உலக உயிர்கள் பிரமஞானம் அடையும் வழி
உலக உயிர்கள் அனைத்தும் பிரமஞானம் அடைந்தே தீரவேண்டும் என்ற தீராத நோக்கத்தோடே இக்குருகுலம் ஆதித்தமிழ்ச் சித்தர்களால் ஆதிகாலத்தில் இவ்வுலகில் ஆரம்பிக்கப்பட்டது. இக்குருகுலம் மனித வரலாற்றின் ஆரம்பப் புள்ளி.
மனிதன் என்றைக்கு தான் ஆறறிவு கொண்டவனாகப் படைக்கப்பட்டானோ, அன்றே அவனின் உயிரில் இறைவன் இந்த பிரமஞான விதையை விதைத்தே இப்பூமிக்கு அனுப்பினான்.
மனிதர்களில் சிலர் மட்டுமே பிரமஞானத்தை அடைய வேண்டும் என்ற கனவுகளோடும் இலட்சியங்களோடும் குறிக்கோளோடும் வைராக்கியத்தோடும் விடாமுயற்சியோடும் வாழ்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக பிரமஞானத்தை அடைந்தே தீருவார்கள். அவர்கள் வாழ்க்கையில் நிகழ வேண்டியதெல்லாம், ஒரு ஞான சற்குரு கிடைக்க வேண்டும், அவ்வளவுதான். அந்த குரு கிடைத்தபின், ஒருவன் பிரமஞானத்தை அடைவதென்பது சுலபமே.
எது பிரமஞானம்? என்றால், ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்வது. தான் சதையும் எலும்பும் இரத்தமும் நரம்பும் கொண்ட உடம்பு மட்டுமல்ல ; இந்த பல மில்லியன் உடல் அணுக்களையும் தாங்கிக் கொண்டு, அவற்றை அணுஅணுவாகவும் மிகத் துல்லியமாகவும் மிகச் சரியாகவும் அற்புதமான புரிதல்களோடு, ஆற்றல்களோடு இந்த உடல் இறவாமல் இருப்பதற்காக ஒவ்வொரு நொடியும் ஒளியாற்றலைக் கொடுத்து, உடலை 98.70 F (370C) வெப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கிறதே அதுதான் உயிராற்றல்.
- உடலை இப்படித்தான் இயக்க வேண்டும்,
இப்படித்தான் அதைக் குணப்படுத்த வேண்டும்,
இப்படித்தான் வழிநடத்த வேண்டும், - நோய்க்கிருமிகள் உள்ளே வந்தால் இப்படித்தான் போராடி அவைகளைக் கொன்று உடலைக் காப்பாற்ற வேண்டும்,
இப்படித்தான் சுவாசம் உள்ளே வரவேண்டும், வெளியே செல்ல வேண்டும், - இப்படித்தான் இரத்தம் இதயத்தில் உள்ளே நுழைய வேண்டும்,
- சுத்தப்படுத்தி அசுத்த இரத்தத்தை இப்படித்தான் வெளியேற்ற வேண்டும்,
- உண்ட உணவு இப்படித்தான் சீரணிக்கப்பட வேண்டும்,
சீரணிக்கப்பட்டபின் மலங்களை இப்படித்தான் வெளியேற்ற வேண்டும், - இப்படித்தான் கண் பார்க்க வேண்டும், அதற்கு ஒளியை இப்படித்தான் உள்ளே அனுப்பி காட்சிகளை காண வைக்க வேண்டும்,
- மூளை இப்படித்தான் இயங்க வேண்டும், செயல்பட வேண்டும்,
எலும்பு மண்டலங்களை இப்படித்தான் வலிமைப்படுத்திட வேண்டும்,
தசை மண்டலங்கள் உடலை இப்படித்தான் போர்த்திப் பாதுகாத்திட வேண்டும் என்ற அறிவெல்லாம் யார் நமக்குக் கற்றுக் கொடுத்தது? தாயா? தந்தையா? குருவா? விஞ்ஞானியா? யார் அது? அவர்தான் நம் உயிர். அந்த உயிரப்பன் எங்கே இருக்கின்றான்? அவன் என்ன செய்து கொண்டிருக்கின்றான்? அதைக் காண்பது எப்படி? அவனோடு பேசுவது எப்படி? பேசி மகிழ்வது எப்படி? அவன் உண்ணும் உணவு என்ன? அவற்றை அவனுக்கு ஊட்டி இன்புறுவது எவ்வாறு? இதையெல்லாம் நாம் அறிவால், தவத்தால் உணர்ந்து முழுமையாக தெளிவடைவதற்குப் பெயர்தான் ஞானம் என்பது.
