திருவாசகம் என்றால் என்ன?

திருவாசகம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொண்டால், அதன் கருப்பொருளை முழுமையாய் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

அதற்கு முதலில் திருவாசகம் என்ற வார்த்தையை பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். திருவாசகத்தைப் பதம் பிரித்தால் இப்படி எழுத்துக்கள் வரும்.

தி என்பதை த்+இ என்றும், ரு என்பதை ர்+உ என்றும், வா என்பதை வ்+ஆ என்றும்,  ச என்பதை ச்+அ என்றும், க என்பதை க்+அ என்றும், ம் மெய்யெழுத்து என்பதால் அதை அப்படியே ம் என்றே வைத்துக் கொள்ள வேண்டும். என்றால், இதில் த் – ர் – வ் – ச் – க் – ம் என்ற   6 மெய்யெழுத்துக்களும், இ – உ – ஆ – அ – அ என்ற 5 உயிரெழுத்துக்களும் வருகின்றன. இந்த 6 மெய்யும் 5 உயிரும் சேர்ந்த மொத்த உருவம்தான் திருவாசகம்.

திருவாசகம் என்பது 6 மெய்யெழுத்துக்களையும், 5 உயிர் எழுத்துக்களையும் தனக்குள் கொண்டிருக்கும் பிரமஞான இரகசியமாகும்.

6 மெய்யெழுத்துக்கள் என்பது வலது திருவடிகளில் மூன்று மெய்களும், இடது திருவடிகளில் மூன்று மெய்களும் சேர்ந்து ஆறு மெய்களாகின்றன. திருவடிகள் என்பது நமது இரு விழிகளாகும். விழிகளைத் தான் அத்தனை ஞானிகளும் சமயக் குரவர்களும் சித்தர்களும் திருவடி என்று மறைபொருளாகச் சொல்லி வைத்துள்ளார்கள்.

இதை பக்தி இலக்கியத்தில் அறுபடை வீடு கொண்டு முருகப்பெருமான் வாசம் செய்யும் திருக்கோவில்களைச் சொல்லலாம். தந்தைக்கு முன்னே மகன் தோன்றினானே என்ற திருமந்திரத்திற்கு ஆதாரம்தான் இந்த 6 மெய்கள். யோக சாத்திரங்களில் ஆறு சக்கரங்கள் என்று சொல்லப்படும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய 6 சக்கரங்களும் நமது இரு திருவடிகளிலேயே அமைந்துள்ளன. இவையெல்லாம் மேலிருக்கும் ஆதாரச் சக்கரங்களாகும். நமது உடலின் முதுகெலும்பின் அடி நுனியிலிருந்து நெற்றிவரை உள்ளவை கீழிலிருக்கும் ஆதாரச் சக்கரங்களாகும்.  காகபுசுண்டர் ஞான காவியத்தில் கீழிலிருக்கும் சக்கரங்களைத் தள்ளு தள்ளு என்பார். அதாவது தவத்தின்போது கீழே உள்ள சக்கரங்களை விட்டுவிடு என்பார். ஆக 6 மெய்களும் நமது இரு திருவடிகளில்தான் உள்ளன என்பது இப்போது உறுதியாகிறது.

5 உயிர் எழுத்துக்கள் = அதாவது ஐந்து உயிர்கள். அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களும் பஞ்சேந்திரியச் சத்திகளும்தான் இந்த 5 உயிர்கள்.  இந்த பஞ்சபூதங்களின் சக்தியில்லாமல் இந்த பிரபஞ்சம் இல்லை.  பிரபஞ்சம் இல்லாமல் மனித உயிர்கள் இல்லை. ஒவ்வொரு மனிதனிடமும் இந்த பஞ்சபூதங்களின் சக்தி இல்லாமல் அவனால் உயிர் வாழ்ந்துவிட முடியுமா, சொல்லுங்கள். கண்டிப்பாக முடியாதல்லவா.

இந்த பஞ்சபூதங்களைப் பற்றியும் அவைகளின் சக்திகளைப் பற்றியும் எம்மைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால், இந்த பஞ்சபூதச் சக்திகள் நமது உடலில் தனித்தனியாக அமர்ந்திருந்தாலும், பிரபஞ்சத்திலும் தனித்தனியாலும் உலவி வந்தாலும் அவை அனைத்தும் ஒரேயொரு இடத்தில் பஞ்சபாண்டவர்களைப் போல ஒருங்குகூடி பிரபஞ்சத்தில் ஓரிடத்திலும் நமது தேகத்தில் ஓரிடத்திலும் மொத்தமாகவே இறைவன் அமைத்திருக்கிறான்.  இவ்விடத்தை நீங்கள் அறிந்து கொள்ளாவிட்டால் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணத்தில் வரும் முதல் சொல்லான நமச்சிவாய வாழ்க ; நாதன்தாள் வாழ்க என்பது எப்படி உங்களுக்குப் புரியும்?  கண்டிப்பாக புரியாது.

திருவாசகத்தின் முதல் சொல்லே நமது தேகத்தில் வாழக்கூடிய 5 உயிர்களையும் ; அவை எங்கே ஒருபுள்ளியில் அமைந்திருக்கின்றன என்பதையும் ; அவைகளை எப்படி கண்டு இன்புற்றிருக்கலாம் என்பதைத்தான் சொல்கிறது. திருவாசகத்தைப் பாடி அருளியவர் பரப்பிரமஞானியான மாணிக்கவாசகர் அல்லவா.  சைவ சித்தாந்தம் போற்றும் சரியை, கிரியை, யோகம், ஞானத்தில் அவர் ஞானத்தில் ஞானம் என்ற உச்சாணிப் பீடமான பிரமஞான பீடத்தில் அமர்ந்திருப்பவரல்லவா.

