உங்கள் மூளைக்குள் ஒளிந்திருக்கும் மேதை யார்?

சாதனைக்கான ஆதார சக்திகள் உங்களுக்குள்ளேதான் ஏதோ ஒரு மூலையில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டே மறைந்திருக்கின்றது.  அந்த நீறுபூத்த நெருப்பினைத்தான் நீங்கள் ஊதி ஊதி கொழுந்துவிட்டு எரியும்படி செய்திட வேண்டும்.  அப்படி செய்துவிடும்பட்சத்தில் நீங்கள் சிறிதும் நினைத்துப் பார்த்திராத பார்த்திட முடியாத சிகரத்தின் உச்சிக்கு உங்கள் ஆழ்மனம் உங்களை அழைத்துச் சென்றுவிடும்.  அங்கே உங்களை சிம்மாசனம் போட்டு அமரச்செய்து ஆழ்மனம் உங்களை அழகு பார்க்கும்.

வீணையின் தந்தியை லாவகமாக மீட்டி ஒரு அற்புதமான இதயத்தை வருடக்கூடிய ஒரு இசையை ஒரு இசைமேதையானவர் பொழிய வைப்பதைப் போல, உங்கள் மூளையில் முடங்கிக் கிடக்கக்கூடிய அபாச சக்தியை நீங்கள் தட்டி, மீட்டி எழுப்பிவிட்டால், உங்களால் நீங்கள் நினைத்ததைச் சாதித்துவிட முடியும்.  அந்த மாபெரும் ஆற்றல்தான் – சக்திதான் உங்களின் உயர்வாழ்விற்கான, மேன்மைக்கான ஒரு உந்துசக்தி.

ஒருவர் தனக்குத் தானே ஒரு விசயத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வதற்குப் பெயர்தான் சுயக்கட்டளை கோட்பாடு. அவ்வாறு நமக்குள்ளே சுயமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தூண்டுசக்தியை நமது ஐம்புலன்கள்மூலம் மனதினை அடையச் செய்யவும் முடியும். ஐம்புலன்களால் அது சாத்தியமானதே.

மனதில் எண்ணங்கள் தோன்றும் பகுதியையும், ஆழ்மனதைச் செயல்பட வைக்கும் பகுதியையும் இணைப்பதுதான் சுயக்கட்டளை என்ற கோட்பாடு. நமது மனதில் அழுத்தமான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும்போதெல்லாம் (இந்த எண்ணங்கள் நல்லவைதானா? கெட்டவைதானா? என்பதெல்லாம் வேறு விசயம்) இந்த சுயக்கட்டளைக் கோட்பாடு சுயமாக ஆழ்மனதுக்குப் போய்ச் சேர்ந்து, அங்கு அந்த எண்ணங்களின் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

ஐம்புலன்கள்மூலம் ஆழ்மனதை அடையும் ஒவ்வொரு விசயத்தையும் நமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் இயற்கை நம்மைப் படைத்திருக்கிறது.  ஆனால், நாம் எப்போதுமே இதையெல்லாம் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட முடியாது.

பெரும்பாலும் அநேக சந்தர்ப்பங்களில் இந்த கட்டுப்படுத்தும் சக்தியை நாம் பயன்படுத்துவதே இல்லை எனலாம்.  இதனால்தான் அநேக மனிதர்களின் வாழ்க்கையை வறுமையான வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆழ்மனம் என்ற செழிப்பான, வளமையான பூமியில் நன்மைகளைக் கொடுக்கும் பயிர்களை விதைக்காமல் போய்விட்டால், அப்பூமியில் விஷச் செடிகளும் களைச்செடிகளும் தான் நன்கு வளர்ந்து புதர் மண்டிக் கிடக்க ஆரம்பிக்கும்.

சுயக்கட்டளை என்பது ஒரு கட்டுப்படுத்தும் சாதனம், இயந்திரம்.  இதன் உதவியால் ஒருவர் ஆக்கப்பூர்வமான எண்ணங்களைச் சுயமாக தனது ஆழ்மனதிற்குள் செலுத்திவிட முடியும்.  இப்படி செய்யாமல் பொன் விளையும் மனத்தோட்டத்தில் அழிவினைத் தரக்கூடிய எண்ணங்களையும் வளரவிடலாம்.  ஆனால், பலன் கொடுப்பது என்பது நமது எண்ணங்களைப் பொறுத்த விசயமாகத்தான் இருக்கும்.  விதை ஒன்று போட்டால், சுரை ஒன்று முளைப்பதேயில்லை.

பணம் கையில் இருப்பதைப் பாருங்கள் ; அதை உணருங்கள்

பணம் வேண்டும் என்ற ஆசை பற்றிய அறிக்கையினை தினமும் இரண்டு தடவை சத்தம் போட்டுப் படிக்க வேண்டும்.  ஏற்கனவே பணம் கைக்கு வந்தாயிற்று என்பதாகப் பாவித்து உணர வேண்டும் என்று “ஆசை நிறைவேற ஆறு படிகள்” என்ற பகுதியில் குறிப்பிட்டிருக்கின்றோம்.