ஒளியும் ஒலியும் இணையும் நேர்காணல்
ஞானம் என்பது ஞான் + அம் என்று பதம் பிரிக்க வேண்டும். ஞான் என்றால் நாம் என்று பொருள். அம் என்பது அ என்ற அகாரமும் ம் என்ற மகர மெய்யும் சேர்ந்தது. அதாவது அகாரம் என்றால் ஒளி, அந்த ஒளிதான் நம் உயிராக இருக்கிறது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. மகர மெய் என்பது ம். மகரத்தை மகாரம் என்று சொல்வதும் உண்டு. மகாரத்தின் எண்ணிக்கை பத்து. அகாரமும் உகாரமும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வர நிலைதான் மகாரம். அது நமது மூன்றாவது கண்ணாகும். ஆக ஒளியுடன் பொருந்திய மூன்றாம் கண்ணாகிய ஞானக்கண்ணின் வடிவம்தான் ஞான் என்ற நான். நான் ஒளி வடிவம் பொருந்திய ஞானக் கண்ணாவேன் என்பதுதான் ஞானத்தின் மெய்ப்பொருள். இந்த மெய்ப்பொருளை நாம் அறிவால் அறிந்து, அரிந்து, உணர்ந்து, உண்டு வந்தால்தான் நம்மால் ஞானமாகவே மாற முடியும்.
அறிவு = அறி + உ. உகாரம் என்ற உயிரை அறிவதுதான் அறிவு. உகாரம் என்பது ஒலி. அதாவது நாதம். இந்த நாதச் சக்தியை நாம் எப்போது உணர்வால் உணர்ந்து அனுபவிக்கின்றோமோ, அப்போதுதான் நம் உயிருக்குத் தேவையான நாதச் சக்தி நம் உடலுக்கு முழுமையாகக் கிடைத்திடும். ஆக ஞானமும் அறிவும் இணைந்த நிலை நம் தேகத்தில் நடைபெற்றே ஆக வேண்டும். அதுவும் முழு வடிவமாக. ஞானம் என்ற ஒளி அறிவும் அறிவு என்ற ஒலி அறிவும் பரிபூரணமாக நம் உயிருக்கு நாம் கொடுத்தால் மட்டுமே நாம் பிரமஞானத்தை அடைய முடியும். ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அசைக்க முடியாத பிரபஞ்சக் கோட்பாடுதான் இந்த பிரமஞான விதிகள். இந்த பிரமஞானத்தை ஒரு சென்மத்தில், இரண்டு சென்மத்திலெல்லாம் நம்மால் அடைந்து விட முடியாது. ஒளி அறிவையும் ஒலி அறிவையும் நாம் உயிருக்கு கொடுத்தால் மட்டும் போதாது. உயிர் ஏற்கனவே ஒளியாகத்தான் இருக்கிறது. ஆனால், அது அணு வடிவிலேயே இருந்து கொண்டிருக்கிறது. எம் சற்குரு சொல்வார்கள் : அந்த உயிர் நம் தலைக்குள்ளே, மூளையின் நடுப்புள்ளியில் கோடி சூரியப்பிரகாசம் கொண்டு ஒற்றை ஒளி அணுவாக உள்ளது என்று.
