சத்தியத்தை நேருக்கு நேராக சந்தி
இவ்வுலகத்தில் மறைக்கப்பட்ட பிரம சத்தியத்தை முதலில் எம் குருதேவரின் ஆசிர்வாத்த்தோடும் அனுமதியோடும் உங்களுக்கு இங்கே பிரமஞானக் குருகுலத்தில் கற்றுக் கொடுக்கிறோம்.
இக்கலையைக் கற்றோர் முடிவாய் பிரம ஞானத்தைக் கற்றிருப்பார்கள். பிரம ஞானமாய் உருமாறியிருப்பார்கள். அதுதான் இக்கலையின் அதிசயமே. உங்கள் உயிரை நீங்களே நேருக்கு நேராக கண்டு இன்புறுவீர்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்குக் கிடைக்கும் ஞான அனுபவங்கள் இவற்றை பறைசாற்றி வந்து கொண்டிருக்கும். இதற்கு எம் மாணவர்களே உங்களுக்கு சாட்சிப் பத்திரமாக இருக்கிறார்கள்.
பிறவியை அறுப்போரே இப்பிரம ஞானத்தைத் தேடி வந்து சேர்வார்கள். சென்ற பிறவியில் விட்டகுறை தொட்ட குறையாக இக்கலை இப்பிறவியில் அவர்களை வந்தடையும். இக்கலையைப் பெற்றோர் பெரும்புண்ணியமும் தவமும் செய்திருக்க வேண்டும். அல்லார்க்கு இக்கலை கண்ணில்கூட தென்படுவது இல்லை. சும்மா வருமோ ஞானம்? சும்மா கிடைக்குமோ தவம்?
பிரமஞானக் கிரியாவைப் போல உங்கள் பிறப்பின் கர்மப் பதிவுகளையும் வினைப் பதிவுகளையும் பிராரப்த (முற்பிறவிகளில்) மற்றும் சஞ்சிதக் (இப்பிறவியில்) கர்மங்களையும் சுட்டறுக்கும் ஞான யோகக் கல்வி இவ்வுலகிலேயே இல்லை. ஒவ்வொரு யோகமும், ஞானமும் பல்வேறு செய்திகளையும் அனுபவங்களையும் சொல்லிச் செல்கின்றனவே அன்றி, அவை உங்கள் உயிரான பிரமத்திற்குள் சென்று தைத்து நிற்பதேயில்லை. ஆனால், பிரமஞானக் கிரியா உங்கள் உயிரின் ஆதிமூலத்தையே அசைத்து, அசைத்து, ஊதி, ஊதி உயிரின் ஒளியைப் பெரிதாக்கி, பெரிதாக்கி மண்ணுக்கும் விண்ணுக்குமாய் பிரம ஒளியைப் பிரகாசிக்க வைத்திடும்.
இக்கலை உங்கள் உயிரைத் தூண்டி சுயம்பிரகாசமாய் சுடர்விட்டுப் பிரகாசிக்க வைத்திடும். உயிரைத் தூண்டும்போதே உங்கள் ஒலியாற்றல்களும் தூண்டப்படுவதை தசவித நாதங்களாய் உங்கள் காதுகளினாலேயே கேட்பீர்கள். உங்கள் உயிரின் ஒளியை ஒளிப் பிரகாசத்தை உங்கள் ஊனக்கண் கொண்டே காண்பீர்கள். இங்கே மறைப்பு ஏதும் இல்லை. சத்தியத்தை நேருக்கு நேராக சந்திப்பீர்கள். சந்தித்தப்பின் அதில் கரைந்தே போய்விடுவீர்கள்.


பிரமஞானக் கிரியா
அனைவருக்கும் தனித்தனி சத்தியம் என்றெல்லாம் இவ்வுலகில் இறைவனால் படைக்கப்படவில்லை. அனைவருக்கும் ஒரே ஒரு சத்தியம்தான். இறைவனுக்கும் அதே நியதிதான். அதுதான் திருவடி மெய்ப்பொருள். உங்கள் வாழ்வின் மெய்மையை, உண்மையை, சத்தியத்தைச் சொல்லும் ஒரே வித்தை, ஒரே கலை இந்த பிரமஞானக் கிரியா மட்டுமே.
