அறிமுக உரை
ஔவைத் தாயானவர் ஒரு மனிதன் எப்படி ஞானத்தைப் பெற முடியும் என்பதை ஒவ்வொரு பகுதிகளாகப் பிரித்தெடுத்து அதை பத்து பாக்கள் கொண்ட அதிகாரங்களாகப் பிரித்து அதில் முழுமையான ஞானத்தைப் புகுத்திச் சென்றுள்ளார்கள். இதை தக்க ஞான சற்குருமூலம் விளக்கம் பெற்றுக் கொள்ளும் போது ஔவைத்தாய் முதற்கொண்டு அனைத்துச் சித்தர் பெருமக்களும் ஞானிகளும் சொல்லிச் சென்ற ஞானத்தின் சுவையும் ரசமும் புரியும்.
ஞானத்தை ஞானம் என்று படித்துவிட்டால், ஞானம் சித்தித்துவிடுமா? இனிப்பு என்றால் நா இனிக்குமா? அதுபோல்தான் எதையும் உணர்வால் உணரும்போதுதான் அது இனிப்பா? கசப்பா? ஞானமா? அஞ்ஞானமா? என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ள முடியும்.
உணவு சமைத்து, அதில் சுவை கூட்டிப் பரிமாறிட எவ்வளவு காலம் பிடிக்கிறது. இவ்வுலகின்கண் காணப்படும் அனைத்து உயிர்களும் படைக்கப்பட எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? உயிர்களை உருவாக்கிட எவ்வளவு பரிணாம மாற்றங்கள் ஏற்பட வேண்டும்? உயிர்களுக்குள் எவ்வளவு ரசவாத மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும்? உடலுக்குள் ரசவாதம் நடைபெற்றால் ஒழிய, இறை தரிசனம் கிடைத்திடவே கிடைத்திடாது.
உங்கள் உடலைப் படைத்திட தாய், தந்தையர் தேவைப்பட்டனர். தாய், தந்தையைப் படைத்திட பிரம்மன் தேவைப்பட்டார். பிரம்மனைப் படைத்திட இறைவன் தேவைப் படுவார். இறைவனின் செயல்முறை ஞானத் தந்திரங்களை, ஞானத் தத்துவங்களை மனிதனுக்குள் கொண்டுபோய் செலுத்திட இறைவனுக்கு குருவானவர் தேவைப்பட்டார். ஏனெனில், குரு ஒருவரே இறைவனை உள்ளது உள்ளபடி அறிந்திருக்கிறார்.
உங்கள் அனைவருக்கும் தக்க ஞான சற்குரு கிடைத்திட வேண்டும் என்று, எம் ஞான சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களையும் அன்னை ஸ்ரீ புவனேஷ்வரியையும் மனதாரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் தக்க ஞானசற்குரு கிடைப்பாராக.
சும்மா வருமோ சுகம்? சும்மா வருமோ தனு? சும்மா வருமோ ஞானம்? மனிதன் விரும்பும் ஒவ்வொன்றையும் அடைவதற்கு அவன் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அல்லவா. முயற்சி திருவினை ஆக்குவிக்கும். ஞானம் அடைய முயற்சி எனும் தவத்தினை மேற்கொள்ளுங்கள்.
ஞானத்திற்கானப் பக்குவத்தினை அடைந்து விட்டால் இறைவனே நினைத்திட்டாலும் ஞானத்தைத் தருவதை நிறுத்தி வைத்திட முடியாது. இது காலக்கணக்கு. பிரம்மனின் கணக்கு. எல்லாம் வல்ல இறைவனின் காலச் சாஸ்திரக் கணக்கு.
நமது பணி ஞானத்தைப் பெறுவதற்கான பக்குவ நிலையை அடைவதே. அதற்கான வழியைத்தான் ஞானக் குறளெங்கும் அள்ளி அள்ளிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் ஔவைத்தாய். பருகிட நமக்குத்தான் நேரம் இல்லை என்று கோயில், குளங்களிலும் ; காடு, மலை, குகைகளிலும் ; பலவிதமான ஆசிரமங்களிலும் தேடித் தேடி அலைந்து கிடைக்கப் பெறாமல் கடவுளுக்கு கண்ணில்லை என்று தூற்றவும் செய்கிறோம்.