இந்த உலகில் திருவாசகத்தைப் போல ஒரு மனிதனிடத்தில் உடலிலும் சரி, மனதிலும் சரி, ஆன்மாவிலும் சரி இவ்வளவு அள்ள அள்ளக் குறையாத மெய்யுணர்வுகளையும், ஆனந்தப் பரவசங்களையும் வேறெந்த நூலிலாவது சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லவே இல்லை.  இதன் மகத்துவத்தையும் சிறப்புகளையும் ஞானங்களையும் புரிந்து கொண்ட ஜி.யூ.போப் (G.U.Pope) என்பவர் திருவாசகத்தின்பால் மனமுருகி, உயிருருகி இதை 1900 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இவ்வுலகிற்குக் கொடுத்துள்ளார். அத்தகை சிறப்புடையதே நம் தாய்த் தமிழில் பாடப்பெற்ற இந்த உயிர் மலரும் தமிழ் வேதமான திருவாசகம்.

6 மெய்களும்  5 உயிர்களும்

இந்த 5 உயிர்களும் நமது தேகத்தில் நம் திருவடிகளுக்குள்ளே பிரணவக் குகைக்குள் அமைந்திருக்கின்றன.  இவ்விடத்தில்தான் அந்த 6 மெய்களும் அமைந்திருக்கின்றன.  ஆக 6 மெய்களும் 5 உயிர்களும் சேர்ந்தே ஒரு புள்ளியில் அமைந்திருக்கின்றது என்றால், நாம் அனைவரும் எதை கண்டு உயிர் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற பிரமஞானத்தைத்தான் இத்திருவாசகத்தில் முழுக்க முழுக்கப் பாடி அருளப்பட்டுள்ளது.  திருவாசகம் ஒரு பக்திப் பனுவல்ல, அல்ல, அல்ல.  அதுவொரு தேன் சொரியும் உயிர் மலரும் அமுதத் தேனாகும்.

இந்த 6 மெய்களையும், 5 உயிர்களையும் நீங்கள் இதுவரை புரிந்து கொள்ளாமலேயே நாம் பக்தியை வளர்த்துக் கொண்டிருந்தால், அதற்குப் பெயர் அறியாமை என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். அறியாமை என்ற சொல் நமக்கு எதுவும் தெரியவில்லை என்பதைச் சொல்ல வரும் சொல்லல்ல. நாம் எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்ல வரும் சொல்லாகும். அது எப்படி அறிந்து கொள்ளாததைத் தானே அறியாமை என்போம். அது எப்படி அறிந்து கொள்ளும் சொல்லாகும். இக்கேள்வி உங்களுக்குப் புரிகிறதா?

ஒரு சொல்லுக்குப் பொருள் காண நாம் பதம் பிரித்துப் பொருள் காண்பது நமது தமிழ் இலக்கணத்தின் மரபல்லவா. அதைப்போலவே அறியாமையையும் பதம் பிரித்தால் பொருள் விளங்கிடும்.  அறியாமையை அறி + ஆமை என்று பிரிக்கலாம் அல்லவா. அறி என்றால் அறிவது, எதை அறிவது ஆமையை அறிவது. ஆமை என்பது ஒரு உயிரினமல்லவா. அதை நமது பஞ்சேந்திரியங்களுக்கு உதாரணமாகச் சொல்லி வருகிறோம் அல்லவா. ஐம்புலன்களை அடக்க வேண்டுமென்றால் ஆமையைப் போல் இருக்க வேண்டும் என்போம்.

இதைத்தான் அறத்துப்பாலில் திருவள்ளுவப் பெருமான் 126 வது குறளில்,

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து

என்றார். ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வதைப் போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவிதோறும் ஏழு பிறப்பிலும் அரணாக காவலாக இருந்து உதவும். ஆமை என்பது ஐம்புலன்களையும் ஒருசேர ஒரேயிடத்தில் அடக்கிக் கொள்வதைப் போல, நாமும் நம் ஐம்புலன்களையும் ஒரேயிடத்தில் அடக்கியாளத் தெரிந்திருக்க வேண்டும்.

எப்போதும் ஒன்றை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் இதுநாள்வரை நமது ஐந்து புலன்களையும் தனித்தனியே அடக்கியாளத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்நிலை உடனே மாற வேண்டும் என்றால், நீங்கள் ஐம்புலன்களும் ஒருங்குகூடி இருக்கும் நாதனின் தாளான இறைவனின் திருவடிகள் எங்கே இருக்கிறதோ, அவ்விடம் சென்று சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதைத்தான், 350வது குறளில் வள்ளுவப் பெருமான்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு (குறள் – 350) என்றார்.

பற்றை பற்றே இல்லாமல் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அதெப்படி பற்றே இல்லாமல் பற்றுவது? அதில்தான் பிரமஞானத்தின் இரகசியமே அடங்கியிருக்கிறது. உடலில் ஒட்டிக் கொண்டிருந்தாலும் ஒட்டாமல் ஒட்டியிருக்கும் ஒரு ஞானப் பொருள் ஒன்று உண்டு. அதை நீங்கள் சிக்கெனப் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டால், இறைவனின் இருப்பிடத்தை அடைந்து விடலாம்.

ஆமை என்ற வார்த்தை சொல்லும் ஞானங்கள் எவ்வளவு நீள்கிறது பார்த்தீர்களா? ஆமையை மீண்டும் பதம் பிரித்தால், ஆம்+ஐ என வரும். ஆ உயிர். ம் மெய் அதாவது மகர மெய். ஐ என்றால் இரு நேத்திரங்கள்.

