
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாஅழ்க !
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !
ஓ………………ம் ஓ………………ம் ஓ…………………ம்
சாகா வரமும் தனித்த பேரறிவும்
மாகாதலில் சிவவல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு
நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே
சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தான்அந்தமிலாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே
சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதலாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே (அகவல் : 1255-1290)
அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி
வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !
குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !
நமது தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுகிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞான உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பை எமது குருகுலத்தின் ஜீவன்முத்தீ தவங்களைக் கற்ற மாணவர்களின் கேள்வியிலிருந்தே பேச்சுரை ஆற்ற இருக்கின்றோம்.
அவர்கள் கேட்ட கேள்வி : ஒரு சீடன் குருவிடம் வித்தை கற்க வரும்போது எப்படிப்பட்ட மனநிலையில் இருக்க வேண்டும்? என்பது.
அதற்கு யாம் அளித்த ஒற்றை வார்த்தைதான் ‘சரணாகதி’ என்ற நிலைப்பாடு. இந்த சரணாகதியைப் பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருந்து வருகிறது. சரணாகதி என்றால் பதில் ஒரே வார்த்தைதான் – அது சரணாகதி. அவ்வளவுதான். சரணாகதியைப் பிரித்தால் சரண் + ஆ + கதி என்றே வரும்.
சரண் என்றால் தஞ்சமடைதல், புகலிடம் தேடுதல் என்று பொருள்.
ஆ என்றால் பசு அதாவது மனித உயிர் என்றும் ஆன்மா என்றும் பொருள்படும்.
கதி என்றால் அதோகதி அல்ல ; கதி என்றால் சுவாசம், அதுவும் ஒளி சுவாசம்.
ஒளி சுவாசம் கொண்ட ஒரே உயிர் எது தெரியுமா அன்பர்களே. அது நம் உயிருக்குள் பேருயிராக வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவன் ஒருவனே. அந்த ஒளி சுவாசம் கொண்ட இறைவனிடம் மனித உயிர்களான நமது ஆன்மாக்கள் தஞ்சமடைய வேண்டும் ; அவன் வாழும் இடத்தை நம் ஆன்மாவின் புகலிடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்நிலைப்பாடுதான் சரண் ஆ கதி என்ற சரணாகதி ஆகும்.
இதைப்பற்றி எமது சற்குரு சதுரகிரி மலையில் எம்மோடு உரையாடிக் கொண்டு ஞானங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சரணாகதியைப் பற்றிய பேச்சு அப்போது வந்தது.
எம்மிடம் “சரணாகதி என்ன என்பதை புரிந்திருக்கிறாயா மகனே?” என்றார்.
இது நடந்தது 1990 ஜனவரி மாதத்தில் வந்த முதல் ஏகாதசி நாள். நன்றாக நினைவிருக்கு எமக்கு. ஏகாதசி அன்று உணவு உண்ணவோ, நீரருந்தவோ கூடாது என்பதை மிக அவசியமான விசயம் என்பார் குரு. அதனால் யாம் நீராகாரம்கூட உண்ணாமல் இருந்தோம். ஆனால், பசி உணர்வு கிஞ்சித்தும் எமக்குள் எழாது. சரணாகதிக்கு விளக்கம் சொல்ல வேண்டுமே, என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
“என்ன சிவநேசா, பதில் சொல்லு. சரணாகதி என்றால் என்ன?” என்றார்.
“ஒருவரிடம் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் ஒப்படைத்துவிட்டு, நீங்களே கதி என்று தஞ்சமடைதல்தான் குரு” என்றேன்.
“பதம் பிரித்துப் பொருள் கூறு” என்றார்.
அதெல்லாம் நமக்கெங்கே தெரியும். சும்மா அடிச்சு விட்டேன். “குருவே, சரணாகதியை சரண் + ஆகுதி என்று பிரிக்கலாம்” என்றேன். கண்டிப்பாக குரு திட்டப் போகிறார். என்ன செய்வது? ஏதாவது பதில் சொல்லவில்லை என்றால் இவர் விடற மாதிரி தெரியலையே. அதனால் மேற்சொன்ன பதிலை சும்மா சொல்லி வைத்தேன்.
உடனே குரு, “டேய் சிவநேசா, எப்படிடா சரியா பதிலச் சொன்னே. அற்புதம், அற்புதம். எங்கே சரண் என்றால் என்னவென்றும், ஆகுதி என்றால் என்னவென்றும் சொல்லேன், கேட்கலாம்” என்றார்.
இந்த மனுசன் நம்மை இன்னைக்கு விடறமாதிரி தெரியலையே. பதில் சொன்னா அதையே கேள்வியா மாத்துறாறே. என்னதான் செய்யப் போறோமோ ‘சிவ சிவா’ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தேன்.
“குருவே, உங்க அளவுக்கு எனக்கேது ஞானம்? அதனால் பதிலை தயவுசெய்து நீங்களே சொல்லிடுங்களேன்” என்றேன்.
“சரி, யாமே சொல்கிறோம். நன்றாக கேள். சரணாகுதி என்ற வார்த்தைதான் திரிந்து காலப்போக்கில் மாற்றமடைந்து சரணாகதி என்றாயிற்று. நீ பிரித்துச் சொன்னது சரிதான் மகனே. சரணாகுதியை சரண் + ஆகுதி என்றே பிரிக்க முடியும்.
