ஓ………………ம்       ஓ………………ம்   ஓ…………………ம்

சாகா வரமும் தனித்த பேரறிவும்

மாகாதலில் சிவவல்லப சத்தியும்

செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்

மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்

பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி

ஆரண முடியுடன் ஆகம முடியும்

கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு

நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே

சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே

மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே

ஆனந்த அமுதே அருளொளி அமுதே

தான்அந்தமிலாத் தத்துவ அமுதே

நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே

சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே

பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே

கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே

அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்

உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே

பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே

தனிமுதலாய சிதம்பர அமுதே

உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே

அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே    (அகவல் : 1255-1290)

அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி

வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !

குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !

நமது தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞான உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு பிறவிச் சுழலிலிருந்து எப்படி விடுபடுதல்? என்பதைப் பற்றித்தான். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம்.

மனிதன் தன் வாழ்வின் மூன்றில் ஒரு பகுதியை அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தூக்கத்திலேயே செலவழிக்கின்றான் என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், இந்த தூக்கத்தை யாரும் கண்டு கொள்வதேயில்லை.  தொடர்ந்து அது புறக்கணிக்கப்பட்டேதான் வருகிறது.  ஒருவரும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை.  ஒருவரும் அதன்மீது தியானிப்பதில்லை.  ஏன் இப்படி ஆகியிருக்கிறது என்றால், உணர்வு மனத்தின்மீதே மனிதர் அளவுக்கு அதிகமான கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த மனத்துக்கு மூன்று பரிமாணங்கள் அல்லது நிலைகள் உள்ளன.  சடப்பொருளுக்கு எப்படி மூன்று நிலைகள் உள்ளனவோ அப்படியே மனத்துக்கும் மூன்று நிலைகள் உள்ளன.  அவற்றில் ஒரு நிலை மட்டுமே உணர்வு மனம்.  இன்னொரு நிலை உணர்வற்றது.  இன்னுமொரு நிலை இருக்கிறது – அதுதான் அதி உணர்வு (Super Conscious) சடப்பொருளைப் போலவே மனத்துக்கும் இப்படி மூன்று நிலைகள்.  ஏனென்றால், அடிப்படையில் மனமும் பருப்பொருளால் ஆனதுதான் அல்லது அதையே நீங்கள் இப்படியும் சொல்ல முடியும். அதாவது பருப்பொருளும் மனத்தால் ஆனதுதான்.  அது அப்படித்தான் இருந்தாக வேண்டும்.  ஏனென்றால் இருப்பது ஒன்றுதான்.

நுண்மையான – கண்ணுக்குத் தெரியாத – பொருளே மனம். பருண்மையான – கண்ணுக்குத் தெரிகிற – மனமே பொருள்.  ஆனால், சாமானிய மனிதர் உணர்வுமனம் என்னும் ஒரு நிலையில் மட்டுமே வாழ்கிறார்.  உறக்க நிலையோ உணர்வற்ற மனத்தைச் சேர்ந்தது.  கனவு நிலையும் உணர்வற்ற மனத்துக்கே சொந்தமானது.  நடப்பதும் நினைப்பதும் எப்படி உணர்வு மனத்தினுடையவையோ அப்படியே தியானம், பரவசம் என்பவை அதி-உணர்வு மனத்தினுடையவை.  எனவே, மனத்தின் இந்த நிலவரத்துக்குள் நாம் மெல்ல மெல்ல செல்ல வேண்டியுள்ளது.

மனத்தைப் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய முதல் செய்தி.  அது ஒரு பனிப்பாறையை ஒத்தது என்பதே.  அதன் உச்சிப்பாகம் மட்டும் வெளியில் தெரியும்.  அதை நீங்கள் பார்க்க முடியும்.  ஆனால், அது மொத்தத்தில் பத்தில் ஒரு பாகம் மட்டுமே பத்தில் 9 பாகம் நீருக்கடியில் மூழ்கி உள்ளது.  ஆழத்துக்குள் போகாதபோது சாதாரணமாக அதனை உங்களால் பார்க்க முடிவதில்லை.  ஆனால், இவை இரண்டு நிலைகள் மட்டும்தான்.  மூன்றாவது ஒரு நிலை இருக்கிறது.  பனிப்பாறையின் ஒரு பகுதி ஆவியாகி மேகமாக வானத்தில் பரவி மிதந்து கொண்டிருப்பதைப் போன்றது.  அது உணர்வற்ற மனத்தை கண்டுபிடிப்பதே கடினம்.  மேகத்தை எட்டிப் பிடிப்பதோ ஏறக்குறைய முடியாத காரியம் – அதே பனிப்பாறையின் பகுதிதான்.  ஆனால், ஆவியாகி விட்டிருக்கிறது.

எனவேதான் தியானம், தவம் என்பது அவ்வளவு கடினமாக உள்ளது.  சமாதியோ ஏறக்குறைய அசாத்தியமான செயலாக உள்ளது.  உங்களுடைய ஆற்றல் மொத்தமும் அதற்கு தேவைப்படுகிறது. ஒருவரின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பையும் அது அவசியமாகக் கோருகிறது. அப்போது மட்டுமே ஆவி போன்ற நிலவரமாகிய அதி-உணர்வு மனத்துக்குள் செங்குத்தாக மேல்நோக்கி பயணம் செய்வது சாத்தியமாகும்.  உணர்வு மனம் இருக்கிறது.  நான் பேசுவதை நீங்கள் கவனித்துக் கொண்டிருப்பது உணர்வு மனத்திலிருந்துதான்.  நான் கூறும் எதைப்பற்றியும் உங்களுக்குள் நீங்கள் ஒருவித உரையாடலை நடத்திக் கொண்டிருந்தால், உள்ளுக்குள் ஒருவித வியாக்கியானம் / அர்த்தம் ஓடிக்கொண்டிருந்தால், அதுதான் உணர்வு மனம்.

ஆனால், எதையும் நினைக்காமலும் நான் பேசுவதை உங்களால் கவனிக்க முடியும்.  நான் கூறும் எதையும் எவ்வகையிலும் மாற்றாமல், அதை சரி என்றோ தவறென்றோ தீர்ப்பிடாமல், ஆழ்ந்த அன்புடன் இதயத்திலிருந்து நேரடியாக உங்களால் கவனிக்க முடியும்.  எந்தவிதமான மதிப்பீடும் செய்யாமல், மனம் கடந்து சென்றுவிட்டது போல், ஆழ்ந்த அன்புடன் வெறுமனே கவனிக்கிறீர்கள்.  இங்கே இதயம் கவனிக்கிறது, களிப்பால் துள்ளுகிறது – இந்நிலையில் உணர்வற்ற மனம் கவனித்துக் கொண்டிருக்கிறது.  அந்நிலையில் நான் எதைச் சொன்னாலும் அது உங்கள் வேர்கள் வரை ஆழமாக செல்லும்.

