இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!

ஓம்……………………..   ஓம் ……………………..  ஓம் …………………..

இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.

 

அடுத்த அகவல் வரிகள் வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

    தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து (58) என்பது.

தான் யார் என்பதைத் தெரிந்து கொண்டபின், அடுத்து ஔவை கேட்பது தனக்கு வாக்கும் மனமும் செயல்படாத மன லயத்தை – மனப்பக்குவத்தை அருளிட வேண்டும் என்று கேட்கிறார்.  வாக்கும் மனமும் – அதாவது பேச்சும் எண்ணமும் அற்ற நிலைப்பாட்டையே கேட்கிறார்.

ஞானம் அடைய முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அருளிய வாசகம் : பேச்சற, சும்மா இரு.  இந்த ஒரு நிலைப்பாட்டைத்தான் ஔவை விநாயகரிடம் கேட்கிறார். நம்முடைய மனதிலே வாக்கு என்ற பேச்சும் எதையும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனமும் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள்.  மனம் இருக்கும்வரை கண்டிப்பாக் எண்ணங்களும் பேச்சுக்களும் இருக்கத்தான் செய்யும்.  முதலில் எண்ணங்களை இல்லாமல் செய்து விட்டீர்களென்றால், அங்கே பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுமல்லவா.  இதை சிறிது சிந்தித்துச் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.

அதேபோல உடலாலும் மனதாலும் வாயாலும் எண்ணங்களாலும் எதையும் சிந்திக்காது இருப்பீர்களென்றால், அதாவது பேச்சு, எண்ணம், செயல் ஆகிய மூன்றிலும் நீங்கள் பூரண மௌனத்தைக் கடைப்பிடித்தீர்களென்றால், மனம் என்ற தளம் உடைய ஆரம்பித்துவிடும்.  மனம் எங்கேயிருந்து கொண்டு செயல்படுகிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.  அது நம்முடைய மாயை இருக்கும் இடத்தில்தான் அதன் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாயை இருக்கும் இடம் நமது திருவடிகளில் மகாவிஷ்ணு பள்ளிக்கொண்டிருக்கும் இடமாகும். கிருஷ்ண பரமாத்மாவைத்தான் நாம் மாயக் கண்ணன், மாயாவி, மாயாஜாலக்காரன் என்றெல்லாம் அழைக்கின்றோம். அந்த இடத்தில்தான் மனமானது அதன் தளங்களான மாயை, கன்மங்களை அமைத்துக் கொண்டு நம்மை ஞானத்தை அடையவொட்டாமல் திரைகளைப் போலத் தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மாயை, கன்மங்களை வேறெந்த உபாயங்களாலும் – தந்திரங்களினாலும் வென்றெடுக்காமல் முடியாமல்தான் நாமெல்லாம் ஒவ்வொரு ஜென்மங்களாகப் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றோம். இவ்வாறாக நமது பேச்சும் மனமும் செயல்படாமல்   மௌனத்தில் ஆழ்ந்து விடும்போது, ஒரு தெளிந்த அறிவுநிலையை நாம் அடைவோம். இந்நிலையை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பிரமஞானத் தவத்தை மேற்கொள்வதுதான் உங்களுக்கு இருக்கும் ஒரே வழி.

இதைத்தான் ஔவைத்தாய் விநாயகப் பெருமானிடம், “வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து” என்றார்.

அடுத்த அகவல் வரிகள் : “இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன

        அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில்(60)”  என்பது.

இந்த விநாயகர் அகவலில் ஔவைத்தாய் பயன்படுத்தும் ஞானயோக சொற்கள் எனக்குள் பெரிய இரசவாதத்தையே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.  இங்கே ஔவை கேட்கிறார் : “விநாயகப் பெருமானே, நீ எனக்கு ஒரு விசயத்தை செய்துதான் ஆகவேண்டும். எல்லா பிரமஞானிகளும் இராப்பகலற்ற இடத்தில் இருக்க வேண்டுமென்றும், தவம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்களே, அத்தகைய இருளும் வெளியும் கடந்து, அவையிரண்டும் ஒன்றாக இருக்கும் இராப்பகலற்ற இடத்தை நான் எப்போதும் உன் நினைவாகவே இருந்து கொண்டிருக்க அவ்விடத்தை அருளி என்னை ஆனந்தத்தில் அழுத்தமாக ஆழமாக ஊன்றி இருக்கும்படி என் செவிகள் கேட்குமாறு சம்மதம் தருவாயாக” என்கிறார்.

இருள் என்ற இரவும், வெளி என்ற பகலும் இல்லாத ஓரிடம் ஒன்று இருக்கிறது என்கிறார்கள் அத்தனை சித்தர் பெருமக்களும் பிரமஞானிகளும்.  அவ்விடம்தான் இராப்பகலற்ற இடம். அந்த இடத்தில் நாம் இருக்கத் தலைப்பட்டுவிட்டால், இறைவன் நமக்கு சதா அருள் என்ற பேரின்பத்தை வழங்கிக் கொண்டே இருப்பான்.  அந்த பேரின்ப வெள்ளத்தில் நாம் சதா நீந்தி, நீந்தி இறைவன் திருவடிகளை செவ்வனே அடையலாம்.  இந்த இராப்பகலற்ற இடத்தை எத்தனை ஞானிகள் என்னவென்று சொல்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே கேட்கலாம், வாருங்கள்.

