நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாஅழ்க !

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !

தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !  திருச்சிற்றம்பலம் !

ஓ………………ம்       ஓ………………ம்     ஓ…………………ம்

சாகா வரமும் தனித்த பேரறிவும்

மாகாதலில் சிவவல்லப சத்தியும்

செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்

மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்

பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும

ஆரண முடியுடன் ஆகம முடியும்

கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு

நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே

சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே

மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே

ஆனந்த அமுதே அருளொளி அமுதே

தான்அந்தமிலாத் தத்துவ அமுதே

நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே

சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே

பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே

கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே

அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்

உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே

பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே

தனிமுதலாய சிதம்பர அமுதே

உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே

அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே    (அகவல் : 1255-1290)

அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி

வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !

குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !

நமது விதைக்குள் விதை தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞானப் பறவைகளுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு சற்குருவின் ஞான வேதம் என்பதைப் பற்றித்தான்.  வாருங்கள் இனிமையாக உரையாடுவோம்.

அன்று சஷ்டி விரதம் ஆரம்பிக்கும் நாள். இடம் சதுரகிரி மலை.  நேரம் இரவு.

குருவோடு காலாற நடக்க ஆரம்பித்தேன்.  குரு எதையும் பேசாமல் மௌனத்தோடே ஒவ்வொரு அடியாக எடுத்து மெல்ல சிந்தித்த வண்ணம் நடந்து கொண்டிருந்தார்.  அவருக்கு வலப்பக்கமாக நானும் அமைதி காத்தே நடந்து கொண்டிருந்தேன்.  அப்போது ஞானாம்பா குருவின் பின்பக்கம் வந்து கொண்டிருந்தாள்.

ஆகாயத்தில் சந்திரனின் பூரணப் பொலிவு மரம், செடிகளை மட்டுமல்லாமல் எங்களையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது.  அந்த குளிர் கொடுத்த இனிமையில் நாங்கள் மூவருமே அந்த நிலவின் வெளிச்சத்தில் மனிதர்கள் கால்படாத இடத்தில் கிழக்கு மலையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.  சில்லென்று வாடைக்காற்று வேறு மலைய மாருதத்தைப் போல வீச ஆரம்பித்தது. காற்றின் மெல்லியத் தீண்டல் எங்கள் மூவரின் தேகத்தை கட்டிப்பிடித்துத் தழுவிக் கொண்டே சென்று கொண்டிருந்தது.

மலையிலிருந்த மரங்கள் காற்றின் வேகத்தில் இலேசாக வளைந்து கொடுத்து, குருவுக்கு தலை குனிந்து வணக்கம் சொல்வது போலவே இருந்தது. குருவிடம் ஒரு சிறு புன்னகை, அவரின் இதழோரத்தில் எட்டிப் பார்த்தது.  அந்த நேரம் காட்டுமுயல் குருவை நோக்கி ஓடிவந்து அவர் பாதத்தில் நின்று கொண்டு, என்னை முறைத்துப் பார்த்தது. அதைப் பிடிக்கப் போனேன்.  அது எதிர்வினை ஆற்றாமல் மௌனமாக குருவின் காலடியில் சம்மென்று உட்கார்ந்திருந்தது.  எடுக்க மனமில்லாமல் அதன் தலையை கோதிவிட்டேன்.  தலையை குனிந்து பின்புறக் கால்களை நீட்டிக் கொண்டு படுத்துக் கொண்டது.  இது என்னடா கோலம் ! காட்டு முயலைப் பிடிக்க முடியாது என்பார்களே, இது என்னடா கைகளால் தொட வந்தாலும் ஓடவில்லை, குருவின் காலடியில் அசந்து களைத்து விட்டதைப் போல படுத்துக் கொண்டதே என்று எண்ணிக் கொண்டு, குருவிடம் பேச ஆரம்பித்தேன்.  குருவோ சைகை செய்து அமைதியாக இருக்கச் சொன்னார்.

குருவின் கண்கள் எதையோ தேடின. ஞானாம்பாவிடம் கைகளால் தூரத்தில் தெரிந்து சில மூலிகைச் செடிகளைக் காட்டி, அதைப் பறித்துக் கொண்டு வரும்படி சொல்லவே, ஞானாம்பாளும் அவ்விடம் விட்டு அகன்று குரு சொன்ன மூலிகைகளை இரண்டு கை கொள்ளும் அளவுக்கு பறித்துக் கொண்டு வந்தாள்.  குரு என்னைப் பார்த்து, சைகையாலே அருகிலுள்ள பாறையைக் காட்டி ஒரு கல்லெடுத்து இம்மூலிகைகளை அரைத்துக் கொண்டு வா என்று சொல்ல, நானும் அதைச் செய்யப் போனேன்.  எனக்கோ மனசுக்குள் பல கேள்விகள்.  குரு எதற்கு மூலிகைகளைக் கேட்கிறார்? அரைக்க எதற்குச் சொல்கிறார்? இரவு உணவு இந்த மூலிகைகள்தானா? என்றெல்லாம் கேள்விகள் ஓட, இக் கேள்விகளுக்கான பதில்களை மனசுக்குள் தேடிக்கொண்டே மூலிகைகளை அரைத்துக் கொண்டு குருவிடம் வந்து கொடுத்தேன்.

அப்போதுதான் குருவின் உதடுகளில் சிறு ஆனந்தம் வரத் தொடங்கியது. ஞானாம்பாளை நோக்கி, இந்த முயலைக் கைகளால் தூக்கிக் காட்டு என்று சொல்ல, ஞானாம்பாளும் அதைச் செய்தார். எனக்கோ இன்னும் சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது.  குரு என்னதான் செய்ய நினைக்கிறார்? என்ற கேள்வி தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது.  நான் கழுத்தில் போட்டுக் கொண்டிருந்த துண்டை கிழிக்கச் சொன்னார்.  அதுவும் எனக்குப் புரியவில்லை. குருவோ, மெல்ல அவர் கைகளில் அந்த முயலை வாங்கிக் கொண்டு அதன் பின்புறக் கால்களை சோதிக்க ஆரம்பித்தார்.  அதன் பின்புற வலதுகால் காயம்பட்டிருந்தது.  ஏதோ ஒரு விலங்கிடமிருந்து உயிர் காக்க கடி வாங்கிக் கொண்டு ஓடிவந்ததைப் போல அதன் உடல்சோர்வும் இரத்தக் காயமும் காட்டியது.  அரைத்த மூலிகைகளை அந்த முயல் காலில் வைத்து கிழித்துத் துண்டின் ஒரு பகுதியால் நன்றாக இறுக்கிக் கட்டிவிட்டு, அந்த முயலை அவர் கைகளிலேயே வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.  “அதுதான் வைத்தியம் பார்த்தாயிற்றே? பிறகென்ன, அந்த முயலை கீழே விடவேண்டியதுதானே குரு” என்றேன். நான் பேசியதை அவர் கொஞ்சம்கூட கேட்டுக் கொள்ளவில்லை என்பது அவரின் உடல்மொழியிலிருந்தே புரிய ஆரம்பித்தது.

ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும்.  அந்த முயல் குருவின் நெஞ்சை அதன் முகத்தால் முட்ட ஆரம்பித்தது. குருவோ,  “என்னடா, காயம் ஆறிப்போயிற்றா? இப்போ உனக்கு சந்தோசமா? இனிமேல் அந்த காட்டுப்பய பக்கம் போகாதே.  என்ன தெரியுதா? சரி போய் சந்தோசமாய் இரையைத் தேடி, உன் வீட்டுக்குள் போய்ப் பத்திரமா இருந்துக்கோ. நாளை மீண்டும் வருவேன், உன்னைப் பார்க்க. என்ன சரியா!” என்று சொல்லி அந்த முயலை கீழே இறக்கிவிட்டதும், எங்கள் மூவரையும் பார்த்து, முன்னங்கால்கள் இரண்டையும் மேலே தூக்கி அழகு காட்டியது. அது பார்ப்பதற்கு எங்களுக்கு நன்றி சொல்லி வணக்கம் சொல்வதைப் போல இருந்தது.  பின் அம்முயல் வேகமாக ஓட ஆரம்பித்தது.

