உயிரோடு திருக்கல்யாணம்

விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்

கண்நின்று காட்டிக் களிம்புஅறுத் தானே(தி.ம.113)

 

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை

குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு

பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய்து ஆங்கே

அறியொன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே     (தி.ம.1182)

 

திருக்கல்யாணம் என்பது திரு+கல்யாணம் எனப் பிரிந்து நிற்கும். திரு என்றால் இறை என்று பொருள். கல்யாணம் என்றால் ஆண் சத்தியும், பெண் சத்தியும் உடல், உயிர், ஆன்மாவோடு இரண்டறக் கலக்கும் ஒரு ஆனந்த நிகழ்வு. ஆக திருக்கல்யாணம் என்பது நமக்குள் இருக்கும் இறைவனோடு நமது மனம் உடல், உயிர் மூன்றையும் ஒன்று கலக்க வைக்கும் வைபவம் ஆகும்.  ஆனால், மனிதர்களின் திருமணத்தில் மனமும் உடலும் வேலை செய்யும்.  ஆனால், உயிர் உணர்வுகள் காமத்திலிருந்து தள்ளியே நிற்கும்.  யாரோ ஒரு சிலருக்கு மட்டும் இந்த மூன்றும் ஒருமித்து பணி செய்யும்.  ஆனால், மனிதன் இறக்கும்போது இந்த மனம், உடல் இரண்டையும் விட்டுவிட்டு உயிரை மட்டும் தனியே போகவிட்டு விடுகிறான். காரணம் அவன் உயிரோழ வாழாமையே ஆகும்.

கணவனை விட்டு பிரிந்து வாழ்வோரை வாழாவெட்டி என்றும் ; கணவனை இழந்து நிற்போர்களை விதவை, அமங்கலி என்றும் கூறும் வழக்கம் நம் சமூகத்தில் நிலவி வருவது கண்கூடு.

கண்+அவன் = கணவன் என்பதுதான் கணவனுக்கான விளக்கம். நமது கணவன் கண்ணே ஆகும். இந்த கண்ணைத்தான் அடி என்றும் திருவடி என்றும் கமல மலர் என்றும், பாத மலர் என்றும் பலவாறாக பிரமஞானிகளால் அழைக்கப்படுகிறது.  மனிதன் அவன் வாழ்நாள் முழுவதும் உயிரோடுதான் இருக்கிறான்.  உயிர் செயல்படாத நேரம் என்பது அவனுக்கு இல்லை.  அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உயிரானது அதன் வேலையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

நாம் தாய் வயிற்றில் கருவாகவும், பிண்டமாகவும் வளர்ந்து வரும்போது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இறைவனுடைய சுவாசம் நமது சுவாசம் ஆக உயிர் கூட்டிற்குள் விதைக்கப்படுகிறது.  இந்த உயிர் நமது தாயோ, தந்தையோ கொடுத்தது அல்ல.  அது இறைவன் கொடுத்திட்ட ஞானக்கொடையாகும்.

சரி விசயத்திற்கு வருவோம். நமது உயிர் நமது தேகத்தில் எங்கே இருக்கிறது என்றால், அது நமது பீணியல் சுரப்பி இருக்கும் இடத்தில் சிதாகாயத்தில் நமது உயிரானது ஒளியாகவும், ஒலியாகவும் அசைதலோடு ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது. அதன் நிறம் வெண்ணிறமும், நீல நிறமும் சேர்ந்த நிறத்தில் பொன்னிறம் சேர்ந்தார் எப்படி இருக்குமோ அந்நிறத்தில் இருக்கும்.  நமது உயிர்க் கூட்டிற்குள் நுட்பமாக அணுவடிவில் பிரகாசம் பொருந்திய அற்புதமான வெண்மை நிறத்தில் அனைத்துத் திசைகளிலும் ஒளிக்கலைகளை அள்ளி வீசிக் கொண்டு இறைவனின் உயிரானது அசைந்து கொண்டு நடனமாடிக் கொண்டே இருக்கும்.

