இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!

ஓம்……………………..   ஓம் ……………………..  ஓம் …………………..

இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.

 

அடுத்த அகவல் வரிகள் : “என்னை அறிவித்து எனக்கருள் செய்து

        முன்னை வினையின் முதலைக் களைந்து (56)” என்பது.

என்னை அறிவித்து என்ற வார்த்தையை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்.  நான் யார்? எதற்காக இந்த பிறவி? இதன் நோக்கம் என்ன? என் வாழ்வு எதை நோக்கிச் செல்கிறது? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல் கணபதியே என்று ஔவைத்தாய் கேட்கிறார்.

நான் யார்? என்பதை உள்ளது உள்ளபடி அறிவிக்க வேண்டும் என்று ஔவைத்தாய் கேள்வியை எழுப்பி கணபதியை பிரார்த்தித்து திருவடி மலர்களால் பூசித்து திருவடிகளில் கண்ணீர் பெருகி ஓடிக் கொண்டிருக்க வேண்டி நின்று கொண்டிருக்கிறார்.  இந்தக் காட்சியை உங்கள் அனைவரின் மனக்கண் முன் கொண்டு வந்து பாருங்கள் அன்பர்களே.

இந்த வரியைப் படிக்கும்போது, எம் சற்குரு சுந்தரானந்த மஹரிஷி அவர்கள் சதுரகிரி மலையில் என்னுடைய 21வது வயதில் கற்பித்த ஞானங்கள் நினைவுக்குள் நிழலாடுகிறது.  குருவிடம் ஒருநாள் நான் கேட்டேன்.

“நான் யாராக இருக்கிறேன் குருவே? எதற்காக இந்த மனிதப் பிறவி எனக்கு இறைவன் அளித்தான்? என்ன செய்யப் போகிறேன்? என் வாழ்வின் இறுதி எப்படியாக இருக்கும்?” என்று கேட்டேன். 

அதற்கு எம் சற்குரு கொடுத்த பதிலை உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும் என்றே இங்கே சொல்கிறோம். வாருங்கள் சதுரகிரிக்கு செல்வோம். காலம் 1989. 40 ஆண்டுகளுக்கு முன்னே பயணம் செய்து வாருங்கள்.  குருவின் அற்புதமான ஞான வரிகளை நன்றாக காதுகளில் கேட்டு உங்கள் உயிரில் நின்று கேளுங்கள். குரு பேச ஆரம்பிக்கிறார்.  அப்போது நாம் பிரமஞானத் தவத்தை முடித்துவிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தின் முன் வில்வமாலையைத் தொடுத்துக் கொண்டிருந்தேன்.  குருவோ அந்த வில்வ மாலை கட்டி முடிக்கும்வரை காத்திருந்து பின் அதை வாங்கி சுந்தர மகாலிங்கத்தின்மீது அணிவித்துவிட்டு, என்னை நோக்கித் திரும்பினார்.  அப்போது குருவுக்கு பெரிய ஜடாமுடி இருக்கும்.  இடுப்பில் ஒரு காவி வேட்டி. உடலைப் போர்த்திக் கொண்டு ஒரு காவி வேட்டி.  தாழம்பூ வாசமும், சந்தன வாசமும் கலந்த தேக வாசனையைக் கொண்டிருப்பார்.  உடம்புக்கு எந்தவித சோப்போ, ஷேம்பூவோ போட்டுக் கொள்வதில்லை.  ஆனால், சதா நறுமணத்திலேயே இருந்து கொண்டிருப்பார்.  ஒருநாள் இதைக் கேட்டதற்கு, “அது என் உயிரின் நறுமணம்” என்றார்.  “உங்கள் ஒவ்வொருவருக்கும் அந்த நறுமணம் இருக்கத்தான் செய்கிறது.  ஆனால், நீங்கள்தான் உங்களுக்குள் இருப்பதில்லையே.  அதனால்தான் உங்களால் உங்கள் உயிரின் வாசனையை நுகர முடிவதேயில்லை. இந்நிலையை நீங்களெல்லாம் எப்போது மாற்றப் போகிறீர்கள்?” என்றார்.  அப்படியே சத்சங்கத்தை ஆரம்பித்துவிட்டார்.  நான் யார்? என்ற கேள்விக்கு குருவின் அமுத மொழிகள்.   என்னை அருகில் வரவழைத்து அவரின் பாதத்திற்கு அடியில் உட்கார வைத்துக் கொண்டு, என் கேள்விக்கு பதில் செல்ல ஆரம்பித்தார்.

“நீ தேடுவது, உன்னிலிருந்து பிரிக்கப்பட்ட வேறொன்றா அது? உன்னிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றை வேண்டுமானால் நீ தேடலாம். ஆனால் நீயாகவே இருக்கும் ஒன்றினைப் போய் நீ எப்படி வெளியே தேட முற்பட முடியும்? வேறு அனைத்தும் தேடப்படும் வகையில் உன்னுடைய சுயத்தினையும் நீ தேட முடியாது. ஏனென்றால், இந்த விசயத்தில் தேடுகிறவனுக்கும் தேடப்படும் பொருளுக்கும் வித்தியாசம் கிடையாது. உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் வேண்டுமானால் நீ வெளியே தேடலாம். ஆனால், உன்னையே நீ வெளியில் தேட முடியாது. உள்ளே உறையும் தனது சுயம் என்ன என்பதை வெளியே தேடிக் கொண்டு செல்பவன், அவனுடைய சுயம் எனும் சத்தியத்திலிருந்து மிகவும் விலகி வெகுதூரம் போய் விடுகின்றான். இந்த உண்மையை முழுதும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  அப்போதுதான் தேடுதல் என்பது சாத்தியப்படும்.

பொருள் சார்ந்தவற்றை இவ்வுலகில் நீங்கள் வேண்டினால், அவற்றை நீங்கள் வெளியுலகில்தான் தேடிப் பிடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, தனக்குள் தான் அடங்கி, கலக்கப்படாமல், படபடப்போ பரபரப்போ இன்றி மாற வேண்டும். நீங்கள் என்னவோ அந்த சத்திய நிஜத்தை, முழு நிசப்தத்திலும், எதுவும் அற்ற காலியான மனநிலைமையிலும்தான் காண முடியும். நினைவிருக்கட்டும்…..

தேடுதல்கூட ஒருவகையில் இறுக்கம்தான். வேட்கைதான், தாகந்தான், படபடப்பு தான். சுயம் என்பது வேட்கையில் அலையும்போது அனுபவப்படாது. ஆன்மா, பதைபதைப்பான புத்திக்குள் புலப்படாது. இதுதான் இங்குள்ள ஒரு சிரமம். வேட்கை என்பது, ஏதோவொன்றாய் நாம் ஆகிவிடத் துடிப்பது அல்லது எதுவோ கைசேர நாம் பிரயத்தனப்படுவது.  ஆனால், ஆன்மா என்பதோ ஏற்கனவே அடையப்பட்டு விட்ட ஒன்று. கைகூடிவிட்ட ஒன்று. ஆன்மா என்பதுதான் நான், என் சுயம். வேட்கையும் ஆன்மாவும் இருவேறு துருவங்கள். அவை எதிரெதிர் பரிமாணங்கள்.

ஆன்மா என்பது அடையப்படக் கூடியது. ஆனால் அது தேடப்படும் ஒரு பொருளாக ஆகாது என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மாவைப் பொறுத்தமட்டில் எந்தவிதமான தாகமும் அதற்கு இருக்க முடியாது. உலக மாயா காரியங்களுக்குத்தான் ஆசையும், தேவையும். ஆன்மாவுக்கு அல்ல.

காமம் நிறைந்த சிற்றின்பத்தை நாடுவதும் ஆசைதான் ; காமமற்ற பேரின்பத்தை தேடுவதும் ஆசைதான்.

காசுக்காக ஓடுவதும் ஆசைதான் ; தியானம், தவத்திற்காக உட்கார்ந்து விடுவதும் ஆசைதான்.

பதவி, பெருமைகளுக்காக உலகத்தோடு ஒட்டுறவாடுவதும் ஆசைதான் ; இறைமையை உணர்வதற்காக உலகை உதறுவதும் ஆசைதான்.

