இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!
ஓம்…………………….. ஓம் …………………….. ஓம் …………………..
இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.
அடுத்த அகவல் வரிகள் : “சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி (63)” என்பது.
சத்தம் என்றால் என்னவென்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம், வாருங்கள் அன்பர்களே. சத்தத்தின் உள்ளே மையப்புள்ளியில் இறைவனாகிய சிவமானவர் சதா அங்கேயே இருந்து கொண்டிருப்பதால்தான் அவரை சதாசிவம் என்றழைக்கிறோம். நாத வடிவமாக இருக்கும் இறைவன் நாதப் பிரம்மமாக இருப்பதை பின்வரும் வரிகள் உங்களுக்கு எடுத்துச் சொல்லும். நாதத்தின் அற்புத கானத்தில் உள்நுழையலாம், வாருங்கள்.
நாதப் பிரமத்தின் இரகசியமாய் ஒரு இரகசியம்
சத்தத்திற்கு வேறு பெயர்கள் இருக்கிறது. அதுதான் நாதம், ஒலி என்பவைகள். நாதம் என்பது என்ன? நாதம் என்பது ஒலி எனப்படும். ஒலி, ஒளி, ஓசை, இயக்கம், அசைவு என்பதெல்லாம் ஒன்றைத்தான் குறிக்கிறது. இந்த உலகமும் மனித உடலும் நாதமயமாகத்தான் இருக்கின்றன. இந்த நாதம் எதனால் உண்டாகிறது? நாதம் இயக்கத்தின் காரணமாக உண்டாகிறது.
இந்த இயக்கத்தை – அசைவைத்தான் ஆங்கிலத்தில் Vibration என்பார்கள்.
அனைத்து ஓசைகளும் இயக்கத்தால் உண்டாவதால் அவையெல்லாம் பயனைத் தருபவவைகளாகவே உள்ளன. அப்பயன்கள் பலவகைப்படும்.
தீமையான அசைவுகள் உண்டானால், தீமையான பயன்களே கிடைக்கும்.
நல்ல அசைவுகளை உண்டாக்கினால், நன்மையான பயன்களே நடக்கும். இவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கோ அளவே இல்லாமல்தான் இருக்கிறது.
இயக்கத்தை ஏற்படுத்துகின்ற அசைவுகள் கொடுக்கும் நாத ஒலிகள் இல்லாவிட்டால், இவ்வுலகமே இல்லை. சிவமும் சத்தியுமாய் – சத்தும் சித்துமாய் – மெய்யும் உயிருமாய் விளங்கும் இப்பிரபஞ்சம், சத்தொலி சித்தொலி என்னும் இரண்டின் பிரிவாக இருக்கும். வியாப்பிய நிலைதான் சத்தொலி. இதில் வியாபகம் பெற்றபோது அதாவது மலர்ந்தபோது அது சித்தொலியாக உருமாறி நிற்கும். இது வியாப்பியத்தில் ஒன்றாகவும், வியாபகத்தில் இரண்டாகவும் இருக்கும்.
சத்தொலி தாமதமான இயக்கத்தைக் கொண்டது. சித்தொலி அதிக நிறை கொண்ட வேகமான இயக்கத்தைக் கொண்டது. இயக்கம் என்பதில் இரண்டு பொருள்கள் உண்டு. இந்த இரண்டும் இல்லாமல் சத்தம் இல்லை.
இயக்கம் என்பது அசைவு. அசைவு என்பதில் சத்தம் உண்டு. அசைவினால் உண்டானதுதான் சத்தம். ஒன்றுக்கு மற்றொன்று அதிக மாத்திரை – நிறை பெறுவதே நீண்டது – விரிந்தது ஆகும்.
இவ்வுலகம் பஞ்சபூத சொரூபமானதால் அப்பௌதிகங்களின் இயக்கத்தால் ஒலி உண்டாகின்றன. அந்த இயக்கம் நாத வடிவாக – ஒலி வடிவாக உணரப்படுகின்றன மற்றும் விரிவடைகின்றன.
நமது தேகத்தின் உள்ளும் புறம்பும் சூக்கும தூலங்களாய் விளங்கக்கூடிய பஞ்ச தேகத்தின் இயக்க வேறுபாட்டால் – நிறை வேறுபாட்டால் பலவகையான நாதங்கள் உண்டாகின்றன. இந்த ஓசைகளால் உணர்ச்சி உண்டாகிறது. அதனால் மனமும் தேகமும் மாற்றத்தை அடைகின்றன. ஒலி வரி வடிவாயும் பிழம்பாயும் கேட்கப்படும் ஓசைகளால் உலகத்தில் உள்ள பொருள்கள் பலவகையான வேறுபாடுகளை அடைகின்றன.
சான்றோர்களின் நன்மொழிகளும் சங்கீத இசையும் குழந்தைகளின் மழலைப் பேச்சுகளும் நமது மனதுக்கும் அதன் வாயிலாகச் சரீரத்திற்கும் இன்பத்தை அளிக்கின்றன.
ஒலி வரி வடிவாகிய நம் தாய்மொழி தமிழை நிறைமுறையோடு பஞ்சீகரணித்து வழங்குவதால்தான் அது அமுதமாகி முன்னிலைகளில் சுத்த அக்கினியாக ஆக்கமுற்று நன்மையான மாற்றங்களை உண்டாக்குகிறது. அதனையே நிறைமுறையின்றிப் பஞ்சீகரணித்து வழங்குவதால் அது நஞ்சாகி (விஷமாகி) முன்னிலைகளில் அசுத்த அக்கினியை ஆக்கமுறச் செய்து, தீமையான மாற்றங்களையே உண்டாக்கி விடுகிறது.
இதைப் போலவே சடப்பொருள்களிலும் ஓசை வேறுபாட்டின் காரணமாக நல்லவைகளும் தீமைகளும் பலப்பல மாற்றங்களை பெற்றுவிடுகின்றன. அறிவியல்ரீதியான சில ஆராய்ச்சிக் குறிப்புகளைக் காணலாம். அமெரிக்க நாளிதழில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரையின் சாராம்சம் பற்றிய கருத்துகள் சிலவற்றைக் காணலாம்.
அறிவியல் ஆய்வின் முடிவில் சத்தமானது மரத்தில் நெருப்பை உண்டாக்கும் ; கண்ணாடியில் துவாரத்தைப் போடும் ; தண்ணீரின் நிறத்தை மாற்றிவிடும் ; தொட்டியில் இருக்கும் மீனைக் கொன்றுவிடும் என்றெல்லாம் சொன்னால் யாராவது நம்பப் போகிறார்களோ? என்னவோ? இருப்பினும் இந்த சத்தங்களின் அற்புத ஆற்றல்களைப் பற்றி அமெரிக்காவிலுள்ள ஒரு அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் மேற்கூறிய காரியங்களைச் செய்யக்கூடிய சத்தம் எவ்வளவு பயங்கரமான பெரும்சத்தமாக இருக்க வேண்டுமென்று சொல்ல வேண்டியதில்லை. மின்சார சத்தியின் மூலமாகத்தான், இத்தகைய சத்தங்கள் உண்டாக்கப்படுகின்றன.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அவ்வளவு பெரிய சத்தங்களால் காது செவிடுபடா வண்ணம் பஞ்சை காதில் வைத்து அடைத்துக் கொள்ள வேண்டியது இல்லை. ஏனெனில், அந்த அதீத சத்தங்கள் மனிதனின் காதுகளில் விழுவதே இல்லை. சத்தம் பெரிதாக இருப்பதும் சிறியதாக இருப்பதும் அந்த சத்த அலைகளின் வேகத்தைப் பொறுத்த விசயமாகும்.
அதாவது வினாடிக்கு 1000 சத்த அலைகள் உண்டானால், அது சிறு சத்தம் எனப்படும்.
வினாடிக்கு 16,000 அலைகள் உண்டானால், 16,000 அலைகள் உண்டானால் அது பெரிய சத்தமாகும்.
சாதாரணமாக விநாடிக்கு 20,000 அலைகளுக்குள் இருந்தால்தான் மனிதனுடைய காதுகளில் சத்தம் கேட்குமாம். அதற்கு மேல் போய்விட்டால், அந்தச் சத்தத்தை உணரும் சத்தி காதுகளுக்கு இல்லையாம். மேற்கூறிய அற்புதங்களைச் செய்யும் சத்தமோ வினாடிக்கு 3,00,000 அலைகளைக் கொண்டதாக இருக்கும்.
இந்த சத்தத்தின் ஆற்றல்களை சத்த அலைகளை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் பல சோதனைகளின்மூலம் அறிந்து கொண்டார்கள்.
1. ஒரு தொட்டியில் எண்ணெயை நிரப்பி, அதன் வழியாக அதீத சத்த அலைகளை உள்ளே செல்லும்படி செய்தார்கள். அதன்பின் எண்ணெயில் ஒரு கண்ணாடித் தடியைப் போட்டு எடுத்தார்கள். அந்தத் தடியைக் கையில் எடுத்தபோது, சுளீரென்று நெருப்பு சுட்டாற்போல் காயம் ஏற்படுத்தி விட்டது. பின்னர், அந்தத் தடியை ஒரு மரத்துண்டில் வைத்தார்கள். அந்த மரத்துண்டிலிருந்து புகையும், தீப்பொறிகளும் வர ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த இடத்தில் ஒரு பொத்தல் அதான் ஓட்டை விழுந்து விட்டது. கண்ணாடித் தட்டு ஒன்றிலும் இதேவிதமாக ஓட்டை உண்டாக்க முடிந்தது. “எண்ணெயும் தண்ணீரும் கலவா” என்ற பழமொழியை இந்த ஆராய்ச்சியாளர்கள் சத்த அலைகள் மூலம் பொய்யாக்கி விட்டார்கள்.
