பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாஅழ்க !
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !
ஓ………………ம் ஓ………………ம் ஓ…………………ம்
சாகா வரமும் தனித்த பேரறிவும்
மாகாதலில் சிவவல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு
நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே
சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தான்அந்தமிலாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே
சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதலாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே (அகவல் : 1255-1290)
அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி
வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !
குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை
நமது தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞான உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு ஒன்றுமில்லாமல் நதிக்குள் எப்படி முழுமையாய் நீந்துவது? என்பதைப் பற்றித்தான். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம். ஒன்றுமில்லாமையை ஒரு சிறு கவிதையோடு ஆரம்பிக்கலாமே.
வெறுமையில் உருவம் இல்லை
உணர்ச்சிகளும் இல்லை ; அதை அறியும் சக்திகளும் இல்லை
உத்வேகமும் இல்லை ; தன்னுணர்வும் இல்லை
கண், காது, மூக்கு, நாக்கு, உடல், மனம் என்பதும் அங்கில்லை
உருவங்கள், ஒலிகள், வாசனைகள், ருசிகளும் அங்கில்லை
மனதின் வெளிப்பாடுகளும் அங்கில்லை
பார்வையின் ஆதாரப் பொருட்களும் அங்கில்லை
இப்படி உள்ளவைகள் எதுவுமே இல்லை
மனம் என்பது இல்லாத
தன்னுணர்வின் கலப்பற்ற நிலைக்கு வரும் வரையில்
நம்மிடம் அறியாமை இல்லை
அந்த அறியாமையை அழித்தலும் இல்லை
இப்படியாக உள்ளவைகள் எதுவுமே அங்கில்லை
அழிவும் இல்லை ; மரணமும் இல்லை
அழிவும் மரணமும் என்றும் அழிவதே இல்லை
துன்பம் இல்லை ; தோற்றுவித்தலும் இல்லை
நிற்பதும் இல்லை ; பயணிப்பதும் இல்லை
அதனால் செல்லும் பாதையும் அங்கில்லை
அறிதலும் இல்லை ; அடைதலும் இல்லை
அங்கே அடையாமல் இருத்தலும் இல்லை
அதனால் பிரபஞ்சமெங்கும் ஒன்றுமே இல்லை
ஒன்றுமில்லை என்பது எப்போதுமே மேலான ஒன்றின் நல்ல வாசனையாகவே உள்ளது. நாம் அதைக் கடந்து போகும்போது நம் உள்ளத்தைத் திறப்பதாகவே காணப்படுகிறது. அது 1000 இதழ்களைக் கொண்ட தாமரை மலரின் மலர்தலாகவே இருக்கிறது. அது மனிதனின் விதியும்கூட. மனிதன் இந்த நறுமணத்திற்கு வரும்போது, அவனது உயிர் உணர்வின் உள்ளே இந்த முழுமையான ஒன்றுமில்லாத நிலைக்கு வரும்போது, அவனது ஒன்றுமில்லாத நிலையானது அவனிடம் முழுவதும் பரவிவிடும் போது, அவன் மேகங்கள் இல்லாத தூய்மையான ஆகாயமாக இருக்கும்போது மட்டுமே அவன் முழுமையானவனாக இருப்பான்.
இந்த ஒன்றுமில்லாமையைத்தான் புத்தர் மகா நிர்வாணம் என்றழைத்தார். இந்த ஒன்றுமில்லை என்பது உண்மையில் எப்படித்தான் இருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது வெறுமனே காலியாக இருப்பதில்லை. அது முழுமையாய் நிரம்பியே காணப்படுகிறது. அது பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.
ஒன்றுமில்லை என்பது ஒரு எதிர்மறை நிலை இல்லாத நிலை என்று ஒரு சிறு கண நேரம்கூட எண்ணிவிடாதீர்கள். ஒன்றுமில்லாமை என்றால் அது வெறுமனே ஒன்றுமில்லாமைதான். பொருட்கள் மறைகின்றன. அதன் முடிவில் சாரம் மட்டுமே இருக்கிறது. உருவங்கள் மறையும். உருவமல்லாதது மட்டுமே இருக்கும். விளக்கங்கள் மறைந்து போய்விடுகின்றன. விளக்கப்பட்ட முடியாதவைகள் மட்டுமே மீதம் இருக்கும்.
எனவே, ஒன்றுமில்லாமை என்பது அங்கு ஏதோ ஒன்றுமே இல்லாதது போன்றல்ல. அங்கு என்னதான் இருக்கிறது என்பதை விளக்குவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்றுதான் பொருளாகிறது. நம் வீடுகளில் பலவகையான தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்குமல்லவா. அவைகளை எடுக்காதபோது, அவைகள் அங்கிருந்தன. அவைகளை அப்புறப்படுத்திய பிறகு, அவைகள் அவ்விடத்தில் இல்லை. இதைப் பார்க்கும் ஒருவர், “இங்கு இப்போது எதுவுமே இவ்விடத்தில் இல்லை. ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக இருக்கிறது” என்பார் அல்லவா. வானத்தில் மேகம் இருக்கும்வரை வானம் மேகமாகக் காணப்பட்டது. மேகங்கள் அகன்றபின், வானம் எதுவுமே இல்லாமல் வெறுமனே ஒன்றும் இல்லாமல் இருக்கும். வானம் தூய்மையாக இருக்கும். அது வெறுமனே ஒரு இருத்தலாகவும் இருக்கும்.
பொருட்களை மட்டுமே பார்க்கக் கூடியவர்கள், “அங்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை” என்றே சொல்வார்கள். ஆனால், அந்த ஒன்றுமில்லாமையைப் பார்க்கும் திறம் படைத்தவர்கள், “இங்கு எல்லாமே இருக்கிறது. காரணம் ஒன்றுமில்லாமைதான் இங்கிருக்கிறதே” என்பார்கள்.
ஒன்றுமில்லாமையின் இரகசியமே, ‘ஆம்’, ‘இல்லை’ என்பதன் ஒரே குணத்தில் இருப்பதுதான். புத்தரின் அணுகுமுறைகள் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது. ஒன்றுமில்லாமை என்பது ‘இல்லை’ என்பதோடு முழுவதும் ஒத்திருப்பதாக இல்லை. ஒன்றுமில்லாமை என்பது ‘ஆம்’ ‘இல்லை’ என்பதன் ஒரே தன்மையாகவே இருக்கும். அங்கு எதிரெதிர் துருவங்கள் இருப்பதில்லை. எதிரானவைகள் எப்போதும் எதிரானவைகளாக இருப்பதில்லை.