ஆகுதி என்றால் மந்திர ஹோமங்களில் மந்திரத் தேவதைக்கு தேவையான உணவுகளை ஒரு பட்டுத் துணியில் கட்டி அக்கினித் தீயில் நெய் பெய்து போடுவார்கள். அதை ஹோம அக்கினித் தீயின் நாக்குகள் பெற்றுக் கொண்டு அக்னி தேவனிடமும் எந்த ஹோமமோ அந்த தேவதையின் வசமும் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். அதைப் போல நம்முடைய சரணடைதல் எப்படி இருக்க வேண்டுமென்றால், நம்முடைய உயிர்த் தீயில் நம்மையே முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட வேண்டும். உயிர்த்தீயில் ஒப்படைக்கப்படாத நமது செயல்பாடுகள் எதுவுமே சரணாகதி நிலையை அடைவதே இல்லை மகனே” என்றார்.
“அப்படியென்றால் குருவே, நாம் தவத்தால் உயிர்க்கூட்டை அடைந்து உயிரொளியை நேருக்கு நேராக பார்த்துவிடும்போது, இந்த சரணாகுதி முழுமையை அடையும் அல்லவா” என்றேன்.
“மிகச் சரியாகச் சொன்னாய் சிவநேசா. ஆமாம், உன் உயிரை அடைந்து, அந்த ஒளி வெள்ளத்தில் திளைக்க வேண்டும் நீ. அப்போதுதான் நான் என்பதும் நீ என்பதும் தான் என்பதும் காலியாகி உன் வெட்டவெளிக்குள் விளங்கும் வெற்றிடத்தைக் காண்பாய். வெற்றிடம் என்பது இராப்பகலற்ற இடம் மகனே. அங்கே இருளும் இல்லை ; வெளிச்சமும் இல்லை. நீ இரவு நேரத்தில் தூங்காமல் இருளொளித் தவத்தைச் செய்து வருகிறாய் அல்லவா. அது உன்னை இராப்பகலற்ற இடத்திற்குத்தான் நித்தமும் அழைத்துச் செல்கிறது. உனக்குள் இருக்கும் இராப்பகலற்ற இடத்திற்குள் குதித்துவிடு மகனே. மற்றவை தானே நடக்க ஆரம்பிக்கும். எதையும் நீ ஆற்றாதே, செய்யாதே. எதுவும் தானாக நடக்க விட்டுவிட்டு சாட்சிப் பாவனையோடு இருந்துவிட பழகிக் கொண்டே வா மகனே. பூரணாபிஷேகத் தவத்தில் உன்னை இருக்க வைத்துக் கொண்டிருப்பது இந்த சரணாகதியையும் அது கொடுக்கும் வெறுமையையும் உனக்குள் முழுமையாக நிரப்பிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் மகனே. அதனால் நீ இப்போதே இந்த நொடியிலேயே வெற்றுப் புல்லாங்குழலாகி விடு” என்றார்.
ஆனால், மெய்யியல் கோட்பாடு சொல்லும் ஞானப்பொருள்கள் இப்படியெல்லாம் இருக்க நாம் சரணாகதியை இந்நாள்வரை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள் எமதருமை சான்றோர்களே, பெரியோர்களே, அன்பர்களே, மாணவர்களே.
நீங்கள் இதுவரை புரிந்து வைத்திருப்பதுதான் சரணாகதியா? இப்போது மெய் எது? பொய் எது? என்பதை விளங்கிக் கொண்டிருப்பீர்கள். நல்லது. இருப்பினும் சரணாகதியை சற்று விரிவாகப் பார்க்கலாம், வாருங்கள்.
எம் அன்பு மாணவர்களுக்காக இந்த விரிவுரையை கொடுத்திட எண்ணினோம். அதை உலக மக்களுக்காகவும் வெளிப்படுத்தி மகிழ்கின்றோம். அனைவரும் அவரவர் குருவிடமோ அல்லது உயிரிடமோ அல்லது இறையிடமோ சரணாகதியை பூரணமாகக் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா, அதற்காகத்தான்.
இந்த சரணாகதியை நாமெல்லாருமே சரியாகவே புரிந்து கொண்டிருக்கவில்லை. இந்த சரணாகதியைப் பற்றி நாம் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விசயம் என்ன தெரியுமா? இதை உங்களால் செய்ய முடியாது என்பதுதான். இந்த சரணாகதியை நம்மால் செய்யவே முடியாது. இதை நன்றாக நாம் புரிந்து உள்வாங்கிக் கொண்டுவிட வேண்டும். ஒருவேளை இந்த சரணாகதியை வேண்டுமானால் உங்களால் தடுத்துக் கொள்ள முடியும். ஆனால், அப்படி நடக்க வைக்க உங்களால் கண்டிப்பாக முடியாது. காரணம் சரணாகதியில் உங்களது சக்தியானது எப்போதுமே எதிர்வினையை மட்டுமே ஆற்றக் கூடியது. உங்களால் தடுக்க மட்டுமே முடியும். ஆனால், உங்கள் வாழ்வில் பூரண சரணாகதியை கொண்டுவரவே முடியாது.
சரணாகதி என்பது உங்களால் செய்யப்படுகின்ற ஒரு விசயமல்ல. அப்படி நீங்கள் அதைச் செய்வதாக இருக்குமேயானால், அதன் பெயர் சரணாகதியே கிடையாது. காரணம் என்ன தெரியுமா? சரணாகதியைச் செய்பவன்தான் அங்கிருப்பானே.