முதலில் மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவை பதிகத்தில் இவ்வாறு சொல்கிறார்.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்

                                பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே

                நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

                                சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

                ஏசும் இடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

                                கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

                தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்

                     ஈசனார்க்கு அன்பார்யாம் ஆர்ஏலோர் எம்பாவாய்.  (2)

 

பொழிப்புரை : “செவ்விய அணிகலன்களை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும்போது,  ‘எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப்பிழம்பான இறைவனுக்கே என்று சொல்வாய். அப்படிப்பட்ட நீ, எப்பொழுது இம்மலர்கள் நிறைந்த படுக்கையின்மீது விருப்பம் வைத்தாய்’ எனக் கூறுகின்றாயே. உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்து விழித்தெழுந்த பெண்கள் இவ்வாறு கூறுகிறார்கள் : “நங்கையர்களே! சீ சீ, நீங்கள் சிரித்துக் கொண்டு பேசும் மொழிகளில் இவையும் இருக்கிறதா.  நீங்கள்  விளையாடி ஏசுவதற்கு இதுவா சமயம்?” என்றாள். பிற பெண்களோ, “எமது கண்பாவை போன்ற தோழிகளே!  இப்படித் தூக்கத்தில் குழறக்கூடாது. விண்ணோர்கள் வழிபட, அவர்களுக்குத் தோன்றாத திருவடிகளை நமக்குத் தந்தருள வந்தருளும் குருவாகிய சிவலோகநாதனாகிய சிற்றம்பலத்தில் ஞானசபையைக் கொண்ட சிவபெருமானுக்கு நம் அன்பு எவ்வாறிருக்க வேண்டும், சொல்லுங்கள்? நாமெல்லாம் யார்? அவனது அடிமைகளல்லவா? நன்றாக சிந்தியுங்கள், நான் சொல்வதைக் கேட்டு உறக்கம் நீங்கி எழுங்கள்” என்று நம்மை சிவலோகத்திற்கு வரும்படி அழைக்கின்றார்.

ஞான மெய்ப்பொருளுரை : இராப்பகலில் பேசும் போது என்று மாணிக்கவாசகர் சொல்வது, இரவிலும் பகலிலும் பேசுவது என்று பொருள் கொள்ளக் கூடாது.  அது இரவும் பகலும் அல்ல ; இராப்பகலற்ற இடம்.  இராப்பகலற்ற இடத்தில்தான் இறைவனோடு பேச முடியும்.  இராப்பகலற்ற இடம் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால்தானே, அவ்விடத்தில் இருந்து கொண்டு பேச முடியும்.  அதை உங்கள் சற்குரு காண்பிப்பார். உலக உயிர்களின் ஞான வேட்கைக்காக இங்கே அந்த பிரம ஞான ரகசியத்தை வெளிப்படுத்துகின்றோம். நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள் எம் சகோதர, சகோதரிகளே, சான்றோர்களே.

                கந்தரலங்காரத்தில் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார். அதைக் கேளுங்கள்.

                அராப்புனை வேணியன் சேயருள் வேண்டும் அவிழ்ந்தவன்பாற்

                குராப்புனை தண்டையந் தாடொழல் வேண்டுங் கொடியவைவர்

                பராக்கறல் வேண்டு மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்

                இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே   (கந்தரலங்காரம் செ.74)

என்பது அருணகிரிநாதர் அனுபவ வாக்கு.  இதனால் இராப் பகலற்ற இடம் ஒன்று உள்ளது என்பதும், அதனை அடைய வேண்டியது அவசியம் என்பதும், அதனை அடைந்த போதுதான் கடவுள் அருளைப் பெற்று பிரமஞானம் அடைய முடியும் என்பதும், திருவடியைத் தொழ முடியும் என்பதும், ஐம்பொறிகளும் தம்தம் புலன்களில் நிறை முறை இன்றிச் செல்லுதலாகிய பராக்கு அற்று நிறை முறை தழுவி நிற்கும் என்பதும், மனமும் அவச் சலனம் ஒழிந்து சாந்தி பெறும் என்பதும் நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.

என்புள் இருக்கும் அன்பு உருகிப் பக்குவப்பட்டபோது, அருளோடு கூடிக் குழைந்து நிறை பெற்ற போது அங்கே இறைவனின் கழல் பேசும் காலம் அதுதான்.  கழல் பேசக் கேட்பதே திருவடி தொழுதல் என்பது.  இராப்பகலற்ற இடமாகிய புகலிடம் அடையும்போது விமல தநுவைப் பெற்றபோது கழல் பேசும் காலம் உண்டாகும். இவ்விடத்தில் ஒலிக்கும் நாதமான கிண்கிணி ஓசை ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  இந்த ஒலியைக் கேட்பதே “உற்ற ஆக்கையின் உறுபொருள்” ஆகிய திருவடியைக் கண்டு தொழுதல் ஆகும். இத்தகைய கிண்கிணி சிலம்பு வீர கண்டாமணி என்னும் இம்மூன்றும் அசையப் பெற்ற காலமே பேசும் காலமாகும் ; பேசும் நாளாகும். மற்ற நாட்கள் எல்லாம் பேசா நாளே ஆகும்.  “பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே” (அப்பர் தேவாரம்) என்பதன் பொருள் இதுதான்.

பிரமஞானத் தவத்தைப் பின்பற்றி வரும் ஞானச் சாதகர்களிடம் கழல் பேசாத நாள் இல்லை ; அவர்கள் இறந்து பிறவாதவர்களாதலால் அவர்களிடம் இறைவனின் கழல் பேசிக் கொண்டே இருக்கும்.