நீங்கள் ஒரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ சுகத்தை அனுபவிக்கும்போது, அந்த இன்பத்தின் உச்சக்கட்ட பரவச நிலை என்பது, ஒன்றுமில்லாமையின் நிலையாக இருக்கிறது. அந்தக் கட்டத்தில் ஒரு பெண் அப்போது பெண்ணாக இருக்கமாட்டாள். ஆண் அப்போது ஆணாக இருக்க மாட்டான். அந்த உருவங்கள் மறைந்து போய் விடுகின்றன. அங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எந்தவித துருவ வேறுபாடுகளும் இல்லாமல் போய்விடுகிறது. அப்போது படபடப்பு இருப்பதில்லை. அது முற்றிலும் ஓய்வானதாக இருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவருக்குள் ஒருவர் உருகியிருப்பார்கள். அவர்கள் தங்களது உருவங்களை மறந்து போவார்கள். விவரிக்கவே முடியாத ஒரு நிலைப்பாட்டிற்குள் அவர்கள் சென்று கொண்டிருப்பார்கள்.
அப்போது அந்த ஆண் தன்னை ‘ஆண்’ என்று சொல்ல மாட்டான். பெண்ணும் தன்னை ‘பெண்’ என்று சொல்ல மாட்டாள். அங்கே அவர்கள் ‘நான்’களாக இருப்பதில்லை. ‘நான்’ எனும் தன்முனைப்பு உணர்வு அங்கே நிலவுவதில்லை. ஆணவம் இல்லாத போய்விடுவதால், இருவருக்குமிடையில் அப்படியொரு பந்தம் உருவாகியிருக்கும். அவர்களிடம் சண்டையோ, சச்சரவோ, மாறுபட்ட கருத்து வேறுபாடுகளோ இருப்பதில்லை. அவர்களின் உச்சக்கட்ட ஆனந்தப் பரவசத்தில் இந்த ஆணவ உணர்வுகள் எல்லாம் பறந்தோடிக் கொண்டிருக்கும். அதனால்தான் இந்த பரவச உணர்வுகள் எப்போதுமே அவ்வளவு அழகானதாக இருக்கிறது. சமாதியில்கூட இந்த பரவச உணர்வுகளே நிலை கொண்டிருக்கும். அது சிற்றின்ப பரவசம் ; இது பேரின்பப் பரவசம்.
இந்த இருவகை இன்பங்களும் ஒன்று கலந்த நிலைதான் ஒன்றுமில்லாமையில் விரிவாக்கமாக இருக்கும். அங்கே ஆம் என்றோ இல்லை என்றோ எதுவும் இருப்பதில்லை. அது வெறுமை, ஒன்றுமில்லாமை, நிர்வாணம் ஆகியவற்றின் இரகசியமாகக்கூட இருக்கலாம் ; இருக்கிறது. வெறுமை என்பது வெறுமனே காலியாக இருப்பது என்று பொருளல்ல. அது ஒரு இருப்புநிலையைக் குறிக்கிறது. மிகவும் வலிமையான இருப்பு நிலை அது. அது தனக்கு எதிரானவற்றை வெளியே தள்ளுவதே இல்லை. அது அதை தன்னுடன் சேர்த்துக் கொண்டு விடுகிறது. அது அதனால் நிறைந்து இருக்கிறது. அது வெறுமை நிறைந்து காணப்படுகிறது. அது வெறுமையினால் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அது உயிர்த்துடிப்புடன், அளவுக்கு அதிகமான உயிர்த் துடிப்புடன், அபரிமிதமான உயிர்த்துடிப்புடன் இருக்கிறது.
அதனால் தான் சொல்கிறோம், ஒரு சிறுநொடிகூட இவைகள் உங்களை ஏமாற்றி விடுவதற்கு ஒருபோதும் அனுமதித்துவிடாதீர்கள் என்று. அப்படி இருந்தால் நீங்கள் புத்தன் ஆகவே மாட்டீர்கள். தன்னில் தன்னைக் கண்டவனே புத்தன் ; தன்னில் தன்னை வெறுமையாகக் காண்பவனே புத்தன் ; தன் உயிர்மலர் மலரும்போது எந்தவித எதிர்வினையும் ஆற்றாது இருப்பவனே புத்தன் ; தன் உயிரை நேருக்கு நேராக காணும்போது, அதையும் கடந்து செல்பவனே புத்தன்.
நீங்கள் அனைவருமே இந்த புத்த நிலைக்கான சூத்திரத்தை அறிந்திருக்க வேண்டுமென்றே யாம் விரும்புகின்றோம். அப்போது உங்கள் வாழ்க்கையினுள் செல்வதற்கான பல சூழ்நிலைகளைக் கடப்பீர்கள். அங்கே உடலும் ஆன்மாவும் ஒன்றை ஒன்று ஓரிடத்தில் சந்தித்துக் கொள்வதை நேருக்கு நேராக காண்பீர்கள். உங்கள் உயிரும் இறைவனும் நேருக்கு நேராக சந்திப்பதையும் காண்பீர்கள். அப்போது உங்களுக்குள் எதிரெதிர் துருவங்கள் இருக்காது. உங்களுக்குள் வெறுமையாய் இருப்பீர்கள். அங்கே ஒன்றுமில்லாமையைத் தவிர வேறொன்றும் இருக்காது. சுயத்தின் சுயம் அது.
உங்களுக்குள் எப்போது எந்தவொரு எண்ண மேகங்களும் இல்லாது போகிறதோ, அப்போதுதான் இந்த ஒன்றுமில்லாமை மலர்ந்து கொண்டிருக்கும். அந்த மேகங்கள்தான் உங்களது உள்ளுக்குள் உள்ள பரந்த வெளிக்கு தடையாக இருக்கும். அந்த மேகங்கள்தான் நீங்கள் பரவெளியைக் கடப்பதில் தடைகளாக இருக்கும்.
கோடைக்காலங்களில் ஆகாயமானது மேகங்கள் எதுவும் இல்லாமல் சுத்தமாக, தெளிவாக, ஸ்படிகத்தைப் போல தெளிவாகக் காணப்படும். அதுவே மழைக்காலம் வந்து விட்டால், ஆயிரமாயிரம் மேகக்கூட்டங்கள் எங்கெங்கிருந்தோ ஓடிவந்து சூரியனின் கதிர்கள் பூமியில் படாதபடி முழு ஆகாயத்தையே மறைத்துக் கொள்கின்றன. மேகங்களால் நீங்கள் மூடப்பட்டிருக்கும்போது, ஒரு தன்னுணர்வின் துடிப்பைக் கூட அங்கே நீங்கள் காண முடியாது. மேகங்கள் விலகும்போது, சூரியன் அங்கே கோடிப் பிரகாசமாய் ஒளிக்கற்றைகளை அள்ளி அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். அங்கே தடைக்கற்களாக இருப்பவை, ஆகாயமா? மேகங்களா? யோசியுங்கள் அன்பர்களே. ஆகாயத்தில் சூரியன்கள் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆகாயம் மேகங்கள் இல்லாமல் தெளிவாய், சுத்தமாய் இருக்க வேண்டுமல்லவா?
