குருவை பற்றி
ஔவை ஞானக் குறளின் சூட்சும ஞானத் திறவுகோல், பிரமஞானக் கிரியா, பிரமஞானத் தீக்ஷை, பிரமஞானக் குருகுலம் மற்றும் உயிர் மலரும் தமிழ்வேதம் திருவாசகம் ஆகிய நூல்களின் ஆசிரியர் முனைவர் ருத்ர ஷிவதா அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி கிராமத்தில் கடந்த 18.06.1967 ஆம் ஆண்டில் பிறந்தவர். தற்போது சேலம் மாவட்டத்தில், ஓமலூர் வட்டம், வெள்ளாளப்பட்டி என்னும் கிராமத்தில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். ஆசிரியர் அவர் தம் வாழ்நாளில் இதுவரை ஐந்து முதுகலைப் பட்டமும் ஒரு முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
ஆசிரியர் அவரது 21வது வயதில் அவரின் சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களால் ஆட்கொள்ளப்பட்டு, சதுரகிரி மலையில் ஐந்து ஆண்டுகள் சித்தர்களின் மெய்வழி ஞானப் பாதையில் மெய்க்கல்வி போதிக்கப்பட்டு அனுபவத்திற்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக (36 ஆண்டுகள்) இவ்வாசிரியர் சித்தர்களின் மெய்வழி பிரம்மஞானக் கல்வியில் ஆழ்ந்து தோய்ந்து ஊறி வாழும் ஞான குருவாக வாழ்ந்து வருகிறார்.
தான் பெற்ற இன்பத்தை தமிழ் மக்களும் தமிழ்ச் சமுதாயமும் பெற வேண்டும் என்பதற்காக இந்த மெய்வழி பிரம்ம ஞானக் கல்வியை உள்ளது உள்ளபடி எதையும் மறைக்காமல் ஆதித் தமிழ்ச் சமுதாயம் வாழ்ந்த காலத்தில் இருந்த மெய்வழி ஞானத்தை அப்படியே அத்தனை ரகசியங்களையும் உடைத்தெறிந்து தமிழ்ச் சமுதாயத்திற்குக் கல்வியாக கொடுத்து வரும் ஞானப் பணியினை செய்து வருகிறார்.
ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அத்தனை ரகசியங்களையும் இவரிடத்தில் ஒருங்கே கண்டு இன்புற்று மகிழலாம். எதையும் மறைக்காமல் மக்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெறவும் ஆன்ம விடுதலை பெறவும் பேரின்பத்தில் தனக்குள் திளைக்கவும் இறைவனே கோயிலாக தனக்குள் இருப்பதையும் அந்த கோயிலுக்குள் ஒளியாக இருக்கும் மனித உயிரொளியை நித்தமும் தனக்குள் கண்டு கண்டு விண்டு விண்டு அமுதக் காற்றில் மிதந்திடவும் சாகாத் தன்மை கொண்ட அமுதத்தை பிரபஞ்சத்திலிருந்து எப்படி உறிஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் ஆசிரியர் கற்றுக் கொடுத்து அனுபவத்திற்கு கொண்டுவரும் பாங்கு இன்றைய கால மனிதத்திற்குக் கிடைத்த சித்தர்களின் அருட்கொடை எனலாம்.
தற்போது இவரின் சற்குரு ஞான ஒளிதேகத்தை அடைந்து இமயமலையில் ஒளிதேகியாக வாழ்ந்து ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சற்குருவின் உத்திரவுக்கிணங்க, சித்தர்களின் அருளாசியும் கிடைக்கப் பெறவே நமது தமிழ்த் தாயான ஔவை அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் பாடிய முந்நூற்று பத்து ஞானக் குறள்களுக்கு (310 ஞானக் குறள்கள்) மெய்ப்பொருள் உரை கண்டிருக்கிறார். ஔவை ஞானக் குறளுக்கு இதுபோன்ற மெய்ப்பொருள் ஞானவுரை இதுகாறும் தமிழ் உலகத்தில் வந்ததில்லை. கலியுகத்தின் கட்டாயம் இந்நூல் வெளி வந்திருப்பது.