ஞானத் திறவுகோல்
“என்னைத் தேடி எங்கேயும் ஓடாதீர்கள். நான் உங்களிலேயே இருக்கின்றேன். உங்கள் உயிராகவும் இருக்கிறேன். உயிரின் உயிராகவும் இருக்கின்றேன். அதைக் காணுங்கள். உங்களுக்குள் என்னைத் தேடிடுங்கள். உங்களைவிட்டு நான் வெளியே எங்கும் இல்லை. என் பிரதிபிம்பம் நீங்கள் எனும்போது, என்னை உங்களில்தான் பார்த்துக் கொண்டு உங்கள் வருகைக்காக ஒவ்வொரு நொடியும் காத்துக் கொண்டிருக்கிறேன். நித்தமும் உங்களை நான் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். ஆனால், கண்ணிருந்தும் நீங்கள்தான் என்னைப் பார்க்காமல் இருக்கிறீர்கள்” என்றே இறைவன் ஒலியாய் உரைத்தும் ஒளியாய் காட்டிக் கொண்டும் இருப்பதை இன்று எத்தனை பேர் அறிவால் அறிந்து, உணர்வால் உணர்ந்து, நினைவால் நெகிழ்ந்து வந்திருக்கிறோம். யாராவது ஓரிருவர் இருந்தாலே அது மிகப்பெரிய அதிசயம். கண் இருந்தும் என்னைப் பார்க்காமல் இருக்கிறீர்கள்.
உங்களுக்குள் மறைபொருளாய் மெய்ப்பொருளாய் மறைந்திருக்கும் ஈசனை நம் இறையை நாம் காணும் அற்புத ஞானத் தந்திரத்தை மனித குலம் ஞானத்தில் சிறந்தோங்கிட வேண்டுமென்ற மிகப்பெரிய தாயுள்ளத்தால் மறைக்கப்பட்ட ஞானப் பெட்டகத்தை திறக்கும் திறவுகோலை (சாவியை) நம்மிடம் பாக்களாக கொடுத்துச் சென்றுள்ளார் ஔவைத்தாய். ஞானத் திறவுகோலால் உங்களைக் கொண்டு உங்களைத் திறந்துகொள்ள வாருங்கள் என்றே அழைக்கின்றோம்.
எல்லோர்க்கும் எல்லாம் பொதுவானதே. ஞானமும் அப்படியே. ஞானத்தை கடைவிரிக்கின்றோம் : ஆனால் எடுத்துக் கொள்வார் யாரும் இல்லாமல்தானே மாயையில் தன்னை மறைத்துக் கொண்டுவிடுகிறது ஞானம்.
கண் மறைக்க காணும் காட்சி இவ்வுலகில் ஏதுமில்லை.
விண் மறைக்க நிகழும் இறை சக்தி நமக்கும் ஏதுமில்லை. கண்ணும் விண்ணும் கண்டுவிட்டால் நமக்குள் வந்திடாத ஞானப் பெட்டகம் ஏதுமில்லை.
சொல்ல வல்லார் உண்டானால் அவரை நாமும்
தொழுது குருவெனப் பணிந்து வணங்கலாமே.
இப்படி சொல் பிறந்த இடத்தையும் முப்பாழையும் துவார பாலகர்களையும் முதற் பாழையும் நல்ல சங்கையும் நதியையும் வைகுந்தத்தையும் ஆலிலை மேல் படுத்துக் கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவையும் ஐம்பூதங்கள் ஒடுங்கும் இடத்தையும் ஆறைந்து இதழிரண்டு முளைக்கும் இடத்தையும் நமக்குள் தொட்டுக் காட்டி ஞானவிதையை விதைத்து மெய்ப்பொருளை கண்முன்னே காட்டிக் கொடுக்கும் வல்லாற்றல் கொண்ட ஞானசற்குருவைத் தொழுது பணிந்து சாகாக் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும். தீக்ஷையின்போது குருவானவர் இவைகளுக்கு விளக்கம் கொடுப்பார்.