சிற்றின்பத்திற்கு என்றாலும் சரி,  ஞானம் என்ற பேரின்பத்திற்கு என்றாலும் சரி, எதற்காக ஆனாலும், வேட்கை என்பதற்கு வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஆசைதான். எந்த ஆசையும் பேராசையே. ஆசை என்பது பற்று ; சிறைப்படுத்தும் விலங்கு ; பந்தம்.

வேட்கை என்றால் என்ன என்பது நமக்குப் புரிந்துவிடும்போது நாம் வேட்கையிலிருந்து விடுவிக்கப்படுவோம். ஏனென்றால், இந்த புரிதல்தான் ஆசையின் வலி கொடுக்கும் இயல்பினை அவனுக்கு வெளிப்படுத்துகின்றது. வலி என்றால் என்ன என விளங்கிக் கொள்வதுதான் வலியிலிருந்து கிடைக்கும் விடுதலை. வலியை அனுபவித்துவிட்ட பிறகு அதனை ஏற்படுத்துவதன் மேல் ஒருவரும் ஆசை கொள்ள மாட்டார்கள்.

பிறகு, வேட்கை இல்லாத அக்கணத்தில், ஆசையால் சிந்தனை தொந்தரவு பண்ணப்படாத அந்நொடியில், நீங்கள் எதையும் தேடாத அந்த நேரத்தில், அந்த உயர்ந்த கணப்பொழுதில், அந்த அமைதியான, ஆழ்ந்த, நிசப்தமான மனோநிலையில், நீங்கள் யார் எனும் சுயத்தினை அதிகாரப்பூர்வமாக நீங்கள் அனுபவிப்பீர்கள். வேட்கை மறைந்து விடும்போது, ஆன்மா தானாய் பூத்து மலர்ந்துவிடும்.

ஞானம் என்பது எந்த உள்ளடக்கமும் இல்லாத ஓர் மெய்யுணர்வு. வெற்றிடம். காலி. ஞானம் ஒரு வெற்றிட பிரக்ஞை. தூய பிரக்ஞை. பரிசுத்த உணர்வு. இந்த நிசப்தமான அமைதி தருணத்தில, சத்தியத்துக்கான கதவு திறந்து கொள்கின்றது.  வெற்றிடமாகிப் போகும் புத்தியில்தான் சத்தியம் உணரப்படுகின்றது. இதன் விளைவாக ஒருவனுடைய முழு வாழ்க்கையுமே உருமாற்றம் கொள்கின்றது.

இந்த வெற்றிட நிலைமையை, இந்த ஞான அனுபவத்தை, ஒருவன் தியானத்தால், தவத்தால் கிடைக்கப் பெறுகின்றான். ஆனால், தவம் என்று பொதுவாய் எது விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதோ உண்மையில் அது தவமல்ல. அதுவும்கூட சிந்திப்பதற்கான ஒருவகைதான். அந்த சிந்தனை ஒரு நற்சிந்தனையாக, ஆன்மா அல்லது இறைவன் சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம். இருந்தாலும்கூட அது சிந்தனைதான். எதைப்பற்றிய சிந்தனை என்பது ஒரு பொருட்டு கிடையாது. சொல்லப்போனால், சிந்தனை என்பதன் அடிப்படைக் குணமே புறம் சார்ந்ததுதான். எது சுயம் கிடையாதோ அதனுடன் அது தொடர்பு கொண்டு நிற்கும். சுயம் என்பது குறித்து எவ்விதமான சிந்தனையும், எண்ணமும், பிரக்ஞையும் இருக்க முடியாது. ஏனென்றால், சிந்தனை இடம் பெற இரண்டு விசயங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று – சிந்திக்கும் நீங்கள். இரண்டு – நீங்கள் எதைச் சிந்திக்கிறீர்களோ அது. ஆக சிந்தனை ஓர் இருமைப் பண்பு கொண்டது. இதனால்தான் சிந்தனை என்பது உங்களை இருமை கடந்து ஒரேயோர் இறைமையாய் தனித்து நிற்கும் ராஜாங்கமான ஆன்மா எனும் ஒருமைக்கு அழைத்துப் போவதேயில்லை.  உள்ளூர நீங்கள் விழுந்து, ஆழ்ந்து சென்று, இருமை அற்ற ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கு தவம்தான் வழியே அன்றி, சிந்திப்பது கிடையாது.

சிந்தனையும், தவமும் முழுக்க முழுக்க எதிரெதிர் திசைகளில் போகின்றன. ஒன்று வெளியுலகம் சார்ந்து போவது. மற்றது உள் மன ஆழத்தை நோக்கி செல்வது. மற்றது என்ன என்பதனை விளங்கிக் கொள்ள வழி, சிந்தனை, சுயம் – ஆன்மா – அது என்ன என்பதை அறிந்து கொள்ள வழி, தவம். ஆனால் பொதுவாக சிந்தனை, ஆழ்ந்த யோசிப்பு, இதுதான் தவம் எனக் கொள்ளப்பட்டுள்ளது. எதுவும் செய்யாத ஒரு நிலையில் இருப்பதுதான் தவம். தவம் என்பது எதையோ செய்வதல்ல. ஒரு நிலையில் ஆணியில் அறைந்தாற்போல நிலைபெற்று விடுவது அது. ஒருவனுடைய சுயம் எனும் ஆன்மாவில் போய் நிலைத்து நிற்பதாகும் தவம்.

நாம் நமது பல்வேறு நடவடிக்கைகளால் புற உலகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்கிறோம். எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையால், நாம் நம்முடைய சொந்தமான சுயத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றோம். எதுவும் செய்யாத ஒரு நிலையில் நாம் யார் என்பதனை விளங்கிக் கொள்கின்றோம். மாறாக, அனைத்து விதமான விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு உழன்று கொண்டிருக்கும்போது, நாம் நம் சுயத்தினைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தையே இழந்து விடுகின்றோம். நாம் இருக்கிறோம் என்பதையேகூட மறந்து போகின்றோம்.

நம்முடைய வேலைகளும் அவற்றுக்கான ஓட்டங்களும் மிக நெடியவை. நமது உடல் வேண்டுமானால் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால், நம் சிந்தனையும் புத்தியும் ஓய்வெடுத்துக் கொள்வதே இல்லை. விழித்திருக்கும்போது நாம் சிந்திக்கிறோம். தூங்கும்போது கனவு காண்கிறோம். இடைவிடாது இவ்வாறு நாம் செய்து கொண்டே இருப்பதால், நாம் யார் என்பதை நாம் விமரிசையாய் மறந்து விடுகின்றோம். நம்முடைய தினசரி நடவடிக்கைளுக்கு மத்தியிலேயே நாம் யார் எனும் அறிதலை இழந்து விடுகின்றோம். விளங்கிக் கொள்ள முடியாத என்ன ஓர் ஆச்சரியம் இது. ஆனால், இதுதான் நிஜம். நாம் தொலைந்து விட்டோம். ஒரு பெரிய திருவிழா கூட்டத்தில் அல்ல. நம் சொந்தச் சிந்தனைகளாலும், நம்முடைய கனவுகளாலும், நம்முடைய தினசரி பணிகளாலும், நடவடிக்கைகளாலும் நாம் நமக்குள்ளேயே தொலைந்து நிற்கின்றோம்.

புத்திக்குள் இப்படித் திசை தெரியாது அல்லாடுவதில் இருந்தும், நாமே உருவாக்கிக் கொண்டுள்ள இந்த நெரிசலில் இருந்தும் நம்மை நாமே அகழ்ந்து ஆராய்ந்து விளங்கிக் கொள்ள, தவம் ஒன்றுதான் வழி.

தவம், ஒரு நிகழ்வாக இருக்க முடியாது. அதன் இயல்பு அப்படி. அது ஒரு பரபரப்பான வேலை கிடையாது. எவ்வித சிந்தனைகளாலும் சூழப்படாத புத்தியைக் குறிப்பதாகுவது தான் தவம் என்பது. எதையும் செய்யாதிருப்பதைத்தான் நாம் பழகிக் கொண்டு வர வேண்டும்.

தவம் என்ற சொல், எதையோ செய்வது எனும் பொருளைத் தருகின்றது. ஆனால், எதையும் செய்வதைக் குறிப்பதல்ல தவம். ‘நாம் தவம் செய்து கொண்டிருந்தேன்’ என்று சொல்வது தவறு. ‘நான் தவத்தில் இருந்தேன்’ என்பதுதான் சரியான வார்த்தை.

