
உடற்பிணி, உயிர்ப்பிணி நீக்கி ஊன உடலை ஒளியுடல் ஆக்கும் இரகசியம்…
அனைவரின் உடல் எதனால் ஆகியுள்ளது ?
அனைவரின் உடலும் 1.ரசம், 2.ரத்தம், 3.தசை, 4.கொழுப்பு, 5.எலும்பு, 6.மஜ்ஜை, 7.சுக்கிலம் என்னும் அசுத்த பூதக் காரியத் தாதுக்களால் ஆகியுள்ளது.
அதற்கு காரணம் என்ன ?
அசுத்த பிரகிருத்தி அணுக்களே அதற்கு காரணம்
அசுத்த பிரகிருத்தி அணுக்களால் ஆன உடலுக்கு என்னென்ன துன்பங்கள் வரும் ?
உடற்பிணிகள் 4448, உயிர்பிணிகள் 448, உளபிணிகள் 48, மரணப் பெரும் பிணி 8ம் வருகிறது, வரும் !
அசுத்த பூத காரிய அணுக்களை எவ்வாறு சுத்த பூத காரிய அணுக்களாக்குவது ?
அதற்கு என ஓர் உபாயம் உள்ளது. அதை சித்தர்கள் அறிந்தனர். அவ்வழியில் சமீபத்தில் வந்த வள்ளலார் தன்னுடலை ஒளியுடல் ஆக்கினார். அதை நமக்கு தெளிவாக கூறியுள்ளார்.
இதற்கான உபாயம் யாது ?
- இவ்வுடலை ஒளியுடலாக்கும் சுத்த சத்துவ ஆகார இரகசியம்.
- இந்திரிய, கரண ஒழுக்கத்தால் ஒளியுடலாக்கும் இரகசியம்.
- இறையருளால் ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களைக் கடைபிடித்து ஒளியுடலாக்கும் இரகசியம்.
- இரக்க குணமான ஜீவகாருண்யத்தால் ஒளியுடலாக்கும் இரகசியம்.
- இறைவனை தோத்தரித்து ஒளியுடலாக்கும் இரகசியம்.
- இவ்வுடலில் இயங்கும் பிராணனால் ஒளியுடலாக்கும் இரகசியம்.
- இவ்வுலகில் விசார வசதராக இருந்தே ஒளியுடலாக்கும் இரகசியம்.
- இவ்வுலகில் உறக்கத்தை குறைத்தே ஒளியுடலாக்கும் இரகசியம்.
- இறை ஓளி வழிபாட்டால் ஒளியுடலாக்கும் இரகசியம்.
சுத்த சத்துவ ஆகாரங்களில் முதன்மையானது எது ?
மூலிகைகள் – சுத்த சத்துவ ஆகாரங்களில் முதன்மை பெறும். இதற்கு சான்று யாது ?
மூலிகைக் கற்பம் முயன்றது அறுபதும்
பாலி உபரசம் பாங்காய் அறுபதும்
வாலிய சூதம் தங்கம் இரண்டும்
ஒலி ஒரு நூற்றிருபத்து இரண்டே
கற்ப மூலிகைகள் மொத்தம் 60; உபரசம் 60; தங்கம், ரசம் ஆகியன இரண்டும் சேர்த்தும் மொத்தம் 122 ம் காய சித்தி முறைக்கும் பயன்படுகிறது.
காய சித்திக்கு பயன்படும் மூலிகையின் பெயர்கள் யாவை ?