இந்த பிரமஞானக் கிரியா உங்களை உங்கள் உயிரோடு சேர்த்து வைக்கும். உங்களை உங்கள் ஆன்மாவிற்கு அடையாளம் காட்டுவிக்கும். உங்களை இறை ஆன்மாவோடு கலப்பிக்க வைத்திடும். உங்களை உங்கள் உயிரின் ஒளியோடு பிரகாசிக்க வைத்திடும். உங்களை அங்கே நடனமாடிக் கொண்டிருக்கும் தில்லைக் கூத்தனோடு நடனமாட வைத்திடும். நடனத்திற்குத் தாளமிட வைக்கும் ஒலிச் சந்தங்களோடு உங்களை ஒலிப்பிக்க வைத்திடும். அங்கே தெரியும் அக்கினிக் குஞ்சோடு கலந்து தண்வெப்பமாய் சுடர்ந்து கொண்டிருப்பீர்கள்.
இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் யார் என்ற கேள்வி சூரியனைக் கண்ட பனிநீரைப் போல கரைந்து போய், அங்கே அவ்விடத்திலேயே ஞானமாய் முளைவிட ஆரம்பிப்பீர்கள். இந்நிகழ்வுகள் தொடர்கதையாய் அரங்கேறி வரும்போது, உங்கள் உயிருக்குள் குருவால் விதைக்கப்பட்ட ஞான விதைகள் ஒவ்வொரு ஞான இலைகளாக துளிர்விட்டு வளர்ந்து பூப்பூத்து காய் காய்த்து ஞாக்கனிகளாக திரண்டு நிற்கும்போது, அங்கே நீங்கள் பிரம ஞானச் சுடராய் இறைவனின் ஆன்ம சிம்மாசனத்தில் வீற்றிருப்பீர்கள்.
பிரமஞானக் கிரியா உங்கள் மனதை வென்றெடுக்கும் கலைகளோடு பேசும். உங்கள் உயிரோடு பேசும். உங்கள் ஆன்மாவோடு பேசும். உங்கள் உயிரின் ஒளியோடு கூடும். ஒலிக்கலைகளோடு இழைந்திடும். சுவாசிக்கும் காற்றோடு கரைந்து போகும். உயர்காந்தப் பிராணனோடு ஒன்றிணைந்திடும். சுழுமுனை நாடியைத் தூண்டிடும். சித்ரிணி நாடியோடு சிங்காரிக்கும். பிரமநாடியோடு பின்னிப் பிணைந்திடும்.
இந்த பிரமநாடியைப் பிடித்திடும்வரை உங்கள் பிரமஞானத் திருவடி தவம் தொடர்ந்து கொண்டிருக்கும். என்றைக்கு பிரம நாடியை அடைவீர்களோ, அன்றைக்கு பிரம ஞானம் சித்தித்திடும். பிரம நாடியைத் தூண்டவும் அந்நாடி எங்கே இருக்கிறதென்று அடையாளம் காணவுமே பலகோடி ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும். சுழிமுனையையே தொட்டுப் பார்க்காத மனிதன் எங்கே பிரம நாடியைத் தீண்டிவிட முடியும்?
ஆனால், இங்கே நம் சற்குருவின் பரிபூரண ஆசீர்வாதத்தாலும் கருணையினாலும் உங்களுக்கு உங்கள் பிரமத்தைத் தொட்டுப் பார்த்தும் முகர்ந்தும் ஆடிப் பாடி மகிழ்ந்து உறவு கொண்டாடிட பிரம ஞானக் கிரியா ஒளிவுமறைவின்றி கற்றுத் தரப்படுகிறது.
பிரமஞானக் கிரியாக்களில் என்ன நடக்கிறது?
பிரமஞானக் கிரியாவில் உங்கள் மெய்ப்பொருளின் ஊசிமுனை துவாரத்தின் வழியே ஒளியாற்றல்கள் உள்ளே சென்று உள்ளிருக்கும் வெட்டவெளியில் நின்றுகொண்டு, விண்ணிலுள்ள ஆறான நெருப்பாற்றை அங்கு வந்து சேர்ப்பித்துவிடும். இதுதான் விண்ணாறு, நெருப்பாறு எனப்படுவது.