ஆனால், மூன்றாவது ஒரு வாய்ப்பும் இருக்கிறது.  அதில் நீங்கள் அதி-உணர்வு நிலையிலிருந்து கவனிக்க முடியும்.  அந்நிலையில் இதயத்திலிருந்து அன்புடன் கவனிப்பதுகூட ஒரு தடங்கலாக இருக்கிறது.  மிக நுட்பமாகத்தான் – ஆனால் அன்பும்கூட ஒரு தடங்கல்தான்.  இந்த மூன்றாவது நிலையில் மனதில் ஒன்றும் இருப்பதில்லை.  எந்த எண்ணமும் எந்த உணர்ச்சியும் இருப்பதில்லை.  முழுமையாக ஒரு வெட்ட வெற்றிடத்துக்குள் – வெறுமைக்குள், நான் கூறும் எந்தக் கருத்தும் – நான் இருக்கும் எந்த இருப்பும் அப்படியே சென்று சேர்கிறது.  இந்நிலையில் நீங்கள் கவனித்துக் கொண்டிருப்பது அதி – உணர்வு மனத்திலிருந்துதான்.

இவைதான் மூன்று நிலைகள் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் உணர்வு மனத்தில் வாழ்கிறீர்கள், வேலை செய்கிறீர்கள், பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், பலவித செயல்களையும் செய்கிறீர்கள்.  நீங்கள் தூங்கும்போது உணர்வு மனம் செயல்படுவதில்லை.  அது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது.  இன்னொரு நிலையாக உணர்வற்ற மனம் இயங்கத் தொடங்குகிறது.  இந்நிலையில் உங்களால் சிந்திக்க முடிவதில்லை.  ஆனால், கனவு காண முடிகிறது.  மேலும், ஓரிரவில் தொடர்ச்சியாக 8 சுழற்சியாக நீங்கள் கனவு காண்கிறீர்கள்.  கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே நீங்கள் கனவு காண்பதில்லை.  மீதி நேரம் முழுதும் தொடர்ச்சியாக நீங்கள் கனவு கண்டு கொண்டேதான் இருக்கிறீர்கள்.

தூக்கம் என்பது ஒருவிதமான ஒன்றுமின்மை என்பது போல்தான் வெறுமனே நீங்கள் தூங்கி விடுகிறீர்கள்.  அப்படி இல்லை அது. அதற்கும் அதற்கே உரிய இருப்பு ஒன்று இருக்கத்தான் செய்கிறது.  உறக்கம் என்பது விழிப்பின் எதிர்மறை மட்டுமல்ல.  அவ்வளவுதான்.  அது என்றால் பின் அதில் தியானத்திற்கு ஒன்றும் இருக்காது.  ஆனால், தூக்கம் இருள் போன்றதல்ல.  ஒளி அற்றதல்ல.  தூக்கத்துக்கும் அதற்கே உரிய உடன்பாட்டுத் தன்மை இருக்கிறது.  விழித்திருக்கும் நேரத்தைப் போலவே நீங்கள் தூங்கும் நேரத்திலும் நீங்கள் செயலாக்கத்துடன் இருக்கிறீர்கள்.  தியானத்தின் வழியாக தூக்கத்தின் மர்மங்கள் உங்களுக்கு விளக்கமாகும்போது, விழித்திருப்பதற்கும் தூங்குவதற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதைக் கண்டுகொள்வீர்கள். அவை இரண்டுமே தத்தம் நிலையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளன. உறக்கம் என்பது விழித்திருப்பதிலிருந்து வெறுமனே ஓய்வெடுத்தல் மட்டுமல்ல ; அதுவும் வேறுவிதமான ஒரு செயல்பாடு தான்.  அதனால்தான் கனவுகள் அங்கே வட்டமிட்டுக் கொண்டு சிறகடிக்கின்றன.

கனவு என்பது மாபெரும் ஆற்றல் கொண்ட ஒரு செயல்பாடுதான்.  உங்களின் சிந்தனைச் செயலைவிட அதிக ஆற்றல் நிரம்பியது.  அதிக அர்த்தம் நிரம்பியதும் ஆகும்.  ஏனென்றால், உங்கள் சிந்தனையை விடவும் உங்கள் ஜீவனின் அதிக ஆழமான பகுதியை சேர்ந்தது அது.  பகல் முழுதும் செயல்பட்ட மனம் இரவில் நீங்கள் தூங்கப்போகும் நேரத்தில் களைத்திருக்கிறது.  மனத்தின் மிகவும் சிறிய பகுதி அது.  உணர்வற்ற மனத்துடன் ஒப்பிடும்போது பத்தில் ஒரு பாகம் மட்டுமே உடையது அது.  உணர்வற்ற மனமோ பத்தில் ஒன்பது பாகம் பெரியதும் பரந்ததும் பலம் கூடியதும் ஆகும்.  அதி-உணர்வு மனதுடன் அதை ஒப்பிடுவதற்கோ சாத்தியமே இல்லை.  ஏனென்றால், அதி-உணர்வு மனம் அளவு கடந்தது.  எல்லை அற்றது.  உணர்வு கடந்த மனம் எல்லாம் வல்லது.  எங்கும் நிறைந்தது.  அனைத்தும் அறிந்தது.  உணர்வு கடந்த நிலைதான் கடவுள் எனப்படுகிறது.  உணர்வற்ற மனதுடன் ஒப்பிடும்போதே உணர்வு மனம் மிக சிறியதுதான்.  விரைவில் அது களைத்து விடுகிறது.  மீண்டும் அதற்கு ஆற்றல் சேர அதற்கு ஓய்வு தேவைப் படுகிறது.  எனவே, உணர்வு மனம் அணைந்து விடுகிறது.  உறக்கத்தில் வேறொரு மாபெரும் செயல்பாடு ஆரம்பமாகிறது ; அதுதான் கனவு காணுதல்.

ஆனால், அது ஏன் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது? ஏனென்றால், உணர்வு நிலையுடன் தன்னை இணைத்து அடையாளம் காணவே மனித மனத்துக்கு பயிற்சி தரப்பட்டு வந்திருக்கிறது.  எனவேதான், தூக்கத்தில் நீங்கள் இருப்பதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  அதனால்தான் உறக்கம் ஒரு குட்டி சாவு போலவே தோற்றமளிக்கிறது.  தூங்கும்போது உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஒருபோதும் நீங்கள் யோசிப்பதில்லை.  “அதனால் தூக்கத்தின்மீது தியானியுங்கள்.  அப்போது உங்கள் இருத்தலுக்குள் / உயிருக்குள் இருக்கக்கூடிய பல சங்கதிகள் / இரகசியங்கள் வெளிப்படும்” என்கிறார் பதஞ்சலி.

நீங்கள் விழிப்புணர்வுடன் தூக்கத்துக்குள் இயங்குவதற்கு சிறிதுகாலம் ஆகத்தான் செய்யும்.  ஏனென்றால், நீங்கள் கண் விழித்திருக்கும் நேரத்திலேயே நீங்கள் விழிப்புணர்வோடு இருப்பதில்லை.  உண்மையை சொல்வதானால் விழித்திருக்கும் நேரத்தில்கூட நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் போன்றே நடந்து கொள்கிறீர்கள்.  தூக்கத்தில் நடப்பவர் போலவே செயல்படுகிறீர்கள்.  உண்மையாகவே நீங்கள் போதிய விழிப்புணர்வுடன் இருப்பதேயில்லை.  உங்கள் கண்கள் திறந்திருப்பதாலேயே நீங்கள் விழித்திருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்.  உண்மையில் விழித்திருத்தல் என்றால், ஒவ்வொரு கணமும் நீங்கள் எதைச் செய்து கொண்டிருந்தாலும், அதை முழு கவனத்துடன் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் உங்களைச் சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருந்தாலும் அதை முழு கவனத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும்தான் பொருள்படும்.

