இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!

ஓம்……………………..   ஓம் ……………………..  ஓம் …………………..

இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.

அடுத்த அகவல் வரிகள் : “அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் (66)”என்பது.

 இங்கே ஔவைத்தாய் அவர்கள் அணு ஒன்று இருக்கிறது. அந்த அணுவிலும் மிகச்சிறிய அணு ஒன்று இருக்கிறது என்கிறார்.  பிறது அந்த மிகச்சிறிய அணுவிற்கும் தொலைதூரத்தில் ஒரு பொருள் இருக்கிறது.  அப்பொருள் கணுக்கள் முற்றி நிற்கிறது.  அது பார்ப்பதற்கு கரும்பின் கணுக்களைப் போல இருக்கிறது என்கிறார்.

முதலில் அணு என்றால் என்னவென்பதைக் காண்போம். அதன்பிறகு அதனினும் மிகச்சிறிய அணு எதுவென்பதைக் காண்போம்.

இறைவனின் உருவம் ஒளி ஆகும்.  அந்த ஒளி அமைந்திருப்பது திருவடியின் மெய்ப்பொருளில்.  அந்த மெய்ப்பொருளில் ஒரு நெல்லின் வால் பகுதியில் அமைந்திருக்கும் முனையைப் போல ஒரு அணு வடிவிலான சிறு துவாரம் மெய்ப்பொருளின் மையத்தில் அமைந்திருக்கிறது.  அந்த வாசலின் வழியாகத்தான் ஒளி ஆற்றலும் ஒலி ஆற்றலும் உள் நுழைந்து உயிர் இருக்குமிடத்தை நோக்கி பயணம் செய்கிறது.  அந்த இடத்தை மயிர்ப்பாலம், நெருப்பாறு என்பார்கள் சித்தர்களும் பிரமஞானிகளும்.  அப்புள்ளிதான் சிற்சபை அமைந்திருக்கும் இடம்.  அந்த சிற்சபையில் சிவம் ஒளியாக நடனமாடிக் கொண்டிருக்கிறான். இந்த இடத்திற்கு அம்பலம், சிற்றம்பலம், சிதம்பரம் என்ற பெயர் வழங்கலாயிற்று.  இந்த அணு வடிவிலான இடத்தைத்தான் தான் காணாமல் இருந்து கொண்டிருப்பதாக திருவாசகத்தில்  அனுபோக சுத்தி பதிகத்தில் (51வது பாடல்) மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார். அந்த சிற்சபையின் கண்ணே நாதப் பிரம்மாகவும் பொன்மேனி கொண்டும்  பொன் நிறமாகவும் அணுவானது நாத, விந்துக் கலைகளாக உயிர்த்திருக்கின்றன.

பிரணவ உச்சியில் இருக்கும் அணு வடிவிலான பிரமரந்திரத்தை சுடராழித் தவத்தால் திறக்க, அங்கே சிற்சபையின் ஆனந்த நடனத்தை நம்மால் நன்றாக காண இயலும். இந்த சிற்சபையைத்தான் “பொன்னம்பலம்” என்றார் மாணிக்கவாசகர். அது அக்கினிச் சுடரின் நிறத்தால் பொன் நிறத்தைப் போல அம்பலமாக அதாவது வெளிப்படையாக ஒளிவீசிக் கொண்டிருப்பதால் அது பொன்னம்பலம் என்றாயிற்று.

                அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே       (தி.ம.2008)

அணுவிற்குள் அணுவாகவும், அதற்கு அப்பாலும் இருப்பவர் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து, அந்த ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்கும் வல்லமை கொண்டவர்களுக்கு, அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனையும் அணுக முடியும்.

அணு என்பது மிக மிக நுண்ணிய பொருளாகும். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் யாவும் அணுக்கூட்டங்களின் தொகுப்பே ஆகும்.சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் அணுவைப் பற்றி நவீன விஞ்ஞானம் தெரிந்து கொண்டது.நமது மெய்ஞானம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அணுவைப் பற்றிய பேருண்மையை புரிந்து வைத்திருக்கிறது.

திருமூலர் இப்பாடலில் ஆதிப்பிரானாகிய இறைவன் அணுவுக்குள் அணுவாக இயங்கிக் கொண்டிருக்கிறான் என்கிறார். இதைச் சொல்வதற்கு அவர் எவ்வளவு நுண்ணிய தூரப் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த நுண்ணிய அணுவானது பிளக்க முடியாதது என்று நவீன விஞ்ஞானம் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாதிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், முன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே திருமூலர் தமது நுண்ணிய அறிவினால் அணுவினை ஆயிரம் கூறுகளாக்கிப் பார்க்கிறார். அங்கே அணுவுக்குள் அணுவாய் இயங்கும் இறைவனை அணுக வல்லார் எவரோ அவருக்கு இறையுடன் கலக்கும் வாய்ப்பு கிட்டும் என்கிறார்.

நம் உயிரானது எத்தகைய வடிவத்தில் இருக்கிறது என்பதைப் பற்றி அன்றே நம் பூட்டனுக்கும் பூட்டனான திருமூலர் சொல்லும் கணக்கு என்னவென்பதை இங்கே நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஓர் அதிசயமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறுபோடச் சொல்கிறார். இதுதான் ஆன்மாவின் வடிவம் என்கிறார்.

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவியது கூறது ஆயிரமானால்

ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே    (திருமந்திரம் – 2011)

100 x 1,000 x 100,000 = 10,000,000,000 = 0.00,000,000,001

அதாவது, ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டுள்ளார்.