2. அடுத்து தண்ணீரின்மீது மிதந்த எண்ணெய் வழியாக சத்த அலைகளைச் செலுத்தியபோது, இரண்டு திரவங்களையும் அவை மிக மிகச் சிறு துளிகளாகப் பிரித்து ஒன்றோடொன்று கலந்துவிடும்படி செய்தன.
3. பளிங்கு போன்ற நிறமற்ற நீரில் அந்த சத்த அலைகளைச் செலுத்திய போது நீர் நீலநிறமாக மாறிவிட்டது. மற்றும் பொருள்களின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்தையும் பாதிக்கும் சக்தி அந்த சத்த அலைகளுக்கு உண்டென்று இந்த ஆராய்ச்சிமூலம் நாம் தெரிந்து கொள்ள முடிந்தது.
4. அடுத்து பனிக்கட்டிகளின்மீது அந்த சத்த அலைகளைக் கொண்டு தாக்கியபோது, பனிக்கட்டிகளின் உள்ளும் புறமும் ஒரே சமயத்தில் உருகிக் கரைந்து போயின.
5. இந்த ஆய்விலிருந்து உயிர்களைக் கொல்லும் சத்தி இந்த சத்த அலைகளுக்கு அதிகளவில் உண்டு என்பது தெரிய வந்தது.
6. இது எப்படியென்றால், ஒரு தொட்டியில் நீரை நிரப்பி, அதில் தவளைகளையும் மீன்களையும் போட்டு, மேற்படி சத்த அலைகளைச் செலுத்தினார்கள் ஆராய்ச்சியாளர்கள். மீன்களும் தவளைகளும் ஒரு நொடியில் மாண்டு போயின. வருங்காலத்தில் நோய்க் கிருமிகளைக் கொல்வதற்கு இந்த ஆராய்ச்சி கண்டிப்பாக முக்கியப் பங்காற்றப் போகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.
நாத ஒலிகளால் அண்ட சராசரப் பொருள்களில் நிகழ்ந்த மாறுபாடுகளை நாம் பார்த்தோம் அல்லவா. புறத்தில் இருக்கும் இந்த நாத ஒலிகள் இத்தனை மாறுபாடுகளை விளைவிக்கும் ஆற்றல் உடையன என்றால், நமது சரீரத்தில் உள்ள தூல, சூக்கும பஞ்ச தேகங்களின் இயக்கத்தால் விளையும் ஒலிகளின் ஆற்றல் மனிதர்களின் சிந்தனை, சொல், செயல்களுக்கு அளவுபடுவனவாகுமா?
இத்தகைய நாதங்களைக் கேட்ட பிரமஞானிகள் மற்றும் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் உடல், உயிர்களை இந்நாதங்கள் விமலமாய் – அமலமாய் மாற்றி “ஊன் உயிர் வேறு செய்”து அவர்களை நித்தியராக்கியதும் வியப்பைத் தருமா, சொல்லுங்கள்.
“சரீரத்திற்குள்ளே உள்ள நாதங்களைக் கேட்டோம்” எனக் கூறியவர்கள், பலர் உடலை விட்டு உயிர் பிரிய அவர் இறந்து விட்டனரே எனப் பலர் கருதலாம். அதற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் அசுத்த நாதங்களை மட்டுமே கேட்டு அமைந்தவர்கள் என்பதுதான்.
சுத்த பௌதிக நாதங்களை நாதங்களாகிய வேதங்களை முறையாகக் கேட்டுணர்ந்த வித்தகர்க்குச் இறப்பு என்பதேது? அவர் அசுத்த நிறை என்னும் காலனை வென்று நித்தியத்துவம் அடைவது உறுதி. எத்தனையோ இருடிகளும் முனிவர்களும் சமயக் குரவர்களும் ஔவைத்தாயும் வள்ளற்பெருமானும் பிரமஞானத் தவத்தின் மெய்யடியார்களாக இருந்து சூக்கும கல்பமாகிய சுத்த நந்தி நாதங்களை அவர்களுக்குள்ளே உண்டு – கேட்டுணர்ந்து நித்தியத்துவத்தை அடைந்தவர்கள் ஆவார்கள்.
புறத்தே நிகழும் ஒலிகளாகிய நாதங்களால் மாற்றங்கள் பல ஏற்படுவதைப் போலவே, நமது சரீரத்திற்குள்ளே நிகழும் பௌதிக இயக்கமாகிய ஒலிகளால் அளவிலாத மாறுபாடுகள் உடலுயிர்களில் ஏற்படுவது திண்ணம், உறுதிப்பாடாகும். இதுதான் இயற்கை முறையாகும்.
நமது காதுத் துவாரத்தில் கைவிரலை வைத்து அதனை அடைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தால், உள்ளே “ஓம்” என்று இரைச்சல் ஒலி கேட்கும். இதனால் நமது சரீரமாகிய கடலும் நாதமுடையது என்பது கண்கூடாக அறிந்து கொள்ள முடிகிறது. கடலில் ஏற்படும் சத்தமும் நம் சரீரத்தில் ஏற்படும் சத்தமும் ஒரே சத்தம்தான். இது பொதுவான இரைச்சல் ஒலி. இந்த ஒலிகளின் தூல, சூக்குமமாய் இருக்கும் கூறுபாடுகள் பலவற்றை கேட்டு உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால், அதற்கு தக்க ஞான சற்குரு உங்களுக்குத் தேவை.
மனம் அமைதி பெற்று ஞான சற்குருவின் சொற்படி வழுவற ஒழுகினால் இவ்வொலிகள் முறையாக உங்களுக்குள்ளே கேட்கப்படும். இவற்றைக் கேட்பதால் என்ன பயன் என்றால், சுத்த நாதவொலிகளின் காரணமாக நமது சரீரமாகிய கடல் கடையப்பட்டு அமுதம் எடுக்கப்படும். அவ்வளவுதான். ஆலம் என்ற நஞ்சு அமுதமாகிவிடும். “அருளொடு பராவமுதமாக்கப்படும்”. நஞ்சு மயமாகிய புலால் துருத்தி நறுமணம் வீசும் அமுதமயமாகிய பூந்துருத்தியாகிவிடும்.
இதனால் இறைவனான பரமேசுவரனின் திருவருளுக்கு நாம் இலக்காகி நித்துயத்துவத்தைப் பெற்றுவிடுவோம்.
நமது சரீரத்தில் உள்ள நாதங்கள் அசுத்தமும் சுத்தமுமாக இருவகையாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சரீரமும் சுத்தமும் (சூக்கும பூதம்), அசுத்தமுமான (தூல பூதம்) பௌதிகங்களை உடையது என்பது மிக மிகத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். பௌதிகம் என்பது ஐம்பூதங்களைப் பற்றிய அறிவு என்பதாகும். எங்கெல்லாம் பௌதிகம் என்று பேசுகிறோமோ அந்த இடங்களில் அது ஐம்பூதங்களைப் பற்றிய அறிவு என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்றாலும் அசுத்த பௌதிகமே நம் ஒவ்வொரு சரீரத்திலும் ஆதிக்கம் பெற்றிருக்கிறது என்பதை அறிவுலகம் சொல்கிறது. அது மிகச் சரியான உண்மைநிமைதான்.
அசுத்த பௌதிக உடலும் நாதம் உடையதுதான். சுத்த பௌதிக உடலும் நாதமுடையது தான். அசுத்த நாதங்களே சிலராலும் பலராலும் எளிதில் அறியும்படியாக இருக்கிறது. தற்காலத்து யோகிகளால் புகழ்ந்து சொல்லப்படுபவை இவையாக இருக்கின்றன. ஓடுகின்ற மூச்சை செயற்கையான சில முறைகளால் ஒருவாறு அடக்கப் பழகினால், செவியானது ஒருவகையாக அடைபட்டு நிற்கும். அப்பொழுது அசுத்த பௌதிக உடலின் இயக்கத்தால் ஆன நாதம் கேட்கப்படும்.
இதனைத்தான் ஹடயோகிகள் – உபாசனையாளர்கள் – சவிகற்ப நிர்விகற்ப நிட்டையாளர்கள் தசநாதம் என்று ஓலமிட்டுச் சொல்வார்கள். இது அசுத்த நிறையுடைய பௌதிக இயக்கத்தால் ஆகிய நாதமென்பதால் இது அசுத்த நாதம் எனப்படும்.
சுத்த பௌதிக உடலின் இயக்கத்தாலான சுத்த நாதங்கள் இல்லாமல் – சுத்த நந்தி நாதங்கள் இல்லாமல் இந்த அசுத்த நாதங்களைக் கொண்டு சரீரத்தை அமலம் பெற வைக்காது. இந்த சுத்த நாதங்களைக் கேட்டு அமைந்து கிடந்தோம் என்றால் காலனை வெல்ல முடியும்.
இந்த அசுத்த நாதம் விருத்தி அடைய அடைய சரீரத்தில் இருக்கும் அசுத்த நிறை அதிகப்பட்டு வாத, பித்த, சிலேத்துமங்களின் குறைவு, மிகுதிகளால் பௌதிகங்கள் பேதப்பட்டு நோய் ஏற்பட்டு, ஏற்பட்டு நாம் தென்திசையாகிய எமன் வரும் திசையை நோக்கித்தான் செல்ல வேண்டியிருக்கும். இப்படி வாழ்பவர்களை அசட்டு யோகிகள் என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? இவர்கள் எவ்வளவு சித்துக்களை – மருள் சித்துக்களை ஆடி உலக மாக்களை மயக்குபவர்களாக இருந்தாலும், இயற்கை விரோதமாக “வாயோடு கண்மூடி மயக்கமுற்று” இயல்பாகவே ஓடுகின்ற மூச்சை ஒருவகையாக அடைத்துக் கொண்டு சில மருந்துகளால் ஒருவாறு காயசித்தியும் செய்து கொண்டு எத்தனைக் காலம் அசைவற்று வீற்றிருப்பவர்களாக இருந்தாலும் கடைசியில் தென்புலக் கோமானாகிய எமனுக்கே நல்விருந்தாகிப் போவார்கள் என்பது சத்தியமான உறுதியாகும். இவர்களைப் போன்றவர்களுக்குத்தான் பின்வரும் திருமந்திரமும் மற்ற ஞானப் பாடல்களும் பொருத்தமுடையதாக இருக்கும்.