இந்த நமது உயிரொளியும், இறையொளியும் ஒரே கூட்டிற்குள் இருந்தாலும் (ஆன்மாவின் கூடு) அவ்விரு ஒளிகளின் ஒளிக்கலைகள் ஒன்றோடு ஒன்று சேராமல் பிரிந்தேதான் காணப்படுகிறது.  காரணம் நம்மையும், இறைவனையும் சேர்த்து வைக்கும் மாயாஜாலம் மற்றும் அமானுஷ்யமான ஒரு பிரபஞ்ச சத்தி அங்கே இல்லை.  அதாவது இவ்விரு ஒளிக்கலைகளையும் இணைக்கக் கூடிய பாலமான ஒரு பொருள் அவ்விடத்தில் இருப்பது இல்லை.  அதனால்தான் நம் உயிரையும் இறை உயிரையும் ஒன்று சேர்க்க முடிவதே இல்லை.  இந்த ஒன்று சேர்க்கும் தந்திரம் – மாயாஜாலம்  மனிதனுக்கு தெரியாத காரணத்தில்தான் அவனால் இறைவனை அடைய முடியாமல் போய்விடுகிறது.  இதன் முடிவு மனிதனின் மரணம்.

மரணம் மரணிக்காவிட்டால் ஞானம் பிறக்காது.  ஞானம் பிறந்துவிட்டால் மரணத்திற்கு சாவு நிச்சயம்.  ஆக நமது உயிரை, நமது சிரசிற்குள் இருக்கும் அந்த உயிரை இறைவனோடு சேர வைக்க வேண்டும் என்றால், அங்கே ஒரு மெய்யுணர்வு நிகழ்ந்தே ஆக வேண்டும்.  அந்த மெய்யுணர்வின் பெயர் புணர்ச்சி. சேர்வதும், கலப்பதும் புணர்ச்சிகளின் முன்னோட்டம்தான். அதுவே புணர்ச்சியை குறிப்பிடாது.

புணர்ச்சி என்பது இறைவனோடு அவனின் ஒளிக்கலைகளோடு நமது உயிரொளியை சிதாகாயத்தில் உள்ள கண்மணிகளின் வாயிலாக இணைத்து விடுவதாகும்.  இதற்கு பஞ்சபூதங்களின் துணையும் பஞ்சேந்திரியங்களின் ஆற்றலும், அமுதக்காற்றின் அவசியமும் பிரமநாடியின் மாயாஜால சத்தியும், குருவின் ஆட்கொள்ளுதலோடு ஒரு சாதகனுக்குக் கிடைத்தால் மட்டுமே இந்த இறைவனோடு புணர்தல் நிகழும்.

இந்த திருக்கல்யாணம் ஆனது திருவடிகளின் துணை கொண்டு நிகழ்த்தப்படும் ஞானத் தந்திரம் ஆகும்.  ஒரு சாதகன் சற்குருவிடம் பிரமஞானத் தவத்தை உபதேசமாக பெற்ற பின்பு இந்த இறைக்கலப்பு அச்சாதகனுக்குள் நித்தமும் நடைபெற்று கொண்டே வரும்.  இது ஒரு நித்திய ஞானச் சாதனை ஆகும்.  திருவடிகளைக் கொண்டுதான் இறைவனை பிடிக்க முடியும்.  அதனால்தான் சிவத்தை எப்படியாவது பார்த்திட வேண்டும் ; பிடித்திட வேண்டும் என்று எண்ணி திருமாலும், பிரமனும் சிவத்தின் அடி, முடி தேடிச் சென்றும் அவர்களால் சிவத்தை காணவே இயலவில்லை.