உயிரும் மெய்யும் சேர்ந்திருக்கும் இரு நேத்திரங்கள்தான் ஆமை என்ற சொல்லின் உண்மையான தமிழ்ப் பொருள். தமிழ் என்றாலே அது ஞானம் தானே. தமிழ் ஒரு சாதாரண மொழியல்ல. நம் உயிரை ஒவ்வொரு கணமும் மலர வைத்துக் கொண்டிருக்கும் ஞான மொழியாகும்.

ஞான ஒளிதேகத்தைப் பெறு

குறள் எண் 349-ல் இவ்வுலகத்திற்குத் திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய இறை இரகசியத்தை மறைபொருளாகவே சொல்லியிருக்கிறார். இக்குறளை யாராவது இதுதான் உண்மை மெய்ப்பொருள் என்று இதுகாறும் கூறினார்களா என்றால், எமது சிற்றறிவுக்கு எட்டியவரை இல்லை என்றே சொல்வோம். அக்குறள் என்னவென்றால்,

பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும் (குறள் – 349)

இதுதான் அக்குறள். உங்களுக்கு இக்குறள் சொல்லும் பொருள் புரிகிறதா, பாருங்கள். பற்றற்ற கண்ணே பிறப்பை அறுக்கும், மற்றவைகள் அனைத்தையும் நிலையில்லாத பொய்கள் என்கிறார் வள்ளுவப் பெருமான். பற்றற்ற கண் என்றால், பற்று இல்லாத பிடிமானம் இல்லாத கண் என்பதாகும். பிடிமானம் இல்லாமல் கண் நம் தேகத்தில் ஒட்டிக் கொண்டுள்ளதா? இதை நாம் என்றைக்காவது சிந்தித்துப் பார்த்துள்ளோமா? இல்லை அல்லவா. அதுதான் பிரமஞானத்தின் இரகசியம். கண்கள் பற்றில்லாமல் இருக்கிறதா, எதையும் பற்றிக் கொள்ளாமல் பற்றிக் கொண்டிருக்குமா? இதற்கெல்லாம் விடை காண வேண்டுமென்றால், நீங்கள் இந்த திருவாசகத்தை முழுமையாக உள்வாங்கிப் படித்து உங்கள் மெய்யுணர்வுகளால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால், இன்றைய உலகம் தமிழ் கொடுக்கும் ஞானத்தை விட்டுவிட்டு, அஞ்ஞானத்தில் வாழ்ந்து வருவது கண்டு இனியும் மனித உயிர்கள் அஞ்ஞானக் கூட்டில் வாழக்கூடாது என்று கருதியே இத்திருவாசகத்திற்கு ஞானப் பொருளாக உரை சமைத்து உங்களுக்கு இன்று வழங்கி இருக்கின்றோம். எல்லா உயிர்களும் பிரமஞானம் பெற்று சிவானுபவத்தில் திளைக்க வேண்டும். இதுதான் யாம் எம் குருவிடம் சிவத்திடம் தினமும் பிரார்த்தித்துக் கொள்வது.

கோவில்கள் என்பவைகள் எதற்காக நம் முன்னோர்களால் கட்டப்பட்டன? கோவில்கள் சொல்லவரும் மெய்ப்பொருள் என்ன? கோவில்கள் நமக்கு என்ன செய்திகளைச் சொல்லிக் கொண்டுள்ளன? கோவிலுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கோவிலுக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? இறைவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கோபுரங்கள், கொடிக்கம்பங்கள், பலிபீடங்கள், வாயிற்காப்போன்கள், கருவறை, கருவறைக்குள் இருக்கும் இருட்டு, அதில் தீப வெளிச்சம், அந்த வெளிச்சத்தில் தெரியும் இறைவனின் சிலை அமைப்புகள், கோவிலை இடமிருந்து வலமாக ஏன் சுற்ற வேண்டும்? வலமிருந்து இடமாக ஏன் சுற்றக்கூடாது? கருவறையில் சிவத்திற்கு ஏன் உருவமேனி வைக்காமல் லிங்கமேனியை வைத்தார்கள்? பூசாரிகள், சிவாச்சாரியார்கள், பிராமணர்கள் எதற்காக கருவறையில் இடது கையில் மணி அடிக்கிறார்கள்? வலது கையில் தீபாராதனை காட்டுகிறார்கள்? இத்தனை கேள்விகளுக்கும் நமக்கெல்லாம் உண்மையான மெய்ப்பொருள் விளக்கம் தெரியுமா? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இதற்கு விடைகாண அகத்தியர் எழுதிய அடுக்குநிலை போதம், அகத்தியர் ஞான சைதன்யம் 51, அகத்தியர் ஞானம் 30, மாணிக்கவாசகர் எழுதி அருளிய திருவாசகம், ஞானத் தாழிசை, எம் சற்குரு எழுதிய கண்மணிப் பதிகம், வள்ளற்பெருமான் எழுதிய கண்புருவப் பூட்டு, ஞான சரியை, திருமந்திரத்தில் உள்ள 1000 ஞானப் பாடல்கள் போன்ற ஞானக் காவியங்களை ஒரு சற்குருவிடம் பிரமஞானத் தீக்ஷை பெற்று படித்துப் பாருங்கள். மாணிக்கவாசகரைப் போல, திருநாவுக்கரசரைப் போல, திருஞானசம்பந்தரைப் போல, சுந்தரரைப் போல, ஔவைத் தாயைப் போல, வள்ளற்பெருமானைப் போல, மகா அவதார் பாபாஜியைப் போல, எம்குரு சுந்தரானந்த மகரிஷியைப் போல நீங்களும் ஞான ஒளிதேகத்தைப் பெற்றுவிடலாம்.