ஒரு கடுகில் 32,768 அணு என ஒரு பழந்தமிழ்ப் பாடல் அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி

மணற்கடுகு நெல் விரல் என்றேற – அணுத்தொடங்க

எட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கில்

அச்சாண் இரண்டு முழமாம்

8 அணு = ஒரு தேர்த்துகள்

8 தேர்த்துகள் = ஒரு பஞ்சிழை

8 பஞ்சிழை = ஒரு மயிர்

8 மயிர் = ஒரு மணல்

8 மணல் = ஒரு கடுகு = 2,62,144 அணுக்கள்,

8 கடுகு = ஒரு நெல்

8 நெல் = ஒரு விரல்

8 12 விரல் = ஒரு சாண்

2 சாண் = ஒரு முழம் = 4,02,65,31,184 அணுக்கள்

4 முழம் = ஒரு கோல்

500 கோல் = ஒரு கூப்பீடு

4 கூப்பீடு = ஒரு காதம்

தற்போதைய விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென்(Hydrogen) அணுவின் சுற்றளவு. 0.000000212 ம்ம் – ஹைட்ரோஜென் எனப் பிரித்திருக்கின்றது.

இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டுப் பார்ப்போம். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோன் (Micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.

பசு மாட்டு மயிரின் உரு அளவு =100 மைக்ரோன்

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்

இப்பொழுது திருமூலர் கூறியவாறு பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரிப்பதாக எடுத்துக்கொள்வோம்.

0.1/100=0.001 மில்லி மீட்டர் (MM) அதை ஆயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம். 0.001/1000= 0.000001 மில்லி மீட்டர். இதை நாம் நூறாயிரமாக அதாவது 1,00,000 ஆகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

0.000001/100 000 = 0.00000000001 மில்லிமீட்டர் (MM) இதையே உயிரின் உருவத்தின் அளவாக இருக்கின்றது என்கிறார் திருமூலர்.

ஆகவே, திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00,000,000,001 (MM) மில்லிமீட்டர்.

அணுவின் சுற்றளவு 0.000000212 (MM) ஹைட்ரோஜென். ஆனால், திருமூலர் அதற்கும் கீழே சென்று உயிரின் அளவாக, 0.00000000001-யைக் குறிப்பிடுகின்றார்.

இறைவனின் வடிவத்தின் அளவினை திருமூலம் என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள் அன்பர்களே.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே       (திருமந்திரம் – 2008)

அணுவிற்குள் அணுவாகவும் அதற்கப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து, அவ் ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லார்க்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.

உயிருக்கு கூறப்பட்ட வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது அதில் கிடைக்கும் ஒரு கூறுதான் இறைவனின் வடிவம் என்று கூறுகின்றார்.

100 x 1000 x 100 000 x 1000 = 100 000 00 000 000 = 0.00 000 00 0000001

அணுவுக்குள் அணுவாக மனிதனின் உயிர் இருப்பது என்றும், அந்த உயிர் அணுக்களின் உள்ளீடாக ஆயிரத்திற்கும் மேலான அணுப்பிளப்பில் இறைவன் இருப்பதாகக் கூறுகின்றார்.

ஐந்தாம் நூற்றாண்டிலேயே அணுவைப் பிளக்கமுடியும் என்றும், அந்தப் பிளக்கப்படும் அணுவிற்குள் மனித உயிர் இருப்பதாகவும், அதை ஆயிரம் மடங்கிற்கும் மேல் பிளக்கும்போது அதில் இறைவன் இருக்கிறான் என்றும் திருமூலர் கூறியிருக்கின்றார்.

இந்த திருமூலரின் ஞானத்தைத்தான் இங்கே ஔவைத்தாய் அவர்கள் விநாயகர் அகவல் பாடலில் நம்முன்னே வைக்கும் ஞானச் செய்தி.

முதற் சொல்லாடல் : அணுவிற்கு அணுவாய்.  எது அணுவிற்கு அணுவாய் இருக்கிறது என்றால், அது நம் ஆன்மாவின் கூட்டிற்குள் வாசம் செய்து கொண்டு ஒளிவீசிக் கொண்டிருக்கும் நமது அத்தனைபேரின் உயிரே ஆகும். நம் உயிர்தான் அணுவிற்கு அணுவாய் இருக்கிறது.  இதை மேற்கண்ட திருமந்திரத்திலிருந்து அனைவருக்கும் விளங்கி இருக்கும்.

அடுத்த சொல்லாடல் : அப்பாலுக்கு அப்பாலாய் என்பது.  எதற்கு அப்பால் என்றால், அணுவிற்கு அணுவாய் உயிர் இருக்கிறதல்லவா, அந்த உயிர் இடத்திற்கும் அப்பாலுக்கும் அப்பாலாய் ஒரு பொருள் இருக்கிறது.  அப்பொருளைத்தான் அத்தனை பிரமஞானிகளும் ஆதி காலம் முதல் இருந்து வரும் பழைமையான பொருள் என்றும், அதைப் பழம்பொருள் என்றும், அது நமக்குள் சிவப்பொருளாக இருந்து வருகிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு            (திருக்குறள் – 358)

அந்த அணுவிற்கு அணுவாய் இருக்கும் உயிருக்கு அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கும் செம்பொருள் எது என்றும், அதன் தன்மை என்ன என்றும், அப்பொருளை தன்னகத்தே கொண்ட உயிர் எதுவென்றும் அறிவதுதான் அறிவு என்கிறார் திருவள்ளுவப் பெருமான் அவர்கள்.

ஆக, நமக்குள்ளே செம்பொருளாக, பழம்பொருளாக இருக்கக்கூடிய இறைவனை நம் ஆன்மாவில், அதற்குள் இருக்கும் உயிரில் யாரொருவன் கண்டு பேரின்பம் கொள்கிறானோ அவனே இறைவனைக் கண்ட மெய்யறிவைப் பெற்றவனாவான் என்பதுதான் மேற்கண்ட திருக்குறள் சொல்லவரும் ஞானம்.

அதைப் போலவே, ஔவைத்தாயின் சொல்லாடலும் அமைந்திருப்பதுதான் வியப்பிலும் வியப்பை நமக்கெல்லாம் கொடுக்கிறது.  நம் உயிர் எவ்வடிவத்தில் இருக்கிறதோ, அந்த அளவினைத் தாண்டி அப்பால், அதற்கப்பால் இருக்கக் கூடிய அளவில்தான் இறைவனின் வடிவம் இருக்கிறது என்பதை இங்கே பிரமஞானமாக ஔவைத்தாய் பதிவிட்டிருக்கிறார்கள்.