நான் என்ற உணர்வு இருந்து கொண்டுதான் சரணாகதி என்ற ஒன்றை செய்ய முற்படுமே தவிர, நான் அற்ற நிலையில் அல்லவே. அதனால் “நான் இல்லை” என்ற ஒரு மாபெரும் புரிதல், மாபெரும் விழிப்பு நிலையே சரணாகதி ஆகும். அதாவது நான் என்னும் உணர்வு இல்லாத விழிகளின் உள்நோக்கிய அகப்பார்வை ஒன்றுதான் சரணாகதியாக இருக்கும். சரணாகதி என்பது ஒரு செயல்பாடோ, செயலோ அல்ல. அது ஒரு நானற்ற – மனமற்ற – இயக்கமற்ற ஒரு விழிப்புணர்வின் துள்ளலாகும். விழிப்புணர்வு என்றால் என்ன தெரியுமா? விழிகளின் புணர்வுநிலையே விழிப்புணர்வாகும். இரு விழிகளும் புணர்ச்சி நிலையில் இருந்தாக வேண்டும். அப்போதே சரணாகதி பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும். இவையெல்லாம் அகத்திலும் அகப்புறத்திலும் நடந்தாக வேண்டும்.
முதலில் நான், நீ என்ற சொற்றொடர்கள் ஒரு பொய்யான இருப்பாகத்தான் காணப்படுகின்றன. நீ மற்றவகைகளிலிருந்து தனித்து பிரிந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தால் அதை உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? சொல்லுங்கள். அப்படிச் சொன்னால் அது முற்றிலும் பொய்யாகத்தான் இருக்க முடியும். இந்த பிரபஞ்சத்திலிருந்து நான் தனித்துப் பிரிந்து வாழ்கிறேன் என்று யாராலும் சொல்லிவிட்டு, அவ்வாறு இருந்துவிட முடியுமா? அப்படி பிரபஞ்சத்திடமிருந்து நாம் பிரிந்து நின்றால், பிரபஞ்சத்தின் சக்திகளைப் பயன்படுத்த முடியாது செத்துத்தான் போக நேரிடும்.
இந்த பூமியிலிருந்து ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி விட்டால், அந்த மரம் பூமியை விட்டுத் தனித்து பிரிந்திருக்கும். ஆனால், உயிரோடு இருக்க முடியுமா?
சூரியனை வேண்டாமென்று அதை பூமிக்கு அருகிலிருந்து பிரித்துவிட்டால், உலகத்தின் அத்தனை உயிர்களும் உயிர் வாழ நேரிடுமா? செத்துத்தானே போயிடும்.
தண்ணீரிலிருந்து மரத்தின் வேர்களைப் பிரிக்க முடியாது. பிரித்தால் வேர்கள் உயிர் வாழாது.
மரங்கள் இந்த பூமியில் இல்லாது போனால், இவ்வுலகம் நரகமாகிவிடும். மரம் ஒரு நரகத்தை உண்டாக்கிவிடும். ஆனால், மரங்களுக்கோ மனம் என்பது இல்லை அல்லவா. ஆனாலும், அவைகள் பிரபஞ்சத்தின் பஞ்சபூதச் சக்திகளை நித்தமும் கிரகித்தே வாழ்ந்து வருகின்றன. மரங்கள் எப்பொழுதுமே இந்தப் பிரபஞ்சத்திடம் சரணடைந்து விட்டதே அதற்குக் காரணம்.
மனமே இல்லாது மரங்கள் சரணடைகின்றன. சரணடைந்து விட்டது என்றால், மரங்கள் ஒருபோதும் இயற்கையிலிருந்து தனித்து பிரிந்து போகவில்லை என்றே அர்த்தமாகிறது. இந்த சரணாகதிதான் மரங்களை இவ்வுலகில் ஜீவிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த மரங்களைப் போலத்தான் அத்தனை பறவைகளும், மலைகளும், நதிகளும், கடல்களும், கிரகங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் இந்த இயற்கையோடு இரண்டறக் கலந்து சரணாகதியில் திளைக்கின்றன. காரணம் இவைகளுக்கெல்லாம் ‘நான்’ என்ற உணர்வும் மனமும் இல்லை.
மனிதன் மட்டும் தாங்க, தன்னுணர்வோடு கூடிய ‘நான்’ என்ற உணர்வுகளோடு இருக்கிறான். இந்த தன்னுணர்வால்தான் மனிதன் பஞ்சபூதச் சக்திகளை கையகப்படுத்தை வைத்திருக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறான். இந்த தன்னுணர்வுகள் ஆக்கப்பூர்வமாக அமைந்துவிட்டால் நன்மைதான், ஆனால் அதுவே அழிவிற்குக் காரணமாகி விட்டால் இந்த மனிதனின் வாழ்வு நரகத்தில்தான் போய்க் கொண்டிருக்கும். சொர்க்கமும் நரகமும் நம் கையில்தான் உள்ளது. அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனின் ‘நான்’ என்ற தன்னுணர்வில் அல்லவா இருக்கிறது.
முதலில் நாம் இந்த ‘நான்’ என்ற உணர்வுகளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘நான்’ என்ற உணர்வு உண்மையில் அது இல்லாத ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். எந்தவொரு மனிதனுமே பிரிந்து இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நானோ, நீங்களோ, ஞானிகளோ, சித்தர்களோ, முனிவர்களோ, ரிஷிகளோ, புத்தரோ, இயேசுவோ யாருமே பிரிந்திருக்கவில்லை. நாம் அனைவரும் இந்த இயற்கையோடுதான் ஒன்றாக இருக்கின்றோம். இதை மறந்து விட்டால், நான் தனித்தே இருக்கின்றோம் என்ற உணர்வோடுதான் சரணாகதியை அணுகுவோம்.