திருவாசகத்தை எப்போது, எப்படி படிக்க வேண்டும் ?

கோவில்கள் என்பது நமக்கு ஞானத்தைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடம் என்பதுகூட நாம் தெரியாமல்தான் கோவில்களுக்குச் சென்று பூசை, வழிபாடு செய்கிறோம். இந்த பூசையும் வழிபாடும் என்ன சொல்ல வருகிறது என்பதை நாம் அறிந்துவிட்டோமா? அறிந்து அவ்வழியைப் பின்பற்றுகிறோமா? இந்த உயிர் மலரும் தமிழ் வேதமான திருவாசகத்தை நன்கு ஆழ்ந்து உள்வாங்கிப் படியுங்கள். வாய்விட்டு படியுங்கள். நீங்கள் படிக்கும் சத்தமானது உங்கள் மூளைக்குள் இருக்கும் உயிருக்குக் கேட்கும்படி படிக்க வேண்டும். படிக்கும் போது இரண்டே இரண்டு விசயத்தை மட்டும் தவறாமல் கடைபிடியுங்கள். இந்த நூல் வாசிப்பே உங்களுக்கு பிரமஞானத்தை உங்கள் உயிருக்குள் மலர வைத்துவிடும்.

  1. திருவாசகத்தை அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாகத்தான் படிக்க வேண்டும்.
  2. படிக்கும் காலம்வரை விழிகளை மூடாமல் இமைகளை இமைக்காமல் படிக்க வேண்டும்.

திருவாசகத்தை ஏன் இந்த 3 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாகப் படிக்க வேண்டுமென்றால், அதில் ஒரு மாயாஜாலமே குழுமி இருக்கிறது. உங்கள் உயிர் மலர வேண்டுமென்றால், அங்கே ஒரு ஆனந்த மாயாஜாலம் நிகழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த இரு வழிகளையும் தவறாமல் பின்பற்றிப் பாருங்கள். உண்மை உங்களுக்கே தெரிய வந்திடும்.

இறையம்சத்தோடு கூடிய பல கவிதைகள் இவ்வுலகில் நிரம்ப உண்டு. உலக இலக்கியங்களில் ஒரு முழுமையான ஞானத்தைக் கொண்டிருக்கும் இலக்கிய ஞான நூல்கள் உண்டென்றால், நம் தாய்த் தமிழில் பாடப்பட்ட, பிரமஞானச் சொற்களை தன் தெய்வக் கரங்களிலே அச்சாணி கொண்டு, எல்லாம் வல்ல அந்த பரமேசுவரனாலே எழுதப்பட்ட, தலைமை பீடத்தில் மணிமகுடமாக இருக்கும் நமது உயிர்மலரும் தமிழ் வேதமான திருவாசகத்தை மட்டுமே சாரும். அத்தனை பெருமையுடைத்து நம் திருவாசகம்.

மனிதனுக்காக மனிதன் சொன்னது திருக்குறள்.

மனிதனுக்காக கடவுள் சொன்னது பகவத்கீதை.

கடவுளுக்காக மனிதன் பாடியதுதான் திருவாசகம்.

மற்றெந்த நூல்களுக்கும் இல்லாத ஒரேயொரு பெருமை உண்டென்றால், அது மனிதன் பாடப் பாட இறைவனே அவனின் தெய்வத் திருக்கரங்களால் எழுதினான் என்றால், அந்த பாடல்களின் ஒவ்வொரு சீரும் அடியும் எவ்வளவு தெய்வீக ஞானத்தோடு திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை இங்கே நாம் ஆழ்ந்துப் பார்த்திட வேண்டும்.

ஒரு நூல் எப்படி இருக்க வேண்டுமென்றால், அது கற்போர், படிப்போர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கு உயர்ந்த ஞானநெறியை பரிபூரணமாய்க் கொடுப்பதாக இருக்க வேண்டும். இத்திருவாசகத்தின் அத்தனைப் பாடல்களும் எளிமையாகவும் இனிமையாகவும் ஞானத்தோடும் ஆனந்தப் பரவசத்தோடும் பாடப்பட்டு, நமது உணர்வுகளையெல்லாம் மெல்ல மெல்லக் கரைத்து, கரைத்து கண்களில் தாரை தாரையாய் கண்ணீரைப் பெருக்கி, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இல்லாத சொல்லும் மனமும் உணர்வும் கடந்த ஒரு தொன்மையான ஆனந்தப் பேரின்பத்தை அடையச் செய்யும்படி இருக்க வேண்டும். திருவாசகத்தைத் தவிர இந்நிலைப்பாடு வேறெந்த நூல்களைப் படிப்பதாலோ, கற்பதாலோ ஏற்பட்டிருக்கக் கூடுமா என்பதை நாம் இங்கே சிந்திக்க வேண்டும்.

