பிரம ஞானத்தை அடைய

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதவன் தாள்களை வணங்கி இச்சிறியேனின் உரையை உங்கள் முன்பு சமர்ப்பிக்கின்றோம்.

எமக்குத் தாயும் தந்தையுமாக எம் பரமாகாசத்தில் குடியிருக்கும் ஒளிதேகியான எம் சற்குரு தெய்வமான ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களுக்கு அனந்தகோடி வணக்கங்களையும் நன்றிகளையும் அவரின் திருவடிகளில் சமர்ப்பித்துக் கொள்கின்றேன். எம் சற்குரு இல்லாமல் இப்போது உங்கள்முன் யாமில்லை.

எங்கள் பிரமஞான குருகுலத்தின் அன்பான, பணிவான அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்த பிரமஞானக் கிரியா ஞானநூலினை தயாள உள்ளத்தோடும் கருணையோடும் ஆசிர்வாதத்தோடும் வெளியிட்ட மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் 20வது பட்டமான ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் அவர்களுக்கு ஆத்மார்த்த வணக்கங்களையும் நன்றிகளையும் திருவடிகளில் நின்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த ஞானநூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடப்பதற்கு காரணமாகவும் வழிகாட்டியாகவும் இருந்த மதிப்பிற்கும் வணக்கதிற்கும் உரிய கலைமாமணி முனைவர் கு.கணேசன் அவர்களுக்கும் சேலத்தின் கொடைவள்ளலும் அரிமா டாக்டருமான லவ்ஓ திரு.ஏ.கே.நாகராஜன் அவர்களுக்கும் பிரமஞான குருகுலத்தின் சார்பாக வணக்கங்களையும் நன்றிகளையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கள் அன்பான அழைப்பினை ஏற்று இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கக் கூடிய எம் அன்பிற்கினிய மாணவர்களே, ஆன்றோர்களே,சான்றோர்களே, உறவினர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எம் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாம் ஆசைப்படாமலே எம் 20வது வயதில் எம்மை வலியவந்து ஆட்கொண்ட குழந்தை பாலாவிற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?

பிரம ஞானத் தவத்தை எமக்குள் குரு விதைத்தபின்பு, எமக்கு நேரில் காட்சி கொடுத்து ஆட்கொண்டு பிரம வித்தையின் சூட்சுமங்களை எம் நாவில் அருளிய சியாமளா தாய்க்கு எப்படி நன்றிகளைத் தெரிவிக்கப் போகிறேன்?

சித்தர்களின் பெருநெறியாம் மெய்ப்பொருளின் பிரமநாடிக்குள் எம்மைத் தானாகவே அழைத்துச் சென்று இன்றுவரை எமக்குள் பிரம ஞானத்தை அமுதப் பாலாகவும் பேரின்ப வெள்ளமாகவும் ஒளியாகவும் ஒலியாகவும் உணர்வாகவும் அமுதச் சுவையாகவும் தினம்தினம் அருளிக் கொண்டிருக்கும் சித்தர்களின் மகாசக்தியான அமுதவல்லி ஸ்ரீபுவனேஸ்வரி தாய்க்கு எம் உயிரைத் தவிர வேறென்ன பெரிதாகக் கொடுத்துவிட முடியும்?

எம் வாழ்வை இவர்கள் நால்வரும்தான் தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்கள்.  ஒருவேளை உணவுகூட இல்லாமல் நான் சிவன்கோயில்முன் அழுதுகொண்டு இருந்தபோது, எம் குருநாதர் எம்மை வலிய ஆட்கொண்டு அமுதச் சோறூட்டி சதுரகிரி மலையில் வளர்க்க ஆரம்பித்தார்.  நான் தினமும் தவத்தில் ஈடுபடும்போதெல்லாம் குழந்தை பாலா கலகலவென்று சிரித்துக் கொண்டே எம் பின்தலையை வருடிக் கொடுத்தபடி அவள் திருவடிகளால் எம் திருவடிகளைத் தீண்டிச் செல்வாள்.  திருவடிகள் என்பது பாதங்களல்ல.  நமது இரு கண்களே திருவடிகள் ஆகும்.

அன்னை புவனேஸ்வரி எமக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அற்புதங்களைச் சொல்ல ஆரம்பித்தால் இன்றொரு நாள் போதுமா? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

முதலில் பாலா ஆட்கொண்டாள், பிறகு குரு ஆட்கொண்டார், அடுத்து சியாமளா ஆட்கொண்டாள், அடுத்து புவனேஸ்வரி ஆட்கொண்டு வருகிறாள்.  இவ்வாறு குருவருளும் திருவருளும் ஒருசேர எமக்கு இச்சென்மத்தில் கிடைத்திருப்பது என்ன புண்ணியத் தவம் செய்தேனோ?  அதுவும் குருவருள் இல்லாது வேறாக இருக்க வாய்ப்பில்லை.

இவர் எப்படி ஞானநூல்களை எழுதுகிறார் என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கக்கூடும்.  அதற்காகவே எம் வாழ்வின் முன்னோடி நிகழ்வுகளில் ஓரிரண்டைக் கூற வேண்டியதாயிற்று.  சான்றோர்கள் எம்மைப் பொறுத்தருள்க.

இப்போது பிரமஞானக் கிரியா நூலுக்குள் செல்லலாம்.

ஒரே வாக்கியத்தில் இந்நூலைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்,

நமது ஆதித் தமிழ்ச்சித்தர்கள் எப்படி மனித உயிராற்றலை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும்

உயிர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தும்

அந்த உயிர் ஒளியாகத்தான் நமக்குள் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்றும்

அந்த ஒளியாம் உயிராற்றலை எப்படி யுகாந்தர காலம்வரை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்

அப்படி உயிரொளி அணையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியதுதான் இந்த பிரமஞானக் கிரியா.

பிரம ஞானக் கிரியா என்பது ஞானத்தை அடைவதற்காக செய்யப்படும் பிரமத் தவமாகும். பிரமமே ஞானமாக வேண்டும்.  ஞானமே தவமாக வேண்டும்.  அந்த தவமே பிரமஞானமாக வேண்டும்.

அருளமுது

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவரவர்களின் ஊழ்வினைகளுக்கேற்ப கர்மப் பதிவுகள் கோடிக்கணக்கில் பதிந்துள்ளன. அந்த கர்மப்பதிவுகளை அழித்தெடுக்காமல் ஞானத்தை விதையாக மனிதனுக்குள் விதைத்திட இயலாது.

ஞானம் ஒரு விதை என்பார் எம் குரு உட்பட அனைத்துச் சித்தர்களும். ஞானம் விதை என்றால், விதை விதைக்கப்பட வேண்டிய நிலம் எது? அது நம் திருவடிகளே ஆகும். ஏனென்றால், இந்த திருவடிகளில்தான் பஞ்சபூதச் சக்திகள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் சக்திகள் ஒருசேர இறைவனால் படைக்கப்பட்டுள்ளது.

