ஓ…………ம்       ஓ……………ம்     ஓ……………ம்

                   சாகா வரமும் தனித்த பேரறிவும்

                             மாகாதலில் சிவவல்லப சத்தியும்

                   செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்

                             மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்

                   பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி

                             ஆரண முடியுடன் ஆகம முடியும்

                   கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு

                             நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே

                   சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே

                             மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே

                   ஆனந்த அமுதே அருளொளி அமுதே

                             தான்அந்தமிலாத் தத்துவ அமுதே

                   நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே

                             சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே

                   பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே

                             கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே

 

                   அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்

                             உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே

                   பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே

                             தனிமுதலாய சிதம்பர அமுதே

                   உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே

                             அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே  (அகவல் : 1255-1290)

 

          அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி

வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !

          குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !

 

          நமது விதைக்குள் விதை தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞானப் பறவைகளுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

          இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு வள்ளற்பெருமான் திருவருட்பா ஆறாம் திருமுறையில் அருளிய திருவருட்பேறு என்ற பதிகத்தின் ஞானத்தைத்தான் உரையாட இருக்கின்றோம். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம். 

 

 

 

 

 

 

  1. சிவயோக நிலை
    (கதவைத் திறக்க வேண்டிப் பிரார்த்தனை)

 

          இறைவன் உருவமற்ற அருவத் திருமேனியனாக செம்பொருள் சோதியாக இருக்கின்றான் என்கிறார் வள்ளற்பெருமான்.

          தமிழில் சொல்லப்படும் தவம் என்ற சொல்தான், வடமொழிகளில் யோகம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த விசயம் நிறைய பேர்களுக்குத் தெரிவதில்லை.  இறையொளியோடு நம் ஆன்மக் கூட்டிற்குள் இருக்கும் உயிரொளியை புணர வைப்பதே சிவயோக நிலை.

          அருட்பெருஞ்சோதியான சிவம், சிற்றம்பல வடிவில் நம் ஆன்மக் கூட்டிற்குள் பேருயிராக வீற்றிருக்கிறார்.  அந்த எல்லாம் வல்ல சித்தனிடம் நாம் முறையாக அருளமுதைப் பெற்றிருக்க வேண்டும்.  இதற்காக ஞானக் கதவைத் திறக்கவொட்டாமல் தடையாக இருந்து கொண்டு நம்மைத் தடுப்பது ஆன்மாவைப் போர்வை போல மூடிக் கொண்டிருக்கும் ஆணவக் குற்றமே. 

          இந்தக் குற்றத்தை – குப்பையை நாம் நன்றாக எரித்து ஒழித்தால்தான், ஆன்மாவின் ஞானக் கதவினைத் திறக்கவே முடியும்.  கதவு திறக்காமல் உள்ளே இருக்கும் அருட்பெருஞ் சோதி இறைவனின் தரிசனத்தைப் பெறவே முடியாது. 

          என் ஆன்மாவிற்குள்ளே இருக்கும் உயிரொளியின் நடுவே அருட்பெருஞ்சோதியராக வீற்றிருக்கும் எம் சிவமே, ஆடல் வல்ல கூத்தனே, நான் மதி மண்டலத்தில் இருக்கும் சந்திரக் கலசத்தின் அமுதத்தைப் பருகி உண்டு, உன் சிவ உலகத்தில் அருளரசை நடத்த வேண்டுமென்றால், நீ என் ஆன்மாவை மூடிக் கொண்டிருக்கும் ஆணவ மலத்தை உன் ஞானாக்னியால் எரித்து, உன்னை மறைத்திருக்கும் ஞானக் கதவைத் திறந்துவிட வேண்டும் என்று இந்த பத்துப் பாடல்களிலும் மெய் உருக, ஊன் உருக, அமுதுருகப் பாடிப் பாடிப் பரவசம் கொள்கின்றார் வள்ளற்பெருமான்.

நேரிசை வெண்பா

திருச்சிற்றம்பலம்

 

  1. மதிமண்டலத்து அமுதம் வாயார உண்டே
    பதிமண்டலத்து அரசு பண்ண – நிதிய
       நவநேயம் ஆக்கும் நடராஜனே எம்
       சிவனே கதவைத் திற.                  (ஆறாம் திருமுறை-1296)

எங்கள் சிவபெருமானே! நித்தியமும் புதுமையுமுடைய நேயமாகிய சிவயோகப் பயனை எய்த அருளும் கூத்தப் பெருமானே! திருவருள் ஞானத்தைப் பெறுதற்குத் தடையாகும் உலகியல் மாயை என்னும் கதவைத் திறந்து யோக நெறியில் துவாத சாந்தத்தில் தோன்றும் ஞான வமுத சந்திரனிடத்து ஒழுகும் ஞான அமுதத்தை நிரம்ப உண்டு சிவலோகத்தில் சிவஞான அருளரசு பண்ணி இன்புற அருளுவாயாக.

மதி மண்டலம் என்பது யோக நெறியில் உள்ள மூலாதாரம் முதலாக வரும் ஆதாரம் ஆறினுக்கும் மேலதாகிய துவாத சாந்தத்தில் தோன்றுகின்ற ஞான சந்திரன். யோகிகள் இங்குள்ள அமுதத்தை உண்டு இன்புறுவர். 

மதி மண்டலம் பற்றிய சில தகவல்கள்:

மதி மண்டலத்தின் அமுதம் வாயார உண்டு எனப்படுகிறது. 

மதி மண்டலத்தில் இருந்து பெறப்படும் பயன் சிவலோக இன்ப அரச போகம் என்று விளக்குகிறார்கள். 

நாம் பெற்ற உடம்பு இறவாதிருக்க வேண்டுமானால் சிவயோகத்தால் மூலாக்கினியை உள்ளிருந்தெழுப்பி உள்ளே மதி மண்டலத்தின் அமுதம் உருகி ஒழுக அதனைப் பருக வேண்டும். 

குண்டலினி சத்தியாகிய அம்மையால் வளர்க்கப்பட்டு நரை திரையின்றி வளரும் அழியாத உடம்பினைப் பெறுதலே சாகாக் கல்வி எனப்படும்.

இதைப் பற்றிய திருமூலர் சொல்வதைக் கேட்கலாம்.

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்

பரிந்த இத்தண்டுடன் அண்டம் பரிய

விரிந்த அப்பூவுடன் மேலெழ வைக்கின்

மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே   (தி.ம.817)

பிரமஞானத் தவத்தில் வரும் சுடராழித் தவயோகப் பயிற்சியை செய்யும்போது, திருவடியின் மூலாதாரத்திலேயே இருக்கும் பிராணன் மேல்நோக்கி எழுந்து வரும்.  பிராணன் மேல்நோக்கி எழ அதற்கு அபானனின் உதவி கண்டிப்பாகத் தேவை.  அபானன் திரவத் தன்மையில் இருக்கும் வாயுவாகும்.  அதை சுடராழியால் சுடுவெப்பத்திற்கு ஆளாக்க வேண்டும்.  அப்போதுதான் அபானன் திரவநிலையிலிருந்து ஆவி நிலைக்கு உருமாறும்.  அப்படி ஆவியான அபானன் பிராணனை வந்தடையும்.  அபானனை கைவரப்பெற்ற பிராணன் சுழிமுனை நாடியை வந்தடைந்து இன்னும் அது மேலெழுந்து செல்ல ஆரம்பிக்கும். தொடர்ந்து இந்த தவப் பயிற்சியை செய்து கொண்டே வந்தோமென்றால், சகஸ்ரார தளத்தில் அந்த சிவவுலகில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட அந்தத் தாமரையை நம் பிராணன் தொட்டுக் கொண்டு மேலும் மேலே செல்ல ஆரம்பிக்கும்.  அப்படி சகஸ்ராரத்தின் உச்சியில் பிராணன் தொட்டு எழும்போது, அங்குள்ள மதி மண்டலம் அதன் இதழ்களை ஒவ்வொன்றாக விரிக்க ஆரம்பித்து மலர்ந்து நிற்கும்.  அப்படி நாம் மதி மண்டலத்தை மலர வைத்துவிட்டால், நாம் எவ்வளவு காலமென்றாலும் வாழ்ந்து கொண்டே இருக்கலாம். இதற்கு அனுபோகப் பாடம் நமது பிரமஞானப் பொற்சபை பீடத்தில் கற்றுத் தரப்படும் பிராணக் கிரியா ஞான தவம் ஒன்றே.  வேறு மார்க்கங்களில் சந்திர மண்டலத்தை உருக வைக்க முடியாது.