‘நான்’ வந்தபின் அங்கே சரணாகதி இருப்பதில்லை. இந்த ‘நான்’ என்ற தன்னுணர்வை – தன் முனைப்பை நம் முதுகில் நம் மூளையில் சுமந்து கொண்டேதான் திரிகிறோம் என்ற அர்த்தம். அத முதல்ல நீங்க தெரிஞ்சிக்கணும். யாம் இதை நன்றாக அறிஞ்சிக்கின்றோம். நீங்க….. எப்படி? நீங்க அதை அறிந்திருக்கல என்பதுதான் உங்களது பிரச்சினையே. வேறுபாடு என்பது அதை அறிந்து கொள்றதுலதான் இருக்கு. எப்பவுமே இருப்பு நிலையில மாறுபாடு இருப்பதில்லை. நாம நான் அறிஞ்சிருக்கிறேன் என்ற முட்டாள் தனத்தை இன்னும் வைத்துக் கொண்டிருப்பதாலதான் நாம இன்னமும் இயற்கையிலிருந்து பிரிஞ்சே இருக்கிறோம்.
“நான் சரணடைவேன், இப்போது நான் சரணாகதி அடையப் போகிறேன்” என்று நாம நினைச்சுக் கொண்டிருந்தா, அங்கே சரணாகதி இருக்காது ; நான் என்ற தன் முனைப்புதான் இருக்கும். தன்முனைப்பு சரணாகதி ஆகுமா? ஆகவே ஆகாது.
நான் தனியாகத்தான் பிரிந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஒருநாள் அல்ல ஒருநாள் தான் அவ்வாறு பிரிந்திருக்கவில்லை என்ற உண்மையை நேருக்கு நேர் சந்திப்பீங்க. அப்போது தன் முனைப்பின் மூக்கு உடைக்கப்படும், சரணாகதியால். அப்படீன்னா, எப்படித்தான் சரணாகதி அடைவது என்ற கேள்வி இப்போது உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் படபடவென்று ஓடிக் கொண்டிருக்கும்.
சரணாகதி அடையும்போது அங்கே, அவ்விடத்துல யாருமே இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை, சத்தியம். ஒருவர் சரணடைகிறார் என்றால், அங்கே அவர் இருக்க மாட்டார் என்றே பொருள். அவர் இருக்கும்வரை சரணாகதி நடைபெறப் போவதில்லை. அவர் என்ற உணர்வு காலியாகி, வெற்றுக் கோப்பையாகும்போது சரணாகதி தானே வந்து குடிபுகும்.
சரணாகதி என்பது இங்கு இல்லை என்பது மட்டுமல்ல, அது எங்குமே இருப்பதில்லை ; காணப்படுவதுமில்லை. நீ உனக்குள்ளே போய்ப் பார்க்கும்போது அங்கே சரணாகதி என்ற ஒன்றை உன்னால் காணவே முடியாது. இதுதான் வியப்பின் உச்சமே. அந்தத் தருணத்துலதான் சரணாகதி அங்கே குடிபுகும். சரணாகதி என்பதை நீ எப்போது கண்டுகொள்ளாமல் போகிறாயோ, அந்த நொடிப்பொழுதில் உனக்குள் சரணாகதி மலராகப் பூத்து மணம்வீச ஆரம்பிக்கும்.
அதனால்தான் யாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, சரணாகதியை நம்மால் ஒருபோதும் செய்ய முடியாது என்று. நீ அதைச் செய்தால் அது பொய்யான விசயமாகத்தான் இருக்கும். பொய்யிலிருந்தே அனைத்துப் பொய்களும், அதனைச் சார்ந்த புரளிகளும் பூகம்பங்களும் எழும். அப்போது நீயே பொய்யாகிப் போய்விடுவாய். பொய்யில் மெய் பூப்பதில்லை.
சரணாகதியை செய்ய வேண்டுமென்று பிரயத்தனப் பட்டுக் கொண்டே நீங்கள் இருந்தீர்களென்றால், பொய் மேல் பொய்தான் உங்களுக்குள் கட்டமைத்துக் கொண்டே வரும். இது கர்மவுடல் என்பதை மறவாதீர்கள். ஏற்கனவே நாம் செய்த பலகோடி கர்மங்களால் இத்தனை துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். கர்மவுடலை வெல்ல வேண்டுமென்றால், அங்கே அணுயளவுகூட பொய் இருக்கக் கூடாது. நாம இங்கேதான் முழுமையாகப் போயிடுவோம், இல்லையா அன்பர்களே, மாணவர்களே. கர்மவுடலையே வெல்ல முடியாதபோது, இன்னும் நம் தேகத்தில் மீதமிருக்கும் 11 தேகத் தத்துவங்களை எப்படி வெல்லப் போகிறோம்? கண்ணும் தலையும் சுற்றுகிறதா உங்களுக்கு. பின்ன செஞ்சிருக்கும் கர்மங்கள் கொஞ்சமா, நஞ்சமா. அத்தனையையும் எரித்து கொளுத்தியாகவேண்டுமே. பற்ற வைக்க யாம் தயார் ; உங்களை நீங்க எரித்துக் கொள்ளத் தயாரா? பதில் வேண்டும்.
“அப்படீன்னா, எனது சரணாகதியானது இலக்கினை இல்லையா குருவே” என்று நீங்கள் கேட்கக் கூடும்.