ஞானாம்பாள்தான் குருவிடம், “என்ன குரு, அந்த முயல் காயப்பட்டிருந்திச்சா? இப்போது அது குணமாகியது போல வேகமாக ஓடியதே.  இந்த அரை மணிநேரத்தில் எப்படி அதன் காயங்கள் குணமாகியது? ஒன்றும் விளங்கவில்லையே குரு” என்று கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

குருவோ, “அது அப்படித்தான் ஞானா. நீ பறித்து வந்த மூலிகைகளின் ஆற்றல் அப்படி.  முயலுக்குத்தான் அரை மணிநேரம்.  மனிதர்களுக்கு 1 மணி நேரத்தில் உடைந்த எலும்புகளே ஒன்றாக ஒட்டிக் கொண்டுவிடும்.  இதெல்லாம் சித்தர்களின் அதி இரகசிய வாழ்வியல் முறைகள்.  போகப் போக ஒவ்வொன்றாக நீ தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

குரு என்னைப் பார்த்து, “என்ன சிவநேசா, நான் சொல்றது சரிதானே” என்று என் கை எலும்புகளையும் தோள் எலும்புகளையும் தொட்டுத் தடவிப் பார்த்தார்.  “புரியுது குரு” என்றேன். ஞானாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.  “என்னடா, சிவா. என்ன உனக்கு இப்போ புரிஞ்சது? எனக்கு ஒன்றும் விளங்கலையே” என்றாள்.

“அது ஒன்னுமில்ல ஞானா.  ஒருநாள் குரு என்னைப் பரிசோதிக்க, குரு சொன்னா இப்போதெல்லாம் எந்த சீடனும் கேட்பதில்லை.  குரு வார்த்தைகளை அப்படியே முழுசா ஏத்துக்கிறதில்லே. குரு ஒரு விசயத்தை செய் என்றால், இன்றைக்கு யாரும் அப்படி செய்து விடுவதில்லை என்றெல்லாம் பேசிக் கொண்டு வந்தார்.  அப்போ நானும் குருவும் சட்டை முனி குகை இருக்கும் மலைமீது ஏறிக் கொண்டிருந்தோம்.  அப்ப நான் என்ன குருவே, இப்படி சொல்லிட்டீங்க.  நீங்கள் எனக்கு குரு மட்டுமில்ல. என் இறைவனும் நீங்களே ஆவீர்கள்.  நீங்கள் எதைச் செய்யச் சொன்னாலும் நான் அப்படியே கேட்பேன் குரு என்று சொன்னேன்.  நம்ம குருவுக்கு என் வார்த்தைகளில் துளியும் நம்பிக்கை இல்ல ஞானா.  சரிங்க குரு, இப்போ நான் என்ன செய்யணும், அதைச் சொல்லுங்க என்றேன்.  குருவோ போடா நீயும் உன் குரு பக்தியும் என்று ஏளனம் செஞ்சாரு.  எனக்கோ கட்டுக்கடங்காமல் கோபம் கொப்பளிச்சிட்டு வந்துச்சு.  நான் என்ன செய்யணும் சொல்லுங்க குரு, அதை முதல்ல என்றேன்.  குருவுக்கு என்னைச் சோதிக்கும் காலம் வந்துவிட்டதை உணர ஆரம்பித்தேன்.  எங்கே இந்த குகைப் பாறையிலிருந்து கீழே யோசிக்காமல் குதிடா, பார்க்கலாம் என்று சொல்லி முடிப்பதற்குள் எதையும் யோசிக்காமல் குருவே சரணம்னு சொல்லிட்டு கீழே குதிச்சிட்டேன் ஞானா.  அவ்வளவு இந்த குருவுக்கு ஒரே பதட்டம், பதபதைப்பு. அடேய், பாவி மவனே, என்னடா இப்படியா செய்ய என்று அவர் என் உடம்பைப் பிடிப்பதற்குள் நான் 10 அடி ஆழத்திற்குள் விழுந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 70 (அ) 80 அடி ஆழம் இருக்கும் ஞானா. மரக்கிளைகளில் விழுந்து, மரக்கிளைகள் ஒடிஞ்சு, என் தொடை, கைகள், தோள்பட்டைகள் எல்லாம் ஒரே இரத்தக் களறி.  கை எலும்பு உடைஞ்சிருச்சு. கையை மேலே தூக்கவே முடியல.  ஒரே வலி. நான் உயிரோடு இருக்கிறேனா? இல்லையா? என்ற சந்தேகம் வேறு எனக்கு. மயக்கம் என் கண்களை சுழட்ட ஆரம்பிச்சது.  அவ்வளவுதான் ஒரு 5 நிமிசத்துல மயக்கம் ஆயிட்டேன்.  பிறகு ஒரு மணி நேரம் கழிச்சு கண் விழிச்சப்போ நான் சட்டைமுனி குகைக்குள் படுத்துக் கிடந்தது தெரிய வந்தது.  குருவோ என்னை வச்சக் கண்ணு மாறா முறைச்சுப் பார்த்துட்டே இருந்தார்.  நான் கண் முழிச்சதும் அடப் பாவி மவனே, இப்படியா குதிப்ப? அறிவில்லை உனக்கு என்றார்.  ஆமாம் குரு, எனக்கு அறிவும் இல்லை, சந்தேகமும் இல்லை.  ஏண்டா இப்படி பண்ணுனே என்றார்.  நானோ, சொன்னது கடவுள்.  பக்தன் செய்யாமல் இருந்தா கடவுளின் அருள் கிடைக்குமா என்றேன். கொஞ்சம்விட்டா சாம்பல்தாண்டா கிடைக்கும். அதுக்கும் வழியில்லாம பண்ணியிருப்பே. ஆளப்பாரு.  சொன்னா குதிப்பானாம்.  உன்னை வச்சுக்கிட்டு என்னால தமாசாகூட பேச முடியாது போலிருக்கே.  குதிக்கிறப்பே வேற என்னடா யோசிச்சே, அதைச் சொல்லு முன்ன. என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கக்கூட தோணாம கீழே குதிச்சிருவியாடா என்றார்.  ஆமாம் குரு, நான் குதிக்கிறப்ப ஒன்னு நினைச்சேன். ஆனால், இப்ப சொல்ல மாட்டேன் என்றேன்.  என்னடா சொல்லித் தொல என்றார்.  இல்ல குரு, குதிச்சு சாகட்டும்னு முடிவு பண்ணிட்டீங்க.  தனியா எங்க ஆவியா சுத்தறது. பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாம. அதனால அதனால …… என்று மேற்கொண்டு பேசாம பேச்சை நிறுத்திட்டேன். குருவோ முழுசா சொல்லித் தொலடா என்றார்.  நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சிட்டு தனியா குதிக்காம உங்களையும் இழுத்துக்கிட்டு குதிச்சிருந்தா, நம்ம ரெண்டு பேரும் ஆவியா இந்த சதுரகிரி மலைல எந்தவித வாகனங்களும் இல்லாமல் பறந்து பறந்து ஒவ்வொரு குகையா போய் உட்கார்ந்துகிட்டு தவம் செய்திருக்காலாமே என்று நினைச்சேன் என்றேன்.  குருவுக்கோ என்மீது கோபம் வருவதற்குப் பதிலா அடேய், காட்டுப் பயலே, நீ செஞ்சாலும் செஞ்சிருப்பேடா.  உன்னை எல்லாம் நம்ப முடியாது என்று சொல்லி ஆசையா வந்து என்னைக் கட்டிப்பிடிச்சு, நீ எதுக்கும் கவலைப்படாத சிவநேசா, உன்னை ஆளாக்க வேண்டியது – சித்தனாக்க வேண்டியது என் பொறுப்பு.   கவலைப்படாம தைரியமா இரு.  உனக்கு முழுமையா பிரமஞான வித்தையைக் கத்துத் தருவேன் என்று சொல்லி என்னை அவர் மார்போடு அணைத்துக் கொண்டார் ஞானா. அந்த சம்பவத்துல என் கை ஒடைஞ்சிதல்லவா. அதை இந்த மூலிகைகளைக் கொண்டு கட்டு போட்டு என்னை 1 மணி நேரத்துல குணப்படுத்திட்டார். அதைத்தான் குரு சொல்ல வருகிறார்” என்றேன்.