இதில் நிலமும் வருகிறது. இந்த திருவடிகளில் நிலம் எப்பகுதியில் அமைந்துள்ளதோ, அதன் மையத்தில்தான் ஞானமானது குருவால் விதையாக விதைக்கப்படும். அது பிரமஞான தீக்ஷையின்போது சாதகனுக்கு நடைபெறும் ஒரு வைபவமாகும். அப்போது சாதகன் மீண்டும் பிறந்தவனாகிறான். இதை தமிழில் ‘இரு பிறப்பாளன்’ என்றும் வடமொழியில் ‘துவிஜன்’ என்றும் அழைப்பார்கள்.

பிரமம் என்பது உங்கள் உயிரன்றி வேறில்லை. உயிரின் ஒளிநிலையே பிரமமாகும். பிரமத்தை அறிந்துவிட்டால் எல்லாம் அறிந்தவனாகலாம். அந்த உயிரின் ஒளியான பிரமத்தை எவ்வாறு அறிந்து கொள்வது? குருவல்லாது அருளில்லை, பிரமமும் இல்லை. குருபகவானை கோயில்களில் தேடி மனித சமுதாயம் அலைகிறது. எது கோயில் என்பதுதான் கேள்வியே?

திருமூலர் மனித தேகத்தைத்தான் கோயில் என்கிறார். அதனால் உடம்பின் உள்ளே உத்தமன் குடிகொண்டான் என்று உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்று சொல்லிச் சென்றுள்ளார்.

எம் குருநாதர் அடிக்கடி சொல்லும் வார்த்தை – கல்வியை போதிக்கும் இடம் பள்ளிக்கூடம், ஞானத்தைப் போதிக்கும் இடம் கோயில்கள் என்பார்.  கல்வியை கல்லூரி வரை படித்து முடித்து வேலைக்குச் செல்கிறோம்.  ஆனல்,  ஞானத்தை மட்டும் சாகும்வரை தேர்ச்சி பெறாமலேயே கோயில்களுக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறோம்.  ஒரு வருடம் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குச் செல்வதே இல்லை.  இறக்கும்வரை கோயில்கள்தான் மனித சமுதாயத்திற்கு.  கோயில் நல்ல விஷயம்தான்.  அது குழந்தை மற்றும் சிறுவர்களுக்கான ஞானப் பள்ளிக்கூடம்.  பெரியவர்களுக்கல்ல.  இது ஒவ்வொரு மனிதனும் புத்தியில் பதிய வைத்துக் கொள்ள விஷயமாகும்.  கோயில்களுக்குச் சென்றால் ஒவ்வொரு வருடமும் தேர்ச்சிப் பெற்றுக் கொண்டே சென்று இறுதியில் சித்தனாகிவிட வேண்டும்.  அதை விடுத்து என்றென்றும் மாணவனாகவே இருப்பதில் என்ன பலன்?

அதனால் மனிதன் தனக்குள் உள்ள பிரம்மாண்ட அறிவியலை, பிரம ஞானத்தை அறிந்து கொள்ளாமலே இறந்து போகிறான்.  இந்நிலை மாற வேண்டும் என்று சித்தர் பெருமக்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.  அவ்வழியே யாமும் சென்று 36 ஆண்டுகள் ஆய்வு செய்து குருவருளால் கண்டுபிடித்துள்ள ஞானயோக ரகசியங்களை ஒவ்வொரு நூல்களிலும் வெளிப்படையாகவே எதையும் மறைக்காமல் சொல்லிக் கொண்டு வருகிறோம்.  அதில் இந்த பிரம ஞானக் கிரியா மிக மிக முக்கியவத்துவம் வாய்ந்த ஞான நூலாக குருவருளால் இன்று மலர்ந்துள்ளது.  இனி யாம் சொல்லப் போகும் விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் சொல்லப்படும் ஞானச் செய்திகளே அன்றி வேறில்லை.

ஒருமுறை எம் குருநாதரிடம் கற்ப தேகம் அடைவது எப்படி குருவே என்று வினவினோம்.  அதற்கு குரு சொன்னது – “மனிதன் அவனின் சித் சபைக்குள் நுழைந்து அங்கு விளங்கும் ஞான ஒளிநடனத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டால் அங்கே, அவ்விடத்திலேயே அருளமுது சுரக்கத் தொடங்கும்.  இதை அமுத அருளமுதை உண்டுவிட்டால் மனிதனுக்குக் கற்ப தேகம் கிட்டிவிடும்” என்றார்.

“சித் சபைக்குள் எப்படி நுழைவது குருவே” என்றேன்.

“தவத்தால், முக்கியமாக தானத்தால், சீவகாருண்ய அருள் ஒழுக்கத்தால்.  அவ்வாறு ஒழுகினால் மூளையிலுள்ள பிணியல் சுரப்பியானது அதிர்வுகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வரும்.  அப்போது புற அமுதம் அங்கே சுரக்க ஆரம்பிக்கும்.  இப்படி புறஅமுதம் சுரந்து, சுரந்து இறுதியாக உயிரிலிருந்து அக அருளமுதம் சுரக்கும்” என்றார்.  எந்தவொரு மனிதனுக்கு சுக்கிலமானது திரவ நிலையிலிருந்து  ஆவிநிலைக்குச் செல்கிறதோ, அவனுக்கே அருளமுது சுரக்கும்.

இறைவனே ஒளி

திடநிலையோ, திரவ நிலையோ ஆவியாக வேண்டுமென்றால், அங்கே இரசவாத மாற்றம் நடைபெற்றாக வேண்டும். எவ்விடம் ஆகியாக வேண்டுமோ, அந்த இடத்தை வெப்பப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் சுடராழி தவம் சொல்லிக் கொடுக்கிறது.

மனித தேகம் ஐவகை உண்டு என்கிறார் வள்ளலார்.

  1. அசுத்த தேகம் – மலம், சிறுநீர் வருவது.
  2. சுத்த தேகம் – மலம், சிறுநீர் வராமல் இருப்பது.
  3. பிரணவ தேகம் – காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்வது, அதாவது பிராணன் எனும் தூய காற்றை மட்டுமே உண்டு வாழ்வது.
  4. ஞான தேகம் – ஒளியை சுவாசித்து வாழ்வது (சுடராழித் தவத்தில் இச்செயல்தான் குருவால் கற்பிக்கப்பட்டு, செய்யப்பட்டு வருகிறது.)
  5. ஒளி தேகம் – தேகத்தில் உள்ள ஒவ்வொரு செல்களும் ஒளி செல்களாக மாறி தேகமே ஒளியாக விளங்கும் நிலை.