இராப்பகலற்ற இடம் என்றால் இருளும் ஒளியும் என்று கூறப்படும்.  இவற்றை மறப்பு, நினைப்பு எனவும், அறியாமை, அறிவு எனவும், கேவலம், சகலம் எனவும் கூறலாம். அறியாமையாகிய மறப்பும் சீவச் செயலாகிய முனைப்பால் அறிதலாகிய அறிவும் இன்றி சிவ ஞானத்தால் அறியும் ஒன்றே பேரரறிவு என்றும் அந்த பேரரறிவே இராப்பகலற்ற இடத்தில் இருக்கும் என்பதை நாம் இங்கே தெரிந்து கொண்டாக வேண்டும். பிரமஞானிகளுக்கு இந்த பேரரறிவு எப்போதும் இருந்து கொண்டிருக்கும். இருள் இல்லாமல் ஒளி இல்லை ; ஒளி இல்லாமல் இருள் இல்லை. இருள் என்பது அவித்தை ; ஒளி என்பது ஞானம்.  இவ்விரண்டும் சமம் பெற்றபோது இவை தனித்தனியாக விளங்காமல் ஒன்றுபட்டே நிற்கும்.  இதுதான் இராப்பகலற்ற இடம் என்பது.  இதனைத்தான் மதி சொரூபம் என்பார்கள் நம் முன்னோர்கள்.  இரவுமல்ல பகலுமல்ல.  இவ்விடம்தான் மனமும் மதியும் ஒன்றிய இடம் ; இருவினை சொரூபமாகிய உடலுயிர் இயக்கங்கள் சமம் பெற்ற இடம் ; இருவினை ஒப்பு மலபரிபாகம் வாய்ந்த இடம் என்று அறிக. 

                அமாவாசை பூரணை யாகும் அவர்க்குச்

                சமனாம் உயிருடம்பு காண்    (ஔவை ஞானக் குறள் – துரியதரிசனம்-7 )

அமாவாசை பூரணையாகும் என்பது அமாவாசை பௌர்ணமியாகும் என்க. இருளும் ஒளியும் சமம் பெற்றதை இக்குறள் உணர்த்துகிறது.  இருள் ஒளி ; சீத உஷ்ணம் ; உடல் உயிர் இவை சமப்பட்ட இடமே இராப்பகலற்ற இடமாகும்.

சேவடிகள் இரண்டும் வைக்கப்பட்ட இடமும் ; நம்முள்ளே குரு தரிசனம் பெற வேண்டிய இடமும் ;  ஞான நேத்திரம் விளங்கும் இடமும் இதுவேயாகும். இவ்விடத்தை நாம் அடைந்தபோது இயற்கையாகவே கீழ்முகம் கொண்ட குண்டொலி மேல்நோக்கி நிற்கும்.  மனமும் மதியும் ஒன்றாகும்போது இது நடைபெறும். ஞான அனுபவத்தால் அடையும் அனுபவத் தந்திரமாகும்.

இந்த இராப்பகலற்ற இடத்தை அடைந்த பிரமஞானத் தவத்தார்கள் உடலில் அகண்டாகார அமல சொரூபமானது நிறைபெற்று நின்ற அருளாக மாறி அணுஅணுவாக ஆக்கநிலையைப் பெற்று பேரின்பம் அளித்து பிரமஞானச் சாதகர்களின் உடலுயிரை விழுங்கிப் பூரணப்பட்டு நிற்கும்.  இதுதான் ஜீவன்முக்தி நிலை.

                போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பு முள்ளும்

                வாக்கும் வடிவு முடிவும்இல் லாதஒன்று வந்து வந்து

                தாக்கு மனோலயம் தானே தரும்எனைத் தன்வசத்தே

                ஆக்கும் அறுமுக வாசொல் லொணாது இந்தஆனந்தமே  (கந்தரலங்காரம், செ.73)

இராப்பகல் அற்ற இடமே புகலிடம் எனப்படும்.  இதுதான் அமல முதற்படி – முத்தி வாயில். விமல தநுவாகிய ரக்ஷக தேகம் இதுவே.  இவ்விடத்தில்தான் அருளைப் பெற முடியும்.  குருவருளால் பெறப்படும் இடமும் இதுதான்.  இவ்விடத்தை குருவிடம் தீக்கையாகப் பெற வேண்டும்.  இவ்விடத்தில் நின்று எதை வேண்டினாலும் அப்படியே நடக்கும். இது சத்தியம்.  அனுபவ உண்மை.  

நம் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொள்ளப் போகும் அற்புதமான திருமந்திரப் பாடல் இது.  இதன் ஞானப்பொருளை குருமுகாந்திரம் ஒரு சாதகன் அறிந்து உணர்ந்து செய்துவிட்டால் போதும், அவன் பிரமஞானி ஆவதை இறைவனே நினைத்தாலும் தடுக்க முடியாது என்பார் எம் சற்குரு.

                  இராப்பகல் அற்ற இடத்தே இருந்து 

                  பராக்கற ஆனந்தத் தேன் பருகி

                  இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து 

                  இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே   (தி.ம.1856)

இரவும் பகலும் என்ற பேதமற்று சாக்கிராதீதத்தே நின்று,   வேறு எண்ணமற்று நின்று சிவானந்தத்  தேன் பருகி, இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து, இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை, சுத்தமாயை அகற்றி நின்றேன்.

நாம் வாழும் இவ்வுலகில் இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றது.