பிரம்மஞானத் தவம்
இந்த ஔவை ஞானக்குறள்களின் சாராம்சமே, சாகாக் கல்வியை அனைவரும் பரிபூரணமாக பெறவேண்டும் என்பதுதான். ஒரு தாயின் பரிவு, கருணை, அன்பு, அமுதூட்டல், எதிர்பார்ப்பு, லட்சியம் போன்றவற்றை இக்குறள்களில் அனைத்து இடங்களிலும் கண்டு கண்டு இன்புற்றிடலாம். திருமூலர் கூறிச்சென்ற சத்தியத்தையே மெய்ப்பொருளையே ஔவைத்தாயும் இங்கு நமக்கு வாரி வாரி வழங்கியுள்ளதைக் காணலாம்.
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே” (தி.ம.85)
நமது சிரசில் பற்றி இருக்கக் கூடிய மறைபொருளாம் திருவடிகளைச் சொல்ல வேண்டுமென்றால், அது நமது உடலைப் பற்றியிருக்கும் உணர்வுநிலையில் இருக்கக்கூடிய திருவடியே பேசாத மந்திரம். பேசாத மந்திரத்தின் மையத்தில்தான் வாலைத்தாய் இருக்கின்றாள். வாலையின் சிரசில்தான் சிவம் இருக்கின்றார். இந்த மந்திரத்தை பற்றிப்பற்றி பிரம்மஞானத் தவம் செய்து வந்தால், நமக்குள் தலைவனாக இருக்கும் சிவத்தைப் பிடித்து விடலாம் என்று திருமூலர் கூறியுள்ளதை இங்கு உணர்ந்து கொள்வது சாலச் சிறந்தது.
பேசாத மந்திரமாக சிவம் இருப்பதால்தான் சிவன் படத்தை ஓவியமாக வரைபவர்கள் எப்போதும் தவநிலையில் இருப்பதைப் போன்றுதான் சிவபெருமானின் ஓவியத்தை வரைந்து வருகிறார்கள்.
சிவத்தின் ஓவியம் சொல்லும் விசயம் என்னவென்றால், எப்பொழுதும் பிரம்மஞானத் தவத்தை செய்து வந்தால், நாமும் சிவமாகலாம் என்பதுதான்.
சிவத்தை வெளியில் தரிசிக்க ஓடாதீர்கள் ; உங்களுக் குள்ளேயே பேசாத மந்திரமாக அவன் வீற்றிருக்கிறான். அங்கு சென்று விட்டால், அவனை மிகச் சுலபமாகப் பிடித்துவிடலாம்.
சிவத்தைப் பிடித்திடத் தடையாக இருப்பது மூன்று விசயங்கள்தான். அவைகளை மும்முலங்கள் என்று சான்றோர்கள் கூறுகிறார்கள். அவை ஆணவம், மாயை, கன்மம் என்பவைகளாகும்.
கண்ணில் இருக்கும் இருட்டுக்கு இவைகளே காரணங்களாக இருக்கின்றன. மாயையின் மூலவித்து பிரம்மக் கிரந்தி ; கன்மம் என்ற காமியத்தின் மூலவித்து விஷ்ணுகிரந்தி ; ஆணவத்தின் மூலவித்து ருத்திரக் கிரந்தி ஆகியவைகளே மூன்று திரைகளாக திருவடிகளில் நின்று ஞானச் செல்வங்களையும் தெய்வச் சக்திகளையும் மனிதன் அடையவிடாமல், சுவர்போல நின்று தடுத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் மனிதன் எப்போதும் அஞ்ஞானம் என்ற அறியாமையிலேயே மூழ்கிக் கிடந்து சிவத்தை அடையாமலேயே சவமாகிப் போகின்றான். இந்த மூன்று கிரந்திகளின் முடிச்சுகளை அவிழ்த்தால் மட்டுமே ஞானவாசலில் உள்நுழைந்து செல்லமுடியும். அதற்கு ஒரே வழி திருவடிகளில் செய்யக்கூடிய பிரம்மஞானத் தவம் ஒன்றேதான்.