நான் என்னும் உணர்வு எப்பவுமே இலக்கினை – குறிக்கோளை நோக்கிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதனுள் ‘நான்’ இருப்பதால், அதன் ஆசைகளுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. இந்த ‘நான்’ இருக்கிறதே, அது எப்பவுமே எதையாவது இலக்காக நிர்ணயித்துவிட்டால், எதையாவது செய்து அதைக் கைப்பற்றுவதில்தான் குறியாக இருக்கும். அதனால், அது எப்போதுமே அதிகளவில் வெளியே தேடிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும். இந்த அதிகம் என்ற எண்ணங்களிலே அது தன்னை திருப்திப்படுத்திக் கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு உங்ககிட்ட பணம் இருக்குதுன்னா, இந்த ‘நான்’ என்ன செய்யும் தெரியுமா? இன்னும் அதிகப் பணம் வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கும். உங்ககிட்ட வீடு இருந்தால், அது இன்னம் பெரிய வீடாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிறகடிக்க ஆரம்பிக்கும். ஒரு சிறிய தோட்டம், காடு இருந்தால் இன்னும் அதிக பரப்பளவில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எல்லைதாண்டி யோசிக்கும். அதனால் இந்த ‘நான்’ எப்பவுமே இன்னும் அதிகம் வேண்டும், அதிகம் வேண்டுமென்றே தான் யோசித்துக் கொண்டிருக்கும். காரணம் இந்த ‘நான்’ உணர்வு எப்பொழுதுமே திருப்தியடையாமல் பசியோடு இருப்பதுதான். இந்த ‘நான்’ உணர்வில் ஒரு பிரச்சினை என்ன தெரியுமா, மாணவர்களே. இது ஒன்று கடந்த காலத்தில் ஏங்கிக் கொண்டிருக்கும், மற்றொன்று எதிர்காலத்தில் கனவு கண்டு சிறகடித்துக் கொண்டிருக்கும். அது எப்பவுமே நிகழ்காலத்தில் நிலைத்திருப்பதில்லை. இதுதான் ‘நான்’-ன் பிரச்சினையே.
இந்த இலக்கு என்பது என்ன? “நான் எங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேனோ, அங்கு சென்றுவிட வேண்டும். சென்று, நான் அதுவாகவே இருந்து கொண்டு, நான் அதைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்” என்ற ஆசைதான் நம் இலக்காக இதுவரை இருந்து கொண்டிருக்கிறது. ‘நான்’ என்ற தன்முனைப்பு என்ற ஆணவ உணர்வினால் எப்போதுமே நிகழ்காலத்தில் வாழவே தெரியாது. அப்படி அது வாழவும் முயற்சிப்பதும் கிடையாது.
நிகழ்காலம் ஒன்றுதான் எப்போதுமே விழிப்புணர்விலேயே இருந்து கொண்டிருக்கும். அதுதான் மெய்யும்கூட. மெய்யும் பொய்யும் எப்போது சந்தித்துக் கொள்வதேயில்லை. கடந்தகாலம் பொய்யானதே. அது மீண்டும் வரப்போவதில்லை. காரணம் கடந்த காலம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது அது இல்லையே. போய்விட்டதே, கடந்து விட்டதே. போனதும், கடந்ததும் மெய்யோ, பொய்யோ அது நமக்குத் தேவையில்லை.
கடந்த காலத்தைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தால், நிகழ்காலம் பொய்யாகவே போய்விடும். இந்த ‘நான்’ உணர்வு எப்போதும் உயிரற்ற விசயங்களை எண்ணிக் கொண்டு, கடந்த காலத்திலேயே வாழ்வதால், அது கல்லறைத் தோட்டமாகவே இருக்க வேண்டிவரும். அங்கு பிணங்களும், உயிரற்ற எலும்புகளும் மட்டுமே இருக்கும். இதை மறந்து விடாதீர்கள்.
அதனால் ‘நான்’ உணர்வானது எதிர்காலத்தில் வாழ முயற்சிக்கும். எதிர்காலம் தான் இன்னும் வரவில்லையே. அது ஒரு கனவாக இருக்கலாம் ; கற்பனையாகவும் இருக்கலாம் ; ஆச்சரியமாகவும் இருக்கலாம். காரணம், இந்த ‘நான்’ கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி நன்றாக ஒத்துப்போய்விடும். ஏன் அப்படியென்றால், நான் என்பதே பொய்யென்று ஆகும்போது, பொய்யான கடந்த காலமும், எதிர்காலமும் ஏன் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாது. சிறிது சிந்தித்துப் பாருங்கள். ‘நான்’ என்ற உணர்வை இருப்பில் இருக்க வைத்தோமென்றால், இந்த ‘நான்’ உடனே மறைந்து போய்விடும்.
இருப்பு என்பது நிகழ்காலம். அதனால்தான் யாம் வலியுறுத்திச் சொல்கிறோம், நீங்கள் எப்போதுமே இங்கேயே இந்த நொடிப்பொழுதிலேயே இருந்து கொண்டிருங்கள் என்று. வெறுமனே இந்த நொடிப் பொழுதில் நீங்கள் இருந்தால், நீங்கள் அறிவுடையோர் என்றும் சான்றோன் என்றும் சொல்லுவேன். இந்த நொடிப்பொழுதில் நீங்கள் உங்களுக்குள் இல்லாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
‘நான்’ என்ற தன்முனைப்பு எங்கில்லையோ, அங்கே கடந்த காலமும் இல்லை ; எதிர்காலமும் இல்லை. நிகழ்காலம் மட்டுமே மலர்ந்திருக்கும்.