ஆதலால் இன்பமும் துன்பமும்.பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. மேலும் நினைப்பு மறைப்பு, விழிப்பு தூக்கம், பற்று பற்றில்லாமை, உறவினில் பகைமை.பகைமையில் உறவு போன்ற  வேற்றுமையில் ஒற்றுமை. ஒற்றுமையில் வேற்றுமையின் வாழ்க்கை முறைகளாலும் மேலும் சாதி சமய மதங்களினாலும் அகம் கருத்து புறம் வெளுத்து மயக்க நிலையில் ஆன்மாக்கள் சிக்கித் தவித்துக்கொண்டு உள்ளன. 

இவ்வுலகில் அறியாமை அஞ்ஞானம் மூட நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்து  ஆன்மாவின் அருள் தன்மையைத் தெரிய வொட்டாமல் மாயாத் திரைகள் மறைத்துக் கொண்டுள்ளது.

அருள்பெறுவதே ஆன்மாவின் குறிக்கோளாகும்.

ஆன்மா உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு  அருள் பெற்று உயிர் உடம்பை  அழிக்காமல் மாயையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு இரவு பகல் இல்லாத அருள் பெருவெளிக்கு  செல்வதே ஆன்மாக்கள் பெறும் ஆன்ம இன்ப லாபமாகும்.

                இராப்பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே

                நானும் இருக்க  எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே! 

                இரவு பகல் அற்ற இடத்திற்கு நான்  வரவேண்டும் என்று ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்கின்றார் வள்ளலார். 

                வெண்ணிலா என்பது இங்குள்ள நிலவைக் குறிப்பது அல்ல!

வெண்ணிலா என்பது வெள்ளை நிறம் உடையது சுத்தமான இடத்திற்கும் வெண்மை என்று பெயர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான அருட்பெருவெளிக்கும் வெண்ணிலா என்று பெயராகும்.

கலவை இல்லாத அருளுக்கும் வெண்ணிலா என்று பெயராகும்.

அருட்பெருவெளி என்பது அருள் நிறைந்த பெருவெளியாகும் அங்கு பஞ்சபூதங்களான ஜட தத்துவங்கள் கிடையாது அங்கு இரவு பகல் என்பது கிடையாது.

அங்கு செல்ல வேண்டுமானால் பொன்மை வெண்மை கலந்த அருள் உடம்பாக மாற்றிக் கொண்டால் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்பதை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கான வள்ளலார் பாடல் :

                இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே

                இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே

                அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டியே

                அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல்அமுதம் ஊட்டி யே !

மேலும்

                இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவனே

                எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவனே

                கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே

                களித்து என்தனையும் சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவனே

                எனக்கும் உனக்கும்

இரவுபகல் அற்ற  இடமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகமான அருட்பெருவெளிக்குள்ளே  ஆன்மாக்கள் செல்ல வேண்டிய சொந்த  இடமாகும்.  இரவு பகல் அற்ற இடம்தான் நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் கோட்டையாகும்.

ஆன்மாக்கள் அங்கு செல்ல வேண்டுமானால் இங்கு தூங்காமல் இருக்கும் சூக்குமத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.  கோட்டையைத் திறந்து உள்ளே செல்லும் சாவியை இங்கே சற்குருவிடமிருந்து பெறவேண்டும்.

இரவு பகல் அற்ற இடம் = 12 வது நிலையாகிய துவாதசாந்தப் பெருவெளி – ஆன்ம நிலையம்.

நம் திருவடி – மனம் – பிராணன் யாவும் இந்த இரவு பகல் அற்ற இடத்தே கவனம் சிதறாமல் இருந்தால், வானமுதம் பருகலும் கூடும்.

இவ்வாறு இரவும் பகலும் ஓயாமல் திருவடிகளின் மெய்ப்பொருளுக்குள்ளே அமர்ந்து கொண்டு பிரமஞானத்தைப் பற்றிச் சிந்திப்பதைத்தான், “இராப்பகல் நாம் பேசும்போது” என்றார் மாணிக்கவாசகர்.

இரு திருவடிகளின் மெய்ப்பொருள்களும் ஒன்றுக்கொன்று இணங்கி இணக்கமாக இருந்தால்தான் ஞானம் உண்டாகும். இல்லையேல் ஞானம் உண்டாகாது.

திருவடிகளின் மெய்ப்பொருள்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணங்கி இருக்கும்போதுதான் ஞானம் உண்டாகும். அவ்வாறு இணங்காமல் தனித்தனியே இருப்பின் ஞானமின்மை தோன்றி, அதனால் துன்பம்தான் நேரிடும்.  

திருவடிகளின் மெய்ப்பொருள்கள் இணங்கி நிற்கும் இடத்தின் பெருமைகளை நோக்கியும், அடிக்கடி பிரமஞானத் தவத்தைப் பயன்படுத்தியும் வெளியே உலவும் சிந்தனைகளால் தமக்குள்ளே ஞானம் கூடி வராமல் போய்விடும்.  

ஞான ஒளிக்கலைகளால் தன் தேகத்தை பிரகாசமாக வைத்திருப்பவனும், சிவலோகமாகிய உயிர் இருக்கும் கூட்டின் சிற்றம்பலத்தில் நடிப்பவனும் ஆகிய சிவத்திற்கு அன்பு நிறைந்த தன்னைத் தவிர வேறு யார் இருக்கின்றார்கள் என்பதை இங்கே சற்றே சிந்திக்க வேண்டும்.

என்னுடைய இரு மெய்ப்பாவைகளே (pupil of eyes), நீங்கள் இருவரும் இணக்கமாய் நின்று வாழ வேண்டும் என்பதைத்தான், “ஏலோர் எம்பாவாய்” என்றார் மாணிக்கவாசகர்.