பிராணன், ஒளி, ஒலி, அறிவு ஆகியவை ஒன்றாக கலந்து, அந்த பிராண சக்தியானது உச்சித் துவாரத்தின் வழியாக நேரடியாக நம் உயிரைத் தொடும்போதுதான் சமாதி நிலை கிட்டும். எம் குருவருளால் எமக்கு சமாதி நிலை கைகூடி வருகிறது. சமாதி என்பது சமம் + ஆதி எனப் பிரிக்க வேண்டும். அதாவது இறைவனுக்குச் சமமான நிலை.

எங்கள் பிரமஞான குருகுலத்தில் சமாதி நிலை என்பது இயல்பாக நடந்தேறக் கூடிய வைபவமாக இருக்கிறது.

உடலில் இருக்கும்பொழுதே இந்தச் சித்துநிலையில் வாழப் பழகிக் கொள்வதுதான் ஞானமார்க்கமாகும்.

அதற்கு முதலில் மனிதனுக்கு வாலறிவு இருக்க வேண்டும்.  வால் + அறிவு என்பதே வாலறிவாகும். வால் என்றால் ஒளி என்று பொருள்.  வாலறிவு என்பது ஒளிமயமான அறிவு என்று பொருளாகும்.  இறைவன் ஒளியாகத்தானே இருக்கின்றான்.  அதனால்தான் அவனை வாலறிவன் என்று திருவள்ளுவர் அழைக்கின்றார்.

“கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

  நற்றாள் தொழாஅர் எனின்”

(கடவுள் வாழ்த்தில் இரண்டாம் குறள் இது)

இவ்விடத்தில் தாள் என்றால் பாதம் என்று பொருள் எடுத்துக் கொள்ளக் கூடாது.  தாள் என்றால் அது இறைவனைக் காண்பதற்காக நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள சொர்க்க வாசலான இரு திருவடிகளே ஆகும்.  திருவடிகள் என்பது கண்களாகும்.  சொர்க்க வாசலின் கதவுகள்தான் திருவடிகள்.  இந்த திருவடி வாசலை விழித்திருந்து தவம் செய்து சுடராழி தவஆற்றலோடு உள்ளே சுழிமுனை நாடியில் நுழைந்தும், அடுத்து சித்திரிணி நாடியில் புகுந்தும் அடுத்து வஜ்ர நாடியில் பயணம் செய்தும் இறுதியாக பிரம நாடியில் பரிபூரணமாக உள்நுழைந்து சென்றால்தான் அங்கே இறைவன் என்ற பேரொளியை வைகுண்ட ஏகாதசியன்று தரிசிக்கின்றோமே அந்த பேரொளியாளனைக் கண்டாரக் கண்டு கலந்து அங்கிருக்கலாம்.  இதுதான் வைகுண்ட ஏகாதசியின்  மெய்ப்பொருள் விளக்கமாகும்.

வைகுண்டம் என்பது நமது இரு விழிகளாகும்.  குண்டம் போன்று நம் விழிகள் இருப்பதை சற்றே சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  வைகுண்டம் என்பது குண்டத்தில் உன் கவனத்தை வை என்பதாகும்.  குண்டமாகிய விழிகளில் கவனத்தை வைத்துவிட்டால் பார்வை அங்கே ஒடுங்க ஆரம்பிக்கும்.  பார்வை எங்குண்டோ அங்கு மனம் இருக்கும்.  மனம் எங்குண்டோ அங்கு பிராணனனும் நிலைத்திருக்கும்.

ஆக பார்வை, மனம், பிராணன் மூன்றும் கலந்திருக்கும் நிலைதான் தவம் எனப்படும்.  விழிகளை மூடிக்கொண்டு செய்வது தவமல்ல, விழித்திருந்து செய்வதே தவமாகும்.  அதனால்தான் வைகுண்ட ஏகாதசியன்று விடிய விடிய விழித்திருக்கும் ஞான தந்திர உபாயத்தைச் சொல்லிச் சென்றார்கள்.  ஆனால், எவ்வாறு விழித்திருக்க வேண்டும் என்ற தந்திரத்தை மட்டும் சொல்லிச் செல்லவில்லை.  காலத்தால் இந்த ஆதித்தமிழ்ச் சித்தர்களின் வாழ்வியல் ஞானத்தந்திர உபாயங்கள் இருட்டடிக்கப்பட்டன, மறைக்கப்பட்டன.  இந்த ஞான யோகங்கள் எல்லாம் அன்றைக்கு நம் நாட்டில் இருந்த குருகுலங்களில் ஆசார்யர்களாலும் குருமார்களாலும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது.  இதைத்தான் இப்பொழுது பிரமஞான குருகுலம் மீட்டெடுத்து எம்மிடம் வரும் மாணவர்களுக்குப் போதிக்க ஆரம்பித்திருக்கிறோம்.

உங்கள் உடலின் ஆற்றலையும் மனதின் ஆற்றலையும் ஆன்மாவின் ஆற்றலையும் உயிரின் ஆற்றலையும் இறைஞானத்தின் ஆற்றலையும் பிரமத்தின் ஆற்றலையும் பழுதில்லாமல் மாசில்லாமல் நீக்கமற முழுமையாகக் கற்றுக் கொண்டு இல்லற வாழ்விலும் ஞான வாழ்விலும் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த சுடராழி தவத்தின் ஒருபகுதியான பிரமஞானக் கிரியாவின் அனைத்து நுட்பங்களையும் தந்திரங்களையும் உபாயங்களையும் கற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

அது உலகத்தில் காகபுஜண்டராலும் அகத்தியராலும் போகராலும் பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியாலும் வடிவமைக்கப்பட்ட பிரமஞான குருகுலத்தில் மட்டுமே ஆதி முதல் இதுகாறும்வரை கற்றுக் கொடுக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் பிரம ஞானத்தை அடையும்படி செய்விக்கப்பட்டு வருவதை பரிபூரணமாகச் செய்து வருகிறோம்.

காயத்ரி மந்திரம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.  இதை சிலபேர் ஜெபமாக செய்து வருவீர்கள்.  சிலபேர் ஒலியலையில் கேட்பீர்கள்.  சிலபேர் மந்திரமாக உபதேசம் பெற்றிருப்பீர்கள்.  அதன் பொருள் என்ன – “எந்த மேலான ஒளிக்கடவுள் வெளியில் உள்ள அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குகின்றதோ, அவரே என் உள்ளத்தில் உள்ள அக இருளையும் போக்கட்டும்”.

இங்கே பிரம ஞான குருகுலத்தில் காயத்ரியின் மையக்கருவைத்தான் போதிக்கிறோம். சுடராழித் தவத்தை மாணவர்கள் பயின்று வரும்போது அவர்களுக்குள் ஒளிநிலைகளை பலவாறு அனுபவித்து வருகிறார்கள்.  இதுவரை அவர்கள் எவ்வளவோ தியான முறைகளைப் பயின்றிருக்கிறார்கள்.

