முதல் நிலை – அறிமுக உரை
பிரமஞானப் பொற்சபை குருகுலக் கல்வி
முதல் நிலை – அறிமுக உரை
உலகம் முழுக்க ஞானத்தைத் தேடி அலைந்து திரியும் ஆன்மாக்கள் எவ்வளவோ கோடி உள்ளன. ஒவ்வொரு இடத்திலும் ஞானம் கிடைத்துவிடாதா என்று ஏங்கித் தவிக்கும் மனித உயிர்கள் சொல்லி மாளாது.
ஆதி காலத்தில் நம் இந்திய திருநாட்டில் குருகுலக் கல்விகள் அனைத்து இடங்களிலும் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வந்தன. ஞானிகளும் முனிவர்களும் ரிஷிகளும் அத்தகைய பிரமஞானத்தைக் கற்றுத் தரும் குருகுலங்களை நடத்தி வந்தார்கள். ஆங்கிலேயர்களின் காலத்தில் இந்த குருகுலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. எண்ணற்ற குருமார்கள் கொல்லப்பட்டார்கள். அதன் காரணமாக குருகுலச் சந்ததி இல்லாமல் போனது. அந்நிலையை மாற்றவும், மீண்டும் இப்பூமியில் பிரமஞானத்தைப் போதிக்கும் குருகுலப் பரம்பரையைக் கொண்ட குருகுலத்தை நடத்தி மனித உயிர்களுக்கு எம் சற்குருமார்களால் கற்பிக்கப்பட்ட ஆதித் தமிழ்ச் சித்தர்களின் குருகுலக் கல்வியை இன்று உலக மக்கள் முழுமையாகப் பெற வேண்டும் ; பிரமஞானத்தில் திளைக்க வேண்டும் என்ற தொலைநோக்கில் இந்தியத் திருநாட்டில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் சேலம் மாநகரில் பிரமஞானப் பொற்சபை குருகுலம் என்ற குருகுலக் கல்வியை 2021 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்து நடத்தி வருகிறோம்.
காலம் உண்டாகவே காதல் செய்துஉய்மின் கருதரிய
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர்நண்ணரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு
மூலபண்டாரம் வழங்கு கின்றான்வந்து முந்துமினே (திருவாசகம்)
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன்மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே (தி.ம.2944)
இசைந்துஎழும் அன்பின் எழுந்த படியே
பசைந்துஎழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்தகுரு வந்து சென்னி கைவைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே (தி.ம.1590)
அருளமுது
‘அறிவிக்க அறிதல்’ என்பது சைவ மரபில் ஒரு கருதுகோள். அதன் அடிப்படை என்னவென்றால், அறியாதவர் ஒருவர், ஒரு பொருளைத் தெளிவாக அறிய வேண்டுமானால், அதை அவருக்கு அறிவிக்க, அறிந்தவர் ஒருவர் வேண்டும். கற்பிக்கிறவர் இல்லாமல் கல்வி சாத்தியமில்லை, குரு இல்லாமல் அறிதல் சாத்தியம் இல்லை என்னும் கருதுகோள், சைவ நூலாகிய திருமந்திரத்தில் உள்ளது; அறிதல் செயல்பாட்டில் குருவின் பங்கை முதன்மைப்படுத்திப் பேசுகிறது. குருவைக் கடவுளுக்குச் சமமாகப் போற்றுகிறது.
ஆனால், திருமந்திரம் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில், திருமந்திரம் சைவம் என்கிற சமயச் சார்பு நூல். அது வழங்கக் கருதுவது பொதுவான அறிவை அல்ல; சைவ மரபு கருதுகிற சிறப்பு அறிவை! சைவ மரபின் சிறப்பு அறிவைக் குரு என்று சொல்லிக்கொள்கிற யார் வேண்டுமானாலும் வழங்கி விடமுடியாது. சைவ மரபை அறிந்து, தெளிந்து, உணர்ந்தவர்கள் மட்டுந்தான் வழங்க முடியும்.
