தொலைதூரத்தில் இருக்கும் ஆழ்மனத்தின் அதிசய சக்தி
நீங்கள் உங்கள் ஆழ்மனத்திற்குள்ளே எந்தெந்த விதைகளை விதைக்கின்றீர்களோ, அவைகளை மட்டும்தான் பலமடங்கு அறுவடை செய்வீர்கள். அந்த விதைகள்தான் உங்கள் உடலிலும் சுற்றுச்சூழல்களிலும் உருமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
நீங்கள் புறச்சூழல்களை மாற்ற வேண்டுமென்றால், முதலில் நீங்கள் அதற்கான உண்மையான காரணத்தை மாற்றியாக வேண்டும்.
ஆழ்மனம் எப்போதுமே நமக்கு வேலையாளைப் போன்றேதான் பணி செய்து கொண்டிருக்கும். நம் வெளிமனமாகிய புறமனத்தின் கட்டளை ஏற்றுக்கொண்டு பணிசெய்யும் உண்மையான ஊழியன் நம் ஆழ்மனம்.
உங்கள் ஆழ்மனம் 24 மணி நேரமும் வேலை செய்து, உங்களின் விதைகளுக்கான, கேள்விகளுக்கான, சுயக்கட்டளைகளுக்கான பலன்களை கொண்டு வந்து உங்களிடம் சேர்ப்பிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்துத் தரும். உங்களது விருப்பத்திற்கான பலன்களை உங்கள் மடியில் கொண்டு வந்து கொட்டும்.
புதையல், பொக்கிஷமெல்லாம் நமக்குள்தாள் இருக்கிறது. நமது இதயத்தின் ஆழ்விருப்பத்திற்கான விடைகளை அந்த புதையலுக்குள் தேட வேண்டும்.
இதுவரை இவ்வுலகில் வாழ்ந்த மாபெரும் மனிதர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள் என எல்லோருமே அவர்களிடம் இருந்த ஆழ்மனதின் தொடர்பு கொண்டே அவற்றிற்கான இரகசியங்களை விடுவித்து, அவர்களது திறமைகளை பன்மடங்குப் பெருக்கிக் கொண்டு சாதித்துச் சென்றுள்ளார்கள். இது காலம் சொல்லும் விடை. உண்மை மட்டுமே இங்குள்ளது.
நமக்கு ஒரு பிரச்சினை வந்துவிட்டால், நாம் உடனே என்ன செய்கிறோம் தெரியுமா? அப்பிரச்சினைக்கானத் தீர்வினைத் தேடிக்கொண்டு உலகை நோக்கி ஓட ஆரம்பிக்கிறோம். ஆனால், இங்கே நாம் ஒரு இரகசியத்தைப் புரிந்து கொண்டாக வேண்டும். நமது அத்தனைப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள், விடைகள் நம் ஆழ்மனதிற்குள்தான் புதைந்துபோய் கிடக்கின்றன. அதனால் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், நம் ஆழ்மனதோடு நேரடித் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். பிறகு நமது பிரச்சினைகளுக்கான தீர்வும் விடைகளும் தானே முடிச்சவிழ்ந்து வெளியாகிவிடும். நம்மால் அப்படி செய்துவிட முடியும்.
நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் விடைகளும் நம் ஆழ்மனதில்தான் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம், அல்லவா. அதனால் தினமும் நீங்கள் தூங்கப் போவதற்கு முன்பாக, உங்கள் ஆழ்மனதிடம் இவ்வாறு ஒரு கட்டளைச் சொற்களை பிறப்பித்துவிட்டு தூங்கப் போய்விடுங்கள் :
“ஆழ்மனமே, நான் நாளை காலை 6 மணிக்கு எழுந்துவிட வேண்டும். என்னை நீதான் எச்சரித்து எழுப்பிவிடல் வேண்டும்” என்று சொல்லிவிட்டு படுத்துத் தூங்கிவிடுங்கள். சரியாக காலை 6 மணிக்கு உங்கள் ஆழ்மனம் உங்களை எழுப்பிவிடும் ஆச்சரியத்தைப் பார்ப்பீர்கள்.