 

நித்திய நவநேயமாவது அழிவில்லதாய் சிவஞானத்தால் உணரப்படும் சிவமாகிய நேயப் பொருள் என்பதைத்தான், “நிதிய நவநேயம்” என்றார்.

மதி மண்டலம் என்பது யோக நெறியில் மூலாதாரம் முதலாகவுள்ள ஆதாரம் ஆறினுக்கும் மேலதாகிய துவாத சாந்தத்தில் தோன்றுகின்ற ஞானச் சந்திரன். பிரமஞானத் தவசிகள் சந்திரனிடத்து அமுதம் கிடைக்கப் பெற்று அதனை ஞான நாட்டத்தின் காரணமாக, வாயார உண்டு இன்புறுவர்ள் என்பதைத்தான், “மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டு” எனவும்,

அப்படி அங்கு பெறுகின்ற பயன்பாடு சிவலோகத்தில் கிடைக்கும் இன்ப அரச போகமாக இருக்கும் என்பதைத்தான், “பதி மண்டலத்து அரசு பண்ண” எனவும்,

அவ்வின்பப் பேற்றுக்கு உலகியல் ஆசைகள் தடையாக இருப்பதாகவும், அந்த ஆசைகளை உண்டுபண்ணிக் கொண்டிருப்பது நம் ஆன்மாவை மூடிக்கொண்டிருக்கும் ஆணவ மலம் என்பதையும் அந்த தடையை கதவாக உருவகம் செய்து,   “கதவைத் திற” எனவும் இயம்புகின்றார்.

இறைவன் யோகியர்க்கு அருளும் திறத்தை “ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு, இடரான கெடுப்பன அஞ்செழுத்துமே” என்று ஞானசம்பந்தர் பாடியிருப்பதை இங்கு ஒப்புநோக்கினால் மதி மண்டலத்தைத் திறப்பது சாத்தியமாவது பிடிபடும்.

இதனால், சிவயோக நெறியில் மதி மண்டலத்து அமுதம் உண்டு சிவ போகத்தை அனுபவிக்கும் தன்மை பற்றி சொல்லப்பட்டது.

 

  1. இந்தார் அருளமுதம் யான்அருந்தல் வேண்டும்இங்கே
    நந்தா மணிவிளக்கே ஞானசபை – எந்தாயே
        கோவே எனது குருவே எனையாண்ட
        தேவே கதவைத் திற.                  (ஆறாம் திருமுறை-1297)

என்றும் அழியாத ஞான மணி விளக்காக இருப்பவனே! உயிர் விளங்கும் ஞான சபையில் எழுந்தருளும் எம் தந்தையே! இவ்வுலகை ஆளும் எம் தலைவனே! என்னுயுடைய ஞானசற்குருவே! என்னை இளமைக் காலத்திலேயே ஆண்டுகொண்ட தேவனே! இப்பொழுதே நான் உன்னுடை அருட்கலைகளால் நிரம்பிய தண்ணமுதத் தேனை நான் உண்டுவிட வேண்டும்.  அந்த அருளமுது இருக்கும் இடம் நீ வாசம் செய்து கொண்டிருக்கும் ஞானசபையில் அல்லவா.  அந்த ஞானசபைதான் இறைவன் இருக்கும் இடம்.  அந்த ஞானசபையின் உச்சியில்தான் அருளமுதம் இருக்கும் மதி மண்டலம் அதாவது சந்திர மண்டலம் இருக்கிறது. 

ஆனால், இந்த மதி மண்டலத்தில் இருக்கும் அருளமுதத்தைப் பருக வேண்டுமென்றால், நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நந்தா மணிவிளக்கைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஞானசபையை அடைந்திட வேண்டுமென்கிறார்.

கெட்டுப் போகாத பொருள் என்றும் அழிவில்லாமல் நித்தியமாகவே இருக்கும்.  அப்படிப்பட்ட ஒரு உறுபொருள் நம் தேகத்தில் உண்டு.  தேகத்தின் உள்ளே உறுபொருள் கண்டேன், அதனால் இத்தேகத்தினை யானிருந்து ஓம்புகின்றேனே என்று திருமூலர் பாடியிருக்கும் சூக்கும இரகசியம் இந்த அருளமுதைப் பற்றியதுதான். அந்த நித்தியப் பொருளை ஆதித் தமிழ்ச் சித்தர்களும் பிரமஞானிகளும் மெய்ப்பொருள் என்றும் சிவப் பொருள் என்றும் பழம்பொருள் என்றும் சிவப்பழம்பொருள் என்றும் பல இரகசியப் பெயர்களால் அழைத்தார்கள். 

அந்த நித்தியமான மெய்ப்பொருளான மணிக்குள் ஒரு அணையா சோதி ஒன்று எரிந்து கொண்டே இருக்கும்.  இதைத்தான் தூண்டா மணிவிளக்கு என்று கோயிலின் கருவறையில் இன்றைக்கும் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து நமக்கு ஞானப் பாடத்தை வழங்கினார்கள் நம் முன்னோர்கள்.

அந்த அழியாத மெய்ப்பொருள் இருக்கும் மணிவிளக்கிற்குள்ளே தான் ஞானசபை இருக்கிறது.  அங்கு நாம் செல்ல வேண்டுமென்றால், அதற்கென்று ஒரு உபாயத் தந்திரத்தை பிரமஞானிகள் வடிவமைத்துக் கொடுத்துள்ளார்கள்.  அதன் பெயர் சுடராழித் தவம்.  இந்த சுடராழிதான் நம்மை இந்த நந்தா மணிவிளக்கின் ஞானக் கதவினைத் திறப்பிக்கப் பண்ணி, உள்ளே அழைத்துக் கொண்டு போய் இறைவன் குடியிருக்கும் ஞானசபை கோயிலுக்குள் சேர்ப்பித்து விடும். 

இப்படி ஞானமாக இப்பாடலைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், நாம் ஒவ்வொரு நாளுமே எங்கேயிருக்கிறது இந்த மதி மண்டலம்? எங்கே இருக்கிறது நந்தா மணி விளக்கு? எங்கேயுள்ளது ஞானசபை? எங்கே உள்ளது ஞானக் கதவு? என்று சாகும்வரை தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.  உலக ஆன்மாக்களின் பிரமஞான விடுதலைக்காக இங்கே சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொன்னோம்.  புத்தியுள்ளோர் பிழைத்துக் கொள்க.