சைவ சமயத் தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துஉய்ய
வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே (தி.ம.1567)
சைவ சமயத்தின் தனிமுதல் தலைவனாகிய இறைவன், உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உய்வு அடைவதற்காக வகுத்து வைத்த குரு நெறி ஒன்று இருக்கிறது. அந்த நெறி சிவ நெறி. சன்மார்க்கம் என்கிற சைவ அறிவு நெறி.
அறிவை வேண்டுகிறவன் அறிவு இருக்கிற வனிடம் போய்ப் பெற்றுக் கொள்ளலாம் என்று பொதுமைப்படுத்திவிட்டால் அதில் சிக்கல் இல்லை. பணிவில்லாதவன் பரநிந்தை செய்வோன் ஆவான்.
குருவைத் தேர்ந்தெடுக்கிற விவகாரத்தில் யாரும் அப்படிச் சங்கடப்பட்டுவிடக் கூடாது என்பது திருமூலரின் எண்ணம். ஏனென்றால், குருவைத் தேர்ந்துகொள்வதில் விடுகிற பிழை ஒரு பிறப்பையே வீணாக்குகிற பிழை. ஆகவே, சற்குரு யார், அசற்குரு யார் என்று தெளிவாக விளக்கம் சொல்கிறார் திருமூலர்.
உணர்வுஒன்று இலாமூடன், உண்மை ஓராதான்,
கணுஇன்றி வேதஆகம நெறி காணான்,
பணிவுஒன்று இலாதோன், பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே. (திருமந்.2044)
இறைவனே ஒளி
அறிவு இருந்தாலுங்கூட, உணர்வும் ஈடுபாடும் இல்லாதவன், உண்மையை அதன் அகல நீளங்களுடன் அறிந்திராதவன், மூல நூல்களைத் திரும்பத் திரும்ப ஓதித் தலைகீழ் மனப்பாடமாக அறிந்திருந்தாலும், அவை சொல்கிற நெறி என்ன, அவற்றின் மையப் பொருள் என்ன என்பதை ஊடுருவிக் காணத் தெரியாதவன், பணிவு இல்லாதவன், தன் நெறியே பெரிது என்று பேசிப் பிற நெறிகளை ஏசுகிறவன், ஆணவத்தைக் குணமாகக் கொண்டிருப்பவன், இத்தகையவனே பொய்மைக் குருவாகிய அசற்குரு என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர்.
சரி, அப்படியென்றால் உண்மைக் குருவாகிய சற்குரு யார்?
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்,
ஆசற்ற சற்குரு ஆவோன்; அறிவுஅற்றுப்
பூசற்கு இரங்குவோன் போதக் குருஅன்றே (தி.ம.2052)
அறிவைப் பெற வேண்டும் என்கிற விருப்பத்தோடு தன்னை நாடி வருகிற எளியவர்கள் உலகியல் வாழ்வின்மீது கொண்டிருக்கிற பெரும்பற்றை நீக்குகிறவன்; இறைவனை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காமல் தன்னையும் ஆராய்ந்து கொண்டிருப்பவன்; அந்த ஆராய்ச்சி முறைமையைத் தன்னை நாடி வருகிறவர்களுக்கும் மிக்க அன்போடு கற்றுத் தருகிறவன்; அவர்களின் அழுக்குகளை இனி மீண்டும் சேர்ந்துவிடாதவாறு முற்றிலுமாக அகற்று கிறவன்; ஆசு அற்றவன், அதாவது, எதன்மீதும் ஆசை அற்றவன் எவனோ அவனே சற்குரு.
வெளிவேடங் காட்டி, வாய்ப் பேச்சால், வலுத்த குரலால், வாதம்-எதிர்வாதத்தால் தன்னுடைய தரப்பை நிறுவிவிட முடியும் என்று கருதுகிறவன் எவனும் அறிவுள்ள குரு அல்லன் என்று உண்மையான சற்குருவையும் பொய்ம்மையான போலிக் குருவையும் அடையாளம் காட்டுகிறார் திருமூலர். இருக்கட்டும்.