உங்கள் ஆழ்மனம்தான் உங்கள் உடலை உருவாக்கி, உணர்வுகளாக சக்திகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆழ்மனம் நினைத்தால் உங்கள் நோயைக் குணப்படுத்திவிட முடியும். அதற்கான பரிபூரண ஆற்றல் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு நாள் இரவும் நாம் பரிபூரண ஆரோக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு தூங்கப் போகப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களின் நம்பிக்கைக்குரிய வேலையாளான ஆழ்மனம் உங்களின் ஆரோக்கியத்திற்கான வேலைகளை கனகச்சிதமாக வேலைசெய்து உங்களுக்கு கட்டுப்பட்டு, உங்களை பரிபூரண ஆரோக்கியத்தில் வைத்துக் கொள்ளும்.
நாம் எண்ணும் ஒவ்வோர் எண்ணமும் ஒரு காரணமே, அது ஒவ்வொரு சூழ்நிலைகளின் விளைவுகள்தான் அது என்பதை நாம் இங்கே புரிந்து கொண்டாக வேண்டும்.
நீங்கள் இந்தச் சமுதாய மக்களுக்காக ஒரு சிறந்த புத்தகத்தை எழுத விரும்பினாலோ, நல்ல ஒரு சொற்பொழிவை ஆற்ற விரும்பினாலோ, நல்ல ஒரு திரைப்படத்தை கொடுக்க விரும்பினாலோ, அந்தக் கருத்தினை உங்கள் ஆழ்மனதிடம் மிக நெருக்கமாக இணக்கமாக அன்போடும் நெகிழ்ச்சியோடும் உணர்வுபூர்வமாகத் தெரிவித்துவிட வேண்டும். உங்கள் ஆழ்மனம் உணர்வுகளால் அன்பினால் நிறைந்த ஒரு ஊடகம். அதனால் ஆழ்மனம் உங்களின் கருத்திற்கு தக்கபடி உங்களுக்கு செயல்விடைகளை அளிக்க செயலில் இறங்கிவிடும்.
உங்களின் அனைத்து அனுபவங்களையும் கட்டுப்படுத்தி வகைப்படுத்தும் உங்கள் ஆழ்மனத்திற்கு, உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் மனக்காட்சிகளின் மூலம் சரியான கட்டளைகளாக கொடுக்க வேண்டும். மனக்காட்சிகளோடு வருகின்ற கட்டளைகளுக்குத் தான் உங்கள் ஆழ்மனம் எப்போதுமே செயல்விடைகளைத் தரும். அந்த மனக்காட்சிகள் உணர்ச்சிகளோடுதான் உங்கள் ஆழ்மனதை அடைந்தாக வேண்டும்.
உங்கள் ஆழ்மனத்தின் இந்த மகத்தான சக்திகளின் மூலமாக உங்களால் அனைத்தையுமே சாதித்துவிட முடியும்.
நீங்கள் வாழ்க்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கைகள்தான் உங்கள் வாழ்வின் விதிகளாகின்றன. ஒரு நம்பிக்கை என்பது உங்கள் மனதிற்குள்ளாகத் தோன்றக்கூடிய ஓர் எண்ணம்தான். உங்களைப் பாதிக்கின்ற அல்லது காயப்படுத்துகின்றவற்றின்மீது எப்போதுமே நம்பிக்கை வைக்காதீர்கள். உங்கள் ஆழ்மனத்தின் சக்தி உங்கள் காயங்களைக் குணப்படுத்த வல்லது ; உத்வேகமூட்ட வல்லது ; பலப்படுத்த வல்லது ; வளமாக்க வல்லது என்பதை என்றைக்குமே மறவாதீர்கள்.
உங்கள் எண்ணங்களை மாற்றினால் போதும், உங்கள் தலைவிதி தானே மாறிவிடும். மதியால் விதியை வெல்லலாம் என்பது இதுதான்.
உங்கள் மனம் எப்படி செயல்படுகிறது?