அப்போது சோதி விருட்சம் மரம் எங்கள் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.  நாங்கள் மூவரும் அங்கு போய் அம்மரத்தின் ஒளிக் குடைக்கு அடியில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தோம். நிறைய நாட்கள் இரவு நேரம் இப்படித்தான் குருவின் சத்சங்கத்தோடு சென்று கொண்டிருக்கும்.

அப்போது இந்த சோதி விருட்சத்தைப் பற்றி குருவிடம் பேச்சுக் கொடுத்தேன்.  “குருவே, இந்த சோதி விருட்சத்தைத் தேடி இந்த உலக உயிர்கள் தேடி பேயாய் அலைந்து கொண்டிருக்கிறதே.  ஏன் அவங்களால இம்மரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.  என்ன காரணம் குரு?” என்றேன்.

“மகனே, சிவா.  இந்த மரத்தைத் தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் பிரமஞானிகளும் பரிபூரண பிரமஞானச் சாதகர்களும் சித்தர்களும்தான் காண முடியும்.  மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படாது, மறைந்து போய்விடும்.  அப்படியே கண்டுவிட்டாலும் அவர்களால் இந்த இடத்தில்தான் பார்த்தேன் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது அவர்களின் புத்தியானது பேதலிச்சு போயிடும். இதைத்தான் கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர் என்பார்கள் பிரமஞானிகள்” என்றார்.

எனக்கோ இன்றைய இரவு சத்சங்கத்திற்கான பொருள் கிடைத்துவிட்டதாக எண்ணி சந்தோசப்பட்டு, குருவிடம், “அதென்ன குரு, கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர் என்பதன் மெய்ப்பொருள் ஞானம்தான் என்ன?” என்றேன்.

குரு அவரின் திருவடிகளை ஆகாயத்தைப் பார்த்தபடி மல்லாந்து படுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.  குருவின் அமுத வாயிலிருந்து ஞானச் சொற்கள் சுனை நீராகப் பாய ஆரம்பித்தது.  நாங்கள் இருவரும் அந்த ஞான மழையில் முழுமையாக நனைந்தே போனோம், வாருங்கள் நீங்களும் அந்த ஞான மழையில் நனைந்து கொள்ள.

குரு பேச ஆரம்பித்தார்கள். அவருடைய பேச்சில் ஒரு சொல்ல முடியாத, வார்த்தைகளால் கோர்க்க முடியாத ஒரு பேரமைதி நிலவியது.  அவ்வளவு மென்மையாக பேசுவார்.  ஆனால், ஞானத்தின் ஆழமோ அளக்க முடியாததாக இருக்கும்.  அன்று இரவு நேரம் வேறு.  சதுரகிரி மலையே ஆழ்ந்த உறக்கத்தில், அமைதியில் மூழ்கிக் கொண்டிருந்தது.  உங்கள் சிந்தனை சதுரகிரி மலைக்கு செல்லட்டும்.  இரவு நேரத்தை மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.

குருவின் உதடுகள் மெல்ல மெல்ல அசைய ஆரம்பித்தன.  நாங்கள் இருவரும் குருவின் காலடியில் அமர்ந்து கொண்டு, அவரின் பாதங்களை ஆளுக்கொருவராகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தோம்.

            கண்டவர் விண்டிலர்.

            விண்டவர் கண்டிலர்.

            சத்திய ஞானம் கண்டவனுக்கு, அது தெரியாதது.

            அஞ்ஞானிகளுக்குத்தான் அது தெரிந்திருக்கும்.

சத்திய ஞானத்தைத் தனக்குள்ளே அனுபவித்து அறிபவனே, அதனை பிரக்ஞையின் ஒரு சிறு ஞான அதிர்வாக அடையாளம் காண்பவன்தான் இறவா நிலையை அடைகிறான்.

ஞானம் என்பது ஓர் அதிர்வு.  ஒரு குறிப்பிட்ட காந்த அலைகளைக் கொண்ட அதிர்வெண்களை ஞானம் பெற்றிருக்கிறது.  அந்த காந்த அலைகளை இதுதான் அது என்று எவன் தெரிந்து கொண்டு அதை கைவசப்படுத்துவானோ, அவனே ஞானியாக உருமாறுவான்.  ஞானத்தின் அதிர்வுகளை அவன் முதலில் மூளைக்குள் கடத்திக் கொண்டு செல்லத் தெரிந்திருக்க வேண்டும்.  அதுவும் ஞானத்தின் காந்த அலைகள் அதிகமாக பரவியிருக்கும் காலத்தில்.  24 மணி நேரமும் ஞான அதிர்வுகள் பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டிருந்தாலும், அது முழுமையாக நிறைந்து காணப்படும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.  அதை குருமுகாந்திரம் சீடர்கள் கேட்டு, குருவோடு இணைந்து அந்த ஞான அதிர்வுகளை அவர்களின் மூளைகளுக்குள் கடத்திக் கொண்டு போய்ச் சேர்க்கத் தெரிந்திருந்தால், அவனே சிவப்பிரம ஞானி.  இதைச் சொல்லிவிட்டு சிறிது மௌனத்தில் ஆழ்ந்தார் சற்குரு.

இந்த ஞான மொழிகளைக் கேட்கக் கேட்க, நானும் ஞானாவும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டோம். ஞானாவுக்கோ உலகமே ஒளிமயமாகத் தெரிகிறது என்றாள்.  “ஏண்டா சிவா, என்னடா இவ்வளவு விசயங்கள் எல்லாம் இந்த ஞானத்தை அடைவதற்கு இருக்கிறதா? அதிர்வுகள், காந்த அலைகள், அதிர்வெண்கள் இதெல்லாம்தான் நம்மை ஆளுமை செய்து கொண்டிருக்கிறதா?” என்றாள்.

நான் பதிலுரைப்பதற்குள் குரு மௌனம் கலைத்து பேச ஆரம்பித்தார்கள்.

ஒரு சீடன் அல்லது சாதகன் ஆன்மாவின் ஆற்றலால்தான் பலமும் சக்தியும் பெறுகிறான்.  அதன் பலனாகவே பிரமஞானத்தை அடைந்து, அதன் துணை கொண்டே அவன் மருவா நெறி அளிக்கும் பிறவா நெறி உலகை அடைகிறான்.

அதனை இங்கே இப்பொழுதே தன் வாழ்வில் அனுபவிக்க முடிந்தவனுக்கு சத்திய ஞான வாழ்க்கை அமையும்.  அப்படி அனுபவிக்காதவனோ தொடர்ந்து ஜென்மாந்தரமாகப் பிறவி எடுத்து, பிறவியெடுத்து கர்ம வினைகளிலேயே ஒரு பன்றிக் கூட்டத்தைப் போல சாக்கடையில் மூக்கை நுழைத்து வாழ்ந்து கொண்டிருப்பான்.  பன்றிகளுக்கு சாக்கடைக்கும் கங்கைக்கும் வித்தியாசம் தெரியாதுதான்.  ஆனால், அதற்கு பிடித்ததென்னவோ சாக்கடை மட்டும்தான்.  அஞ்ஞானிகளின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும்.  என்னதான் அவர்களை கங்கையில் குளிப்பாட்டி பாவங்களைப் போக்க நினைத்தாலும், கங்கைக்கரையில் எங்கேயாவது சாக்கடை தெரியுமா என்றே அவர்கள் கண்கள் தேடிக் கொண்டே இருக்கும்.  அது அவர்களின் பிறவிகுணம்.  அதை அவர்களால்தான் மாற்றிக் கொள்ள முடியும்.  நம்மால் மாற்ற இயலாது.