உங்களுக்கு ஒரு குறிப்பு காட்ட நான் இப்போது பேசிக் கொண்டிருக்கும் போதும்கூட அதை முழு உணர்வுடன் நான் செய்து கொண்டிருக்கிறேன்.  அதை ஒரு எந்திர மனிதன் போல நான் செய்யலாம்.  அப்போது நான் பேசுவதை பேசும் வார்த்தைகளை நீங்கள் உணராமல்கூட இருக்கலாம்.  உண்மையைச் சொன்னால், உங்கள் கேட்கும் சக்தி எங்கே போயிற்று என்பதை நீங்கள் என்றாவது யோசித்துப் பார்த்ததுண்டா? அது உணர்வற்ற மனதின் செயல்பாடன்றி வேறொன்றும் இல்லை.  அதனால்தான் உங்கள் சொந்த உறக்கத்துக்குள் நீங்கள் ஊடுருவிச் செல்வது அவ்வளவு கடினமாக இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டிய முதல் முயற்சி என்ன தெரியுமா? விழித்திருக்கும் நேரத்தில் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதுதான். காரணம் அங்கிருந்துதான் முயற்சியை தொடங்கியாக வேண்டியுள்ளது.  தெருவில் நடக்கும் போது முழு கவனத்துடன் நடக்க வேண்டும்.  ஏதோ மிகவும் முக்கியமான ஒரு வேலையை செய்து கொண்டிருப்பது போல அதை செய்யுங்கள்.  இது மிகவும் முக்கியமானதாகும்.  ஒவ்வொரு அடியையும் முழு விழிப்புணர்வுடன் எடுத்து வையுங்கள்.  இதை உங்களால் செய்ய முடிந்தால், அதன்பிறகு உறக்கத்துக்குள் உங்களால் விழிப்புணர்வுடன் நுழைய முடியும்.  தற்சமயம் உங்களிடம் மிகவும் மங்கலான விழிப்புணர்வே இருக்கிறது.  உங்கள் உணர்வு மனம் அணைந்து விடும். அக்கணமே அந்த மங்கலான விழிப்புணர்வும் ஒரு சிறு நீர்க்குமிழியைப் போல் மறைந்து விடுகிறது.  அதில் சிறிதும் ஆற்றல் இருப்பதில்லை.  மிக மிக மங்கலாக ஒரு சிறு மினுக்கமாக மட்டுமே வெறும் ஒரு 0 வோல்ட் ஆற்றல் நிகழ்வாக மட்டுமே அது இருக்கிறது.  அதில் இன்னும் அதிக ஆற்றலை கொண்டு வந்து சேர்த்தாக வேண்டும் நீங்கள்.  எந்த அளவுக்கு அதிகமான ஆற்றல் என்றால், உணர்வு மனம் அணைந்ததும் விழிப்புணர்வு தானாகவே தொடர ஆரம்பிக்கிறது.  விழிப்புணர்வுடன் நீங்கள் உறக்கத்தில் ஆழ்கிறீர்கள்.

இது நிகழ முடியும் – நடப்பது, உண்பது, குடிப்பது, குளிப்பது போன்ற உங்களின் மற்ற நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் நீங்கள் செய்தால், நாள் முழுவதும் நீங்கள் எதைச் செய்து கொண்டிருந்தாலும் அதெல்லாம், செய்யும் செயலில் முழு விழிப்புணர்வுடன் இருப்பதற்கான உங்களின் அகப் பயிற்சிக்கு ஒரு வாய்ப்பாகவே ஆகிறது.  எனவே, செயல்பாடு இரண்டாம் நோக்கமாக மாறி விடுகிறது.  அந்த செயல்பாட்டின் வழி பயிலக்கூடிய விழிப்புணர்வே முதன்மை நோக்கமாக ஆகிறது. இரவானதும் எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி விட்டு, நீங்கள் தூங்கப் போகும்போது அந்த விழிப்புணர்வு தூக்கத்திலும் தொடர்கிறது.  நீங்கள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போதுகூட விழிப்புணர்வு அதை கவனித்துக் கொண்டிருக்கிறது.  ஆம் உடல் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறது.  மெல்ல மெல்ல உடல் இளைப்பாறத் தொடங்குகிறது.  உங்களுக்குள் நீங்கள் அப்படி சொல்லிக் கொள்வதால் அல்ல ; நீங்கள் பேசாமல் கவனிக்கிறீர்கள். மெல்ல மெல்ல எண்ணங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன.  இடைவெளிகளை நீங்கள் காண்கிறீர்கள்.  போகப்போக உலகம் உங்களை விட்டு மிக மிகத் தொலைவில் உள்ளது.  உங்கள் இருத்தலின் அடித்தளத்துக்குள் – உணர்வற்ற மனத்துக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.  விழிப்புணர்வுடன் தூக்கத்தில் ஆழ உங்களால் முடிந்தால் மட்டுமே இரவிலும் அந்த தொடர்ச்சி இருக்கும்.  “அதனால் உறக்கம் கொடுக்கும் அறிவின்மீது தியானியுங்கள்” என்று பதஞ்சலி முனிவர் கூறும்போது அதைத்தான் சொல்லிச் சென்றிருக்கிறார்.

 மேலும், அதிகமான அறிவைக் கொண்டுவரவும் தூக்கத்தால் முடியும்.  காரணம் அதுதான் உங்களின் பொக்கிஷ அறையாக இருக்கிறது.  அதுவே உங்களின் பலப்பல பிறவிகளின் சேமிப்புக் கிடங்காக இருக்கிறது.  அங்கேதான் ஏராளமான செய்திகளை, வாழ்வின் இரகசியங்களை நீங்கள் சேமித்து வைத்திருக்கிறீர்கள்.  முதலில் நீங்கள் விழித்திருக்கும்போது – விழிப்பு நிலையில் நீங்கள் இருக்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க முயலுங்கள்.  பின் விழிப்புணர்வு தானாகவே அதிக ஆற்றலுடையதாக ஆகிறது.  அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை. உண்மையாகவே நீங்கள் நடந்து கொண்டிருந்தாலும் சரி அல்லது ஒரு கனவில் நடந்து கொண்டிருந்தாலும் சரி (அதாவது நடந்து கொண்டிருப்பதாக கனவு கண்டு கொண்டிருந்தாலும் சரி) எந்த வேறுபாடும் ஏற்படுவதில்லை.  மேலும் விழிப்புணர்வுடன் நீங்கள் உறக்கத்துக்குள் ஆழும்போது இணைப்புகள் (கியர்கள்) எப்படி மாறுகின்றன என்பதை முதன்முறையாக நீங்கள் பார்ப்பீர்கள்.  விழிப்புத் தன்மை மறைந்து, மனம் அணைந்து, வேறொரு மண்டலம் செயல்படத் தொடங்குவதன் அந்த சொடக்கைக் கூட நீங்கள் உணர்வீர்கள்.  உயிர் / இருத்தல் செயல்படும் முறைகள் – அதற்கான இணைப்புகள் மாறி இருக்கின்றன. இந்த இரு இணைப்புகளுக்கு இடையில் நடுநிலை இணைப்புக்கான (நியூட்ரல்) ஒரு சிறு இடைவெளி உள்ளது.  ஏனென்றால் இணைப்பு மாறுகிற பொழுதெல்லாம் ஒரு நடுநிலை இணைப்பின் வாயிலாகத்தான் மாறியாக வேண்டியுள்ளது.  மெல்ல மெல்ல இணைப்பு மாறுவதை மட்டுமல்ல, இரண்டுக்கு இடையிலான இடைவெளியைப் பற்றியும் விழிப்புடன் இருப்பவராக நீங்கள் ஆவீர்கள்.  அந்த இடைவெளியில் நீங்கள் உங்களின் அதி-உணர்வு மனத்தின் முதல் தரிசனத்தை காண்பீர்கள்.