உங்கள் ஆழ்மனம் உங்கள் எண்ணங்களின் இயல்பிற்கு ஏற்றபடிதான் உங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கித் தருகிறது. எப்போதுமே உங்கள் உணர்ச்சிகளின் வாழ்விடமாகத்தான் காணப்படுகிறது. இதுதான் படைப்புத் திறன்களை தன்னகத்தே கொண்ட உங்கள் மனம் இயங்கும் தளம்.
உங்கள் ஆழ்மனம் உங்களின் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டுவிட்டால், அதை செயல்படுத்த உடனே காரியத்தில் இறங்கிவிடும்.
ஒரு விசயத்தை உங்கள் மனம் ஏற்றுக் கொண்டபின், அதை உண்மைதான் என்று எப்போது உங்கள் மனம் உணர்கிறதோ, அப்போது உங்கள் ஆழ்மனம் அக்கருத்தை ஏற்றுக் கொண்டு அதை உங்கள் வாழ்வில் உண்மைப்படுத்திட அத்தனை முயற்சிகளையும் ஆழ்மனம் எடுக்க ஆரம்பிக்கும். அதனால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் கருத்தை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிடுவதுதான். அப்படி நிகழ்ந்துவிட்டால், உங்கள் ஆழ்மனம் நீங்கள் விரும்பக்கூடிய ஆரோக்கியம், அமைதி, செல்வச் செழிப்பு, ஆன்மீக முன்னேற்றங்கள், வாழ்க்கை முன்னேற்ற விசயங்கள் ஆகிய அனைத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடம்.
நீங்கள் முதலில் உங்கள் ஆழ்மனத்திற்கு கட்டளையிடக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஆழ்மனம் அதன்மீது ஆழமாகவும் உணர்ச்சிகளாகவும் பதிவு செய்யப்படும் கருத்துக்களை அப்படியே உங்கள் வாழ்வில் நிகழ்த்தித் தந்துவிடும். உங்கள் மனதின் விதியே இதுதான். நீங்கள் உங்கள் வெளிமனத்தில் எந்த எண்ணத்தை, எந்த யோசனையை, எந்தக் கருத்தை நிலைப்படுத்தி வைத்திருக்கிறீர்களோ, அந்த எண்ணம் அல்லது யோசனையின் இயல்பிற்கு ஏற்றபடியே உங்கள் ஆழ்மனம் எதிர்வினையாற்றும் மற்றும் செயல்விடைகளைத் தரவும் செய்யும்.
உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை, யோசனைகளை உங்கள் ஆழ்மனத்திற்கு அனுப்பும்போது, அவைகள் உங்கள் மூளையில் இருக்கும் உயிரணுக்களில் பதிவு செய்யப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உங்கள் ஆழ்மனம் அதன்மீது பதிவு செய்யப்படும் கருத்துக்களை நீங்கள் நம்பும் அளவுக்கே ஏற்றுக்கொள்ளும். அதற்கு உங்கள் வெளிமனத்தைப் போன்று பகுத்தறிந்து பார்க்கவோ, வெளிமனதோடு விவாதித்து முரண்பட்டுக் கொள்ளவோ தெரியாது. உங்கள் ஆழ்மனதில் விதைக்கப்படும் விதைகள் நல்ல விதைகளா? இல்லை விஷ விதைகளா? என்றெல்லாம் இனம்பிரித்துப் பகுத்தறிய தெரியாது.
உங்கள் ஆழ்மனம் எப்போதுமே ஒரு செழிப்பான, வளமையான நிலத்தைப் போன்றே இருக்கிறது. உங்கள் எண்ணங்கள்தான் அந்த நிலத்தில் விதைக்கப்படும் விதைகள். விதைத்தது பயிராகத்தான் செய்யும். விளைச்சல் காணும்போது அவை நல்ல விதைகளா? விஷ விதைகளா? என்பது தெரிந்துவிடும். அதனால் நாம் எப்போதுமே நல்ல விதைகளையே நம் ஆழ்மன நிலத்தில் விதைக்க வேண்டும்.