சிற்சபை

சிற்சபை என்பது நமது புருவமத்தியாகும். சிற்சபை = சித்+சபை. சித் என்றால் அறிவு என்றும், சபை என்றால் விளங்கும் இடம் என்றும் பொருள்படும். ஆக சிற்சபை என்பது அறிவு விளங்கும் இடம் ஆகும். இதைப் புறத்தில் எடுத்துக்காட்டவே வள்ளலார் சத்திய ஞான சபையினுள் மேற்புறத்தில் பளபளக்கும் வெள்ளி ஒளியொடு விளங்கும் சிற்சபை ஒன்றை அமைத்துள்ளார்.

பொற்சபை

பொற்சபையில் இறைவன் இருக்கும் நிலையை புறத்தில் எடுத்துக்காட்டவே சத்திய ஞான சபையினுள் கீழ்ப்புறத்தில் பொன்னிற வண்ணத்தில் பொற்சபை ஒன்றை அமைத்துள்ளார். பொற்சபை என்பது அண்டத்தில் சூரியனைக் குறிக்கும். ஒரு பொருளினுடைய உண்மையை அறிவது பொற்சபை அனுபவம் ஆகும்.

ஞானசபை

ஞானசபை என்பது தலையின் உச்சிப் பகுதியைக் குறிக்கும். இறைவன் இருக்கும் நிலையை புறத்தில் எடுத்து காட்டவே சத்திய ஞான சபையின் மையத்தில் ஞானசபை ஒன்றை அமைத்துள்ளார் வள்ளற்பெருமான். ஞானசபை என்பது அண்டத்தில் அக்கினியை குறிக்கும். கடவுள் நிலையை அறிதல் ஞானசபை அனுபவம் ஆகும்.

 

  1. சாகா அருளமுதம் தான்அருந்தி நான்களிக்க
    நாகா திபர்சூழ் நடராஜா – ஏகா
       பவனே பரனே பராபரனே எங்கள்
       சிவனே கதவைத் திற.                  (ஆறாம் திருமுறை-1298)

தேவ லோகத்து இந்திரர்கள் சூழ்ந்து நின்று வணங்குகின்ற கூத்தப் பெருமானே! அனைத்தும் ஒன்றாக ஏகனாக இருப்பவனே! எம் இறைவனே ! இறைவனுக்கும் இறைவனானவனே! ஞான ஒளியாக இருப்பவனே!  அனைவரிலிலும் மேலானவனே ! எங்களுடைய சிவனே! சாகாமைக்கு காரணமான உன்னுடைய திருவருள் ஞான அமுதத்தை உண்டு நான் மகிழ்ந்திருக்கும்படி உனது திருவருள் ஞானமாகிய கதவைத் திறந்தருளுக.

இறைவன் ஞானசபையின் கண்ணே நாகலோகத்து அரசர்களும், இந்திரர்களும் சூழ்ந்திருக்கும்படியாக இருந்து கொண்டு, அங்கே ஆனந்தக் கூத்தினை ஆடிக்கொண்டு அனைவருக்கும் அருள் செய்து கொண்டிருக்கின்றான்.

மனிதன் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு அமுதம் வேண்டும்.  அந்த அமுதத்தை உண்டுவிட்டால், இத்தேகம் அழியாத பெருவாழ்வை பெற்றுவிடும்.  சாகாமல் இருக்க சாகாத உணவுகளைத்தான் நாம் உண்டுவர வேண்டும்.  நாம்தான் மலமாகும் உணவுகளை அல்லவா உண்டு வருகிறோம்.  மலம் இருக்கும்வரை தேகம் அசுத்த தேகம்.  மலமற்ற தேகமே சுத்த தேகமாகும்.  சுத்த தேகமாகாமல் மனிதனால் பிரணவ தேகத்தைக்கூட பெற முடியாது.  அடுத்த ஞான தேகம் எட்டாக் கனியாக இருந்துவிடும். அப்புறம் எங்கே ஒளி தேகத்தைப் பெறுவது? கானல் நீராகும் நம் ஒளிதேகக் கனவுகள்.

அமுதம் இருப்பது மதியான சந்திர மண்டலத்தில்.  ஆனால், அருளமுதம் இருப்பது சிவ மண்டலத்தில்.  சிவம் கொடுத்தாலன்றி நம்மால் ஒருபோதும் அருளமுதைப் பெற முடியாது.  அதற்கு அவனின் பரிபூரண கருணையும் ஆசிர்வாதமும் வேண்டும்.  அவன் அருளால் அவன் தாளை வணங்கி அழுதால் அவனைப் பெறலாமே என்ற மாணிக்கவாசகரைப் போல நாமும் அவனின் ஞானத் தாளினை சுடராழி கொண்டு தவத்தால் வணங்கி அழுது கேட்கும்போது, அவன் தாயாய் தயாபரனாய் சிவமாய் அருளாய் உண்ணாமுலையாய் மாறி நம்மை ஆட்கொண்டு அவன் மடியில் கிடத்தி அருளமுதப் பாலை ஊட்டி உண்பித்து மகிழ்ந்திடுவான்.  சிவப்பால் ஒன்றே அருளமுதப் பாலாகும்.  உண்ணாமுலையிலிருந்து வரும் பாலே அருளமுதப் பால். உண்ணாமுலை என்பது நமது திருவடிகளே அன்றி வேறில்லை. 

திருவண்ணாமலையில் இருக்கும் தாயாரின் பெயர் உண்ணாமுலை அம்மன் அல்லவா.  அவள் அங்குதான் இருக்கின்றாளா? இல்லை, நம் ஒவ்வொருவரிடமும் அந்த உண்ணாமுலைத் தாய் இருக்கின்றாள், நம் திருவடிகளாக.  இறைவியே திருவடிகளாக இருக்கும்போது, அந்த சிவம் எப்படி பால் கொடுக்க மறப்பான்.  தாய் என் பிள்ளைக்கு உன் அருளைப் பாலாகக் கொடு என்று சிவத்திடம் முறையிட்டு கேட்டுக் கொடுத்து விட மாட்டாளா என்ன ! கண்டிப்பாக செய்திடுவாள்.  அவள் அருளால் அருளமுதை உண்டு மகிழ்ந்திருக்க, எம் சிவமாகிய இறைவா, உன் ஞானக் கதவைத் திறந்து விடுக.

எண்கோண வடிவ சபை

தெற்கு நோக்கிய சபையின் முன்புறத்தில் மூன்று திறந்த வாயில்கள் உள்ளன.

இருபுற சிறுவாயில்கள் நமது இரு கண்களையும் மத்தியில் உள்ள பெருவாயில் நமது புருவமத்தியுமாகும்.

அதனுள் முன்புற மண்டபத்தில் மேற்புறத்தில் சிற்சபையும், கீழ்ப்புறத்தில் பொற்சபையும் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ளது.