இந்த ஊசிமுனை துவார உள்பாதையே மயிர்ப்பாலம். அது வழியே நெருப்பாறு பாய்ந்து வரும். அக்னி கலையிலிருந்து ஒளி வெள்ளம் வரும். அந்த ஒளிதான் தண்ணொளி (தண்+ஒளி=தண்ணொளி). தண் என்றால் குளிர்ச்சி, குளிர்ச்சியான என்று பொருள். விண்ணில் பாய்ந்து வரும் சுடர் நெருப்பு. அது ஒரு சுகமான அக்னியாகும். குளிர்ச்சி பொருந்திய தீ. அதுவே நம் சுயம்ஜோதி ஆகும். சுயம்ஜோதி என்றாலே அது சுகமான, குளிர்ச்சியான தீ, ஜோதி என்று பொருள்.
அப்படி நம் திருவடியின்கண் உள்ள மெய்ப்பொருளின் வழியாக ஒளியாற்றல் ஊடுருவி நம் ஆத்ம ஸ்தானத்தை அடையும் போது அங்கே பிரம ஒளியானது மகிழ்ந்து, மகிழ்ந்து, ஊடாடி, ஊடாடி நம் திருநடனத்தை அதிகப்படுத்தும். அப்போது பிரம ஒளியின் அசைவினால் ஏற்படும் உராய்தலில் நாதங்கள் (ஒலிகள்) நமக்குள் கேட்க ஆரம்பிக்கும். அந்நாதங்கள் பத்துவிதமாக உள்ளதாக நம் சித்தர்கள் வகைப்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அவை இதோ –
“மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே”

“கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்ட ரண்டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கு அல்லாற் றெரியாதே”
ஒளியைக் கண்டு, ஒலியைக் கேட்டு தனக்குள் பேரின்பம் கொள்வோரே வாலையாம் புவனேஸ்வரியின் தரிசனத்தைக் காண்பார்கள். இது எம் குருநாதர் மொழிந்தது. இது சத்தியத்திலும் சத்தியம். குருவால் எமக்கு அருளப்பட்ட அருள்ஞான அனுபவம் இது. நித்தமும் இப்பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். குரு எமக்கு வழங்கிய அருட்கொடை, வரம் என்றுகூட சொல்லலாம்.
பிரம ஞானத் தவம் செய்வோர் நாதம் கேட்கும்போது, அவ்விடத்திலேயே அதாவது கேட்கும் இடத்திலேயே நிலைத்து நங்கூரம்போல நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் விடமுண்ட கண்டனை, நடராஜ மூர்த்தியை, அருட்பெருஞ் சோதியைக் கண்ணாரக் காண முடியும்.
நாதத்தின் முடிவில்தான் இந்த ஒளி தரிசனம் தானே இயல்பாய் நடக்கும். இது தானே பூத்து அருளப்படும் நிலை. இதை தவத்தால் பெற முடியாது. தவத்தின் மெய்விழிப்பைப் பொறுத்து இறையால் அருளப்படும் கொடை இது. இவையெல்லாம் பிரம ஞானக் கிரியாவின் அற்புதங்களில் ஒன்றுதான். அநேக அற்புதங்களும் ஆச்சரியங்களும் மெய் விதிர்க்கும் ரகசிய சூட்சுமங்களும் அநேகம் அநேகம் உண்டு.
ஒவ்வொன்றாக இந்த பிரம ஞானக் கிரியாவில் அனுபவித்து அனுபவித்து மகிழ்ந்து போவீர்கள். தமிழ்ச் சொற்கள்கூட இந்த பரவச பேரின்ப மகிழ்நிலையினை இப்படித்தான் இருக்கிறது என்று வரையறுத்துவிட இயலாது. அதுதான் பிரமஞானக் கிரியாவின் உச்ச ரகசியம்.

ஞான விழி
உடல் தூல நிலையில் இருக்கும்வரை சாவைத் தள்ளிப் போடவே முடியாது. ஆனால், ஒளி நிலைக்கு உடலைத் தயார்படுத்திவிட்டால், ஒளியை எவற்றாலும் அழித்துவிட முடியாது. ஏனென்றால், பிரபஞ்சத்தின் வடிவமே ஒளிதோனே. ஒளியினை ஒளிகொண்டுதான் அறிந்து கொள்ள முடியும்.