அன்பினைப் போன்றது தவம். ஒருத்தர் அன்பாய் இருக்கலாம், அன்பில் இருக்கலாம். அன்பினை அவரால் செய்ய முடியாது. அன்பையும் கருணையையும் அவரால் பண்ண முடியாது. இதனால்தான் தவம் என்பது புத்தியின் ஒரு நிலைப்பாடு – ஒரு தளம் என்று சொல்கிறேன்.

நாம் இங்கே குருகுலத்தில் கூடியிருப்பது எதையோ ஒன்றினை செய்வதற்காக அல்ல. மாறாக, எவ்விதமான இயக்கங்களும் அற்ற, தூய்மை குறைந்த எதுவும் இடம் பெற இயலாத ஓர் உன்னத தளத்தில், வெறுமனே போய் ஏறி அமர்ந்து கொண்டு, அதனை அப்படியே அனுபவிக்க, ஆன்மாவின் பரிசுத்த ஜ்வாலை மட்டுமே இருக்கும் புத்தியின் பிரதேசம் இது. ‘நான் ஒரு’ எனும் சிந்தனைகூட அற்றுப்போகும் தளம் இது. ஆன்மா மட்டுமே மிஞ்சியிருக்க, ‘நான்’ என்பதே கரைந்து போயிருக்கும் இறைமைப் பகுதியிது.

இதுவே சூனியம், வெற்றிடம். இங்கு நாம், நாம் சார்ந்திருக்கும் உலகத்தை காண்பது கிடையாது. சத்தியத்தைக் காண்கிறோம். இந்த வெற்றிடத்தில்தான், இந்த கண்மணியின் கருந்துளையில்தான், உங்களை யார் என்று நீங்கள் அறிந்து கொள்வதைத் தடுத்து நின்ற தடுப்புச் சுவரானது தவிடுபொடியாகின்றது. இளங்காலையில் உதிக்கும் கதிரவனாய் ஞானம் உங்களில் எழுகின்றது. இதுதான் ஞானப் பார்வை.

தவம் என்பது எதுவும் செய்யாதிருப்பது. செய்தல் என்பது நாம் பண்ண நினைத்தால் பண்ணுவது….. பண்ண நினைக்காவிட்டால் விட்டுவிடுவது. ஆனால், சுயத்தின் இயல்பு செய்தல் எனும் வகையில் சேராது. அது பண்ணுவதும் அல்ல….. பண்ணாமல் விட்டுவிடுவதும் அல்ல.

உதாரணத்துக்கு பார்ப்பதையும் கேட்பதையும் எடுத்துக் கொள்வோம். இவ்விரண்டுமே நம்முடைய இயல்புகள். நாம் ஏதும் பண்ணாமல் இருந்தாலும் இவையிரண்டும் இருக்கும். நமது சுயமான இவ்விரு இயல்புகளும் இடைவிடாது நம்முள்ளேயே உள்ளன. நிரந்தரமாகவும் இடைவிடாதும் நம்முள் இருப்பதைத்தான் சுய இயல்பு என்கிறோம். இந்த சுய இயல்பு, நம்முடைய படைப்பு அல்ல. இது நம்முடைய அடிப்படை.  நம் அஸ்திவாரம். நாம்தான் இது. நாம் இதை படைப்பது கிடையாது. அதனால் நிலை நிற்கின்றோம். ஆகவேதான், நம்மை நிலைநிறுத்தி வைத்துள்ள இதை, நாம் தர்மம் என்கின்றோம். தர்மா என்றால் சுய இயல்பு.  சுயத்தின் இயல்பு. தர்மா என்றால் சத்தியத்தின் இருப்பு, ஆன்மா.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கும் நடவடிக்கைகளால், நம்முடைய இந்த இடைவிடாத சுய இயல்பு அமுக்கப்பட்டுள்ளதைப் போல, சூரியன் மேகங்களால் மூடப்பட்டுள்ளதைப் போல, நாம் நம்முடைய நடவடிக்கைகளால் மூடி வைக்கப்பட்டுள்ளோம். மேற்பரப்பில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைகள், ஆழத்திலுள்ள ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளன. ஒப்புயர்வற்ற சமுத்திரத்தின் அடியாழத்து ரகசியங்களை பைசா பெறாத அலைகள் மறைத்துக் கொண்டு பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. மாசுபடாத இறைமை, ஒன்றுக்கும் உதவாத நமது நடவடிக்கைகளால் அமுக்கப்பட்டுள்ளது என்பதும், கண்ணில் விழுந்த ஒரு சிறு தூசி மலைகளையே மறைத்து விடுவதும் என்பதுதான் விந்தையிலும் விந்தையாய், புரியாத புதிராய் இருக்கிறது.

ஆனால், அலைகள் இருப்பதனால் சமுத்திரங்கள் காய்ந்து போய் விடுவது இல்லை. சொல்லப் போனால் அலைகளில் இருக்கும் அதே உயிர்ப்புத்தான் சமுத்திரத்தின் அடியாழத்திலும் நிலை கொண்டுள்ளது. ஞானம் எய்தியவர்கள், அலைகளிலும் சமுத்திரத்தை அடையாளம் காண்பார்கள். ஆனால், பிறரோ, அலைகள் அடங்கும்வரை காத்திருப்பார்கள். சமுத்திரத்தின் நிசப்த அமைதியை அவர்களால் அலைகள் அடங்கிய பிறகுதான் காண முடியும். எப்போது அலைகள் அடங்குவது? இவர்கள் எப்போது ஞானத்தை அடைவது?

ஆக, அரவமற்ற, சாந்தமும் கருணையும் ததும்பும், சலனமேயில்லாத ’தூய அறிதல்தான் நம் சுய இயல்பு. சுய இயல்பு என்பதற்குள் நாமே முன்வந்து குதித்து விட வேண்டும். அலைகளைப் பற்றி நாம் கவலைப்படாமல் கடலுக்குள் குதித்து விட வேண்டும். நமக்குள் எங்கு சுயம் உள்ளது? நம்முடைய ஆன்மா சிரசிற்குள்ளே எங்குள்ளது? இறைமை உள்ளுக்குள் எங்கே உறைந்து கொண்டிருக்கிறது? என்பதை அதன் ஆழத்துக்குப் போய்தான் நாம் கண்டாக வேண்டும்.

அலைகளற்ற மேலும் சலனங்கள் அற்ற இப்பிரக்ஞை எப்போதும் நம்முள் இடம் பெற்றுதான் இருக்கிறது. ஆனால், நாம்தான் அவ்விடத்தில் இல்லாமல் எங்கேயோ இருந்து கொண்டிருக்கிறோம். அதிலிருந்து நாம் விலகித் திரும்பிக் கொண்டு எதிர்த்திசையில் நிற்கின்றோம். வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம். உலகத்தை, உலகத்து பொருட்களை நாம் கவனித்துக் கொண்டு நிற்கின்றோம். ஆனால், ஒரு விசயத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நாம் பார்க்கிறோம். எது பார்க்கப்படுகின்றதோ, அது உலகம். ஆனால், உள்ளேயிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே அவன் உலகம் கிடையாது. அதுவே நமது சுயம் என்ற ஆன்மா.

எந்தப் பொருளை பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அந்தப் பொருளுடன் நாம் பார்க்கும் செயல் அடையாளம் காணப்படுமேயானால், அதுவே சிந்தனை, எண்ணம். ஆனால், பார்க்கும் செயல், பார்க்கப்படும் பொருளோடு சம்பந்தப்படாது அந்த பரப்பிரம்மம் நோக்கி திரும்பி இருந்தால், அதுவே தவம்.