மேற்கண்ட ஔவையின் சொற்களில் இருள், வெளி என்று இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டதல்லவா.  அதில் வெளி என்றால் என்னவென்பதை இங்கே சொல்கிறோம்.

வெளி எனப்பட்டது சிதாகாயமாகும். சிதாகாச தரிசனம் என்றும் சிதாகாய தாரணை என்றும் நம் முன்னோர்கள் அழைப்பார்கள். இது தன்னைத்தானே உள்ளே பார்க்கும் [அந்தர்முக] தியானம் ஆகும். உள்ளே உள்ள இடைவெளிகளை பார்ப்பது ஆகும். ஆனால் இது உடலில் தலையில், வயிற்றில் உள்ள வெற்றுவெளி அல்ல. இந்த சிதாகாசம் என்பது உணர்வுகள் இருக்கும் உற்பத்தி ஆகும் மெய்ப்பொருளுக்குள் இருக்கும் வெட்டவெளிப் பிரதேசம். இது மகாரத் திருவடியின் மூலமாக காணக்கூடிய ஒளியும் ஒலியும் சமஅளவில் கொண்ட இரவும் பகலுமற்ற வெளியாகும். அதாவது இராப்பகலற்ற இடம். இதுதான் நமக்கு ஆன்மாவின் தொடர்பை பரவச உணர்வுகளால் உண்டாக்கக்  கூடியது. இந்த தொடர்பினால் மனிதன் மும்மலங்களை வென்று, மனமற்ற நிலைக்குச் சென்று, பிரணவக் குகைக்குக்கு உள்ளே இருக்கும் ஞானப் பொருள்களின் மிக நுண்ணிய உணர்வுள்ள மகா பிரமஞானத்தோடு  தொடர்பு கொள்ள முடியும். இந்த நிலையை சிதாகாச தாரணை மூலம் நம்மால் அடைந்திட முடியும்.

அதனால்தான் ஔவைத்தாய் விநாயகப் பெருமானிடம், “இருள் வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில்” என்றார்கள்.

உங்களது உள்ளுணர்வுகளின் இரகசியங்களையும் அறியாமை நீங்கிய ஞான உணர்வுகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் ஆன்மாவின் மெய்யுணர்வுகளையும் தெரிந்துகொள்ள ஓர் அற்புதமான இரகசியத்தை வெளிக்கொணர அமைந்த திறவுகோலாகும். இந்த சிதாகாச தரிசன சூட்சும இரகசியச் சாதனையை சித்தி செய்வோர், இதுவரை அவர்களின் வாழ்நாளில் பார்த்திராத அரும்பெரும் காட்சிகளை காணக் கூடிய சித்தர்களாக ஆகி விடுவார்கள்.  இந்த சிதாகாசத் தாரணை தவத்தை தக்க ஞான சற்குருமூலம் தீக்ஷையாகப் பெற்றுக் கொண்டு, சாதகர்கள் இத்தவத்தில் சித்தி காண முடியும்.

அடுத்த அகவல் வரிகள் : “எல்லையில்லா ஆனந்தம் அளித்து

        அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்  (62)”  என்பது.

 தனக்கு இறைவன் பிரமஞானத் தவத்தினால் எல்லையில்லாத பேரின்ப ஆனந்தங்களை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறான் என்று ஆனந்தக் கண்ணீர் விடுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.  இந்நிலையைத்தான் விநாயகப் பெருமானிடம் ஔவைத்தாய் யாசித்துக் கொண்டிருக்கும் நிலை.

மாணிக்கவாசகர் திருவாசகத்தை திருவாய் மலர்ந்து பாட முற்பட்டதும் சிவத்திடம் ஒன்றே ஒன்றை மட்டுமே யாசித்தார். அதுதான் இது :

                தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

                அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை

                மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன்

                திருவா சகம்என்னும் தேன்                    (நூல் சிறப்பு)

பொழிப்புரை : மனித வாழ்வில் பிறப்பினால் ஏற்படும் இன்னல்கள் மனித தேகத்தை எப்பொழுதும் வேலியில் படரும் கொடி போன்றே என்றும் சூழ்ந்தே காணப்படுகிறது.  இதன் காரணம் பிறவிப் பெரும்பாடு. அத்தகைய மனிதப் பிறப்பினால் ஏற்படும் விலங்காகிய தடைகளை நீக்கியும் துன்பங்களை ஒழித்தும் (அறுத்தும்) மனிதனுக்கு ஆனந்த வாழ்வை அருளிக் கொண்டிருக்கும் மீண்டும் பிறவாமல் இருப்பதற்கான பிரம ஞானத்தை (மருவா நெறி) அருளும் வாதவூரில் இருக்கக் கூடிய எம் தலைவன் வாசம் செய்யும் இடமாகிய மணிவாசலைப் பற்றிக் கூறும் ஆனந்த நூல்தான் இந்த மணிவாசகரால் பாடப்பட்ட திருவாசகம் என்னும் தேன். 

ஞான மெய்ப்பொருளுரை : மனிதனுக்குத் தொல்லைகளையும் தடைகளை யும் கொடுப்பது அவன் ஒவ்வொரு பிறவியிலும் எடுக்கும் இரும்பிறவிதான்.  பிறவி எதனால் ஏற்படுகிறது?  அவனின் எண்ணப் பதிவுகளால். 

எண்ணப் பதிவுகள் இருவகையாகும்.  ஒன்று நல்ல எண்ணங்களை சுமந்து கொண்டிருக்கும் நல்வினைப் பதிவுகள்.  மற்றொன்று தீய எண்ணங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் தீவினைப் பதிவுகள். பதிவுகள் என்றாலே அது சிந்தனைகள் மற்றும் எண்ணங்களின் உச்சம்தான். 