ஒளி என்றால் வெளிச்சம் என்று ஒரு பொருளுண்டு. வெளிச்சத்தை எப்படி அழிப்பது? சூரியன் இருக்கும்வரை இவ்வுலகில் வெளிச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதனால்தான் ஒளி தேகத்தை அடைவதுதான் சன்மார்க்கம் என்றார் வள்ளலார் அவர்கள். “தினகரன் போன்ற தேகம் வேண்டும்” என்பார் வள்ளலார். தினகரன் என்றால் சூரியன்.
தேகம் ஒளியாக மாற வேண்டுமென்றால், அது சாதாரண விசயமா என்ன? உயிரானது ஒளியாகத்தான் மனிதனுக்குள் அமைந்திருக்கிறது. ஆனால், உடல் தூலமாகத்தான் இருக்கிறது. அதாவது ஒரு பொருளைப் போன்று அமைந்திருக்கிறது.
இந்த உடலுக்குள் இருக்கும் ஒளியானது உடலின் ஒவ்வொரு செல்களையும் ஊடுருவி ஒளிச்செல்களாக மாறினால்தான், ஒளியுடல் அமைய வாய்ப்பு. என்றால், உடலிலிருந்து உயிரை, உயிரின் ஒளியை தனியே பிரித்தெடுக்க மனிதன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். உயிரைப் பிரித்தெடுத்து விட்டால், இவ்வுடலுக்கு மரணம் நேர்ந்துவிடாதா? மரணம் ஏற்படாவண்ணம் பிரிக்க வேண்டும்.
பாலிலிருந்து வெண்ணையைப் பிரித்தெடுப்பது போல. வெண்ணையைப் பிரித்தப்பின், வெண்ணெய் பாலோடு ஒட்டாமல் மிதந்துகொண்டு இருக்கும். உடலிலிருந்து உயிரைப் பிரித்தெடுத்தப் பின், உயிர் தனியாக இருக்கும். ஆனால், உடலில் ஒட்டாமல். இப்படி பிரித்தெடுக்கப்பட்ட உயிராகிய வெண்ணையை தவக்கனலால் உருக்க வேண்டும். வெண்ணெய் உருகினால் அது உடலுக்குள்ளேதான் எங்கேயாவது ஓரிடத்தில் வழிந்து ஓடும். அந்த இடம்தான் நம் தொண்டைப்பகுதி. வெண்ணெய் உருகும் இடம்தான் உயிர் இருக்கும் இடமான பிணியல் சுரப்பி. பிணியல்தான் உயிர்வாசம் செய்யும் இடம்.
சிரசிற்குள்ளே நடுவே மையப்பகுதியில் அண்ணாக்கு மேலே இந்த பிணியல் சுரப்பி அமைந்திருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இரு விழிகளும் இரு செவிகளும் சிரசிற்குள்ளே ஒன்றுசேரும் ஒரு மையப்புள்ளியில்தான் பிணியல் சுரப்பி இருக்கிறது.
“உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு
நித்தம் வைத்த விளக்கு எரியுதடி வாலைப் பெண்ணே” (அழுகணிச் சித்தர்)
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” (திருமந்திரம்-197)
“மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று” (திருமந்திரம்-1777)
“ஜோதியே சுடரே சூழ் ஒளிவிளக்கே” (மாணிக்கவாசகர்)
“ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்” (திருமந்திரம்-1797)
“உற்றறிந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே” (சிவவாக்கியார்)
இந்த பிணியலின் மையப்பகுதியில் ஒரு காலியிடம் இருக்கிறது. இக்காலி இடத்தை சிதம்பரம் என்றார்கள் சித்தர்கள். வடமொழியில் சிதாகாசம் என்பார்கள்.
இந்த பிணியல் சுரப்பியை மூன்றாவது விழி என்றும் சித்தர்கள் அழைக்கிறார்கள். மூன்றாம் விழி என்பது ஞானவிழி ஆகும்
ஒளியைக் கொண்டு ஒளியைத் தூண்ட

இவ்வாறு நம் இரு விழிகளை விழித்துப் பார்ப்பதன்மூலம் தூங்காமல் தூங்கும் கலையினைக் கற்றுக் கொள்ளலாம். சாவில்லாமல் வாழலாம். பிறப்பு என்பதை இல்லாமல் செய்து விடலாம்.