இந்த விசயத்தை உங்களால் அறிய முடிகிறதா? இல்லை அறிவாய் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? இந்த அறியும் சக்திக்கும் அறிந்து கொள்ளும் அறிவிற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் அறிவின் மூலமாக உணரும்போது உங்களால் சரியான விசயத்தை சரியான விதத்தில் உணர்வதேயில்லை. எல்லா கற்கும் அறிவுகளும் அதாவது கற்றறிவுகளும் உங்களை திரையிட்டுப் பார்ப்பதைத் தான் உருவாக்குகின்றன. கல்வி அறிவு என்பது மனதினை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. கற்றறிவு என்பது ஒரு தவறான அபிப்பிராயமாக உள்ளது. கற்றறிவு என்பது முடிவெடுத்தலாக இருக்கிறது. நீங்கள் அதனுள் செல்வதற்கு முன்பே அதைப் பற்றி முடிவெடுத்து இப்படித்தான் அது இருக்கக்கூடும் என்று தீர்மானத்திற்குள் பிரவேசித்து விடுகிறீர்கள்.
உதாரணத்திற்கு ஒரு விசயத்தைச் சொல்கின்றோம். நீங்கள் உங்கள் மனதில் ஏற்கனவே ஒரு முடிவோடு ஒரு குருவிடம் போனால், அதாவது அந்த முடிவு குருவுக்கு ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது அது குருவிற்கு எதிரானதாகவும் இருக்கலாம். அது பெரிய விசயம் கிடையாது. ஆனால், நீங்கள் ஒரு முடிவெடுத்து விட்டு குருவிடம் வந்தால், அதன்பின் நீங்கள் ஒரு மேகக்கூட்டங்களோடுதான் வருகிறீர்கள் என்றே அர்த்தமாகிறது. அதன்பின் நீங்கள் உங்கள் குருவை அந்த மேகக்கூட்டங்களின் வழியாகத்தான் பார்க்கத் தொடங்குவீர்கள். உங்கள் மேகக்கூட்டங்களின் நிழலானது குருவின்மீது விழத்தானே செய்யும். இங்கே குரு என்பவர் மேகத்தின் நிழலா? இல்லை ஆகாயமா? இது அறியும் செயலா? இல்லை அறிவான செயலா? இல்லை அறிவால் அறிய முற்படும் செயலா?
இந்த ‘குருதான் சரியான மனிதர்’ என்று நீங்கள் ஒரு சுத்தமான எண்ணத்தோடு, அதாவது உங்களது தன்முனைப்பின் மேகக்கூட்டங்களோடு வராமல் வரும்போது, உங்களது தூய்மையான எண்ணத்திற்கு ஏற்றாற்போல சில அற்புதமான விசயங்களை உங்களிடம் காண்பீர்கள். இந்த ‘குரு தவறானவர், ஆபத்தானவர், கெட்டவர்’ என்னும் எண்ண மேகங்களோடு நீங்கள் வருவீர்களேயானால், அதன்பின்னர் உங்களது எண்ண மேகங்களுக்கு ஆதரவான சில விசயங்களை அங்கே குருவிடம் காண்பீர்கள்.
நீங்கள் ஒரு குரு முன்பு எந்தவித எண்ணத்தைக் கொண்டு வந்தாலும், அது தானாகவே, சாசுவதமாகவே, நிலைத்து நின்றால், அது அதற்கான நிரூபணங்களைக் கண்டுகொண்டே போகும். மேலும், தவறான எண்ணத்தோடு நீங்கள் குருவிடம் வந்தாலும், நீங்கள் உங்களது தவறான எண்ணத்தோடு பயத்தோடேதான் செல்ல நேரிடும். அப்படிப்பட்ட மனிதர்கள் ஒரு சற்குருவிடம் சென்று அடையவே முடியாது.
ஒரு நல்ல குருவிடம் வருவதற்கு, ஒருவர் மேகக்கூட்டங்களோடு இல்லாமல் தப்பான அபிப்பிராயங்கள் இல்லாமல், எதிராகவோ அல்லது ஆதரவாகவோ, ஏற்கனவே முடிவு செய்துவிட்ட தீர்மானங்களோடு இல்லாமல் வந்து சேர்வது மிக மிக அவசியமாகிறது.
குருவிடம் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு நீங்கள் ஒன்றுமில்லாமையிலும் வெறுமனாயும் வாருங்கள். நீங்கள் குருவை சந்திக்கும்போது எந்தவொரு கருத்தையும் அறிவையும் அது கொடுத்த கற்றறிவுகளையும் கொண்டு வராதீர்கள்.
நீங்கள் அநேக விசயங்களை குருவைவிட தெரிந்திருக்கலாம் ; கேட்டிருக்கலாம் ; பட்டு அனுபவித்திருக்கலாம். ஆனால், அந்த எதையுமே குரு முன்பு வரும்போது கொண்டு வராதீர்கள் ; அவைகளை நம்பவும் செய்யாதீர்கள்.
உங்களது சொந்தக் கண்களால் குருவின் இதயத்தைத் தரிசிப்பதற்கு சும்மா வெறுமனே ஒன்றுமில்லாமல் வாருங்கள். உங்களது ஒட்டுமொத்த சொந்த இதயத்தோடு மட்டுமே வாருங்கள். அதுதான் உங்கள் உயிருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை ; அதுதான் உங்கள் குருவிற்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடனும் ஆகும். இன்றிலிருந்து இந்த ஒன்றுமில்லாமை உங்கள் குணமாக மாறக் கடவுக. கனிவோடு ஆசிர்வதிக்கின்றோம்.
மேலும், குருவைப் பற்றிய சத்தியங்களை, உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் காலங்காலமாக அநேக எண்ணற்ற பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள எல்லாவகையான கற்றறிவுகளையும் கருத்துகளையும் ஒட்டுமொத்தமாக கைவிட்டு விடவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
கற்றறிவுகளோடு நீங்கள் சத்தியத்திடம் வந்தால், உங்களால் அதைப் பார்க்கவே முடியாது. நீங்கள் சத்தியத்தைப் பார்க்க முடியாத குருடராகத்தான் இருப்பீர்கள். ஏனென்றால், எப்போது உங்கள் கற்றறிவு உங்களை குருடராகத்தான் வைத்திருக்கிறது. இது சத்தியம். நீங்கள் சத்தியத்தைக் காணும் தெளிவான கண்களைப் பெற விரும்பினால் உங்கள் அனைத்து கற்றறிவுகளையும் தொலைத்துவிடுங்கள். நீங்கள் உணர்கின்ற சக்திக்கும் கற்றறிவிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
எப்போதுமே சத்தியமும் கற்றறிவும் ஒன்று சேர்ந்தே இருப்பதில்லை. கல்வி அறிவு, இந்த வாழ்க்கை மற்றும் இயற்கையின் அனைத்துத் தன்மைகளையும் தனக்குள் வைத்திருக்க முடியாது. கற்றறிவானது மிகவும் சிறியதே. ஆனால், இந்த இயற்கையோ மிகவும் பரந்து, விரிந்து காணப்படுகிறது. இயற்கையை கற்றறிவால் முழுமையாக கற்றுவிட முடியுமா, சொல்லுங்கள். ஞானம் பெற்ற குருதான் இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, அண்ட பகிரண்டமாக பரந்து விரிந்து வியாபித்துக் காணப்படும் இறைவனாவார்.