மெய்யறிவைப் பெறுகின்ற பிரமஞானச் சாதகர்கள்  அவர்களது உயிரிலும் ஆன்மாவிலும் இருக்கும் ஞான அதிர்வுகளைக் கண்டுபிடித்து விடுவார்கள்.  அந்த ஞான அதிர்வுகளை தூலமாகவே கேட்கவும் செய்வார்கள்.  தவத்தில் மூழ்கும் பிரமஞானிகளின் செயல்கள் இந்த ஞான அதிர்வுகள் கொடுக்கும் பரவசத்திலேயே சதா திளைத்துக் கொண்டிருக்கும்.  இந்தப் பிரபஞ்சமே இந்த ஆனந்த ஞான அதிர்வுகளால்தான் நாதமாக அதிர்ந்து கொண்டே இருக்கின்றன.  எப்போது இந்த ஞான அதிர்வுகள் அதன் இயக்கங்களை அதாவது அதிர்வுகளை நிறுத்துமோ, அன்றைக்கு இப்பிரபஞ்சத்தை ஊழிப் பெருவெள்ளம் வந்து ஆட்கொண்டு மூழ்கடித்து விடும். இந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்ட பின் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று எங்களைப் பார்த்துக் குரு கேட்க, நாங்களோ காணாமல் போன குழந்தைகளாக திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தோம்.  குரு தொடர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

பிள்ளைகளே, உங்கள் மூளைக்கும் உயிருக்கும் அப்படியொரு இரத்த சம்பந்தம், ஒளி சம்பந்தம் இருக்கிறது.  நீங்கள் தவத்தால் உங்கள் மூளைக்கு கொடுக்கும் அதிர்வுகள் ஞான அதிர்வுகளோடு ஒத்திருக்க வேண்டும்.  பிரபஞ்சத்தின் ஞான அதிர்வுகள் மூளைக்குள் பிரதிபலித்து ஊடுருவிச் செல்ல வேண்டுமென்றால், உங்கள் மூளை பிரபஞ்சத்தின் ஞான அதிர்வுகளை அப்படியே உள்வாங்கி பிரபஞ்சத்தைப் போலவே அதிர்வுகளை அதிர்ந்து கொண்டிருக்க வேண்டும்.  இதைச் செய்பவனே பிரமஞானி.  தவறுபவன் மகா முட்டாளான அஞ்ஞானி.  இந்த அடிப்படை ஞானாந்தக் காரணத்தைத் தெரிந்து கொள்ளாத மூடர்கள்தான் எத்தனையோ ஆசிரமங்களையும் மற்ற ஆன்மீக வழிபாட்டுத் தலங்களையும் வைத்துக் கொண்டு, தானும் ஞானம் அடையாமல் அவர்களை நாடி வரும் பக்தர்களுக்கும் மக்களுக்கும் ஞானத்தை வழங்கத் தெரியாமல் அவர்களை அவர்களின் வாழ்க்கையை அஞ்ஞானம் என்ற பெரும் பள்ளத்தில் தள்ளி விட்டுவிடுகிறார்கள்.  தாங்கள் பெரும்பள்ளத்தில் விழுந்து கொண்டிருக்கிறோம் என்ற அடிப்படை அறிவுகூட அவர்களுக்கு இல்லாததுதான் பெரும் அறியாமையாக இருக்கிறது.  இந்த அறியாமையை நீக்க அவர்கள் ஒரு உண்மையான சற்குருவை ஞானம் அடைந்த குருவை நாடி, பிரமஞான வித்தையை முழு ஆர்வத்தோடும் சிரத்தையோடும் வைராக்கியத்தோடும் விடாமுயற்சியோடும் கற்றுக் கொண்டாக வேண்டும். அதை விட்டால் அவர்களெல்லாம் பிரமஞானத்தை அடைய வாய்ப்பே இல்லை.  அப்படி யாரொருவர் ஒரு ஞானம் அடைந்த சற்குருவை தேடிக் கண்டடைந்து பிரமஞான வித்தையை முழுமையாகக் கற்றுக் கொள்வார்களோ, அவர்களே இறைவன் போற்றும் இறவா நிலையை அடைவார்கள். இது திண்ணம் பிள்ளைகளே என்று சொல்லி சற்று பேச்சை நிறுத்தி மௌனத்தில் இருந்தார்கள்.

ஞானாவுக்கு சொல்லவே வேண்டாம், “ஏண்டா சிவா, இப்படித்தான் தினமும் குருகிட்ட இரவு நேரத்துல இப்படியெல்லாம் ஞானங்களை கேட்டுக் கொண்டிருப்பாயா? அதனாலதான் உன்னை உன் அறிவை என்னால தொடவே முடியாம இருக்கா? இனி நான் ஒவ்வொரு இரவும் குருகூடத்தான் இருப்பேன், குரு என்ன சொன்னாலும் நான் மலைக்கு மேலே போக மாட்டேன்” என்றாள்.

எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.  “ஞானா, நீ சொல்வது ரொம்ப சரிதான்.  ஆனால், நீ தனியாக எங்கள் இருவரோடு இரவு நேரத்தில் இருப்பது ரொம்ப கஷ்டம்.  உன்னை பாதுகாக்கும் வேளையில் சில மணி நேரங்கள் சென்று கொண்டிருக்கும். அதை குரு விரும்பவில்லை.  அதனால் நீ இரவு நேரத்தில் மலைவாசி மக்களோடு அவர்களின் கிராமத்தில் இரு. விடியற்காலையில்தான் நீ வந்துவிடுவாயே, அப்போது நான் முதல்நாள் இரவில் நிகழ்ந்த ஞானச் செய்திகளை அப்படியே உனக்குச் சொல்கிறேன்.  போதுமா ஞானா” என்றேன்.  ஞானா இதைக் கேட்டு சற்று அமைதியானாள்.

குருவின் ஞானப் பேச்சுக்கள் தொடர ஆரம்பித்தன.  அப்போது நான்கு மலைவாசிகள் அதாவது பூச்சி, சிட்டு, கோணான், பரமன் ஆகியோர் குருவைத் தேடிக் கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தார்கள்.  குரு அவர்களைப் பார்த்து கண்களில் அன்பு பொங்க வரவேற்று ஆசிர்வதித்தார்கள்.  அவர்கள் குருவின் திருவடிகளைத் தொட்டு வணங்கி, பாதங்களை அல்ல குருவின் கண்களைத் தொட்டு வணங்கி, பாதத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டார்கள்.  அவர்கள் பேய்ச்சுரைக் குடுவையிலும் மூங்கிலிலும் கொண்டு வந்த தேனையும் தினை, வரகு மாவினையும் ஒரு பெரிய இலையில் வைத்து எங்கள் மூவருக்கும் கொடுத்தார்கள். குரு அந்தத் தேனை மட்டும் எடுத்து குடித்தார்.  மாவுகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.  ஞானாவுக்கு ரொம்ப பசிபோலும்.  குருவின் சொல்லட்டும் சாப்பிடலாம் என்றெல்லாம் நினைக்காமல் அவர்கள் கொடுத்தத் தேனையும் மாவினையும் பெற்றுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.  நானோ குருவின் திருவடிகளை நோக்கினேன்.  ம் என்றார்.  அது சாப்பிடலாம் என்ற சைகை.  தேன் ஓகேதான்.  மாவைச் சாப்பிடலாமா? வேண்டாமா? நாம்தான் தினமும் மூலிகைச் சாற்றை உணவாக சாப்பிட்டு வருகிறோமே, இந்த மாவினைச் சாப்பிட்டால் உடலில் வேறு ஏதாவது மாற்றம் வந்துவிடுமோ என்றெண்ணி, குருவிடம் மாவினைப் பார்த்து கண் அசைத்தேன். உன் விருப்பம் என்பதுபோல் சைகைக் காட்ட, நான் திடமாய் குரு வழியே என் வழி என்று வாயால் சொல்லி, நானும் தேனினை மட்டும் ஒரு 300 மில்லி இருக்கும்.  அப்படியே கொஞ்சம் கொஞ்சம் நாவில் ஊற்றிச் சுவைத்துச் சுவைத்து அருந்த ஆரம்பித்தேன்.  குரு என்னையும் ஞானாவையும் மாறி மாறிப் பார்த்தார்.  வந்திருந்த மலைவாசிகளும்தான்.  அவர்கள் அவர்களுக்குள்ளாக சிரித்துக் கொண்டார்கள்.