அதனால் இந்த நொடிப்பொழுது மட்டுமே எப்போது இருந்து கொண்டிருக் கட்டும். அப்போதுதான் நீ அங்கு இல்லாமல் இருப்பாய். மேலும் நீ இல்லாமல் இருந்து கொண்டே இரு. அப்போது திடுமென ஒரு பூரண அமைதி உனக்குள் பாய ஆரம்பிக்கும். இது நிகழ்ந்தபின், உனக்கு உள்ளேயும் வெளியேயும் ஆழ்ந்த அமைதி மட்டுமே இருந்து கொண்டிருக்கும். அதன்பின் நீ சரணாகதி என்ற ஒரு விசயத்தைப் பற்றி எண்ணவே தேவையில்லை. அப்போது சரணாகதியை நீ அடையவே தேவையிருக்காது. அந்நிலைப்பாடுதான் உன்னில் உருவாகும் ‘நான்’ உணர்வு உனக்குள் இல்லாமல் போய் விட்டிருப்பதைத் தெளிவாகக் காண்பாய். ‘நான்’ உணர்வு இல்லாமல் இருப்பதே பூரண சரணாகதி. இதுதான் மெய்யியல் கோட்பாடு சொல்லும் பூரண சத்தியம்.
அதனால் ஒருவன் சரணாகதி அடைய வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லாமல் போய்விடுகிறதல்லவா. இறைவனிடமோ, குருவிடமோ நீ சரணாகதி அடைய வேண்டும் என்ற கேள்வியும் அங்கே இல்லாமல் போய்விடுகிறது. “நான்” எனக்குள் இல்லை என்ற அந்தப் புரிதல்தான் உங்களின் சிறந்த அகப்பார்வையான சரணாகதி.
“நான் இல்லை”, “நான் ஒரு வெறுமை”, “நான் ஒரு வெற்றிடம்”, “நான் ஒரு வெற்றுக் கோப்பை”, “நான் ஏழு துளைகொண்ட ஒரு வெற்றுப் புல்லாங்குழல்” என்பதை எப்போது நாம் நமக்குள் கண்டுகொள்கிறோமோ, அப்போது நமக்குள் சரணாகதி வளர ஆரம்பிக்கிறது என்று பொருள். வெறுமை என்ற மரத்தில்தான் சரணாகதி என்ற தேன்மலர் பூக்கும். மரத்தை நட வேண்டியதுதான் நம் செயல். அம்மரத்தில் உண்டாகும் பூவையோ, காயையோ, கனியையோ நாம் உருவாக்குவதுமில்லை, செய்வதுமில்லை. வெறுமை என்ற மரத்தை வைத்தால் போதும். சரணாகதி என்ற பூ, காய், கனி தானே வளர்ந்து பூத்துக் கனிந்துவிடும். அதனால்தான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறோன் – அது ஒரு இலக்கினை நோக்கியதாக இருக்கக் கூடாது என்று. ‘நான்’ என்ற உணர்வு எப்போது இலக்கினைத்தான் கொண்டிருக்கும்.
அதனால நாம என்ன சொல்றோம்முன்னா சரணாகதியைப் பார், சரணாகதிக்குள் உன்னைப் பார், அதைப்பற்றி சதா சிந்தித்துக் கொண்டிரு என்றெல்லாம் கூற வரவில்லை. நீ அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தாய் என்றால், நீ அதைத் தவறவிட்டு விடுவாய் என்றுதான் சொல்ல வருகிறேன். எண்ணுவதும், சிந்திப்பதும் எப்போதுமே கடந்த காலத்திலும், எதிர்காலத்திலுமே இருந்து கொண்டிருக்கும். காலம் என்பது உங்களுக்குள் நுழையும் போதெல்லாம் நீங்கள் தனியாகத்தான் பிரிந்திருப்பீர்கள். அது பொய்யான வாழ்வாகும். பொய்யான வாழ்வு என்றைக்கும் வீழ்ச்சியைத்தான் கொடுக்கும்.
அதனால் அது இங்கேயே, இந்த நொடிப் பொழுதிலேயே இருக்கட்டும். அப்போது திடீரென்று உண்மையான நீங்கள் அங்கே இருப்பதைக் கண்டு பிரமித்துப் போவீர்கள். உங்களை நீங்களே அங்கு கண்டு இன்புற்று மகிழ்ந்து போவீர்கள். மேலும் நீங்கள் எங்குமே போவதுமில்லை ; எங்கிருந்தும் வருவதுமில்லை. நீங்கள் எப்போதுமே இங்குதான், இவ்விடத்தில்தான் இருக்கின்றீர்கள். இங்கு என்பது நிகழ்காலமே. இங்கு என்பதில் மட்டும்தான் இடம் இருக்கிறது. இப்போது என்கின்ற ஒன்று மட்டுமே இருக்கிறது. அந்த இப்போது என்கின்ற பொழுதில், சரணாகதியானது இருந்து கொண்டிருக்கிறது.
“ஆன்மா விடுதலை அடைவதற்காக சரணாகதியை அடைய நினைக்கிறேன், அதனால் அதைப்பற்றி என்னை நானே கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்றெல்லாம் உங்களில் பலர் பேசிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறார்கள். எப்போது “நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்கிறேனோ, அப்போது அங்கே அந்த “நான்” உணர்வு தலையெடுக்க ஆரம்பித்து விடுகிறது. காரணம் கவனித்தல் என்பது மீண்டும் ஒரு செயலாகத்தான் இருக்க முடியும். அவ்விடத்தில் உன்னால் முயற்சி செய்யப்படுகிறது. நீ அங்கு கவனிக்கிறாய்? அப்போ அந்த கவனிப்பை செய்து கொண்டிருப்பது யார்? நீதானே அங்கு கவனித்துக் கொண்டிருக்கிறாய்.