நம்மால் 1330 திருக்குறள்களையும், 310 ஔவை ஞானக்குறளையும், 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தையும், 3000 வெண்பாக்களைக் கொண்ட திருமந்திரத்தையும், 6300 பாடல்களைக் கொண்ட திருவருட்பாவையும், கைவல்ய நவநீதத்தையும், சுத்த சாதகத்தையும், தேவாரத்தையும், சித்தர்களின் ஞானநூல்களையும் முழுமையாய் கற்றுவிட முடிகிறதா? உங்களை நீங்களே கேட்டுப் பாருங்களேன். இதுவே இப்படியென்றால், இயற்கையிடம் மண்டிக் கிடக்கும் அவ்வளவு அகண்ட ஞானங்களை எங்கே கற்றறிவால் கற்றுவிட முடியும்????
மேலும் நீங்கள் இந்த இயற்கையை உங்களது கற்றறிவின் வகைக்குள் திணித்தால், நீங்கள் அதன் அழகினை அழித்துவிடுவீர்கள். இந்த வாழ்க்கையை நீங்கள் கற்றறிவாக மாற்றிவிட்டால், அதன்பின் அது வாழ்க்கையாக இருக்கவே இருக்காது. அது ஒரு மனிதன் இந்தியாவின் வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு, அவன் இந்தியாவையே சுமந்து கொண்டிருப்பதாக நினைப்பது போன்றது. இந்தியாவை எந்த ஒரு வரைபடத்திலும் உள்ளடக்கிவிட முடியுமா, என்ன?
நிலவின் படம் நிலவாகுமா? இறைவன் என்னும் வார்த்தை இறைவனாகிவிடுமா? அன்பு என்னும் சொல் அன்பாகிவிடுமா? எந்தவொரு வாழ்க்கையும் வாழ்க்கையின் புதிர்களை உள்ளடக்கிவிட முடியாது. கல்வியறிவு என்பது வார்த்தைகள் மற்றும் வார்த்தைகள் மற்றும் வார்த்தைகள் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருப்பதில்லை. கற்றறிவு என்பது மிகப்பெரிய மாயை. அதனால்தான் உங்களுக்குள் ஒன்றுமில்லாத நிலை தங்கி இருக்கட்டும் என்று எமது சற்குரு சுந்தரானந்த மஹரிஷி அவர்கள் எப்போதும் சொல்லிச் சொல்லி, எனக்குள் என் உயிருக்குள் விதைகளை விதைத்துக் கொண்டே இருந்தார். அவரோடு யாம் வாழ்ந்த காலங்களில் அவர் விளைச்சலையும் அறுவடையையும் செய்ய முற்பற்பட்டதேயில்லை. விதைக்க மட்டுமே செய்து கொண்டிருந்தார். இன்று உலக உயிர்கள் அதற்கான விளைச்சலை, மகசூலை பரிபூரணமாக அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஒன்றுமில்லாத நிலை என்பது எதையும் அறிந்திராத நிலைப்பாடாகும். உங்களது தன்னுணர்வில் எந்தவொரு மேகமும் மிதக்காத ஒரு நிலை அது. உங்களது தன்னுணர்வானது மேகமூட்டங்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் நீங்கள் ஒன்றுமில்லாமையில் இருப்பீர்கள்.
சத்தியத்தோடு வேறு எதுவும் முழுமையாகச் செல்வதில்லை. ஒன்றுமில்லாமை மட்டுமே சத்தியத்தோடு முற்றிலும் நன்றாகச் செல்கிறது. கற்றறிவானது உயிருணர்வின் புதிர்களை உள்ளடக்கிவிட முடியாது ; கற்றறிவு என்பது புதிர் நிறைந்த ஒன்றுக்கு எதிரானதாகும். ‘புதிர் நிறைந்த ஒன்று’ என்றால் நாம் அறியாத, நாம் அறிந்து கொள்ள முடியாத, அடிப்படையாகவும், உள்ளுறைந்த நிலையிலும், முக்கியமாகவும் அறியவே முடியாத ஒன்றாகும். அதாவது அறியாதது மட்டுமல்ல, அறியவே முடியாத ஒன்றாகும் அது. அறியவே முடியாத ஒன்றினை எப்படி கல்வி அறிவாக சுருக்க முடியும்?
கல்வி அறிவானது ஆற்றின் கரையில் கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டு அங்குள்ள வைரங்களைத் தவறவிட்டுக் கொண்டே போவதைப் போலாகும். கற்றறிவு என்பது இரண்டாம் தரமானதாக, உண்மையானதாக, ஒருபோதும் அசலானதாக இருக்காது. சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஒரு அகப்பார்வை, அசலான அகப்பார்வை தேவை. உங்களுக்கு அடி முதல் முடிவரை பார்க்கின்ற கண்கள் தேவை ; தெளிவான பார்வை உங்களுக்குத் தேவை.
எனவே, மனமானது கற்றறிவின் முழுமையான நிர்வாண நிலையில், கல்வியறிவு இல்லாமல் காலியாக இருக்கும்போது மட்டுமே அது அறிந்து கொள்ளும் நிலைக்கு வருகிறது. கற்றறிவு இல்லாதபோது, அங்கு அறிதல் இருக்கிறது. ஏனெனில், கற்றறிவு இல்லாதபோது அங்கு அறிதல் இருக்கிறது.
மனமானது கற்றறிவின்றி முழுமையான நிர்வாணமான நிலையில், அதன்மீது எதுவும் இல்லாமல், அமைதியாக, வேலை எதுவும் செய்யாமல், மனமானது காத்துக் கொண்டு இருக்கும்போது, எதற்காக காத்திருக்கிறோம் என்கிற எண்ணம்கூட இல்லாமல், வெறுமனே ஒரு தூய்மையான காத்திருத்தலாகவும், எதற்காக என்கிற எதிர்பார்ப்பும் இல்லாமல், விருந்தாளிக்காக எந்தவொரு ஒரு எண்ணமும் இல்லாமல் காத்துக் கொண்டு இருக்கும்போது, கதவைத் திறந்து வைத்துக் கொண்டு விருந்தாளி கதவைத் தட்டுவதற்காக, யார் அந்த விருந்தாளி என்கிற எண்ணமும் இல்லாமல் போகும்போது மட்டுமே நீங்கள் தெளிவான பார்வையோடு இருக்க முடியும். அதை நீங்கள் எப்படி முன்கூட்டியே அறிய முடியும்?
நீங்கள் இறைவனின் வரைபடத்தை சுமந்து கொண்டு சென்றால் நீங்கள் இறைவனைத் தவறவிட்டுக் கொண்டே செல்வீர்கள். ஏனெனில் உங்களுக்கு இறைவனை முன்பே தெரியாது. தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆமாம், மற்றவர்கள் அவரைப்பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லி இருப்பதெல்லாம் வரைபடங்கள் மட்டுமேயாகும்.