உணர்வு மனமானது உணர்வற்ற மனமாக மாறும்போது ஒரு கணத்தைவிட குறைந்த அளவு நேரத்துக்கு அதி-உணர்வு நிலையை உங்களால் காண முடியும்.  முதலில் நீங்கள் உணர்வற்ற மனம் பற்றிய விழிப்புணர்வு உள்ளவராக ஆக வேண்டும் ; அது உங்களின் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

உங்கள் கனவுகளை நீங்கள் கவனிக்கத் தொடங்கியதும் ஐந்து வகையான கனவுகள் வருவதை கண்டுபிடிப்பீர்கள்.  முதல்வகை கனவு வெறும் குப்பைதான்.  ஆனால், ஆயிரக்கணக்கான உளவியல் பகுப்பாய்வர்கள் முழுக்கவும் அந்த குப்பையைத்தான் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.  இதுவோ அறவே பயனில்லாதது. நாள் முழுதும் வேலை செய்யும்போது நீங்கள் நிறைய குப்பைகளை சேர்த்துக் கொண்டதால் அது ஏற்படுகிறது.  உடலில் அழுக்கு படிவதால் உங்களுக்கு குளியல் தேவைப்படுகிறது.  உங்களை சுத்தம் செய்து கொள்வது தேவைப்படுகிறது.  அப்படியேதான் மனதில் அழுக்கு படிகிறது.  மனத்தை குளிப்பாட்ட வழியில்லை.

எனவேதான், எல்லா அழுக்கையும் குப்பையையும் அகற்றிட மனம் ஒரு தானியங்கி உத்தியை வைத்திருக்கிறது.  அதுதான் முதல் வகை கனவுகள் மனத்தில் சேர்ந்த குப்பைகளை மனம் அகற்றுவது தான் முதல் வகை கனவுகளாய் வெளிப்படுகிறதே தவிர வேறல்ல.  மேலும், இதுவே கனவுகளின் மிகப்பெரும் பகுதி – ஏறக்குறைய 90% கனவுகள் மனத்தால் இப்படி தூக்கி எறியப்படும் வெறும் குப்பைகள் மட்டுமே அவற்றின்மீது அதிகக் கவனம் செலுத்தாதீர்கள்.  மேலும், உங்களின் விழிப்புணர்வு வளர வளர எது குப்பை என்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும்.

இரண்டாவது வகை கனவு ஒருவித விருப்ப நிறைவேற்றமாகும்.  தேவைகள் – இயல்பான / இயற்கையான தேவைகள் பல உள்ளன.  ஆனால், மதப் பூசாரிகளும் மத ஆச்சாரிகள் என்போரும் உங்கள் மனத்தை நஞ்சாக்கி விட்டார்கள்.  உங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூட உங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.  அவற்றை அவர்கள் முற்றிலுமாக கண்டித்திருக்கிறார்கள்.  எனவே, அதுபற்றிய பாவ / சாப உணர்வு உங்களுக்குள் குடியேறி உள்ளது.  எனவே, உங்களின் பல தேவைகள் நிறைவேறாததால் நீங்கள் தவிக்கிறீர்கள்.  அந்த தாகங்கள் / தாபங்கள் நிறைவேற்றத்தை வேண்டுகின்றன.  இந்த தவிப்புகளை நிறைவு செய்வதே இரண்டாம் வகை கனவே அன்றி வேறல்ல.  மதத்தலைவர்களால் – விஷத்தை பரப்புபவர்களால் உங்கள் இருத்தலுக்கு எவற்றை எல்லாம் நீங்கள் மறுத்திருக்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஏதாவது ஒரு வழியில் நிறைவுசெய்ய கனவுகளின் வழி மனம் முயற்சி செய்கிறது.

அப்படித்தான் அன்று ஒரு நாள் ஒரு இளைஞன் என்னிடம் வந்தான்.  சிறந்த அறிவுத்திறன் – புரிந்து கொள்ளும் திறன் உடையவன்.  அவன் என்னிடம் கேட்டான். “மிகவும் முக்கியமான ஒரு கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நான் வந்திருக்கிறேன்.  ஏனென்றால், என் முழு வாழ்க்கையுமே அதைத்தான் பொறுத்திருக்கிறது.  என் பெற்றோர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்கள்.  ஆனால், நான் அதில் எந்த அர்த்தத்தையும் காணவில்லை.  எனவே, நான் உங்களிடம் கேட்க விரும்புவது திருமணம் அர்த்தம் நிறைந்ததா? இல்லையா? மணவாழ்க்கையில் நான் நுழைவதா? வேண்டாமா?”.