பார்த்தல் என்பது எண்ணத்திலும் இடம் பெறுகின்றது. தவத்திலும் இடம் பெறுகின்றது. ஆனால், முன்னதில் பொருள் சார்ந்தும் பின்னதில் அப்படி இல்லாமலும் அமைகின்றது. இருந்தாலும் நாம் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் சரி அல்லது தவ உலகத்தில் இருந்தாலும் சரி…. செயல்களில் உழன்று கொண்டிருந்தாலும் சரி அல்லது அவற்றிலிருந்து சுதந்திரம் அடைந்தவர்களாக ஆகியிருந்தாலும் சரி…. ‘பார்த்தல்’ என்பது நிரந்தரம். விழித்திருந்தால் நாம் உலகத்தைப் பார்க்கிறோம். தூங்கினால் கனவினைப் பார்க்கிறோம். தவத்தில் நாம் நம்முடைய சுய ஆன்மாவை பார்க்கிறோம். ஆனால், இந்த மூன்றிலும் ‘பார்த்தல்’ நிரந்தரமாய் இடம் பெறுகின்றது. ‘பார்த்தல்’ என்பது நிரந்தரமானது, இடைவிடாதது. இது நம் ஆன்மாவின் இயல்பு. எந்நிலையிலும் இது இல்லாமல் போனதில்லை. அதனால் நம்மை, நமக்குள் காணவும், நம்மை அறிந்து கொள்ளவும், நம் உயிரைக் காணவும், நம் உயிர்க்கூடான ஆன்மாவைக் காணவும், உயிருக்குள் ஒளியாக – சுடராக – சோதியாக – அருட்பெருஞ்சோதியாக இருக்கும் இறையை காணவும் ‘பார்த்தல்’ என்ற சுடராழி நிகழ்வில் நாம் சதா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் மகனே”. 

“இப்படி தான் யார் என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டபின், நீ முதற்காரியமாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே?”

நான் பேச்சற்று குரு சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தேன்.  குரு தொடர்ந்தார்.

“உனக்குள்ளே இருக்கும் இறைவனை முதலில் தேடிக் கண்டடைந்து விடு மகனே”  என்றார்.

“அதைப் பற்றிய புரிதலும் அறிந்து கொள்ளும் ஞானமும் எனக்கு இன்னமும் வரவில்லை குருவே.  அதனால் இறைவனை எப்படித் தேடிக் கண்டடைவது என்பதைப் பற்றிய ஞானத்தை எனக்கு விளங்கும்படி அருள வேண்டும் குருவே” என்று குருமுன் யாசித்து நின்றேன்.  குரு தொடர்ந்து என் முகத்தைப் பார்த்து புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தார்கள்.

“சரி மகனே.  நன்றாக உள்வாங்கிக் கொள் சிவநேசா. ஒருவருடைய முகத்தில், அவர் இறைவனை நேசிப்பவரா? இல்லையா? என்பதை பார்ப்பது வெகு எளிது. உண்மையான பக்தர்கள் எப்போதும் இறைபக்தியில் மூழ்கித் திளைத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு தீவிர பத்தி அவர்களிடம் சதா இருந்து கொண்டே இருக்கும். அது எப்படி என்றால், அவர்களிடம் இறைவன் மீதான விசுவாசம் இரவும் பகலும் சதா சிந்தித்துக் கொண்டே இருப்பதாகும். இந்த வகையான விசுவாசம் இல்லாமல் இறைவனைக் காணவே இயலாது. அது சாத்தியம் இல்லாதது. பிரமஞானத் தவத்தைத் தவறாமல் செய்பவர்கள் இறைவனிடம் ஆழ்ந்து பிரார்த்தனை செய்பவர்கள் அவர்கள் எதற்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருந்தார்களோ அந்த இறைப் பொக்கிஷத்தை நிச்சயம் கண்டுபிடிப்பார்கள்”.

“இந்த உலகம் ஒரு கனவு மேடை மட்டுமே. பிரபஞ்சத்தில் இருக்கும் கடலுக்கும் ஆகாயத்திற்கும் இடையே எந்த அடிப்படை வித்தியாசம் இருப்பதில்லை. அவை வெறுமனே ஒளி, ஒலி அதிர்வுகளின் வெவ்வேறு அதிர்வெண்கள்தான். இதைப்போலத்தான் இந்த உலகமும் இருக்கிறது. இன்பம்-துன்பம், சுகம்-துக்கம், குளிர்ச்சி-வெப்பம், மேடு-பள்ளம், மலை-மடு, ஆண்-பெண், தேவர்-அசுரர் இவை எல்லாமே இவ்வுலகத்தின் கனவுநிலைகள்தான். இதை நாம் முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் மட்டும் ஒரே உண்மை, சத்தியம். எந்தவிதச் சோதனையோ அல்லது சபலமோ, அவனை மறந்துவிடுமாறு செய்யக்கூடிய வலிமை பெற்றதாக எப்போதுமே இருக்கக்கூடாது என்பதை நாம் எப்பொழுதும் பிரார்த்தனை செய்ய வேண்டும். நாம் இவ்வாறாகப் பிரார்த்தனை செய்யும் பொழுது, இறையாற்றலின் முழு ஆற்றலையும் நம்மால் கிரகித்துக் கொள்ளும் வலிமையைப் பெற்றுவிடுவோம்.  அப்போது எந்தவொரு முக்கியமான ஒன்று என் கவனத்தைத் திருப்புவதாக இருந்தாலும்கூட, நான் இறைவனின் கருணைக் கரங்களில் பாதுகாப்பாக இருப்பதை உடனடியாக நம்மால் உணர்ந்துவிட முடியும்”.

“இறைவனை அறிதல் கடினம்தான். அவனை அடையும் பாதை கூரிய கத்தி முனையைப் போன்றதுதான். ஆனால், தைரியம் இல்லாத முயற்சிகளை ஒருபோதும் நம்மால் நியாயப்படுத்திக் கொள்ளவே முடியாது. ஏனெனில், நாம் எதையும் முயன்று பெறவோ அல்லது வெல்லவோ வேண்டியதில்லை. இறைவன் ஏற்கனவே நமக்குள் இருந்து கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால்தான் எதிர்மறைத் தன்மை ஒருவரின் மனத்திலிருந்து முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று சொல்கிறேன். குருவினுடைய எண்ணங்களுடன் ஒத்துழைப்பது அவனை அடையும் பாதையை நமக்கு வெகு சுலபமாக்கிவிடுகிறது. நாம் இப்போது குருவோடு பயணிக்கிறோமா என்பதுதான் இப்போது நம்முன்னே இருக்கும் கேள்விக்குறி”.

“சீடன், என்னால் இதைச் செய்ய முடியாது ; எனக்கு இது மிகவும் கடினமாக இருக்கிறது என்று சொன்னால், அவன் முன்னேற்றம் அங்கே தடைபட்டு நின்று போய்விடுகிறது. நம்மைத் தவிர வேறு யாரும் நம்மை பலவித மனநிலைகளிலும், பழக்கங்களிலும், ஆசைகளிலும் சிக்க வைக்கவில்லை.  மேலும், நம்மைத் தவிர வேறு எவரும் நம்மை விடுவிக்கவும் மாட்டார்கள்”.

“உன்னுடைய பிரமஞானத் தவ வாழ்க்கையைப் பற்றிய ஒரு நாட்குறிப்பேடு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். நான் தினமும் எவ்வளவு நேரம் தவம் செய்தேன் மற்றும் எவ்வளவு நேரம் ஆழ்ந்து உயிரோடு பயணித்தேன் என்பதைப் பற்றிய ஒரு குறிப்பை எழுதி வருவது மிக்க நன்மையை உனக்குக் கொடுக்கும். முடிந்தவரை தனிமையை நாடு ; தனிமையிலேயே இருந்துவிடு. உன்னுடைய ஓய்வு நேரத்தை, வெறும் சமூக நோக்கங்களுக்காக மக்களுடன் கலந்திருப்பதில் கழிக்காதே. இறைவனுடைய அன்பை, சகவாசத்தில் காண்பது கடினம். இறைவன் மௌனத்தில்தான் கண்டறியப்படுபவனாக இருக்கின்றான். இதற்குத்தான், உனக்கு பிரமஞானத் தவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரமசாந்தித் தவம் இதை உனக்குக் கொடுக்கும்”.