எண்கோணவடிவிலான சத்திய ஞான சபைக் கட்டிடத்தை பெருமானார் அவர்களே வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இது நமது தேகத்தின் தத்துவ விசார விளக்கமே. அதை புறத்தில் காட்டவே சத்திய ஞான சபையை அமைத்துள்ளார். இங்கே ஒரு விசயத்தை நீங்கள் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  புறத்தில் காட்டவே ஞானசபையைக் கட்டினாரே அன்றி, அகத்தில் காட்ட அல்ல.  அகத்தில் காட்ட எதைக் கொடுத்துள்ளார் என்றால், இந்த சிவயோக நிலைப் பாடல்களைத்தான்.  இந்த சிவயோக நிலைப் பாடல்கள் அனைத்துமே சுடராழித் தவத்தால் கிடைக்கும் பிரமஞான வெற்றியையே குறிப்பதால், அகத்தில் சத்திய ஞான சபையைக் காண வேண்டுமென்றால், அனைவரும் கண்டிப்பாக சுடராழித் தவத்தை செய்தே ஆக வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்குகிறது.  தயவுசெய்து அனைவரும் நன்றாக புரிந்து உணர்ந்து தவத்தைச் செய்து அருட்பெருஞ்சோதி இறைவனை அடைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

அடுத்தபடியாக முதல் பிரகாரத்தில் எண்கோண இருப்பு கம்பிச்சுற்றாலையும், அடுத்து எண்கோண கைப்பிடிச் சுவரும், அடுத்து ஞான சபைத் தாய்ச் சுவரும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று இடைவெளி எட்டடிகளாம். நமது தேகமே அவரவர் கைகளின் எண்சாண் அளவுதான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சத்திய ஞான சபையின் உட்புறத்தில் ஆன்ம ஜோதியை உணர முடியாமல் தடுக்கும் இருபத்திநான்கு தத்துவப்பொருட்களை குறிக்கும்பொருட்டு ஞான சபை தாய்ச் சுவரின்கண் எட்டு வாயிலும், பதினாறு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது.

உயிரனுபவம் பூரணமாய் பெற்று அருளனுபவ நிலையில் நிற்கும்போதுதான் இந்த இருபத்திநான்கு வாயில்களும் திறக்கப்படும். அப்போதுதான் ஒளிவடிவிலான அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தரிசனத்தைப் பெறலாம்.

  1. அருள்ஓங்கு தண்அமுதம் அன்பால் அருந்தி
    மருள்நீங்கி நான்களித்து வாழப் – பொருளாம்
       தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
       சிவனே கதவைத் திற.                  (ஆறாம் திருமுறை-1299)

 

தண்ணமுதம் என்ற சொல், ஞானத்தை குறிக்கும் அமுதம், குளிர்ந்த ஞானம், அருளமுதம் என்று பல பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. 

தண்ணமுதம் என்ற சொல் பயன்படுத்தப்படும் சில இடங்கள் :

திருச்சிற்றம்பலத்தில் உள்ள திருவரற்பு, “ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம் வாழ்நிலைக்க நான் உண்டு மாண்புறவே” என்று கூறுகிறது. 

“மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை தனக்கே விடைகொடுத்து ஆணவம் தீர்த்தருள் தண்ணமுதம் எனக்கே மிகவும் அளித்தருட்” என்று கூறப்பட்டுள்ளது. 

“சந்திரன் என்றொரு பொம்மை – அதில் தண்ணமுதம் போல ஒளி பரந்தொழுகும்” என்று கூறப்பட்டுள்ளது. 

 மனக்கேத மாற்றிவெம் மாயையை
                   நீக்கி மலிந்தவினை
         தனக்கே விடைகொடுத் தாணவம்
                   தீர்த்தருள் தண்ணமுதம்
         எனக்கே மிகவும் அளித்தருட்
                   சோதியும் ஈந்தழியா
         இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந்
                   தான்மன்றில் என்னப்பனே.   (திருவருட்பா – 6ஆம் திருமுறை – 3865)

மனத்தின்கண் படிகின்ற குற்றங்களைப் போக்கி அறிவை மயக்குகின்ற கொடிய உலகியல் மாயையை நீக்கி ஆன்மாவைப் பற்றியுள்ள வினைத் தொடர்புகளைக் கெடுத்து உள்ளத்தில் படிகின்ற ஆணவ விருளையும் போக்கிக் குளிர்ந்த ஞானமாகிய அமுதத்தை மிகுதியாக எனக் களித்து அருள் ஞான ஒளியையும் என்னுள் பரப்பி அழியாத சிவத் தொண்டர்களின் நட்பையும் எனக்குத் தந்து மன்றில் கூத்தாடுகின்ற எனக்கு அப்பனாகிய சிவபெருமான் என்னுட் கலந்து கொண்டான்; என்னே நான் பெற்ற பேறு !

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் – 162

சங்குமணித் தோடுகள், இரு காதுகளில் இரு புறமும் ஊசல் ஆடும். அதைப்போல், ஆண்டாளே! நீயும் பொன்னுரசல் ஆடுவாய். புதுவை நகர் மன்னர் வதுவைக்கு அமைந்துளாய் கோதையே! பொன்னனூசல் ஆடிஅருள்!

மண்திணி நிலப்பிலம் போழ்ந்துவேர் வீழ்ந்துபுடை

மல்குபொரி அரைய ஆகும் மாகத்தின் வெளிமூடு பூகப் பொதும்பரொடு

மழைகிழித்து ஓங்கு பொங்கர்த்

தண்தளிர்க் காழ்அகில் சோலைவாய் மாலையில்

தவள வெண்நிலவை நுகரும் சகோரப் பெரும்புள்ளின் பேழ்வாய் நிறைந்துவழி

தண்அமுதம் மொண்டு பருகும் தொண்டைஅம் கனிவாய் மடந்தையரும் மைந்தரும்

சுரரின்நரை திரைமூப் புறாச் சோதி ஆகம்பெறப் பெருகு திருமுக்குளத்

துறையினுடன் நறைகமழும் மென்

புண்டரீ கத்தடம் செறிதமிழ்ப் புதுவையாய்!

பொன்னூசல் ஆடி அருளே!

பொன்னரங் கத்தர் வடமலைவாணர் இன்புறப்

பொன்னூசல் ஆடி அருளே! (105)

மண் அணுக்கள் செறிந்த நிலத்தின் கீழ் மண்ணைப் பிளந்து வேர் விட்டு வளர்ந்தன பாக்கு மரங்கள். அவை அடிப்புறம் பருத்திருந்தன. பொருக்குக்களையுடையன. ஆதலால் அவற்றின் அடிமரங்கள் பொரியரை எனப் பெயர் பெற்றன. அவை உயரமாக வளர்ந்து வாகன வெளியை முடியிருந்தன.

அத்தகைய பாக்கு மரங்களின் இளமரச் சோலைகளும், முகிலைக் கிழித்து ஓங்குகின்ற பலவகைச் சோலைகளும், தண்ணிய தளிரும் திண் மையுமுடைய அகில்மரச் சோலைகளும் நிறைந்த இடங்களில் மாலை நேரத்தில் மிக்க வெண் நிலவை மட்டும் உண்கின்ற சகோரம் என்னும் பெருமையுடைய பறவைகளின் பிளந்தவாய் நிறைந்து ஒழுகும் நிலவமுது, கோவைக் கனி போலச் சிவந்த வாயையுடைய மங்கையரும் அவர்களின் காதலரும் மொண்டு பருகியதால், தேவர்கள்போல் நரை, திரை, மூப்பு அடையாமல் ஒளியுடம்பு பெறுவர்.

மெய்ப் பொருளைக் கொண்டு பிரமஞானத் தவத்தை மேற்கொண்டொழுகும் பிரமஞானத் தவசிகள் போற்றுகின்ற திருவருட் செல்வமே! எங்களை ஆளாகவுடைய சிவபெருமானே! உன்னுடைய திருவருள் ஞானத்தைப் பெருக வைக்கும் குளிர்ந்த அமுதத்தை அதாவது தண்ணமுத்தை உன் போல் ஆர்வத்தோடு உண்டு உலகியல் மயக்கத்திலிருந்து நீங்கி ஞான போகத்தில் நான் மகிழ்ந்து வாழ வேண்டும். அதற்காக நீ உனது திருவடி ஞானமாகிய கதவைத் திறந்தருளுக.