பலகோடி சென்மங்களில் நாம் செய்த நற்தவத்தின் பயனாகத்தான் குருவடிவான எம்பெருமானின் அருளால், தூல கற்பம் உண்டு பூதியத் தூய்மை அடைந்து ஆறறிவு பூரணம் பெற்ற மானிடராகிய மெய்யடியார்கள்தான் குருவின் உபதேசத்தால் சூக்குமக் கற்பம் எனப்படும் சுத்த பௌதிக இயக்கத்தால் ஆன அமல நாதங்களைக் கேட்பதற்கு அருகதை கொண்டவர்கள் ஆவார்கள்.
ஓங்காரத்து உட்பொருளாகிய மகார வித்தை என்னும் மௌன மந்திராதிக்ய வித்தை இவர்களுக்கு இறையாக இருக்கும் ஞான சற்குருவால் உபதேசிக்கப்படும். மௌனம் என்றால், உலகப் போலி ஞானிகள் போல வாய் பேசாது வீற்றிருப்பது அல்ல. லௌகீக தந்திரமாகிய சத்துவம் மௌனம் என்பன போலியாகும் அதாவது பொய்யுடைத்தாகும். அப்படி என்றால் உண்மையில் சத்தியமான மௌனம் என்றால் எது என்று கேட்கிறீர்கள். அதை எம் வாயால் சொல்வதைவிட சட்டைமுனி சித்தர் அவர்களின் திருவாக்கினைச் சற்று செவி மடுப்போமா.
மௌனவித்தை ஏதென்றால் மூன்று எழுத்தென்பார்
…………………………………………………
வாய்மூடி வழியோடே நாதங் கேளார்
மௌனவித்தை ஆசான்தன் தூண்டிக் காட்டில்
மணிமுதலாய்த் தசநாதம் கேட்கும் தானே
இந்த மகர வித்தையை சித்தர் நூல்களில் பலவித மறைபொருள்களில் புரியாத வார்த்தைகளில் பரிபாஷையாகச் சொல்லப்பட்டுள்ளது. அது அரிய பெரிய ரகசியம். இதனை குருவருளால் பெற்றுப் பயிற்சிக்கு கொண்டு வந்து பயிலாதவன் பேரின்ப வீட்டிற்குள் நுழையவே முடியாது.
எம்மை நாடி வந்து கேட்கும் உயர் ஆன்மாக்களுக்கு மட்டுமே இதன் சூக்கும ரகசியத்தை உடைத்துக் கற்றுக் கொடுப்போம். அதற்கு வரும் மாணவன் உயர் ஆன்மாவாக இருந்திட வேண்டும். இந்த ஒழுக்க மெய்ந்நெறி அவரிடம் இல்லையென்றால் மகர வித்தை கற்றுக் கொடுக்கப்பட மாட்டாது. மகர வித்தை கற்றால் மரணத்தை வென்றிடலாம். மகர வித்தைக்கென்று ஒரு தனி ராச மரியாதையே சித்தர்களிடம் இருக்கிறது.
இதைக் கற்க வரும் மாணவன் குரு சொன்ன நித்திய ஒழுக்கத்தையும் பிரமஞானத் தவத்தையும் முழுமையாக செய்து வருபவனாக இருக்க வேண்டும். குருவிடம் பூரண சரணாகதி இருக்க வேண்டும். குரு சொல்லைத் தட்டாதவனாக இருக்க வேண்டும். குரு எதைச் சொன்னாலும் அதை உடனே பூரணமாக முழு மனதோடு செய்பவனாக இருக்க வேண்டும். தன் உடல், பொருள், ஆவி ஆகியவற்றை குருவின் திருவடிகளில் ஒப்புக் கொடுத்தவனாக இருக்க வேண்டும். இவ்வளவும் இருந்தால் மகர வித்தையை ஞான சற்குரு அவனுக்குக் கற்றுத் தருவார்.
மௌன வித்தையைக் குருவருளால் பெற்றுப் பயின்று வரும் பிரமஞானத் தவசிகளாகிய சிவயோகிகளால் கேட்கப்படும் சுத்த நாதங்கள் எப்படி இருக்கும் என்பதை திருமந்திரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். வாருங்கள்.
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரிகை யாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே (தி.ம.606)
கடலொடு வேகக் களிறொடு ஓசை
அடலெழும் வீணை அண்டாண் டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடம்அறி யோகிக்கு அல்லால் தெரியாதே (தி.ம.607)
பிரமஞானத் தவத்தில் இந்த பத்து நாத ஒலிகளையும் எமது மாணவர்கள் தினந்தோறும் கேட்டு இன்புற்று வருகிறார்கள். மேற்கண்ட திருமந்திரப் பாடலுக்கு உதாரணமாக எம் மாணவர்கள் திகழ்கிறார்கள். எம் மாணவர்களுக்கு இது சாத்தியம் என்றால், இந்நூலை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் இது சாத்தியமே.
பரவிந்தும் பரநாதமும் நம் தேகத்தில் காணப்படுகின்றன. இதில் விந்து சீவனாகவும் (உயிராகவும்) நாதம் தேகமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. தேகத்திற்கு அன்னம்தான் பலத்தைக் கொடுக்கிறது. அன்னத்திலிருந்து விந்தும் நாதமும் உண்டாகின்றன. சீவனை உண்டுபண்ண விந்தும் தேகத்தை உண்டுபண்ண நாதமும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாதத்தைக் கொண்டு வேறொரு தேகத்தையும் உண்டுபண்ணிவிடலாம்.
சுத்த நாதத்திற்கு ஒரு மனிதத் தேகத்தை உண்டுபண்ணக்கூடிய ஆற்றல் உண்டு என்கிறார்கள் இன்றைய விஞ்ஞானிகள். இதற்கான ஆராய்ச்சி தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. சுத்த நாதங்கள் மனித தேகத்தின் மரபணுக்களின் கட்டமைப்புகளையே மாற்றிவிடுகின்றன என்பதை என்றைக்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், அது எப்படி நிகழ்கிறது என்பதைத்தான் இன்றுவரை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் சூக்கும தேகத்தை ஒளியாக – ஒளி உடம்பாக வெளியே கொண்டு வரவேண்டுமென்றால், நீங்கள் சுத்த ஒலி அலைகளை தேகத்தில் படரச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
மும்மலங்களை குணங்களாக எண்ணாமல், அதனை ஒரு பொருளாக நினைத்து, அவைகளை திருவடிகளால் (கண்களால்) உற்று உற்றுப் பார்த்து, மூன்று திருவடிகளில் அமைந்திருக்கும் சூரிய, சந்திர, அக்கினிக் கலைகளால் மும்மலங்களை எரித்து அழிக்க வேண்டும். மும்மலங்கள் அழிந்தபின், தேகமானது பரிசுத்தமாகி விடுவதால் உள்ளே இருக்கும் ஞானச் செல்வங்கள் தானாகவே இருதயக் குகையிலிருந்து (கண்மணியிலிருந்து) வெளிப்பட்டு பிரகாசிக்கும்.
சூக்குமக் கற்பமாகிய இச்சுத்த நாதங்களை இறையருளாலும் குருவருளாலும் பெற்று நித்தமும் இந்த சுத்த நாத அலைகளை உண்டு உண்டு வந்தால் அதாவது சிரசிற்குள் இருக்கும் உயிரொளிக்குள் கேட்டு வந்தால் அஞ்ஞானமாகிய இருளானது அணுஅணுவாக சரீரத்தைவிட்டு முழுமையாக வெளியேறிப் போய்விடும். அப்போது சுத்த நாதத்தின் படியேற்றம் சரீரத்திற்குள் நிறைந்து வர ஆரம்பிக்கும்.
மூலிகைகளை உண்டால் அவை தூல கற்பங்கள் எனப்படும்.
சுத்த நாதங்களை உண்டால் அதுவே சூக்குமக் கற்பங்கள் எனப்படும்.
இதை நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் வரைகள் என்றார்கள். ஆறு படிகள் என்னும் ஆறு வரைகளையும் தாண்டி பிரமஞானச் சாதகன் அப்பால் சென்றுவிட வேண்டும். இதற்கடுத்து வரும் ஏழாவது படி அதாவது ஏழாவது வரைதான் சப்த ஸ்தானம் அதாவது நாத இருப்பிடம்.
ஒலியாகிய நாதம், தச நாதம், கிண்கிணி நாதம், வீரகண்டாமணிச் சிலம்பொலி நாதம், சங்க நாதம், பஞ்ச நாதம், பறை நாதம் போன்ற நாதங்களை ஒருவன் கேட்பானாகில், அவனுக்கு இறப்பு என்பதேது?! வேத வாக்கியங்கள் பொய்யாகி விடுமா என்ன! உலகமே அழிந்து போனாலும் வேதத்தின் மெய்ப்பொருள் சத்தியங்கள் அழிந்தே போகாது.