நான் உங்களுக்கு ஒரு வரைபடத்தை மட்டுமே கொடுக்க முடியும். எல்லாக் கல்வி அறிவும் ஒரு வரைபடமாகத்தான் இருக்கிறது. அந்த வரைபடத்தை வழிபட ஆரம்பிக்காதீர்கள். அந்த வரைபடத்தைச் சுற்றி ஒரு கோவிலை உருவாக்க ஆரம்பிக்காதீர்கள். அப்படித்தான் கோவில்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு கோவில் வேதங்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அடுத்தது பைபிளுக்கும் அதற்கடுத்தது குர்ஆனுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. இவைகள் எல்லாமே வரைபடங்கள்தான். இவைகள் உண்மையான நாடுகள் அல்ல. அவைகள் வரைபடங்களாக மட்டுமே இருக்கின்றன. நான் ஏதாவது ஒன்றை உங்களுக்குக் கூற வேண்டுமென்றால், என் வார்த்தைகளைப் பயன்படுத்தியாக வேண்டும். வார்த்தைகள் உங்களை வந்தடைகின்றன. நீங்கள் வார்த்தைகளின்மீது ஏறி அமர்ந்து கொள்கிறீர்கள். வார்த்தைகளை பதுக்கி வைக்க ஆரம்பிக்கிறீர்கள். அதன்பின் நீங்கள் அறிந்து கொண்டுவிட்டதாக நினைக்க ஆரம்பிக்கிறீர்கள். மனம் என்பது மாபெரும் பதுக்கல் பேர்வழி.
சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு இது வழியல்ல. எல்லாக் கல்வி அறிவையும் ஒதுக்கித் தள்ளுவதே அறிவதற்கான வழியாகும். மேலும், அதை ஒரே வீச்சில் ஒதுக்கித் தள்ளிவிடுங்கள். மெதுவாகவோ, படிப்படியாகவோ ஒதுக்கிக் கொண்டு போகாதீர்கள். நீங்கள் அறிந்த விசயத்தைக் கண்டுகொள்ள முடிந்தால் அது இந்த நொடிப் பொழுதிலேயே நடக்க முடியும். உண்மையில் அந்த விசயத்தைக் கண்டுகொள்வதுதான் அது நடப்பதற்கான வழியாக இருக்கிறது. குறிப்பாக நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் கற்றறிவைக்கூட கைவிட வேண்டிய அவசியம் கிடையாது. கற்றறிவானது உங்களை ஒரு அறிபவராக ஆக்கமுடியாது என்கிற விசயத்தை, அது உண்மையில் உங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதை நீங்கள் வெறுமனே பார்த்து விடும்போது, உங்களுக்குள் மாற்றத்திற்கான மேகத்தை அகற்றுவதற்கான ஒரு புரட்சி நடக்கிறது. அதை நீங்கள் பார்த்து விடும்போது மாற்றம் உள்ளுக்குள் நிகழ ஆரம்பிக்கின்றது.
அதனால் மனம், நிர்வாணமாக, அமைதியாக, வேலை செய்யாமல், முழுமையாக காத்திருத்தலில் இருக்கும்போது, அதன்பிறகு சத்தியமானது அங்கு வந்து சேர்கிறது. அதன்பின்னர் அங்கு வாய்மை இருக்கிறது. அது வேறு எங்கிருந்தும் வரவேண்டிய அவசியம் கிடையாது. அது ஏற்கனவே அங்கேதான் இருந்து வருகிறது. ஆனால், நீங்கள் கல்வியறிவு அதிகம் நிரம்பி இருப்பதால், நீங்கள் அதைத் தவறவிட்டுக் கொண்டே செல்கிறீர்கள்.
ஒன்றுமில்லாமையால் மட்டுமே சத்தியத்தை, வாய்மையை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், ஒன்றுமில்லாத நிலையில் புத்திக் கூர்மையானது முழுமையாக வேலை செய்கிறது. ஒன்றுமில்லாமையில்தான் நமது புத்திசாலித்தனமானது முழுவதுவமாக செயல்புரிகிறது.
அதனால்தான் குழந்தைகள் மிகவும் புத்திக்கூர்மையுடன் இருக்கின்றார்கள். ஆனால், வயதானவர்களைப் பாருங்கள், கொஞ்சம் கொஞ்சமாக மிகவும் மந்த புத்தியுள்ளவர்களாக ஆகின்றார்கள். அதனால்தான் குழந்தைகள் ஒரு விசயத்தை மிக விரைவாக கற்றுக் கொள்கின்றார்கள். வயது ஆக ஆக கற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமாக ஆகிவிடுகிறது. நீங்கள் வயதானவர்களாக இருந்தால், நீங்கள் ஜென்மன் மொழியையோ, சீன மொழியையோ, உருது மொழியையோ கற்றுக் கொள்ள 20 ஆண்டுகளோ, 25 ஆண்டுகளோ ஆகலாம். ஆனால், ஒரு குழந்தை அதிகபட்சம் 3 ஆண்டுகளிலேயே மேற்சொன்ன மொழிகளைக் கற்றுக்கொண்டுவிடும் அற்புதம் இருக்கிறது.
ஒரு குழந்தைக்கு எத்தனை மொழிகளைக் கற்றுக் கொடுத்தாலும், அது குழந்தையாக இருக்கும்போது, குறைந்தபட்ச கால அளவிலேயே மிகவும் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும். இது குறைந்தபட்சம்தான். ஒரே நேரத்தில் ஒரு குழந்தை எத்தனை மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது இன்னும் ஆராய்ச்சியிலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு குழந்தைக்கு அந்த மொழியானது தெரியப்படுத்தி விட்டால் போதும், அக்குழந்தை உடனடியாக கற்றுக் கொள்ள ஆரம்பித்து புத்திக்கூர்மையோடு கற்றுக்கொண்டு விடுகிறது. வயது ஆக ஆக கற்றுக்கொள்ளும் தன்மை அதாவது கிரகித்து உள்வாங்கிக் கொள்ளும் தன்மை குறைவதால் வயதானவர்கள் அதிக காலங்கள் எடுத்துக் கொண்டே ஒரு மொழியை கற்கும் நிலைப்பாடு இருக்கிறது. ஆனால், அது அப்படி இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. நீங்கள் ஒரு ஒன்றுமில்லாத நிலையில் இருந்தால், அதன்பின்னர் இந்நிலை இருப்பதில்லை. ஏனென்றால், உங்களது வாழ்நாள் முழுக்க நீங்கள் ஒரு முழுக் குழந்தையாகவே மாறி இருப்பீர்கள்.