இரண்டாம் நூலாக மகா அவதார் பாபாஜி அவர்களின் ஏழு யோக இரகசியங்களின் பாடங்களையும் அவைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும், அவற்றின் பயன்களையும் பற்றி வண்ணப் படங்களுடன் எழுதியிருக்கும் பாங்கு இருக்கின்றதே, அது இதுவரை வெளிவராத ஒரு அரிய ஞானயோக நூலாகும்.
1267 ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட திருவாசகத்திற்கு 1568 பக்கங்களில் இரண்டு பாகங்களில் ஞான மெய்ப்பொருளுரைகளை ஆதீனச் சான்றோர்களே பிரமிக்கும் அளவுக்கு எழுதி, அவர்களின் திருக்கரங்களாலே வெளியிட்டிருக்கிறார். இது இவருக்கு பிறவிப்பிணியை நீக்கி பிரமஞானத்தைக் கொடுத்திருக்கிறது. பிறவிப் பெரும்பயனை அடைந்துவிட்டேன் என்று கண்ணீர் மல்க இந்நூல் வெளியீட்டின்போது பேச முடியாது விக்கித்துப் போய், நா தழுதழுத்துக் கூறியது கண்டு மக்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
இந்நூல்களைப் படிப்போர் தனக்குள் திகைத்துப் போகாமலும் ஆச்சரியம் கொள்ளாமலும் இருக்க முடியாது. இந்நூல் கண்ட மெய்ஞான உரைகள் ஆசிரியரின் அனுபவத்தில் கண்டவைகளன்றி வேறில்லை. இதற்கு ஆதாரம் ஆசிரியரின் மாணவர்கள்தான். இவர்தம் மாணவர்கள் பெற்று வரும் ஞான அனுபவங்கள் ஏராளம், ஏராளம். இம்மெய்வழி பிரம்ம ஞானத்தைக் கற்போர் அனைவரும் ஆனந்தக் கூத்தாடி வருவதே இந்நூலில் ஔவை நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கும் ஞானப் பொக்கிசம். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் கழித்தே இந்த ஞானக் குறள்களுக்கு மெய்ஞ்ஞான உரை ஆசிரியரால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
ஔவைத் தாய், மாணிக்கவாசகர், வள்ளலார், திருமூலர் கூறும் அத்தனை ஞானத் தந்திரங்களின் ரகசியங்களை குருவின் அருளால் சல்லி, சல்லியாக உடைத்தெறிந்து உண்மையை, சத்தியத்தை, அற்புத தமிழ் ஞானத்தை திகட்ட, திகட்ட அள்ளி அள்ளி பருகும்படி தமிழ்ச் சமுதாயத்திற்குக் கொடுத்திருக்கிறோம். ஔவையின் ஞானத் தந்திரங்கள், மாணிக்கவாசகரின் ஞானப் பொக்கிசங்கள் அவ்வளவு வலிமையானவை. தெய்வ மாகவிகளான ஔவை மற்றும் மாணிக்கவாசகரின் வாக்கு ஒருகாலும் பொய்த்துப் போகாது. சரசுவதியின் மறுபிறப்பாளர்தான் ஔவை. சிவமாகவே வெளிப்பட்டவர் தான் மாணிக்கவாசகர்.
இந்த மெய்வழி பிரம்மஞானக் கல்வியைக் கற்று பிரம வித்தையைச் செய்து கொண்டிருக்கும் போது, இறைவனே ஒளியாக எழுந்து நம்மை வழிநடத்திச் செல்வான் என்று எம் குருநாதர் அடிக்கடி சொல்வார்கள்.
பிரமஞானத் தவத்தில் ஆழ்ந்து செல்லும்போது சாதகனுக்கு பத்து அறிவு நிலைகள் தோன்றும். மனிதர்கள் வெறும் ஆறறிவு நிலையிலேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவை தொடு அறிவு, சுவைக்கும் அறிவு, முகரும் அறிவு, பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு ஆகிய புலனறிவுகள் ஐந்தோடு ஆறாம் அறிவான சிந்திக்கும் அறிவை மனிதக்குலம் மட்டும்தான் பெற்றிருக்கிறது.