இப்படி அணுவிலும் அணுவாக இருக்கும் உயிரை யார் ஒருவர் பிரமஞானத் தவத்தால் அடையும் பாக்கியத்தை, ஆற்றலைப் பெற்றிருப்பார்களோ, அவர்கள் மட்டும்தான் அந்த உயிரைத் தாண்டி பேருயிராக விளங்கிக் கொண்டு, உயிர் இருக்கும் இடத்திலிருந்து அப்பாலுக்கு அப்பாலாய் இருக்கும் இறைவனைக் கண்டடைந்து ஞான ஒளிதேகத்தை அடைவார்கள். இது சத்தியம் என்கிறார்கள் திருமூலரும் ஔவைத்தாயும்.

ஆக இப்பேச்சுரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன தெரியுமா? முதலில் உங்கள் உயிரை ஒரு ஞான சற்குருமூலம் ஞானத்தை உபதேசமாகப் பெற்றுக் கொண்டு, உங்கள் உயிர் இருக்கும் ஆன்மாவை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். ஒரு கட்டத்தில் நீங்கள் ஆன்மாவைக் கண்டு, உங்கள் உயிரைக் கண்டடைந்து விட்டீர்களென்றால், அதன்பிறகு உயிரைத் தாண்டி அப்பால் இருக்கும் பேருயிராகிய இறைவனைக் கண்டடைந்து விட வேண்டும்.

இதில் என்ன பிரச்சினை என்றால், இவையெல்லாம் நுண்மான் நுழைபுல அறிவின் மூலம்தான் அடைய முடியக்கூடிய வகையில் நம் உடலின் கட்டமைப்பும் உயிரின் வடிவமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது.  எல்லாமே ஒரு சாப்ட்வேர் மாதிரி நம் உயிர் அணுவிற்குள் Program அதாவது Coding என்று சொல்வார்கள், அதாவது நம் உயிரணுவிற்குள் இப்படித்தான் நாம் என்று எழுதி வைக்கப்பட்டு, அப்படி எழுதி வைக்கப்பட்டவைகளை அனுபவிப்பதற்காகவே நாம் இங்கே இப்புவியின்மீது பிறப்பிக்கப்பட்டிருக்கிறோம்.

ஞான சற்குருவிடமிருந்து நீங்கள் ஞானத்தை உபதேசம் பெறுவது முக்கியமல்ல.  உங்கள் உயிரை அடைய வேண்டுமென்றால், காண வேண்டுமென்றால் நீங்கள் எதைப் பெற்றிருக்க வேண்டும் தெரியுமா அன்பர்களே.  அணுவிலும் அணுவாக இருக்கும் நம் உயிரை அளவினை, வடிவத்தைவிட நம் மெய்யுணர்வுகள் அணுவிலும் அணுவிலும் மிக மிக நுணுகி இருக்க வேண்டும்.  அவ்வளவுதான்.  அப்படி இருக்கும் பிரமஞானச் சாதகர்கள் மட்டும் உயிரைக் கண்டு, அதன்பின் இறைவனைக் காண்பார்கள்.  உங்கள் புலனுணர்வுகள் அணுவிலும் அணுவைவிட நுண்மையாகா விட்டால், அதன்பிறகு உங்கள் ஆன்மாவைக் காண்பதே இயலாத காரியமாகிவிடும்.  இந்த அறிவை நுண்மான் நுழைபுலன் அறிவு என்பார்கள் ஆதித் தமிழ்ச் சித்தர்கள். இதை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.  அதற்காகத்தான் அத்தனை மாணவ, மாணவிகளுக்கும் பிரமஞானத் தீக்ஷையை ஒரு ஞான சற்குரு வழங்குவார்.

சாதகன் பிரமஞானத் தவத்தில் ஆழ்ந்து செல்லும்போது அவனுக்குள் படிப்படியாக அறிவு நிலைகள் அதிகரித்துக் கொண்டே போய் இறுதியில் பத்தாம் அறிவு நிலை தோன்றும். மனிதர்கள் வெறும் ஆறறிவு நிலையிலேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவை தொடு அறிவு, சுவைக்கும் அறிவு, முகரும் அறிவு, பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு ஆகிய புலனறிவுகள் ஐந்தோடு ஆறாம் அறிவான சிந்திக்கும் அறிவை மனித குலம்  பெற்றிருக்கிறது.

அறிவு என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறி + உ = அறிவு.

உ என்றால் உகாரம், உயிர் என்றும் பொருள்படும்.

உன் உயிரை அறி என்பதே அறிவாகும்.

அடுத்ததாக ஏழாம் அறிவு இருக்கிறது.  அதன் பெயர் குறிப்பறிவு.  குறிப்பால் உணர்ந்து கொள்ளும் அறிவு.  இதை ஆங்கிலத்தில் Intuition என்பார்கள்.