நீங்கள் விதைக்கும் விதைகளை அது நல்லவையா? கெட்டவையா? பொய்யானவையா? என்றெல்லாம் ஒருபோதும் ஆழ்மனம் ஆய்வில் ஈடுபடுவதில்லை. அது வெறுமனே உங்கள் எண்ணங்களின் இயல்பிற்கு தக்கபடியே செயல்விடைகளை அளித்துக் கொண்டிருக்கும். அவ்வளவுதான்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பொய்யான கருத்தை, செயலை உண்மை என்று வெளிமனதில் ஏற்றுக் கொண்டு, அதை ஆழ்மனதிடம் பதிவு செய்தீர்களென்றால், உங்கள் ஆழ்மனம் அதை உண்மை என்றே ஏற்றுக்கொண்டு, அதற்கான செயல்விடைகளை உங்கள் வாழ்வில் உருவாக்கித் தருவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.
வெளிமனத்திலிருந்து பெறப்படும் கருத்துக்களுக்கு இசைவாகச் செயல்படுவது மட்டுமே உங்கள் ஆழ்மனத்தின் வேலை. அது தனக்குக் கொடுக்கப்படுவதை வெறுமனே உள்வாங்கிக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும். ஆழ்மனம் எப்போது நமது பழக்கங்களின் வாழ்விடம் என்பதை நாம் எப்போதுமே மறந்துவிடலாகாது.
நாம் எதை விரும்புகின்றோமோ அதை நம் வாழ்வில் பெறுவதேயில்லை. ஆனால், நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையேதான் பெற்றுக் கொள்கிறோம். அதனால்தான் உயர்ந்த செயற்திறன்களைக் கொண்ட மக்கள் எப்போதுமே உயர்ந்த எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு, அவற்றை அவர்கள் மனங்களில் நிலைப்படுத்தி வாழ ஆரம்பித்து வெற்றியும் அடைந்தார்கள். அவர்கள் எப்போதுமே தங்கள் இலக்குகளை முன்னரே அடைந்து விட்டதைப் போல அவர்கள் மனங்களில் காட்சிப்படுத்திட எப்போதுமே தவறியதேயில்லை.
நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் ; எதை உணர வேண்டும் என்றும் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதையேதான் நீங்கள் பார்க்கவும் உணரவும் செய்வீர்கள். நீங்கள் பார்க்கின்ற இவ்வுலகம் உங்களுடைய எதிர்பார்ப்புகளின் ஒரு காட்சிதான். இவ்வுலகம் என்பது தனிநபர்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளின் ஒரு ஒட்டுமொத்த வெளிப்பாடே.
நீங்கள் உங்களுடைய செயற்திறனை மேம்படுத்திக் கொள்ளவோ அல்லது உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு பகுதியில் உங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவோ விரும்பினால், அதற்கு நீங்கள் முதலில் அவைகளை முன்னரே சாதித்துவிட்டோம் என்ற ஒரு மனக்காட்சியை உங்கள் மனதில் உருவாக்கிக் கொண்டு வந்து, அதை முழுமையாக நம்பிக்கையோடும் உணர்ச்சியோடும் காண வேண்டும்.
அதனால் ஒரு தரக்குறைவான எதிர்பார்ப்புகள் உங்களை முன்னேறவிடாமல் அழுத்திப் பிடித்து, உங்கள் புதிய இலக்குகளை அடைவதற்கான உங்கள் முயற்சிகளைச் சீரழிப்பதற்கு ஒருபோதும் அனுமதித்து விடவேண்டாம்.
மற்றவர்களால் உங்களை நோக்கி ஏவப்படும் எதிர்மறையான தூண்டுதல்களைக் கவனியுங்கள். இந்த அழிவுபூர்வமான புறத்தூண்டுதல்கள் உங்கள்மீது தாக்கம் ஏற்படுத்துவதற்கு நீங்கள் ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.