இங்கே ஒரு சத்தியத்தை வள்ளற்பெருமான் பதிவு செய்வதை நன்றாக உற்று நோக்குங்கள்.  மெய்ப்பொருளைக் கொண்டு தவத்தைச் செய்து வருபவர்கள்தான் பிரமஞானத் தவசிகள் என்றழைக்கப்படும் தவநேயர்கள்.  தவநேயர்கள் பிரமஞானத்தை அடைவதற்காக ஒரு பெரும் பொருளை எப்போதும் பயன்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள் என்கிறார் வள்ளற்பெருமான்.  அதுதான் நம் திருவடிகளில் குடி கொண்டிருக்கும் மெய்ப்பொருள்.  இந்த மெய்ப்பொருளைக் கொண்டுதான் மெய்யான இறைவனை, நம் உயிரைப் பிடித்திட முடியும்.  அப்போதுதான் அவர்களிடம் இருக்கும் மருள் என்ற மும்மலங்கள் ஒழிந்து, இன்பமுடன் அத்தவசிகள் வாழ்வார்கள் என்கிறார் வள்ளற்பெருமான்.  அதனால் மெய்ப்பொருளை சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்றால், மெய்ப்பொருளின் வாசலை மூடியிருக்கும் ஞானக் கதவினை ஈசனே திறந்துவிட வேண்டும் என்றே வள்ளற்பெருமான் பிரார்த்திக்கிறார்.  நாமும் பிரார்த்தித்தால் நமக்கும் இறைவன் ஞான வாசற்கதவைத் திறந்து வைத்து அமுதப் பாலை ஊட்டி இறவா வரத்தை வழங்குவார் என்பதுதான் வள்ளற்பெருமான் சொல்லவரும் சத்தியப் பொருள்.

 இதனால், சிவஞான அமுதமானது திருவருள் ஞானத்தை மேன்மேலும் பெருக்கும் இயல்புடையது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் அன்பர்களே.

 

  1. வானோர்க்கு அரிதுஎனவே மாமறைகள் சாற்றுகின்ற
    ஞானோதய அமுதம் நான்அருந்த – ஆனாத்
       திறப்பா வலர்போற்றும் சிற்றம்பலவா
       சிறப்பா கதவைத் திற.                 (ஆறாம் திருமுறை-1300)

குறையாத பல வகைகளையுடைய பாட்டுக்களை ஆக்கவல்ல, பாவலர்கள் பாடித் துதிக்கின்ற திருச்சிற்றம்பலத்தே உடைய சிவபெருமானே! எல்லாச் சிறப்புக்களையுடைய பெருமானே! தேவர்களுக்கும் பெறுதற் கரியதாம் என்று பெரிய வேதங்கள் புகழ்ந்து ஓதுகின்ற ஞான உதயமாகிய அமுதத்தை, நான் அருந்தி ஞானம் பெறுமாறு உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுக.

எல்லாமும் வல்ல சித்தென் றெல்லா மறைகளும் சொல்
நல்லார் அமுதமது            (௸ 3837)

ஏழ்நிலைக்கு மேற்பால் இருக்கின்ற தண்ணமுது     (௸ 3838)

ஈன உலகத்திடர் நீங்கி இன்புறச்செய் ஞான அமுதம்     (௸ 3839)

திரையோ தசத்தே திகழ்கின்ற ஒன்றே  வரையோது தண்ணமுதம்    (௸ 3840)

சோதிமலை வீட்டில் தூயதிரு அமுதம்      (௸ 3841)

 

இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
         இதுவழி என எனக்கு இயல்புற உரைத்தே
‘விது அமுதொடு சிவ அமுதமும்’ அளித்தே
         மேனிலைக்கு ஏற்றிய மெய்ந்நிலைச் சுடரே
பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
         புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
         தனிநடராச என்சற்குரு மணியே!     (திரு-3593)

எனவரும் வள்ளலார் வாய்மொழிகள் தாயுமானார் பாடலிற் குறிக்கப்பட்ட மதியமுதத்தின் இயல்பினை விளக்குவதோடு அதற்கு மேலான சிவ அமுதத்தின் சிறப்பினையும் விளக்குதல் அறிந்தின்புறத்தக்கதாகும்.

குருவருளாலே திருவருள் கிடைத்தது ; திருவருளாலே தேவியருள் கிட்டியது !

கண்ணப்பா கண்மணியே உண்ணப்பா அருளமுது

எனத் தேவி திருப்பிரசாதம் ஊட்டினாள்.

அம்பிகையின் அமிர்தமென்ற வாலைரசம் பேரின்பத் தேனைச்

சித்தமது ஒருமித்து சிறப்புடனே உண்டேன் .

புகழ் மிக்க நவநீதம் இது தான் அறிவீர்.

அமுதம் உண்டு சித்தி பெற்றால், நமனல்லோ மாண்டு போவான்.

வித்தில்லா விருட்சமுண்டோ ? நலச்சித்தியில்லா சித்துமுண்டோ ?

சிவன் இல்லா சக்தி ஏது ? சக்தியில்லா சிவன்தான் ஏது ?

விட்டகுறை வாய்த்தால் பெறலாம் பேறு !

காயாபுரி பட்டினத்தின் கன்னி வாலை , கனிவுடனே மதியமிர்தம் தந்தாளாகில்,

முப்பாழும் மறைந்து போகும் ; அகத்தினிலே சுழியறிவு சுடர் விடுமே !

அன்புடனே அரனுடைய கிருபை பெற்றால்.  (திருமூலர் வாழ்க்கை அனுபவம்)

அம்பிகையும் அரவணைத்து அருள் பொழிவாள் .

யாவர்களும் ஏவல் செய்வர் ; இவ்வுலகும் எவ்வுலகும் என்றும் போற்றும் ;

இருக்கலாம் கயிலை வாழ் ஈசன் பாதம். 

விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவர்களுக்கும் இந்த அமுதம் அரிதான விசயம்தான்.  மகா வேதங்கள் சொல்லுகின்ற அமுதத்தை உட்கொண்டு விட்டால் அற்புதமான பிரமஞானங்கள் எனக்குள் உதயமாகிவிடும்.  பிரமஞானிகள் போற்றக் கூடிய சிற்றம்பலத்தில் வாசம் ஈசனே, உன்னிடம் இருக்கும் அற்புதமான ஞான வாசற்கதவைத் திறந்து விடவேண்டும்.  அப்போதுதான் நான் உள்ளே வந்து அங்கிருக்கும் அமுதத்தைப் பருகி உண்டு, ஞானம் பெற்றவனாக மாற முடியும்.  ஞானம் அடைந்தால்தான் நான் எப்போதும் உன் திருவடியின்கீழ் இருந்து கொண்டிருக்க முடியும்.  தேவர்களும், வேதங்களும் காண முடியாத பரமேசுவரனே, உன்னைப் பற்றி என்றும் சிவபதத்திலேயே வாழ உன் ஞான வாசற்கதவை திறந்து விடப்பா.

 

  1. எல்லாமும் வல்ல சித்து என்றுஎல்லா மறைகளும்சொல்
    நல்லார் அமுதம்அது நான்அருந்த – நல்லார்க்கு
        நல்வாழ்வு அளிக்கும் நடராயா மன்றுஓங்கு
        செல்வா கதவைத் திற.               (ஆறாம் திருமுறை-1301)

            நல்லவர்களுக்கு நல்வாழ்வைத் தருகின்ற நடராசப் பெருமானே! அம்பலத்தில் உயர்ந்தோங்குகின்ற அருட்செல்வரே! எவ்வகைச் செயல்களையும் செய்ய வல்ல சித்தன் என்று எல்லா வேதங்களும் சொல்லிப் பாராட்டுகின்ற நன்ஞானமுடையவர்கள் விரும்பி உண்கின்ற ஞான அமுதத்தை நானும் அருந்தி மகிழுமாறு உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுக.