 அடுத்த எட்டாம் அறிவே மெய்யறிவு ஆகும்.  இது ஞானிகளின் முத்தர்களின் அறிவாக இருக்கிறது.  இந்த மெய்யறிவுக் கல்வியைத்தான் எங்கள் பிரமஞானப் பொற்சபை குருகுலம் இப்போது மனித சமுதாயத்திற்குக் கற்றுக் கொடுக்கும் மெய்வழிப்பணியை சிறப்பாக செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்தது ஒன்பதாம் அறிவு.  அது நுண்மான் நுழைபுலன் அறிவு.  இது சித்தர்களின் அறிவாக உள்ளது. இறைவனின் திருவடியானது மனித தலையின் மையத்தில் அண்ணாக்கு மேலே சிர நடுவுள் இருப்பதாக நம் தமிழ்ச் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.  அந்த இடத்திற்குள் நுழையும் அறிவைப் பெறுதலே ‘நுண்மான் நுழைபுலன்’. இந்த அறிவு இல்லாமல் நம்மால் ஆன்மாவிற்குள்ளேயே பிரவேசிக்க முடியாது.  ஆன்மாவில் பிரவேசிக்க முடியவில்லை என்றால், அதன்பிறகு உயிரணுவிற்குள் பிரவேசிக்க முடியாது.  உயிரணுவை சென்றடையாவிட்டால், நம்மால் இறைவனின் பேருயிருக்குள் புகவே முடியாது. இந்த நுண்மான் நுழைபுல அறிவைப் பெற்ற பின்தான், உள்ளே இருக்கும் மலர்ச் சுடரான இறைவனின் திருவடிகளைக் காண முடியும்.  அதற்காகத்தான் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் சுடராழித் தவத்தை கட்டமைத்தார்கள். அவ்வாறு கட்டமைத்தபின், அதற்கென்று பல ஒழுக்க நெறிகளையும் பின்பற்றப்படும் செயல்முறை தந்திரங்களையும் மறைமுகமாக இரகசியமாக உருவாக்கி, நல்ல பக்குவத்தில் திளைத்திருக்கும் மனித ஆன்மாக்களுக்கு உபதேசம் எனும் தீக்ஷைகளை வழங்கி, ஒவ்வொரு மனிதமும் பிரமஞானத்தை அடைந்து இறைவனோடு ஒளியாகக் கலந்திட வேண்டுமென்று தவமுறைகளை Software ஆக Program செய்து அதில் Coding என்ற சீடனின் தலையெழுத்தை மாற்றி அமைத்தார்கள்.  விதி ஒரு Coding எழுதியிருந்தாலும், குருவானவர் அந்த Coding ற்குள் உள்ளே நுழைத்து புதியதொரு Codingஐ எழுதி சீடனின் தலையெழுத்தை மாற்றி எழுதிவிடுவார்.  அவர்தான் உண்மையான சற்குரு.  மற்றவர்களெல்லாம் அசற்குருவே ஆவார்கள்.

இறைவனின் திருவடிகளைக் காணாதவர் எல்லாம் மரணத்தைத் தழுவிவிடுவார்கள்.  இந்த சுடராழித் தவமுறையே பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் ஆணிவேராகும். சுடராழித் தவம் செய்வோர் குருமார்களின் அருளாசியினால் விரைவில் இந்த ஒன்பதாம் அறிவான சித்தர்களின் அறிவான நுண்மான் நுழைபுலத்தின் அறிவினைப் பெறுவார்கள்.  அவர்கள்தான் சிரசிற்குள்ளே விளங்கும் பரவிந்துவையும் பரநாதத்தையும் உயிரின் மௌனப் புள்ளியில் ஒன்றிணைத்து ஜீவமுத்தீ நிலையை அடைவார்கள்.

மனிதன் மெய்யறிவினைப் பெறாமல் இந்த ஒன்பதாம் அறிவைப் பெற்றுவிட முடியாது.  சுடராழி தவத்தின் வாயிலாக எம் குருகுல மாணவர்களுக்கு பதினைந்தாம் நிலையில் சுடராழியில் இந்த அறிவைப் பெற்றுவிடும் சூக்குமம் ஞான உணர்வாகக் கொடுத்து பிரம நாடியின் வாயிலாக நுண்மான் நுழைபுலத்தில் சென்று உணர்ந்திடும் ஒன்பதாம் அறிவு தவமாகவும் விழிப்புணர்வாகவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.  எனவே, இந்த ஒன்பதாம் அறிவான சித்தர்களின் அறிவினை அடைந்தால்தான், மனிதன் மரணத்திலிருந்து தப்பிக்க முடியும்.

இறுதியாக பத்தாம் அறிவான வாலறிவு.  இது கடவுளின் அறிவான ஒளியறிவு எனச் சொல்லப்படுகிறது.  இது அருளறிவு என்றும் சொல்லப்படும்.  இவ்வறிவை இறைவன் அருள் ஒன்றாலேதான் பெற முடியும்.  திருவருட் பிரகாச வள்ளலார் இதற்கு சாட்சியாக நம்மிடையே இன்றும் இருக்கிறார்கள். எம்குருநாதரும் இதற்கு ஆதாரமாக தற்போது ஒளிதேகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்த ஒளியறிவை எம் மாணவர்கள் ஆரம்ப நிலையிலிருந்தே பெற வேண்டும் என்று எண்ணியே சுடராழி தவத்தின் முதல்நிலையிலிருந்தே கற்றுக் கொடுத்து வருகிறோம்.

இந்த பத்தாம் அறிவான அருளறிவு ஒளிமயமானது.  இந்த ஒளி ஒரு விதையைப் போன்று இருக்கும்.  இதுவே உயிர் எனப்படும்.  இவ்விதை மனித மூளையின் மையப் புள்ளியில் அமைந்துள்ளது.  இது மிக மிகப் பாதுகாப்பாக வேறொரு பரிணாமத்தில் இறைவனால் வைக்கப் பட்டுள்ளது.  இந்த விதையை தொட்டு ஊக்கப்படுத்திவிட்டால் இந்த விதை வெடித்து ஒரு மரமாக தன்னை வெளிப்படுத்திப் புதுப்பித்துக் கொண்டு வளர ஆரம்பிக்கும்.

இந்த அற்புத ஞானத்தை நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள்தான் இவ்வுலகுக்கு வெளிக்கொண்டு வந்து கொடுத்தார்கள்.  நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த அழகிய ஞான வாழ்வியல் முறையைத் தான் ஔவை ஞானக்குறளில் ஆணித்தரமாகச் சொல்லிச் சென்றுள்ளார்.