திருமூலர் சொல்கிறார்:
ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானம் உண்டாக்குதல் நலம்ஆகும் நாட்டிற்கே (தி.ம.242)
மெய்யறிவே இல்லாத ஏமாற்றுக்காரர்கள், சடையும் தாடியும் அணியும் ஆடையுமாக வேடமிட்டு, ஞானிகள்போல நடிக்கிறார்கள். அவர்கள் உண்மை யாகவே ஞானிகள்தானா என்று உண்மையான ஞானிகளைவிட்டு அரசாங்கம் பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு சோதித்து, ஒன்று அந்தப் பொய் ஞானிகளுக்கு உண்மை ஞானத்தை உண்டாக்க வேண்டும்; அல்லது அந்தப் பொய் ஞானிகளை நம்புகிற ஏமாளிகளுக்குப் போலிக் குருவின் பொய் வேடம் பற்றிய ஞானத்தை உண்டாக்க வேண்டும். இதைச் செய்தால் நாட்டுக்கு நல்லது என்கிறார் திருமூலர்.
குருநெறி என்றால் என்ன? அதுதான் குரு காட்டும் நெறி ; குருவால் காட்டப்படும் நெறி ; அதுவே குருவழி பெருநெறி ஆகும். நெறி, வழி, மார்க்கம், கதி என்ற அனைத்தும் ஒரே பொருளையேக் குறிக்கிறது.
உலக விசயங்களில் சித்திகளைப் பெறுவதற்காக குரு என்றோ ஆசான் என்றோ புரோகிதன் என்றோ அறிவு, ஒழுக்கம், கடவுள் பத்தி ஆகியவற்றால் தம்மைவிட மேலான ஒருவர் என்றோ ஒருவரை நாம் நாடி நிற்க வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இதை யாரும் மறுப்பதற்கில்லை.
இந்த உலகமே கற்பனை வடிவம்தான். கற்பனையையே உண்மை, சத்தியம் என்று நம்பிக் கொண்டு அதன்வழிச் செல்வதுதான் இன்றைய உலகியல் வாழ்க்கையாகும். என்றாலும் அந்தக் கற்பனை களுக்குரிய போலிகளுக்கு ஊடாகவே உண்மையும், சத்தியமும் விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
நெறி அல்லாத நெறிகளைக் கொண்டுதான் உண்மையான, சத்தியமான நெறி ஒன்று உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவைதான் உண்மையினுடைய ஆதித்தோற்றமாய் அதனை அறிந்து கொள்வதற்கு வாயிலாக அமைகின்றன. அதற்கு வேறு வாயில் இல்லை. எனவே, உலகியலாகிய கற்பனை களுக்கு வணக்கத்தைச் சொல்லி அவற்றைக் கொண்டே உண்மை நெறியைக் கடைப்பிடித்து மேன்மை அடைவதே முறையாகும். மாறாக அக்கற்பனைகளைப் புறக்கணித்துத் துணிவதும் அவற்றையே உண்மை என நம்புவதும் நாம் மேன்மை பெறும் திறன் ஆகாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நெறியல்லா நெறிகளால் சித்தி முத்திகளை வாய்மையாக அடைய முடியாததால், அவற்றை வாய்மையாக அடைவதற்கு ஏற்ற சத்திய நெறி சத்திய நெறியாகிய குருநெறி ஒன்று உண்டு என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அமைகிறது.
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தைஎனக்கு
அறியும் வண்ணம் அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே
(திருவாசகம் – அச்சோப்பதிகம் – பாடல்-2)
சத்திய நெறியின் குருவாக மாணிக்கவாசகர்
என மாணிக்கவாசகர் இந்த உண்மையை அனுபவித்து அருளியிருப்பதைப் பாருங்கள்.
அனைத்துச் சாதியினராலும், அனைத்து மனித உயிர்களாலும் அடையப்பட வேண்டியதும் அனைவருக்கும் உரிமையான பொதுநெறியாகிய சத்திய நெறியும் இக்குருநெறி ஒன்றே ஆகும்.