  1. திருவடிகளில் முதலில் பார்வைச் சத்திகளை ஒன்று சேர்க்க கற்றிருக்க வேண்டும்.
  2. அதற்கு வலது திருவடி வலது கண் என்றும் ; அகாரம் என்றும் ; சூரியன் என்றும் ; சிவன் என்றும் ; சூரியாக்கினி என்றும் தெரிந்திருக்க வேண்டும்.
  3. அதேபோல இடது திருவடி இடது கண் என்றும் ; சந்திரன் என்றும் ; உகாரம் என்றும் ; சத்தி என்றும் ; சோமாக்கினி என்றும் தெரிந்திருக்க வேண்டும்.
  4. மூன்றாவது திருவடி மகாரம் என்றும் ; சதாசிவம் என்றும் ; அக்கினிக் கலை என்றும் ; நமது உயிரைக் காக்கும் சுதர்சன சக்கரம் என்றும் ; சஞ்சீவி மருந்து என்றும் ; சிரஞ்சீவி சத்தி என்றும் தெரிந்திருக்க வேண்டும்.
  5. ஒரு ஞான சற்குருவிடம் பிரமஞானோபதேசம் பெற்ற பின்பு, சற்குரு சாதகனின் கண்புருவப் பூட்டை அதாவது பூட்டப்பட்ட ஞானக் குகையை அவரின் அருட்பார்வையால் திறப்பித்து அந்த பிரணவ ஞானக் குகையின் சாவியை அவனின் உயிருக்குள் விதைத்து கையில் கொடுத்து விடுவார்.
  6. அந்த பிரமஞானச் சாவியை பெற்ற சாதகன் தினமும் பிரணவக் குகையை திறந்து, திறந்து ஞானச் செல்வங்களை அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
  7. நமது உயிரை காண வேண்டியது என்றால், அதற்கு ஒரே ஒரு மெய்வழிதான் இருக்கிறது. அதுதான் சிவனின் அசைதலோடு கூடிய பிரம ஒளிக்கலைகள் அந்த ஒளிக்கலைகளை பெற வேண்டும் என்றால், சாதகன் விழிப்பு நிலையில் இருக்கவேண்டியது மிக மிக அவசியம்.
  8. இந்த விழிப்பு நிலை என்பது பிரமஞானத் தவம் முடியும் வரை நீடித்து இருக்க வேண்டும். சாதகனின் இமைகள் இமைக்கா நொடிகளாக இருக்க வேண்டும்.
  9. பிரமஞானத் தவத்தில் எப்பொழுது எல்லாம் சாதகன் பார்வையை மேல்நோக்கி வைத்து கொண்டிருக்கின்றானோ அப்பொழுது எல்லாம் அமுதம் இருக்கக்கூடிய சந்திரக் கலசம் ஆனது உருக ஆரம்பிக்கும். பார்வையை கீழ் இறங்கும்போதும், கண் சிமிட்டும்போதும் அமுதக் கலசம் ஆனது உறைய ஆரம்பிக்கும். அமுதம் உருகினால்தான் ஞானம். அமுதம் உறைந்தால் அது அஞ்ஞானம்.  ஆக கண்கள் இமைக்காமல் இருந்தால் மட்டுமே அமுதக்கலசத்தைச் சாதகனால் தொட முடியும்.
  10. அதற்கு நமக்குள் இருக்கும் தெய்வச் சத்தியான உயிர்ச் சத்தி எங்கே இருக்கிறது என்று தெரிந்திருக்க வேண்டும். அதற்கான திருமந்திரப் பாடல் 1780ஐப் பார்க்கலாம். வாருங்கள்.

பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்

நிச்சலும் என்னை நினையென்ற வப்பொருள்

உச்சிக்குங் கீழே உண்ணாக்கு மேலது

வைச்ச பதமிது வாய்திற வாதே          (தி.ம.1780)