அறிவு என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறி + உ = அறிவு.
உ என்றால் உகாரம், உயிர் என்று பொருள்.
உன் உயிரை அறி என்பதே அறிவாகும்.
உயிர் இல்லாமல் எந்த ஜீவராசியும் மண்ணில் வாழ இயலாது. அந்த உயிரை அறியும் கல்வியைத்தான் மனித குலம் முதலில் கற்கவேண்டிய கல்வியாகும். உயிரைக் கற்காத, உயிரை அறியாத, உயிரில்லாக் கல்விகளைக் கற்று என்ன பயன்? கடைசியில் செத்துப் போகத்தான் இக்கல்விகள் உதவிடும். சாகாக் கல்வியே மெய்க்கல்வி. மற்றவை எல்லாம் பொய்க்கல்வி.
அடுத்ததாக ஏழாம் அறிவு இருக்கிறது. அதன் பெயர் குறிப்பறிவு. குறிப்பால் உணர்ந்து கொள்ளும் அறிவு. இதை ஆங்கிலத்தில் Intuition என்பார்கள்.
அடுத்த எட்டாம் அறிவே மெய்யறிவு ஆகும். இது ஞானிகளின் முத்தர்களின் அறிவாக இருக்கிறது. இந்த மெய்யறிவுக் கல்வியைத்தான் எங்கள் பிரம்மஞான குருகுலம் இப்போது மனித சமுதாயத்திற்குக் கற்றுக் கொடுக்கும் மெய்வழிப்பணியை சிறப்பாக செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அடுத்தது ஒன்பதாம் அறிவு. அது நுண்மான் நுழைபுலன் அறிவு. இது சித்தர்களின் அறிவாக உள்ளது. இறைவனின் திருவடியானது மனித தலையின் மையத்தில் அண்ணாக்கு மேலே சிர நடுவுள் இருப்பதாக நம் தமிழ்ச் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த இடத்திற்குள் நுழையும் அறிவைப் பெறுதலே ‘நுண்மான் நுழைபுலன்’. இந்த அறிவைப் பெற்றே உள்ளே இருக்கும் மலர்ச் சுடரான திருவடிகளைக் காண்பதே சுடராழித் தவம். இறைவன் திருவடிகளைக் காணாதவர் எல்லாம் மரணத்தைத் தழுவிவிடுவார்கள்.
மனிதன் மெய்யறிவினைப் பெறாமல் இந்த ஒன்பதாம் அறிவைப் பெற்றுவிட முடியாது. சுடராழி தவத்தின் வாயிலாக எம் குருகுல மாணவர்களுக்கு பதினைந்தாம் நிலையில் சுடராழியில் இந்த அறிவைப் பெற்றுவிடும் சூட்சுமம் ஞான உணர்வாகக் கொடுத்து பிரம்ம நாடியின் வாயிலாக நுண்மான் நுழைபுலத்தில் சென்று உணர்ந்திடும் ஒன்பதாம் அறிவு கொடுக்கப்படுகிறது. எனவே, இந்த ஒன்பதாம் அறிவான சித்தர்களின் அறிவினை அடைந்தால்தான், மரணத்திலிருந்து தப்பிக்க முடியும்.
இறுதியாக பத்தாம் அறிவான வாலறிவு. இது கடவுளின் அறிவான ஒளியறிவு எனச் சொல்லப்படுகிறது. இது அருளறிவு என்றும் சொல்லப்படும். இவ்வறிவை இறைவன் அருள் ஒன்றாலேதான் பெற முடியும். திருவருட் பிரகாச வள்ளலார் இதற்கு சாட்சியாக நம்மிடையே இன்றும் இருக்கிறார்கள். எம்குருநாதரும் இதற்கு ஆதாரமாக தற்போது ஒளிதேகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஒளியறிவை எம் மாணவர்கள் ஆரம்ப நிலையிலிருந்தே பெற வேண்டும் என்று எண்ணியே சுடராழி தவத்தின் முதல்நிலையிலிருந்தே கற்றுக் கொடுத்து வருகிறோம்.