நான் அவனிடம் சொன்னேன்.  “உனக்குத் தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பது அர்த்தம் நிறைந்ததா? இல்லையா? நான் தண்ணீர் அருந்துவதா? கூடாதா? என்று நீ கேட்கிறாயா? அர்த்தம் பற்றிய கேள்வியே அங்கே எழுவதில்லை.  நீ தாகமாய் இருக்கிறாயா? இல்லையா? என்பதுதான் கேள்வி.  தண்ணீரில் எந்த அர்த்தமும் இல்லாதிருக்கலாம்.  தண்ணீரை குடிப்பதிலும் எந்த அர்த்தமும் இல்லாதிருக்கலாம்.  ஆனால், அது தேவையற்ற செய்தி.  தேவையான செய்தி என்னவென்றால், நீ தாகமாய் இருக்கிறாயா? இல்லையா? என்பதுதான்.  மேலும், நீ எத்தனை தடவை குடித்தாலும்கூட திரும்பத் திரும்ப உனக்குத் தாகம் எடுக்கும் என்பதையும் நான் அறிவேன்.  இதற்கு மனம் சொல்லும்.  அப்படியானால் இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இதில் என்ன நோக்கம் இருக்கிறது? எத்தனை தடவை குடித்தாலும் திரும்பத் திரும்ப தாகம் எடுத்துக் கொண்டு செக்கு மாட்டுப் பிழைப்பாக தெரிகிறது.  வேறு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படித்தான் உணர்வு மனம் உங்களின் முழு இருத்தலின்மீதும் ஆதிக்கம் செலுத்த முயன்று கொண்டு வந்துள்ளது.  ஏனென்றால், அர்த்தம் என்பது உணர்வு மனத்தைச் சேர்ந்தது.  உணர்வற்ற மனத்துக்கு எந்த அர்த்தமும் தெரியாது.  அதற்குப் பசி தெரியும், தாகம் தெரியும், மற்ற தேவைகள் அனைத்தும் தெரியும்.  அர்த்தம் எதுவும் அது அறியாது.  உண்மையைச் சொன்னால் வாழ்க்கைக்கு அர்த்தம் என்று எதுவும் இல்லை.  அதை நீங்கள் கேட்டால் நீங்கள் தற்கொலையைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கைக்கு அர்த்தம் ஒன்றும் இல்லை. அது அதன்பாட்டுக்குப் பயணம் செய்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.  அதுவும் அர்த்தம் இல்லாமலே – அதற்கான அவசியமும் இல்லாமலே – அது அவ்வளவு அழகாகத்தான் இருக்கிறது.  ஒரு மரம் இங்கு இருப்பதற்கு என்ன பொருள்? ஒவ்வொரு நாளும் காலையில் சூரியனும் மாலையில் சந்திரனும் உதிப்பதில் என்ன பொருள் இருக்கிறது? ஒரு மரம் பூத்துக் குலுங்கும்போது அதில் என்ன பொருள் இருக்கிறது? காலையில் பறவைகள் பாடும்போது, அதற்கு ஓடை ஓடிக்கொண்டே இருப்பதற்கு, அலைகள் – பெருங்கடலின் பேரலைகள் – பாறைகள் மேல் திரும்பத் திரும்ப வன்மையாக மோதிக் கொண்டிருப்பதற்கு என்ன பொருள் இருக்கிறது? இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்?

அர்த்தம் என்பது முழுமையுடையது அல்ல.  முழுமையான அர்த்தம் இல்லாமலே மிக அழகாக அவைகள் காணப்படவில்லையா. சொல்லப் போனால் அர்த்தம் இல்லாததால்தான் அவ்வளவு அழகாக அவைகள் இருக்கின்றன ; இருந்து வருகின்றன.  அர்த்தம் என்று ஏதாவது இருந்திருக்குமேயானால், உலகம் இவ்வளவு அழகாக இருக்க முடியாது.  ஏனென்றால், அர்த்தத்துடன் மதிப்பீடு வருகிறது.  அர்த்தத்துடன் தந்திரம் வருகிறது.  அர்த்தத்துடன் பகுத்தறிதல் வருகிறது.  அர்த்தத்துடன் பிரித்துப் பார்த்தல் வருகிறது – இது பொருளுடையது அது பொருளற்றது.  இது அதிக பொருளுடையது, அது குறைந்த பொருளுடையது என்ற பிரிவினை முழுமையோ எந்த பாகுபாடுகளும் இன்றி நிலவுகிறது.  ஒவ்வொன்றும் அபரிமித அழகுடன் இருப்பது அவற்றுக்கு எந்த அர்த்தமும் இருப்பதால் அல்ல, அவை இங்கு இருப்பதால் மட்டுமே.  இதற்கு எந்த நோக்கமும் கிடையாது.

ஏதாவது ஒன்று நிகழ வேண்டுமானால், உனக்குத் தேவை இருக்கிறது.  அந்நிலையில் அந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.  ஏனென்றால் ஒரு தேவை எழுவதே அது நிறைவு செய்யப்படுவதற்குத்தான்.  இயற்கையில் அனைத்துமே தெய்வீகம்தான் – புனிதம்தான்.  அதனால் நம் தேவை என்னவோ அதைத்தான் பார்க்க வேண்டும்.  அர்த்தத்தைப் பார்க்கக் கூடாது.  அர்த்தம் என்பது உணர்வு மனத்தைச் சார்ந்தது.  தேவை என்பது உணர்வற்ற மனத்தைச் சார்ந்தது.  இப்படித்தான் இரண்டாவது வகை கனவு இருப்புக்கு வருகிறது.  உங்கள் தேவைகளை நீங்கள் நிறைவேற்றாமலே போகிறீர்கள்.  அப்போது மனம் அவற்றை கனவில் நிறைவேற்றி வைக்க ஓடி வருகிறது.  உணர்வற்ற மனத்துக்கு எந்தத் தத்துவமும் தெரியாது.  உணர்வற்ற மனத்துக்கு எந்த அர்த்தமோ நோக்கமோ கிடையாது.  உணர்வற்ற மனத்துக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்.  உங்கள் இருத்தல் நிறைவுள்ளதாவதற்கு என்னென்ன தேவை என்பது அதற்குத் தெரியும்.

அதனால் உணர்வற்ற மனம் தன் சொந்தக் கனவுகளை வலிந்து உருவாக்குகிறது. இதுதான் இரண்டாம் வகை கனவு.  இதைப் புரிந்து கொள்வதும் இதன்மீது தியானிப்பதும் மிகவும் அர்த்தம் நிறைந்தது.  ஏனென்றால், அவற்றின்மூலம் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தியை உணர்த்த உணர்வற்ற மனம் முயன்று கொண்டிருக்கிறது.

ஆகவே, நாம் நினைவில் கொள்ள வேண்டியவை எது தெரியுமா? ஆசைகள் உணர்வு மனத்தினுடையவை.  தேவைகள் உணர்வற்ற மனத்தினுடையவை.  இவற்றுக்கிடையிலான வேறுபாடு மிக மிக அர்த்தம் நிறைந்தது.  அதை புரிந்து கொள்வது மிகுந்த முக்கியத்துவம் நிறைந்தது.

உணர்வற்ற மனம் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.  உணர்வற்ற மனமே சரியானது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால், யுகங்களின் ஞானத்தை தன்னில் கொண்டுள்ளது அது.  கோடிக்கணக்கான பிறவிகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.  உணர்வு மனமோ இந்த பிறவியையே சேர்ந்தது.  பள்ளிகளாலும் பல்கலைக்கழகங்களாலும் தற்செயலாக நீங்கள் பிறக்க நேரிட்ட ஒரு குடும்பத்தாலும் இந்த சமுதாயத்தாலும் அது பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், உணர்வற்ற மனமோ உங்களின் அனைத்துப் பிறப்புகளின் அனைத்து அனுபவங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.  நீங்கள் ஒரு பாறையாக இருந்தபோது நீங்கள் பெற்ற அனுபவங்கள் அதற்குள் இருக்கிறது.  ஒரு மரமாக இருந்தபோது நீங்கள் அடைந்த அனுபவங்கள் அதற்குள் இருக்கிறது.  ஒரு விலங்காக இருந்தபோது நீங்கள் அடைந்த அனுபவம் அதற்குள் இருக்கிறது.  கடந்த காலம் முழுவதுமே அனைத்து அனுபவங்களையும் அது தனக்குள்ளே மறைத்து வைத்திருக்கிறது.  உணர்வற்ற மனம் அளவு கடந்த ஞானத்தைக் கொண்டது.  உணர்வு மனம் அளவுகடந்த ஞான சூனியமாக இருக்கக் கூடியது ; இருக்கிறது.  அப்படித்தான் அது இருந்தாக வேண்டும்.  ஏனென்றால், உணர்வு மனம் இந்த பிறவியினுடையது மட்டும்தான் ; மிகச் சிறியது ; அனுபவம் இல்லாதது ; மிகவும் சிறுபிள்ளைத்தனமாகது.  உணர்வற்ற மனமோ காலாகால ஞானம் பொதிந்தது. எனவே, நீங்கள் எப்போதுமே இந்த உணர்வற்ற மனத்திற்கே செவி மடுக்க வேண்டும் அன்பர்களே.