குரு என்பவர் யார்? அவர் தாம் நம்முடைய குற்சிதங்களை நீக்குபவர் ; குற்சிதமாகிய குற்றங்களை நீக்குபவர் – அதாவது அழுக்குகளை அகற்றுபவர் ; அழுக்காகிய மலத்தை – மலமாகிய பாசத்தை அகற்றுபவர் எனப் பொருள்படும். எனவே, துன்பத்தைத் தருகின்ற கட்டுக்களை – கட்டுகளாகிய பந்தங்களை அறுத்து இன்பம் அடையச் செய்பவரே – வீடு அடையச் செய்பவரே குரு என அழைக்கப்படுவார்.
மனித உயிர்களாகிய நமது உடலுக்குள் இன்பத்தின் வடிவாக இருக்கும் இறைவனே – சத்தாகிய சத்துவமாகிய சிவப்பரம்பொருளே நமது கர்மவினை களுக்கு ஏற்பக் குருவாக நம் முன்னிலையில் தோன்றி நன்னெறி காட்டுகின்றான். சீடன் எந்தப் பக்குவத்தைப் பெற்றிருக்கின்றானோ, அந்தப் பக்குவமே அவனது குருவும் ஆவார். அதாவது சீடனின் கர்மத்துக்கும் பக்குவத்துக்கும் ஏற்ற குருவே இறைவன் சீடன் முன்பு அத்தகு குருவை முன்னிலைப்படுத்தி வைப்பார். இது சத்தியத்திலும் சத்தியமாகும். இதனால்தான் குருவுக்குத் தக்க சீடன் ; சீடனுக்குத் தக்க குரு என்ற வழக்குமொழி ஏற்பட்டது. “குருவும் மாணாக்கன் தானும் குறைவறச் சமத்தை மேவி இருவரும் நிலைமை ஒப்போர்” என ஞானவாசிட்டம் பகீதரன் கதையில் பாடல் எண்.28ல் கூறியிருப்பதை இங்கு ஒப்புநோக்கிப் பார்த்தால் குரு-சீடன் உறவு புலப்படும்.
குரு, ஆசான், புரோஹிதன் என்பவை ஒருபொருள் சொற்களேயாகும். ஆசான் என்றால் சன்மார்க்கம் போதிப்பவன் – நல்வழிகளை காட்டுபவன் – மெய்ந்நெறிகளை காட்டுபவன் எனப் பொருள்படும். புரோஹிதன் என்றால், புரம் என்றால் இடம், பட்டினம், சரீரம் எனப் பொருள்படும். “பண்டன்று பட்டினங் காப்பே” என்னும் திருவாய்மொழியில் சரீரம் பட்டினம் எனக் காட்டப்பட்டுள்ளது.
சீவர்களாகிய நமக்கு இடமாய் உள்ளது – பதியாய் உள்ளது இச்சரீரம்தான். புரத்துக்கு புரமாகிய சரீரத்துக்கு மும்மல காரிய முப்புரம் என்னும் உடலுக்கு – உடலுயிர்க்கு இன்பத்தைச் செய்பவன் – இதம் செய்யக்கூடியவன் புரோஹிதன் ஆகும். “உற்ற ஆக்கையின் உறுபொருள்” என்று திருவாசகம் கூறுவது ஆக்கையாகிய புரத்துள் தோன்றாத் துணையாய் வேதவித்தாய் இன்பவடிவாய் இருப்பவனும், நல்ல தவப் பயனால் வடிவுகொண்டு முன்னிலையில் தோன்றி நமக்கு இதமான உபதேசத்தை செய்பவனும் புரோஹிதன் அல்லவா?
வேதம், ஆகமம், புராணம் முதலிய அரிய பெரிய ஞான நூல்கள் எல்லாம் மனிதன் பிறவி வலைப்பட்டு பிணி, மூப்பு, சாக்காடுகள் நீங்கி நித்தியத்துவம் அடைதற்கு எற்ற சத்திய நெறியாகிய குருநெறி ஒன்று உண்டு எனவும், அந்நெறி காட்டும் குரவனாவான் கயிலை முதற்குரவனும் சைவசமய அரசனும் ஞானசித்தி வடிவினுமாகிய நந்தி எம்பெருமானே எனவும் வற்புறுத்திக் கூறியிருக்கின்றன.