இத் தமிழ் வேதமான திருவாசகத்தில் எதை விடுவது? எதைப் பிடிப்பது? இதை உணர்வுநிலையில் நின்று படிக்கும்போது உணர்வற்றுப் போகிறோம் ; காதலாகிக் கசிந்துப் படிக்கும்போது இறைவன்மீது கொள்ளைக் காதலாகிப் போகிறோம் ; வார்த்தைகளின் பொருளுணர்ந்து படிக்கும்போது மனதிற்குள் வார்த்தையற்றுப் போகிறோம் ; அறிவுநிலையில் நின்று சிந்திக்கும்போது அங்கே அறிவு அற்றுப்போய் போகிறோம் ; முடிவைத் தேடும் ஆன்மாக்களுக்கு அங்கே முடிவில்லா ஞானம் கிடைக்கப் பெறுகிறோம் ; துன்பத்தில் உழலும் மக்களுக்கு அங்கே சொர்க்கலோகம் கிடைத்துவிடுகிறது ; விடியலைத் தேடும் சாதகர்களுக்கு கதிரவனே கிடைத்து விடுகிறான் ; இருளில் வாழும் மனிதர்களுக்கு அங்கே அணையா விளக்கே கிடைத்து விடுகிறது. என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது? இத்திருவாசகப் பெருமைகளை, சிறப்புகளை. சொல்லில் வடித்துவிட இதுவென்ன கற்சிலையா? பாட்டில் சொல்லிவிட இதுவென்ன காவியமா? கால, தேச, வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கும் பிரமஞானம், இங்கே ஒவ்வொரு பாட்டிலும் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறது, வற்றாத சீவநதியாக.

பிரமஞானம்

பிரமஞானம் என்ற கடலைக் கண்டு அதனோடு இரண்டறக் கரைந்துபோகும் தந்திரத்தை, சூக்குமத்தை நமக்குள்ளே விதைத்து விட்டு அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலை, இங்கே நமக்கு ஒவ்வொரு பதிகத்திலும் அள்ள அள்ளக் குறையாமல் கொட்டிக் கிடக்கின்றது.

திருவாசகம் என்பதை திரு+வாச(ம்)+அகம் எனப் பிரித்துப் பொருள் காண முற்பட்டால், அகமாகிய உயிரில் திருவாகிய இறைவன் வாசம் செய்து கொண்டிருக்கிறான் என்பது புரிய வரும். உயிரில் வாழும் ஈசனை – சிவத்தை – பழம்பொருளை – சிவப்பொருளை – மெய்ப்பொருளை எவ்வாறு கண்டு, அவனோடு உறவாடி, காதலாகி மகிழ்ந்து கண்ணீர் சிந்தி, புணர்ந்து சிவமாகவே மாறலாம் என்பதைச் சொல்வதுதான் திருவாசகத்தின் கருப்பொருளே.

இங்கே நீங்கள் திருவாசகத்தைக் கற்கப் போவதில்லை. உங்களை நீங்களே கற்றுக்கொள்ளப் போகிறீர்கள். திருவாசகத்தின் அழகை, செழுமையை கண்டு ரசிக்கப் போவதில்லை. மாறாக உங்களை நீங்களே கண்டு உங்கள் சூக்கும அழகினை, உயிரின் செழுமையைக் காணப் போகிறீர்கள். உங்களை உங்களுக்குள் தொலைத்த இடத்தைக் காண வைப்பதுதான் திருவாசகம். இறைவனை எப்படியெல்லாம் காதலிக்கலாம்? எப்படி அவனோடு புணர்ந்து இன்புறலாம்? என்பதைச் சொல்லிக் கொடுக்கும் இத் திருவாசகம். புணர்தல் என்பது உடலில் நடக்கும் நிகழ்வல்ல ; அது உயிருக்குள் உயிர் சேர்ந்து இன்புறும் அற்புத நிகழ்வு. அதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

திருவாசகத்தை நினைக்கும்தோறும், அன்பு பொதிந்திருக்கும் திருப்பாடல்களை ஓதுந்தோறும், உள்ளம் அணுஅணுவாக சிவானுபவத்தில் திளைத்துத் திளைத்து, கண்ணீர் சொரிந்து கொண்டே இருக்கும் தெய்வீக சாந்நித்யத்துவத்தை நீங்கள் அடைவீர்கள். கண்ணீர் ஊற்றெடுக்கும்போது உங்களுக்குள் நீங்களே கரைந்து போய், நீங்கள் ‘நான்’ என்ற உணர்வற்று, பரவச உணர்வில் தென்றல் காற்றில் ஆடுவதைப் போல மகிழ்ந்திருப்பீர்கள்.

‘வாசகம் வல்லார் முன் நின்று வாய் திறக்க வல்லார்?’ என்ற வாசகம் திருவாசகத்தின் பெருமையை நமக்குக் காட்டுகிறது. ‘யாவரும் விரும்பும் பண் இனிமை மிக்க தெய்வப் புகழ்மாலை’ என்றே இதை மொழிந்து விடலாம். இத்திருவாசகம் பற்றி சிவத்திரு மறைமலை அடிகளார் அவர்கள், “இனித் திருவாசகம் என்பது, பிறிதொன்றற்கு இல்லாத அழகினை உடைய வாசகம்” என்றும், “திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு” எனவும் கூறியுள்ளதைக் காண்க. எந்த ஒன்றிற்கும் இல்லாத சிறப்பினை உடையதுதான் திருவாசகம் என்பது இதனால் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

உயிர் மலரும் தமிழ் வேதமான திருவாசகம், நமது தமிழ்நாட்டிலும் தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் வெளிநாடுகளிலும், சைவத்தைப் பின்பற்றும் சமயத்தார்களால் வழிபாட்டு நூலாகத்தான் இதுநாள் வரை இருந்து வருகிறது. இனி அந்நிலை மாறி, திருவாசத்தை ஓதும் மக்களின் உயிர்களை, உயிர் மலரை மலர வைக்கும் ஞான நூலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதியே, இத்திருவாசகம் பாடப்பெற்ற மெய்ப்பொருள் ரகசியத்தை எம் சற்குருவின் அனுமதியோடு உடைத்து வெளிப்படுத்தி இங்கே உங்கள்முன் சமர்ப்பித்திருக்கின்றோம், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நம் பூட்டனுக்கும் பூட்டனான தமிழ்க்குலத்தின் குலகுருவான திருமூலரின் வாய்மொழிக்கிணங்க. இனிமேல் திருவாசகம் பத்திப் பனுவல்ல ; அது முக்காலத்தையும் கடந்து நிற்கும் பிரமஞானப் பனுவல். நம் உயிர்களை மலர வைக்கும் இறையானந்தப் பனுவல் என்பதை இனிமேலும் இவ்வுலகம் கண்டு உணர்ந்து கொள்ளட்டும்.