மற்றவர்கள் என்னதான் உங்களைத் தூண்டிக் கொண்டிருந்தாலும், அந்த தூண்டுதல் கொடுக்கும் செயல்களுக்கு நீங்கள் உங்கள் எண்ணங்கள்மூலம் சக்திகளைக் கொடுக்க வேண்டாம். அந்த தூண்டுதல் சக்திகள் உங்களை ஒன்றும் செய்யாது ; ஆனால், அந்த தூண்டுதல் கொடுக்கும் செயல்களுக்கு உங்கள் எண்ணங்களை வார்த்தீர்களென்றால், அத்தூண்டுதல்கள் உங்களைப் பாதிப்படைய வைக்கத்தான் செய்யும். நீங்கள் அந்த செயல்களுக்கு மன ஒப்புதலைக் கொடுக்கும்போதும், பலவாறு சிந்தித்து ஊக்குவிப்பதன்மூலம் பிறருடைய எண்ணங்களை உங்களுடைய எண்ணங்களாக ஆக்கிக் கொள்வீர்கள். பிறகு நீங்களே அவற்றைச் சிந்திக்கத் தொடங்கிவிடுவீர்கள்.
உங்கள் வாழ்க்கைக்கான ஆக்கப்பூர்வ தேர்ந்தெடுக்கும் திறன் உங்களிடம் நிரம்ப உள்ளன. உங்களுக்கான அழகான அற்புதமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள் ! அன்பைத் தேர்ந்தெடுங்கள் ! ஆரோக்கியத்தைத் தேர்ந்தெடுங்கள் ! செல்வச் செழிப்பைத் தேர்ந்தெடுங்கள் !
நீங்கள் ஒரு பிரச்சினைக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது, உங்கள் ஆழ்மனம் அதற்குச் செயல்விடை அளிக்க ஆரம்பிக்கும். ஆனால், உங்கள் வெளிமனத்தில் நீங்கள் ஓர் உறுதியான தீர்மானத்திற்கு வந்துவிட வேண்டும் என்று உங்கள் ஆழ்மனம் எதிர்பார்க்கும். உங்கள் பிரச்சினைக்கான பதில் உங்கள் ஆழ்மனத்தில்தான் உள்ளது என்பதை முதலில் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால், இதை விட்டுவிட்டு, “இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வருவதற்கு எனக்கு எந்த வழியுமே இருப்பதாகத் தெரியவில்லையே, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலல்லவா இருக்கிறது. ஒரே குழப்பமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறது. எனக்கு ஏன் இதுவரை இதற்கான பதிலே கிடைக்கவில்லை?” என்று நீங்கள் புலம்பிக் கொண்டிருந்தால், நீங்கள் உங்கள் விருப்பத்தைத் தகர்த்து எறிந்து விட்டீர்கள் என்றுதான் பொருள்.
முதலில் இப்படி போய்க் கொண்டிருக்கும் உங்கள் மனதின் தறிகெட்ட எண்ணங்களை, எண்ணவோட்டங்களை இழுத்துப் பிடித்து அதனை சமாதானப்படுத்தி அமைதியாக்குங்கள். உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கவலைகளை இப்போதே விட்டொழித்து விடுங்கள். அமைதியாக பின்வரும் சுயபிரகடனத்தைக் கூறுங்கள் :
“என் ஆழ்மனத்திற்கு எனது அனைத்துப் பிரச்சினைகளுக்கான விடை தெரியும். அது இப்போது எனக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. நான் அதற்கு நன்று கூறிக் கொள்கிறேன். என் ஆழ்மனதின் முடிவில்லாப் பேரறிவு எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கிறது. எனக்கான மிகச் சிறந்த விடையை அது எனக்கு இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.”
எப்போதுமே நல்லதையே சிந்தித்துக் கொண்டிருங்கள், அதனால் நல்லவைகளே உங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். தீயவற்றை நினைத்தால், என்றும் தீயவைகளே நம்மைப் பின்தொடரும். ஒரு நாள் முழுக்க நாம் எந்த எண்ணங்களால் ஆளப்படுகிறோமோ, அதுவாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள்.
