பிரம ஞானத்தை அடைய

பிறவியை அறுக்க நினைப்போர்களே இப் பிரமஞானத்தைத் தேடி வந்து சேர்வார்கள்.  சென்ற பிறவியில் விட்டகுறை தொட்டகுறையாக இக்கலை இப்பிறவியில் அவர்களை வந்தடையும்.  இக்கலையைக் கற்றுக் கொண்டோர் பெரும்புண்ணியமும் தவமும் செய்திருக்க வேண்டும்.  மற்றவர்களுக்கு இக்கலை கண்ணில்கூட தென்படுவது இல்லை.  சும்மா வருமோ ஞானம்? சும்மா கிடைக்குமோ தவம்?

பிரமஞானக் கிரியாவைப் போல உங்கள் பிறப்பின் கர்மப் பதிவுகளையும் வினைகளையும் முற்பிறவி மற்றும் இப்பிறவியில் சுட்டறுக்கும் ஞான மெய்க்கல்வி இவ்வுலகிலேயே இல்லை எனலாம்.

அருளமுது

இக்கலை உங்கள் உயிரைத் தூண்டி சுயம்பிரகாசமாய் சுடர்விட்டுப் பிரகாசிக்க வைத்திடும். உயிரைத் தூண்டும்போதே உங்கள் ஒலியாற்றல்களும் தூண்டப்படுவதை தசவித (பத்து) நாதங்களாக உங்கள் காதுகளால் கேட்பீர்கள்.

உங்கள் உயிரின் ஒளியை அதன் ஒளிப் பிரகாசத்தோடு உங்கள் புறக்கண்களாலேயே காண்பீர்கள்.  இங்கே மறைப்பு ஏதும் இல்லை.  உங்கள் சத்தியத்தை, பிரமத்தை நேருக்கு நேராக சந்திப்பீர்கள்.  சந்தித்தப்பின் பிரமத்திலேயே கரைந்து பிரம்மமாகிப் போவீர்கள்.

இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் யார் என்ற கேள்வி சூரியனைக் கண்ட பனிநீரைப் போல கரைந்துபோய், அங்கே அவ்விடத்திலேயே ஞானமாய் முளைவிட ஆரம்பிப்பீர்கள். இந்நிகழ்வுகள் தொடர்கதையாய் அரங்கேறி வரும்போது, உங்கள் உயிருக்குள் குருவால் விதைக்கப்பட்ட ஞான விதைகள் ஒவ்வொரு ஞான இலைகளாக துளிர்விட்டு வளர்ந்து பூப்பூத்துக் காய் காய்த்து ஞானக்கனியாக திரண்டு நிற்கும்போது, அங்கே நீங்கள் பிரமஞானச் சுடராய் இறைவனின் ஆன்ம சிம்மாசனத்தில் வீற்றிருப்பீர்கள்.

இறைவனே ஒளி

பிரமஞானக் கிரியா உங்கள் மனதை வென்றிடும் கலையோடு பேசும்.  உங்கள் உயிரோடு பேசும்.  உங்கள் ஆன்மாவோடு பேசும்.  உங்கள் உயிரின் ஒளியோடு கூடும்.  ஒலியோடு இழையும்.  சுவாசிக்கும் காற்றோடு கரையும்.  உயர்பிராணனோடு இணையும்.  சுழிமுனை நாடியைத் தூண்டிடும்.  சித்ரிணி நாடியோடு நெருப்பாற்றைக் கடக்கும்.  பிரம்ம நாடியோடு ஆத்மப் பாலத்தைத் தாண்டிடும்.

இந்த பிரமநாடியைப் பிடித்திடும்வரை உங்கள் பிரமஞானத் திருவடி தவம் தொடர்ந்து கொண்டிருக்கும். என்றைக்கு பிரமநாடியை அடைவீர்களோ, அன்றைக்குத்தான் பிரமஞானம் உங்களுக்குச் சித்தித்திடும்.

பிரமநாடியைத் தூண்டவும் அந்நாடி எங்கே இருக்கிறது என்று அடையாளம் காணவுமே பல கோடி ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும். முதல்நாடியான சுழிமுனையைத் தொடாமல் பிரமநாடியைப் பிடிக்கவே முடியாது.  பிரமநாடியைப் பிடிக்கும் ஞானத் தந்திரம் இங்கே பிரம்மஞான குருகுலத்தில் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டபடி ஒளிவு மறைவின்றி அப்படியே பரிபூரண முழுமையோடு கற்றுக் கொடுக்கப்படுகிறது.

யார் மூன்று இலட்சம் ஆண்டுகள் தவம் செய்து வாழ்வார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த ஜென்மத்தில் ஒரு சற்குரு கிடைப்பார் என்று வேதமும் ஞானிகளும் சித்தர்களும் சொல்கிறார்கள்.  இதை கருத்தில் கொண்டு கிடைக்கும் ஜென்ம, ஜென்மாந்திர பிரமஞான விதையை பெற்றுக் கொண்டு உங்கள் உயிரோடும் உயிருக்குள் இருக்கும் இறையோடும் இரண்டறக் கலந்து இராப்பகலற்ற இடத்தில் வாழ்ந்து பரிபூரண பிரம ஞானத்தைப் பெற்று வாழ்வீர்களாக !

மற்றவை பிரம்மஞானக் கிரியா தீக்ஷை நூலில் காண்க.