அதற்கு ஒரு வரலாற்றுச் சார்பான உண்மையான உதாரணத்தைச் சொல்கின்றோம். நீங்கள் அனைவரும் கிரேக்க தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தான் இறக்கப் போகிறோம் என்பது தெரிந்தும்கூட, கொஞ்சம்கூட வருத்தமோ, பயமோ கொள்ளாமல் ஒரு குழந்தையாகவே இருந்தார். அவர் அந்த மரணம் வரும் தருவாயில்கூட ஒரு பூப்போன்ற மனம் கொண்ட ஒரு குழந்தைத் தனத்தோடே திறந்த மனதோடு எதையும் எந்தச் சூழ்நிலையும் தரும் பாடங்களையும் விடாமல் கற்றுவிட வேண்டும் என்ற தாகத்தோடே இருந்து கொண்டிருந்தார்.
சாக்ரடீஸ் அவரது படுக்கையில் படுத்திருந்தார். அவர் கிரேக்க நாட்டில் அறிவார்ந்த பேசி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார் என்ற காரணத்தை முன்வைத்து அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதற்காக அவரைக் கொல்வதற்காக விஷம் தயாரிக்கப்பட்டது. அந்த மரணத் தண்டனை நாளன்று சூரியன் மேற்கில் மறையும் தருணத்தில் அவருக்கு விஷம் கொடுத்து கொல்ல வேண்டும் என்பது தண்டனை. அந்த தண்டனை நிறைவேற்றப்படும் நாளன்று, சாக்ரடீஸ் மிகவும் உற்சாகமாகவும் உத்வேகமாகவும் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தார், ஒரு குழந்தையைப் போல. ஆனால், இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரது சீடர்கள் அதாவது மாணவர்கள் குரு இறக்கப் போகிறாரே என்றெண்ணி அழுதுகொண்டே இருந்தார்கள். ஆனால், சாக்ரடீசோ மிகவும் உற்சாகமாகவே இருந்தார். சீடர்களுக்கு இதைத் தாங்கிக் கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.
சாக்ரடீஸ் தமது சீடர்களைப் பார்த்து, “சீடர்களே, இன்னுமா விஷம் வருகிறது? எதற்கு இந்த அதிகக் காலதாமதம். போய் விஷம் தயாரானதா? இல்லையா? எப்பொழுது கொண்டு வருவார்கள்? என்று கேட்டு வாருங்கள். அப்புறம் விஷம் தயாரிப்பவரிடம் சீக்கிரம் தயார்செய்து கொடுத்துவிடச் சொல்லுங்கள், என்ன புரிகிறதா? செல்லுங்கள், சீக்கிரம்” என்றார்.
சீடர்களோ அசைந்தபாடில்லை.அங்கேயே சாக்ரடீஸை பார்த்து அழுதுகொண்டே இருந்தார்கள். “போய்ப் பார்த்து வாருங்கள், ஏன் நான் இறப்பதற்கு இவ்வளவு அழுது கண்ணீர் வடிக்கிறீர்கள்?” என்றார்.
சீடர்கள் போகாதததைக் கண்ட சாக்ரடீஸ், அவரே விஷம் தயாரிக்கும் இடம் சென்று, விஷத்தைத் தயாரிப்பவரிடம், “அய்யா, ஏன் இவ்வளவு காலதாமதமாக விஷத்தைத் தயார்செய்து கொண்டிருக்கிறீர்கள்? விஷம் அற்புதமாக இருக்க வேண்டும். அதன் கொல்லும் ஆற்றல் குறைந்துவிடக்கூடாது, புரிகிறதா, சீக்கிரம் தயார்செய்து நீங்களே கொண்டு வந்து கொடுத்துவிடுங்கள். நான் நீங்கள் தயாரிக்கும் விஷத்தை அருந்துவதற்கு மிகவும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன்” என்றார்.
விஷம் தயாரிப்பவரோ, ‘என்ன மனுசன் சாவதற்கு கொஞ்சம்கூட அஞ்சாமல், உற்சாகமில்லாமல் இருக்காமல் இப்படி சாவதற்கு ஆர்வத்தோடு இருக்கிறாரே?’ என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டு, அவர் வேலையில் மும்முரமானார்.
சீடர்கள் சாக்ரடீஸ், “குருவே, நீங்கள் ஏன் இப்படி இவ்வளவு உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறீர்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் மரணமடையப் போகிறீர்கள்? என்பதை மறந்து விட்டீர்களா குருவே. உங்களின் இந்த நிலைப்பாட்டிற்கானக் காரணத்தை தயவுசெய்து சொல்லுங்கள், குருவே” என்றார்கள்.
சாக்ரடீஸ் கேள்வி கேட்ட சீடனின் தலையில் கை வைத்து மிகவும் மென்மையாக அவன் தலையை வருடிக்கொண்டே, “நான் இப்போது உன் தலையை தடவுகிறேனே, ஏதாவது பதட்டம், பயம், நடுக்கம் தெரிகிறதா என்பதை நன்றாக உற்றுப் பார். நான் எனது வாழ்க்கையினை முழுமையாகவே வாழ்ந்திருக்கிறேன். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழும் காலங்களிளெல்லாம் நான் எனக்குள் என்றுமே இருந்ததில்லை. ஒவ்வொரு க்ஷணத்தையும் ஆழ்ந்த அன்போடும் புரிதலோடும் ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றுமற்ற இடத்தில் இருந்து கொண்டு சுவாசித்துக் கொண்டிருந்தேன். எந்தப் பற்றும் பந்தமும் என்னைப் பீடிக்க விட்டதேயில்லை. நதி ஓடும் திசையில் நான் நதியாக மாறி பாய்ந்து செல்வேன் ; காற்று வீசும் திசையில் நான் காற்றாக மாறி பறந்து செல்வேன் ; மலர்களைப் பார்க்கும்போது அதன் மணமாக மணந்து கொண்டிருப்பேன்”.
“சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் அச் சூழ்நிலைகளை ஒன்றுமில்லாத எண்ணங்களால் கடந்து சென்று கொண்டே இருப்பேன். சூழ்நிலைகள் கொடுக்கும் நிகழ்வுகளை எம்மோடு தொடர்புபடுத்திக் கொள்ள மாட்டேன். வாழ்வு என்பது உண்மை எனும்போது, இறப்பும் உண்மையானதே சீடா. வாழ்வையும் இறப்பையும் எம்மால் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. அதனால்தான் சொல்கிறேன். வாழ்வின் அனைத்தையுமே அனுபவித்து முழுமையாக வாழ்ந்துவிட்ட நான், இதுவரை அனுபவித்திராத ஒரு புதுமையான உணர்வு, நிகழ்வுதான் இந்த சாவு என்ற இறப்பு. இதையும் அதே துள்ளலோடும் ஒரு குழந்தையாக உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் புரிதலோடும் வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். காரணம் என்ன தெரியுமா சீடா, இந்த சாவினை அறிந்து கொள்ளவும் சாவு எப்படி வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் இந்த சாவு கொடுக்கும் ஞானத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ளவும் இப்போது என்னை தயார்படுத்திக் கொண்டுவிட்டேன். இந்த இறப்பும் ஒரு ஞானம்தான் சீடா. என் நிலைமை, என் உணர்தல் இப்படியிருக்க நான் எப்படி அதோடு எதிர்வினையாற்ற முடியும்? சொல்” என்றார்.