சூக்குமக் கற்பமாகிய சுத்த நாதங்களால் சூக்குமத் தேகமானது தூய்மை அடைந்துவிடும். சூக்குமம் தூய்மை அடைய அடைய தூலத் தேகமும் தூய்மையை அடைந்துவிடும். அதன்பின் தூலம் அமலமாகிவிடும். இங்கே ஒரு விசயத்தை நீங்கள் அனைவரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சூக்குமத் தேகம் அமலமடையாமல் தூல தேகத்தால் அமலநிலையை அடையவே முடியாது. சூக்குமக் கல்பமாகிய சுத்த நாதங்களைக் கேட்காதவன் பாசம் நீங்கி பிரமமுத்தி நிலையை அடையவே முடியாது.
அதனால்தான் நமது பிரமஞானப் பொற்சபைக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களின் சூக்குமத் தேகம் தூய்மை அடையக் கூடிய ஐவகைத் தவங்களை சுத்த நாதத்தோடு கற்றுக் கொடுத்து வருகிறோம். இந்த மாதிரி 16 வகை சுத்த நாதங்கள் சூக்குமத் தேகத்தை சுத்தப்படுத்துவதற்காக ஆதித் தமிழ்ச் சித்தரான அகத்தியப் பெருமானால் எம் குருவின் அருளால் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. நம்மிடம் பிரமஞானத் தவத் தீக்கையைப் பெறும் உயர்நிலை மாணவர்களுக்கு இந்த 16 நிலைகளையும் அவர்களின் ஒழுக்கம், மெய்ந்நெறி, தவ ஆற்றல் கண்டு முறைப்படி ஒவ்வொரு நிலைகளில் படியேற்றிக் கொண்டே வருவோம். இவையெல்லாம் மிகவும் உயர்நிலைப் பாடங்களாகும். விதி இருப்போர், விதியை முடித்துச் சிவத்திடம் செல்ல விளைவோர்களுக்கு கிடைக்கக் கூடும்.
இறைவன் நமது தேகத்தில் இருந்து அருட்கலைகளாக வெளியே வரவேண்டும் என்றால் திருஞானசம்மந்தர் சொல்வதைக் கேட்கலாம் வாருங்கள்.
பறையின் ஒலி சங்கின் ஒலி பரங்கார வுமார
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர்தம்மை
நிறையும் புனல் சடைமேல் உடை அடிகண் நின்றியூரில்
உறையும் இறை அல்லது எனதுள்ளம் உணராதே(திருநின்றியூர்)
இந்த சூக்குமக் கற்பம்தான் அதாவது சுத்த நாதம்தான் நம் இறைவனின் திருவடியாகும். இறைவனின் வடிவமாகிய வேத ஒலிதான் நாதம் எனப்படுவது. இச்சூக்குமக் கற்பத்தைத்தான், “எம்பெருமான் முன்பான் முழங்கு முரசு” என்று மாணிக்கவாசகப் பெருமானால் திருவாசகத்தில் புகழ்ந்து பாடப்பட்டது. அதனால்தான் வேதங்கள் சிவ சந்நிதானத்தில் ஓயாது சதா ஒலித்துக் கொண்டே இருக்கின்றன என்று மறைத்துச் சொல்லப்பட்டுள்ளது.
இதைப் பின்வரும் வாக்குகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப்பறை அறைமின்
என்று திருவாசகத்தின் திருப்படையெழுச்சியிலும்
ஓசையால் உணர்வாக்கு உணர்வரியவன்
உணர்வு தந்து ஒளியாக்கிப்……….
என்று திருவாசகத்தின் அற்புதப் பத்திலும்
ஓசையும் ஈசன் உணர வல்லார்க்கே
என்று திருமந்திரத்தின் ஏழாம் தந்திரத்திலும்
பாடி எழுகின்ற வேதாகமங்களும்
நாடியின் உள்ளாக நான் கண்டவாறே
என்று திருமந்திரத்தின் 8ஆம் தந்திரத்திலும்
தயங்கும் சோதி சாமவேதாகாமனைக் காய்ந்தவனே
என்று தேவாரத்தில் ஞானசம்பந்தராலும்
நாதனை நாத மிகுத்து ஓசை அது ஆனவனை
ஞான விளக்கு ஒளியை ஊன்உயிரைப் பயிரை
என்று சுந்தரர் தேவாரத்தில் நாதத்தின் சத்திகள், பெருமைகள் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
இங்கே ஒரு முக்கிய ரகசியத்தை பகிரப் போகின்றோம். நன்றாக உங்கள் செவிகளை விரித்து வைத்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
சத்தாகிய உடலும் சித்தாகிய உயிரும் அதாவது சத்தொலியும் சித்தொலியும் கூடிக் குழைந்து ஒன்றாகி நிற்கும்போது ஒரு ஒலி தோன்றி நிற்கும். இந்த ஒலிதான் அருட்கலைகளை வெளிப்படுத்தத் தகுதிபெற்ற மகா சத்தி கொண்ட சுத்த ஒலியாகும்.
இதைத்தான் அருட்குரு நாதம் என்று வேதங்கள் முழங்குகின்றன. வேதம் என்பது சற்குரு ஆவார். அதன் சுத்த ஒலிகள் என்பது சிவமாகும். வேதம் என்ற சுத்த ஒலியை வெளிப்படுத்த தேகத்தில் நிறைத்துக் கொள்ள வேண்டும் என்றால், சற்குருவின் துணையால் தான் முடியும். சற்குருவின் கற்பித்தலால் சிவம் என்ற அருட்கலைகளை சுத்த ஒலிகளாக சூக்குமம் மற்றும் தூலத் தேகத்தில் பிரமஞானச் சாதகன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நிறைத்துக் கொண்டே வருவான்.
அருட்கலைகளை வெளிப்படுத்தும் மற்றும் நிறைத்துக் கொள்ளும் தந்திரம் இதுதான்.
இந்த சூக்குமக் கற்பத்தை அனைவராலும் செய்து விட முடியுமா என்றால், முடியாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இது சகச நிட்டையாளர் களுக்குத் தான் பொருந்துவதாக உள்ளது. தவத்தை ஏதோ ஒரு நாள், ஒரு சில மணிநேரம் மட்டும் செய்யக்கூடிய சவிகற்ப நிர்விகற்ப நிட்டையாளர்கள் மற்றும் உபாசக நிட்டையாளர்களுக்கு இது எட்டாக் கனியாகும். அறியப்பட முடியாது சூக்கும ரகசியமாகும்.
இவ்வாறு இந்த நாதங்கள் அனைத்தும் முறையாக ஆக்கம் பெற்று, கேட்கப்பட்டு உயிருக்குள் ஒடுங்கி நிற்க வேண்டும். இதுதான் இயற்கை முறையாகும். அப்பொழுதுதான் சாதகனுக்கு பூரணமான சீவன் முத்தி நிலை கைகூடி வரும்.
ஓசைதான் இவ்வுலகத்திற்கு வித்து – உயிர். இதனால்தான் இந்த உயிரைக் கொண்டு நம்மால் உண்மை ஞான நிலையை அடைய முடிகிறது. வெளியுலகில் நிகழும் சங்கீதம் முதலிய வாத்தியங்களுக்கே உலக மாக்கள் மயங்கிப் போய் தன்வசம் இழந்து நிற்கின்றார்கள் என்றால், அகத்தே உள்ளே நிகழும் வாய்மையான சத்தியமான வேத ஒலிகளால் எவ்வளவு பேரின்பப் பெருவெள்ளத்தை அடைய முடியும் என்பதைத்தான் கூறிவிட முடியுமா? கண்டும், கேட்டும், அனுபவித்தும்தான் அந்த சுத்த நாத ஒலிகளை உணர்ந்திட முடியும்.
அனைவரும் பிரமஞானத் தவத்தைக் கற்றுக் கொள்ள வந்தீர்கள் என்றால், உங்களுக்கு சுத்த ஒலி அலைகளை எவ்வாறு உங்கள் உடலுக்குள்ளும் அதன்பின் உயிருக்குள்ளும் அதன்பின் சிற்சபைக்குள்ளும் செலுத்தும் ரகசியத்தைப் பெறுவீர்கள்.
நீங்கள் இப்போது உங்கள் தேகத்தின் மூலமாக பெறுவதெல்லாம் அசுத்த நாதங்களாகவே உள்ளன. எவையெல்லாம் சுத்த நாதங்கள் என்று தெரிந்து கொண்டால்தான் உங்களால் அதை எப்படி உள்ளே செலுத்துவது என்பதை சற்குருவிடம் கேட்டு அனுபவித்து உணர்ந்து கொள்ள முடியும்.
வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாத ராடன் மணிமுழவு ஓசையும்
கீத ஓசையுமாய்க் கிளர் வுற்றவே. (தேவாரம் – திருஞானசம்மந்தர்)
வீணை என்பது இறைவனையே மகிழச் செய்வது. சிறந்த உதாரணம் ராவணேசுவரன். அவரின் அற்புத வீணையிசை ஞானத்தால் சிவனையே கட்டிப் போட்டதாக புராணங்கள் கூறுகின்றன. வீணைக்கு உயிரை மயக்கும் தன்மை உண்டு.
வீணையில் இசைக்கப்படும் ஒவ்வொரு ராகங்களும் மனித உயிர்கள் மற்றும் தாவர உயிர்களிலும் பல்வேறு ஆற்றல்களையும் புனர்சென்மத்தையும் கொடுக்கக் கூடியதாக இன்றைய அறிவியல் சொல்கிறது. ராகங்கள் கொடுக்கும் நன்மைகளில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.
1. அழுகின்ற குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைக்க நீலாம்பரி ராகம்.
2. பகல் உணவு உண்ட பின் ஸ்ரீராகம் கேட்டால் சுலபாக ஜீரணமாகும்.
3. மனக்கலக்கத்தின் போது சாம ராகத்தை கேட்டால் மன அமைதி கிடைக்கும்.