பதிந்தவைகள் தொடர்ந்து எண்ணங்களாக மலர்ந்து கொண்டே இருக்கும்.  எண்ணங்கள் மலர மலர புதுப்புது சிந்தனைகள் மனிதனுக்குள் பூத்துக் கொண்டே இருக்கும். பூப்பதை நிறுத்தாமல் யாக்கையின் பிறப்பை தடுக்கவே முடியாது.  மனிதன் தனக்குள் மலராமல் இருப்பதால்தான் அவன் இப்பிறவியிலாவது மலர்ந்து மணம் வீசிவிட வேண்டும் என்று ஒவ்வொரு பிறவியையும் எடுத்துக் கொண்டு, தனக்குள்ளே போராடிப் போராடி தன் வாழ்நாட்களை தொலைத்துக் கொண்டே இருக்கின்றான். 

இந்த மனித தேகம் சென்ம சென்மமாய் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால் யாக்கைக்கு பழம்பொருள் என்ற பெயருண்டு. அந்த பழம்பொருளில் ஒரு உறுபொருள் இருக்கிறது.  அதுதான் சிவப்பழம்பொருள்.  இந்த சிவப்பழம்பொருளே மனிதனுக்கு ஞானத்தையும் பிரணவ தேகத்தையும் பிராண தேகத்தையும் ஞான தேகத்தையும் இறுதியாக ஒளி தேகத்தையும் வழங்கக் கூடியது.

அந்த சிவப்பொருள் பழமையாய் நம் தேகத்திற்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காணும் வழியை – மார்க்கத்தை – தந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதுதான் பிரமஞானம். 

பிரமஞானச் செல்வங்களை அடைய வேண்டுமென்றால் அதற்கு அவன் அருளாலே அவன் தாள்களை வணங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வணங்குவதற்கு தடைகளாக இருக்கக் கூடியது, ஞானத்தை மறைத்துக் கொண்டிருக்கக் கூடிய மணிவாசலில் திரைகளாக மூடியிருக்கும் மும்மலங்களே. 

மணி வாசல்தான் ஞான வாசல். ஞான வாசலில்தான் ஞான மணிக்கான இரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இறை வாசம் செய்யும் ஞான மணி வாசலை அகத்தில் நின்று பாடியதால், இந்நூல் மணிவாசகம் என்றும் திருவாசகம் என்றும் அழைக்கப்படலாயிற்று. கடவுள் கேட்க மனிதன் பாடியதுதான் இத் திருவாசகம் என்னும் தேன். மனிதன் தன்னை மறந்த கதைதான் இத்திருவாசகம்.  மலைத் தேன் உடலை வளர்க்கும் ; திருவாசகத் தேன் உயிரை வளர்க்கும்.

தனக்குள் தன்னைத் தேடி முத்தெடுக்கும் தன்னிரிகல்லா ஞானக் கல்விதான் திருவாசகம் என்னும் பிரம ஞானம்.

 

திருவாசகத்தில் கோயில் திருப்பதிகம் 10வது பாடல் :

தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னைச்

                                  சங்கரா ஆர்கொலோ சதுரர்

                                அந்தம்ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்

                                         யாதுநீ பெற்றதுஒன்று என்பால்

                                சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

                                         திருப்பெருந் துறையுறை சிவனே

                                எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய்

                                                யான்இதற்கு இலன்ஓர் கைம்மாறே. (கோயில் திருப்பதிகம்-10)    

நம் தேகத்தில் சிவம் வெளிப்பட வேண்டுமென்றால், அதற்கு நாதமும் ஒளியும் கண்டிப்பாகத் தேவை. அந்த நாதத்தை சங்காகவும், ஒளியை பாம்பாகவும் நம் முன்னோர்கள் வடிவமைத்தார்கள். சிவம் வெளிப்படும்போது பிரணவ உச்சியில் இருக்கும் துவாரத்தைக் காவல் காத்து அத்துவாரத்தை மூடியிருக்கும் குண்டொலியாகிய பாம்பினைக் குறிக்க, “சங்கரா” என்றார். சங்கரன் = சங்கு + அரன். சங்கு என்றால் அது வெண்சங்கு. அதில் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு என இருவகைகள் உண்டு. அரன் என்றால் பாம்பினை உடையவன். அரம் என்றால் பாம்பு.

பிரமஞானத் தவத்தில் சுடராழித் தவத்தைச் செய்து அதனால் சிவம் பரவிந்து சொரூபமாக ஒளியாக வெளித் தோன்றுவதைத்தான், “தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை” என்றார்.   

தனக்குள் இறைவன் வெளிப்படுவதால், சாதகன் அளவிலா ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருப்பான். இவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்த இறைவனுக்கு நம்மால் எதையும் கொடுக்க இயலவில்லை. இறைவனைவிட பெரிய பொருள் எதுவும் இல்லை என்பதால், இறைவனுக்கு நம்மால் கொடுக்க இயலாத நிலையே என்றும் காணப்படுகிறது. இதைத்தான், “அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன்று என்பால்” என்றார்.