அப்படிப்பட்ட ஒரு விழிதான் இந்த பிணியல் சுரப்பியில் இருக்கிறது. ஆனால், பிணியல் முழு விழிப்பு நிலையில் இல்லை. பிணியலை இயங்கவிடாமல் சொல்லமுடியா கர்மவினைப் பதிவுகள் மலையளவு சாம்பலைப் போல இந்த பிணியலின்மேல் எண்ணில் அடங்காத உயரத்தில் குவிந்து பிணியலை அழுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த சாம்பலின் அடி ஆழத்தில்தான் இந்த பிணியல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. மேலே படர்ந்து போர்த்தியுள்ள சாம்பல்களின் அழுத்தத்தால் நம் புறவிழிகளுக்கு இந்த பிணியலில் இருக்கும் நம் உயிரொளியானது புலப்படாமலேயே இருக்கிறது.
நீறுபூத்த நெருப்பின் மீதுள்ள சாம்பலை நாம் எப்படி வாயால் ஊதியோ அல்லது வேறு உபாயத்தால் விசிறி நீக்கும் போது உள்ளே இருக்கும் கனல் நெருப்பு திக்கென்று பற்றிக் கொண்டு எரிய ஆரம்பிக்கும்.
அதைப் போல இந்த பிணியலின் மேல் படர்ந்துள்ள சாம்பலை ஊதி, ஊதி, விசிறி, விசிறிவிடும் தந்திரத்தை யார் கற்றுக் கொண்டிருக்கின்றாரோ, அவரே சித்தன் ஆவார். “ஊதுகிற ஊத்தறிந்தவனே சித்தன்” என்பது சித்தர் மொழி. பிணியலில் இருக்கும் சாம்பலை ஊதியே அகற்றிவிடும் கலையைக் கற்றவனே சித்தன். எப்படி ஊதுவது? எதைக்கொண்டு ஊதுவது?
நம் உடலுக்குள் ஒரு அணுவடிவில்தான் நம் உயிரானது இருக்கிறது. உடலுக்குள் உயிர் அமைந்துள்ளது. உயிர் ஒளிநிலையில்தான் உள்ளது. ஒளி அணையாமல் இருக்க காற்று அவசியம். நம் உயிரொளி அணையாமல் இருக்க காற்று அவசியம். நம் உயிரொளி அணையாமல் நித்தமும் எரிந்து கொண்டிருக்க காற்று முக்கியம். அக்காற்றுதான் பிராணன். ஆக உயிரொளிக்குப் பிராணன் அவசியமாகிறது.
இந்தப் பிராணனை மண்டை ஓட்டின் நடுப்புள்ளியில் அமைந்துள்ள உயிரொளிக்கு எப்படி அனுப்பி வைப்பது? கொஞ்சம் கொஞ்சமாக கொல்லன் பட்டறையில் உள்ள ஊது உலையைப் போல பிராணனை உள்ளிழுத்து தொண்டையில் அண்ணாக்குக்கு மேலே உள்ள பிரமரந்திரத்தில் ஊதி, ஊதி அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். இதை கிரியா யோகமும் வாசியோகமும் நன்றாக செய்து கொண்டிருக்கிறது. கிரியா யோகத்திலும் வாசி யோகத்திலும் பிராணனே பிரதானம். ஆனால், பிரமஞானக் கிரியாவில் ஒளியே பிரதானம்.
ஒளியை, ஒளிக்கொண்டுதான் தூண்ட முடியும். அறிவியலும் இதைத்தான் சொல்கிறது.
நம் இரு விழிகளில் இருக்கும் ஒளிக்கதிர்களைக் கொண்டு, பிணியலில் இருக்கும் உயிரொளியைத் தூண்டிவிட்டு எரிய வைக்க வேண்டும். அவ்வளவுதான், நீங்கள் செய்ய வேண்டியது. ஒளிக்கதிர்களை பிணியலுக்கு அனுப்பும்போதே அமுதப் பிராணக் காற்றையும் சேர்த்து அனுப்பி வைத்தால், பிணியல் நன்றாக ஒளிவிட்டுப் பிரகாசிக்க ஆரம்பித்துவிடும்.