திருமந்திரம் சொல்கிறது
சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்யவகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே (தி.ம.1542)
அரனெறி யாவ தறிந்தேனும் நானுஞ்
சிரநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே. (தி.ம.1538)
அரனாரால் அருளிச் செய்யப்பட்ட நெறிகளை அறிந்த நானும், தலைமையாகிய நன்னெறியினை நாடியலைந்த நாளிலும் மிகவும் வன்மையாகிய காமம், வெகுளி, மயக்கம் போன்ற குற்றக்கடலுள் மனம் அழுந்தி நின்ற அக்காலத்து, அக்கடலினைக் கடந்து கரையேறுவதற்கு வேண்டிய முறைமையான சிறந்த நெறியினைத் தந்தருளிய நாளிலும் என்னைவிட்டு நீங்காது உடனாக நின்றருளியவள் திருவருளம்மையே.
நன்னெறி உணராது வேறு நெறிகளில் அலைந்து திரிந்த காலத்திலும் கூடவே இருந்து மலபரிபாகம் வருவித்துச் சன்மார்க்கத்தில் கூட்டியதும் சிவசத்தியாகிய குருநெறி ஆகும் என்று கூறுவது இம் மந்திரம்.
துன்பம் நீங்கி இன்பம் அடைவதே சீவர்களின் நோக்கம். பிணி, மூப்பு, சாக்காடுகளுக்கே சீவர்கள் பயப்படுகிறார்கள். அச்சமே பயம், ஐயம் – சிலேத்துமம். இதில் வரும் ஐயம் என்றால் என்ன? அது அசுத்த ஐம்பூத காரியம் ; அசுத்த பௌதிக நிறையின் காரியமாகும். சரீரத்தில் உள்ள அசுத்த நிறையே பிணி, மூப்பு, சாக்காடுகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன ; துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றன. இதுதான் காலன் – எமன். எனவே, எந்த வகையிலாவது பிணி, மூப்பு, சாக்காடுகள் நீங்கிச் சுகத்தை அடைவதே – ஐயம் ஆகிய பயம் நீங்கி இன்பம் அடைவதே மனிதர்களின் முயற்சிகளுக்கு அடிப்படை என்று கூறப்படும். ஐயம் ஒழியவே துன்பங்கள் யாவும் ஒழிந்து போகும் – பிறவிப் பிணியும் ஒழிந்து போகும்.
கறங்கோலை போல்வதோர்
காயப்பிறப்போடு இறப்பென்னும்
அறம்பாவம் என்றுஇரண்டு அச்சம்
தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான் (திருவாசகம் – திருத்தெள்ளேணம், பாடல்-8)
மனம் அறவே மாணிக்கவாசகர்
இப்பிறவிப் பிணியாகிய ஐயத்தை – அச்சத்தை ஒழிக்கும் மருந்துதான் என்ன? என்றால் கடவுள் திருவடியே மருந்து, மருந்தாகிய அமுதம் என்று கூறப்படும்.
இதைத்தான் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்து ஏழாம் குறளில்,
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
என்றார்.
எந்தவொரு வகையாலும் தனக்கு இணையில்லாத இறைவன் திருவடிகளை அடையப் பெற்றவர்களுக்கே அன்றி, மற்றவர்களுக்கு மனத்தில் உண்டாகும் துன்பங்களை மாற்றுவது இயலாத காரியம் என்பது இதன் பொருளாகும்.