  1. இவ்வாறு சாதகன் உயிரை ஒளியாக வீசக்கூடிய நிகழ்வுக்கு தொடர்ந்து ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், சாதகனின் திருவடிகளின் மையத்தில் இருக்கக்கூடிய பரவிந்து கலைகளையும், பரநாதக் கலைகளையும் பிரணவ நாதத்தோடு அமுதக்காற்றோடு சேர்த்து ஒன்றிணைக்க வேண்டும்.
  2. பரவிந்துவும் பரநாதமும் தான் உயிரொளியின் இரு சத்திகளாகும். இதைத்தான் வேதங்களில் இச்சா சத்தி என்றும் ; கிரியா சத்தி என்றும் அழைத்தார்கள். மேலும், இந்த இரு சத்திகளையும்தான் இறைவனுக்கு இருக்கக் கூடிய இரு மனைவியர்களாக கதைகளில் வடிவமைத்தார்கள். பரவிந்துவானது வலது திருவடியிலும், பரநாதமானது இடது திருவடியிலும் இருக்கக்கூடிய பொற்சபையிலும் சிற்சபையிலும் ஒளியாக அசைந்து கொண்டு இருக்கும் ஞானச் சத்திகளாகும்.
  3. இந்த பொற்சபையையும் சிற்சபையையும் திறந்து கொண்டு உள்ளே நுழையாவிட்டால் நம் உயிர் இருக்கும் இடத்திற்கு செல்லவே முடியாது.
  4. திருவடிகளில் இருக்கும் சிவக்கலைகள் மூன்று, சத்திக் கலைகள் மூன்று. அதாவது சிவக்கலைகள் மூன்று துளி, சத்திக் கலைகள் மூன்று துளி இந்த ஆறு ஒளித் துளிகளையும் சாதகன் பிரமஞானத் தவத்தைச் செய்யும்போது கண்டிப்பாக பெற்றே ஆகவேண்டும். இந்த ஒளித்துளிகள் தவத்தால் அன்றி வேறு எவ்வாறாலும் பெறவே முடியாது. ஒருவேளை குருவின் பரிபூரண ஆசிர்வாதமும் இறைவனின் கருணையும் சாதகனின் மேல் வைக்கப்படும்போது சாதகனின் எலும்புகளுக்குள்ளே இருந்து ஒளிக்கலைகள் வெளியே கிளம்புவதால் அமுதம் உருகி வருவதற்கு வாய்ப்புண்டு.
  5. இந்த ஆறு ஒளித்துளிகளும் அமுதக்காற்று பூமியை வந்தடைந்த முதல் நாழிகையில் (முதல் 24 நிமிடங்களுக்குள்) பரிபூரணமாக முழு ஆற்றலோடும் அமுத சத்தியோடும் இந்த பிரபஞ்சத்தை ஆளுமைப்படுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரத்தில் செய்யப்படுகின்ற பிரமஞானத் தவத்தில் இந்த ஒளித்துளிகள் சாதகனின் பிராணநீர் இருக்கும் கண்மணிப் பாவையை தொட்டுத் தொட்டு ஆராதித்துக் கொண்டே இருக்கும். ஒரு மெய்யறிவுள்ள பரிபூரண இறை தாகம் கொண்ட சாதகன் இந்த நாழிகையின் நேரத்தை விட்டுவிடாமல் ஓர் இருப்பிடத்தில் (ஆசனத்தில்) ஆடாமல், அசையாமல் விழிமூடாமல் தனக்கு முன்னே இருக்கும் அந்த தீப ஒளியை, உயிரொளியை, சிவ ஒளியை உற்று, உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பான். இதைத்தான் ஔவைத் தாயார் நெற்றிக்கு நேர நிறைந்த ஒளிகாணில் முற்றும் அழியாது உடம்பு என்றும், திருமூலர் அவர்கள் நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்று உற்றுப் பார்க்க உணர்வுறு மந்திரம் என்றும், மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில், காலனும் இல்லை கதவம் திறந்திடும் என்றும் பாடியிருக்கின்றார்கள்.
  6. இந்த சிவத்துளிகள் மூன்று துளிகள் வலது திருவடியின் மெய்ப்பொருளில் விளையக்கூடியது. மற்ற மூன்று சத்தித் துளிகள் இடது திருவடியின் மெய்ப்பொருளில் விளையக்கூடியது. இந்த சிவத்துளிகளும் சத்தித் துளிகளும் ஒளிகளாகத்தான் இருக்கும். பிரமஞானத் தவம் செய்யும்போது பரவிந்துவோடு பரநாதமும் ஒளிகளாகவே ஒன்றுசேர்ந்திடும்.  இதை சாதகன் அவனின் புறக்கண்களால் நன்றாகக் காணமுடியும்.