இந்த அமுத வார்த்தைகள் எனக்கு 21வது வயதில் சதுரகிரி மலையில் நடந்தது. நான் யார் என்பதை முற்றாக உணர்ந்த தருணம் அது. அன்றிலிருந்து எனது வாழ்க்கைப் பாதையே முற்றாக மாறிப்போனது. அவர் கற்றுக் கொடுக்கும் பிரமஞானத் தவங்களை நேரத்தையும் உணரும் உணர்வறிவையும் பெருக்க ஆரம்பித்தேன். மூன்று வருடத்தில் ‘நான்’ யார் என்பதை உணர்ந்தேன். என் பிறவியின் நோக்கத்தை முழுமையாக உள்வாங்கி இருக்கலாலேன். தற்போது எம் பிறவியின் நோக்கம் முடிந்தது. இருப்பினும் எம்மைப் போல் உலக உயிர்களும் பிரமஞானத்தை அடைந்து இறையொளியோடு பேரின்பத்தில் திளைத்து இறையோடு ஒன்று கலந்திட வேண்டும் என்றே ஆதித் தமிழ்ச் சித்தர்களின் ஆணைக்கிணங்க, இந்த பிரமஞானப் பொற்சபை குருகுலத்தை நடத்தி வருகிறோம். அதனால்,
1. உலக உயிர்கள் அனைத்தும் முழுமையாக பிரமஞானத்தைக் கற்று உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.
2. ஒவ்வொரு உயிரும் அவரவர் பிறவியின் நோக்கத்தை அறிந்து, உணர்ந்து, செயல்படுத்தி முழுமை பெற வேண்டும்.
3. அவர்கள் இப்பூமியை விட்டுச் செல்லும்போது பிரமஞானத்தை அடைந்திடாமல் இருக்கவே கூடாது.
4. இந்த பிரமஞானக் கல்வியை உலகம் முழுக்க கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
5. இது பற்றிய ஞான நூல்கள் அனைத்து உயிர்களும் படித்து, இன்புற்று, பிரமஞானப் பாதையில் நடந்திட வேண்டும்.
6. இந்த பிரமஞானக் கல்வியை நமது அனைத்து கல்விநிலையங்களில், கல்லூரிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் பாடத்திட்டமாக வைத்து, மாணவர், மாணவிகளுக்கு பிரமஞானத்தை விதைத்திட வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் தன்னைத் தானே உணர்ந்திட்டால் அவர்களால் எந்தவித தீங்கும் இந்த உலகத்தில் நடக்காது. தன்னை உணர்ந்தவன், தன்னை உயிராகக் கண்டவன் மற்ற உயிர்களையும் அன்புடனே நேசித்து மகிழ்வடைவான். பிற உயிர்களும் தன் உயிர்போலத்தான் என்ற உணர்வு அவனுக்குள் விதையாக உயிருக்குள் விதைக்கப்பட்டதால், அவனால் இந்த உலகத்திற்கு எல்லா வகையிலும் நன்மைகளே விளையும். ஒரு அணுவும் தீங்கு விளையாது.
7. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கைப் பணியை ஆரம்பிக்கின்றான். ஆனால், அவன் உறக்கம் நீங்கி, காலையில் எழுந்ததும் இந்த பிரமஞானத் தவத்தை செய்துவிட்டுத்தான் அவன் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். அந்நிலை ஏற்படும்போது, அவனால் அவன் செய்யும் காரியங்களில் முழுமையாக வெற்றிகளைக் காண முடியும்.
8. இந்த பிரமஞானத்தால் அவனுக்கு உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், ஆன்ம ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் முறையே கிடைத்திடும்.
9. இந்த மூன்று ஆரோக்கியமும் கிடைக்க ஒரே வழி இந்த பிரமஞானத் தவத்தை முறையாய் ஞான சற்குருவிடம் கற்றுக் கொண்டு செய்துவருவதுதான்.
10. ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக உணர்ந்திட வேண்டும். தன்னை உணராத காரணத்தால்தான் மனிதன் எவ்வளவோ தீங்குகளை செய்து கொண்டிருக்கிறான். அதனால் இந்த மனித சமுதாயமே சீர்குலைந்து போயிருக்கிறது. மனித சமுதாயம் சிறப்புற்று வாழ வேண்டும் என்றால், முதலில் ஒரு தனி மனிதனுக்குள் இருக்கும் தீய எண்ணங்கள் (காமம் குரோதாதிகள்) முற்றாக ஒழிந்தாக வேண்டும் ; எரிக்கப்பட்டாக வேண்டும். பிரமஞானத் தவம் அதை அற்புதமாக செய்திடும்.
11. ஒரு தனி மனிதன் பிரமஞானத்தை அடைந்தால் அவன் குடும்பமே பிரமஞானத்தை அடைந்திடும் ; ஒரு குடும்பம் பிரமஞானத்தை அடைந்தால் ஒரு ஊரே பிரமஞானத்தை அடைந்திடும் ; ஒரு ஊர் பிரமஞானத்தை அடைந்தால் ஒரு மாவட்டமே பிரமஞானத்தை அடைந்திடும் ; ஒரு மாவட்டம் பிரமஞானத்தை அடைந்தால் ஒரு மாநிலமே பிரமஞானத்தை அடைந்திடும் ; ஒரு மாநிலம் பிரமஞானத்தை அடைந்திட்டால் ஒரு நாடே முழுமையாய் பிரமஞானத்தை அடைந்திடும் ; ஒரு நாடே பிரமஞானத்தை அடைந்துவிட்டால் இந்த உலகமே பரிபூரண, முழுமையான, சாத்வீகமான பிரமஞானத்தை அடைந்திடும். இதுதான் நம் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் கனவும் இலட்சியமும் ஆகும்.
12. இந்த கனவையும் இலட்சியத்தை மனதில் கொண்டுதான் நமது பிரமஞானப் பொற்சபை குருகுலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனி மரம் தோப்பாகாது. அனைவரும் சேர்ந்து உள்ளே வந்தீர்களென்றால், இந்த உலகத்தையே புடம் போட்டு பொன்னாக்கி விடலாம்.
13. அனைத்து உயிர்களும் அசுத்த தேகம் நீங்கி சுத்தத் தேகத்தைப் பெறவேண்டும். அதைத்தொடர்ந்து பிரணவ தேகத்தைப் பெற வேண்டும். அதன்பின் ஒளி தேகத்தைப் பெற வேண்டும்.
14. இறுதியாக ஞான ஒளியுடலைப் பெற்று இறைவனோடு, இறையொளியோடு இரண்டறக் கலந்திட வேண்டும்.
15. இதற்காக சித்தர்களின் பிரமஞானிகளின் அத்தனை ஞானங்களின் சூக்குமங்களை, இரகசியங்களை அவர்களின் அனுமதியோடு மறைக்காது உள்ளது உள்ளபடியே இருக்கும் முழுமையான பிரமஞானங்களை நூல்களின் வடிவிலும், பேச்சுரைகளிலும், தீக்ஷையின் வடிவிலும் இவ்வுலக மக்களுக்கு வழங்கி வருகின்றோம்.
16. பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் இலக்கு, இலட்சியம், கனவு அத்தனை மனித உயிர்களும் பிரமஞானத்தை அடைந்து இறைவனோடு ஒளியாக கலந்திட வேண்டும். தன்னை உணராது யாரும் இந்த பூமியைவிட்டு செல்லவே கூடாது என்பதே.