குரு ஞானாவை பார்த்து, “போதுமா, இன்னும் வேணுமா?” என்றார்.

ஞானாவோ “இருப்பதே அவ்வளவுதான் குரு. நீங்கள் ரெண்டுபேரும் நல்லவேளை, வேண்டாமென்று சொல்லி விட்டதால், அதையும் நானே சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றாள்.

ஞானாவின் பசியைப் பார்த்து எனக்கும் குருவுக்கும் அனுதாபமும் சிரிப்பும் மாறி மாறி வந்தது.  குரு என்னைப் பார்த்து, “நீ ஏண்டா, மாவினை வேண்டாம் என்றாய்?” என்றார்.

“இல்லை குரு, இந்த இரவு நேரம் குளிர் அதிகமாகவும் காற்று அதிகமாகவும் வீசிக் கொண்டிருக்கிறது.  மரங்களில் அசைவுகள் அதிகமாக இருக்கிறது.  தேகத்தில் இருக்கும் உயிரணுக்கள் குளுமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.  மாவு சாப்பிட்டால் அதன் தன்மையை குளுமையை இழுத்துத் தங்க வைத்துக் கொள்ளும். அதனால் உடல் அதிகம் குளிர்ச்சியை அடைந்து விடும்.  மேலும், மாவுத்தன்மை உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருளாகத்தான் இருக்கிறது.  தேனும் மாவும் நன்மைதான் என்றாலும், இது இரவு நேரம் என்பதாலும், மலையின் குளிர்ச்சி அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலும் தேகத்திற்கு வெப்ப ஆற்றல் தேவை குருவே.  அதை இந்த தேன் பார்த்துக் கொள்ளும் என்பதால், தேனை மட்டும் உண்ணலாம் என்று நினைத்தேன் குரு” என்றேன்.

குரு மகிழ்ந்தபடி, “உம், உனக்கும் கொஞ்சம் அறிவு வேலை செய்யுதுபோல” என்று சொல்லி, ஞானாவை குரு பார்க்க, ஞானாவோ என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஏண்டா, சிவா. குரு என்ன கேட்டாரோ அதுக்கு மட்டும் பிடிச்சிருக்கு, பிடிக்கல என்று பதில் சொல்ல வேண்டியதுதானே. இதுக்கு எதுக்குடா இவ்ளோ நீளமான பதில். குரு பாரு, உன் பதில் கேட்டு பயந்துட்டார்” என்றாள்.

குரு ஞானாவிடம், “அவன் சொன்னது சரிதான் ஞானா.  ஒரு ஞானயோகி ஒவ்வொரு நொடியும் அவனைச் சுற்றி என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  சூழ்நிலைகளும் சில நிகழ்வுகளும் ஒரு யோகியை புரட்டிப் போட்டுவிடும்.  பருவகாலத்திற்கு தக்கபடிதான் உணவுகளை சாப்பிட வேண்டும்.  என்ன கிடைக்குதோ, அதையெல்லாம் உண்ணக் கூடாது. அவனைப் பார்த்து இந்த ஞானத்தைக் கத்துக்கோ, என்ன தெரியுதா?” என்றார்.

அடுத்து ஞானா ஏதாவது பேச முடியுமா? நான் அவளைப் பார்த்து, “ப்ளீஸ் மா, நான் ஏதும் சொல்லலைமா, அவர்தான் இப்படி பேசுகிறார்.  நானும் நீயும் எப்பவும் ஒரே இரத்த உறவுதான். நீ எனக்கு அக்கா, நான் உனக்கு செல்லத் தம்பி” என்றேன்.

ஒருவழியாக இந்த என் வார்த்தைகளைக் கேட்டு சமாதானம் அடைந்தாள்.

குரு பேச ஆரம்பித்தார்கள்.  மலைவாசி ஆடவர்களும் உடனிருந்தார்கள்.  அப்போது மலை மேலிருந்து சில காட்டெருமைகள் கீழிறிங்கி வரும் சத்தம் கேட்டது.  கூடவே சில யானைகளும் வர ஆரம்பித்தன.  அதில் ஒரு யானை மட்டும் நாங்கள் இருக்கும் திசை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.  குரு பேச பேச, அந்த யானை நாங்கள் இருக்கும் இடத்திற்கு பத்து அடி தூரத்தில் வந்து நின்று குருவைப் பார்த்து துதிக்கை வானத்தை நோக்கி மேலே தூக்கி பிளிறிக் கொண்டே இருந்தது.  “யானைக்கு என்னமோ ஆயிற்று குரு, ஒருவேளை உணவு கிடைக்காமல் பசியால் துடிக்குதோ” என்றேன்.

நான் அதன் அருகில் போய், “கஜா உனக்குப் பசிக்குதா?” என்றேன்.  அது என் வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அதன் வயிற்றை துதிக்கையால் தொட்டுக் காட்டி சைகை செய்தது.  அவ்வளவுதான், குரு புரிந்து கொண்டு, அவரின் ரெண்டு கைகளையும் விண்ணை நோக்கி நீட்டி, ஏதோ சில மந்திரங்களை முணுமுணுக்க ஆரம்பித்தார்.  ஒரு ஒருநிமிடம் ஆகியிருக்கும்.  திடீரென்று அவரின் கைகளில் ஒரு வாழைப்பழத் தாரும், என் கையில் கரும்புக் கட்டும் வந்தன.  என்னால என் கண்களை நம்பவே முடியல.  யானைக்கோ எங்கள் கைகளில் இருந்த உணவுப் பொருட்களைப் பார்த்ததும் தலையை மேலும் கீழும் ஆட்டி அது வேண்டும், வேண்டும் என்று அதன் ஆசையை வெளிப்படுத்த ஆரம்பித்தது.  குருவோ, “நீ எங்களை ஆசிர்வாதம் செய்தால், இதைத் தருவேன்” என்று சொல்ல, யானையோ, எங்களை சுற்றி வந்து அதன் துதிக்கையால் ஆசிர்வதிக்க, குரு மகிழ்ந்து வாழைத்தாரையும் கரும்புக் கட்டையும் உண்ணக் கொடுத்தார்.

“யானைக்கு உணவு கொடுத்தாயிற்று. ஞானாவுக்கு உணவு கொடுத்தாயிற்று குரு, நீங்கள் பிரமஞானத்தை எனக்கு உணவாகக் கொடுங்கள் குருவே” என்றேன்.

இதைக் கேட்ட குருவோ, ஞானாவைப் பார்க்க, ஞானாவோ என்னை முறைத்துக் கொண்டு, “நீ என்னை ரொம்பவே டீஸ் பண்ணிக்கிட்டே இருக்கேடா.  குருவிடம் பேசுங்கள் என்று சொல்வதுதானே.  அதென்ன எனக்கு மாவும் தேனும், யானைக்கு வாழையும் கரும்பும், உனக்கென்ன பிரமஞானத்தை உணவாக வேண்டும் என்று சொல்ற.  நீ அடிக்கடி குருகிட்ட மாயாவி மாதிரியே பேசுற.  அதை என்னால புரிந்து கொள்ளவே முடியல.  சில சமயங்கள்ல குரு மாதிரியே நீ யோசிக்கற, பேசுறே.  எனக்கு அப்படியெல்லாம் வர மாட்டேங்குது. ஏண்டா, அதி மேதாவி.  வார்த்தைகளாலதான் குருவை வளைச்சுப் போட்டிருக்கியாடா.  ஆனால, உண்மையா இருப்பேன்டா குருகிட்ட.  உன்னைப் போல வார்த்தை ஜாலங்களில் எல்லாம் பேசி அவரை நோக வைக்க மாட்டேன். நீங்க சொல்லுங்க குரு, உங்கள் அமுத மொழிகளைக் கேட்க நான் சித்தமாக இருக்கிறேன், உங்கள் ஞானங்களை மலையாக, கான மழையாக, இதோ இந்த வாசமுள்ள பூக்களாக, அது தரும் சுகந்த வாசனைகளாக, தேவர்களும் மூவர்களும் மெச்சும்படியாக, அள்ள அள்ள குறையாமல் கொட்டிக் கொண்டே இருங்கள் குருவே” என்றாள்.