இந்த பத்தாம் அறிவான அருளறிவு ஒளிமயமானது. இந்த ஒளி ஒரு விதையைப் போன்று இருக்கும். இதுவே உயிர் எனப்படும். இவ்விதை மனித மூளையின் மையப் புள்ளியில் அமைந்துள்ளது. இது மிக மிகப் பாதுகாப்பாக வேறொரு பரிணாமத்தில் இறைவனால் வைக்கப்பட்டுள்ளது. இந்த விதையை தொட்டு ஊக்கப்படுத்திவிட்டால் இந்த விதை வெடித்து ஒரு மரமாக தன்னை வெளிப்படுத்திப் புதுப்பித்துக் கொண்டு வளர ஆரம்பிக்கும்.
இந்த அற்புத ஞானத்தை நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள்தான் இவ்வுலகுக்கு வெளிக்கொண்டு வந்து கொடுத்தார்கள். நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த அழகிய ஞான வாழ்வியல் முறையைத் தான் ஔவை ஞானக்குறளிலும், உயிர்மலரும் தமிழ் வேதமான திருவாசகத்திலும் ஆணித்தரமாகச் சொல்லிச் சென்றுள்ளார்கள். தற்போது இவர் எழுதிய 1267 ஆண்டுகளாக ஞான மெய்ப்பொருளுரை காணப்படாமல் இருந்த நம் திருவாசக நூலிற்கு உயிர் மலரும் தமிழ் வேதம் என அடைமொழி கொடுத்து இந்த திருவாசகம் என்ற ஞான நூலுக்கு 1267 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பரிபூரண ஆசிர்வாதத்தால் 21.12.2023 அன்று 1568 பக்கங்களில் இரண்டு பாகங்களாக ஞான மெய்ப்பொருளுரை கண்டு வெளியிட்டிருக்கிறார்.
தற்போது தொடர்ந்து இந்த பிரமஞானப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வள்ளலார் எவ்வாறு ஞான ஒளிதேகத்தை அடைந்தார்? என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை ஆதாரப்பூர்வமாக எழுதி முடித்துள்ளார். திருவருட்பா அகவலுக்கு ஞான மெய்ப்பொருளுரை எழுதி வருகிறார்.
அடுத்ததாக திருமந்திரத்தின் 1000 பாடல்களுக்கு மட்டும் பிரமஞானத்தின் அடிப்படையில் ஞான மெய்ப்பொருளுரை கண்டு வருகிறார். ஒரு பாகம் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற பாகங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார். திருமந்திரம் வெளிவந்து 1624 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், 5000 ஆண்டுகளுக்கு முன்பே திருமந்திரம் எழுதப்பட்டதாகவும், காலத்தால் வெளிவந்து 1624 ஆகின்றன என்றும் சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் இந்த 1624 ஆண்டுகளில் ஏன் இந்த திருமந்திரப் பாடல்களுக்கு ஞான மெய்ப்பொருளுரை எழுதப்படவில்லை? என்ன காரணம்? இதற்கெல்லாம் பதில்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இவ்வாசிரியர் எழுதிக் கொண்டிருக்கும் திருமந்திர ஞான மெய்ப்பொருளுரையைப் படித்துப் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் சத்தியம் புரியும், அனுபவத்திற்கும் வரும்.
குருவின் சற்குரு
ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி
அவதாரங்கள் மானிட சமுதாயத்திற்கு அரிதாக நிகழும் இயற்கையின் கொடைகள் ஆகும். அப்படி அரிதான ஒரு பரிமளம் கமழும் ஞானப்பூதான் பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்கள். தமிழை சங்கம் வைத்து வளர்த்தெடுத்து வரும் மதுரை மாநகரில் பிறப்பெடுத்தவர்தான் எம்முடைய சற்குருவான ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி.