அடுத்தபடியாக மூன்றாம் வகை கனவு.  இந்த மூன்றாம் வகை கனவு அதி- உணர்விலிருந்து வரும் ஒரு செய்தித் தொடர்பாகும். இரண்டாம் வகை கனவு உணர்வற்ற மனத்திலிருந்து கிடைக்கும் தொடர்பு.  மூன்றாம் வகை கனவு மிகவும் அரிதானது. ஏனென்றால், உணர்வு கடந்த மனத்துடன் அனைத்துத் தொடர்புகளையும் நாம் இழந்து விட்டிருக்கிறோம்.  இருந்தாலும் அது வரத்தான் செய்கிறது.  ஏனென்றால், அந்த உணர்வு கடந்த மனம் உங்களுடையது. அது ஒரு மேகமாக ஆகி வானத்துக்கு நகர்ந்திருக்கலாம்.  ஆவியாக போயிருக்கலாம்.  அது அதிக தொலைவுக்கு சென்றிருக்கலாம், ஆனால் அப்போதும் அது உங்களிலேயே வேர் கொண்டிருக்கிறது.

அதி-உணர்விலிருந்து தொடர்பு கிடைப்பது மிகவும் அபூர்வம்.  நீங்கள் மிக மிக கவனமுள்ளவர்களாக ஆன பிறகு மட்டுமே அதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள்.  இல்லாவிட்டால் மனம் எடுத்தெறியும் குப்பை கனவுகளிலும் நிறைவேறாத – அமுக்கி வைக்கப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவது போல் மனம் கண்டுகொண்டே போகும் விருப்பங்களை நிறைவேற்ற கனவுகளிலும் அது கலந்து தொலைந்தே போய்விடும்.  அதை நீங்கள் இழந்து போவீர்கள்.  ஆனால், நீங்கள் விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆகிறபோது, அது சுற்றிலும் கிடைக்கும் மற்ற கற்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒளிவீசும் வைரம் போல் எடுப்பாக வெளிப்படுகிறது.

குறிப்பிட்ட கனவு அதி-உணர்வு மனத்திலிருந்து வருவதாக நீங்கள் உணர முடிகிறபோது – கண்டுகொள்கிறபோது, அதை நன்றாக உற்றுக் கவனித்துக் கொண்டே வாருங்கள்.  அதன்மீது தியானியுங்கள்.  ஏனென்றால், அது உங்களின் வழிகாட்டியாக மாறும், உங்களின் குருவிடம் உங்களை அழைத்துச் சென்று சேர்ப்பிக்கும், உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை முறைக்கு உங்களை அது நடத்திச் செல்லும்.  சரியான ஒழுங்குமுறைக்கு உங்களை அது அழைத்துச் செல்லும்.  அந்தக் கனவு உங்களின் ஆழத்தில் ஒரு வழித்துணையாக ஆகும்.  உணர்வு மனத்தைக் கொண்டு ஒரு ஆசானை – ஆச்சாரியாரை – குருவை – ஞானியை கண்டுபிடிக்க உங்களால் முடியும். ஆனால், அந்த ஆசான் அன்புக்குரியவருக்கு மேல் இருக்க மாட்டார் என்பதுதான் ஆச்சரியமான விசயம்.  அதி-உணர்வு மட்டும்தான் சரியான ஆசானிடம் – சரியான குருவிடம் உங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும்.  அப்போது அவர் ஒரு ஆசிரியராக இருக்க மாட்டார், அவர் கருத்துக்களின் மேல் நீங்கள் பற்றுக்கொண்டிருக்க மாட்டீர்கள். அவர்மேல் நீங்கள் மையல் (அன்பு) கொண்டிருக்க மாட்டீர்கள்.  அதற்கு மாறாக உங்களின் உணர்வு கடந்த மனமே உங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும்.  இந்த மனிதர் உங்களுக்கு பொருத்தமாக இருப்பார்.  நீங்கள் ஞானத்தில் வளர்ச்சி பெற இந்த மனிதர் சரியான சூழலாக இருக்க முடியும்.  இந்த மனிதர்தான் உங்களுக்கான வளமான பூமியாக இருக்க முடியும்.  இதுதான் உங்கள் உணர்வு கடந்த மனம் வழிகாட்டும் பாதையாகும்.

அடுத்தபடியாக நான்காவது வகை கனவு.  இது முற்பிறவியிலிருந்து வருகிறது.  இது அவ்வளவு அபூர்வம் என்று சொல்லிவிட முடியாது.  பல சமயங்களில் இது வருகிறது.  ஆனால், உங்களுக்குள் எல்லாமே கலந்து ஒரே குழப்பமயமாக இருக்கிறது.  எனவே, எதையும் வேறு பிரித்தறிய உங்களால் முடிவதில்லை.  வேறு பிரித்தறிவதற்கு வேண்டிய நீங்கள் அங்கு இருப்பதில்லை.

நம் இந்திய நாட்டில்தான் நாம் இந்த நான்காவது வகை கனவுகளின்மீது நீண்ட ஆராய்ச்சிகளை செய்திருக்கின்றோம்.  இந்த கனவுகளின் துணையுடன்தான் மறுபிறவி என்ற நிகழ்வை நம்மால் தற்செயலாக கண்டுபிடிக்க முடிந்தது.  இந்த கனவிலிருந்து உங்கள் முற்பிறவிகள் பற்றி சிறுகச் சிறுக நீங்கள் அறிய விளைகிறீர்கள்.  நீங்கள் பின்னோக்கி போகிறீர்கள்.  காலத்தால் பின்னோக்கி செல்கிறீர்கள்.  அப்போது உங்களுக்குள் பல மாறுதல்கள் ஏற்பட தொடங்குகின்றன.  ஏனென்றால், உங்களின் முற்பிறப்பில் நீங்கள் யாராக இருந்தீர்கள் என்பதை ஒரு கனவின் வழியாகவாவது உங்களால் இருந்தீர்கள் என்பதை ஒரு கனவின் வழியாகவாவது உங்களால் நினைவுகூற முடிந்தால் பல நடப்பு விசயங்கள் அர்த்தமற்றவை ஆகிவிடும்.  பல புதிய விசயங்கள் அர்த்தமுள்ளவையாக ஆகும்.  உங்களின் மொத்த பாணியுமே மாறிப் போய்விடும் ; உங்களின் ஒட்டுமொத்த பார்வையே மாறிடும்.