4. விடியற்காலையில் பூபாளம், மலய மாருதம் கேட்டால் உற்சாகம் தானாகப் பிறக்கும்.
5. தலைவலியைப் போக்க அஸாவேரி ராகம் பாட வேண்டும்.
6. பசியை மறக்கச் செய்ய கரகரப் பிரிய ராகம் பாட வேண்டும்.
7. காச நோயை தீர்க்க பைரவியை இசைக்க வேண்டும்.
8. ஆஸ்துமாவை குணப்படுத்த தோடியை தேடிக் கொண்டு வரவேண்டும்.
9. வாதம், கப நோய்களை கட்டுப்படுத்த ஹிந்தோள ராகம்.
10. பித்தக் கொதிப்பை தணிக்க ஸாரங்கா பாட வேண்டும்.
திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிக்கப்படும் ராகங்கள்
11. மாப்பிள்ளை அழைப்பிற்கு 1. கல்யாணி ; புறப்படும் போது 2.சங்கராபரணம்.
12. ஜானவாச ஊர்வலத்தில் 1. தோடி, 2.காம்போதி, 3.கரகரபிரியா
13. திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் போது 1. கனடா, 2.அடானா, 3.பியாகடை
14. காலையில் 1. கேதாரம், 2.பூபாளம், 3.பிலஹரி பாட வேண்டும்.
15. முகூர்த்தத்திற்கு முன்பு 1. தன்யாசி, 2.நாராயணி இசைக்க வேண்டும்.
16. முகூர்த்தம் நடக்கும் போது நாட்டைக்குறிஞ்சியை இசைக்க வேண்டும்.
17. தாலி கட்டும் சமயத்தில் ஆனந்த பைரவியை தாலாட்ட வைக்க வேண்டும்.
18. அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்
19. சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி
20. கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி
21. மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி,
ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி
22. மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்
23. நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி, ஜகன் மோகினி
24. பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான
25. வயிற்றுவலி தீர – நாஜீவதாரா
சஹானா என்ற சொல் லக்ஷ்மி/மா துர்கா தேவியின் மற்றொரு பெயர். இதற்கு ‘”தூய மற்றும் பேரின்ப மகிழ்ச்சி” என்றும் பொருள். ” கன்னடத்தில் இதன் பொருள் – நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய அனைத்தையும் பற்றி நன்கு அறிந்திருக்கும் ராகம் இது. சஹானா “ரஞ்சகத்வ உபய வக்ர ராகம்” என்று குறிப்பிடப்படுகிறது, அதாவது மிகவும் அழகியல் மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பொருள். அதிக மெல்லிசை உள்ளடக்கம் கொண்ட ராகம் . சஹானா முக்கியமாக ” கருணா ரச பிரதான ராகம் – பாத்தோஸ் மனநிலையை பிரதிபலிக்கும் ராகம். இந்த ராகம் தாச பக்தி பாவத்தின் ஒரு முன்மாதிரியான விளக்கம்- (கடவுளுக்கு சேவை செய்வதற்கு ஒன்பது வழிகள் உள்ளன..). நிரம்பி வழியும் அன்பினால் ஏற்படும் இரக்கமும் இந்த ராகத்தால் குறிக்கப்படுகிறது. சஹானா ராகம் உணர்ச்சி குளிர்ச்சியையும் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் வன்முறையைக் குறைக்கிறது.
அடுத்து சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த கல்யாணி, மிகவும் அழகான ராகம் இது – உச்ச தேவியின் பெயர், ருத்ர சக்கரம் என்று பெயரிடப்பட்ட 65 வது மேளகர்த்தா ராகம் – சிவபெருமான் தலைமையிலான 11 தேவர்களை இந்த கல்யாணி குறிக்கிறது. இது ராக குடும்பத்தின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்துஸ்தானி அமைப்பில், இந்த ராகம் “யமன்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
மனம், உடல் மற்றும் ஆன்மா சக்கரம். இந்த ராகம் நாம் என்னவாக மாற விரும்புகிறோமோ அதுவாக மாற வைக்கும் ஆற்றல் கொண்டது. நம் உடலை மறுவடிவமைக்கும் திறன், நாம் ஒவ்வொருவரும் உள்வாங்கும் ஆற்றல்களை மாற்றியமைக்கும் திறன் இந்த கல்யாணியில் உள்ளது.
ஓசை என்றாலே அதை நம் இரு காதுகளால்தான் கேட்டு ரசிக்கிறோம். அதனால் வீணைதான் நம் இரு காதுகள் என்றார்கள் நம் முன்னோர்கள். காதுகளின் வழியாகத்தான் அனைத்து இசைகளையும் நாதங்களையும் கேட்க முடிகிறது. திருமூலர்கூட பிரமஞானத் தவத்தை செய்யும்போது, காதுகளில் உள்ளுக்குள் பத்து வகை நாதங்கள் கேட்பதாகச் சொல்லியிருக்கிறார். இதை நாங்கள் அனுபவத்தால் நித்தமும் இவ் நாதங்களை கேட்டு வருகின்றோம். எம் மாணவர்களும் அப்படியே நாதங்களை காதுகளுக்குள் கேட்டு வருகிறார்கள்.
பத்துவகை நாதங்களையும் காதுகளில் எழுப்பி அந்த நாதங்களை சம்மிய தந்திரத்தால் நாதக் கலையோடு சேர்ப்பித்தால் நாதக் கலையும் நாதவொலியும் ஒன்றிணைந்து, சிவத்தின் காட்சியை, அருட்கலையை அங்கே காணலாம். சத்தத்தாலும் இறைவனைக் காணலாம். சத்தத்தைத் தாண்டிய நிலையிலும் சிவத்தைக் காணலாம்.
சங்கீத மும்மூர்த்திகளில் தியாகராஜர் அவர்கள் சங்கீதத்தாலே பரப்பிரமத்தை நேரில் தரிசித்து ஜீவன்முக்தி நிலையை அடைந்தவராவார். நாதவொலிகளால் திருவையாறு தியாகராசரையும் ஸ்ரீராமபிரானையும் கட்டிப்போட்டு இசைபக்தியில் தன்னை ஒப்புக் கொடுத்து ஜீவப்பிரம்மைக்ய ஞானத்தை அடைந்தவர். இது புறவித்தை என்று சொல்லலாம்.
ராகங்களை இசைகளாக இசைக்காமல், ராகத்தொனிகளை பிரமஞானத் தவத்தால் சாதகன் தன் சிரசிற்குள் சதா கேட்டுக் கொண்டிருக்கும் நிலையை அடையும்போது, அங்கே சிவம் ஆனந்த நடனமிட்டு ஒளியாக, ஒலியாக, தில்லை நடனமாக சிற்றம்பலத்திலே காட்சி கொடுத்து, சாதகனை பிறவா நெறியில் தள்ளிவிடுவார். இது மிக உன்னத நிலை. அகத்தில் இருக்கும் ஈசனைப் பிடிக்கும் லகுவான தந்திரம். இதைத்தான் திருவாசகத்தில் மாணிக்கவாசகர், “இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க” என்றார்.
“ஓ…ம்…!” என்ற நாதத்தின் ஆற்றல்
எந்த அளவுக்கு மின்சாரத்தின் (CURRENT) இணைப்பை வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு விளக்குகளை நாம் எரிக்க முடிகிறது. ஒளி ஏற்படுகிறது. அதேபோல் இன்று விஞ்ஞானிகள் கண்டது போல ஏதாவது பொருள் இருக்கிறது என்றால் அதன் மீது காற்றழுத்தத்தின் தன்மையை (COMPRESSION) அதீதமாகக் கொடுத்தால் இது எல்லாமே ஆவியாக மாறிப் போகும்.
இந்தக் காற்றழுத்தமே எதிலிருந்து வந்தது…? ஹைட்ரஜன் அதற்குள் இருக்கக்கூடிய காந்த சக்தியினுடைய நிலைகளை அந்த அணுவின் தன்மையைக் கூட்டி அதைக் கலவையாகக் கொண்டு அழுத்தப்படும் போது
1. இந்த அணுக்களினுடைய தன்மை அதாவது மின்னணுக்கள் (கதிரியக்கம்)
2. அந்த நுண்ணணுக்களினுடைய நிலைகள் ஒன்றோடு ஒன்று மோதியவுடனே
3. அனைத்தையும் ஆவியாக மாற்றுகின்றது.
இதைப் போன்று தான் நாம் அந்த “ஓ..ம்…!” என்ற சுவாசத்தின் தன்மையை மகரிஷிகளை எண்ணிச் சுவாசிக்கும் போது நம் உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு நம் உடலுக்குள் இருக்கக்கூடிய காந்த செல்களை மட்டும் அது இயக்கும். கரண்டை (ஆற்றலை) அதிகமாக உண்டாக்கும்.
ஓ…ம் என்ற பிரணவத்தின் முக்கியத்துவத்தைச் சொன்னோம் என்றால் அதையெல்லாம் விலை பேசுவார்கள். ஆகையினால் உங்களுக்குச் சாதாரணமான நிலையில் அதைக் கொடுப்பதில்லை.
நீங்கள் எந்தளவுக்கு மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் வருகின்றீர்களோ அதற்குத் தக்க குரு வாக்கைக் கொடுக்கின்றோம்.
நீங்கள் ஆயிரம் தடவை குரு என்ற நிலைகளில் நீங்கள் மற்ற உணர்வினுடைய நிலைகள் செயல்படுத்தினாலும் எந்த உணர்வை வளர்த்துக் கொண்டீர்களோ அது தான் ஓ..ம் என்று போய் முன்னாடி நிற்கும். எதை…?