இவரின் குழந்தைப் பருவம் இறைவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த்து. கருவிலேயே திருவால் ஆட்கொள்ளப் பட்டவர் இவர் என்று எம் குருவின் தாயார் சொல்வதைக் கேட்டிருக்கின்றோம். அடிக்கடி இவர் முன்னால் ஒளி வட்டமாக தெரிவதாகத் தாயாரிடம் கூறுவாராம். உறங்கும்போதும் இவர் முகம் பௌர்ணமி நிலவின் ஒளியினைப் போல பிரகாசிப்பதைக் கண்டு தாய் பிரமித்துப் போவாராம். உறங்கும்போது இவர் முகம் பௌர்ணமி நிலவின் ஒளியினைப் போல பிரகாசிப்பதைக் கண்டு குருவின் தாய் பிரமித்துப் போவாராம்.
ஸ்ரீவித்யை மார்க்கத்தில் உச்சத்தைத் தொட்டவர். ஸ்ரீசக்கரத்தையே உடலில் கண்டு விண்டு ஞானம் அடைந்த ஞானி. தன்னை அறிந்து, தனக்குள் இருக்கும் இறையை அறிந்து, இறைக்கும் இருக்கும் உயிரெனும் ஒளியாற்றலை அறிந்து, ஒளியாற்றலை நல்கும் ஈசனின் ஆற்றலை அறிந்து, ஈசனுக்கு ஆற்றலை வழங்கிக் கொண்டிருக்கும் ஆதிசக்தியின் ஒளி, ஒலியாற்றல்களை அறிந்து, சதுரகிரி மலையில் தவஞான யோகியாய் வாழ்ந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மூலிகை கற்பங்களை உட்கொண்டு, தேகத்தை வைரமாக்கிக் கொண்டு வாழும்போது, அகத்தியர் மற்றும் போகர் சித்தர்களால் கட்டளையிடப்பட்டு மகா அவதார் பாபாஜி அவர்கள் எம் குருவை ஆட்கொண்டு இமயமலைக்கு அழைக்கப்பட்டார். அங்கே மகா அவதாரின் ஞான ஒளியால் தூண்டப்பட்டும் வழிகாட்டப்பட்டும் பிரமஞானக் கிரியா எனும் ஒளி மற்றும் ஒலி ஆற்றல்களைக் கொண்ட சுடராழி ஞானத் தவத்தை தொடர்ந்து இருபது ஆண்டுகள் கடைப்பிடித்து ஈசனின் ஆசிர்வாதத்தால் சித்தர்களின் முன்னிலையில் மகா அவதார் பாபாஜியால் எம் குருவுக்கு வழங்கப்பட்டு, ஞான ஒளியுடல் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
கலியுகத்தில் ஒளிதேகம் அடைந்தவர்களை காண்பது அரிதினும் அரிது. ஆதித் தமிழ்ச் சித்தர்களால் கடைப்பிடிக்கப் பட்டு வந்த பிரமஞானத் தவம் இன்று எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அது சித்தர்களின் உலகத்தில் மட்டும்தான். குருவின் அனுமதியோடு நமது பிரம ஞானப் பொற்சபை குருகுலத்தில் கற்றுத் தரப்படும் குருகுலக் கல்வியில் இக்கலை 2021 ஆம் ஆண்டிலிருந்து முறையாக கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம்.
நாம் நம் உடலுக்குத் தினமும் உணவு கொடுத்து உடலை வளர்த்து வருகிறோம். ஆனால், நம் உயிருக்கு உணவு ஏதும் கொடுத்து வளர்த்து வருகிறோமா? இல்லையல்லவா. அதனால்தான் மனிதன் செத்துப் போகிறான். உயிருக்கான உணவினை அனுதினமும் கொடுத்து வளர்த்து வந்துவிட்டால், உயிரானது நம் உடலைவிட்டு நீங்காது என்று எம் குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களால் கற்பிக்கப்பட்டதை இக்கலியுகத்திற்கு முன்னெடுத்து கொடுத்துவிட எம் குருவால் உத்திரவிடப்பட்டுள்ளோம்.