எப்படியென்றால், ஒரு முற்பிறவியில் நீங்கள் அளவுக்கு அதிகமான செல்வத்தை குவித்தீர்கள் ; வெளிநாட்டிலேயே மிகப்பெரும் செல்வந்தராகவும் இருந்திருப்பீர்கள்.  ஆனால், உள்ளுக்குள் மிகப்பெரும் பிச்சைக்காரனாகவும் செத்தீர்கள்.  இப்போது மறுபடி இந்தப் பிறவியிலும் நீங்கள் அதையேதான் செய்து கொண்டிருப்பீர்கள்.  இதை மாற்றிவிட முடியாது.  உங்களின் சுயம் இது.  ஒருநாள் திடீரென்று உங்கள் பார்வை முழுமையாக மாறிட ஆரம்பிக்கும்.  நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்? அதெல்லாமே எப்படி ஒன்றுமில்லாமல் போயிற்று என்பதை நீங்கள் நிறைவுகூற முடிந்தால், பல பிறவிகளையும் உங்களால் நினைவுக்கு கொண்டு வர முடிந்தால், நினைத்துப் பார்க்க முடிந்தால், ஒரு பிறவியில் செய்ததையே பல பிறவிகளிலும்  நீங்கள் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே வந்திருப்பதை உணர்வீர்கள்.  ஒரு தடைபட்ட இசைத்தட்டுபோல, ஒரு நச்சு வட்டம் போல நீங்கள் இருப்பீர்கள்.  திரும்பவும் அதையே தொடங்கி அதிலேயே முடிந்து போவீர்கள்.  உங்களின் ஒருசில பிறவிகளை உங்களால் நினைவுகூற முடிந்தால், இதுவரை புத்தம் புதிதான ஒரே ஒரு செயலைக் கூட நீங்கள் செய்திருக்கவில்லை என்பதை கண்டு திடீர் அதிர்ச்சி அடைவீர்கள்.

திரும்பத் திரும்பச் சொத்து சேர்த்தீர்கள். அரசியலில் ஆதிக்கச் சக்தியாக ஆவற்கு திரும்பத் திரும்ப முயற்சி செய்தீர்கள்.  மிகப்பெரிய அறிவாளி ஆவதற்கு திரும்பத் திரும்ப பாடுபட்டீர்கள். திரும்பத் திரும்பக் காதலில் அகப்பட்டுக் கொண்டீர்கள்.  திரும்பத் திரும்ப அது உங்களுக்கு ஒரே மாதிரியாக துன்பத்தையே கொண்டு வந்தது.  இந்த மாறாத சூழ்நிலையை கண்டபிறகும் எப்படி நீங்கள் மாறாமல் அப்படியே நீடிக்க முடியும்? அப்போது இந்த வாழ்க்கை முறை உடனடியாக அடிப்படையான மாறுதலை அடையும்.  இனியும் அதே தேய்ந்து போன பாதையில் உங்களால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாது.

அதனால்தான், நம் இந்திய மக்கள் காலம் காலமாக ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டு வந்திருக்கிறார்கள்.  “பிறப்பு – இறப்பு ஆகிய இந்த சக்கரத்திலிருந்து – இந்தச் சுழலில் இருந்து – விடுபடுவது எப்படி?” என்று.

நச்சுச் சுழலாகவே அது தோன்றுகிறது.  ஒரே கதையே திரும்பத் திரும்ப நடைபெற்று வருவதாக தோன்றுகிறது.  இதை நீங்கள் தெரிந்து கொள்ளாத வரை ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய புதிய காரியங்களையே செய்து வருவதாக நினைக்கிறீர்கள்.  அதனால் மிகுந்த மனக்கிளர்ச்சியும் அடைகிறீர்கள்.  ஆனால், ஒரே மாதிரியான இவ்விதச் செயல்களால்தான் நீங்கள் திரும்பத் திரும்ப செய்து கொண்டு வந்திருப்பதை பார்க்க முடிகிறது.

வாழ்வில் எதுவும் புதியது கிடையாது.  அது ஒரு வட்டமான பாதை மட்டுமே.  எப்போதும் போன தடத்திலேயே போய்க் கொண்டிருக்கிறோம்.  கடந்த காலத்தை தொடர்ச்சியாக நீங்கள் மறந்து போய்க் கொண்டே போவதைப் போல, உங்களுக்கு மிகுந்த மனக்கிளர்ச்சி தோன்றுகிறது.  ஒரு தடவை நீங்கள் நினைவு கூர்ந்துவிட்டால், மொத்த மனக்கிளர்ச்சியும் வழிந்து விடுகிறது அதாவது தெரிய ஆரம்பித்துவிடும்.  அந்த நினைவுகூர்தலில் சந்நியாசம் சம்பவிக்கிறது.

சம்சார சுழற்சியின் தேய்ந்து போன தடத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு முயற்சிதான் சந்நியாசம்.  சுழலிலிருந்து குதித்து வெளியேறுவதற்கான ஒரு முயற்சி அது.  அதில் உங்களிடம் நீங்களே பின்வருமாறு சொல்லிக் கொள்கிறீர்கள் – “போதுமடா சாமி, இந்த தெறி கெட்டுப் போன அறிவுகெட்ட தனத்தில் இனியும் நான் ஈடுபட்டு உழலப் போவதில்லை.  அதிலிருந்து வெளியேறப் போகிறேன்” என்று சொல்ல ஆரம்பிப்போம்.

சுழலிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுக் கொள்வதே சந்நியாசம்.  சமுதாயத்தில் இருந்தல்ல.  பிறப்பு – இறப்பு ஆகிய உங்களின் சொந்த அகச் சுழற்சியிலிருந்து விடுபடுதல் – இதுதான் நான்காம் வகை கனவு.

இறுதிப்படியாக ஐந்தாம் வகை கனவு.  இதுதான் கடைசி வகை.  நான்காம் வகை கனவு உங்களின் கடந்த காலத்துக்குள் பின்னோக்கி போகிறது.  ஐந்தாம் வகை கனவு உங்கள் எதிர்காலத்துக்குள் முன்னோக்கி போகிறது.  இதுவோ அரிது, மிகவும் அரிது.  நீங்கள் மிக மிக இணக்கமானவராகவும் திறந்தவராகவும் நெகிழ்ச்சியான வராகவும் இருக்கும்போது கடந்த காலம் உங்களில் நிழலிடுகிறது.  வருங்காலமும் உங்களில் நிழலிடுகிறது, பிரதிபலிக்கிறது.  உங்கள் கனவுகளைப் பற்றி விழிப்புணர்வுள்ளவராக உங்களால் ஆக முடியுமானால், ஒருநாள் நீங்கள் இந்த சாத்தியத்தைப் பற்றி விழிப்புணர்வுடையவராகவும் ஆவீர்கள்.  அதாவது வருங்காலம் உங்களுக்குள் ஊடுருவுகிறது.  திடீரென ஒரு கதவு திறக்கிறது – அவ்வளவுதான் வருங்காலம் உங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுவிடும்.