இந்த ஞானக் கல்வியைக் கற்று பிரமவித்தையைச் செய்து கொண்டிருக்கும் போது, இறைவனே ஒளியாக எழுந்து நம்மை வழிநடத்திச் செல்வான் என்று எம் குருநாதர் அடிக்கடி சொல்வார்கள்.

பிரம ஞானத் தவம்

பிரம ஞானத் தவத்தில் ஆழ்ந்து செல்லும்போது சாதகனுக்கு பத்து அறிவு நிலைகள் தோன்றும். மனிதர்கள் வெறும் ஆறறிவு நிலையிலேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவை தொடு அறிவு, சுவைக்கும் அறிவு, முகரும் அறிவு, பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு ஆகிய புலனறிவுகள் ஐந்தோடு ஆறாம் அறிவான சிந்திக்கும் அறிவை மனிதக்குலம் மட்டும்தான் பெற்றிருக்கிறது.

அறிவு என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறி + உ = அறிவு.

என்றால் உகாரம், உயிர் என்று பொருள்.

உன் உயிரை அறி என்பதே அறிவாகும்.

உயிர் இல்லாமல் எந்த ஜீவராசியும் மண்ணில் வாழ இயலாது. அந்த உயிரை அறியும் கல்வியைத்தான் மனித குலம் முதலில் கற்கவேண்டிய கல்வியாகும். உயிரைக் கற்காத, உயிரை அறியாத, உயிரில்லாக் கல்விகளைக் கற்று என்ன பயன்? கடைசியில் செத்துப் போகத்தான் இக்கல்விகள் உதவிடும். சாகாக் கல்வியே மெய்க்கல்வி. மற்றவை எல்லாம் பொய்க்கல்வி.

அடுத்ததாக ஏழாம் அறிவு இருக்கிறது. அதன் பெயர் குறிப்பறிவு. குறிப்பால் உணர்ந்து கொள்ளும் அறிவு. இதை ஆங்கிலத்தில் Intuition என்பார்கள்.

அடுத்த எட்டாம் அறிவே மெய்யறிவு ஆகும். இது ஞானிகளின் முத்தர்களின் அறிவாக இருக்கிறது. இந்த மெய்யறிவுக் கல்வியைத்தான் எங்கள் பிரமஞான குருகுலம் இப்போது மனித சமுதாயத்திற்குக் கற்றுக் கொடுக்கும் மெய்வழிப்பணியை சிறப்பாக செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்தது ஒன்பதாம் அறிவு.  அது நுண்மான் நுழைபுலன் அறிவு.  இது சித்தர்களின் அறிவாக உள்ளது. இறைவனின் திருவடியானது மனித தலையின் மையத்தில் அண்ணாக்கு மேலே சிர நடுவுள் இருப்பதாக நம் தமிழ்ச் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.  அந்த இடத்திற்குள் நுழையும் அறிவைப் பெறுதலே ‘நுண்மான் நுழைபுலன்’. இந்த அறிவைப் பெற்றே உள்ளே இருக்கும் மலர்ச் சுடரான திருவடிகளைக் காண்பதே சுடராழித் தவம். இறைவன் திருவடிகளைக் காணாதவர் எல்லாம் மரணத்தைத் தழுவிவிடுவார்கள்.

மனிதன் மெய்யறிவினைப் பெறாமல் இந்த ஒன்பதாம் அறிவைப் பெற்றுவிட முடியாது.  சுடராழி தவத்தின் வாயிலாக எம் குருகுல மாணவர்களுக்கு பதினைந்தாம் நிலையில் சுடராழியில் இந்த அறிவைப் பெற்றுவிடும் சூட்சுமம் ஞான உணர்வாகக் கொடுத்து பிரம நாடியின் வாயிலாக நுண்மான் நுழைபுலத்தில் சென்று உணர்ந்திடும் ஒன்பதாம் அறிவு கொடுக்கப்படுகிறது.  எனவே, இந்த ஒன்பதாம் அறிவான சித்தர்களின் அறிவினை அடைந்தால்தான், மரணத்திலிருந்து தப்பிக்க முடியும்.

இறுதியாக பத்தாம் அறிவான வாலறிவு.  இது கடவுளின் அறிவான ஒளியறிவு எனச் சொல்லப்படுகிறது.  இது அருளறிவு என்றும் சொல்லப்படும்.  இவ்வறிவை இறைவன் அருள் ஒன்றாலேதான் பெற முடியும்.  திருவருட் பிரகாச வள்ளலார் இதற்கு சாட்சியாக நம்மிடையே இன்றும் இருக்கிறார்கள். எம்குருநாதரும் இதற்கு ஆதாரமாக தற்போது ஒளிதேகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்த ஒளியறிவை எம் மாணவர்கள் ஆரம்ப நிலையிலிருந்தே பெற வேண்டும் என்று எண்ணியே சுடராழி தவத்தின் முதல்நிலையிலிருந்தே கற்றுக் கொடுத்து வருகிறோம்.

இந்த பத்தாம் அறிவான அருளறிவு ஒளிமயமானது.  இந்த ஒளி ஒரு விதையைப் போன்று இருக்கும்.  இதுவே உயிர் எனப்படும்.  இவ்விதை மனித மூளையின் மையப் புள்ளியில் அமைந்துள்ளது.  இது மிக மிகப் பாதுகாப்பாக வேறொரு பரிணாமத்தில் இறைவனால் வைக்கப்பட்டுள்ளது.  இந்த விதையை தொட்டு ஊக்கப்படுத்திவிட்டால் இந்த விதை வெடித்து ஒரு மரமாக தன்னை வெளிப்படுத்திப் புதுப்பித்துக் கொண்டு வளர ஆரம்பிக்கும்.

இந்த அருள் மரத்தின் காந்த சக்தி மனித உடலெங்கும் பரந்து விரிந்து வியாபித்து அன்புருவாக மாற்றம் கொண்டுவிடும்.  முடிவில் இறைவனின் கருணையால் இன்புருவாக மாறி, என்றும் அழியாத ஒளியுடலாக சித்தி பெற்றுவிடும்.  பத்தாம் அறிவில் நடக்கும் செயல்பாடுகளைத் தான் இங்கு சொல்லியுள்ளோம்.

எந்த விநாடியும் வாலறிவு என்ற முற்றறிவை அடைவதே மனித இலக்கு என்பதை மனிதன் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு சித்தமானது சிவமாம் ஒளி நடனத்தை நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பே நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடல் முழுமை நனைந்து, நனைந்து சிவமாகவே மனித தேகம் மாறிவிடும்.

மனித தேகத்தில் இருக்கும் மலக்கூடுதான் மரணத்திற்குக் காரணம்.  மனித தேகத்தில் கழிவுகள் தோன்றாதவாறு உடலை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.  அதுதான் சுத்த தேகம்.  இந்த அற்புதக் கருத்தை ஞானத்தை பிரம விஞ்ஞானத்தை இன்றைய உலகிற்கு கொடுத்த்து நம் முப்பாட்டன்களான தமிழ்ச் சித்தர்கள் அளித்தக் கொடையாகும்.  இந்த கொடையைத்தான் இப்போது எங்கள் பிரமஞான குருகுலமானது பிரமஞான தீக்ஷையின் வடிவில் கொடுத்து வருகிறது.