அதனால் நீ ஓய்வாக, தளர்வாக இரு. நீ ஓய்வாக, தளர்வாக இருக்கும் போதுதான் கவனிப்பதற்கு இங்கே எதுவும் இல்லை என்பது நிகழ ஆரம்பிக்கும். ஏனென்றால், கவனிப்பவர் அங்கு இல்லாமல் போவதால், நீ இரட்டைத்தன்மையோடு இல்லாது சாட்சி பாவனையில் இருக்க நேரிடும். இது ஒரு நேர்மறையான விழிப்புணர்வு நிலை. இந்த சாட்சி பாவனையில் பேதங்களும், மாறுபாடுகளும், ஏமாற்றங்களும், சண்டைகளும், சச்சரவுகளும் இருக்காது. இந்த கவனித்தல் என்பது மிகவும் கிளர்ச்சியை ஊட்டிக் கொண்டிருப்பதாக இருக்கும். அதனால் இங்கே நீ விறைப்பில்லாமல், தளர்வாக, ஓய்வாக இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். எதையும் செய்யாது நீ வெறுமே அங்கு இருக்கும்போது, உனக்குள் ஒரு பரவச உணர்வு மலர ஆரம்பிக்கும். அது உனக்குள் வசந்தத்தைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கும். வசந்தம் வந்தால் புல் தானாகவே வளரும் அல்லவா.
இந்நிலைப்பாடுதான் ஒட்டுமொத்த புத்த மதத்தின் அணுகுமுறையாகவும் கோட்பாடாகவும் இருந்து வருகிறது. நீ செய்வது எதுவாக இருந்தாலும், உதாரணத்திற்கு கவனித்தாலும், சிந்தித்தாலும், சரணாகதி அடைந்தாலும் அது செய்பவனை அதிகப்படுத்திவிடும். உனது பங்கிற்கு எதையுமே நீ செய்ய வேண்டிய சூழல் இருக்காது. அவசியமுமில்லை. வெறுமனே இரண்டு விசயங்கள் அதன் போக்கில் நடக்கட்டும் என்று விட்டுவிட்டு வெறுமையாய் இருந்து விடு.
1. சமாளிப்பதற்கு எந்தவித முயற்சியும் செய்துவிடாதே.
2. திறமைகளைச் செயல்படுத்த எவ்வித முயற்சியும் செய்துவிடாதே.
உனைத் தென்றல் காற்று கடந்து செல்லட்டும்.
பிரபஞ்சத்தில் சூரியன் மலர்ந்து ஒளிவீச வரட்டும்.
அதைக் கண்டு உன் உயிர் நடனமாடட்டும்.
மரணம்கூட வந்து அதன் நாட்டியத்தை ஆடட்டும்.
இதன் பெயர்தான் சந்நியாசம் என்பது. சந்நியாசத்தின் பொருள் இதுதான். அது நீ செய்கின்ற ஒரு காரியமே கிடையாது. ஆனால், நீ செய்கின்ற காரியங்களில் உள்ள அர்த்தமற்ற தன்மைகளைக் கண்டுகொண்டு அனைத்துச் செயல்களையும் விட்டு விடுதலுக்குப் பெயர்தான் சந்நியாசம் என்பது. அதனால் பொருளற்ற செயல்களை விட்டுவிடுங்கள். சந்நியாசம் தானே பூக்கும்.
அதைச் செய்வதற்கு நீ யார்? இந்த மகா சமுத்திரத்தில் நீ வெறும் ஒரு அலையாகத்தான் இருக்கிறாய். ஒரு தடவை நீ இங்கிருப்பாய் ; அடுத்த தடவை பாதையை மாற்றியிருப்பாய். அதனால் இந்த அலைகளைப் பார்த்து நீ ஏன் வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்?! அலைகள் வரும், மறையும். மீண்டும் வரும், மறையும்.
இதற்கிடையில் இந்த சிறிய இடைவேளைகளில் நீ ஏன் கவலையோடு விறைப்பாக இருந்து உன் வாழ்வை நாசம் செய்து கொண்டிருக்கிறாய்.
எல்லாச் சுமைகளையும் நீ ஏன் உனது தோள்களில் சுமக்க ஆரம்பிக்கிறாய்.
உனது பூப்போன்ற இதயத்தில் எதற்காக எந்தக் காரணமும் இல்லாமல் பாறைகளைச் சுமந்து கொண்டிருக்கிறாய்?
அதனால் இந்த நொடிப்பொழுதில் நீ ஆன்ம விடுதலையைப் பெற்றுவிடு. ‘நான்’ உணர்வை கடந்து போய்விடு. பிறகு ஆன்மா தானே விடுதலையை பெற்றுவிடும். உன்னால் எல்லாம் ஆன்மாவிற்கு விடுதலையைக் கொடுக்க முடியாது.