“இறைவனைப் பற்றிய பிரமஞானத்தை மனித ஆன்மாக்களில் விதைப்பதுதான் எனது பெரும் ஆவல். மற்ற அனைத்தும் பயனில்லாதவை என்பதை நான் அறிவேன். இறைவனுடன் தனிப்பட்ட தொடர்பு கொள்வதற்கான வழியை தனி மனிதருக்குப் போதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கான முயற்சியை விடாமல் செய்பவர்கள் இறைவனைக் கண்டறிவார்கள். உன் பிரணவக் கமலத்தில் அதாவது திருவடியில் ஓர் உறுதியான சபதம் செய்து, தெய்வீகத் தந்தையிடம், அவனைத் தேடுவதற்கான தணியாத வேட்கையை உனக்கு அருளுமாறும், இப்பூலகத்தின் அர்த்தமற்ற பொழுதுபோக்குகளில் இனிமேலும் நீ காலத்தை வீணாக்காமல் இருப்பதற்காகவும் பிரார்த்தனை செய் மகனே”.

இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றால், இப்படித்தான்.

உங்கள் தெய்வீகத் தந்தையிடம் பிரார்த்தனை செய்யுங்கள்

  1. நாங்கள் பணிபுரிய வேண்டும் என படைப்பின் விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால், நாங்கள் உன்னை மகிழ்விப்பதற்காக மட்டுமே எங்களுடைய கடமைகளை ஆற்றுவோமாக.
  2. உண்பது, உறங்குவது, மற்ற எதனையும்விட அதிக முக்கியமானவன் நீதான் என்பதை நாங்கள் அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு கணமும் எங்களை ஆசிர்வதிப்பாயாக.
  3. உன்னுடைய சோதனைகளை நாங்கள் எதிர்கொள்ளவும், தேகத்தின் பயங்கரமான சபலங்களைத் தவிர்க்கவும் வல்லவர்களாக ஆக எங்களை ஆசிர்வதிப்பாயாக.
  4. உன்னுடைய அரசகுமாரர், அரச குமாரிகளாகிய நாங்கள் அனைவரும் உனது திருவடியில் மகுடம் சூட்டப்பட்டவர்களாக ஆகுவோமாக.

 

“உனக்கான எனது பிரார்த்தனை என்ன தெரியுமா மகனே. இன்றிலிருந்து நீ இறைவனுக்காக மிக உயர்ந்த முயற்சி எடுக்க வேண்டும் மற்றும் அவனில் நீ நிலைபெறும்வரை முயற்சியை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதும்தான். நீ அவனை நேசிப்பாய் என்றால், பிரமஞானத் தவத்தை ஒருபோதும் கைவிட்டுவிடாது, மிகுந்த பக்தியுடனும் விசுவாசத்துடன் பயிற்சி செய்து வா. பிரார்த்தனை மற்றும் பிரமஞானத் தவத்தின் மூலமாக அவனை இடையறாது தேடு. நல்ல உற்சாகத்துடன் இரு. ஏனெனில், நம் எம் சற்குரு சுந்தரானந்த மஹரிஷி அவர்கள் அடிக்கடி சொல்வார் : இந்தத் தர்மத்தைச் சிறிது பழகினாலும் பெரும் பயத்திலிருந்து திரும்பத் திரும்ப நிகழும் பிறப்பு, இறப்பு சுழற்சிகளில் இயல்பாகவே அமைந்திருக்கும் மாபெரும் இன்னல்களிலிருந்து உன்னை அது காப்பாற்றும்”.

ஒருசமயம் எம் குருவோடு பொதிகை மலையில் அதிகாலை தவம் முடித்து காலார நடக்கலாம் என்றார். உடன் அவரோடு மௌனமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது இரு மருத மரங்களுக்கு நடுவே ஒரு மின்னல் போன்ற ஒளிக்கீற்று தோன்றி தோன்றி மறைந்து கொண்டே இருந்தது. நான் குருவின் கையை இறுக்கிப் பிடித்தேன். அதை அதன் இறுக்கத்தைக் கண்டு, நான் பார்த்த திசை நோக்கி மெல்லென பார்க்கலானார்.

“சிவநேசா, உனக்கு இந்த மின்னலைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?” என்றார்.

“குருவே, இறைவன் என்பவன் யார் என்ற கேள்விதான் எனக்குள் சட்டென்று தோன்றி மறைந்தது” என்றேன்.

குரு மெல்ல மெல்ல விழி திறந்து பேசலானார். அவருடைய பேச்சில் ஆழ்ந்த அமைதி இருக்கும். தேவையற்ற வார்த்தைகள் இருக்காது. அந்த அமைதியில் நம் உயிரையே குடிக்கும் ஆற்றல் இருக்கும். உடலெங்கும் பரவசம் பரவ ஆரம்பிக்கும். மொத்தத்தில் இவரின் பேச்சு நம் உயிரையே மயக்கிவிடும்.

“மகனே, சிவநேசா. இறைவன் என்பவன் ஒரு ஆசாமி கிடையாது. அது ஓர் மெய்யுணர்வு கொடுக்கும் அனுபவம். எப்போது உனக்குள் ஆணவ மையங்கள் தகர்த்து எறியப்படுகிறதோ, அப்போது உனக்குள் நீ காணும் தரிசனக் காட்சி அது – இயற்கை என்றால் என்னவென்று ஒருவன் கொள்ளும் மௌன அனுபவம் அது – இங்கிருக்கும் வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் பற்றிக் கிடைக்கும் தெளிவு-ஞானம் அது.  இந்த அனுபவங்களைத்தான் இறைவன் எனச் சொல்ல வேண்டும் சிவநேசா. இது, ஒரு ஆளாக இறைவனை உருவகப்படுத்தும் அனுபவம் இல்லை. மாறாக அனைத்துக்குள்ளும் பரவிக் கிடக்கும் அன்பை அனுபவித்தலே இறைவன். இறைவனுக்கு என்று ஒரு இருப்பிட மையம் கிடையாது.  அவன் எல்லா இடங்களிலும் பரவி நிரம்பிக் கிடப்பவன். அணுவிலும் அணுவாய் அமைந்திருப்பவன். எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்.  இதுதான் அவனின் மையம்.  இதனை இறைவனின் அனுபவம் என்று அழைக்கக்கூடாது மகனே. ஆனால், எங்கெங்கும் நீக்கமற நிறைந்துள்ள அன்பின் அனுபவம்தான் இறைவன் என்பதை உன் உயிரில் நன்றாக நிலைநிறுத்திக் கொள் சிவநேசா.”

“அன்பு, நேசம், பிரியம், காதல் – இது இரு நபர்களுக்கு இடையில் இருக்கும் ஓர் உறவு.  இதே உறவு, ஒரு தனிநபருக்கும் எங்கெங்கும் உள்ள முழுமைக்கும் இடையே நிகழும்போது, இதனை நான் இறைவன் என அழைக்கின்றேன் மகனே. அன்பின் உச்சநிலை, அன்பின் பூரணத்துவம், இதுதான் இறைவன், பேரானந்தம். அதனால் அன்பே இறைவன் என்பதை நாம் உணர்வால் உணர்ந்து கொள்ள வேண்டும்”.

“ ‘நான்’ எனும் ஆணவம் தகர்த்து எறியப்பட்டபிறகு, எது மீதம் இருக்குமோ, அதுதான் அன்பு மகனே. ‘சுயம்’ எனும் நம் நிஜ உயிர்ப்பினை மூடியிருந்த சுவர் தகர்த்து எறியப்பட்டால், அப்போது மிஞ்சி நிற்கும் ஒன்றுதான் அன்பு. இதுதான் இறைவனும்கூட. ஆகவே, ஒருவனால் இறைவனைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், அவனால் இறைவனாக ஆக முடியும்.  இதைத்தான் நமது பிரமஞானத் தவம் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் நிகழ்த்திக் கொள்ளும் ரசவாதம் மகனே. எனவே, மகனே, சிவநேசனாக என்னோடு வாழ்ந்தது போதும், நீ இப்போதே இவ்விடமே இறைவனாக மாறிவிடு, உணர்ந்துவிடு.”

குரு இந்த ஞானத்தை எனக்குள் நன்றாக ஆழமாக விதைத்து விட்டதை என்னால் உடனே உள்வாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறி நின்றேன். அதைக் கவனித்த “மகனே, மனம் படுத்தும் பாடு இது. மனதைப் பிடிக்காதே. மனம் சொல்வதைக் கேளாதே. உன் உயிர் சொல்வதைக் கேள். உன் உடல்மொழி சொல்லும் ஞானத்தை மெய்யுணர்வால் உணர ஆரம்பி. பிறகு எல்லாம் தன்னால் உனக்குள் நடந்தேறி வரும்.”