மனித மலம் தூல மலமாகும். ஆனால், சூக்குமத்தில் மூன்று மலங்கள் மனிதனுக்கு உண்டு.  அதை சைவ சித்தாந்தம் மும்மலங்கள் என்று உரைக்கிறது.  அவை ஆணவம், மாயை, கன்மம் ஆகும்.  இந்த மும்மலங்கள் மனித கண்களுக்குப் புலப்படாத சூக்கும மலங்களாக இருக்கின்றன.  மனம், அறிவு, உயிர் ஆகிய மூன்றும் இந்த மும்மலங்கள் இருக்கும் பாதையின் வழியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் மனிதன் இம்மும்மலங்களை சுட்டறுத்து வென்றெடுக்க வேண்டும். மும்மலங்களை எப்படி சுட்டறுப்பது என்பதை சுடராழி தவத்தின் வழியாக எம் குருகுல மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறோம்.  மும்மலங்கள் சுட்டறுக்கப்பட்டுவிட்டால், அந்த ஆத்ம சாதகனுக்கு மூன்றாவது திருவடியும் அதாவது நெற்றிக் கண்ணும் அதற்கடுத்து தச நாதங்களும் அதாவது மணி, கடல், யானை, குழல், மேகம், அணி, வண்டு, தும்பி, பேரிகை, யாழ் நாதங்களும் கேட்கும்.

இன்று எம் பிரமஞான குருகுலத்தின் மாணவர்கள் மூன்றாம் திருவடியையும் பத்து நாதங்களில் சில நாதங்களை கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஞான அனுபவங்களை பின் சொல்லும்போதே நீங்கள் நேருக்கு நேராக கேட்டு இன்புறலாம்.

இந்த ஞான அனுபவங்கள் எமக்கு தவத்தில் ஆழ்ந்த 11 ஆம் ஆண்டில் கிடைக்க ஆரம்பித்தன.  ஆனால், எம் குருகுல மாணவர்கள் ஒரே வாரத்திலேயே இந்த ஞான அனுபவங்களைப் பெற்று வருகிறார்கள். இதுதான் மெய்க்கல்வி எனப்படும் சாகாக் கல்வி.  நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் நமக்கு கொடையாகக் கொடுத்துச் சென்ற சுந்தரானந்த சுடராழித் தவம்.

இவ்வாறு தேகத்தைச் சுடராழியால் சுத்தம் செய்து கொண்டால், சித்த சுத்தி உண்டாகும்.  சித்தம் சுத்தமானால் ஆத்ம சுத்தி எளிதில் கைவரப் பெறும்.

புலனின்பங்களாலும் மும்மலங்களான ஆணவம், மாயை, கன்மங்களால் நம் உயிரானது மொக்காகக் கூம்பி இருக்கிறது. மலராக இருக்க வேண்டிய உயிர் மொக்காகக் கூம்பிக் காணப்படுகிறது. இந்த கூம்பிய உயிரைத்தான் தாமரை மலரைப் போன்று நன்றாக மடல் விரித்து, இதழ் விரித்து விரிய வைக்க வேண்டும்.  சுடராழித் தவம் அவ்வேலையைத்தான் சிரமேற்கொண்டு செய்து கொண்டிருக்கிறது.  அதனால் தான் தலைப்பகுதியில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரைப் பூவை சித்திரமாக நம் முன்னோர்கள் உபமானப்படுத்திச் சென்றார்கள்.  தாமரைப் பூதான் நம் உயிர்.  கூம்பிய உயிரை சுடராழித் தவம் ஒன்றுதான் ஆயிரம் இதழ்களையும் விரிய வைக்கிறது.

மொக்காக கூம்பி இருக்கும் நம் உயிரை அன்பாலும் பக்தியாலும் ஜீவகாருண்யத்தாலும் அருளாலும் மலரச் செய்தால், அதன்மேல் இறைவன் வந்து அமர்ந்து கொண்டு நமக்கு அவனருளால் அமுதம் அளிப்பான்.  இந்த அமுதத்தை உண்டால் சிரஞ்சீவியாய் வாழலாம்.  இந்த அமுதங்கள் ஐந்து உண்டு.  அதில் முதல் அமுதத்தை எங்கள் குருகுல மாணவி ஒருவர் உண்டு வருகிறார்.

இங்கு யாம் சொல்லும் செய்திகள் அனைத்தும் இந்த பிரமஞானக் கிரியா நுலில் விரிவாக கொடுத்துள்ளோம்.  நூலில் சொல்லப்படாத விஷயங்களையும் இங்கு சொல்லிக் கொண்டு வருகிறோம்

தமிழ்ச் சித்தர்கள்

நம் தமிழ்ச் சித்தர்கள் நமது தூல தேகத்தின் உள்ளே அழுகாத, அழியாத, மரணத்தை வெல்லக்கூடிய வேறொரு ஒளிப்பொருள் உள்ளே இருப்பதாக சுடராழி தவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். அதன் பெயர் மெய் என்று அழைத்தார்கள். மெய் என்றால் அது உண்மை, ஒளி, ஒலி, அழியாத எனப்படும். எது அழியாத, அழிக்கப்பட முடியாத பொருளோ அதுவே மெய்ப்பொருள் ஆகும். அந்த மெய்ப்பொருள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மெய்ப்பொருளை அறியாமலும், கைவல்யப்படுத்தத் தெரியாமலும் மனித குலம் அஞ்ஞானம் எனும் மும்மலங்களிலேயே வாழ்ந்து செத்துப் போகிறது.

இனி எந்தவொரு தமிழனும் தமிழச்சியும் மும்மலங்களை வெல்லாமல் மெய்ப்பொருளை அறிந்துகொள்ளாமல் தன்னை அறியும் மெய்யறிவை அடையாமல் இம்மண்ணைவிட்டுப் போகக்கூடாது. தன்னை எப்படி அறிவது என்பது பற்றிய நம் முன்னோர்களின் சில பாடல்களை ஆதாரமாக உங்கள் முன்னே சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே” (திருமந்திரம்-355)

இவ்வாறு,

“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

  முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்

  பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்

  சென்னியில் வைத்த சிவன் அருளாலே”              

(திருமந்திரம்-2550)

“தன்னைத் தானும் அறிந்து சடத்தைச் சுத்திகள் செய்து

அன்னை அம்பிகைப் பாதம் அவ்வும் உவ்வால்  அறிந்து”  

(திருவள்ளுவர் ஞானவெட்டியான்-923)