எப்போதுமே உங்கள் ஆழ்மனம் உங்களோடு விவாதத்தில் ஈடுபடாது. உங்கள் வெளிமனத்தின் கட்டளைகளை அது அப்படியே ஏற்றுக்கொண்டுவிடும். உண்மையிலேயே உங்களுக்கு ஒரு பொருள் கட்டுப்படியாகாது என்றாலும்கூட, “எனக்கு அது கட்டுப்படியாகாது” என்று சொல்ல வேண்டாம். அதற்குப் பதிலாக ஒரு சிறந்த எண்ணத்தை அல்லது கட்டளையைத் தேர்ந்தெடுங்கள். “நான் அதை வாங்குவேன். என் மனத்தில் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறுங்கள்.
தேர்ந்தெடுக்கும் சக்தி உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கான ஆரோக்கியத்தைத் தேர்ந்தெடுங்கள் ; உங்களின் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் தோழயை தேர்ந்தெடுக்கலாம் ; பகைமையைக்கூட தேர்ந்தெடுக்கலாம். ஒத்துழைப்பாகவும் ஆனந்தமாகவும் அன்பிற்கு உகந்தவராகவும் நட்பானவராகவும் இருப்பதைத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் இந்த ஒட்டுமொத்த உலகமும் உங்களுக்கான செயல்விடைகளை வழங்கத் தயாராகும். ஓர் மிகச்சிறந்த ஆளுமைப் பண்பை உங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்வதற்கான மிகச்சிறந்த வழி இது.
நீங்கள்தான் உங்கள் ஆன்மாவின் தலைவராவீர்கள். உங்கள் விதியின் முதலாளியும் நீங்கள்தான். தேர்ந்தெடுக்கும் திறன் உங்களுக்கு உள்ளது என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் வெளிமனம் எவற்றையெல்லாம் ஊகித்து உண்மையென்று நம்புகிறதோ, அவற்றையெல்லாம் உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொண்டு உங்கள் வாழ்வில் நல்ல அனுபவங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். நல்ல அதிர்ஷ்டத்திலும், தெய்வீக வழிகாட்டுதலிலும், சரியான செயல்பாட்டிலும் வாழ்வின் அனைத்து ஆசிர்வாதங்களிலும் முழு நம்பிக்கையை வைத்துக் கொள்ளுங்கள்.
“என் உடலையும், அதன் அனைத்து உறுப்புகளையும் படைத்த முடிவில்லாப் பேரறிவு, என் உடலின் அனைத்துச் செயல்முறைகளையும், இயக்கங்களையும் அறிந்துள்ளது. முடிவில்லாப் பேரறிவின் சிறப்பும் புகழும் என் மனதிலும், உடலிலும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது என்பதை நான் தீர்மானமாகவும் முழுமையாகவும் அறிந்துள்ளேன், அவ்வாறே உணர்கிறேன். முழுமையும் வலிமையும் முடிவில்லாப் பேரறிவின் வாழ்வும் என் ஊடாகப் பெருக்கெடுத்துச் செல்கிறது”.
மனக்காட்சிப் படைப்பின் சக்தி
உங்கள் இலக்கை நீங்கள் ஏற்கனவே அடைந்து விட்டதைப் போல, உங்கள் சுயபிரகடனத்தை நிகழ்காலத்தில் இருக்கும்படி அமைத்து, உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ள வேண்டும். அதில் ‘நான்’, ‘என்’ போன்ற வார்த்தைகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக :
“நான் —– கிலோ எடையில் அழகான தோற்றத்தையும் மகிழ்ச்சியான உள்ளத்தையும் கொண்டிருக்கிறேன்”
“நான் ——— (இவரை) நிபந்தனையின்றி நேசிக்கிறேன், அவருடன் நான் ஒரு நல்லுறவை அனுபவிக்கிறேன்”
அந்த இலக்கை நீங்கள் அடைந்து விட்டதைப் போன்ற ஒரு காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
உங்கள் இலக்கை அடைந்துவிட்டால் நீங்கள் எவ்வளவு உற்சாகமாக உணர்வீர்களோ, அந்த உணர்ச்சியை நீங்கள் உணர வேண்டும்.