உயிரை வளர்க்கும் உபாயத்தை, தந்திரத்தை அறிய வேண்டுமென்றால், கண்டிப்பாக நீங்கள் பிரமஞானத் தவத்தை (கலையை) கற்றே ஆக வேண்டும். தெய்வ நிலையில் வாழ்பவர்கள் மட்டுமே இக்கலையை கற்றுத் தேறுவார்கள். உங்களை தேவ நிலைக்கு உயர்த்திக் கொள்ளவும் மீண்டும் பிறவாப் பெருநிலை பெற்றிடவும் எம்முடைய 38 வருட அனுபவத்தில் பிரமஞானத் தவத்தினைப் போன்ற ஒரு அற்புதமான ஞானக்கலை இவ்வுலகில் இல்லை என்றே கருதுகிறோம்.
காகபுசண்டர், திருமூலர், அகத்தியர், போகர், மகா அவதார் பாபாஜி அவர்களால் வாழையடி வாழையாக தமிழ்த் திருக்கூட்ட மரபில் வரும் கையாலப் பரம்பரையில் எம் சற்குருவுக்கு வழங்கப்பட்டதே இந்த பிரமஞானத் தவம். மகா அவதார் பாபாஜி அவர்களின் கிரியா யோகத்தையும் தாண்டிய கலை இது. இக்கலை நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தில் மட்டுமே போதிக்கப் படுகிறது. 1000 ஆண்டுகள் தவம் செய்தாலும் கிடைக்காத ஒளிதேகத்தை எம் சற்குரு இப்பிறவியிலேயே பிரமஞானத் தவத்தால் பெற்றார். இதுதான் பிரமஞானத் தவத்தின் உச்சம். வாழ்வின் எச்சங்களை விட்டுவிட்டால், ஞானத்தின் உச்சங்களைத் தொடலாம் என்பார் எம் குரு. இயற்கையில் வாழக் கற்றுக் கொள்ள பிரம ஞானத் தவத்தை உங்களை மிகச் சரியாக வழிநடத்தும்.
ஞான ஒளிதேகத்தில் இருக்கக்கூடிய எம் சற்குரு இந்த உலக ஆன்மாக்கள் அனைவரும் பிரமஞானம் அடைந்திட வேண்டுமென்ற தாயுள்ளத்தினால் உங்களுக்கு இப்போது நூல்கள் வடிவில் பிரமஞானங்களைப் பற்றியும் அவற்றின் ஞான மெய்ப்பொருள்களைப் பற்றியும் விரிவாக எழுதி வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக 21.12.2023 ஆம் தேதியன்று சேலத்தில் அழகிய சிற்றம்பலமுடையான் எழுத மாணிக்கவாசகப் பெருமானால் பாடப்பட்ட உயிர் மலரும் தமிழ் வேதமான திருவாசகத்திற்கு ஞானமெய்ப் பொருளுரையை 1568 பக்கங்களில் இரண்டு பாகங்களாக எழுதி வெளியிட்டோம்.
சற்குருவின் உத்திரவுக்கிணங்க அடுத்தது திருமந்திரப் பாடல்கள் 1000-ற்கு ஞான மெய்ப்பொருளுரை எழுதி வருகிறோம். மொத்தம் 20 பாகங்களாக வெளிவர இருக்கிறது. முதற்பாகம் எழுதப்பட்டுவிட்டது. இரண்டாம் பாகம் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
உலக உயிர்கள் அனைத்தும் பிரமஞானத்தைப் பெற்று, அவர்களின் உயிரோடும் உயிரொளியோடும் உள்ளே இருக்கும் சிவத்தோடும் ஒளியோடு ஒளியாக கலந்திட வேண்டும் என்ற தொலைநோக்கு ஞானத்திற்காக ஒவ்வொரு நொடியும் பாடுபட்டு வருகிறோம்.
இமை தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் இறைவனை எளிமையாகப் பிடித்து அனைத்து ஆன்மாக்களும் பிரமஞானத் தவத்தினால் இறையாகவே மாறிட வேண்டும் என்பதே எங்கள் பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் ஒரே இலக்கு, கனவும்கூட.