எப்படி வழங்குவார் என்றார், குருவின் உயிரிலிருந்து ஒரு துளி ஞானத்தை, தீக்ஷை பெறுகின்ற மாணவ, மாணவியின் உயிர்க்கூட்டில் ஒரு விதையாக விதைத்துவிடுவார்.  உங்கள் உயிரில் விதைக்கப்படும் விதைதான் நாளைக்கு முளைத்து, சிறு செடியாக, பின் சிறிது சிறிதாக வளர்ந்து, மரமாகி, அரும்புவிட்டு மொட்டாய், முகையாய், மலராய், அலராய் மணம் வீச முடியும்.  விதைக்காத எதுவுமே வளர்வதுமில்லை ; பயன்தருவதும் இல்லை.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மலர்ந்து மணம் வீச வேண்டுமென்றால், அதற்கு முதலில் எந்த உபாயத்திலாவது தந்திரத்திலாவது உங்கள் ஆன்மாவைக் கண்டு, அதைத் துளைத்து உள்ளே இருக்கும் உங்கள் உயிரணுவைக் காண வேண்டும்.  உங்கள் உயிரணு எப்படி இருக்கும் தெரியுமா அன்பர்களே.  இச் சொல்லாடலை எம் சற்குரு சொல்லும்போது அவ்வளவு உற்சாகமும் புத்துணர்வும் ஒரு ஞானக் கம்பீரமும் அவர் திருவடிகளில் மிளிர்வதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

உங்கள் உயிரணு உங்கள் ஆன்மக் கூட்டிற்குள் கோடி சூரியப் பிரகாசம் கொண்ட ஒற்றை ஒளியணு ஆக இருக்கிறது.

இந்த வாக்கியத்தை நன்றாக ஆழமாக, உங்கள் உயிரில் உள்வாங்கி, மூளையின் அனைத்து செல்களிலும் ஆழ்ந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

அந்த உயிரின் ஒற்றையணுவையும் தாண்டி, அப்பாலுக்கு அப்பாலாய் இறைவனின் உயிரணுவானது ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படி கோடி சூரியப் பிரகாசமாய் இருக்கும் உங்களிடத்தில் இறைவன் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமாய் இருக்கின்றானே, அப்படிப்பட்ட தேகத்தைக் கொண்ட நீங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி நடத்திக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் செல்ல வேண்டும்? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

யாரொருவர் தவறான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், இக்கணமே அதையெல்லாம் விட்டுவிட்டு ஒளி பொருந்திய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுங்கள்.  ஏனென்றால், உங்கள் தேகம் கிடையாது. நீங்கள் உயிராவீர்கள், அதன் ஒளியாவீர்கள்.  இதை என்றைக்கு உங்கள் வாழ்நாள் முழுக்க மறந்து விடாதீர்கள்.

உயிரையும் இறைவனையும் பற்றி பேசச் சொன்னால், யாம் எம் சற்குருவின் கருணையினாலும் ஆசிர்வாதத்தாலும் ஆண்டாண்டாக பேசிக் கொண்டே இருப்போம்.  அத்தனையும் எம்முடைய தவத்தின் அனுபவங்களைத்தான் பேசுவோம். அல்லாது அனுபவப்படாததை எப்போதும் யாம் பேசுவதில்லை.

நல்லது, அடுத்த அகவல் வரிக்குள் செல்லலாமா அன்பர்களே.

கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி (67).

கணு என்பது இரண்டு பகுதிகளை இணைக்கும் இடமாகும், பகுதியாகும்.  அந்த இடம் நன்றாக முற்றி அதாவது பக்குவப்பட்டு, நன்கு விளைந்த இடமாகும்.  நன்கு முற்றி பக்குவப்பட்ட ஆன்மாக்களை நாம் ஞானான்மா என்போம்.  பக்குவப்பட்டிருந்தால் மட்டுமே ஞானம் சித்திக்கும். இங்கே ஔவைத்தாய் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.  இரண்டு பகுதிகளை இணைக்கும் இடமாக நன்கு பக்குவப்பட்டு முற்றியிருப்பதைத்தான் கணு முற்றி என்பதாகும்.

ஒரு சாதகன் பிரமஞானத் தவத்தில் பல ஆண்டுகள் செய்து செய்து பல்வேறு ஞான அனுபவங்களை சுவீகரித்து பிரமஞானத்தில் பக்குவப்பட்டு இருப்பானோ, அப்போது அவன் கணுவாகிய ஞானம் முதிர்ந்து முழுமையில் இருக்கச் செய்வான்.  அதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், குருவானவர் அவனின் தவ ஆற்றலில் இருக்கும் பிரமஞானத்தின் பக்குவத்தை அவனின் உயிரில் நுழைந்து காண்பார்.  சாதகனின் உயிரானது அவனின் ஞானப் பக்குவத்தைத் தெளிவாகக் காட்டிக் கொண்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும்.  அதைச் சரியாக கணித்துவிடும் குரு, அதற்கடுத்தபடியாக அவனின் திருவடிகளுக்கு அடுத்த படிக்கான ஞானத் தந்திரத்தை வழங்கி, அவனை தொடர்ந்து பிரமஞானத்தில் பக்குவப்படுத்திக் கொண்டே வருவார்.  பிரமஞானத்தில் ஒரு சாதகன் நன்கு தேர்ச்சி அடைந்து விட்டானென்றால், அவனின் திருவடிகளில் இருக்கும் கரும்பூவாகிய மெய்ப்பொருள் அதை நன்றாக செழுமையாக முழுமையாக திறம் பெற்றிருக்கும்.  இதை குரு கண்டுபிடித்து அவனுக்கு பிரமஞானத்தை வரமாக வழங்குவார்.  கரும்பூ என்ற சொல்தான், காலப்போக்கில் கரும்பு என்று மருவிப் போயிற்று.  கணு முற்றிப் போயிருப்பதை, நாம் சாப்பிடும் கறும்பின் வெளிப்புறத்திலேயே பார்த்துத் தெரிந்து கொண்டுவிடலாம்.  ஆனால், ஔவைத்தாய் இங்கே கரும்பின் உள்ளே காட்டி என்றுதான் சொல்வதால், அச்சொல்லாடல் கரும்பூவாகிய மெய்ப்பொருளைத்தான் குறிக்கிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்லிவிட்டது.  நமது மெய்ப்பொருளாகிய கரும்பூதான் நாம் பிரமஞானத்தில் பக்குவத்தை அடைந்திருக்கிறோமா? இல்லையா? என்பதைக் காட்டிக் கொண்டிருக்கும்.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ; முகத்தின் அழகு கண்களில் வெளிப்படும் என்பார்கள் பிரமஞானிகள்.  இதைத்தான் ஔவைத்தாய், “கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி” என்றார்கள்.