1.“ஓ..ம் காளி…! என்று சொல்லிக் கொண்டு
2.உன்னை ஒரு கை நான் பார்க்கிறேன்… நான் என்னவெல்லாம் செய்கிறேன் பார்…! என்று சொல்லி
3.கோபத்தையும் ஆத்திரத்தையும் எடுத்துக் கொண்டால் அது தான் முன்னணியில் இருக்கும்.
4.ஓ…ம்…! என்று சொன்னால் இந்த உணர்வு கிளம்பி என்ன செய்யும்…? ஓங்காரத்தைக் கூட்டி இரத்தக் கொதிப்பு தான் வரும்.
5.கண்களில் வேறு நிலைகள் வேலை செய்துவிடும்
வெறுப்பான நிலைகள் இருக்கப்படும் பொழுது ஒரு ஆவியின் தன்மை உடலுக்குள் இருக்கின்றது. ஓ…ம்..! என்று சொன்னால் அதனுடைய உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஆனால் உணர்விற்குள் வேட்கை அது வெப்பத்தின் நிலைகள்.
ஓம் -க்குள் இருக்கும் அந்த மெய் ஒளியின் தன்மைகளை எந்த மெய்ஞ்ஞானி எடுத்துக் கொண்டார்களோ, அந்த உணர்வின் அலையை வித்தாகப் பதியச் செய்யும் அந்த உணர்வைத்தான் இந்த உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.
மெய்ஞ்ஞானிகளின் உணர்வின் வித்து உங்கள் திருவடிகளுக்குள் பதிந்த பின்
1.அதே நினைவுடன் “சிவ சிவ சிவ சிவ சிவாய நமஓம்” என்கிற போது
2.அந்த ஆற்றல் மிக்க நிலைகள் உங்கள் உடலுக்குள் செருகச் செய்யும்.
3.உங்கள் உடலுக்குள் எங்கெல்லாம் மாசுபட்டு இருக்கின்றதோ
4.இந்தக் காந்தத்தை அதிகமான நிலைகள் பிடிக்கச் செய்து
5.இந்த அழுத்தத்தின் நிலைகள் கொண்டு எந்தத் தீய சக்தியாக இருந்தாலும் அது ஆவியாக மாற்றி உங்கள் உணர்வுகளை
எல்லாம் ஒளியாக மாற்றும்.
வியாகரண சாத்திரத்தில் சப்தத்தையே ப்ரம்மமாக நிலைநாட்டியிருக்கிறது. இதற்கு சப்த ப்ரம்மவாதம் என்று பேர்.
மொழி இலக்கணத்தைச் சொல்லும்போது இப்படி வையாகரணிகள் (வியாகரண சாஸ்திரக்காரர்கள்) அதை பிரம்ம ஸ்வரூபமாகச் சொல்லியிருப்பதையே இன்னொரு விதத்தில் ஸங்கீத சாஸ்திரக்காரர்களும் ஸ்தாபித்திருக்கிறார்கள்.
ஸங்கீதத்திலே நாதப்பிரம்ம உபாஸனை, நாதோபாஸனை என்கிற இடத்திலும் நாதம் என்பது வெறும் ஆதார சப்தம் மட்டுமில்லை. பாடுகிறவன் ஒரு ஸ்வர ஸ்தானத்தை ச்ருதியோடு சுத்தமாக தீர்க்கமாகப் பிடித்து அது பூர்ணமாக ஓங்கி முடிந்து, விழுந்து லயிக்கிற இடத்தில் அது ச்ருதியோடு கவ்வி அத்வைதமாகக் கரைந்து, நிறைந்து போகிறதே அதுதான் நாதம் என்பது.
இந்த இடத்திலே பாடுகிறவனும் அதோடு கரைந்து நிறைந்து விடுவான். அவன் மட்டுமில்லை. கேட்கிற மற்றவர்களும் அப்படியே சொக்கித் தன்னை மறந்து அந்த நாதத்தில் ஐக்கியமாயிருப்பார்கள்.
இதிலே பெறுகிற ஆனந்தந்தான் ஆத்மானந்தம், பிரம்மாநந்தம் என்று மத சாஸ்திரங்களின் உச்ச லக்ஷ்யமாய் சொல்லியிருப்பது.
நாதம் பிரம்மத்துக்குக் கொண்டுபோகிறது, சப்தம் நாதத்துக்குக் கொண்டுபோகிறதென்றால் இதில் ஒன்றின் தன்மை இன்னொன்றுக்கு இல்லாவிட்டால் எப்படி முடியும்? அதனால்தான் சப்தமே பிரம்மம் என்று சொல்வதாக சாஸ்த்ரம் ஏற்பட்டிருக்கிறது.
சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் நித்யமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பதுதான் ‘நித்யம்’. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் ‘பூர்ணம்’. இப்படி எக்காலத்திலும் எவ்விடத்திலுமாக நிறைந்திருப்பது சப்தம் என்று நம் பூர்விகர்கள் சொன்னதை இப்போதுதான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
பதினாயிரம் மைலுக்கு அந்தண்டை பாடுவதை இங்கே நாம் ரேடியோவில் கேட்கிறோமென்பதால், சப்தம் space-ல் எங்கும் வியாபகமாயிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதோ இப்போது நான் பேசுவதை ஒருத்தர் டேப்-ரிக்கார்ட் பண்ணுகிறார்; க்ராமஃபோன் என்று ரிகார்ட் பண்ணுகிறார்கள். எத்தனையோ வருஷத்துக்கு அப்புறம் இந்த ஆவணங்களைப் போட்டாலும் சப்தங்கள் மாறாமலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்ன நிரூபணம் ஆகிறது? சப்தம் காலத்தால் நசிக்காமல் நித்யமாய் இருக்கிறது என்று நிரூபணமாய் விடுகிறதல்லவா?
பூர்விகர்களின் அதீந்த்ரிய சக்தியும் போய், நவீன ஸயன்ஸும் வராத காலத்திலே, ‘சப்தம் நித்யமானது, பூர்ணமானது’ என்றால் “இதென்ன பேத்தல்? நாம் எழுப்புகிற ஒலி இதோடு தீர்ந்துபோனதுதான். இதெப்படி நித்யம்? மிஞ்சினால் அது நூறு, இருநூறு கஜம் போகட்டும். பெரிய இடி இடித்தால்கூட நாலைந்து மைலுக்கு மேல் ஓசை போகிறதில்லை. இதை பூர்ணம் என்றால் எப்படி?” என்றுதான் தோன்றியிருக்கும். இப்போது அறிவியல் வந்து நம் சாஸ்த்ர அபிப்ராயத்தைக் காப்பாற்றிக் கொடுக்கிறது!”
நாதம் நம் ஜீவனே
இந்த நிமிடத்தில் நீங்கள் அணிந்திருக்கும் உடை, செய்து கொண்டிருக்கும் வேலை அல்லது படித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரை உங்களை சுற்றி நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் வீடு, பொருட்கள், உலகம் இவை அனைத்திற்கும் பின்னால் இருப்பது ‘சப்தம்’எனும் ஒற்றை ஆற்றல் என்பது சற்று யோசித்தால் நமக்கு வியப்பையும், ஆர்வத்தையும் அளிக்கும்.
ஒரு மாபெரும் துணிக்கடைக்கு செல்கிறீர்கள், அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான, சட்டைகளில் இப்போது நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? விடை மிகவும் சுலபம், அந்த தருணத்தில் உங்களுக்கு நீங்களே பேசி, சொல்லி, மறுத்து, தலையாட்டி, அல்லது புன்னகை செய்து, மனதளவில் (இந்த கலர்ல வேற சட்டை நம்மகிட்ட இல்ல, இது நல்லாயிருக்கும், இத மாதிரி ஒண்ணுதான் தேடிக்கிட்டு இருந்தேன்) இப்படி பல்வேறு சப்தங்களை ஏற்படுத்திய பின்னர், மற்ற சட்டைகளை விலக்கிவிட்டு இதை உங்கள் கைகள் சென்று தொட்டது.
இன்று அதை நீங்கள் அணியும் போதும் இதே போல மனதளவில் ஒரு மிகப்பெரிய ஒத்திகை நாடகம் நடந்து, பேசி முடிவுசெய்து, இதோ அணிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த ‘உள்’ உரையாடல் நீண்ட நேரமெல்லாம் நடப்பதில்லை அல்லது நாம் கவனிப்பதில்லை. பெண்களின் உலகமும் இதே போன்றதே. ஒரு சாம்பார் வைப்பதற்கு குறைந்தது 100 முதல் 200 சப்தங்களையேனும் ‘உள்ளும்’புறமும் உருவாக்காமல் அவர்களால் அதை நிறைவு செய்ய முடியாது. இப்படி நாம் செய்யும் மிகச்சிறிய செயல்கள் முதல் மாபெரும் செயல்கள் வரை அனைத்தும் இங்கே ‘சப்தத்தால்’ கட்டமைக்கப்பட்டவை.
விளாடிமிர் காவ்ர் எனும் விஞ்ஞானி 1957ல் ‘‘கென்னான் சோனிக்’’ எனும் கருவியை கண்டுபிடிக்கிறார். இது ‘‘அதீத ஒலி அலைகள்’’ மூலம் (மனிதர்களை) எதிரிகளை கொல்லும் ஒரு கருவி, அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. இதில் இருக்கும் மாபெரும் சவாலே, அந்த கருவியை இயக்குபவரும் அதன் பாதிப்புக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது என்பதே. பின்னர் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுடன், SONIC WEAPONS – ‘‘LRAD’’ (A Long-Range Acoustic Device) என்கிற பெயர்களில், ராணுவத்தில், கலவரத்தை கட்டுப்படுத்த, கடல்பயணங்களில் எதிரிகளை எச்சரிக்க என சப்தத்தை மையமாக கொண்ட கருவிகள் பயன்பாட்டிற்கு வருகிறது.