ஒரு சிறந்த வீட்டை வாங்குவது உங்களுடைய இலக்காக இருந்தால், உங்கள் வீடு எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு தெளிவான படம் உங்களிடம் இருந்தாக வேண்டும். படுக்கை அறைகளின் எண்ணிக்கை, ஒரு தளமா? இரண்டு தளங்களா? நீச்சல் குளம், வீட்டின் விலை, வீடு இருக்கும் பகுதி போன்ற அனைத்து அம்சங்களும் உங்களிடம் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை எட்ட முடியாமல் போகும் நபர்களிடம், அந்த இலக்குகளை அடைந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்குமோ அது பற்றித் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு காட்சி இருப்பதில்லை.
நீங்கள் தெளிவாக மனக்காட்சிப்படுத்தி ஆழ்மனத்திற்குள் பதிவு செய்யும் எது ஒன்றையும் நிகழ்கால யதார்த்தத்தில் நீங்கள் மெய்யாக்குவீர்கள்.
நாம் எதை நம் மனத்தில் காட்சிப்படுத்துகிறோமோ, எதைச் சிந்திக்கின்றோமோ, எதை நம்புகிறோமோ, அதுதான் நாம்.
“என் ஒவ்வோர் உயிரணுவும் நரம்பும் திசுவும் உறுப்பும் இப்போது முழுமையாக்கப்பட்டு, தூய்மையாக்கப்பட்டு, கச்சிதமாக்கப்படுகின்றன. என் ஒட்டுமொத்த உடலில் ஆரோக்கியமும் இணக்கமும் மீண்டும் குடியேறுகின்றன”
என்ற சுயபிரகடனத்தை நோயைக் குணப்படுத்துவதற்காகச் சொல்லி விட்டு, ஓர் ஆழ்ந்த தியான நிலைக்குள் புகுத்திக் கொண்டு, ஒரு வெள்ளை ஒளியாற்றல் என்னைக் குணப்படுத்துவதாகவும் என் இரத்த உயிரணுக்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவதாகவும் மனக்காட்சிப்படுத்துங்கள்.
“செல்வம் – வெற்றி” என்று ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை தொடர்ந்து 5 நிமிடங்கள் கூறுங்கள். இவ்வார்த்தைகளுக்கு அளப்பரிய சக்தி உள்ளது. இவை ஆழ்மனச் சக்தியின் பிரதிநிதிகள். உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் கணிசமான இச்சக்தியின்மீது உங்கள் மனத்தை நிலைப்படுத்துங்கள். பின்னர் அவற்றின் இயல்புக்கும் தன்மைக்கும் ஏற்றச் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் உங்கள் வாழ்வில் உருவாக்கப்படும்.
சுயபிரகடனத்தைச் சொல்லும் முறை :
- உங்கள் சுயபிரகடனத்தை உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ள வேண்டும்.
- உங்கள் சுயபிரகடனத்திற்கு வலு சேர்க்கின்ற ஒரு கடந்த கால அனுபவத்தையோ அல்லது நிகழ்கால அனுபவத்தையோ அல்லது ஒரு கற்பனையான அனுபவத்தையோ உங்கள் மனதில் விரிவாகக் காட்சிப்படுத்த வேண்டும்.
- உங்கள் மனக்காட்சியில் நேர்மறையான, இனிமையான உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் ஊடுருவச் செய்ய வேண்டும்.
ஆழ்மனத்தில் பதியப்படுவது வார்த்தைகள் அல்ல. காட்சிரீதியான படங்களும் அவற்றோடு தொடர்புடைய உணர்ச்சிகளும்தான் ஆழ்மனத்தில் பதிவு செய்யப் படுகின்றன என்பது அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்படி இந்த மூன்றாம் நிலை வகுப்புகளில் ஆழ்மனம் நம் உடலிலும் மனதிலும் வாழ்க்கையிலும் நிகழ்த்தக் கூடிய மாயாஜாலமான விசயங்களைப் பற்றித்தான் விரிவாகக் கொடுத்திருக்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.