடிகளைக் கொண்டு பார்த்திட, பார்த்திட அதாவது உற்று உற்றுப் பார்க்கும்போது நம் உயிரொளியானது அதிகப் பிரகாசம் பெற்று தெள்ளத் தெளிவாய் தெரிந்திடும்.
பிரமஞானக் கிரியா தவத்தில் தொடர்ந்து உயிரொளியை பார்த்துக் கொண்டு வரும்போது, உயிரொளியின் ஆற்றல் பெருகிக் கொண்டே போய், உடலையும் தாண்டி விரிந்து படர்ந்து கொண்டிருக்கும். அப்போது நம் உடலானது உயிரொளிக்குள் ஒடுங்கியிருக்கும்.
இப்போது உயிருக்குள் உடல் இருப்பதால், உடலுக்கு அழிவென்பதே இல்லாமல் போய்விடும். உயிரானது உடலை எந்நேரமும் காத்துக் கொண்டே இருந்திடும். உடலுக்கு உயிரே காவல். உயிருக்கு இறைவனே காவல்.
உயிரொளி ஆற்றலை வளர்த்தெடுக்கும் பிரம்ம ஞானக் கிரியாவின் ஒவ்வொரு படிநிலைகளை இனி காணலாம்.
பிரமஞானக் கிரியா தவமானது, பஞ்சபூதங்களைப் போன்றும் காயத்ரி தேவியைப் போன்றும் ஐந்து முகங்களைக் கொண்டிருக்கிறது.
சித்தர்கள் கூறும் அழியா அண்டத்தில் உள்ள பஞ்சபூதச் சக்திகளை அழியும் தேகமான பிண்டத்தில் சேர்த்துக் கொள்ளும் மிக மிக இரகசியமான பிரம்ம சித்த வித்தை இது. அண்டத்தில் உள்ள பஞ்சபூதச் சக்திகளை தனித்தனியே எடுத்து சேர்ப்பித்திட அவன் சித்தனாகவும் ஒளிதேகியாகவும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
ஆனால், அண்டமாக பிரபஞ்சத்தில் பஞ்சபூதச் சக்திகள் ஓரிடத்தில் எப்போதும் நிலைத்துப் பொங்கி பிரவகித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒட்டுமொத்தக் கூட்டமான அண்டத்தின் பஞ்சபூதச் சக்திகளை மனிதன் அவனின் தேகத்தில் உள்ள பஞ்பூதக் கூட்டங்கள் ஐந்தும் ஒன்றாக இருக்கக்கூடிய திருவடிகளின் கண்ணே உள்ளே உறிஞ்சவும் சுவாசிக்கவும் உண்ணவும் கற்றுக் கொண்டாயானால், அழியா அண்ட சக்திகள் மனித தேகத்தில் நிறைந்து நிறைந்து மனிதன் அழியா நிலையை, மரணமிலா பெருவாழ்வை அடைந்தே தீருவான் என்பது பிரம்ம சத்தியம். இந்த அற்புதக் கலையைத்தான் சித்தர்களின் அருளாசியாலும் எம் சற்குருவின் அருட்கொடையாலும் உலக மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
நாம் அனைவரும் இன்றிலிருந்து இக்கணத்திலிருந்தே நம் இல்லற வாழ்வை அறம் சார்ந்த தவ வாழ்வாகவும், தவத்தோடு ஒழுகும் அறத்தையும் பின்பற்றி இறைவனோடு ஒளியாகக் கலந்திட வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொண்டு இப்பேச்சுரையை நிறைவு செய்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து
உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!