ஓ…………ம்       ஓ……………ம்     ஓ……………ம்

சாகா வரமும் தனித்த பேரறிவும்

மாகாதலில் சிவவல்லப சத்தியும்

செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்

மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்

பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி

ஆரண முடியுடன் ஆகம முடியும்

கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு

நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே

சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே

மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே

ஆனந்த அமுதே அருளொளி அமுதே

தான்அந்தமிலாத் தத்துவ அமுதே

நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே

சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே

பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே

கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே

அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்

உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே

பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே

தனிமுதலாய சிதம்பர அமுதே

உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே

அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே  (அகவல் : 1255-1290)

அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி

வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !

குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !

          நமது விதைக்குள் விதை தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞானப் பறவைகளுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

          இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு வள்ளற்பெருமான் திருவருட்பா ஆறாம் திருமுறையில் அருளிய திருவருட்பேறு என்ற பதிகத்தின் ஞானத்தைத்தான் உரையாட இருக்கின்றோம். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம்.

         கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
கொடையாளா சிவகாமக் கொடிக்கு இசைந்தே கொழுநா
ஆள் அறிந்துஇங்கு எனைஆண்ட அரசே என்அமுதே
அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ் சோதியனே
தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம் சத்தியமே
சந்தேகம் இல்லை அந்தத் தனித்த திருவரவின்
நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுக நீ எனது
நனவிடை ஆயினும்அன்றிக் கனவிடையாயினும் ஆமே.   (3787)

உரை:  எது ஒளிநெறியோ அந்த அருள் நெறிக்குரிய கொள்கைகளை அறிந்துகொண்டு அதன்வழி வாழக்கூடிய பெரிய தவத்தை உடைய மெய்யடியார்களின் எண்ணங்களை, அதன் குறிப்புகளை உணர்ந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை கொடுத்துதவி அருளக்கூடிய எம் கொடை வள்ளலே; சிவகாமக் கொடியாகிய உமாதேவியின் மனத்திற்கு இசைந்த கண்ணான கணவனே; என்னிடம் இருக்கும் உண்மைத்தன்மைகளை அறிந்து இவ்வுலகில் என்னை ஆண்டு கொண்ட அருளரசே; எனக்கு அமுதாய் இனிப்பாய் இருப்பவனே ; அம்பலத்தில் ஆனந்த நடமாடுகின்ற அரிதான பெரிய சோதியை உருவமாகக் கொண்டவனே ; உன் திருவடிகளை நான் செய்யும் தவத்தால் கண்டு கொண்டேன் என்பது உண்மையான சத்தியம் என்பதால், உன்னுடைய வரவானது சத்தியமானதுதான் ; இதில் சிறிதும் எனக்குச் சந்தேகமில்லை இல்லையென்ற அளவுக்கு தெளிந்து கொண்டேன்; அந்த ஒப்பற்ற உனது வரவுக்குரிய நல்ல நாளை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்; என்னுடைய நனவில் இல்லாவிட்டாலும்கூட கனவிலாவது வந்து சொல்லி அருளிடு எம் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே.

யாரொருவர் பிரமஞானத் தவத்தைச் செய்து இறைவனைக் கண்ணாரக் கண்டு தரிசித்து ஆனந்தப் பரவசம் கொண்டு வாழ்வார்களோ, அவர்களுக்கு இறைவன் அவர்கள் கேட்காமலேயே அவர்களின் புறத் தேவைகள், அகத்தேவைகள் அனைத்தையும் நன்றாக அறிந்து தானாகவே முன்வந்து உதவிகளைச் செய்து ஞான வள்ளலாக இருப்பவன்தான் இறைவன்.  அதைத்தான் இப்பாடலில் வள்ளற்பெருமான் குறிப்பிட்டு பாடுகிறார்.

தவத்தால் அல்லாது இறைவனின் திருவடிகளைக் கண்டுணர முடியாது என்பதை இப்பாடலில் அழுத்தமாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார் வள்ளற்பெருமான்.

தில்லையில் கோயில் கொண்டு அருளும் உமாதேவியைத்தான் சிவகாமி என்றும் சிவகாமக் கொடி என்றும் சிவகாமவல்லி என்றும் குறிப்பிடுவது நமது முன்னோர்களின் வழக்குச் சொற்களாகும்.  எது தில்லை? எது சிவகாமக் கொடி? என்பதுதான் இங்கு கேள்வியே.  சிற்றம்பலம் இருக்கும் இடமே தில்லை என்ற மறைக்காடாகும்.  சிற்றம்பலம் என்பது சிற்சபை இருக்கின்ற இடம்.  சிற்சபை எங்கே இருக்கிறது என்றால், அது நமது ஆன்மக் கூட்டிற்குள் இருந்து கொண்டு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.  அந்த ஒளியின் அசைவாக இருப்பவள்தான் சிவகாமி.  அவள் நாதசக்தி.  நாதம் எப்பொழுதுமே அசைந்து கொண்டே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆனந்த சக்தியாகும்.  ஒளி என்பது சிவம் என்றால், அவ்வொளியின் அசைவுகள் அனைத்துமே சக்தி என்ற உமாதேவி மட்டுமே.  அதனால்தான் சிவம் வேறு ; சக்தி வேறில்லை என்றார்கள் நம் பிரமஞானிகளும் சித்தர்களும்.  அதனால் தில்லை என்ற சிற்சபையில் உயிர் ஒளியின் அசைவுகளாக இருப்பவள்தான் சிவகாமக் கொடியாகிய சிவகாமவல்லி.