இந்த வரலாற்று நிகழ்வு சொல்லும் பாடம் என்ன தெரியுமா, அன்பர்களே. ஒரு குழந்தையைப் போல் மனதில் ஒன்றுமில்லாமல் கள்ளம் கபடமற்று இருக்கின்ற ஒருவருக்கு மரணம்கூட ஒரு வாழ்வின் நிகழ்வாகத்தான் இருக்க முடியுமே தவிர, வேறென்ன சொல்ல. அவர்களுக்கு மரணமும் ஒரு வரமே. மரணத்தை வெல்வது அவ்வளவு எளிதா? நினைத்துப் பாருங்கள். அந்த கிரேக்க ஞானி சாக்ரடீஸ் அப்படி வாழ்ந்து காட்டி தான் மரணத்தையும் வென்றவன் என்பதை இந்த உலகுக்கு நிரூபித்துக் காட்டியே சென்றார். இந்நிலைக்கு அவரால் செல்ல முடிந்ததற்கு காரணம், அவரின் ஆன்மாவில் ஒன்றுமில்லாமையின் ஆற்றல்தான். சாக்ரடீஸ் ஒரு புத்தரைப் போன்றே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
ஒன்றுமில்லாமைதான் புத்திசாலித்தனத்தை செயல்படுவதற்கு அனுமதிக்கிறது என்றே புத்தர் கூறியிருக்கிறார். புத்தி என்ற சொல்லிலிருந்தே புத்தர் என்ற வார்த்தை பிறந்திருக்கிறது. புத்தர் என்றால், புத்திசாலித்தனம் என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் ஒன்றும் இல்லாத நிலையில் இருக்கிறீர்களென்றால், அந்த ஒன்றுமில்லாத தன்மை உங்களை விளக்குகிறது என்றால், ஒன்றுமில்லாமை உங்களை உள்ளடக்கி இருக்கிறது என்றால், அப்போது நீங்கள் வெறுமனே ஒரு திறந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள்படும். அதன்பெயர்தான் புத்திசாலித்தனம் என்று சொல்வது. காரணம் என்ன தெரியுமா, நீங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கும்போதுதான் உங்களிடம் பயம் எட்டிப் பார்ப்பதேயில்லை.
ஒரு பழமொழிகூட உண்டு. “மடியில் கனம் இருந்தா வழியில் பயம் இருக்கும்” என்று. ஒன்று இருக்கும்போது அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற பயம் வரும். இது இயல்புதான். பயத்தின்மீது எந்தத் தவறுமில்லையே. ஒன்றுமில்லாமையில் இருக்கும்போது உங்களிடம் பயம் துளியும் இருக்காது. பயம் மறைந்துவிடும்போதுதான் உங்களால் புத்திசாலித்தனத்தோடு செயலாற்ற முடியும். பயமிருந்தால் உங்களால் புத்திக்கூர்மையோடு செயல்பட முடியாது போய்விடும். உங்களை செயல்பட விடாமல் கட்டிப்போட்டு வைப்பதே இந்த பயம்தான். அதனால் நீங்கள் ஆற்றும் செயல்கள் செயல் இழந்துதான் போகும்.
உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் அனைவரும் இன்று பயத்தோடேதான் வாழ்கிறார்கள். அவர்கள் நல்லவர்களா? இல்லை கெட்டவர்களா? என்பது நமக்கு தேவையில்லாத ஒன்றுதான். நீங்கள் பயமில்லாமல் வாழும்போதுதான், உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ‘நான்’ என்னும் ஆணவமானது இல்லாமலே போகிறது. அதன்பின் அங்கே பயத்திற்கு துளியும்கூட வேலை இருப்பதில்லை.
ஒன்றுமில்லாத நிலையில் பயம் இருப்பதில்லை. அதனால் அங்கே பேராசையும் இருப்பதில்லை. வன்செயல்கள் அங்கே இருக்காது. ஒன்றுமில்லாத நிலையானது சத்தியத்தைத் தாண்டி அடுத்தவற்றை அறிந்திருக்காது. அர்த்தமற்ற நிலை அங்கு உருவாவதில்லை. முட்டாள்தனமும் இருப்பதில்லை. ஒன்றுமில்லாமை உருவாகும்போது அங்கே சொர்க்கமும் நரகமும் தெரிவதில்லை. அப்போது அங்கே புத்திசாலித்தனம் தன்னை பிரகாசப்படுத்திக் கொண்டு வெளிப்படுத்த ஆரம்பிக்கும். இது நினைவில் வைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய சத்தியம். இந்த சத்தியம்தான் உங்களை தெய்வீகமானவராக, இறைத்தன்மை நிறைந்தவராக மாற்றிவிட ஆரம்பிக்கும்.
ஒரு ஒன்றுமில்லாத நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால், நீங்களும் அங்கே ஒன்றுமில்லாத நிலையில்தான் இருப்புகொள்ள வேண்டும். அதன்பின் அந்த ஒன்றுமில்லாமையும் நீங்களும் ஒன்றாகிப் போவீர்கள். உங்கள் இருவருக்குமிடையில் வேறுபாடுகள் இருப்பதில்லை. ஒரே மாதிரியான இருவர் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது மகிழ்ச்சி மட்டுமே அங்கே விளையாடிக் கொண்டிருக்கும். அது ஒரு கொள்ளை அழகு ; தென்றல் வருடும் பூங்காற்று அழகு அது.
இங்கே ஒரு விசயத்தை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். நீங்கள் ஒன்றுமில்லாத நிலையில் இருக்கும்போது ஒரு செயலைப் செய்வீர்கள். ஒன்றுமில்லாமைக்கு எதிராகச் செய்யப்படும் செயல் எப்போதுமே எதிர்ச்செயலாக இருப்பதில்லை. அது எப்போதுமே சத்தியத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும். நீங்கள் சத்தியத்தின் ஊடாகப் பயணம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் அதிகாரப்பூர்வமானது. அது எப்போதுமே எளிமையானதாக, கள்ளம் கபடமற்றதாகவே இருக்கும். இப்படிப்பட்ட செயல்கள் எப்போதுமே உங்களுக்குள் எந்தவித கர்மாவையும் உருவாக்குவதில்லை.
கர்மா என்றால் செயல், வினை, குறிப்பிடத்தக்க செயல் என்று பொருள்படுகிறது. அனைத்துச் செயல்களுமே கர்மாவை உருவாக்குவதில்லை என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். புத்தர் அவர் பிரமஞானத்தை அடைவதற்கு 42 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். அக்காலக்கட்டத்தில் புத்தர் வெறுமனே போதிமரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. அவர் பிரமஞானத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயல்களைச் செய்துகொண்டுதான் இருந்தார். ஆனால், புத்தர் எங்கேயும் கர்மாவை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. ஒருவர் பிரமஞானத்திற்காக எச்செயலைச் செய்தாலும் அல்லது செய்து கொண்டிருக்கும் முயற்சியில் இருந்தாலும் அங்கே கர்மா ஏதும் உருவாவதில்லை. கர்மா உருவாகாததால் நீங்கள் அங்கே சுதந்திரம் கொண்டவராக இருப்பீர்கள்.