ஆக, ஒலி என்கிற ஆற்றல், பிடித்த சட்டை வாங்கி அணிய வைக்கிறது, சமையலறை சாம்பாராக மாறுகிறது, கலவரத்தைக் கட்டுப்படுத்துகிறது, எதிரியை எச்சரிக்கை செய்கிறது, மனிதனை கொல்லக்கூடியதுஎனில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் இதே சப்தங்களை பயனுள்ளதாக மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதா எனில், ‘‘இசை, பாடல்கள், ஜபங்கள், மந்திரங்கள் என ஒலியை நேர்மறை ஆற்றலாகப் பயன்படுத்தவும் முடியும். ஒலியை குறிப்பிடுகையில் நம் மரபு நாத பிரம்மம், நாதயோகம், மந்திர உச்சாடனம் என பல்வேறாக வகைப்படுத்துகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதுமே நாதத்தால் (ஒலியால்) ஆனது என்கிறது.
‘‘கோர்வையாக ஸ்வரங்களை தேர்ந்தெடுக்காத போது எப்படி இசை இனிமையாக ஒலிக்காதோ, அப்படியே மனமும் தொடர் ‘‘உள்’’ உரையாடலை சரியாக கோர்வையாக நிகழ்த்தாதபோது, அமைதியை, சமநிலையை அடைவதில்லை. அப்படி ஒரு ஒலியை, சப்தத்தை நமது வாழ்வின் ஒவ்வொரு நாளின் தொடக்கமாகவும், அன்றைய நாளின் முடிவாகவும், வகுத்துக்கொள்ளும்போது, மனதளவில், உணர்வளவில், ஒரு சமநிலையை அடைய முடிகிறது.
இதை ஒரு பயிற்சியாக தொடங்கி, பழக்கவழக்கமாக மாற்றி, தினசரி கடமையாக, அன்றாட பணியாக, கைக்கொள்ளும் பொழுது, நாம் சென்று சேர்ந்திருக்கும் மனநிலை திரும்பி பார்த்து வியக்கும்வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை. உங்களுக்கான ஒலியை தேர்ந்தெடுக்க எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் இதை ஒரு தவம் போல இயற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் ஏதோஒரு வகையில் இருக்கிறோம். மாபெரும் படைப்பாளிகள் அனைவரும் ஏதோ வகையில் ஒலியுடன் தங்களை இணைத்துக்கொண்டவர்கள், இசையாக, பாடலாக, மந்திரங்களாக.
அதைவிட முக்கியமான விசயம், நம் மனம் செயல்படும் விதம். ஏற்கனவே ஒரு கட்டுரையில் பகிர்ந்தது தான் ஒரு நாளில் 12000 முதல் 42000 வரை எண்ணங்கள் வந்து செல்லும் இந்த மனம், மூளை, உடல், வாழ்வு, பதற்றமும், அசூயையும் கொண்டதாகவே ஒவ்வொரு தினத்தையும் அமைக்கிறது. ஆக, காலையில் தூங்கி விழிக்கும் கணம் ஒரு 10 நிமிடங்கள் நீங்கள் ஒரு மந்திரத்தில், இசையில், ஜபத்தில், தொடங்க முடியுமெனில், அன்றைய நாளை 10 நிமிட ஒலி சார்ந்த விசயத்தில் முடிக்க முடியுமெனில், மிக மெதுவாக சில மாற்றங்கள் நிகழ்வதை காணமுடியும்.
அதிலும் ஒருசில மந்திரங்கள், ஜபங்கள், எந்த வித நம்பிக்கையும் அற்ற ஒருவருக்கும். பயனளிக்க வல்லவை. ஆகவே அவற்றை UNIVERSAL MANTRAs எனும் பொது மந்திரங்கள் பிரிவில் வைத்திருக்கிறார்கள். அதாவது, அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ, நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இவை வெறும் சப்தங்கள் என்கிற நிலையில், கேட்பது இன்றியமையாதது, நம்முள்ளே செய்ய வேண்டியதை அந்த ஒலி செய்யும்.
நாம் மனதில் தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஒலியை விட இசை மேலானது. நுண்ணிய அதிர்வலைகளைக் கொண்டது, நம் அக இரைச்சலை குறைக்க வல்லது,
இசையை விட, மந்திரங்கள், ஜபங்கள் மேலும் ஆழம் செல்லக்கூடியவை. நம்பிக்கையை விட பயிற்சியை மூலதனமாகக் கொண்டவை இந்த வாழ்வியல் முறை. தர்க்கம் சார்ந்த புத்திசாலித்தனம் சார்ந்த நமது அத்தனை திறமைகளையும், நம்மை அவதானிக்க திருப்பும்போது நாம் அடையும் வியப்பிற்கும், அதிர்ச்சிக்கும் எங்கேனும் தீர்வு இருக்குமெனில், அது சுத்த நாதம் கொடுக்கும் நிலையில் மட்டுமே இருக்கிறது.
யோக மரபில் சப்தங்களை முன்னிறுத்தி செய்யக்கூடிய பயிற்சிகளும் பாடங்களும் உள்ளன. இவ்வகை பயிற்சிக்கு நாதயோகம் எனப் பெயர் இதன் நோக்கமே நம் ஆழம்வரை சென்று அழுத்தி வைக்கப்பட்ட அல்லது ஒளிந்து கொண்டுள்ள எதிர்மறையான பல்வேறு அம்சங்களை நீக்குவதுதான். எனினும் அவற்றை கற்பதிலிருக்கும் சவால், ‘நாத யோகத்தை, அறிந்த யோக ஆசிரியர்கள் இங்கே மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். அதிலும் திருவடிகளில் நாதத்தை எழுப்பும் கலையைக் கற்றுக் கொடுக்க இன்று எந்தவொரு குருமாரும் இல்லை.
இந்த உயிர் எழுப்பிக் கொண்டிருக்கும் நாதத்தில்தான் அதாவது சத்தத்தில்தான் சிவமானவர் சதா நிலைத்து இருந்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான், ஔவைத்தாய், “சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி” என்று பாடினார்.
அடுத்த அகவல் வரிகள் : “சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி (64)” என்பது.
சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைப் பார்க்கும்படி கேட்ட ஔவைத்தாய், அதைத் தொடர்ந்து தன் சித்தத்டிதன் உள்ளே சிவலிங்கத்தை காட்டி அருள வேண்டும் என்று கேட்கிறார்.
பிரமஞானத் தவத்தில் அமுதம் சுரந்தபின், சிவம் வெளிப்படுவார்.
சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தம் சிவமாகவே சித்தி முத்தியாம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே(தி.ம.1644)
அமுதம் எப்படி ஊறிக்கொண்டு வரும் என்றால்,
அமுதப் புனல் வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக்குள் சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத் தண்டுஓட்டித் தரிக்க வல்லார்க்கு
நமனில்லை நற்கலை நாள் இல்லைதானே(தி.ம.881)
உண்நீர் அமுதம்உறும் ஊறலைத் திறந்து
தெண்நீர் இணையடித் தாமரைக்கே செலத்
தெண்நீர்ச் சமாதி அமர்ந்து தீராநலம்
கண்ணால் தொடேசென்று கால்வழி மாறுமே(தி.ம.882)
சித்தத்தை சிவன்பால் வைப்பதென்பது, சித்தம் தோன்றும் இடத்தில்தான் சிவனும் இருக்கிறான் என்பதை உலக மக்கள் மறந்து போனதின் விளைவுகள்தான் இன்றைக்குக் காணப்படும் அவ்வளவு குற்றங்களும் பாதகங்களும். சிவனைத் தனக்குள்ளே உணர்ந்தவன், பார்த்துக் கொண்டிருப்பான் தன் தேகத்தையே சிவமாக எண்ணி தவத்தில் முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பான். யாரெல்லாம் தன்னை சிவமாகவும் உயிராகவும் நினைக்காதவர்களோ அவர்கள் சிவமும் உயிரும் குடியிருக்கும் உடலைப் புனிதமாக கருதாதவர்களாக இருப்பார்கள். தன் தேகத்தை அவலம், அவமானம், குற்றங்களின் பிறப்பிடம் என்று கருதுவோர்கள்தான் அவர்களைக் கெடுத்துக் கொண்டு, சமுதாயத்தையும் கெடுக்கிறார்கள்.
எம் சற்குரு சொல்வார்கள் – தன்னை உணராதவன் தரித்திரனாவான் என்று. செல்வம் இல்லாதவன்தான் தரித்திரன். தனக்குள்ளே இருக்கும் பொருள் செல்வங்களையும் ஞானச் செல்வங்களையும் யாரெல்லாம் உணரவில்லையோ அவர்கள் அனைவரும் தரித்திரத்திலும் தரித்திரமாவார்கள். தரித்திரத்தை யாரும் விரும்புவதில்லை. எல்லோருக்கும் அளவில்லா செல்வங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், அதற்காக எதையும் பாடுபடுவதில்லை. பிரமஞானத் தவத்தைச் செய்து பாருங்கள், அத்தனை செல்வங்களும் காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல உங்களை நோக்கி ஓடோடி வரும்.
தன்னை தனக்குள்ளே காண்பவன்தான் ஞானி. தன்னைக் கண்டு தன் உயிருக்குள் சிவத்தைக் காண்போர்களே பிரமஞானி. சிவத்தைக் கண்டு சிவக் கலையோடு தன் உயிர்க்கலையை கலப்பிப்பவரே பரப்பிரம ஞானி.