அதன்படி இந்த விதிகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் ஆசையை முழு நம்பிக்கையோடு உங்கள் ஆழ்மனத்திற்குப் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  இதையே திரும்பத் திரும்பச் செய்வதால், பணம் சேர்க்கும் உங்கள் ஆசையை நிஜமாக்கும் முயற்சிகளுக்கு சாதகமான எண்ணங்களை நீங்கள் சுயமாகவே உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.  படிப்படியாக இது உங்களுக்குப் பழகிவிடும்.

மேலும் தொடர்ந்து படிப்பதற்கு முன் “ஆசை நிறைவேற ஆறு படிகள்” இல் சொல்லப்பட்டுள்ள விசயங்களை மறுபடியும் ரொம்பக் கவனமாகப் படியுங்கள்.  அதற்குப் பின்பு சொல்லப்பட இருக்கும் மாஸ்டர் மைண்ட் விதிகளையும் கவனமாகப் படித்துக் கொள்ளுங்கள்.  சுயக்கட்டளை பற்றி விவரிக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டுவிதமான விசயங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், சுயக் கட்டளைக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

உங்களுடைய ஆசை பற்றிய அறிக்கையை சத்தம் போட்டுப் படிக்கும் போது (இந்த முறையில்தான் நீங்கள் பணத்தாசை பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்) வெறும் வார்த்தைகளை மட்டும் படித்தால் எந்தப் பலனும் நிகழ்ந்து விடுவதில்லை.  அந்த வார்த்தைகளில் உங்கள் உணர்ச்சிகளை அல்லது உணர்வுகளைக் கலந்துவிட மறந்துவிடக் கூடாது.  இப்படிக் கச்சிதமாகக் கலக்கப்பட்ட எண்ணங்களைத்தான் உங்கள் ஆழ்மனம் கிரகித்துக் கொண்டு அதன்படி செயல்பட ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பாக திருப்பித் திருப்பிச் சொல்வதற்கு முக்கியமான காரணம் உள்ளது. சுயக்கட்டளைக் கோட்பாட்டைப் பயன்படுத்த முயற்சி செய்யும் பெரும்பாலானவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதேயில்லை.

வெறுமையான, உணர்ச்சியற்ற வார்த்தைகள் ஆழ்மனதில் எந்தவிதத் தாக்கத்தையும் பதிவுகளையும் ஏற்படுத்துவதேயில்லை. நமது எண்ணங்களையோ, பேசும் வார்த்தைகளையோ உணர்ச்சிமயமாக்கி அத்துடன் நம்பிக்கையை இரண்டறக் கலந்து ஆழ்மனதை அடைய வைக்கும் வித்தையை நீங்கள் கற்றுக் கொள்ளாதவரையில் உங்களுக்கு அதிகப்படியான, அமோகமான பலன்கள் கிடைப்பதில்லை.

இது விசயமாக முதன்முறையாக நீங்கள் முயற்சி செய்யும்போது, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, உங்கள் விருப்பப்படி செயல்பட வைக்க முடியாமல் போனால், மனம் தளர வேண்டாம்.  “ஒண்ணுமே இல்லாததற்கு ஏதோ கொஞ்சம்” என்ற கதையெல்லாம் சரிப்பட்டு வராது. ஏமாற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் அது முடியாது. இங்கு விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளைச் சளைக்காமல் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அதுதான் உங்கள் ஆழ்மனதை நீங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் கொடுக்கக்கூடிய விலையாக இருக்கும்.  நீங்கள் விரும்பும் இந்தத் திறமைகளைச் சுலபமாகப் பெற்றுவிட முடியாது.  அதற்காக நீங்கள் பெரும்விலையினை கொடுத்தாக வேண்டும்.

நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தையுமே அடைவதற்காக கடுமையான முயற்சிகளைச் செய்வதைத்தான் அதற்கான விலை என்று குறிப்பிட்டோம்.  அது நியாயமானதா? இல்லையா? என்பதை நீங்கள்தான், நீங்கள் மட்டும்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஆசை எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? அது கொழுந்து விட்டு எரியும் எரிதழலாய் உங்களுக்குள்ளே பரவும் வகையில் அந்த ஆசையிலேயே இம்மியும் பிசகாமல் கண்ணும், கருத்துமாக இருந்து கொண்டிருக்க வேண்டும்.  இதைப் பொறுத்துத்தான் சுயக் கட்டளைக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும் லாவகம் உங்கள் கைகளுக்கு வந்துசேரும்.

ஒருமுகப்படுத்தும் சக்தியை வலுப்படுத்திக் கொள்வது எப்படி?