இவைகள்தான் மேற்சொல்லப்பட்ட ஐந்து வகை கனவு நிலைகள்.

சரி அடுத்தக் கட்டத்திற்குள் பயணிக்கலாம், வாருங்கள்.  நீங்கள் கனவு காணும்போது அந்தக் கனவுகளும் மெய்யானவை என்றே அந்த நேரத்தில் நினைக்கிறீர்கள்.  கனவு மெய்யானது அல்ல என்பதை, அந்தக் கனவைக் கண்டு கொண்டிருக்கும்போது எவருமே உணர்வதேயில்லை.  கனவு காணும் போது அது சரியானதாகவே தோன்றும்.  முற்றிலும் உண்மையானதாகவே தோன்றும்.  விழித்தப்பின், அது வெறும் கனவுதான் என்று நீங்கள் கூறலாம்தான். ஆனால், அது அல்ல விசயம்.  ஏனென்றால், இப்போது வேறொரு மனம் – உணர்வு மனம் – இயங்கிக் கொண்டிருக்கிறது.  கனவு உண்மையில்லை என்பதற்கு இந்த மனம் ஒரு நேரடி சாட்சியாக இருக்கவே இல்லை.  ஒரு வதந்தியாக மட்டுமே அதை இந்த மனம் கேள்விப்பட்டிருக்கிறது.  காலை விடிந்தவுடன் இந்த உணர்வு மனம் விழித்துக் கொண்டு, நடந்ததெல்லாம் வெறும் கனவு என்றே சொல்லும்.  அதற்கு இந்த மனம் ஒரு சாட்சியாக இருப்பதில்லை.  பின் எப்படி இந்த மனம் எதையுமே சொல்ல முடியும்? அது ஒட்டுக் கேட்டிருக்கிறது.  அவ்வளவுதான். இது எப்படிப் பட்டது என்றால், நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள், இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ரொம்ப சத்தம் போட்டு பேசிக் கொண்டிருப்பதால் உங்கள் தூக்கத்தையும் மீறி உங்கள் காதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வார்த்தைகள் வந்து விழுகின்றன.  அதிலிருந்து ஒரு ஒப்பேற்றலான கருத்துப் பதிவு உங்கள் மனதில் ஏற்பட்டுவிடுகிறது – அவ்வளவுதான்.

அதனால் நீங்கள் உணர்வு மனத்திலிருந்து விடுபட்டு உணர்வற்ற மனத்திற்குள் எட்டிக் குதித்து விடுங்கள். அதற்கான ஒரே வாயில் – வாசல் தியானம் மற்றும் தவம் மட்டுமே.  இப்போது நீங்கள் உணர்வுள்ள மனத்திலிருந்து உணர்வற்ற மனத்தின் ஆழங்களுக்குள் மூழ்கிச் செல்ல வேண்டும். அது, உங்கள் இருத்தலின் அடித்தளங்களுக்குள் போவதற்குச் சமம்.  தூக்கத்துக்குள் – கனவுக்குள் நீங்கள் ஊடுருவ முடியும் அளவுக்கு, அதிகப்படியான விழிப்புணர்வை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  நீங்கள் விழித்திருக்கும்போது கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது என்பதிலிருந்து தொடங்க வேண்டும்.  அது நீங்கள் உணர்வற்ற மனத்தை ஊடுருவிச் செல்ல உங்களுக்கு உதவும். பின் உணர்வற்ற மனத்துக்குள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கப் பழகுங்கள்.  அது உணர்வு கடந்த மனத்தை ஊடுருவ உங்களுக்கு உதவும்.  இதற்கு ஆற்றல் தேவைப்படும்.  தற்போது உங்களிடம் இருக்கும் ஆற்றல் ஒரு சிறு மினுக்கத்தின் அளவுதான் – அது போதாது.  விழிப்புணர்வின் வழியே அதிக ஆற்றலை உருவாக்குங்கள்.

தண்ணீரை அல்லது ஒரு பனிக்கட்டியை நீங்கள் வெப்பமாக்குவதைப் போன்றது இது.  பனிக்கட்டியைச் சூடாக்கினால் அது உருகும்.  குறிப்பிட்ட வெப்பநிலையில் அது நீராக மாறிவிடும்.  பின் அது ஆவியாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் மேற்கொண்டும் சூடாக்க வேண்டியுள்ளது.  அப்படியானால் தொடர்ந்து 1000 வரை சூடேற்ற வேண்டும்.  அப்போது பனி நீர் ஆவியாக ஆரம்பிக்கும்.  பனிக்கட்டியின் அளவும் தன்மையும் மாறத் தொடங்கும்.

அதனால் முதலில் விழித்திருக்கும் நேரங்களில் அதிகப்படியான கவனத்தை கொண்டவராக ஆக வேண்டும். அது உங்களை குறிப்பிட்ட அளவு வெப்பநிலைக்குக் கொண்டு வரும்.  உண்மையாகவே, அது குறிப்பிட்ட அளவு உள்சூடுதான்.  உங்கள் உடலின் குறிப்பிட்ட அளவு வெப்பநிலைதான் உணர்வற்ற மனத்துக்குள் நீங்கள் இயங்க உங்களுக்கு அது உதவும்.  பின் உணர்வற்ற மனத்துக்குள் நீங்கள் இயங்க உங்களுக்கு அது உதவும்.  பின் உணர்வற்ற மனத்துக்கு அதிகப்படியான உணர்வுள்ளவராக மாறிடுங்கள்.  இதற்கு இன்னும் கூடுதல் மயற்சி தேவைப்படும்.  இன்னும் கூடுதல் ஆற்றல் உருவாக்கப்படும்.  பின்பு திடீரென ஒருநாள் நீங்கள் மேல்நோக்கி இயங்கிக் கொண்டிருப்பதை காண்பீர்கள்.  நீங்கள் எடை குறைந்தவராக ஆகியிருப்பீர்கள்.  புவியீர்ப்பு விசை இப்போது உங்களை பாதிக்கச் செய்வதில்லை.  உணர்வு கடந்தவராக நீங்கள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதி-உணர்வு அனைத்து ஆற்றல்களையும் பெற்றிருக்கிறது.  அது எல்லாம் உடையதாகும்.  எல்லாம் அறிந்ததுமாகும், எங்கும் நிறைந்ததாகும்.  உணர்வு கடந்த மனம் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும்.  உணர்வு கடந்த மனதுக்கு, இயலக்கூடிய எல்லா ஆற்றல்களும் அதனிடத்தே உள்ளது.  உணர்வு கடந்த மனம், எல்லாவற்றையும் காண்கிறது – பரிபூரண முழுமையாக தெள்ளத் தெளிவான, பார்வையை – தன்னைத் தானேப் பார்த்துக் கொள்ளும் பூரண அகப்பார்வையை அது கொண்டிருக்கும்.

உணர்வற்ற மனத்தை நீங்கள் கைவல்யப்படுத்தி சித்தி பெற்று விட்டால், அதன்பின் பிறவிச் சுழல் தானே உங்களை விட்டு விலகி அகன்று போய்விடும் என்று சொல்லி இந்த பேச்சுரையை இனிதே நிறைவு செய்கின்றோம்.

பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து

உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!