என்னால சிரிப்பு தாங்க முடியல.  குருவுக்கும் எங்கிருந்தோ சிரிப்பு வந்துவிட்டது.  “என்ன ஞானா, அவனை வார்த்தை ஜாலம், மாயாவி என்றெல்லாம் பேசிட்டு, நீதான் இப்போ அருமையாக வார்த்தைகளில் விளையாட்டுக் காட்டிப் பேசிட்டு இருக்கே.  அவனைவிட உன் தமிழ் ரொம்ப பிரமாதம் போ” என்று அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்க, குனிந்திருந்த தலையை சிறிது என்னை நோக்கி மேலே தூக்கி என்னைப் பார்த்து பாசாங்கு செய்தாள் ஞானா.

“குரு, குரு.  அவ நடிக்கிறா குரு. என்னைப் பார்த்து பாசாங்கு செய்யறா. அவ பேச்சை நம்பாதீங்க” என்றேன்.

குரு சிரித்துவிட்டு, ஞானத்தை பேச ஆரம்பித்தார்.

பிரமத்தைப் பற்றிய அறிய பிரமஞான வித்தை ஒருவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.  எதைப் பற்றிய படிப்பாக இருந்தாலும், அதைப் பற்றிய வித்தைக்கான அறிவினை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் பிரமத்தை ஒருவனால் அவ்வளவு எளிதாகக் கற்றுக் கொண்டுவிட முடியாது.  ஆனால் அறிந்து கொள்வது என்பது சாத்தியமான விசயம்தான்.  அப்படி பிரமஞானத்தை அறிந்து கொள்வது நிகழ்காலத்தில் மட்டுமே எப்போதும் நடந்து கொண்டிருக்க வேண்டும். அது இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் நடப்பதில்லை. இதை நன்றாக உள்ளே கிரகித்துக் கொண்டுவிட வேண்டும்.

ஒருவன் பிரமஞானத்தை அடைந்து விட்டேன் என்று சொன்னால் அது முழுக்க முழுக்க பொய்யான கூற்றுதான் பிள்ளைகளே.  ஒருவன் இறைவனை பார்த்துவிட்டேன், தெரிந்து கொண்டு விட்டேன் என்றால், இறைவன் இறந்த காலத்தில்தான் இருந்தாரா? இப்போது நிகழ்காலத்தில் இறைவன் இல்லையா? இல்லை எதிர்காலத்தில் அவர் இருக்க மாட்டாரா? என்ற கேள்வி எழுகிறதல்லவா.  இறைவன் எக்காலத்திலும் இருப்பவனல்லவா.  அதைப் போலத்தான் பிரமஞானம் என்பது அடைந்துவிட ஒன்றல்ல.  அதை சதாகாலம் அடைந்து கொண்டே இருக்க வேண்டிய ஒன்று.  பிரமஞானத்தைக் கண்டடைந்து அதிலேயே திளைத்துக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, அதைக் கண்டுவிட்டேன் என்று அர்த்தப்படுத்தக் கூடாது.  என்றால், ஒருவன் பிரமஞானத்தை அடைந்து விட்ட பின், அது இறந்த காலத்தில் நடந்த ஒரு ஞான நிகழ்வு.  ஆனால், தற்போது அவன் பிரமஞானத்தில் இருக்கிறானா? இல்லையா? என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வி.  அவன் எப்போதும் நிகழ்காலத்திலேயே பிரமஞானத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  அவ்வளவுதான்.  அதுதான் பிரமஞானத்தின் முதிர்ச்சி நிலை, உச்சநிலை.

இறைவன் என்றால், அது தொடர்ந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு அற்புதமான பரசவ பேரின்ம அனுபவ நிலை. அது எப்பொழுதுமே நமக்குள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டிய ஒரு ஞான அதிர்வுகளாகும்.  அது இறந்த காலமாக ஆகக்கூடாது.  அந்த அனுபவம் எப்போதுமே நமக்குள்ளே மரணித்துவிடக் கூடாது.  ஒவ்வொரு கணத்திலும் உயிர்த்துக் கொண்டே இருக்கவேண்டிய இறை ஞான அதிர்வுகளாகும்.

நான் சுவாசித்து முடித்து விட்டேன் என்று உங்களால் சொல்லிவிட முடியுமா? அப்படியென்றால் இக்கணம் நீங்கள் சுவாசிக்கவில்லையா? அப்படி நீங்கள் சுவாசிக்காது போனால், இறந்துதானே போவீர்கள்.  அதைப்போலத்தான் பிரமஞானம் என்பது இறந்துவிட்ட நிலையல்ல ; அது என்றுமே, எப்பொழுதுமே உங்களுக்குள் உயிர்த்துக் கொண்டே இருக்க வேண்டிய உயிரின் விழிப்புணர்வு நிலை.  சுவாசித்தல் இருக்கும்வரை உடல் உயிர்த்திருக்கும் ; ஞான விழிப்புணர்வு அதிர்வுகள் இருக்கும்வரை உயிரானது உயிர்த்துக் கொண்டே இருக்கும். உயிரானது எப்போதுமே பிரமஞானத்தை அதிர்வுகளாக, நாதங்களாக இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது.  உயிர் எப்போது ஞானத்தின் அதிர்வுகளை இயக்காமல் நிறுத்துகிறதோ, அப்போது இந்த உடலை விட்டு உயிரானது இறைவனின் பேருயிருக்குள் தஞ்சமடைந்து விடுகிறது.

அதனால்தான் பிரமத்தை அறிவு எனும் சிறிய அளவுக்குள் குறைத்து வைக்க முடியாது என்பதை நாம் அனைவரும் முதலில் நன்றாக புரிந்து கொண்டிருக்க வேண்டும். யாரெல்லாம் பிரமத்தை அறிந்து விட்டேன் என்று சொல்கிறார்களோ, அவர்களெல்லாம் பொய்யைத்தான் சொல்கிறார்கள்.  பிரமம் அறியப்பட வேண்டிய ஒன்றல்ல ; அது உயிரின் உணர்வுகளால் உணரப்பட வேண்டிய அனுபவமாகும்.  உணர்வுகளால் உணரப்படாதது அனைத்துமே ஒருநாள் மரணித்துத்தான் போகும்,  நம் உடலைப் போல. ஆனால், உணர்வுகளால் ஞான அதிர்வுகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நம் உயிரானது என்றைக்காவது இறந்து போனதாக கேள்விப்பட்டிருக்கிறோமா, இல்லையே.  அழிவென்பது தேகத்திற்கு தானே தவிர, உயிருக்கல்ல. இதை மனித சமுதாயம் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்.  உயிர் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும், எடுத்துக் கொண்டே இருக்கும்.  அப்பொழுதெல்லாம் அவ்வுயிரானது அதன் தன்மைகளிலிருந்து சிறிதளவும் மாறிப் பிறப்பதேயில்லை.  ஆனால், இந்த தேகமோ இந்த பிறவிக்கானது மட்டும்தான்.  இந்த உடல் அழிந்தால் அது இப்பிறவியை முடித்துக் கொள்ளும். அடுத்த பிறவியில் உடல் வேறொரு உடலைத்தான் பெற்றுக் கொண்டு பிறப்பெடுக்கும்.