யாரெல்லாம் ஞானத்தை அடைவதற்குத் தகுதியுடைய ஆன்மாக்களாக இருப்பார்களோ, அவர்களைத் தேடிப்போய் ஆட்கொள்வது ஈசனின் திருவிளையாடல்.  இதைத்தான் “ஆள் அறிந்திங்கு எனை ஆண்ட அரசே” என்று இசைக்கின்றார். “ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா” (பாசுரம்) என்று ஞானசம்பந்தர் பாடியிருப்பதை இங்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம் அன்பர்களே.

அம்பலம் என்றால் என்னவென்று தெரியுமா ஆன்மாக்களே?

அம்பலம் என்ற சொல்லை முதலில் பதம் பிரித்துப் பாருங்கள்.  தமிழ் ஞானம் தானே தேடி வரும்.

அம்பலம் = அம்+பல்+அம்.

அ என்பது முதல் எழுத்து.  இது உயிரைக் குறிக்கிறது.  அ காரம் – வலது திருவடி.

ம் என்பது மெய்யெழுத்து வரிசையில் 10ஆம் எழுத்து.  ம காரம் என்ற மகாரத் திருவடியே ‘ம்’ ஆகும்.  மூன்றாம் திருவடியான நெற்றிக் கண்ணைக் குறிக்கிறது.

ப என்பது ப்+அ என பிரிந்து நிற்கும். ப் என்பது உயிர்மெய் எழுத்தில் 9ஆம் எழுத்து.  அ என்பது உயிரெழுத்தில் முதல் எழுத்து.  ஒன்பதும் ஒன்றும் இணைந்தால் 10. ப்+அ இரண்டும் இணைந்து பத்தைக் குறிப்பதால் இதுவும் மகாரமே.  மூன்றாம் திருவடி.

ல் என்பது மெய்யெழுத்தில் 13ஆம் எழுத்து. சரியை, கிரியை, யோகம், ஞான வரிசையில் 13வது நிலையாக வருவது ஞானத்தில் சரியை ஆகும்.

ஆக அகாரமும் மகாரமும் பகாரமும் ஒன்றிணைந்து பதின்மூன்றாகிய ஞானத்தில் சரியை நிலைப்பாட்டை தோற்றுவிக்கிறது.  அது அம்பலம் இருக்கும் இடத்தில் முதல் படியாகும்.

பதினான்காவது படி ஞானத்தில் கிரியை.

பதினைந்தாவது படி ஞானத்தில் யோகம்.

இறுதிப்படியான ஞானத்தில் ஞானமே பதினாறாவது படியாகும்.

மேலும், அம் என்பது அ+ம் எனப் பிரிந்து நிற்கும்போது, அ என்பது உயிரையும் ம் என்பது உயிர் நாதத்தையும் குறிக்கிறது.  உயிரும் அதன் நாதவொலியுமே அம் என்றாகிறது.  இங்கே அம்பலத்தில் இருமுறை அம் வருவதாலும், நடுவில் பல் என்ற (9+1=10) மகாரமும் வருவதால், உயிரையும் உயிர் நாதத்தையும் நாம் அடைய வேண்டும் என்றால், அதன் நடுவில் இருக்கும் மகாரம் என்ற மூன்றாம் திருவடியைப் பிடித்துக் கொண்டு அடைய முடியும் என்பது இங்கே தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிறது.  அதனால் அம்பலம் என்பது மூன்றாம் கண்ணான நெற்றிக் கண்ணைக் கொண்டு, நம் உயிரையும் அதன் நாதத்தையும் கண்டு, இறைவனாம் சிவத்தைக் காண முடியும் என்பதாகிறது.  அதாவது நம் ஆன்மாவின் உயிரை, உயிர் நாதத்தைச் சுட்டுவதுதான் அம்பலம் ஆகும்.

மேலும், அம் என்பது பிரணவமாகிய ஓங்காரத் தேகத்தையும்,

பலம் என்பது அறிவாகிய ஞானத் தேகத்தையும் குறிப்பதை இங்கே நாம் மறந்துவிடக் கூடாது.

அதனால் ஓங்காரமும் ஞானமும் சேர்ந்த தேகம்தான் அம்பலத் தேகமாகும்.