நல்லது, அடுத்த அகவல் வரிக்குள் செல்லலாம்.

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி  (68)

வேடமும் நீறும் என்பது தான் எந்த சமயத்தில், மதத்தில் இருக்கிறோமோ அதை வெளிப்படுத்துவதற்காக நாம் அணியக்கூடிய ஆடைகளையும் திருநீறையும் குறிக்கும் வார்த்தைகளாகும்.

உணர்வுஒன்று இலாமூடன் உண்மை ஓராதான்

கணுஇன்றி வேதஆகம நெறி காணான்

பணிவுஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்

அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே.     (திருமந்.2044)

அறிவு இருந்தாலுங்கூட, உணர்வும் ஈடுபாடும் இல்லாதவன், உண்மையை அதன் அகல நீளங்களுடன் அறிந்திராதவன், மூல நூல்களைத் திரும்பத் திரும்ப ஓதித் தலைகீழ் மனப்பாடமாக அறிந்திருந்தாலும், அவை சொல்கிற நெறி என்ன, அவற்றின் மையப் பொருள் என்ன என்பதை ஊடுருவிக் காணத் தெரியாதவன், பணிவு இல்லாதவன், தன் நெறியே பெரிது என்று பேசிப் பிற நெறிகளை ஏசுகிறவன், ஆணவத்தைக் குணமாகக் கொண்டிருப்பவன், இவர்கள்தான் பொய் வேடமிட்ட, பொய்த் திருநீறு பூசிக் கொள்ளும் பொய்மைக் குருவாகிய அசற்குரு என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர்.

சரி, அப்படியென்றால் உண்மைக் குருவாகிய சற்குரு யார்?

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்

நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்,

ஆசற்ற சற்குரு ஆவோன்; அறிவுஅற்றுப்

பூசற்கு இரங்குவோன் போதக் குருஅன்றே       (திருமந்.2052)

அறிவைப் பெற வேண்டும் என்கிற விருப்பத்தோடு தன்னை நாடி வருகிற எளியவர்கள் உலகியல் வாழ்வின்மீது கொண்டிருக்கிற பெரும்பற்றை நீக்குகிறவன்; இறைவனை மட்டுமே ஆராய்ந்துகொண்டிருக்காமல் தன்னையும் ஆராய்ந்துகொண்டிருப்பவன்; அந்த ஆராய்ச்சி முறைமையைத் தன்னை நாடி வருகிறவர்களுக்கும் மிக்க அன்போடு கற்றுத் தருகிறவன்; அவர்களின் அழுக்குகளை இனி மீண்டும் சேர்ந்துவிடாதவாறு முற்றிலுமாக அகற்றுகிறவன்; ஆசு அற்றவன், அதாவது, எதன்மீதும் ஆசை அற்றவன் எவனோ அவனே சற்குரு.

வெளிவேடங் காட்டி, வாய்ப் பேச்சால், வலுத்த குரலால், வாதம்-எதிர்வாதத்தால் தன்னுடைய தரப்பை நிறுவிவிட முடியும் என்று கருதுகிறவன் எவனும் அறிவுள்ள குருவாக இருக்க முடியாது என்று உண்மையான சற்குருவையும் பொய்ம்மையான போலிக் குருவையும் அடையாளம் காட்டுகிறார் திருமூலர். இருக்கட்டும்.

ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி

ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை

ஞானிகளாலே நரபதி சோதித்து

ஞானம் உண்டாக்குதல் நலம்ஆகும் நாட்டிற்கே   (திருமந்.242)

மெய்யறிவே இல்லாத ஏமாற்றுக்காரர்கள், சடையும் தாடியும் அணியும் ஆடையுமாக வேடமிட்டு, ஞானிகள்போல நடிக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே ஞானிகள்தாமா என்று உண்மையான ஞானிகளைவிட்டு அரசாங்கம் பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு சோதித்து, ஒன்று அந்தப் பொய் ஞானிகளுக்கு உண்மை ஞானத்தை உண்டாக்க வேண்டும்; அல்லது அந்தப் பொய் ஞானிகளை நம்புகிற ஏமாளிகளுக்குப் போலிக் குருவின் பொய் வேடம் பற்றிய ஞானத்தை உண்டாக்க வேண்டும். இதைச் செய்தால் நாட்டுக்கு நல்லது என்கிறார் திருமூலர்.

பொய் வேடத்தையும் உண்மையான ஞான வேடத்தையும் பற்றிய சில திருமந்திரப் பாடல்களை நீங்கள் கேட்டீர்களென்றால், உங்களுக்கு உண்மை வேடம் எது என்பது புரிந்து விடும்.

ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் வையகம் பஞ்சமாம்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே                         (திருமந்திரம் – 1656)

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்து
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே                           (திருமந்திரம் – 1659)

பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே           (திருமந்திரம் – 1660)

தவம் மிக்கவரே தலையான வேடர்
அவம் மிக்கவரே அதி கொலை வேடர்
அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம்
தவம் மிக்கவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே              (திருமந்திரம் – 1661)

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே                             (திருமந்திரம் – 1677)

கங்காளன் பூசும் கவச திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே                       (திருமந்திரம் – 1666)

மந்திரமாவது நீறு, வானவர் மேவது நீறு,
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு,
தந்திரமாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு,
வேத்தில் உள்ளது நீறு, வெந்துயர் நீக்குவது நீறு

போகம் தருவது நீறு, புண்ணியமாவது நீறு
ஒத தகுவது நீறு. உண்மை உள்ளது நீறு,
முக்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு,
சத்தியமாவது நீறு, கற்றோர் புகழ்வது நீறு

பக்தி தருவது நீறு, பரவ இனியது நீறு.
காண இனியது நீறு, கவினை தருவது நீறு,
பேணி அணிவருக்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு,
புண்ணியமாவது நீறு, மதியை தருவது நீறு

இவ்வாறு திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை சிறப்பித்துள்ளார்.