“உன்முகம் போல் கண்ணாடிக்குள்  ஒருமுகம் கண்டாற்போல்

 சின்மய வடிவின் சாயை சித்துபோல் புத்தி தோன்றும்

 நின் மனோவிருத்தி அந்த நிழல் வழியாய் உலவும்

 தன்ம நன்மகனே இத்தைத் தான்அன்றோ ஞானம் என்பார்” 

(கைவல்ய நவநீதம்-2-11)

“கண்ணாடி தன்னில் ஒளிபோல் உடம்பு அதனுள்

  உண்ணாடி நின்ற ஒளி”

(ஔவை ஞானக்குறள்-231)

  “கண்ணாடி முகம் போலக் காணும் பாரு”

(அகத்தியர் பரிபாஷைத் திரட்டு-5-65)

“என்னையே நான்அறிய இருவினையும் ஈடழித்துத்

   தன்னை அறியத் தவம் எனக்குச் சொன்னாண்டி” 

(பட்டினத்தார் அருள்புலம்பல்-22)

“தன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்

  தன்னை அறியாதவரே தன்னைக் காட்டுவார்”

(பாம்பாட்டிச் சித்தர்-95)

தன்னை அறிதல் என்பது தனக்குள்ளே விழிமலர்களால் பார்ப்பது என்று பொருள்.  விழிகளை எப்படி உள்நோக்கி திருப்புவது?  அதை ஞானகுரு தொட்டுக் காட்டிச் சொல்லிக் கொடுப்பார்.  தன்னுடைய எண்ணங்களையும் உணர்வு களையும் தானே உள்முகமாகத் திரும்பி, உள்ளே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்ப்பதைப் போன்றது இந்த தன்னை அறியும் செயல்.

இவ்வாறு நம் முன்னோர்கள் நம்மை நாம் அறிவது பற்றிய அநேக விஷயங்களைக் கூறிச் சென்றுள்ளார்கள். இதையெல்லாம் நாம் இந்த கலியுகத்தின் ஆசை, மாயைகளில் சிக்கிக் கொண்டு மறந்தே போனோம்.  தன்னை அறியாத அறிவும் அறிவல்ல, தன்னைப் பற்றி அறிய உதவாக எந்தக் கல்வியும் வித்தையே அல்ல.  இதை நாம் முழுமையாக உள்வாங்கிப் புரிந்து கொள்ள வேண்டும்.எத்தனைக் காலத்திற்குத்தான் அறியாமையிலேயே வாழ்ந்து வீணே வாழ்க்கை கழித்துக் கொண்டிருப்பது?  சிறிது சிந்தியுங்கள் என்று இவ்விழாவின்வழியே கேட்டுக் கொள்கின்றோம்.

சித்தர்களும் ஞானிகளும் வள்ளலார் அவர்களும் நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், நாம் எப்போதும் புருவ மத்தியிலேயே கவனத்தை வைத்துக் கொண்டு உலக வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று.  புருவ மத்தி என்பது நமது திருவடிகளே என்று எத்தனை பேருக்கு இன்று தெரியும்?

இந்த திருவடிகளின் உள்ளே இருக்கும் உயிரில் ஜோதியாக இருக்கும் ஆண்டவனைப் பார்த்துக் கொண்டே இருப்பதுதான் உண்மையான மெய்த்தவமாகும்.  இப்படித்தான் உயிரின் திருவடியை திறந்து கொள்ள வேண்டும்.  அடுத்து உயிர்க்கண்ணின் உள்ளே இருக்கும் இறைக்கண்ணை அதாவது அருள் கண்ணை குருமூலம் திறந்து கொள்ளும் தந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  குருவல்லாது உயிர்க்கண்ணையோ அருள் கண்ணையோ திறந்து கொள்ள இயலாது.  அருள் கண் திறக்க இறையருள் மிக மிக முக்கியம்.  குருவருள் இருப்பின் இறையருள் வெகு சாத்தியமே.

மனித தேகத்தில் உள்வானில், திருச்சிற்றம்பலத்தில் செம்பொருளாக சிவந்த துளியாகத் தோன்றுவதே அருளமுதம்.  அதை உண்டவரே மரணத்தை நீத்தார் ஆவர் என்பதுதான் ஞானக் குறிப்பு.

அகவானத்தில் இருந்து மனிதனின் உயிர் இயங்கி வருகிறது.

உயிர்களுக்கு மழையே அமுதம்.

மனிதனுக்கு அவனுக்கு உள்ளே இருக்கும் வானமே அமுதம்.

உயிர் அடங்குமிடம் வான் அல்லது வெளி.  குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அது சூரியனின் மையப்பகுதியான பரப்பிரமத்தின் உள்ளே உயிர் ஒடுங்கிக் கொள்ளும்.

மலம் உற்பத்தியாகின்ற உடலை அமுதம் உற்பத்தி செய்கின்ற தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் பிரம ஞானத் தவத்தின் அடிப்படைக் கோட்பாடு.  இவ்வாறு செய்து கொண்டவர்கள்தான் சித்தர்கள்.

வான்பொருள்

மனித குலம் தான் ‘வான்பொருள்’, தான் ‘மலமல்ல’, தான் ‘அமுதம்’, தான் அழியாத தேகத்தைப் பெற்றவன்’, தான் ‘ஒளி தேகி’, தான் ‘வானுடல் பெற்றவன்’, தான் ‘ஞான ஒளியுடல் பெற்றவன்’ என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தான் என்பது சுத்தம் செய்யப்பட்டு தேகம், மனம், உயிர் என்று இவற்றையெல்லாம் தானே பகலும் இரவும் ஓயாது சுடராழித் தவத்தில் உணர்ந்து, உணர்ந்து, தன்னுடைய பௌதீக உடலை மலக்கலப்பிலிருந்து நீக்கி சுத்திகரித்து அமுதவுடலாக ஆக்கிக் கொள்வது என்று பொருள். அதற்கு மனிதனுக்குள் இரசவாதம் நடைபெற்றே ஆக வேண்டும். ரசம் என்பது திருவடிகளில் அமைந்துள்ள கண்ணீரன்றி வேறில்லை. திருவடிகள் ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கிறது.

ஆ + காயம் = ஆகாயமாகும்.

ஆ என்றால் பசு அல்லது உயிர் எனப்படும்.

காயம் என்றால் உடல்.

ஆகாயம் என்றால் உயிருடல் என்பதாகும்.

இப்படி ஆகாயத் தத்துவமான திருவடிகளின் வழியே பிரம நாடியைப் பிடித்துக் கொண்டு மனித சிரசின் மத்தியில் இருக்கும் வெற்றிடத்தை வெட்டவெளியை தவத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து எண்ணியிருப்போமென்றால், அங்கே உள்ள உயிரானது விகாரம் அடைந்து தன்னிடம் உள்ள அமுதத்தை உள்நாக்கு வழியே சொட்டுச் சொட்டாக தைலதாரையைப் போல ஒழுகி, ஒழுகி தேகம் காயசித்தியைப் பெற்றுவிடும். சித்தர்களின் வாழ்வியல் ஞானமுறை இதுதான்.