மனிதனின் இதயத்தை நெகிழ்ந்து உருகச் செய்ய வேண்டும். அந்த உருகும் எண்ணம் மனிதனிடத்தில் மெய்யுணர்வைச் சிறக்கச் செய்யும் ; அதனால் அவனுக்குள் ஞானம் முகிழ்க்கும். மனிதன் கடவுளை நினைந்து நினைந்து உருகி அழுதானானால் அவனுக்குள் சிவம் வெளிப்பட்டு விடுவானே. செய்வானா மனிதன்??? மனிதன் இறைவனை நினைந்து அழக் கற்றுக் கொள்ளவில்லையே என்று அவனை நன்றாக இடித்து உரைக்கிறது  திருவாசகம்! அழுதால் இறைவனை — இறைவன் அருளைப் பெறலாம்! இது திண்ணம்!  அதற்கான ஞானக் கவிதையை இங்கே ஓதி மனம் கரைந்து போகலாம், வாருங்கள்.

கலையாகிய பிறவிக்கடல் அலையாமல் உழன்றேன்
          கற்கும்பல சமயங்களும் தர்க்கங்களும் விட்டேன்
நிலையாதெனப் பொருள்செல்வமும் நினைவும்பிறர்க்கு இட்டேன்
          நித்தம்செயும் நியமங்களும் நேமங்களும் அற்றேன்
தொலையாத உறக்கத்தொடு சுகதுக்கமும் அற்றேன்
          துணையாகிய ஞானக்கடல் மூழ்குந்துறை கண்டேன்
அலையாமல் இருக்கும் மனம் அதிலே குடிகொண்டேன்
          ஆனந்தம் வெளிப்பட்டபின் நான்என்று அறியேனே.     (ஞானத்தாழிசை-11)

ஞான மெய்ப்பொருளுரை : பிரமஞானத் தவத்தினால் தன் உயிர்க் கூட்டுக்குள் இருக்கும் சிவக்கலைகளோடு நாம் எப்போது ஒன்று சேர்கிறோமோ, அப்போது சிவம் அருட்கலைகளோடு வெளிப்பட ஆரம்பிக்கும். அப்போது நாம் சிவானந்தக் கடலில் மூழ்கிப் போவோம். அந்த பிரமஞான சாகரத்தில் மூழ்கியதும் நாம் பிறப்பு, இறப்பென்னும் கர்ம வினைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டுப் போவோம். கற்றுக் கொண்ட பல சமயத் தத்துவங்கள், தர்க்கங்களை விட்டொழிப்போம். நிலையில்லாத பொருட்களையும் செல்வங்களையும் இவ்வுலக நினைவு களையும் விட்டொழிப்போம். அதனால் தினமும் செய்து வரக்கூடிய பூசைகளும் நியம வழிபாடுகளும் அற்றுப் போய்விடும். உறக்கம் இருக்காது. சுகங்களும் துக்கங்களும் இருக்காது. மனம் அலையாது இருக்கும். மனமற்ற நிலையில் வாழ்ந்திடலாம். இந்த இறையின்பப் பேரின்பம் தோன்றிவிட்ட பிறகு நான் என்ற உணர்வும் அங்கே இல்லாது போய்விடுமே மனமே.

நம் உயிர்க்கூட்டில் இருக்கும் சிவக்கலைகள் அருட்கலைகளாக வெளிப்பட வேண்டுமென்றால், அங்கே அமுதக்காற்றின் அவசியமும் அபான, பிராணன்களின் முக்கியவத்துமும் சுழிமுனை நாடி, வச்சிர நாடி, சித்திரிணி நாடி, பிரம நாடிகளின் வழித்துணைகளும் மும்மலங்களின் அழிவும் நடக்க வேண்டும். இந்த அத்தனை பிரமஞான விசயங்களும் அமுதக்காற்று வரும் வேளையில்தான் சாத்தியம். மற்ற வேளைகளில் சிவக்கலைகளை அதன் இருப்பிடத்திலிருந்து நம்மால் அசைத்துப் பார்க்கக் கூட முடியாது. சிவக்கலைகள் அமுதக் காற்றிற்கும் பிராண, அபானன்களின் ஆற்றல்களுக்கும் அக்கினிக் கலைகளின் வீறுகொண்ட ஆவி நிலைக்கும் மட்டுமே கட்டுப்பட்டவை. எப்போது நமது திருவடிகளில் இருக்கும் மும்மலக் குற்றங்கள் முற்றாக எரிந்து நாசமாகுமோ, அப்போதுதான் இச் செயல்பாடுகள் நடைபெறவே ஆரம்பிக்கும். மும்மலங்கள் ஒழியாது முக்கண்ணனைக் காணவே இயலாது.

நாம் ஞானக் கடலில் மூழ்க வேண்டுமென்றால், முதலில் திருவடிக் கடலைச் சென்றடைய வேண்டும். அங்குதான் பாற்கடலே அமைந்திருக்கிறது. பாற்கடலில் அமுதத்தை எடுக்க வேண்டுமென்றால், பாற்கடலைத் தயிர் கடைவதைப் போல கடைந்தெடுக்க வேண்டும். இதைத்தான் சாலன தந்திரம் என்று மறைபொருளாகச் சொல்லி வைத்தார்கள் நம் ஆதித் தமிழ்ச் சித்தர்களும் பிரமஞானிகளும்.  ஞானக் கடலான நமது திருவடிகளைக் கடைந்தெடுத்தால்தான் அமுதம் பொங்கி வரும். அது கொடுக்கும் பேரின்பங்கள்தான் மேலே சொல்லப்பட்ட அத்தனை நிலைப்பாடுகளும்.