இந்த திருநீற்றை நாம் ஏன் நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டுமென்று இந்த விநாயகர் அகவலுக்கு விளக்கம் காணும் முதல்நாளில் கேட்டேன். அனைவரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.

நீறு என்பது பசுஞ்சாணத்தை விராட்டியாக காய வைத்து, அதை காய்ந்த பசு விராட்டியை நெருப்பில் இட்டு எரித்தால், அது சாம்பலாகும். அதைத்தான் நாம் திருநீறு என்று கூறி நெற்றியில் அணிந்து கொள்ளலாம். திருநீறு சொல்லும் ஞானம் என்ன தெரியுமா அன்பர்களே.  அந்த திருநீற்றை மூன்று விரல்களால் பூசிக்கொள்கிறோம் அல்லவா.  பசுவின் மலம்தான் சாணம்.  அதைப் போல மனிதனின் அஞ்ஞான மலம்தான் மும்மலங்கள். அது ஆணவம், மாயை, கன்மம் என்பவைகளாகும்.  இந்த மும்மலங்களை நாம் எப்போது தவத்தால் எரித்து ஒழித்து சாம்பலாக்கிறோமோ அப்போதுதான் நமக்கு ஞானம் வரும்.  அந்த ஞானம் நம் உயிர் இருக்கும் சிரசில்தான் நிகழும்.  நெற்றிக்கண்ணாகிய மூன்றாவது திருவடி எப்போது தோன்றுமோ, அந்த திருவடியில் இருக்கும் அக்கினிக் கலைகளைக் கொண்டு மும்மலங்களை எரித்து ஒழிக்க வேண்டும்.  அவ்வாறு எரித்தபின், மும்மலங்கள் சாம்பலாகிப் போனதை குறி காட்டும் விதமாகத்தான், பசுஞ்சாணத்தின் சாம்பலை, திருநீறாக நாம் நெற்றியில் மூன்று விரல்களால் பூசிக் கொள்கிறோம்.

இப்படியாக பிரமஞானத்தையே வேடமாகக் கொண்டும், மும்மலங்களை சாம்பலாக்கிய பின் அதை திருநீறாகப் பூசிக் கொண்டு, நித்தமும் பிரமஞானத் தவத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய பிரமஞானத்தின் மெய்யானத் தொண்டர்களின் கூட்டத்தோடு என்னை எப்படியாவது சேர்ப்பித்துவிட வேண்டும் விநாயகப் பெருமானே என்று ஔவைத்தாய் இவ்வரிகளில் கேள்வியாக முன்வைக்கிறார் என்பதைத்தான், “வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி” என்றார்.

அடுத்த அகவல் வரிகள் :     அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

                                                                நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்து   (70)

அஞ்சக் கரம், அரும்பொருள் இது என்னவென்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அஞ்சக் கரம் = அஞ்சேல் என்று சொல்லும் கரம் (கை), நானிருக்கிறேன் நீ எதற்கும் பயப்படாதே என்று சொல்வதை அஞ்சக் கரம் எனலாம். அஞ்சு என்றால் ஐந்து.

தெய்வங்கள் சிலைகளிலும் ஓவியங்களிலும் வலது கையை தூக்கி வைத்துக் கொண்டு அஞ்சேல் என்று சொல்வதைப் போல வடித்தும் தீட்டியும் வைத்திருக்கிறார்கள்.  வலது கை என்பது வலது திருவடியாகும். ஐந்து விரல்கள் என்பது பஞ்சபூதங்களின் ஆற்றல்கள், பஞ்ச கிரியாக்கள் இவைகளைக் குறிக்கும்.  வலது கையில் இருக்கும் ஐந்து விரல்களைப் போல, பிரமஞானத் தவத்தில் ஐந்துவகை தவநிலைகள் உள்ளதையும், அத்தவத்தை வலது திருவடியைக் கொண்டு செய்திட்டால், நீங்கள் எமனுக்கே அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்பதைத்தான் தெய்வங்கள் காட்டிக் கொண்டிருக்கும் அஞ்சக் கரத்தின் ஞானப் பொருளும், அருமையான பொருளுமாகும். பிரமஞானத்தின் ஐந்துவகையான தவமுறைகளை மெய்ப்பொருள் கொண்டு செய்யப்படுவதால், அதை அரும்பொருள் என்னும்விதமாக, “அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை” என்றார் ஔவைத்தாய்.

அப்படி வலது திருவடியின் மெய்ப்பொருளைக் கொண்டு செய்யப்படும் தவத்தால், சாதகன் அவனது நெஞ்சாகிய திருவடியின் ஞானப் பக்குவம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொண்டுவிடலாம் என்பதைத்தான், “நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்து” என்றார் ஔவைத்தாய்.

அடுத்த இறுதிப்படியான அகவல் வரிகள் :

தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே  (72)

இதுகாறும் சொல்லப்பட்டு வந்த அத்தனை ஞானத் தத்துவங்களை எல்லாம் விநாயகப் பெருமான் நீ எனக்குத் தந்தருள வேண்டும்.  தருவதோடு மட்டும் நீ நின்றுவிடக் கூடாது.  ஞானத் தத்துவங்களை தந்து, அதன்பின் நீ என்னை ஆட்கொண்டு அருள் செய்திடல் வேண்டும். இதைத்தான், “தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட” என்றார்.

ஞானத் தத்துவங்களை ஒருவர் அடைய வேண்டுமென்றால், கண்டிப்பாக அவர் திருவடிகளைத்தான் இறுகப் பற்றிக் கொண்டுவிட வேண்டும்.  அதை யாம் சொல்லவில்லை.  நம் திருமூலச் சித்தரே சொல்கிறார். அதை சிறிது செவிமடுப்போமாக.