          அமுதத்தை நாம் பெற்றுவிட்டால் என்ன பயன் ஏற்படும் என்றால், அதனால் அடைய முடியாத சித்துகளே இல்லை எனலாம்.  இந்த உலகத்தில் இருக்கும் அனைத்துச் சித்துக்களுமே அதில் அடக்கம், அட்டமா சித்திகள் உட்பட.  இதை நான் சொல்லவில்லை.  அனைத்து வேதங்களும் சத்தியமொழிகளில் சொல்லியுள்ளன.  வேத மொழிகள் அது சிவத்தின் அருள்மொழிகளல்லவா.  அப்படிப்பட்ட நல் அமுதத்தை நான் உண்டுவிட வேண்டும் ஈசனே.  அதனால் நீ திருச்சிற்றம்பல மன்றில் ஆடிய கூத்தெல்லாம் போதும் நடராசனே, ஒரு நல்ல ஞானமிக்க வாழ்வை நீ அளிக்க வேண்டுமென்று விரும்பினால், கண்டிப்பாக உன் ஞானவாசற்கதவை திறந்துவிடு.  நான் உள்ளே வந்து உன் சிவ அமுதத்தைப் பருகிட வேண்டும்.

 

  1. ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்அமுதம்
    வாழ்நிலைக்க நான்உண்டு மாண்புறவே – கேழ்நிலைக்க
        ஆவாஎன்று என்னை உவந்து ஆண்ட திருஅம்பலமா
        தேவா கதவைத் திற.                   (ஆறாம் திருமுறை-1302)

என்பால் ஞானப் பேற்றுக்குரிய தன்மை நிலைபெறும் பொருட்டு நான் வரவேண்டும் என்று என்னை அன்போடு மனமுவந்து ஆண்டு கொண்ட திருச்சிற்றம்பலத்தையுடைய பரமேசுவரனே ; ஏழ் நிலைக்கும் மேல் நிலையிலுள்ள குளிர்ந்த ஞான வமுதத்தை என் வாழ்வு நிலைபெறுமாறு நான் உண்டு மேன்மை யுறுதல் பொருட்டு எனக்கு உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுக.

 

இந்த பாடலில் வரும் ஏழ்நிலைகள் எவையெவை என்பதை அவரின் திருவாயால் 128. ஆணிப்பொன்னம்பலக் காட்சி பதிகத்தில் சொல்லியிருப்பதை கேளுங்கள்.  உங்களுங்கே அந்த ஏழு நிலைகள் என்னவென்று புரியவரும்.

இந்த ஆணிப்பொன்னம்பலக் காட்சிப் பாடல்களில் வள்ளற்பெருமான் அவர் செய்த தவத்தின் பயனாக அவரின் ஆன்ம ஒளிக்குள் கண்ட ஒளிக்காட்சிகளை இப்படி, இப்படியாக இருந்தன என்பதைக் காட்சிப்படுத்தி விளக்கியிருக்கிறார்கள்.

அதில் அவர் தவம் செய்த காலத்தில் முதலில் ஒரு பேரொளி கொண்ட மலையைக் கண்டதாகவும், அடுத்தபடியாக அதன்மேல் ஒரு மேடை இருந்ததாகவும், அம்மேடை மீது ஏழுநிலை மாடங்கள் இருந்தன என்றும், அதன்மேல் பொன்னால் செய்யப்பட்ட தூண் இருந்ததாகவும், அதன் மேலே பொன்னொளிகளால் பொற்தாமரைக் கோயில் இருந்ததாகவும், அக்கோயிலுக்குள் அருட்பெருஞ்சோதியை தெய்வீக பொன்சுடராகக் கண்டு பெருவியப்பை அடைந்ததாகவும் வள்ளற்பெருமான் பேரின்பப் பெருவெள்ளத்தில் மகிழ்ச்சிப் பொங்கப் பொங்க தமிழிசையில் துள்ளிக் கொண்டு பாடியப் பாடல்கள்தான் இந்த ஆணிப்பொன்னம்பலக் காட்சிப் பாடல்கள். 

நாமும் அந்த பொன்னம்பல மேட்டிற்கு தவத்தால் சென்று ஏழுநிலைக் காட்சிகளை – ஒளிக்காட்சிகளை நம் ஆன்ம ஒளிக்குள் கண்டு சிவத்தின் அருட்பேற்றைப் பெறுவோமாக.

  1. ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
    என்னென்று சொல்வனடி – அம்மா என்னென்று சொல்வனடி.
  2. ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
    சீர்நீலம் ஆச்சுதடி – அம்மா சீர்நீலம் ஆச்சுதடி.

நான் கண்ட ஆன்ம உயிரின் முதல் நிலையில், அருள் என்னும் ஒளிரும் முத்தாகத் தெரிந்தது. அதன்பின் சக்தியாகிய நீலநிறமாகத் தெரிந்ததடி, என்னே உயிரின் இயற்கைப் படைப்பு.

  1. பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
    பவளமது ஆச்சுதடி – அம்மா பவளம தாச்சுதடி.

இரண்டாம் நிலையில் ஆன்மக் காட்சியில் பார்க்கும்போது கருநீலமாகத் தெரிந்த அருட்சத்டித, சிவந்த பவள நிறமுடைய செம்பொருட்சிவசோதியாகத் தெரிந்ததடி.  கருநீலம் போன்ற ஆணவ இருளும் ஒழிந்து ஆன்ம உயிரானது தூய்மையாகச் சிவந்து தகுதியைப் பெற்றதடி.

  1. மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
    மாணிக்கம் ஆச்சுதடி – அம்மா மாணிக்கம் ஆச்சுதடி.

மூன்றாம் நிலையில் நான் கண்ட ஒளிவீதியில் பார்த்தபோது, இயற்கை ஆற்றலான அருட்சத்தியின் பசுமை ஒளி, செக்கச் சிவந்த செம்மணிக் கல்லாலான மாணிக்க ஒளி சுடரும் சிவப்பாய்த் தெரிந்ததடி.  இதனால் ஆன்ம ஒளியும் தூய ஒளியுடம்பும் பெற்றேனடி.

  1. பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
    பேர்மணி ஆச்சுதடி – அம்மா பேர்மணி ஆச்சுதடி.

          நான்காம் நிலையில் ஒளிக் காட்சியைப் பார்க்கும்போது, என் பெரிய முத்து ஒளியைப் போன்ற ஆன்மா, முற்றிக்காழ்த்த ஆணி முத்தான (வச்சிரம்) ஒளி சுடரும் பரநிலையுடைய ஆன்மாவாக உயர்ந்ததடி.  இதனால் உயிரானது சிவநெருப்பாகி, உடலும் அறிவுடம்பு ஆனதடி.

  1. வேறோர் நிலையில் மிகும் பவளத்திரள்
    வெண்மணி ஆச்சுதடி – அம்மா வெண்மணி ஆச்சுதடி.