17. இதற்காக 1267 ஆண்டுகளுக்கு இப்பூமிக்குக் கொடுக்கப்பட்ட திருவாசகம் என்னும் உயிர் மலரும் தமிழ் வேத நூலுக்கு ஞான மெய்ப்பொருளுரையை இரண்டு பாகங்களாக எழுதி, பிரமஞானப் பொற்சபை குருகுலம் வெளியிட்டிருக்கிறது. முழுக்க, முழுக்க பிரமஞானத்தின் அடிப்படையில் விளக்கம் திருவாசகத்திற்கு வழங்கியிருக்கிறோம். இனி உலகம் திருவாசகத்தை பக்தி நூலாகப் பார்க்காது. பரிபூரணமான ஞான நூலாகத்தான் பார்க்கும். படித்த அனைவரும் பிரமித்துப் போய் மலைத்து நிற்கிறார்கள். எப்படி இது சாத்தியம் என்றே அசந்து போய் நிற்கிறார்கள். எல்லாம் ஆதித்தமிழ்ச் சித்தர்கள் நமக்குள் விளைவித்துக் கொண்டிருக்கும் பிரமஞானம் அன்றி வேறில்லை. இந்த அறிவு, ஞானம் எல்லாமே எம் குரு எமக்கிட்ட பொக்கிசம். வேறென்ன சொல்ல முடியும். ஆதித்தமிழ்ச் சித்தர்கள் நம்மை, நம் உயிரை, நம் ஞான அறிவை இயக்குகிறார்கள், அவ்வளவுதான்.
18. நீங்களும் இந்த பிரமஞானத் தவத்தைக் கற்றுக் கொண்டு, உங்களைப் போல் மற்ற மனித உயிர்களும் பிரமஞானம் அடைந்திட உதவிட வேண்டும் என்று அன்போடும் பணிவோடும் கேட்டுக் கொள்கின்றோம்.
19. நாமெல்லாம் தனி மரமல்ல, தோப்பாக இருக்கின்றோம் என்பதை இந்த உலகத்திற்கு நாம் நிரூபிக்க வேண்டும்.
20. பிரமஞானப் பொற்சபை குருகுலத்தில் நிறைய ஞான நூல்களுக்கு மெய்ப்பொருள் உரைகளை எழுதி வருகின்றோம். எண்ணற்ற மனித உயிர்களுக்கு இந்த பிரமஞானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டில் துவங்கியிருக்கின்றோம். இனி உலகம் முழுக்க இதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். நிறைய ஞான நூல்களை வெளியிடவும் உலகம் முழுக்க மனித உயிர்களுக்கு பிரமஞானங்களைக் கற்றுக் கொடுக்கவும் உங்களால் முயன்ற உதவிகளைச் செய்து மகிழும்படி அனைவரையும் மிகப் பணிவன்போடு பிரமஞானப் பொற்சபை குருகுலம் கேட்டுக் கொள்கிறது.
21. நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ தானங்களை, தருமங்களை, அறங்களைச் செய்து மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால், தானத்திலேயே சிறந்த தானம் எது தெரியுமா, உயிர்களே? அது பிரமஞானத்தை தானம்தான். உங்களுக்கு இதைவிட வேறென்ன பெரிதாக மனித உயிர்களுக்குத் தானமாக, கொடையாக கொடுத்துவிட முடியும்? இந்த தானத்தை நீங்கள் அனைவரும் உங்களால் முடிந்தமட்டும் செய்து உங்கள் உயிரை இன்புற வைக்கலாம். ஒருவர் ஞானம் அடைய நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு உதவியும் உங்கள் உயிரை இறைவனை நோக்கி வேகமாக நகர்த்திக் கொண்டு செல்லும். இந்தப் பிரபஞ்சமே உங்களை அமுதமாய் ஆசிர்வதிக்கும். யாமும் உங்கள் அனைவரையும் ஆசிர்வதித்து மகிழ்கின்றோம், வாருங்கள் பிரமஞானத்தைக் கற்றுக் கொண்டு என்று சொல்லி அமைகின்றோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!