  7. சிவத்துளிகள் அமுதக்காற்றால் தானாகவே வெளிவர துடித்துக் கொண்டு இருக்கும். அதற்கு நாம் இமைக்காது அவ்வேளையில் இருக்க வேண்டும்.  இந்த சிவத்துளிகள் சரியாக சொல்ல வேண்டுமென்றால், முதல் நாழிகையின் (முதல் 24 நிமிடங்களில்) முதல் பாதியிலும் (முதல் 12 நிமிடங்களிலும்) சத்தித் துளிகள் அடுத்தப் பாதியிலும் (இரண்டாம் 12 நிமிடங்களிலும்) வெளியே வர துடித்துக் கொண்டு இருக்கும்.  இந்த இடத்தில்தான் குருவின் சந்நிதானம் அந்த சாதகனுக்கு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கும். குருவின் அருளாசியை பெறாமல் சிவனும், சத்தியும் வெளியே வருவதில்லை.  குருவின் தவ ஆற்றல்தான் சாதகனுக்குள் உயிர் மலர்வதை கூட்டுவிக்கும்.  குருவின் அந்த ஞான ஆற்றல்தான் அந்த சிவசத்தி ஒளித் துளிகளை இழுத்துப் பிடித்துக் கொண்டு பிரணவக் குகைக்குள் கொண்டு வந்து சேர்க்கும்.
  8. இந்த அமுதக்காற்று வரும் முதல் நாழிகையில் (முதல் 24 நிமிடங்களில்) வரக்கூடிய சிவ-சத்தி ஒளித்துளிகள் தான் அமுதக்காற்றை உயிர் இருக்கும் சிதாகாயத்திற்கு அழைத்துச் செல்லும். அமுதக்காற்று வரும் நேரத்தில் சாதகனுக்குள் உருவாகி வெளிப்படும் அந்த அருட்கலைகள்தான் சாதகனின் உயிரை ஒரு மலராக விரிந்து மணம் வீசும்படி செய்து கொண்டிருக்கும்.
  9. இப்படி மலர்ந்து மணம் வீசும் உயிராற்றல்தான் கல்யாணத்திற்குத் தயாராகும் மணப்பெண்ணாகும். உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பெண்ணாகிய சத்தியின் அம்சங்களேதான். இறைவன் ஒருவன்தான் புருஷன். இப்படி அமுதக் காற்றாலும் பிரணவ ஒளியாலும் பரவிந்து, பரநாதத்தாலும், சிவசத்தியின் ஒளித் துளிகளாலும் உயிர் மலரானது மலர்ந்து ஒளிக்கலைகளை வீசும்போது, அங்கே சந்தனமும் ஜவ்வாதும் கலந்த ஒரு பரிமள சுகந்த வாசனை உயிர்க்கூட்டில் இருந்து நீர் ஊற்றைப் போல பொங்கிக் கொண்டு வர ஆரம்பிக்கும். இவ்வாறு எப்போது உயிரொளியானது மலர்ந்து சுகந்த மணமாக வீசுகின்றதோ, அக்கணம்தான், அத்தருணத்தில்தான் உயிரொளிக்கு அருகில் இருக்கக் கூடிய இறை ஒளியானது லிங்க மேனியாகவும் திரிசூல வடிவாகவும், பொன்னிற மேனியாகவும் அருட்கலைகளை வீசிக்கொண்டு உயிரொளியோடு இணைந்து ஒன்றோடு ஒன்று கலப்பித்து புணர ஆரம்பிக்கும்.
  10. அந்த மகாதேவ கணத்தில் சிவமானது சதாசிவமா, சச்சிதானந்த மூர்த்தியாக சிவக்கலைகளை தன் மனைவியான உமாதேவியின் ரூபமான உயிருக்கு அள்ளி வழங்க ஆரம்பிக்கும். அக்கணத்தில் சாதகனின் ஐம்புலன்களும் அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவைகளும் பஞ்சேந்திரியச் சத்திகளையும் பிராண, அபானன்களும் ஆகிய அனைத்து தேவ சத்திகளும் ஒன்றுதிரண்டு மெய்ப்பொருளான கண்மணிப் பாவையின் மையப்புள்ளியில் திரண்டுகொண்டு, ஊற்றெழும் கண்ணீரை உண்டாக்கி சாதகனின் தேகத்தை நனைய வைத்து புளகாங்கிதம் என்று சொல்லக்கூடிய மகாபரவச ஆனந்த உணர்வுகளை ஒவ்வொரு மயிர்க்கால்களிலும், ஒவ்வொரு உடல் செல்களிலும், அலை அலையாக உருவாக்கிக் கொண்டே வரும்.
  11. அப்பொழுது சாதகன் எல்லையில்லாத பரவச உணர்வுகளை தேகம் முழுக்க அனுபவித்துக் கொண்டிருப்பான். கண்கள் சுருங்கிப் போய் ஆனந்த மேலீட்டினால் கண் இமைகளை மூடவோ திறக்கவோ முடியாமல் பரவசங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பன். அப்போது உயிர்க்கூட்டில் இருக்கும் இறை ஒளியோடு நமது உயிரொளி புணர்ந்து, புணர்ந்து சிவ ஒளிக்கலைகளாகவே உருமாறி நிற்கும்.  இந்நிலைதான் உயிரோடு திருக்கல்யாணம் செய்யும் வைபோகம் ஆகும். இதைப்பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்தில் புணர்ச்சிப் பத்து என்ற பதிகத்தில் மிகவும் ஆழ்ந்து பிரமஞானத்தோடும் ஞான அனுபவத்தோடும் நமக்காகப் பாடி அருளிச் சென்றுள்ளார்.