பிரம ஞானக் கிரியா தீக்கை
ஆதித் தமிழ்ச் சித்தர்களான காகபுஜண்டர், திருமூலர், அகத்தியர், போகர், மகா அவதார் பாபாஜி மற்றும் நம் சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி ஆகியோர்களின் குரு சங்கிலித் தொடர்பிலான திருக்கயிலாய பரம்பரையில் வாழையடி வாழையாக தொடர்ந்து வரும் ஆதித் தமிழ்ச் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஞான ஒளியுடல் பெற்ற பிரம்மஞான வித்தையின் அற்புத மெய்க்கல்வியான ஸ்ரீ பிரமஞானக் கிரியாவின் தீக்கை திருவிழா நடைபெற உள்ளது.
இத்தீக்கையின்போது குருபரம்பரையின் பிரமஞான விதையானது பிரம மெய்க்கல்வியை கற்க வரும் மாணவர்களின் உயிர்ப் பொருளில் குருவால் விதைக்கப்படவுள்ளது.
இப் பிரமஞானத் தீக்கை விழாவானது ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பரிபூரண ஆசீர்வாதத்தாலும் கருணையினாலும் வருகிற (05.01.2025) ஞாயிற்றுக் கிழமை – பிரமஞான தினத்தில் காலை 07.30 மணி முதல் அமுதவல்லி தாயார் ஸ்ரீ புவனேஷ்வரியின் மணித்வீபத்தில் வீற்றிருப்பதைப் போல சேலம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ புவனத்தில் அமைந்திருக்கும் பிரமஞானப் பொற்சபையின் மெய்ஞ்ஞானத் திருக்குடிலில் சீரும் சிறப்புமாக நடைபெற ஆதித் தமிழ்ச் சித்தர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
எம் அன்பு மாணவச் செல்வங்கள் தனித்து அல்லாது திருக்கூட்டமாக வந்து பிரமஞான மெய்க்கல்வியினை கற்றுச் செல்லுமாறு அன்போடு அழைக்கின்றோம், வந்து பிரம இறைஞானம் பெற்றுச் செல்வீர்களாக.
இந்த பிரமஞானத் தீக்கை விழாவில் மாணவர்களுக்கு கீழ்க்கண்ட ஞானங்கள் கற்பிக்கப்பட்டு, அவர்களின் உயிர் ஒளியில் ஞான விதைகளாக விதைக்கப்பட உள்ளன. அவைகளில் சில விவரங்கள் இதோ.
பிரமஞானக் கிரியா வகுப்பு
மேற்கண்டவை போன்ற ஏராளமான ஞானக் கேள்விகளுக்கு எல்லாம் இந்த பிரமஞானக் கிரியா வகுப்பில் குருவிடமிருந்து பதில்கள் உண்டு. இவ்வுலகத்தில் மறைக்கப்பட்ட பிரம சத்தியத்தை, மெய்வழி ஞானத் தந்திரங்களை முதலில் எம் குருதேவரின் ஆசீர்வாதத்தோடும் அனுமதியோடும் உங்களுக்கு இங்கே கற்றுக் கொடுக்கப்படுகிறது. இக்கலையைக் கற்றோர் முடிவாய் பிரம்ம ஞானத்தை அடைந்திடுவார்கள். பிரம்மஞானமாய் உருமாறி இருப்பார்கள். அதுதான் இக்கலையின் உச்சக்கட்ட அதிசயம்.
பிறவியை அறுக்க நினைப்போர்களே இப் பிரமஞானத்தைத் தேடி வந்து சேர்வார்கள். சென்ற பிறவியில் விட்டகுறை தொட்டகுறையாக இக்கலை இப்பிறவியில் அவர்களை வந்தடையும். இக்கலையைக் கற்றுக் கொண்டோர் பெரும்புண்ணியமும் தவமும் செய்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இக்கலை கண்ணில்கூட தென்படுவது இல்லை. சும்மா வருமோ ஞானம்? சும்மா கிடைக்குமோ தவம்?
பிரமஞானக் கிரியாவைப் போல உங்கள் பிறப்பின் கர்மப் பதிவுகளையும் வினைகளையும் முற்பிறவி மற்றும் இப்பிறவியில் சுட்டறுக்கும் ஞான மெய்க்கல்வி இவ்வுலகிலேயே இல்லை எனலாம்.
இக்கலை உங்கள் உயிரைத் தூண்டி சுயம்பிரகாசமாய் சுடர்விட்டுப் பிரகாசிக்க வைத்திடும். உயிரைத் தூண்டும்போதே உங்கள் ஒலியாற்றல்களும் தூண்டப்படுவதை தசவித (பத்து) நாதங்களாக உங்கள் காதுகளால் கேட்பீர்கள்.
உங்கள் உயிரின் ஒளியை அதன் ஒளிப் பிரகாசத்தோடு உங்கள் புறக்கண்களாலேயே காண்பீர்கள். இங்கே மறைப்பு ஏதும் இல்லை. உங்கள் சத்தியத்தை, பிரமத்தை நேருக்கு நேராக சந்திப்பீர்கள். சந்தித்தப்பின் பிரமத்திலேயே கரைந்து பிரம்மமாகிப் போவீர்கள்.
இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் யார் என்ற கேள்வி சூரியனைக் கண்ட பனிநீரைப் போல கரைந்துபோய், அங்கே அவ்விடத்திலேயே ஞானமாய் முளைவிட ஆரம்பிப்பீர்கள். இந்நிகழ்வுகள் தொடர்கதையாய் அரங்கேறி வரும்போது, உங்கள் உயிருக்குள் குருவால் விதைக்கப்பட்ட ஞான விதைகள் ஒவ்வொரு ஞான இலைகளாக துளிர்விட்டு வளர்ந்து பூப்பூத்துக் காய் காய்த்து ஞானக்கனியாக திரண்டு நிற்கும்போது, அங்கே நீங்கள் பிரமஞானச் சுடராய் இறைவனின் ஆன்ம சிம்மாசனத்தில் வீற்றிருப்பீர்கள்.
பிரமஞானக் கிரியா உங்கள் மனதை வென்றிடும் கலையோடு பேசும். உங்கள் உயிரோடு பேசும். உங்கள் ஆன்மாவோடு பேசும். உங்கள் உயிரின் ஒளியோடு கூடும். ஒலியோடு இழையும். சுவாசிக்கும் காற்றோடு கரையும். உயர்பிராணனோடு இணையும். சுழிமுனை நாடியைத் தூண்டிடும். சித்ரிணி நாடியோடு நெருப்பாற்றைக் கடக்கும். பிரம்ம நாடியோடு ஆத்மப் பாலத்தைத் தாண்டிடும்.
இந்த பிரமநாடியைப் பிடித்திடும்வரை உங்கள் பிரமஞானத் திருவடி தவம் தொடர்ந்து கொண்டிருக்கும். என்றைக்கு பிரமநாடியை அடைவீர்களோ, அன்றைக்குத்தான் பிரமஞானம் உங்களுக்குச் சித்தித்திடும்.
பிரமநாடியைத் தூண்டவும் அந்நாடி எங்கே இருக்கிறது என்று அடையாளம் காணவுமே பல கோடி ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும். முதல்நாடியான சுழிமுனையைத் தொடாமல் பிரமநாடியைப் பிடிக்கவே முடியாது. பிரமநாடியைப் பிடிக்கும் ஞானத் தந்திரம் இங்கே பிரம்மஞான குருகுலத்தில் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டபடி ஒளிவு மறைவின்றி அப்படியே பரிபூரண முழுமையோடு கற்றுக் கொடுக்கப்படுகிறது.
யார் மூன்று இலட்சம் ஆண்டுகள் தவம் செய்து வாழ்வார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த ஜென்மத்தில் ஒரு சற்குரு கிடைப்பார் என்று வேதமும் ஞானிகளும் சித்தர்களும் சொல்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு கிடைக்கும் ஜென்ம, ஜென்மாந்திர பிரமஞான விதையை பெற்றுக் கொண்டு உங்கள் உயிரோடும் உயிருக்குள் இருக்கும் இறையோடும் இரண்டறக் கலந்து இராப்பகலற்ற இடத்தில் வாழ்ந்து பரிபூரண பிரம ஞானத்தைப் பெற்று வாழ்வீர்களாக !
மற்றவை பிரமஞானத் தீக்கை விழாவில் காணலாம்.
பிரமஞானக் குருகுலக் கல்வி
தற்போது பிரமஞானப் பொற்சபை குருகுலக் கல்வியானது, அதன் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை பாடங்கள் கற்று கொடுக்கப்பட்டுவிட்டது. விரைவில் மூன்றாம் நிலைப்பாடம் ஆரம்பமாகப் போகிறது. தீக்ஷை பெறும் புதிய மாணவர்களும் இந்த மூன்றாம்நிலை குருகுலக் கல்வியில் இணைந்து கல்வி பயிலலாம்.
தீக்ஷை பெறுகின்ற மாணவர்கள் அனைவரும் இக்குருகுல வகுப்பில் இணைந்து உங்கள் உயிராற்றலைப் பெருக்கிக் கொண்டு பரிபூரண பிரமஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும். இந்த இரண்டாம் நிலையில் வாழ்வியலோடு பிரமஞானத்தைக் கற்றுத் தருகின்றோம். உங்கள் இல்லறத் தேவைகள் அனைத்தும் இவ்வகுப்பில் பூர்த்தியாகும். கூடவே பிரமஞானமும் கைவல்யமாகிடும். அதுதான் இவ்வகுப்பின் சிறப்பம்சமே. அனைத்து மாணவர்களும் கற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அனைத்து பிரமஞானங்கள் இங்கே மிகவும் எளிமையாய் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அனைவரும் பிரமஞானத்தை முற்றாகப் பெற்றிட வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு, கனவு.