இவ்வாறெல்லாம் தவங்களைச் செய்யாமல் கர்மவினைப்பதிவுகளின் காரணமாக பிறப்பெடுத்த தன்மையைத்தான், “தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன்” என்றார்.
யாரிடமெல்லாம் சிவத்தைக் காண வேண்டுமென்ற அன்பும் காதலும் இருக்கிறதோ அவர்களுக்குள் சிவம் ஒளியாகத் தோன்றுவான் என்பதைத்தான், “அன்பருள்ளாஞ் சிவமே” என்றார்.
பிரமஞானத் தவம் செய்து இந்த ஞானச் செல்வங்களை பெறாமல் இருப்பதைத்தான், “பெறும் திருவெய்திற்றிலேன்” என்றார்.
திருவடிகளைக் கொண்டு செய்யப்படும் பிரமஞானத் தவத்தைச் செய்து, தான் மீண்டும் கர்மவினைகளால் பிறப்பெடுக்காமல் இருக்க சிவமே, நீ எனக்கு அருள் செய்ய வேண்டும் என்பதைத்தான், “நின் திருவடிக்காம் பவமே அருளு கண்டாய்” என்றார்.
“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே…”
என்று திருநாவுக்கரச பெருமான் தமது நெஞ்சத்திற்கே எடுத்து சொல்கிறார்.
சுழுனையைச் சேர்ந்துஉளம் மூன்றுடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே இருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே (தி.ம.2156)
நமது தொண்டைப் பகுதியில் கறையைப் போல பாசியைப் போல கட்டிக் கொண்டிருக்கும் விடமாகிய இருட்டுதான் கோழை எனப்படும் சளியாகும். இந்த கோழையை யார் ஒழிக்கின்றார்களோ அவர்களுக்குத்தான் அமுதக் கலைகள் பிரணவ உச்சியை அடைந்து, அதன்பின் சந்திரக் கலசத்திலிருந்து அமுதமானது உருகி தொண்டை வழியே வழிந்துகொண்டு கீழிறங்கும்.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிரெழுந்துஎன்
அத்தன் ஆனந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துஉன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லாம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.(3)
பொழிப்புரை : “முத்துப் போன்ற வெள்ளிப் பற்களை உடையவளே! முன்பெல்லாம் எங்களுக்கு எதிராக எழுந்து வந்து என் அத்தனே, ஆனந்தனே, அமுதமானவனே என்றெல்லாம் இறைவனை வாழ்த்திக் கொண்டு வாயில் நீர் அதிகமாக ஊறி இனிமை உண்டாகும்படி அவன் புகழைப் பேசிக் கொண்டிருப்பாயே. இன்று நாங்கள் அழைத்தும் நீ எழுந்து வந்து உன்வாயிற்கதவைத் திறவாது இருக்கிறாய், எழுந்து வந்து கதவைத் திறந்துவிடு”. இவ்வாறு பெண்கள் பலர் தங்கள் தோழி ஒருத்தியைத் துயிலெழுப்பத், தோழி பின்வருமாறு கூறுகிறாள், “இறைவன்பால் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள், இறைவனின் திருவடிகளை காலங்காலமாக சாதனை செய்து வரும் பக்குவமான பிரமஞானத் தொண்டர்கள், இறைவன்மீது மிகுந்த உரிமையுடையவர்கள் எல்லாம் இருக்கும்போது, புதிதாக வந்த எங்களது அற்பக் குணத்தை ஒழித்து நீ எங்களை ஆட்கொண்டால், அது கெடுதலை உண்டாக்குமோ?” என்கிறாள். பிற பெண்கள், “சிவமே, உன்மீது அன்பு கொண்டால் அது ஏமாற்றமா? உன்னைப் பற்றி நாங்கள் எல்லோரும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றோமா? பளிங்கு நீரைப் போல் தூயமனம் கொண்டு நம் சிவத்தைப் பற்றி பெண்கள் பாட மாட்டார்களா? எங்களுக்கு வேண்டிய தெல்லாம் நீ எழுந்து வந்து அவனைப் பாட வேண்டும். அவ்வளவுதான், எமது ஒப்பற்றப் பாவையே, நான் சொல்வதைக் கேட்டு என்னோடு இணக்கமாய் இருந்துவிடு” என்றார்கள்.
உயிர் இருக்கும் இடத்தில் பரம அணுக்கள் நிறைந்திருக்கும். பரம அணுக்கள் ஒளித்துகள்களாகவே நிறைந்திருக்கும். சத்து என்றால் மெய்ம்மை. அதாவது உயிர் என்று பொருள். சித்து என்றால் அறிவு. சத்தாகிய உயிரை அறியும் அறிவுதான் சித்து. உயிரறிவு, மெய்யறிவு என இதைச் சொல்லலாம். அந்த உயிரறிவை குருமுகாந்திரம் உபதேசமாகக் கேட்கும்போது, குருவானவர் அந்த உயிர் இருக்கும் இடத்தை அம்பலப்படுத்தி அதாவது வெளிப்படுத்தித் தொட்டு காட்டுவிப்பார்.
வெளிப்படுத்துவதால் அது அம்பலம் ஆயிற்று. சித்தை அம்பலப்படுத்தியதால், அது சித்தம்பலமாயிற்று. அதுவே சிற்றம்பலம் ஆயிற்று. எனவே, அதை “சிற்றம்பலம் பாடி” என்று மாணிக்கவாசகர் சொல்ல வேண்டியதாயிற்று.
சித்தத்தில் சிவம் தோன்ற வேண்டுமென்றால், அங்கே மும்மலங்கள் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். மனம் எப்போதுமே ஏதாவது ஒரு எண்ணத்தின் பின்னால் ஓடிக் கொண்டேதான் இருக்கும். மனம் போன போக்கில் நம் கால்கள் போய்க் கொண்டிருந்தால், காலன்தான் வந்து நிற்பான். மனதோடு புத்தியைச் சேர்த்து, ஒரு சித்தத்தை நம் திருவடியில் உண்டாக்கும்பட்சத்தில், அந்த சித்தம் சொல்லும் விசயங்கள் கண்டிப்பாக நடந்தே தீரும். சுடராழித் தவத்தில் இடைவிடாமல் சித்தத்தை எழுப்பும் ஞானக் கர்மம் நடந்து கொண்டே இருப்பதால், அங்கே சிவம் தோன்றத்தான் செய்வார் என்பது தோன்ற, “ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை” என்றார்.
சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே(தி.ம.2969)
என்று திருமந்திரம், சித்தத்தைச் சிவமயம் ஆக்கியவர்கள்தான் சித்தர்கள் என்கிறது.
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்துஅருளிப்
பித்தன்இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தம்எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே.(7)
பொழிப்புரை : அன்பும் பண்பும் இல்லாதவன் நான். அதனால் இறைவனின் திருவடியை அடைவதற்குண்டான தகுதி என்னிடம் இல்லை. உலகத்தவர் என்னைப் பித்தன் என்று கூறுகிறார்கள். அப்படி இருந்தும் அவன் திருவடியை அடைவதற்குரிய தகுதியை எனக்கு அவன் ஊட்டி அருளினான். என்னுடைய பந்த பாசங்களை அறவே நீக்கி அருளினான். என்னை அவன் அடிக்கே அடிமையாக ஆக்கம் பெறச் செய்தான். அது மட்டுமல்ல, யான் எனது என்ற அறியாமையினால் அவனது திருவடிகளை அசையவொட்டாது சித்தம் என்னும் வலிய கயிற்றினால் அவன் திருவடிகளாகிய தறியிலே கட்டிக் கொண்டான். இப்பேர்ப்பட்ட ஞான வித்துக்குள் கலந்திருக்கும் சிவபெருமானின் திருவிளையாடலை அருள் விளங்குகின்ற தில்லையாகிய பிரணவ உச்சியில் நான் பார்த்தேன்.
இறைவன் ஒளியாக இருக்கும்வரை அவனைக் காண இயலாது. இந்த விசயத்தில் பிரமனும் திருமாலுமே தோற்றுப் போயிருக்கும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம். அந்த இறையொளியோடு நாதமாகிய ஒலியை 432 அதிர்வெண்களோடு கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால், இறைவன் அவன் இருப்பிடத்திலிருந்து நாதவிந்துவாக வடிவெடுத்து நம்முன்னே தோன்றுவான் என்பது பிரமஞானச் சத்தியமாகும். ஒளியைத் தனித்து காண இயலாது. அதன் வெளிச்சத்தை மட்டும்தான் நம்மால் காண இயலும். ஆனால், ஒலியோடு கூடிய ஒளியை நம்மால் தெளிவாக ஒரு உருவமாக காண இயலும். அதுதான் அருவுருவம். இறைவனை இவ்வாறு அருவுருவத்தில் மட்டுமே காண முடியும். அருவுருவம் நம் திருவடிகளில் நன்றாக காண முடியும். அருவத்தை நம் உயிரில் நின்று காண இயலும். உயிரின் வடிவம் அருவமாக இருப்பதால், அதற்குள் இருக்கும் இறையை அருவத்தில் காண்பது சாத்தியமே. அதனால், பிரமஞானப் பொற்சபையில் இறைவனைக் காண ஒளிக் கலைகளை நாதப் பிரமத்தோடு இணைத்திடும் அதி சூக்கும ரகசியக் கலையான பிரமஞானத் தவமானது அடிதவறாது, முறை பிறழாது, ஆழ்ந்த கூர்மையோடு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதைச் சொல்லிக் கொண்டு, இந்த ஞானப் பேச்சுரையை இனிதே நிறைவு செய்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபையிலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.
நல்லது. இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும் காண வேண்டுமென்றால் கீழே கண்ட தளத்திற்குள் இணைந்து கொள்ளுங்கள்.
www.bramagnanaporsabai.com
@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!