அடுத்து ஐந்தாம் நிலையில் பொன்னம்பலக் காட்சியைக் கண்டபோது, செம்பவளத் திரள் கொண்ட தேகத்தில் வெண்மணி ஒளி போர்த்தியதுபோல், என் ஆன்ம ஆற்றலில் நெருப்பாயும் புறத்தே வெண்ணிற ஒளியாயும் ஆகித் தெரிந்ததடி.  இதனால் என் உடம்பு ஓங்கார ஆற்றலைக் கொண்டதாக ஆனதை மெய்யுணர்வால் உணர்ந்துவிட முடிந்ததடி.

  1. புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
    பொன்மணி ஆச்சுதடி – அம்மா பொன்மணி ஆச்சுதடி.

          அடுத்த ஆறாம் நிலையில் நான் கண்ட காட்சியில் சொல்ல வேண்டிய ஒரு நிலையில் பலவகை வண்ண ஒளிமணிகள் போன்ற ஐம்பூதப் பொருளால் ஆன ஆன்ம உயிரானது பொன்மணி போன்ற சுடர்விட்டு ஒளிர்ந்ததடி.  இதனால் உடம்பும் பொன்மணி போல் அழியாது இருக்கும் உயர்நிலையை பெற்றேனடி.

  1. பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
    படிகம தாச்சுதடி – அம்மா படிகம தாச்சுதடி.

          இறுதியாக ஏழாம் நிலையில் பதியாகிய அருட்பெருஞ்சோதி இறைவனைக் காணும் பண்பட்ட தூய ஒளி நிலையில் (துரிய ஒளியில்) பலவகை வண்ண ஒளிமணிகளின் கலவையான ஒளி காட்டிய ஆன்மா, இங்கே அத்தன்மையெல்லாம் இல்லாது, ஒரே வெண்மை ஒளியாகிப் படிகமாகிய கண்ணாடிபோல் ஆனதடி.  இந்த ஆன்மாவிலே தான் எதிரொளி செய்யும் மெய்யருட் கனலாகிய அருட்சோதியைக் காணக் கண்டேனடி.

  1. ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
    இசைந்தபொற் றம்பமடி – அம்மா இசைந்தபொற் றம்பமடி.

 

  1. ஈன உலகத்து இடர்நீங்கி இன்புறவே
    ஞான அமுதம்அது நான்அருந்த – ஞான
       உருவே உணர்வே ஒளியே வெளியே
       திருவே கதவைத் திற.                  (ஆறாம் திருமுறை-1303)

            ஞானமே உருவாகிய பெருமானே! உயிருணர்வுக்கு உணர்வாய் இருப்பவனே! ஒளிமயமானவனே! பரவெளியாய் விளங்குபவனே! சிவஞானப் பொருளாகிய திருவே! கீழ்மையைத் தருகின்ற இவ்வுலக வாழ்வு தரும் துன்பத்திலிருந்து நீங்கிச் சிவானந்தமாகிய பேரின்பத்தை, நான் அடைதற் பொருட்டுத் திருவருள் ஞானமாகிய அமுதத்தை அருந்தி, உய்தற்கு நின் திருவருளாகிய கதவைத் திறப்பாயாக.

          இந்த கேடு கெட்ட உலகத்திலிருந்து மீண்டுவிட வேண்டுமென்றால், முதலில் நாம் படும் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் வெளியே வந்தாக வேண்டும்.  அப்போதுதான் ஞான இன்பத்தைப் பருகவே முடியும்.

இந்தப் பாடலில் இறைவனின் உருவத்தை ஞானமாகவும் உணர்வாகவும் ஒளியாகவும் வெளியாகவும் திருவாகவும் இருப்பதாகவும் பாடி, அந்த ஞான ஒளியை அடைந்திடவும் ஒளியுணர்வினைப் பெற்றிடவும் வெளியில் மோனநிலையில் இருந்திடவும் வேண்டுவதால், ஈசனே உன் ஞான வாசற்கதவைத் திறந்துவிடு என்றே பாடுகிறார் வள்ளற்பெருமான்.

  1. திரையோதசத்தே திகழ்கின்ற என்றே
    வரையோது தண்அமுதம் வாய்ப்ப – உரைஓது
       வானே எம்மானே பெம்மானே மணிமன்றில்
       தேனே கதவைத் திற.                   (ஆறாம் திருமுறை-1304)

            துவாத சாந்தத்துக்கு அப்பாலானதாகிய திரையோதசமாகிய ஞான வானத்தில் ஒளிர்கின்ற சிவசூரியனே! யோக நூல்களில் வரைந்தோதப்படும் சந்திரனிடத்து ஒழுகும் குளிர்ந்த அமுதம் எய்தும் நெறி விளங்க எம்போல்வார்க்கு ஓதி யருளுகின்ற குருமுதல்வனே! எங்கள் தலைவனே! பெருமானே! மணிகள் இழைத்த அம்பலத்தின்கண் எழுந்தருளி இன்பம் தரும் தேன் போன்றவனே! உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுவாயாக.

          திரையோதச நிலை என்னவென்பதை முதலில் தெரிந்து கொண்டாக வேண்டும்.

திரையோதச நிலைகளும் – அவை அறிதலும்

  1. பூதநிலை
  2. கரணநிலை
  3. பிரகிருதிநிலை
  4. மோகினிநிலை
  5. அசுத்தமாயாநிலை
  6. அசுத்தமகாமாயாநிலை
  7. சுத்தமாயாநிலை
  8. சுத்தமகாமாயாநிலை
  9. சர்வமகாமாயாநிலை
  10. குண்டலிநிலை
  11. பிரணவநிலை
  12. பரிக்கிரகநிலை
  13. திருவருள்நிலை

ஆக. 13. இதற்கு அதீதத்தில் சுத்த சிவநிலை, இதற்குச் சத்தி, ஆகாயம், நிலை, வெளி, பிரகாசம்,   அனுபவம், பதம், இடம் முதலிய பெயருள்ளன.

          திரையோதச நிலை சிவவெளி நடுவே வரை

ஓதஅரு சுக வாழ்க்கை மெய்ப் பொருளே  (அகவல் 893)

          இவ்வாறு மேற்கண்ட பதின்மூன்று நிலைகளில் விளங்குகின்ற இறைவனிடம் தான் தண்ணமுதமானது இருந்து கொண்டிருக்கிறது.  வேதங்கள் ஐயா என அழைக்கின்ற சிவமே, எம் தந்தையே, அருட்கடலே, உன்னுடைய மெய்ப்பொருளான மணிமன்றில் வைத்திருக்கின்றாயே, அமுதத் தேனை, அத்தேனை அடைவதற்காக உன் மெய்ப்பொருள் வாசல்வரை வந்துவிட்டேன்.  உன்னுடைய மணிக்கதவைத் திறந்துவிடு, நான் உள்ளே வந்து வரையே இல்லாத தண்ணமுதத் தேனை உண்டு இறவா பெருவாழ்வை பெற்றிட வேண்டும், ஈசனே அருள்புரி.

ஞான நூல்கள் வரையறுத்துக் கூறும் ஞானயோக அமுதச் சந்திரனின் அமுதத்தைப் பருகிட தாகம் கொண்டதைப் பாடியிருக்கிறார் வள்ளற்பெருமான்.

 

  1. சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம்
    மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் – ஓதரிய
         ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
         தேகா கதவைத் திற.                   (ஆறாம் திருமுறை-1305)

          சொல்லுதற்கரிய குருபரம்பொருளாகிய ஒருவனே! உலகுயிர்கள் தோறும் நிறைந்து பலவாய் விளங்குபவனே! அழகிய திருவம்பலத்தின்கண் எழுந்தருளும் ஞானமே யுருவாகிய சிவனே! சோதியாகிய மலை போல் விளங்குகின்ற துவாத சாந்தமாகிய வீட்டில் பெறப்படும் தூய ஞான அமுதத்தை மண்ணுலகில் இருந்து கொண்டே நான் உண்டற்கு விரும்பினேனாதலால் அதற்குத் துணையாக உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுக.