திருவடி என்பது மனிதர்களாகிய நமது தேகத்திற்குள் மறையாய் – மறைபொருளாய் – பழம்பொருளாய், சிவப்பொருளாய் இருக்கும் அமல ஐகாரமே ஆகும். உடல், உயிரை அமலமாக்கி மனத்துன்பம், உடற்துன்பம் என்பவகைகளை ஒழித்து நித்தியத்துவம் அளிப்பது இதுதான். மாற்றல் என்பது துன்பமே. துன்பம் தரும் மாயையே – பாசமே இன்பமாய் ஞானமாய் மாற்றமடைந்து பயன்படும் என்னும் வேத உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகும் உபாயமே அன்றி அழுக்கற்று
மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவது எல்லாம் அருட்பாசம் ஆகுமே (தி.ம.2422)
இத்திருவடிகளைக் காட்டும் வாய்மையான குரவன் யார் என்றால், அவன்தான் பரம கருணாநிதியாக, நம்மிடத்திலும் நமக்கு இனியனாகச் சீவர்களாகிய நமது சடபேதம், கர்ம பேதங்களையும் அவற்றால் ஆன பக்குவ பேதங்களையும் பூரணமாய் அறிந்து, நல்லனவும் தீயனவும் ஆகிய அக்கர்மங்களின் ஏற்றத் தாழ்ச்சிகளை ஏற்ற ஏற்ற உபாயங்களால் நீக்கி அவற்றைச் சமப்படுத்தி மலபரிபாகம் வருவித்துப் பிணி, மூப்பு, சாக்காடும், பிறவியும் ஒழித்து நம்மைப் பூரணப்படுத்த வல்ல பவரோக வைத்தியனும எல்லாம்வல்ல சித்தனுமாகிய கயிலை முதற்குரவனே ஆவான்.
இக்குருநாதனை அடைவது எப்படி? தடை யில்லா ஞானம் உடையவனும் சாதகர்களை, அன்பர்களை வலிய ஆட்கொள்ளும் வள்ளலும் ஆகிய குருநாதன் பக்குவம் உடைய ஆன்மாக்களை அறியாமல் இருக்க முடியுமா? பூ மலர்ந்தால் வண்டினங்களை ஒருவர் அழைக்கத்தான் வேண்டுமா? அம்மலர்களில் இருக்கும் தேனைத் தேடி தேனீக்கள் படையெடுக்கும் இல்லையா. அதுபோலத்தான் பக்குவம் அடைந்த ஆன்மாக்களைத் தேடி குருமார்களும் படையெடுத்து வந்து ஆட்கொண்டு, ஞானத்தை அருளுவார்கள். இயற்கை முறையாகிய திருவருள் மாண்பும், நெறியும் இதுதான்.
பக்குவம் பெற்ற மாணவர்களுக்கு அப்படி என்னத்தான் குருநாதன் உபதேசிப்பார்?
இதற்கு ஆதார, சாட்சி, ஆவணமாக நாம் சுத்தசாதகம் என்ற ஞானநூலில் வரும் செய்யுள் எண்கள்.70, 71, 76, 78, 80, 82 மற்றும் 90 ஆம் செய்யுட்களை நோக்க வேண்டுகிறேன். சிவாயநம என்றோ, நாராயணாய நம என்றோ இவ்வார்த்தைகளை வாயால் குரு உபதேசிப்பதில்லை. மாறாக இவ்வார்த்தைகளின் உண்மை மெய்ப்பொருளையும் அதை அடைவதற்கான சாதக யோகங்களையுமே குரு உபதேசிப்பார். குரு அருளால் உபதேசிக்கப்பட்ட சாதக, யோகங்களால் இப்பொருளைத் தாம் அடைந்த உண்மைகளையே “சிவாயநம”, “நாராயணாய நம” என்னும் கௌண பதங்களால் தத்துவப் பெரியார் தமது பாடல்களில் மறைபொருளாகக் கூறி அருளி இருக்கிறார்கள்.
குருநெறியின் பயன் யாது?
மலமாக்குரம்பை இது மாய்க்கலாம் (திருவாசகம்-திருச்சதகம், பா.54)
ஊனார் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருக்க வேண்டியதில்லை (மேற்படி பா.55)
உடையார் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருக்க வேண்டியதில்லை (பா.56)
இவ் அசுத்த உடலைக் களையலாம் (மேற்படி, பா.64)
இப்புழுக்கூடு நீக்கிப் பொய் எலாம் வீட்டிலாம் (மேற்படி, பா.100)
இவ்வுடல் தன்னைச் செற்றிடலாம் (செத்திலாப்பத்து, பா.2)
காய மாயத்தைக் கழிக்கலாம் (மேற்படி, பா.5)
வினைகளின் நிறைபேதத்தால் ஒப்புவாராது சமம்பெறாது ஊசலாட்டும் இருவினை சொரூபமாகிய உடலுளிர் கெட்டுத் திரியும் – சமப்படும் – நிறைபெறும் – ஒளிமயமாகும்.