ஒரு ஆன்மாவை ஒரு நூலால் உணர்வு நிலைக்கு கொண்டு வந்து மலரச் செய்துவிட முடியுமா என்றால், அது கண்டிப்பாக நம் திருவாசகத்தால் முடியும். முடித்தும் காட்டப்பட்டுள்ளது. அதனால்தான் திருவாசகத்தைப் பாடி முடித்தக் கையோடு சிதம்பரம் நடராசர் சன்னதியில் “இதோ அதுதான் இதற்கான உண்மையான மெய்ப்பொருள்” என்று விரல்களால் சுட்டிக்காட்டியக் கையோடு தன் பூதவுடல் ஒளியாகி சிவத்தோடு கரைந்து போனார் மாணிக்காவசகப் பெருமான். இதைவிட இந்நூல் பிரமஞானத்தின் அற்புதப் பொக்கிசம் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டியிருக்கிறது. அறிஞர் பெருமக்கள் நன்றாக இதை சிந்தித்துப் பார்க்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.

இத்திருவாசகம் சமய நூலாக இருந்து நின்றுவிடாமல், அதையும் தாண்டி இலக்கிய நலம் பொதிந்த நூலாகவும், தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. வலிமையான இருளில் கட்டுண்டு கிடக்கக்கூடிய ஒரு ஆன்மா, பிரபஞ்சப் பேரொளியைத் தேடி, தனக்குள்ளே இருக்கும் பிரணவத்தின் உச்சியை நோக்கிச் செல்லும்போது, அதனுடைய வழிப்பயணங்களில் அதற்கேற்படும் பலவகையான ஆனந்த நிகழ்வுகளையும் சத்திய மெய்யுணர்வுகளையும் பரவசக் கூத்தாக தெள்ளுதமிழ் ஓசைகளால் திருப்பதிகங்களில் எடுத்தோதுகின்ற இத்தெய்வக் கவிதைகள் மாணிக்க வாசகப் பெருமானின் பிரமஞான தவ வாழ்க்கையைத்தான் அனைத்துப் பாசுரங்களிலும் காட்டி நிற்கிறது.

திருவாசகம் அருளிய ஆனந்த நிலைகள்

தனக்குள்ளே தன்னைத் தேடி அலையும் ஒரு ஆன்மா, எங்கோ ஒரு க்ஷணத்தில் தன்னைக் கண்டு ஆனந்தக் கூத்தாடிப் பாடும் திருக்கவிதைகளாகத்தான் நம் திருவாசகம் காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி மாணிக்கவாசகர் ஓரிடத்தில்,

இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும்

துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பமைத்து

சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே

ஊராகக் கொண்டான் உவந்து (திருவாசகம் – 625)

என்று பாடினார். இதன் பொருளாவது : “பேரின்பம் பெருகிறது, எவ்வாறு இது நடந்தது எனப் பார்த்தேன் ; என்னைத் தொன்றுதொட்டு சூழ்ந்து வரும் கர்மவினைகளாம் இருளானது எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது ; இந்த இருளானது எவ்வாறு ஓடி ஒளிந்து கொண்டது எனப்பார்த்தால் எனக்குள்ளே அன்பு சுரந்து உயிர்ச்சோதியை கண்டபோது நிகழ்ந்தது எனக் கண்டுகொண்டேன். இது என்ன ! இப்படி நிகழ்ந்துவிட்டதே எனப் பார்த்தேன் ; அழகிய பெருவழியான பிரணவக் குகைக்குள்ளே பரவிந்துவாக இருக்கக்கூடிய சிவத்தின்மீது கொண்ட சிந்தனைகளால் இது நிகழ்ந்திருக்கிறது எனக் கண்டு மகிழ்ந்தே போனேன்” என்று பாடியிருக்கும் அழகு இருக்கிறதே, அதுதான் பிரமஞானத்தில் முளைத்திட்ட உயிர்மலராகும்.

திருவாசகமெங்கும் சிவபெருமான் தன்னை ஆட்கொண்டு அருளிய ஆனந்த நிலைகளையும், அப்பேரருளுக்கு நாம் என்னதான் கைம்மாறு செய்துவிடப் போகிறோம் என்ற ஏக்க உணர்வுகளையும் தனக்குள்ளே சிவம் மலரும்போது அவரின் ஆனந்த ஒளி நடனத்தையும் அந்த ஒளிநடனத்தின் போது தனது சிரசிற்குள்ளே கேட்கும் பிரமநாத ஓசைகளையும் கண்டும் கேட்கும் பேரானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்து வருவதையும், அவ்வாறு சிவநடனத்தைத் தனக்குள்ளே காணாது இருக்கும் காலங்களில் சிவன் தன்னைவிட்டுச் சென்றுவிட்டாரோ? தன்னைப் பாராமுகமாய் வைத்து விட்டாரோ? தன்னைக் கடைக்கோடியில் தனியாக அனாதையாக புலம்பித் தவிக்கும்படி செய்து விட்டாரோ? தாய்ப்பசு இல்லாது ஏங்கித் தவிக்கும் கன்றினைப் போல ஆக்கிவிட்டாரோ? என்று அவரின் பொறுக்க முடியாத ஆற்றொணாத் துன்பத்தை, ஆற்றாமையை, இயலாமையை, வாழ முடியாமையை, செத்துவிட நினைத்தமையை நினைத்து நினைத்து உருகி உருகி அவர் பாடும் தெய்வக் கவிகள் நம்மை நெருப்பாய் சுட்டுக் கொண்டே இருப்பதை இந்நூலில் அல்லாது வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சிகளாகும். அதற்கான சில திருவாசகப் பாடல்களை சிலவற்றைக் காணலாம்.