இறைவன் ஒரு பொருள் கிடையாது.  ஒரு பொருளை நீங்கள் அறிந்து கொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம். ஆனால், இறைவன் என்பவன் ஓர் ஆற்றலாகவே இருப்பவன்.  அதனால் அவன் சதா இயங்கிக் கொண்டே இருப்பான்.  அவனுக்கு ஓய்வென்பதே இல்லை. ஆற்றலை அழிக்க முடியவே முடியாது.  இதைத்தான் இன்றைய அறிவியல் ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. அதை அழிக்க நினைத்தால், அது வேறொரு ஆற்றலாகத்தான் உருவெடுக்கும். அதனால் ஆற்றலை அழிக்க முடியாது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் பிள்ளைகளே, உங்களின் உயிரானது தொடர்ந்து மகா மந்திரத்தின் ஞான அதிர்வுகளையும் பிரபஞ்சத்தின் ஞான அதிர்வுகளையும் தொடர்ந்து ஆற்றலாக வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்து வருகிறது.  மகா மந்திரத்தைப் பிடிப்பதன்மூலமாக, உங்களால் பிரபஞ்சத்தின் ஞான அதிர்வுகளை எளிதாக கைவசப்படுத்திவிடலாம்.  அதனால்தான் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் இந்த மகா மந்திரக் கிரியாவை உங்கள் உயிர் தொடர்ந்து பிரமஞானத்தை அதிர்ந்து கொண்டே இருக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.  மகா மந்திரத்திற்கும் மூளையின் அதிர்வுகளுக்கும் அப்படியொரு மகா நெருக்கம் உள்ளது.  அதை பிரமஞானத் தவத்தில் தெளிவாக கேட்டுணரலாம் பிள்ளைகளே.  அதனால் எக்காரணத்தை முன்னிட்டும் மகா மந்திரக் கிரியா உங்களுக்குள் சதா நிகழ்ந்து கொண்டே இருக்கும்படி உங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டுவிடுங்கள்.  நமது தேகத்தில் இருக்கும் ஒன்பது வாசல்களையும் கட்டி, ஐம்புலக் கதவுகளையும் திறக்க வைத்துக் கொண்டால், உங்கள் உயிரின் அதிர்வுகள் நிற்காமல் இயங்கிக் கொண்டே இருக்கும்.  இந்த ஒன்பது வாசல்களையும் ஐம்புலக் கதவினையும் திறக்க வைக்கக் கூடிய ஒரு ஞான சாவிதான் இந்த மகா மந்திரம்.  இதை குருமுகாந்திரம் கேட்டுத் தெளிந்தால், அதன்பிறகு உங்கள் உயிரானது பிரமஞானமாகவே அதிர்ந்து கொண்டே மகா மந்திர மயமாக மாறிவிடும்.  உங்கள் உயிரே மகாமந்திரமாக உருவெடுத்து விட்டால் அடுத்து உயிருக்கும் மூளைகள் அனைத்தும் மகாமந்திர அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டுவிடும். அப்படி உள்வாங்கப்பட்ட மகாமந்திர ஒலிகள் மூளைச் செல்களை ஒளியாக்கும் இரசவாத வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கும்.  இதற்கெல்லாம் உங்களுக்கு குருவின் ஞான விதை என்ற ஒளிப்பொருள் உங்கள் உயிருக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.  அந்த ஒளிப்பொருள்தான் பிரபஞ்சத்தின் ஞான அதிர்வுகளை கிரகித்துக் கிரகித்து, உட்கொண்டே வரும்.  குருவின் ஒளிப்பொருள் துணையில்லாமல் உங்களால் நீங்கள் எண்ணாயிரத்தாண்டு யோகத்தில் இருந்தாலும், ஊசிமுனையில் தவம் செய்தாலும், ஒற்றைக்காலில் தவம் செய்தாலும் உங்களால் பிரமஞானத்தை அடைந்துவிடவே முடியாது. அதுதான் பரம இரகசியமான இரகசியம். இதைத்தான் நமது ஆதி குலகுருவான திருமூலர் அவர்கள்,

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடன் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே                  (தி.ம.752)

என்றார்.

நீங்கள் இறைவனைக் கண்டு தரிசிக்க வேண்டுமென்றால், நீங்கள் இறைவனைப் போலவே சதா இயங்கிக் கொண்டே, அதிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த இயக்கத்தை, ஆற்றலை ஒரு கட்டத்தில் நாம் நிறுத்திக் கொண்டு விடுகிறோம்.  இறைவன் சூரியனைப் போல, சதா இயங்கிக் கொண்டே இந்த பிரபஞ்ச உயிர்களுக்கெல்லாம் உயிராற்றலை, ஞானத்தை வழங்கிக் கொண்டே இருக்கிறார். இறைவனைப் பொறுத்தவரைக்கும் அவனுக்கு நிறுத்தம் என்பதே கிடையாது.  எப்பொழுதுமே இயக்கம்தான், உயிராற்றல்தான் அவன். அவனோடு நாம் ஒன்றிணைய வேண்டுமென்றாலும், ஒன்றாக கலந்துவிட வேண்டுமென்றாலும் நீங்கள் அவனோடே சதா இயங்கிக் கொண்டே இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கே பிரமஞானம் சாத்தியமாகும்.  மற்றவர்கள் இறைவனைக் கண்டுவிட்டேன் என்று கடந்த காலத்தில் நிகழ்ந்ததை சொல்லிக் கொண்டிருப்பார்கள். நிகழ்காலத்தில் அவர்கள் சாதாரண மானிடனாகத்தான் இருப்பார்கள்.  பிரமஞானி என்பவன் கடந்த காலத்தில் மட்டும் இருப்பவனல்ல ; அவன் சதா எந்த காலத்திலும் அதாவது ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் நிகழ்காலத்தில் மட்டுமே இருப்பவன் ஆவான்.

இறைவனுடன் கலந்துவிட்டவர்களுக்கு இறைவன் என்றால், அவன் கங்கையைப் போல, காவிரியைப் போல சதா ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு ஜீவநதி என்றும் நதி வெள்ளோட்டம் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும்.  நதிகள் ஓடிக்கொண்டே இருப்பதுபோலத்தான், நம் உயிரின் ஞான அதிர்வுகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.  நாம் ஜீவனோடு இருக்க நம் உயிர் ஜீவநதியாகத்தான் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உலகோர் எல்லாம் அவர்களின் பட்டறிவினால்தான் இறந்த காலத்தை சேகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  அறிந்து கொண்டே இருப்பதில், அவர்கள் இறந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இறந்த காலத்தில் உங்களுக்குள் என்னவெல்லாம் வந்து சேர்ந்ததோ, அவைகள் அனைத்தையும் முதலில் உங்களைவிட்டு வெளியே தூக்கியெறிய வேண்டும்.  அப்போதுதான் உங்களால் புதியதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இறந்த காலத்தோடு ஒப்பிட்டால், நீங்களும் இறந்துவிட வேண்டியதுதான்.  அப்போதுதான் உங்களால் நிகழ்காலத்தில் மட்டும் உயிர்ப்போடு, உயிர் நாதத்தோடு, ஞான அதிர்வுகளோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்க முடியும். உங்கள் உயிர்ப்பு அப்போதுதான் விழிப்பு நிலைக்கு வந்து சேரும்.

நீங்கள் அனைவருமே கடந்த காலத்தில் மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எது உயிருடன் இல்லையோ, எது நம்மைவிட்டு கடந்து போய்விட்டதோ, எது பிணவுடலாக இருக்கிறதோ, அதனுடன்தான் வசித்துக் கொண்டு வருகிறீர்கள். அதனால்தான் சொல்கிறேன், நீங்கள் அனைவரும் இறந்த காலத்தில் தான் வாழ்கிறீர்கள் என்று.  கிட்டத்தட்ட ஒரு நடைபிணத்தைப் போல, பிணவுடலைப் போலத்தான் மனிதக் கூட்டங்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

வாழ்க்கை என்பது எப்போதும் நிகழ்காலத்தோடு மட்டுமே தொடர்புடையது. அது கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ அல்ல.  புத்தி என்ற ஒன்று இருப்பதால்தான், நீங்கள் கடந்த கால நிகழ்வுகளையும், எதிர்கால வரவுகளையும் நினைவுபடுத்தி, நினைவுபடுத்தி ஞாபகத்திற்கு கொண்டு வந்து மீண்டும் மீண்டும் இறந்து கொண்டே இருக்கிறீர்கள்.