நமது உயிருக்கு ஆத்மா, ஆன்மா என்று வேறுபெயர் இருக்கிறது.  ஆன்மாவின் விழிப்புதான் உண்மையான விழிப்பு.  எப்போதும் உறக்கத்தில் இருக்கும் ஆன்மா இறைவனின் குரலுக்கு மட்டுமே விழிக்கிறது.

இறைவனின் குரலைக் கேட்கும் சக்தி மனித உடலில் ஆன்மாவிற்கு மட்டுமே இருக்கிறது. மனதுக்கு அந்த சக்தி இல்லை. நன்மை, தீமை, இன்பம், துன்பம் ஆகியவற்றை வேண்டுமானால் மனித மனம் தீர்மானிக்கலாம், மனிதனை வழிநடத்தலாம்.

ஆனால், இறைவனை அடையாளம் காண்பதற்கு ஆன்மாவால் மட்டுமே முடியும். ஆன்மாவை விழிப்பு நிலைக்கு கொண்டுவரும் ஒரேயொரு ஞானத் தந்திர முறையை சித்தர்கள் மனித குலத்திற்கு கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் சுடராழித் தவம். ஒளியை ஒளி கொண்டுதான் தூண்ட முடியும். அதைப்போல ஆன்மா எனும் உயிரொளியை சுடராழியானது அதன் நெருப்பாறையும் மயிர்ப்பாலத்தையும் தாண்டிக் கொண்டு போய் ஆன்மாவை காண வைக்கும், பேச வைக்கும், உணர்வாய் ஊற வைக்கும். இதைப்பற்றி இந்த பிரமஞானக் கிரியா நூல் விரிவாக உங்களிடம் பேசுகிறது.

மனதிற்கு அப்பால் உள்ள ஆன்மாவில் நின்று ஆன்ம விழிப்பு பெற்று இறைவனின் சொல்லைக் கேட்டுப் பழகிக் கொண்டுவிட்டால், மனித குலத்திற்கு எல்லாமே சொர்க்கம்தான். அங்கே நரகத்திற்கொப்ப பிரச்சினைகள் நடந்தேறுவதே இல்லை. ஒவ்வொரு நாளும் உங்கள் உயிரின் குரலை ஆன்மாவின் ஒலிகளை எங்களைப் போல கேட்டு வாழ்ந்து வரலாம். அதைச் சொல்லிக் கொடுக்கிறது பிரமஞான குருகுலம்.

இறைவனின் குரலைக் கேட்காமல் எந்தச் சித்தரும் எதுவும் செய்வதில்லை. இறைவனுடன் நேரடித் தொடர்பு கொள்வதே மனித வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

உடல் மரணத்தை வென்றவர் சித்தர்.

உணர்வு மரணத்தை வென்றவர் ஜீவன்முக்தர்.

உயிரொளியின் மரணத்தை வென்றவர் ஞானஒளிதேகி.

“கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள” (திருக்குறள்-1101)

உங்கள் மூன்றாம் திருவடியையும் இறைத் திருவடியையும் எப்படித் திறக்க வேண்டும் என்று இந்த பிரமஞானக் கிரியா நூல் எங்கும் ஏழுவித தீக்ஷை தந்திரங்களில் எதையும் மறைக்காமல் சித்தர்கள் கண்டெடுத்துக் கொடுத்துச் சென்ற கருத்தாழங்கள் எதுவும் உடைபடாமல் அப்படியே உள்ளவாறே எழுதியிருக் கின்றோம்.

பிரமஞானக் கிரியாவில் எங்கள் பிரம ஞானக் குருகுலத்தில் கற்றுத் தரப்படும் பஞ்சக் கிரியாக்களில் இரண்டாம் கிரியாவான பிராணக் கிரியாவின் முதல் நிலை முதல் இறுதிநிலை வரை உள்ள முழு நிலைகளை கோட்பாடுகளாகவும் அவைகளை எப்படிச் செய்வது என்ற செய்முறை நடைமுறைகளாகவும் அவற்றில் ஏற்படும் பலாபலன்களையும் என்று விரிவாக அறிவியல்பூர்வமாக நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆவணப்படுத்தி வெளிப்படுத்தி உள்ளோம்.

இந்தப் பிராணக் கிரியாவின் உதவியின்றி சுடராழித் தவத்தில் சாதகன் வெற்றி கொள்வது இயலாத காரியம். அதாவது உயிர்மூச்சான பிராணனையும் இறைமூச்சான பிரபஞ்சத்தின் காந்தப் பிராணனையும் பற்றிய தகவல்களை வேண்டுமளவுக்கு இந்நூலில் கொடுத்துள்ளோம்.

நீங்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண சக்தியானது உங்கள் உடலுக்குத் தான் தேவைப்படுகிறது. ஆனால், உங்கள் உயிருக்குத் தேவைப்படும் உயர்காந்தப் பிராணனனை எவ்வாறு சுவாசிப்பீர்கள்? உட்கிரகிப்பீர்கள்? இந்த இரண்டு பிராண ஆற்றல்களும் நமக்கு சூரியனிடமிருந்துதான் கிடைக்கிறது. இந்த சூரியனிடமிருந்து அமுதக் காற்றும் வருகிறது, விஷக்காற்றும் வருகிறது. இந்த அமுதக்காற்றை இன்று எத்தனை பேர் சுவாசித்து உள்ளே உயிருக்குள் செலுத்துகிறீர்கள்?

பிரம ஞானத் தவத்தில் இருப்பவர்களைத் தவிர யாருமே அமுதக் காற்றை உள்வாங்குவதே இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. இனியும் எம் தமிழ்ச் சமுதாயம் விஷக்காற்றை உண்ணக்கூடாது, அவர்கள் வாழ்நாள் முழுக்க அமுதக்காற்றை மட்டும்தான் உண்டு பிரம ஞானத்தை அடைந்திட வேண்டும் என்று கடந்த 16 ஆண்டுகளாக எம் குருநாதரிடம் இறைஞ்சிக் கேட்டு இந்த சத்தியத்தை, மெய்ப்பொருளை, அமுத வித்தையை, சுடராழி தவத்தின் வழியே பிரமஞான குருகுலத்தின் மூலமாக கொடுத்துக் கொண்டு வருகிறோம். யான் பெற்ற இன்பம் பெறுக எம் தமிழ்க்குலம் என்றே சுடராழித் தவத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம். நீங்கள் அனைவரும் உங்கள் உயிருக்கான உணவினை நித்தம் நித்தம் கொடுத்துக் கொண்டு வரவேண்டும் என்று பணிவோடு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அமுதக்காற்று

நீங்கள் சுவாசிக்கும் காற்றும், அருந்தும் நீரும் காற்றுச் சக்தியையே குறிக்கிறது.  அதாவது ஆக்சிஜன்.  மேலும் இந்தக் காற்றில் பால் சக்தி ஒன்று உள்ளது.  அதுவே பிராண சக்தியாகும்.  இந்த காற்றின் பால்சக்தி முதலில் வெளிவரும்போது அமுதமாகவும் சூரியனின் உதயம் ஆரம்பித்து 7 1/2 நாழிகை அதாவது 3 மணி நேரம் கழித்து விஷமாகவும் மாறிவிடுகிறது. சூரிய உதயம் 6 மணி அல்ல.