நான்ஆர் அடிஅணைவான் ஒருநாய்க்குத் தவிசு இட்டுஇங்கு

ஊன்ஆர் உடல்புகுந்தான் உயிர்கலந்தான் உளம்பிரியான்

தேனார் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்

வானோர்களும் அறியாததோர் வளம்ஈந்தனன் எனக்கே.

(உயிருண்ணிப் பத்து – 2வது பாடல்)

சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள்

சூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று

ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்ளுருகித்

தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்

வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல்ஏந்தி

ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்.

(திருஅம்மானை-17வது பாடல்)

என்னால் அறியாப் பதம்தந்தாய்

யான் அதுஅறியாதே கெட்டேன்

உன்னால் ஒன்றும் குறைவில்லை

உடையாய் அடிமைக்கு யார்என்பேன்

பன்னாள் உன்னைப் பணிந்துஏத்தும்

பழைய அடியரொடுங் கூடாது

என்நாயகமே பிற்பட்டு இங்கு

இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.

(ஆனந்தமாலை – 2வது பாடல்)

தன்பாலும் இறைவன்பாலும் நிலைத்த பண்பும் அன்பும் காதலும் ஞானமும் கொண்டு சத்தியங்களையும் ஒழுக்க நெறிகளையும் ஞானத் தத்துவங்களையும் நமது சிந்தைக்கும் செவிக்கும் சிரசிற்குள் இருக்கும் உயிருக்கும் அளிக்கக்கூடிய இனிய செஞ்சொற்களால் ஓங்கி உரைத்த ஒரு இலக்கியம் – ஞானக் காவியம் உண்டென்றால் அது திருவாசகம் மட்டுமே என்பதை எவராலும் எந்நாட்டவராலும் அணுவளவுகூட மறுக்க முடியாது என்பதுதான் இப்பிரபஞ்சத்தின் சத்திய வாக்காகும். அப்படிப்பட்ட திருவாசகம் உலக இலக்கியங்களில் தலையாய முதல் நூல் என்றால் அது மிகையாது.

திருவாசகத்தின் ஆழமான கோட்பாடுகள்

தன்பாலும் இறைவன்பாலும் நிலைத்த பண்பும் அன்பும் காதலும் ஞானமும் கொண்டு சத்தியங்களையும் ஒழுக்க நெறிகளையும் ஞானத் தத்துவங்களையும் நமது சிந்தைக்கும் செவிக்கும் சிரசிற்குள் இருக்கும் உயிருக்கும் அளிக்கக்கூடிய இனிய செஞ்சொற்களால் ஓங்கி உரைத்த ஒரு இலக்கியம் – ஞானக் காவியம் உண்டென்றால் அது திருவாசகம் மட்டுமே என்பதை எவராலும் எந்நாட்டவராலும் அணுவளவுகூட மறுக்க முடியாது என்பதுதான் இப்பிரபஞ்சத்தின் சத்திய வாக்காகும். அப்படிப்பட்ட திருவாசகம் உலக இலக்கியங்களில் தலையாய முதல் நூல் என்றால் அது மிகையாது.

திருவாசகத்தில் சொல்லப்படுகின்ற செய்திகள், காலம், இடம், தேசம் இவைகளைத் தாண்டி, ஒவ்வொரு பிறவிதோறும் உயிரோடு கூடவே வந்து கொண்டிருக்கும் பழம்பொருளாம் – பழைமைப் பொருளாம் மும்மலங்களை எவ்வாறு வேரோடு அறுத்து எரித்து, தனக்குள்ளே ஒரு பேரருள் பிழம்பைக் கண்டு, அதைப் பற்றிக் கொண்டு, அந்த அருள் ஒளியை நாடிச்சென்று கலந்துவிடும் ஒரு ஆன்மாவிற்குள் நிகழும் பலதிறப்பட்ட ஞான நிகழ்வுகளைப் பற்றியதாகத்தான் காணப்படுகிறது.

இந்த ஞான அனுபவங்கள் தனக்குக் கிடைத்ததோடு அல்லாமல், இந்நூலைக் கற்போர், ஓதுவோர், சிந்திப்போர், பின்பற்றுவோர் அனைவரும் ஒருசேர அடைந்திட வேண்டும் என்ற தாயுள்ளம் கொண்டு மொழியப்பட்டதுதான் இத்திருவாசகம்.