வெற்றிக்கான ஆறு படிகளைக் கடப்பதற்காகச் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை செயல்படுத்த ஆரம்பிக்கும்போது, ஒருமுகப்படுத்தும் கோட்பாட்டை நீங்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

  1. முதலில் “எவ்வளவு தொகை உங்களுக்கு வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக மனதிற்குள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது. உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, அந்தக் குறிப்பிட்ட தொகையில் உங்கள் எண்ணத்தை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்.  அந்தப் பணம் நிஜமாகவே உங்கள் மனக்கண்ணில் தெரியும்வரை கண்களை மூடிக் கொண்டு, கவனத்தைச் சிதறவிடாமல் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது இப்படிச் செய்ய வேண்டும்.  இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது, “நம்பிக்கை” பற்றிய அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.  பிறகு பாருங்கள், நிஜமாகவே பணம் உங்களிடம் சேர்ந்திருக்கும்.
  2. முழு நம்பிக்கை உணர்வுடன் இடப்படும் எந்தக் கட்டளையையும் உங்கள் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டு, அதன்படி செயல்பட ஆரம்பிக்கும் என்பது உண்மைதான். ஆழ்மனம் அந்தக் கட்டளையைப் புரிந்து கொள்வதற்கு முன்பு மறுபடியும், மறுபடியும் அந்தக் கட்டளையை அடிக்கடி பிறப்பித்தாலும் அதை நிறைவேற்றும்.
  3. இதன்படி கனகச்சிதமான, நியாயமான, தந்திரத்தைப் பயன்படுத்தி ஆழ்மனதை ஏவ முடியும். நீங்கள் மனக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் பணம் உங்களிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்று நீங்கள் நம்புவதன்மூலம் ஆழ்மனதையும் அவ்வாறே உங்களால் நம்ப வைத்துவிட முடியும். இந்தப்பணம் நீங்கள் கூப்பிடும் குரலுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்குச் சொந்தமான இந்தப் பணத்தைப் பெறுவதற்கான நடைமுறைத் திட்டங்களை ஆழ்மனம் உங்களுக்குப் பகுத்தும் வகுத்தும் கொடுத்துவிடும்.  மேலே சொல்லப்பட்டுள்ள சிந்தனையை உங்களுடைய கற்பனை இலாகாவிடம் ஒப்படைத்து விடுங்கள்.  பணம் சேர்ப்பதற்கான திட்டங்களாக ஆசையை உருமாற்றுவதற்காக உங்களுடைய கற்பனை இலாகாவால் என்ன செய்ய முடியும்?  இது என்ன செய்யப் போகிறது?
  4. நீங்கள் கற்பனை செய்து பார்த்து, விரும்பி எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பணத்தைப் பெற உங்களுக்கு ஆசை. இதற்காக நீங்கள் செய்ய விரும்பும் வேலை பற்றிய தீர்க்கமான திட்டத்திற்காகக் காத்திருக்க வேண்டாம்.  உங்களிடம் பணம் இருப்பதாக நினைத்துப் பார்க்க ஆரம்பித்தவுடன், உங்களுடைய ஆழ்மனம் உங்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிக் கொடுக்கும். இந்தத் திட்டங்களுக்காக விழிப்புடன் காத்திருங்கள்.  கிடைத்ததும் உடனடியாக செயல்படுத்திவிடுங்கள்.  இவை தென்படும்போது பொதுவாக உங்கள் மனதில் ஆறாவது புலன் மூலம் ஒரு மின்னல் பளிச்சிடும்.  இதுவொரு உத்வேகத்தின் உருவில் இருக்கும்.  அதை மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உடனடியாக அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி விடுங்கள்.
  5. நான்காவது படியில், “உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்கு தீர்க்கமான திட்டத்தை உருவாக்கிக் கொண்டு செயல்படுத்த ஆரம்பியுங்கள்” என்று சொல்லியிருக்கின்றேன். முந்தைய பத்தியில் விளக்கியிருக்கும் குறிப்புகளையும் இதற்கும் பின்பற்றவும்.  ஆசையைப் பணமாக மாற்றும் உங்கள் திட்டத்தை உருவாக்கும்போது, உங்களின் ஆராய்ந்து பார்க்கும் சக்தியை நம்பிவிடாதீர்கள். இந்த ஆராய்ச்சி இலாகா சோம்பேறித்தனமாக இருக்கக்கூடும்.  உங்களுக்கு அது சேவகம் செய்வதை முழுமையாக நம்பினால், உங்களை அது ஏமாற்றிவிடக் கூடும். கவனமாக இருக்கவும்.
  6. நீங்கள் சேர்க்க விரும்பும் பணத்தை (கண்களை மூடிக்கொண்டு) கற்பனை செய்து பார்க்கும்போது, அந்தப் பணத்திற்குப் பதிலாக நீங்கள் ஒரு வேலை செய்வது போலவும் அல்லது ஒரு வியாபாரம் செய்வது போலவும் நினைத்துக் கொள்ளுங்கள். இது மிக மிக முக்கியம்.

இப்படி ஆழ்மனம் நம் வாழ்வில் நிகழ்த்தக் கூடிய மாயாஜாலங்களில் சில பகுதிகளை மட்டும் இந்த குருகுலக் கல்வியின் நான்காம் நிலையில் வகுப்புகளாகவும் பாடங்களாகவும் வைத்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றோம். நீங்களும் இந்த குருகுலக் கல்வியில் சேர்ந்து பரிபூரணமான பிரமஞானத்தை அடைய வேண்டுமென்பதே எமது ஒரே கனவும் இலக்கும் ஆகும்.

பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து

உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!