இந்தச் செயல் எப்படியிருக்கும் என்று சற்றே கற்பனை செய்து பாருங்கள். வானத்தில் ஒரு பறவை ஆனந்தத்தில் தன் அழகு சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருக்கிறது. ஆனால், அது பறந்ததிற்கான எந்த காலடிச் சுவடுகளையும் அது வானத்தில் விட்டுவிட்டுச் செல்வதில்லை. ஒன்றுமில்லாமை என்கின்ற வானத்தில் வசிக்கும் ஒரு மனிதர் எந்தவொரு காலடித் தடத்தையும் எந்தவொரு கர்மாவையும் எதையும் மீதியாக விட்டுச் செல்வது இல்லை. காரணம் அவரின் செயல்பாடுகள் அனைத்துமே முழுமையானதாகவே இருக்கும். மேலும், அந்தச் செயல் முழுமையாக இருக்கும்போது அது முடிந்து போனதாக, நிறைவு பெற்றதாக இருக்கும். ஒரு முடிந்து போன ஒரு செயல் மேகக்கூட்டங்களைப் போல உங்களைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்காது. முழுமையான செயல்கள் தெளிந்த வானத்தைப் போல மிகச் சுத்தமாக பளிச்சென்று மின்னிக் கொண்டிருக்கும். உங்கள் செயல்கள் முழுமை அடையாத போது உங்கள் கர்மாக்கள் உங்களைச் சுற்றிலும் மேகங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கும்.
செயலானது ஒன்றுமில்லாத நிலையில் இருந்த வரும்போது அது எப்போதுமே கர்மாக்களை உருவாக்குவதில்லை என்றே புத்தர் கூறுகிறார். அதன்பின் அச்செயல் அந்தளவுக்கு முழுமையானதாக இருப்பதால், அந்தச் செயலின் வட்டமானது நிறைவடைந்து முடிக்கப்பட்டு விடுகிறது. அதன்பின் நீங்கள் அந்தச் செயலை ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதேயில்லை. நீங்கள் திரும்பிப் பார்க்கவும் கூடாதுதான். ஒரு செயல் நிறைவடைந்து விட்டால் அது முடிந்து போய்விட்டது. அதாவது முழு விசயமும் அடையப்பட்டு விட்டது. ஒன்றுமில்லாத நிலையில் இருந்து கொண்டு எப்போதும் செயல் புரியக் கற்றுக் கொண்டுவிடுங்கள் அன்பர்களே. உங்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முழுமையாக இருக்கட்டும், உடலளவிலும் மனதளவிலும்.
ஒரு செயலானது முற்றிலும் முழுமையினை அடையும்போதுதான், நீங்கள் அதிலிருந்து முழு விடுதலையைப் பெற்றவராவீர்கள். பாம்புகள் குறிப்பிட்ட காலத்தில் தன் பழைய உடல் தோலை அப்படியே விட்டுவிட்டுச் செல்வதைப் போலத்தான் உங்களின் முழுமையான செயல்கள் இருக்கும். பாம்பு பழைய உடற்தோலை ஒருக்காலும் தேடுவதேயில்லை. அதைப்போலத்தான் முழுமையான செயல்களின் விளைவுகளும் இருக்கும். உங்களின் நிறைவடையாத செயல்கள்தான் கர்மாக்களாக மாறுகின்றனவே ஒழிய, முழுமையான செயல்களால் அல்ல என்பதை ஒவ்வொருவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக நாம் நமக்குள் இருக்க வேண்டிய விழிப்புணர்வு நிலையினை சற்று தெரிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வில் மூன்றுவித நிலைப்பாடுகள் உள்ளன.
- தன்னைப் பற்றிய விழிப்புணர்வு,
- உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வு,
- தனக்கும் உலகத்திற்கும் இடையே குறுக்கிடுகின்ற கற்பனை பற்றி விழிப்புணர்வு
முதலில் இந்த ‘நான்’ என்னும் தன்முனைப்பானது ஒரு உண்மைத்தன்மை கொண்டது இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அது வெறுமனே ஒரு எண்ணம்தான், வேறொன்றுமில்லை. நீங்கள் பிறக்கும்போது இந்த தன்முனைப்பு எண்ணத்தோடு பிறக்கவுமில்லை ; இந்த பூமியை விட்டுப் போகும்போது இதைக் கொண்டு போவதுமில்லை. அது உங்களின் உயிருணர்வின் ஒரு பகுதியாக என்றுமே இருப்பதில்லை.
இந்த ‘நான்’ தன்முனைப்பு ஒழிந்து போகாமல் நீங்கள் முழுமை பெற்றவராக மாறவே முடியாது. இந்த ‘நான்’ செயல்பட ஏழு வாசல்கள் இருப்பதாக பிரமஞானிகளால் சொல்லப்படுகிறது. அவைகள்
- எனக்குள் ஏதோவொன்று அங்கிருக்கிறது என்ற பேதமான எண்ணம் உருவாகுவது
- சுய அடையாளம் காண்பது
- சுய மதிப்பு கொள்வது
- சுய விரிவாக்கம் செய்வது
- சுயக்கருத்து கொண்டிருப்பது
- பகுத்தறிவான சுயம்தான் வாழ்க்கை என்றிருப்பது
- தகுதிக்கான உழைப்பு, வாழ்வின் குறிக்கோள், இலட்சியத்தோடு இருப்பது
இந்த ஏழு வாசல்களைப் பற்றி எதற்காக இங்கே சொன்னோமென்றால், இந்த ஏழு வாசல்கள் வழியாகத்தான் ‘நான்’ என்ற ஆணவம் பலம் பெற்றுக் கொண்டே இருக்கும். இந்த வாசல்கள் அடைபடாது இருந்து கொண்டிருந்தால், இந்த ‘நான்’ என்ற ஆணவம் அடங்காமல் போய்க் கொண்டே இருக்கும். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டால், இந்த ஏழு வாசல்கள்மூலம் நமது ‘நான்’ உணர்வை, அகங்காரத்தை நம் தேகத்தைவிட்டு வெளியேற்றம் செய்துவிடலாம். அப்படி இந் ‘நான்’ ஆணவம் நம் உடலைவிட்டு வெளியேறும்போது, நன்றாக அதை உற்றுக் கவனித்து வந்து, இறுதியில் ஒரு கட்டத்தில் நல்லபடியாக “போய்வா நான் என்ற ஆணவமே” என்று கைகுலுக்கி விடை கொடுத்து அனுப்பிவிடுங்கள்.
சரி, நாமும் விடைபெற்றுக் கொள்வோமா.
பிரமஞானச் பொற்சபை குருகுலத்திலிருந்து
உங்கள் ருத்ர ஷிவதா, பிரமஞானப் பொற்சபைக் குருகுலம், சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!