இந்த புத்தி கொடுக்கும் ஞாபகங்கள் எல்லாமே ஒவ்வொரு நொடியும் கடந்த காலத்தில் வாரிக் கொண்ட குப்பைகளைத்தான் அள்ளி அள்ளி உங்கள் ஆன்மாமீது வீசிக்கொண்டே இருக்கிறது.  அப்படி நடக்க நீங்கள் ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது. தொடர்ந்து அதனை துறந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.  தூர எறிந்தபடியே இருங்கள்.  அந்த வெற்றுக் குப்பைகளால் ஒரு பயனும் உங்களுக்குள் நிகழப் போவதில்லை.  அது வெறும் கூடு மட்டுமே.  அதுவும் உயிரற்ற பிணக்கூடு.  அதற்குள்ளே இருந்த உயிர்ப்பறவை என்றைக்கோ பறந்து விட்டது.  விடாமல் நீங்கள் அந்த வெற்று பிணக்கூடுகளைத்தான் தேடித் தேடிச் சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  அவை கடைசியில் உங்களுக்கு சிறைச்சாலையைத்தான் பரிசாக அளித்து பல்லிளித்து பரிகசிக்கும்.  அதனால் உங்கள் வாழ்க்கை சூறாவளிக் காற்றால் சுழன்றடிக்கப் பட்டதைப் போல ஆகிவிடும்.  அது உங்களை நகர விடாத அளவுக்கு உங்களை இறுக்கமாகக் கட்டிப் போட்டுவிடும்.

அதற்கு நீங்களெல்லாம் ஒரு சிறந்த சந்நியாசியாக மாறுவதே சிறந்த ஒன்றாக இருக்கும். சந்நியாசி என்றால் வீடு, காடு, மனைவி, மக்கள், குடும்பம் இவைகளைத் துறப்பதல்ல.  அவன் கடந்த காலத்தை துறந்தவனாக இருக்க வேண்டும். அவனே சந்நியாசி.  காலத்தைத் துறப்பவனே துறவி, சந்நியாசி.  ஒரு துறவியின் சொத்து என்ன தெரியுமா, அவனின் காலமற்ற நிலைப்பாடுதான்.  கடந்த காலம்தான் ஒருவனுக்கு குடும்பம், சொத்து. அதைத் துறந்துவிட்டால் அவன் சந்நியாசி.  ஆனால், நீங்கள் அனைவருமே கடந்தகால உயிரற்ற பிணக்கூடோடேதானே வாழ்ந்து வருகிறீர்கள்.  அப்பொழுது உங்களை பெயர் சொல்லி அழைப்பதா? ஒரு துறவி, சந்நியாசி என்றழைப்பதா? இல்லை உயிரற்ற பிணக்கூடு என்றழைப்பதா?

அப்படி கடந்த காலத்தைக் கண்டு, அதிலிருந்து மீண்டு வந்து நிகழ்காலத்தில் விண்ணதிர வாழ்பவன் எவனோ அவனே கண்டு விண்டிலனாக இருப்பான். அவன் எதைக் கண்டிருப்பான்? அவனின் இறைவன் இருக்கும் விண்ணை, விண்வெளியை, வெட்டவெளியை, பரவெளியை, சுத்த வெளியை, சுத்தசிவவெளியை, சிவ துரியாதீத வெளியைக் கண்டிருப்பான்.  அப்படி இறைவன் இருக்கும் இடத்தை தன் பிரமஞானத் தவத்தால் அடைந்தவன், அப்போது அவனுக்குள் நிகழ்ந்த உயிர் அனுபவங்களை, இறைவனோடு கலந்து புணர்ந்திருக்கும் பேரின்ப பரவசங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது தவித்துக் கொண்டிருப்பான்.  அந்த அனுபவங்களை எந்த வார்த்தைகளால் பூர்த்தி செய்து சொல்ல முடியும் என்றே சிந்தித்திருப்பான்.  அதனால் சிவத்தை ஒளியாகக் கண்ட அவன், அங்கிருந்த விண்ஆற்றலை, சிவ துரியாதீத நிலை அனுபவங்களை பெற்று பரமாசாகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான். இவனே கண்டவன் ஆவான்.

விண்டவன் என்றால், தன் உயிராற்றலை அமுதக் காற்றோடு சேர்ப்பித்துக் கொண்டு போய்,   இறையின் பிரணவ உச்சியில் செலுத்திச் செலுத்தி, சதா இறையாற்றலோடே வாழ்ந்து ஒளியாக, ஒளிக்காற்றாக, ஒளிச்சுவாசமாக எவன் வாழ்ந்து வருவானோ அவனே விண்டவன் ஆவான்.

அவ்வாறு ஒளி சுவாசமாக மாறாதவர்கள் இறைவனைக் காணாதவர்கள், இறை சுவாசமாக மாறாதவர்கள் ஆவார்கள்.

அதனால்தான், இறைவனை தனக்குள்ளே சிவப்பொருளாக, சிவப்பழம்பொருளாக கண்டவர்கள், இறை சுவாசமாகவே மாறிப் போய்விடுவார்கள்.  ஒளி சுவாசமே இறை சுவாசமாகும்.  ஒளி சுவாசமாக மாறிய ஒருவரால் எப்படி நமக்கு அவரின் ஞான அனுபவங்களைச் சொல்ல முடியும் என்பதைத்தான், கண்டவர் விண்டிலர் ; விண்டவர் கண்டிலர் என்றார்கள் பிரமஞானிகள்.

“சரி, பிள்ளைகளே, கிளம்புங்க நம்ம இருப்பிடத்திற்குப் போகலாம்” என்று குரு சொல்ல, நாங்கள் ஏதோ விண்ணுலகில் வாழ்ந்து வந்ததைப் போல குருவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தோம்.

குருவே அதனால்தான் வள்ளற்பெருமான் அவர்கள்,

“கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி கொண்டேன்” 

என்றும்,

“இறைவநினது அருளாலே எனைக்கண்டு கொண்டேன்
எனக்குள் உனைக் கண்டேன் பின் இருவரும் ஒன் றாக
உறைவது கண்டு அதிசயித்தேன்”           – திருவருட்பா 3051

“கண்டேன் அவர் திருப்பாதங் கண்டு அறியாதன கண்டேன்” 

என்று திருநாவுக்கரசப் பெருமானும்

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் 
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் 
என்னாழி வண்ணன்பால் இன்று” 

என்று பேயாழ்வாரும் பாடி அருளினார்களா?” என்றேன்.

 “ஆமாம் சிவநேசா, ஏண்டா, உனக்கெப்படி இந்த பாடல்கள் தெரியும்?” என்றார்.

“தெரியலங்க குரு, நீங்கள் இப்போது பேசியதிலிருந்து எனக்குள்ளிருந்து ஒரு குரல் இந்தப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.  அதைக் கிரகித்துக் கொண்டே சொன்னேன்” என்றேன்.

“பரவாயில்ல சிவா, நீ சரியாத்தான் சொல்லிருக்கே.  அருமை, நல்லது.  சரி வாங்க நேரமாகுது, அதிகாலை தவம் செய்யணும்.  இப்போ போனாதான் சரியாக இருக்கும்” என்று எங்கள் இருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

நாங்கள் அந்த சதுரகிரி மலையின் நிலவொளியில் குருவை எங்கள் இறைவனாகவே பார்க்க ஆரம்பித்த நாள் அன்றைக்குத்தான்.

 உங்களுக்கும் நேரமாகுதுன்னு நினைக்கறேன்.  மீண்டும் நாம் அடுத்த வாரம் இதே தளத்தில் சத்சங்கத்தில் கலந்து உரையாடலாம், வாருங்கள்.

உங்களிடமிருந்து அன்போடு விடைபெற்றுக் கொள்வது

பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து

உங்கள் ருத்ர ஷிவதா.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!