“அப்படியென்றால், நான் மனம் இல்லாமல் செய்ய மனதைக் கொல்ல வேண்டுமா குருவே?” என்றேன்.

“ஆம், அதைக் கொன்று போடத்தான் வேண்டும். அதைக் கொல்லக் கொல்ல அது தொடர்ந்து உனக்குள் உருப்பெற்றுக் கொண்டேதான் இருக்கும். அதனால் அதை வேக வைத்து எரித்துக் கொன்றுவிடு” என்றார்.

“அதெப்படி குரு, மனதை வேக வைப்பது?” என்றேன்.

“அதற்கு ஒரு தந்திரம் இருக்கு மகனே. வேக வைப்பது என்றால் என்ன மகனே?” என்றார்.

“நெருப்பில் இட்டு பாத்திரத்தில் வைத்து எரிக்க வைக்க வேண்டும் குருவே” என்றேன்.

“இங்கே எது நெருப்பு? எது பாத்திரம்? எது எரிப்பது?” என்றார்.

“அது சரியா போச்சு. எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு கேள்வியை கேட்பது உங்கள் வழக்கமாகப் போய்விட்டது குரு. எதைப் பதிலாகச் சொன்னாலும், அதனை கேள்வியாக மாற்றிவிடுகிறீர்களே. நீங்கள் கில்லாடிதான் குரு” என்றேன்.

“பேச்சை திசை மாற்றாதே. பதில் சொல்” என்றார்.

“மனது என்பது ஒரு பொருளல்ல. அதனால் அதை ஒரு பாத்திரத்தில் இட்டு எரிக்கவோ, வேக வைக்கவோ முடியாது. மனது என்பது ஒரு உணர்வு, எண்ணங்களின் கூட்டு, அவைகளின் தாயகம். இதை ஞானம் என்ற அக்கினியால் எரித்துவிட்டால் அது மீண்டும் முளைக்காதல்லவா குருவே” என்றார்.

“ஞானம் வரும்போது, அங்கே மனம் இருப்பதில்லை மகனே. மனமற்ற நிலைதான் ஞானம் அல்லவா. அப்போது ஞானம் உண்டானபிறகு, அங்கே மனதைக் கொல்ல வேண்டிய அவசியமே இருக்காதே. மனம் எப்போது செத்துப் போகுமோ, அப்போதுதான் ஞானமே உனக்குள் பிறப்பெடுக்கும். அதன்பின் மலர்ந்து மணம் வீசும். மனதைக் கொல்லும் நெருப்பு, பாத்திரம், எரிப்பது இதற்கு இன்னும் நீ பதில் சொல்லவில்லை” என்றார்.

இவர் நம்மை நோண்டி நொங்கு எடுக்காமல் விடமாட்டார் போலிருக்குதே என்று எண்ணிக்கொண்டு, சிந்தனை செய்கின்ற பாவனையில் முழித்துக் கொண்டிருந்தேன். அதைக் கண்டுபிடித்த “டேய், பதில் எங்கேடா?” என்று அதட்டிப் பேச ஆரம்பிக்க, “இதோ குரு”. ஒரு நிமிடம் என்று ஓட்டம் பிடித்தேன் பொதிகை மலையில். குரு சட்டென்று என் வேட்டியைப் பிடித்து நிறுத்தி விட்டார். நல்லவேளை வேட்டி அவுரவில்லை. “குரு, நீங்கள் பெரிய கேள்வி கேட்டுள்ளீர்கள். யோசிக்க வேண்டாமா?” என்றேன்.

“நீ எப்ப யோசிக்கிறது. இங்கு வா. அதன் ரகசியத்தைச் சொல்கிறேன்” என்று சொல்லி, அந்த பொதிகை மலையில் ஒரு அருவியில் என்னை முழுக்க குளிக்க வைத்து, என் சிரசின்மீது அவரின் கைகளை வைத்து ஆசிர்வதித்து பிரமஞானத் தவத்தை முழுமையாகப் போதித்தார்.

அப்போது என் தலை முழுக்க ஒரு மிகப்பெரிய ஒளித் திண்டு தோன்றி என் முகத்தை மறைக்க ஆரம்பித்தது. என் தலை காணாமல் போய் அங்கே ஒரு ஒளி வட்டவடிவில் தோன்றி என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. ஒளிக்கலவைகளின் கூட்டாக அது இருந்தது. அவ்வளவு பெரிய பிரகாசத்தை நான் சூரியனில்கூட கண்டதில்லை. அவ்வளவு சுயப்பிரகாசம். நான் எனக்குள் இதை ஏற்றுக்கொள்ள இயலாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். குருவின் கருணை எனக்குள் என்னைத் தேடிக் கண்டடைந்தேன் அன்று. அன்றிலிருந்து இன்றுவரை நான் தவத்தில் மூழ்கும்போதெல்லாம் இந்த ஒளிப்பிரகாசம் என்னை அதன் கட்டுக்குள் திளைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தவத்தை ஆரம்பிக்கும்வரை நான் நானாகத்தான் இருப்பேன். தவத்தில் நுழைந்தபிறகு, எனக்குள் என்னென்னவோ மாற்றங்கள், உணர்வுகள் சொல்ல முடியாத வகையில் நிரம்பிக் கொண்டே இருக்கும்.

அவ்வாறு குரு எனக்கு பிரமஞானத் தவத்தைப் போதித்தப் போது எனக்குள் எண்ணங்கள் இல்லாமல் போனது கண்டு வியப்பிலும் வியப்பாக இருந்தது.

“குரு, என்னால் சிந்திக்க முடியவில்லை” என்றேன்.

“பிறகு” என்றார்.

“நான் யார் என்ற உணர்வு இல்லை” என்றேன்.

“பிறகு” என்றார்.

“எனக்குள் வெப்ப ஒளியலைகள் பரவுகிறது குரு. என் பெயர்கூட மறந்து போய்விட்டதே” என்றேன்.

“பிறகு” என்றார்.

“குரு, என் தலைக்குள் ஒரு உருவத்தைக் காண்கிறேன். அது என்னைப் போலவே இருக்கிறது” என்றேன்.

“பிறகு” என்றார்.

“அந்த உருவம் ஒளியாக இருக்கிறது. உடலாக அல்ல. அது தீபத்தைப் போல அசைந்து அசைந்து ஆடிக் கொண்டிருக்கிறது” என்றேன்.

“பிறகு” என்றார்.

“அந்த ஒளி உருவத்திற்குள் ஆழமாகப் பார்க்கிறேன். அங்கே ஒரு பொன்னிற ஒளி தனியாக ஆடாமல் அசையாமல் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது” என்றேன்.

“அந்த பொன்னிற ஒளி மலரைப் போலத் தெரிகிறதா” என்றார்.

“ஆமாம், குரு” என்றேன்.

“அந்த மலர் கூம்பிக் கிடக்கிறதா? விரிந்து காணப்படுகிறதா?” என்றார்.

“கூம்பி” என்றேன்.

“அது மலர வேண்டும் மகனே. அது எப்போது மலர்கிறதோ அப்போதுதான் உனக்குள் ஞானம் முகிழ்க்கும்” என்றார்.

“இப்போது அதை மலர வைக்கிறேன். அதன்பின் நீ உன் பிரமஞானத் தவத்தால் மலர வைக்கும் தவத்தைச் செய்து வரவேண்டும்” என்று கூறி, அவரின் தவ ஆற்றலை எனக்குச் செலுத்த ஆரம்பித்தார்.

என்னுடைய உயிர்க் கமலமானது ஒவ்வொன்றாக அதன் இதழ் விரித்ததைப் பார்த்தேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு இதழும் விரியும்போது எனக்குள் ஏற்பட்ட பரவச உணர்வுக்கு அளவேயில்லை. உடம்பு கூசிக்கொண்டு இருந்தது. கண்கள் சொக்கிப் போய் நின்றது. இமைக்க மறந்து போனேன். உடல் அசைவற்றுப் போனேன். மனமில்லாமல் போனது. உடல் முழுக்கு ஜிலுஜிலுவென்று காற்று வருடிக் கொண்டே இருந்தது. மயிலிறகால் உடலை யாரோ தீண்டிக் கொண்டே இருந்தது போல இருந்தது.