  • மனிதனுக்கு ஏன் இறை சிந்தனை வரவில்லை என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • வந்த இறைச் சிந்தனை ஏன் முழுமையடையவில்லை என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • இறைவன்மீது எப்படி அன்பைப் பொழிய வேண்டும் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • இறைவனைக் காண வேண்டி எவ்வாறெல்லாம் தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • பத்தியை எவ்வாறு காட்ட வேண்டும் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • பத்தியால் அடையும் இன்பங்கள் எதுவென்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • இறைவனைக் காண என்னவெல்லாம் தடைகளாக இருக்கின்றன என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • அத்தடைகளை எவ்வாறெல்லாம் உடைத்தெறியலாம் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • தடைகளை உடைத்தெறிந்தபின், உயிரை எவ்வாறு சென்றடையலாம் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • உயிரை அடைந்தபின் அங்கே பரவிந்து சொரூபனான சிவம் எப்படி உள்ளார் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • அந்த பரவிந்து சொரூபனான பரமேசுவரனைக் கண்ணாரக் கண்டபிறகு அவனோடு எப்படிக் கூடிக்குழையலாம், புணரலாம் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • இறைவனோடு புணர்ந்தபின் அவனை எவ்வாறு திருக்கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • இறைவனைத் திருமணம் செய்ய வேண்டிய பிரம்மாஸ்திரத் தவத்தை எவ்வாறு செய்யலாம் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • பிரம்மாஸ்திரத் தவத்தால் அடையக்கூடிய பிரமஞானத் தவத்தை எவ்வாறு கைவல்யப்படுத்திடலாம் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.
  • பிரமஞானத் தவத்தை இராப்பகலற்ற இடத்தில் எவ்வாறு செய்திட வேண்டும் என்பதைச் சொல்கிறது இத்திருவாசகம்.

இறுதியாக ஒவ்வொரு உயிரும் உயர் ஆன்மாக்களும் பிரமஞானத்தோடு சதாசிவத்தோடு பரப்பிரமத்தோடு வாழ்ந்திடலாம் என்பதைச் சொல்லி, இறையொளியோடு கலந்து இன்புற்று தானும் ஒளியுடலாக மாறிடும் அற்புத பிரமஞான இரகசியங்களைச் சொல்லி முடிக்கிறது இத்திருவாசகம்.

இது எமது குரு சுந்தரானந்த மகரிஷி அவர்களாலும் சற்குரு மகாஅவதார் பாபாஜி அவர்களாலும்தான் விளைய ஆரம்பித்தது. அவர்கள் இட்ட பணியை இன்று நிறைவேற்றி யுள்ளேன். அதற்கு குருவருளும் திருவருளும் துணையிருந்ததோடு மட்டுமல்லாமல் எங்கள் பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் குருகுல மாணவர்களும் அவ்வளவு உறுதிப்பாடாக இருந்து உதவிகளைச் செய்தார்கள். அவர்களின் உதவிகள் இல்லாமல் இவ்வளவு சீக்கிரத்தில் இத்திருவாசகம் உங்கள் கைகளில் வந்து சேர்ந்திருக்காது. அவர்களுக்கு இம்மேடை மூலமாக எம் பரிபூரண ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து, உங்கள் முன்னே இப்பேச்சுரையை பேசுவதற்கு வாய்ப்பைக் கொடுத்த எம் சற்குருவுக்கும் குருநாதருக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி கூறி அமையும்முன், உங்கள் அனைவரையும் இந்த விழா அரங்கத்தை விட்டு வெளியே செல்லும்முன் வெறும் கையோடு அனுப்ப இல்லாமல் உங்கள் அனைவருக்கும் தூல வடிவில் பிரமஞானக் குருகுலம் என்ற நூலினை வழங்கியிருக்கிறோம். ஆனால், உங்கள் உயிருக்கு எதுவும் கொடுக்கவில்லையே, அதனால் உங்கள் உயிருக்கான ஒரு பரிசை இங்கே உங்கள் அனைவருக்கும் கொடுக்கலாம் என்று நினைத்து, எம் சற்குருவிடமும் குருநாதரிடமும் அனுமதி பெற்று இந்த எங்கள் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அடிப்படை நாதமான மகா பிரமாஸ்திர சிவ மந்திரத்தை உபதேசிக்க நினைத்துள்ளோம். இந்த மகா சிவ பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள உங்கள் அனைவருக்கும் விருப்பமா? விருப்பம் என்றால், சொல்கிறோம். சொல்லுங்கள் சான்றோர்களே.

எல்லோரும் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கைகள் தியான முத்திரையில் இருக்கட்டும். முதுகும் கழுத்தும் வளையாமல் நேராக நிமிர்ந்து இருக்கட்டும். நான் மூன்று முறை அம்மந்திரத்தை உச்சரித்துக் காட்டுகின்றோம். அனைவரும் ஒரே குரலில் உச்சக் குரலில் சொல்லுங்கள். அது ஏற்படுத்தும் ஆனந்தப் பரவசத்தில் திளைத்துப் போய்விடுவீர்கள்.

சொல்லலாமா….. அனைவரும் தயாரா…..

சிவ சிவ சிவ சிவ சிவாய நமஓம்

சிவ சிவ சிவ சிவ சிவாய நமஓம்

சிவ சிவ சிவ சிவ சிவாய நமஓம்

இந்த மகா பிரமாஸ்திர சிவ மந்திரத்தை காலையில் எழும்போதும், இரவு உறங்கும் முன்பும் 21 முறை நன்கு ஆழமாகவும் நீளமாகவும் நல்ல கணீரென்ற உச்சரிப்போடும் ஆத்மார்த்தமாக விழி திறந்த நிலையில் சொல்லி வாருங்கள். இவை உங்கள் அத்தனை கர்ம வினைகளையும் சுட்டெரித்து உங்களை சிவப்புண்ணியனாக்கி விடும் என்று கூறி எங்கள் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அத்தனை குருமார்களையும் திருவடிகளில் நின்று வணங்கி அமைகின்றோம்.