          உயிர் உணர்வுக்கு எட்டாத ஒருபெரும் பரம்பொருளாதலால் சிவத்தை நாம் கண்டிப்பாக அடைந்திடவே வேண்டும்.  எண்ணிறந்த உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய் விரிந்து நிறைந்து நிலவுகின்ற சிவனை அடைந்தேயாக வேண்டும்.

          காணும் போதெல்லாம் தனது பேரழகால் காணும் உயிர்கட்குக் காட்சியின்பத்தை வழங்கக் கூடியவன் சிவனல்லவா.

ஞானயோகப் பேரின்ப நுகர்ச்சிக்குத் திருவருள் இன்றியமையாதது என்பதால்,  திருவருளை அளித்தே ஆகவேண்டும் என்பதால் ஈசனே உன் ஞான வாசற்கதவைத் திறந்து விட்டே ஆகவேண்டும் என்று வேண்டுகிறார் வள்ளற்பெருமான்.

இதனால், ஞானயோக  இன்பத்தைப் பெறுவது குறித்து வடலூர் வள்ளல் கொண்ட வேட்கை மிகுதியை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஞான தேகமாக உள்ளவர் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.ஞானத்தில் ஞானம் பெற ஞான தேகத்தை பெற்றவர் மட்டுமே  கதவைத் திறக்க முடியும்.

அதனால் தான் ஞான தேகா கதவைத்திற என்று வள்ளலார் கேட்கின்றார். கதவும் திறக்கப் பட்டது .மதிமண்டல அமுத்த்தை வாயார உண்டே .ஊன உடம்பை ஒளிதேகம் என்னும் அருள் தேகம் பெற்று மரணத்தை வென்றவர்தான் வள்ளலார்.

அவர்போல் பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றை பற்றினால் அருள் பெற்று என்றும் இறவாமல்.பிறவாமல்  நாமும்  பெறலாம்.

வள்ளலார் பாடல் !

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன்

கோயில்கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த யதிருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்

அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்உள்ளபடி

உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவேஇத்தனையும்

பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே !

என்னும் பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

உணவு தான் மரணத்திற்கு காரணம்!

நாம் பிறந்த நாள் தொடங்கி திரவ உணவு முதல் திட உணவு வரை.தினமும் ஏதோ ஒருவகை உணவை உட் கொள்கிறோம். மரணம் அடையும் வரை உணவை உட் கொண்டே வருகிறோம். இதில் சாத்வீக உணவு.தாமஸ உணவு என்று இரண்டு வகையான உணவு உட் கொண்டு வருகிறோம்.

தாவர உணவு வகைகள் ஒன்று.புலால் என்னும் மாமிச உணவு ஒரு வகை.இந்த இரண்டில் உடல் நலத்திற்கு சிறந்த்து தாவர உணவு வகைகள்.

உடல் நலத்திற்கு கெடுதல் செய்வதும்.அறிவு வளர்ச்சி குறைவதற்கும் காரண காரியமாக இருப்பது மாமிச உணவாகும்.

ஆனாலும் எந்த உணவு உட்கொண்டாலும் மரணம் என்பது நிச்சயம்.

உணவு உட் கொள்ளுகின்ற வரை இறைவன் அருளைப் பெற முடியாது.மரணத்தை வெல்லவும் முடியாது.

உணவு கொண்டால் விந்து என்னும் சுக்கிலம் உற்பத்தி யாகிக் கொண்டே இருக்கும்.சுக்கிலம் என்னும் பூதவிந்து உற்பத்தியானால் எக்காலத்திலும் மரணத்தை வெல்லவே முடியாது. விந்துவை அடக்கினாலும் தவத்தால்.தியானத்தால்.யோகத்தால்.குண்டலினி சக்தியை மேலே ஏற்றினாலும் எந்த பயனும் கிடைக்காது.

வள்ளலார் சொல்லுவார்

சோற்றாசை யோடு காம சேற்றாசைப் படுவோரை துணிந்து கொள்ள கூற்று ஆசைப்படும் என்கிறார்.எமன் என்னும் கூற்றுவன் ஆசையோடு அழைத்து செல்வானாம்…அதாவது மரணம் தானேவந்து விடும்.

சுத்த சன்மார்க்கிகள் உணவை மாற்ற வேண்டும்!

நாம் உண்ணும் உணவு புழுக்கின்ற உணவு என்று பெயர். துற் நாற்றம் உள்ள மலம் வரும் உணவு.அதை நிறுத்தி புழுக்காத. உணவை உட் கொள்ளப் பழகிக்கொள்ள  வேண்டும்.

அதாவது.சர்க்கரை.கற்கண்டு.தேன்.அயன்நெந்தூரம்.தாமரை பஸ்பம்.போன்ற பொருள்களை உட் கொண்டு உடம்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.

அப்படி உணவை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும். அதன் பிறகு ஆன்மா.ஜீவன் உடம்பு புழுக்கின்ற உணவை விரும்பாது. சுத்த உடம்பாக மாறும்.உண்மை அறிவு.உண்மை இரக்கம்.உண்மை அன்பு.தானாகவே உண்டாகும்.

மண்ணாசை.பெண்ணாசை. பொன் ஆசைகள் தானே நின்று விடும்.பூத புழுக்கின்ற உணவினால்  தான் எல்லா ஆசைகளும்.துன்பங்களும் துயரங்களும் அச்சமும்.பயமும். இறுதியில் மரணமும் வந்து விடுகின்றது.

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற் தவம் எல்லாம்சுருங்கி ஆற்றிலே கரைத்த புளி எனப் போகும் என்கின்றார் வள்ளலார்.

மேலும் அகவலில்

உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே !

எதை உட் கொள்ள வேண்டுமோ அதை உட் கொள்ள வைத்து என்னை நல்ல பண்போடு வளர்த்து  நல்ல உண்மையான வழிகாட்டி உயர்ந்த இடத்தில் வைத்துள்ள ஒப்பற்ற பரம சற்குருவே என்கிறார் வள்ளலார்.

வள்ளலாருக்கு உயர்ந்த குருவாக இருந்து வழி காட்டியவர்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும்.

நாமும் உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே உண்மை ரகசியங்கள் யாவும் விளங்கிக் கொண்டே இருக்கும்.

ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளவும்.அருளைப் பெறவும் தடையாக இருப்பது புழுக்கின்ற பூத உணவு பழக்கமாகும்.அவற்றை மாற்றி புழுக்காத உணவை உட் கொண்டு.சுத்த தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வழங்குவார்.

எனவே உணவே மரணத்திற்கு காரண காரியமாக இருக்கிறது என்பதை அறிந்து தெரிந்து புரிந்து  வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஈரமும் அன்பும்கொண்டு இன்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்

கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமுது உண்டுநீ ஒழியாதே அந்தோ

ஊழிதோறு ஊழியும் உலவாமை நல்கும்

ஆரமுது உண்டேன் என்று ஆடேடி பந்து

அருட்பெருஞ் சோதி கண்டு ஆடேடி பந்து ! ஆடேடி பந்து !

 

நல்லது, மீண்டும் அடுத்த பேச்சுரையில் உரையாடலாம், சிந்திக்கலாம்.

பிரமஞானப் பொற்சபை பீடத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.

 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!