இப்படி இந்த ஆனந்தப் பரவசத்தில் நான் மூழ்கிக் கொண்டிருந்த போது, அங்கே ஒரு காட்சியைக் காண ஆரம்பித்தேன். அதுதான் பொன்னொளியால் ஒரு உலகத்தைக் காண ஆரம்பித்தேன். ஒரு மிகப்பெரிய ஒளியால் ஆன உருவங்கள் நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டேன். கண் எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு ஒளியும் ஒரு நாதத்தோடுதான் இணைந்திருப்பதைக் கண்டேன். அது கிட்டத்தட்ட மகாமந்திர நாதத்தைப் போல இருந்தது. அங்கே எல்லாமே ஆனந்தமாகவே தெரிந்தது. யாரும் துன்பத்தில் இருப்பதைப் போல தெரியவில்லை.  ஒவ்வொரு உருவமும் மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கே ஒரு வேலின் அமைப்பைப் போன்ற ஒரு உருவம் ஒளிப்படலமாத் தெரிய ஆரம்பித்து. இரண்டு அரை வட்ட ஒளிப் பிழம்புகள் இடப்பக்கமிருந்தும் வலப்பக்கமிருந்தும் மெல்லென தவழ்ந்து வந்து ஒன்று சேர்ந்து வேல்போல காட்சி அளிக்க ஆரம்பித்தது.

அப்போது குரு பேச ஆரம்பித்தார். “மகனே சிவநேசா, இதுதான் உன் உயிரின் இருப்பிடம். இந்த இடத்தை நன்றாக நிலைநிறுத்திக் கொண்டுவிடு. உனக்குள் உயிரைக் காணும்போதெல்லாம் இந்த வடிவம் தோன்றி நிற்கும். அப்போது அதனிடம் மகாமந்திரத்தையும் பிரம்மாஸ்திர மந்திரத்தையும் உச்சரிக்க ஆரம்பித்து விடு. உன் உயிர் அப்போது நன்றாக மலர ஆரம்பித்துவிடும்.  உன் உயிர் மலர்ந்த பிறகு இறைவனை தட்டி எழுப்பும் சிவத்தின் பிரம்மாஸ்திர மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்துவிடு. இவ்விரு செயல்களும் உன் உயிரையும், அதற்குள் இருக்கும் உன் இறையொளியையும் மலர வைக்க ஆரம்பித்துவிடும். இவையெல்லாம் உன் மூன்றாம் திருவடியில் செய்ய வேண்டும்” என்றார்.                                                                                                                                                                                                     

எனக்குள் மலர்ந்த நாள் அன்று. அன்று சித்ரா பௌர்ணமி தினம். அன்று இரவு நிலவோடு என்னை சங்கமிக்க வைத்தார் குரு. அது கொடுத்த அமுதம் இன்றுவரை எனக்குள் தித்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னை நிலவாகக் கண்ட நாள் அது. தினமும் இந்நிலவு எனக்குள் உதித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலவு எனக்குள் நிரந்தரமாக நான் 11 வருடங்கள் தவத்தில் உழைக்க வேண்டியிருந்தது.

இதையெல்லாம் உங்களுக்குள் சொல்கிறேன் என்றால், நீங்கள் முழு நிலவாக மாறி ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்குத்தான். இந்த அனுபவங்களை இதுவரை யாரிடமும் நான் உரையாடவில்லை. இப்போது உங்களுக்காக சொல்கின்றோம் அவ்வளவுதான்.

இப்படியே அன்றைய பௌர்ணமி கழிய ஆரம்பித்தது. இரவு முழுக்க குருவோடு அமர்ந்து கொண்டு அவருக்கு நேரெதிரில் அமர்ந்து கொண்டு இருவரும் தவத்தில் மூழ்கப் போனோம். அப்போது எனக்குள் சில கேள்விகள் உதயமாகின. பேசும் தருவாயில் எதற்கோ வேதத்தின் பக்கம் சிந்தனைப் பேச்சு தொடங்கியது.

“வேதங்களைப் படிப்பதன் அவசியம் என்ன குரு?” என்றேன்.

குரு பேச ஆரம்பித்தார். “வேதப் புத்தகங்களை படிப்பதால் என்ன நோக்கம் நிறைவடையப் போகிறது, மகனே? இதனால் சத்தியத்தை உனக்குள் அறிந்து தெளிவினை அடைந்துவிட முடியுமா? இது உனது புத்திக்கு ஒருவித பயிற்சியைத்தான் தரும். அவ்வளவுதான். வேதத்தைப் படிப்பதால் சில விசயங்களை நீ படிப்பாய். படிப்பதும் அவற்றின் மெய்ப்பொருளை விளங்கிக் கொள்வதும் ஒன்றா என்ன மகனே?  வேதத்தில் இறைவனைப் பற்றி படிப்பாய். சத்திய இறைமையைப் பற்றி படிப்பாய். ஆன்மாவைப் பற்றியும் படிப்பாய்.  அதனால் இவற்றைப் பற்றி உன்னிடம் கேட்டால் சட்டென்று உன்னால் பதில்களைத் தந்துவிட முடியும். ஆனால், இதை உன் வீட்டுக் கிளியிடம் கேட்டால் அந்த வேத மந்திரங்களை ஒன்றுவிடாமல் திருப்பித் திருப்பி அது சொல்லிக் கொண்டிருக்கும். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்வார்களே, அதைப்போலத்தான் வேதம் படிப்பதும். அப்போது உனக்கும் கிளிக்கும் கட்டுத்தறிக்கும் என்ன வேறுபாடு? சத்தியமானது வேத நூல்களில் இருந்து கிடைக்கப் பெறும் ஒரு விசயமல்ல. அது உள்ளே உள்ளது. உனக்குள்ளே இருப்பது. அதுதான் வேதம்”.

“வேத நூல்களில் வார்த்தைகள் மட்டுமே உள்ளன. தனக்குள்ளே தான் அடங்கி எவன் ஒருவன் ஆன்மாவை அனுபவித்து வருகின்றானோ, அவனுக்கு மட்டும்தான் வேத வார்த்தைகளின் மெய்ப்பொருள் ஞானத்தைத் தருபவைகளாக இருக்கும் ; அமையும். இப்படி இல்லாவிட்டால் இவ்வார்த்தைகள் அர்த்தம் அற்றவைகளாகவே போய்விடும். நமக்கு தீங்கையும் விளைவித்துவிடக்கூடும். வேத மந்திரங்களை உருப் போடுவதால் உண்மையான ஆன்ம இறைமையை உன்னால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால், தெய்வீக ஆன்மாவை நீ அறிந்து கொண்டுவிட்டால், வேதம் முழுதும் தெரிந்துவிட்ட தரம் உனக்குள் மலர்ந்து மணம்வீசும் மகனே. வேதத்தைப் படிக்கப் போகிறாயா? வேதத்தை உனக்குள் மலர வைக்கப் போகிறாயா? நீயே முடிவு செய்துகொள் சிவநேசா. படிப்பதற்கும் மலர வைப்பதற்கும் எத்தனை வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் உள்ளதைப் போல இருக்கும். மலையைப் பிடித்து மலையேறி விட வேண்டும். மடுவுக்குள் சென்றால் ஏறிவர முடியாது. மலை எப்போதுமே வெளிச்சமாகவே இருக்கும். மடு எப்போதும் இருளாகவே இருக்கும்”.

“ஆனால், இன்றைக்கு வேதத்தைக் கரைத்து குடித்துவிடத்தான் மக்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவற்றின்மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களிலேயே அவர்கள் முழுத் திருப்தியும் அடைந்துவிடுகிறார்கள். என்னவொரு கனமற்ற, போலியான திருப்தி இது மகனே”.