கருநெல்லி, கருத்த நொச்சி, கருவீழி, கருத்த வாழை, கரிய கரிசாலை, கருப்பான நீலி, கரியவேலி, கரூமத்தை, தீபச் சோதி, கொடு திரணச் சோதி, சாயா விருட்சம், எருமை கனைச்சான், ரோமவிருட்சம், சுணங்க விருட்சம், செந்திராய், செங்கள்ளி, செம்மல்லி யோடு, சிவந்த கற்றாழை, செஞ்சித்திர மூலம், கற்பிரமி, கல்தாமரை, ஆடாதொடை, மகாபொற்சீந்தல், வெந்திராய், வெண்புரசு, வெள்ளைத் துத்தி, வெள்ளைத் தூதுவளை, பாலையோடு, வெள்ளை நீர்முள்ளி, வெண்விண்டுக் காந்தி, வெண்கண்டங்காரி, கசப்பான பசலையோடு, மதுர வேம்பு, கிளிமூக்குத் துவரை, அழுகண்ணி, பொன் ஊமத்தை, மதுர கோவை, பொன்வன்னச் சாலியோடு, கருந்தும்பை, மூவிலையாம் குருத்துமாகும், சிவத்ததில்லை, கருத்த வேம்பு 2 எனக் கூறுகின்றனர் சித்தர்கள்.
இவைகள் மலைகளில் காணப்படும். இவைகளின் இரசம் 64 பாஷாணங்களையும் கட்டும். உபரசங்களுக்கு கொடுக்க சத்தாகும். இவைகளை கொண்டு சரக்குகளுக்கு சுருக்கு கொடுக்க சித்தியாகும். 40 நாட்கள் சாப்பிட்டால் காய சித்தியாகும். பொன் போல தேகமாகும். நரை, திரை மாறும். வாசி இறுகும். ஆகாயத்தில் சஞ்சரிக்கலாம்.
இவைகளை தவிர்த்த மூலிகைகள் நாட்டில் இல்லையா ?
உண்டு. அவைகளை வள்ளலார் குறிப்பிடுகிறார். இவைகளை முறைப்படி உண்டு லட்சோபலட்சம், கோடான கோடி ஆண்டுகள் வாழ்ந்த சித்தர்களையும் அவர்கள் உண்ட மூலிகைகளையும் காணலாம்.
அருட்சித்தர்கள் அனைவரும் எதையுண்டு எவ்வளவு காலம் வாழ்ந்தனர் ?
- கூர்ம முனி கருவீழி கற்பம் உண்டு கோடி யுகம் வாழ்ந்தார்.
- மச்சமுனி வல்லாரை கற்பம் உண்டு கோடி யுகம் வாழ்ந்தார்.
- பதஞ்சலி செருப்படை கற்பம் உண்டு கோடி யுகம் வாழ்ந்தார்.
- வியாக்ர பாதர் செருப்படை கற்பம் உண்டு பல கோடி யுகம் வாழ்ந்தார்.
- போகர் ஓமம் கற்பம் உண்டு ஐந்து யுகம் வாழ்ந்தார்.
- காலாங்கி நாதர் கரந்தை கற்பம் உண்டு அளவற்ற காலம் வாழ்ந்தார்.
- திருமூலர் கரிசாலை கற்பம் உண்டு 70 கோடி யுகம் வாழ்ந்தார்.
இச்சான்று போகர் அருளிய சப்த காண்டத்தில் 204 முதல் 206 வரையுள்ள பாடலில் கூறப்பட்டுள்ளது.
கற்பம் என்ற சொல்லின் மெய்ப்பொருள் என்னவென்று முதலில் பார்க்க வேண்டும்.
கற்பம் என்ற சொல்லை பின்வருமாறு பதம் பிரித்துப் பொருள் காணலாம்.
கற்பம் = கற்பு + அம் = கற்பு என்பதை கற்பூ அதாவது கருமை + பூ எனப் பிரிக்கலாம்.
கற்பம் = கருமை + பூ + அ + ம்.
அதாவது கருமையான பூவாகிய மெய்ப்பொருளில் இருக்கும் அகாரத்தையும் மகாரத்தையும் சேர்க்கும்போது உண்டாகும் அமிழ்தத்தைச் சாப்பிட்டோமென்றால், கோடி யுகம் / பலகோடி யுகம் என்பதுதான் கற்பம் உண்பதன் இரகசியப் பொருளாகும். ஆதித் தமிழ்ச் சித்தர்கள் சொன்னது இதைத்தான்.