            அன்று எனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என்மனந்தான்
கன்றுஎனச் சென்று அடிக்கடி உட்கலங்குகின்றது அரசே
கண்ணுடைய கரும்பே என் கவலை மனக் கலக்கம்
பொன்றிடப்பேர் இன்பவெள்ளம் பொங்கிட இவ்வுலகில்
புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்தி விளங்கிடநீ
இன்று எனக்கு வெளிப்பட என் இதயமலர் மிசைநின்று
எழுந்தருளி அருள்வது எல்லாம் இனிதுஅருள்க விரைந்தே.  (3788)

உரை: கணுக்களைக் கொண்ட கரும்பு. கணுக்களை க்+அணுக்கள் எனப் பிரிக்கலாம். க் என்பது மெய்யெழுத்தில் முதல் எழுத்து.  அணுக்களில் அ என்பது உயிரொழுத்தில் முதல் எழுத்து.  உயிரும் மெய்யும் ஒன்றாகப் புணர்ந்திருக்கும் நிலையை இது குறிக்கிறது.  மெய் என்றால் தேகம் என்றும் பொருள் உண்டு.  உடலும் உயிரும் சேர்ந்த நிலையே கணுவாகும்.  அதுவும் எந்தவிடத்தில் என்றால் கரும் பூவில்.  கரும்பு என்பது கருமை+பூ எனப் பிரிந்து பொருள்தரும்.  கருமை நிறம் கொண்ட பூ எதுவென்றால், அது நமது திருவடிகளில் இருக்கும் மெய்ப்பொருளேயாகும்.  அப்படிப் பட்ட கணுக்களைக் கொண்ட கரும்பூவில் இருக்கின்ற இறைவனே, அன்று நீ எனக்கு சொன்னதை இன்றும் மறவாதிருக்கின்றேன் நான்.  அப்படி சொன்னதை நீ மறந்து போவாய் என்றால், கன்றினை இழந்த தாய்ப்பசுவைப் போல  மனம் கலங்கிப் போய் கவலைக்குட்பட்டுவிடுவேன் இறைவா. உன்னுடைய திருவருளின் இன்ப வெள்ளம் பொங்கிப் பெருகிடவும், இந்த உலகில் வாழும் புண்ணியப் பெருமக்களான உன் மெய்யடியார்களின் திருவுள்ளம் ஆனந்தத்தில் பொங்கிடவும் இப்பொழுதே நீ என்னுடைய திருவடித் தாமரை மலர்களில் வெளிப்பட்டு எழுந்தருளி எனக்கு அருள் செய்திட விரைந்து வர வேண்டுமே.

இதய மலர் என்று வள்ளற்பெருமான் குறிப்பிடுவது இருதய மலராகும். இரு உதயமே இருதயமாகும். இரு உதயம் எதுவென்றால், அது நம் முகத்தில் இருக்கும் இரு திருவடிகளே.  திருவடிகளை மட்டும்தான் மலர்களுக்கு ஒப்பிட்டு உவமைப்படுத்த முடியும் என்பதால் மலர் என்பது திருவடிகளையே குறிக்கிறது என்ற மெய்ம்மைக்கு நாம் வந்துவிடலாம்.

         இதுதருணம் நமையாளற்கு எழுந்தருளுந் தருணம்
இனித் தடைஒன்றிலை கண்டாம் என்மனனே நீதான்
மதுவிழும் ஓர் ஈப்போல மயங்காதே கயங்கி
வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்திருப்பாய்
குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலை காண்நமது
குருவாணை நமது பெருங்குல தெய்வத்து ஆணை
பொதுவில் நடம்புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.    (3789)

உரை:  என்னுடைய மனமே, இறைவன் நம்மை ஆட்கொள்வதற்கு நம் உள்ளத்தில் எழுந்தருளுதற்குரிய காலம் இதுதான். அப்படி இறைவன் நம்மை ஆட்கொள்ள தடையேதும் இல்லை இப்பொழுது. நீ இப்பொழுது தேனில் விழுந்த ஈயைப் போல மயக்கமோ மெலிந்தோ போகாமல் மனம் வாடாமல் வருந்தாமல் முகம் மலர்ந்தும் திருவடிகள் மலர்ந்தும் மகிழ்ந்திருக்க வேண்டும். இந்த நாழிகை முதல் நமக்கு குறையேதும் இல்லை என்பதைக் கண்டு ஆனந்தத்தில் திளைத்துக் கொள்.  நமக்கு ஞானத்தைக் கற்றுத் தருகின்ற குருவின்மீது சத்தியம். நம் உயிருக்குள் பெருங்குலத் தெய்வமாகிய இறைவன்மீது சத்தியம். நமது சிரசிற்குள் இருக்கும் பொதுமன்றமாகிய சிற்றம்பலத்தில் திருக்கூத்தை சதா ஆடிக் கொண்டே இருக்கும் நம் புண்ணிய மூர்த்தியாகிய சிவத்தின் திருமொழியும் பொன்மொழியும் ஆகும் என்பதை இப்போது உணர்ந்து தெளிந்து கொள்வாயாக.

இப்படி நம்மை நமக்குள் பார்க்கும் சுடராழியால், நாம் யார் என்பதைத் தெரிந்து கொண்டு யார் நீ என்ற கேள்விக்கு உயிரே பதிலாக இருப்பதைக் கண்டு கண்டு, விண்டு விண்டு, சதா பேரின்பத்திலேயே திளைத்துக் கொண்டிருக்கலாம்.

          தொடர்ந்து சிந்திக்கலாம் ; பேச்சுரை செய்யலாம் ; கலந்தும் உரையாடலாம்.

          பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!