“சத்தியத்தின் ஆன்மா என்ன என்பதை தெரிந்து கொள்ளும் எண்ணமெல்லாம் உண்மையில் நமக்கு கிடையாது என்பதும், ஆன்மாவை பூரணமாய் நாம் அறிந்தவர்தான் என மக்கள் நம்பிக் கொண்டிருந்தால் அது போதும் என்று மட்டும் நாம் நினைப்பதும், இவையெல்லாம் கடைந்தெடுத்த அஞ்ஞானக் கேடுகள் அல்லாமல் வேறு என்ன சொல்ல. ஆன்மாவின் சாரத்தினை அனுபவிக்க உண்மையாகவே நினைக்கும்  எவருமே, வெறும் அலங்கார வார்த்தைகளால் திருப்தி அடைய மாட்டார்கள் சிவநேசா. ஒருவனின் தாகம் ‘தண்ணீர்’ என்ற வார்த்தையை வெறுமனே சொல்லுவதால் தீர்ந்துவிட்டதாய் நீ கேள்விப்பட்டதுண்டா? அப்படி ஒரு சின்ன வார்த்தையால் மட்டுமே தாகம் தீர்ந்திருந்தால், அங்கு உண்மையான தாகம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை என்பது விளங்கவில்லையா மகனே?”

“வேத நூல்கள் அவற்றின் வாயிலாக சத்திய இறைமையை உணர முடியாது என்று திட்டவட்டமாக தெளிவுபடுத்தினால், அது மட்டுமே அவற்றால் விளையும் புண்ணியமாய் அமையும். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்று உணர்த்தினால்தான் வார்த்தைகளுக்கு மதிப்பு மகனே. ‘இதுவே போதும்’ என்கிற நிறைவினை உண்டுபண்ணி விடாமல், ‘இன்னும் நிறைவேறாமலே உள்ளோம்’ என்று வேத நூல்கள் உணர வைத்தால், அதுவே போதுமானது. ஞானத்தை நமக்குத் தராமல், அறியாமையில் உள்ளோம் என்ற அறிதலை ஏற்படுத்தினால், அதுவே உத்தமமானதாக இருக்கும்”.

“வேத நூல்களில் சொல்லப்பட்ட வார்த்தைகளை மட்டும் பிடித்துக் கொண்டு நீ தொங்க ஆரம்பித்து விட்டாயென்றால், உனக்குள் ஒன்றுமே மலராது மகனே”.

“பக்கம் பக்கமாக நீ எத்தனையைத்தான் மனதில் உருவேற்றிக் கொண்டாலும், உரு போட்டுக் கொண்டாலும், தலைகீழாக மனப்பாடமே செய்திருந்தாலும், அதனால் விளையப் போவது ஒன்றுமேயில்லை. இதுவே உன் புத்திக்கான ஒரு சிறையாகப் போய்விடும். பிறகு நீ வாழ்நாள் முழுதும் நீயாகவே கட்டிக் கொண்ட இந்த சிறைக்குள்ளேயே முட்டிக் கொண்டும் மோதிக் கொண்டும் சுற்றிக்கொண்டே இருப்பீர்கள்”.

“நாமே உருவாக்கிக் கொண்ட சிறைகளில் நாம் அனைவருமே பூட்டப்பட்டிருக்கின்றோம். சத்தியம், சுயம், ஆன்மா, இறைமை இதனை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், வார்த்தைகளைக் கேட்டும் படித்தும் உருவாக்கிக் கொண்டுள்ள சிறைதனை உடைத்தெறிய வெகு வேகமாக வரவேண்டும். அச்சிறையின் சுவர்களைத் தகர்த்து எறியுங்கள். சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள்”.

“இந்த எரிந்துபோன சாம்பலிருந்துதான் உன்னுடைய மெய்யான சத்தியம் பிறக்கும். சிறை அகன்ற இந்த புது மெய்யுணர்வில் நீ சத்தியத்தைத் தரிசனம் செய்வாய். அங்கே சத்தியம் புத்தம்புது மலராய் மலர்ந்து மணம் வீச ஆரம்பிக்கும். ஆனால், அதற்கு முன்னால் அந்த சத்தியம் மலர்வதற்கான ஒரு அறையை நீ உனக்குள் உருவாக்கி வைத்திருக்க வேண்டும். உனக்குள்ளே இருக்கின்ற அத்தனை வார்த்தைகளையும் எதையும் யோசிக்காமல் அப்படியே அள்ளி, அள்ளி நீ வெளியில் எறிந்துவிட்டால், அந்த வெற்றிடத்தில் அமர்ந்து கொண்டு உன்னைப் பேரின்ப அமுதத்தில் திளைக்க வைக்க, உன் மெய் சத்தியம் அங்கே அதனுடைய முதல் காலடிச் சுவட்டை பதிக்க உன் முன்னே வந்து நிற்கும். அந்த முதல் காலடிதான் உன் பிரமஞானத்தின் முதல் துளி, முதல் விதை” என்றார் குரு.

என் அன்பு மாணவர்களே, யாரெல்லாம் சத்தியத்தை நோக்கி உங்கள் காலடியை எடுத்து வைக்கப் போகின்றீர்கள். உங்கள் உயிரின் காலடியை நீங்கள் தரிசனம் பண்ண வேண்டாமா? உங்கள் கடவுளின் காலடியை அங்கே நீங்கள் தரிசனம் செய்ய வேண்டாமா? நன்றாக சிந்தித்து பிரமஞானத் தவத்தில் மூழ்கிப் போங்கள். தவத்தைச் செய்யாதீர்கள். தவமாகவே ஆகிப் போங்கள். அதுவொன்றே சத்தியத்தை உங்களுக்குள் மலர வைப்பதற்கான ஒரேயொரு மெய்வழி.

இப்படி நாம் தினமும் பிரமஞானத் தவத்தை செய்து வரும்போது, முதலில் நமது பிறவிக்குக் காரணமான மும்மலங்கள் எரிந்து சாம்பலாகிப் போகும். அதன்பின் நீங்கள் யார் என்பதை உங்கள் உயிரே உங்களுக்குக் காட்டிக் கொடுத்து அழகு பார்ப்பதைக் காண்பீர்கள். 

இதைத்தான் ஔவைத்தாய் அவர்கள், “என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து கொடு விநாயகப் பெருமானே” என்று கேட்கிறார்.

நம்மை நமக்குள் பார்க்கும் சுடராழியால், நாம் யார் என்பதைத் தெரிந்து கொண்டு யார் நீ என்ற கேள்விக்கு உயிரே பதிலாக இருப்பதைக் கண்டு கண்டு, விண்டு விண்டு, சதா பேரின்பத்திலேயே திளைத்துக் கொண்டிருக்கலாம் வாருங்கள் உலக ஆன்மாக்களே. 

இறைவன் ஒளியாக இருக்கும்வரை அவனைக் காண இயலாது. இந்த விசயத்தில் பிரமனும் திருமாலுமே தோற்றுப் போயிருக்கும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்.  அந்த இறையொளியோடு நாதமாகிய ஒலியை 432 அதிர்வெண்களோடு கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், இறைவன் அவன் இருப்பிடத்திலிருந்து நாதவிந்துவாக வடிவெடுத்து நம்முன்னே தோன்றுவான் என்பது பிரமஞானச் சத்தியமாகும். ஒளியைத் தனித்து காண இயலாது. அதன் வெளிச்சத்தை மட்டும்தான் நம்மால் காண இயலும். ஆனால், ஒலியோடு கூடிய ஒளியை நம்மால் தெளிவாக ஒரு உருவமாக காண இயலும்.  அதுதான் அருவுருவம்.  இறைவனை இவ்வாறு அருவுருவத்தில் மட்டுமே காண முடியும்.  அருவுருவம் நம் திருவடிகளில் நன்றாக காண முடியும்.  அருவத்தை நம் உயிரில் நின்று காண இயலும். உயிரின் வடிவம் அருவமாக இருப்பதால், அதற்குள் இருக்கும் இறையை அருவத்தில் காண்பது சாத்தியமே.  அதனால், பிரமஞானப் பொற்சபையில் இறைவனைக் காண ஒளிக் கலைகளை நாதப் பிரமத்தோடு இணைத்திடும் அதி சூக்கும ரகசியக் கலையான பிரமஞானத் தவமானது அடிதவறாது, முறை பிறழாது, ஆழ்கூர்மையோடு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதைச் சொல்லிக் கொண்டு, இந்த ஞானப் பேச்சுரையை இனிதே முடித்து அமைகின்றோம்.

பிரமஞானப் பொற்சபையிலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.

நல்லது.  இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும் 

@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai என்ற வலையொளி தளத்திலும்

www.bramagnanaporsabai.com என்ற வலைப்பூத் தளத்திலும்

கொடுத்து வருகின்றோம். நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

 பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து

உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.

 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

திருச்சிற்றம்பலம் !!