படிற்றுஆக்கையை விட்டு எம்பெருமானைப் பூணலாம் (திருச்சதகம்-44)
அப்பர் தேவாரம்
“சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடி
கொள்நோய் வடிவுஒன்றில்லா ஊத்தையைக் கழிக்கலாம்”
“அசுத்தமான இவ்வுடம்பைத் தொலைக்கலாம்”
“ஊனைக் கழித்து உய்தி அடையலாம்”
“அசுத்த தனுவாகிய அக்காணி கழித்திடலாம்”
அழிவைத் தரும் ஆக்கை ஆகிய பிராரத்த உடம்பு – வினைப்போக தேகம் ஒழிந்து போகும். ஆசைப்பட்ட அளிதரும் ஆக்கையாகிய அள் ஊறு ஆக்கை அமையும் ; ஆலம் அமுதமாகும் ; அருளொடு பர அமுதமாகும். (திருவண்டப்பகுதி)
எம்பெருமான் குடிபுகுமாதலால் வினைபடும் உடல் விழுமிய விமானம் ஆகும்.
கருவூரார்
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்து உயிரளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்த வேதகத்தேன்
மனநெக மகிழ்ந்த பேரொளியே
முனைபடும் அதின்மூன்று எரித்த நாயகனே
முகத்தலை அகத்து அமர்ந்துஅடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்து நின்றமையால்
விழுமிய விமானம் ஆயினதே (திருவிசைப்பா, திருமுகத்தலை, பா.6)
சவமணம் கமழும் புலால் துருத்தியாகிய அசுத்த உடலம் பூமணம் போலும் சிவமணம் கமழும் பூந்துருத்தியாகும்.
உடம்பு மாற்றுவது சத்திய நெறியான குருநெறி
திருவாசகம்
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென்று இவைஇரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ (திருக்கோத்தும்பீ, பா.9)
ஔவை ஞானக்குறள்
நாபி அகத்தே நலனுற நோக்கிடில்
சாவதும் இல்லை உடம்பு (கண்ணாடி, கு.3)
நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளிகாணில்
முற்றும் அழியாது உடம்பு (கண், கு.8)
அஞ்சும் அடக்கி அறிவோடு இருந்தபின்
துஞ்சுவது இல்லை உடம்பு (சூனி.அறிதல், கு.6)
தீயாக உள்ளே தெளிவுற நோக்கினால்
மாயாது பின்னை உடம்பு (சூனி.அறி., கு.7)
ஒழிவின்றி நின்ற பொருளை உணரில்
அழிவின்றி நிற்கும் உடம்பு (சூ.அ., கு.9)
பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்றும் அழியாது உடம்பு (சூ.அ., கு.10)
இவ்வாறு ஊன் உடம்பை மாற்றி நித்தியத்துவம் அடைதலே சத்திய நெறியாகிய குருநெறியின் பயன் என நன்றாக வலியுறுத்தும் பிரமாணங்கள் வேத நூல்களிலும் பிற ஞான நூல்களிலும் எண்ணற்று காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் அங்கு சென்று படித்து இன்புற்று மகிழலாம்.
மேலே கூறியவாறு, “மலமாக்குரம்பை இது மாய்க்க மாட்டேன்” என்பது முதலாக வரும் பிரமாணங்களால் மெய்யடியார் சாதக யோதகங்களை வழுவாது கடைப்பிடித்து, இவ்அசுத்த உடம்பை எம்பெருமான் குடிபுகுவதற்கு ஏற்ற அமல தேகமாக மாற்றுதலாகிய செயற்கரும் செயலுக்குத் திருவருள் சகாயத்தை வேண்டி நின்றும், அக்காலங்களில் அவர் அடைந்த அளவிலாதத் துன்பங்களும், பின்பு அவர் அமல உடம்பைப் பெற்று நித்தியத்துவம் அடைந்த தன்மையும் நன்கு புலப்படும். வாய்மையான குருநெறியின் பயன் இதுவே என அறிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை கூறியவற்றிலிருந்து வாய்மையான குருநெறி இதுதான் என்பதும், அந்நெறி காட்டும் குரவனாவான் சைவ பரிபாலகனாகிய எம்பெருமானே என்பதும் காயமாயம் கழிந்து நித்தியத்துவம் அடைதலே அந்நெறியின் பயன் என்பதும் இப்போது நாம் நன்றாக உணர்ந்துவிட்டோம் அல்லவா.