அமுதக்காற்றை மனிதன் உண்ணக் கற்றுக் கொண்டுவிட வேண்டும்.  இயற்கையில் வாழ, வாழ அமுதக் காற்றை உயிர்ஆற்றல் உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.

நம் தேகத்தின் உள்ளே உயிரானது சதா ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது.  அந்த ஒளி ஆற்றல் குறைவுபடாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தால் நம் உயிருக்கு எந்தவித நஷ்டமும் இல்லை.  அதற்கு அமுதக்காற்றை நம் உயிருக்குள் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.  எங்கள் குருகுலத்தில் இவ்வித்தைதான் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இன்றைய வாழ்வியல் நிலைகளில் மனித குலம் விஷக்காற்றைதான் முழுமையாக சுவாசித்துக் கொண்டிருக்கிறது.

மனிதனின் தேகத்தில் அவன் உயிரில் அமுதக் காற்றின் உயர்காந்தப் பிராண ஆற்றல் இல்லாமல் போனதுதான் இன்றைய அத்தனை வன்முறைகளுக்கும் தவறான செயல்பாடுடைய வாழ்க்கைக்கும் தீய நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.  இவையெல்லாம் மனித குலம் விஷக்காற்றை மட்டுமே உண்டுகொண்டு வாழ்வதால்தான்.

மனித குலம் அமுதக்காற்றை உண்ண ஆரம்பித்துவிட்டால், சத்திய லோகம் மீண்டும் இங்கேயே பிறப்பெடுத்துவிடும்.  அதற்கு மனித குலம் அமுதக்காற்றை அது பூமிக்குள் வரும் நேரத்தில் விழித்திருந்து தவநிலையில் உள்வாங்கி உயிருக்குள் நிறைத்துக் கொண்டு வரவேண்டும்.இதுவொன்றே இன்றைய கலியுகத்தின் தீயச் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்.

அமுதக்காற்றை எப்படி சுவாசிப்பது? எப்படி உண்பது? என்பதைச் சொல்லிக் கொடுக்காத ஆன்மீக மையங்கள், நிறுவனங்கள் இருந்தென்ன லாபம்.  எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகத்தான் இன்றைய ஆன்மீகப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  இந்நிலையெல்லாம் மாற வேண்டும்.

இறைவன் கோயிலில் இல்லை, தனக்குள்தான் இருக்கிறான் என்பதை குருமகா சந்நிதானங்களும் ஆன்மீகப் பெரியோர்களும் சான்றோர்களும் மனித குலத்திற்கு உணர வைத்து கற்றுக் கொடுக்க வேண்டும்.

இன்றைய மாணவர்களுக்கு நமது ஆன்மீகத்தை, ஆன்மீக ஞானங்களை, சித்தர் பெருநெறிகளை, பிரம ஞானத்தை கட்டாயப் பாடமாக்கி கல்வி நிறுவனங்களும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கற்றுக் கொடுக்க வேண்டும்.  இன்றைய கல்வி நிறுவனங்கள் வயிற்றுப் பாட்டுக்குத்தான் அழியும் பொய்க்கல்வியைக் கற்றுக் கொடுக்கிறது.  யார்தான் மெய்க்கல்வியைக் கற்றுக் கொடுத்து, இந்த சித்தர் பெருநெறியாம் சாகாக்கல்வியை அழியாமல் காப்பாற்றுவது?

தமிழ்க்கல்லூரிகள்கூட இந்த இறைஞானத்தை சித்தர்களும் வள்ளலாரும் கூறிய மரணமிலாப் பெருவாழ்வு எனும் மெய்ப்பொருள் கல்வியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க யோசிக்கக்கூட தயாராக இல்லை. இந்நிலை இனியும் தொடராமல் இருக்க வேண்டும்.  அதற்கு வேண்டுகோளாக நமது மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் 20வது பட்டமான ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் அய்யா அவர்களை தாழ்மையோடு எங்கள் பிரமஞான குருகுலத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

தாங்கள் இறைத்தொண்டாற்றி வரும் தமிழ்க்கல்லூரியில் மெய்ப்பொருள் கல்வியை பாடமாகவும் செய்முறைக் கோட்பாடுகளாவும் வைத்து மாணவர்களின் உயிர்களுக்கு தமிழ் ஒளியை உணர்ந்தும், நெகிழ்ந்தும் ஊட்டி, கல்வி கற்கும் மாணவர்களுக்கு குலம் விளங்க அமுதப்பாலை தாயாய் குருவாய் இறையாய் நின்று ஊட்டி வளர்த்து நம் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பிரமஞான வித்தை அழிந்து போகாமல் காப்பாற்றிக் கொடுக்க வேண்டுமாறு இவ்விழாவின்வாயிலாக மிகுந்த பணிவன்போடும் தாழ்மையோடும் தங்கள் திருவடியின் முன்னே கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள்மூலமாக அந்த தமிழ்ப் பிரம ஞானக் கலை உயிர்பெறட்டும்.  அதன் விதைகளாக எங்கள் பிரம ஞான குருகுலம் விளங்கும்.  தங்கள் ஆதீனம் விதையின் உயிராக இருக்கட்டும்.  விதைகளும் விதையின் உயிர்களும் நன்றாக வேரூன்றப்பட்டு விட்டால், தமிழ்க் கலையின் ஜீவநாடியாம் சாகாக்கல்வி யுகம் கடந்து சுடரொளிவிட்டு எங்கும் சிவானந்தப் பரவசமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கும்.

நம் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து மாணவர்களும் இக்கலையை பயிலாமல் தவம் செய்யாமல் அவர்களின் வாழ்நாளை ஆரம்பிக்கவே கூடாது எனும் அளவுக்கு அவர்களுக்குள் தமிழின் அமுத ஞானக்கலையை ஞானமாய், உயிராய் விதைக்கப்பட்டே ஆக வேண்டும்.  அதற்கு குருமகா சந்நிதானம் ஆணிவேராக இருந்து ஆசிர்வதிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆத்மா என்பது அன்பின் ஒளி நிலை.

இறை என்பது அருளின் ஒளி நிலை.

இருளை நீக்கி ஒளி ஊட்டுவதே ஞானம்.

அந்த ஞானத்தை ஊட்டி மனித உயிர் வளர்ப்பதே பிரமஞான குருகுலத்தின் நோக்கம் என்று கூறி, இவ்விழாவை சிறப்பித்துக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!!