அப்படியென்றால், நீ உன் ஆன்மாவைவிட பெரிய சக்தி பெற்றவனாகத்தான் இருக்க முடியும். ஆன்மாவைவிட நீ பெரியவனா? நன்றாக சற்று சிந்தித்துப் பார். இந்த நொடிப் பொழுதில் நீ இங்கிருக்கும்போது, நீ மட்டுமல்ல உன் ஆன்மாவும் தானே விடுதலை பெற்றுக் கொண்டுவிடும். விடுதலை என்பது மற்றவர்கள் கொடுப்பதில்லை ; தலையிலிருந்து தளை விடுபட்டால், தானே விடு தலை கிடைத்துவிடும். நம் தலையிலிருந்து தளை என்ற விலங்கு, பந்தம் விடுபட்டாக வேண்டும். அதுதான் விடுதலை.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளும் தாமாகவே நிகழட்டும் என்று விட்டுவிடு. வாழ்க்கை என்பது தானே நடக்கின்ற ஒரு நிகழ்வாகவே எப்போதும் இருக்கட்டும். அப்போதுதான் அங்கே மகிழ்ச்சியும் பேருணர்வும் இருக்கும். அங்கே இன்புறுதல் இருப்பதால், அதன்பின் விரக்தியோ, தோல்வியோ எதுவும் ஏற்படாது போய்விடும். அப்போதுதான் நீ ஒருபோதும் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கும் நிலையை அடைவாய்.
உனக்கு என்ன நடக்கிறதோ, அது நடக்கட்டும், அது நல்லது. வரவேற்கக் கூடியதே. அங்கே வெற்றியும் இல்லை ; தோல்வியும் இல்லை. இவ்விளையாட்டு அவ்விடத்திலேயே கைவிடப்பட்டுவிடும். அதிகாலையில் சூரியன் வந்து தாலாட்டி எழுப்பட்டும் ; பூங்காற்று உன்னை வருடிச் செல்லட்டும் ; மாலை நேரத்தில் அமுதமே வடிவான சந்திரன் வந்து உனக்கு அமுதக் கலைகளைக் கொடுத்து தாலாட்டு பாடட்டும். அப்போது நீ உறக்கம் கொண்டுவிடுவாய். உனக்கு பசி வரும்போது சாப்பிடச் செல்வாய். இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வுகளும் அதுபாட்டுக்கு வரட்டும், செல்லட்டும். அதனால் பசிக்கும்போது சாப்பிடு.
உறக்கம் வரும்போது உறங்கச் சென்றுவிடு. இதைத்தான் பிரமஞானிகள் எந்த நிகழ்வையும் நீ போய்ச் செய்ய வேண்டியதில்லை என்றார்கள். நீ எல்லாவற்றையும் செய்பவனாக என்றைக்குமே இருக்காதே. இங்கே செய்பவன் என்றும் யாருமே இருப்பதில்லை. பசி வரும்போது, பசி உணர்வுதான் உன்னை சாப்பிட வைக்கிறது. தாகம் வரும்போது தண்ணீரைத் தேடிச் செல்கிறோமே, தாக உணர்வுதான் நம்மை தண்ணீர் இருக்கும் இருப்பிடத்தை நோக்கி செல்ல வைக்கிறது. இங்கே பசியும் தாகமும்தான் நகர்கிறதே தவிர, பசியாக, தாகமாக இருப்பவர் நகர்வதில்லை. இதை உணர்ந்து விட்டால் சரணாகதி அங்கே தானே நிகழ்ந்துவிடும்.
உண்மையில் நீ ஒரு நடனம் ஆடுபவரைப் பார்க்கும்போது, அங்கு நடனமாடுபவர் என்று எவருமில்லை. நடனம் மட்டுமே அங்கிருக்கிறது.
நீ ஒரு நதியைப் பார்க்கும்போது அங்கு நதி என்பது காணப்படுவதில்லை. நீரோட்டம் மட்டுமே அங்குள்ளது.
நீ ஒரு மரத்தைப் பார்க்கும்போது அங்கு மரமில்லை. மரத்தின் வளர்தல் மட்டுமே அங்கிருக்கிறது.
நீ ஒருவர் சிரிப்பதைப் பார்த்தால் அங்கு சிரிப்பவர் என்று யாருமில்லை. சிரித்தல் மட்டுமே அங்குள்ளது.
மெய்ஞ்ஞானம் என்பது அடையப்பட வேண்டிய ஒரு இலக்கு அல்ல. அது மிகவும் சாதாரண வாழ்க்கை என்பதாக உன்னைச் சுற்றியுள்ள இந்த சாதாரண வாழ்க்கையாகவே உள்ளது. நீ போராட்டம் செய்யாதபோது, உனது இந்த சாதாரண வாழ்க்கை மிகவும் அசாதாரணமான அழகுடையதாக இருக்கும். இந்த எளிய, சாதாரண வாழ்க்கையை முழு மனதோடு ஏற்றுக் கொண்டுவிடு. செய்பவன் என்பதை நிரந்தரமாக விட்டுவிடு. தொடர்ந்து செய்பவனையும் விட்டுவிடு. அனைத்தையும் கைவிடுகின்ற ஒருவனாகவும் ஆகிவிடாதே. அப்போது உன் மெய்யிருப்பில் நீ மலர்ந்து சரணாகதியாய் பூத்திருப்பதை நீயே காண்பாய். ‘நான்’ உணர்வு முற்றாக மறைந்து போயிருக்கும்.
அதனால் இந்த சரணாகதியை நீ அடையும்போது உனக்குள் வெறுமை உணர்வுகள் பூத்துக் குலுங்கி மணம் வீச ஆரம்பித்துவிடும். அந்த மகா நிர்வாணம் சொல்லும் இரகசியத்தை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டாமா, சொல்லுங்கள். அவசியம் அடுத்த வாரம் வியாழன்று இரவில் இதைப்பற்றி கலந்துரையாடலாம், வாருங்கள் என்று சொல்லிக் கொண்டு இந்த பேச்சுரையை இனிதே நிறைவு செய்கின்றோம் என்பதைப் பணிவோடு தெரிவித்து மகிழ்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து
உங்கள் ருத்ர ஷிவதா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
திருச்சிற்றம்பலம்