மாயாமலமாகிய இத்தேகம் நித்தியத்துவத்தை அடைய வேண்டுமென்றால், அவர் நித்தமும் பிரமஞானத் தவத்தைச் செய்து வந்தே ஆகவேண்டும். காரணம், இத்தவத்தால் மட்டும்தான் மும்மலங்கள் அற்றுப்போய் ஒழிந்து போகும். மும்மலங்கள் அற்ற தேகமே அமல தேகமாகும். அமல தேகத்தையும் அதற்கான வழிமுறைப்பாடுகளையும் ஞான நெறிகளை யும் யார் வழங்கி, பிரமஞானத்தை அடைவிக்கிறார் களோ அவரே உண்மையான – சத்தியமான குரு ஆவார். அக்குரு காட்டும் பிரமஞானத் தவமே அக்குருநெறியை அடையும் உபாயமும் தந்திரமும் மெய்ந்நெறியும் மெய்வழிச் சாலையும் ஆகும் என்று சொல்லி, வள்ளற்பெருமானைப் போல இறைவனிடம் உங்களுக்கு வேண்டியதை பின்வருமாறு கேட்டுப் பெற்று அனைவரும் பிரமஞானத்தோடு திகழ வேண்டும் என்று ஆசிர்வதித்து, இனிதே இந்த ஞானவுரையை முடித்து அமைகின்றோம்.
இந்த குருகுலக் கல்வியில் ஒவ்வொரு நிலைகளாக மாணவர்களுக்கு ஞானங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. கீழ்வரும் பாடங்கள் அனைத்தும் முதல்நிலையில் கற்றுக் கொடுக்கப்பட்டவைகளாகும். அவைகள் :
பாடம் – 1 : எது குரு நெறி? அதை அடையும் தந்திரம் என்ன?
பாடம் – 2 : நான் யார்?
பாடம் – 3 : சரீரத்தில் உள்ள 96 தத்துவங்கள்
பாடம் – 4 : பத்து வாயுக்களின் செயல்பாடுகள்
பாடம் – 5 : தமிழில் 96 தத்துவங்கள்
பாடம் – 6 : உங்களுக்குள்ளே இறைவனை முதலில் தேடிக் கண்டடைவது எப்படி?
பாடம் – 7 : தனக்குள்ளே இருக்கும் சத்தியத்தை காண்பது எவ்வாறு?
பாடம் – 8 : நல்லொழுக்கம் என்பது யாது?
பாடம் – 9 : உடம்பின் பயன்கள் என்னென்ன?
பாடம் – 10 : ஔவை ஞானக்குறளில் உடம்பின் பயன்
பாடம் – 11 : நாதப் பிரமத்தின் இரகசியமாய் ஒரு இரகசியம்
பாடம் – 12 : வள்ளலார் ஒளிதேகம் அடைந்த மெய்வழிப் பாதையின் இரகசியம்
பாடம் – 13 : திருக்கதவந் திறத்தல் – திருவருட்பா (பிரமஞான விளக்கம்)
பாடம் – 14 : புணர்ச்சிப் பத்து – திருவாசகம் (பிரமஞான விளக்கம்)
பாடம் – 15 : இறை இன்பக் குழைவு – திருவருட்பா (பிரமஞான விளக்கம்)
பாடம் – 16 : கண் புருவப் பூட்டின் இரகசியங்கள்
மேற்கண்ட அநேக தலைப்புகளில் பிரமஞானங்களைப் பற்றியும் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பிரமஞானத் தவங்களைப் பற்றியும் அவைகளை எவ்வாறு செய்து பிரமஞானத்தை அடைவது என்பதைப் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!