ஒருவன் பிரமமாகிய உயிரை, அதற்குள் இருக்கு இறையின் அருட்கலைகளைக் கண்ணாரக் கண்டு பேரின்பம் கொண்டுவிட்ட பிறகு, அவனுக்கு எதுவுமே தேவைப்படாது. இவ்வுலகின் அனைத்துச் சுகங்களும் ஞானங்களும் தவங்களும் செல்வங்களும் ஒருசேர உயிருக்குள் ததும்பிக் கொண்டு இருப்பதை அவன் கண்டுவிடுவான். உயிர்ப்பொருளாம் மெய்ப்பொருள்தான் அழியாத சொத்து என்பதை அங்கே கண்டு தெளிவு பெற்றிடுவான். அவனே பிரமமாக மாறி தன் உயிருக்குள்ளேயே நிலை கொண்டிடுவான். தான் மட்டுமல்ல, இவ்வுலகமே பிரமமயம்தான் என்பதைக் கண்டிடுவான். அவனே பிரமஞானி ; அவனே இறைவனும்.

                துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்

                                கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்

                கண்டங் கரியான் செம்மேனியான் வெண்ணீற்றான்

                                அண்டமுதல் ஆயினான் அந்தமிலா ஆனந்தம்

                பண்டைப் பரிசே பழஅடியார்க்கு ஈந்துஅருளும்

                                அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். (திருஅம்மானை-9)

பொழிப்புரை : எம்பெருமானாகிய சிவபெருமான் முகத்தில் சந்திரனின் மூன்றாம் பிறையை அணிந்தவன், வேத வடிவில் ஒளியாகப் பிரகாசிப்பவன், பிரணவக் குகையில் இருப்பவன், ஞானச் சாதகர்களின் திருவடிகளில் அகார, உகார, மகாரம் என்றும் முப்புரிநூலை அணிந்தவன்,  அழகிய இடப  வாகனத்தை உடையவன், கண்டத்தில் நீலகண்டத்தை உடையவன், சிவந்த உருவத்தை உடையவன், வெண்மையான அருள்நீற்றை அணிந்தவன், நேத்திரங்களுக்கு முதன்மையாக இருப்பவன், பழமையான பிரமஞானத் தவத்தைச் செய்யும் சிவ  அடியார்களுக்கு முடிவில்லாத இன்பத்தைக் கொடுத்தருள்பவன். இந்தச் சிறப்பினை உலகத்தவர் ஆச்சரியப்படும்படியாக நாம் அம்மானையாகப்  பாடுவோமாக ! 

சுடராழித் தவத்தைச் செய்யும்போது, நமது அக்கினியாகிய தீயானது கண்மணியில் இருக்கும் பரவிந்துவின்மீது பட்டுப் பட்டு, சொல்ல முடியாத பழமையான பேரின்ப உணர்வுகளை நம் தேகத்தில் உண்டாகச் செய்யும். இதைத்தான், “அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே” என்றார்.

1.சூரியக் கலை, 2.சந்திரக் கலை, 3.அக்கினிக் கலை, 4.நாதக் கலை, 5.விந்துக் கலை, 6.பரநாதக் கலை, 7.பரவிந்துக் கலை, 8.சுழிமுனை நாடி, 9.வஜ்ர நாடி, 10.சித்திரிணி நாடி, 11.பிரம நாடி, 12.அபானன், 13.பிராணன், 14.அமுதக் காற்று போன்றவைகளே பிரமஞானத் தவத்திற்கான மூலப்பொருள்களாகும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், அக்கினி, நட்சத்திரங்கள் ஆகிய ஒன்பதும்தான் ஒரு மனிதன் பிரணவமாவதற்கான பெருநெறியாகும். பஞ்சபூதங்களும் கண்மணியில் உள்ளது. சூரியனும், சந்திரனும், அக்கினியும் மூன்று திருவடிகளாக உள்ளது.

இறைவன் ஒளியாக இருக்கும்வரை அவனைக் காண இயலாது. இந்த விசயத்தில் பிரமனும் திருமாலுமே தோற்றுப் போயிருக்கும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்.  அந்த இறையொளியோடு நாதமாகிய ஒலியை 432 அதிர்வெண்களோடு கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், இறைவன் அவன் இருப்பிடத்திலிருந்து நாதவிந்துவாக வடிவெடுத்து நம்முன்னே தோன்றுவான் என்பது பிரமஞானச் சத்தியமாகும். ஒளியைத் தனித்து காண இயலாது. அதன் வெளிச்சத்தை மட்டும்தான் நம்மால் காண இயலும். ஆனால், ஒலியோடு கூடிய ஒளியை நம்மால் தெளிவாக ஒரு உருவமாக காண இயலும்.  அதுதான் அருவுருவம்.  இறைவனை இவ்வாறு அருவுருவத்தில் மட்டுமே காண முடியும்.  அருவுருவம் நம் திருவடிகளில் நன்றாக காண முடியும்.  அருவத்தை நம் உயிரில் நின்று காண இயலும். உயிரின் வடிவம் அருவமாக இருப்பதால், அதற்குள் இருக்கும் இறையை அருவத்தில் காண்பது சாத்தியமே.  அதனால், பிரமஞானப் பொற்சபையில் இறைவனைக் காண ஒளிக் கலைகளை நாதப் பிரமத்தோடு இணைத்திடும் அதி சூக்கும ரகசியக் கலையான பிரமஞானத் தவமானது அடிதவறாது, முறை பிறழாது, ஆழ்ந்த கூர்மையோடு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதைச் சொல்லிக் கொண்டு, இந்த ஞானப் பேச்சுரையை இனிதே நிறைவு செய்கின்றோம்.

பிரமஞானப் பொற்சபையிலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.

நல்லது. இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும்  காண வேண்டுமென்றால் கீழே கண்ட தளத்திற்குள் இணைந்து கொள்ளுங்கள்.

www.bramagnanaporsabai.com  

@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai  

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !    

திருச்சிற்றம்பலம் !!