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்

திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்

திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே          (தி.ம.1598)

சாதகனை சிவமாக ஆக்குவிப்பதும் சிவலோகம் கொண்டு சேர்த்து விடுவதும் மும்மலங்களின் சிறையிலிருந்து சாதகனை மீட்டெடுப்பதும் திண்மையான (உறுதியான) சித்தி நிலையும் முத்தி நிலையும் கிட்டுவதும் திருவடிகளில் செய்யப்படும் பிரமஞானத் தவத்தால் மட்டுமே என்பதுதான் திருமூலம் சொல்லும் பிரமஞானத் தத்துவம். அப்படிப்பட்ட பிரமஞானத்தை ஒருவர் அடைந்து விட்டால்  என்னென்ன நடக்கும் தெரியுமா? அதற்கான ஆதாரமான திருமந்திரப் பாடல்.

                ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று

ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா

ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே               (தி.ம.1467)

ஞான நெறியைவிட மேலானது இவ்வுலகில் வேறொன்றும் இல்லை ; ஞானத்தைவிட பெரிதாக சொல்லக்கூடிய சமயம், மதம், மார்க்கம் ஒன்றுமில்லை ; ஞானத்தை சொல்லவே சமயம், மதம், மார்க்கம் எல்லாம்.  ஞானம் பெற்றாலே முத்தி கிட்டும் ; மோட்சம் கிட்டும்.  ஞானம் பெற்றோரே மனிதரில் பெரியோர் ! மகாத்மா ! ஞானி ! பிரமஞானி ஆவார்.

 விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி

விளக்கினுக்கு உள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு

விளக்குடையான் கழல் மேவலும் ஆமே    (தி.ம.2816)

சாதகர் செய்யும் பிரமஞானத் தவத்தில் உடம்பாகிய விளக்கினைப் பிளந்து, அங்கே உள்ள உயிராகிய (மூலக்கனல்-சிவஒளி) விளக்கினை ஏற்றி, உயிர் அடங்கியுள்ள இறையின் திருவடிக்குள்ளே தென்படும் அறிவாகிய விளக்கினைத் (ஞான ஒளி) தூண்டினால், ஆன்மாவிய இறை அணு தோன்றி சாதகரை சிவத்தின் திருவடிக்கு அழைத்துச் செல்லும்.

அடுத்தபடியாக, ஔவைத்தாய் விநாயகப் பெருமானிடம், “எனவே விநாயகப் பெருமானே, எனக்கு இவ்வாறெல்லாம் அற்புதமான ஞானத் தத்துவங்களை வழங்கி, என்னை ஆட்கொண்டு அருள் செய்கின்றாய்.  என் உயிரையும் காட்டிக் கொடுத்தாய் ; அதற்குள்ளே 1000 கோடி சூரியப் பிரகாசமாக இருக்கும் இறைவனையும் காட்டிக் கொடுத்தாய்.  என்னை எனக்கு உள்ளது உள்ளபடி அறிவித்து அருள் செய்தாய்.  இத்தகைய உன் பொன்னான திருவடிகள் என்னை பிரமஞானம் அடைய வைப்பதற்காக ஓடோடி விரைந்து வந்து ஆட்கொண்டு அருளியதால், உன்னை நான் இப்போதே, இக்கணமே சரணாகதியாய் சரண் அடைகின்றேன்.  என்னை ஏற்றுக்கொண்டு பிரமஞானத்தை வழங்குவாயாக” என்று சொல்லி இந்த விநாயகப் பெருமான் மீதாக அகவலைப் பாடி முடிக்கின்றார்.

இங்கே சரணாகதி என்றால் என்னவென்பதை சொல்லிவிட்டு இந்த அகவலை நாம் முடித்துக் கொண்டு விடலாம்.

ஔவைத்தாய் இறுதியாகச் சொல்லிய ஒற்றை வார்த்தைதான் சரணே என்ற ‘சரணாகதி’.  இந்த சரணாகதியைப் பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருந்து வருகிறது.  சரணாகதி என்றால் பதில் ஒரே வார்த்தைதான் – அது சரணாகதி. அவ்வளவுதான்.  சரணாகதியைப் பிரித்தால் சரண் + ஆ + கதி என்றே வரும்.

சரண் என்றால் தஞ்சமடைதல், புகலிடம் தேடுதல் என்று பொருள்.

ஆ என்றால் பசு அதாவது மனித உயிர் என்றும் ஆன்மா என்றும் பொருள்படும்.

கதி என்றால் அதோகதி அல்ல ; கதி என்றால் சுவாசம், அதுவும் ஒளி சுவாசம்.

ஒளி சுவாசம் கொண்ட ஒரே உயிர் எது தெரியுமா அன்பர்களே.  அது நம் உயிருக்குள் பேருயிராக வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவன் ஒருவனே.  அந்த ஒளி சுவாசம் கொண்ட இறைவனிடம் மனித உயிர்களான நமது ஆன்மாக்கள் தஞ்சமடைய வேண்டும் ; அவன் வாழும் இடத்தை நம் ஆன்மாவின் புகலிடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்நிலைப்பாடுதான் சரண் ஆ கதி என்ற சரணாகதி ஆகும்.

 இந்த உலக மக்களுக்காக சரணாகதி என்றால் என்னவென்பதை எமது சிற்றறிவுக்கு எட்டியவரையில் சொல்கின்றோம்.   நாம் அனைவருமே அவரவர் குருவிடமோ அல்லது உயிரிடமோ அல்லது இறையிடமோ சரணாகதியை பூரணமாகக் கடைப்பிடிக்க வேண்டுமல்லவா, அதற்காகத்தான்.

இந்த சரணாகதியை நாமெல்லாருமே சரியாகவே புரிந்து கொண்டிருக்கவில்லை. இந்த சரணாகதியைப் பற்றி நாம் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விசயம் என்ன தெரியுமா? இதை உங்களால் செய்ய முடியாது என்பதுதான். இந்த  சரணாகதியை நம்மால் செய்யவே முடியாது. இதை நன்றாக நாம் புரிந்து உள்வாங்கிக் கொண்டுவிட வேண்டும். ஒருவேளை இந்த சரணாகதியை வேண்டுமானால் உங்களால் தடுத்துக் கொள்ள முடியும்.  ஆனால், அப்படி நடக்க வைக்க உங்களால் கண்டிப்பாக முடியாது. காரணம் சரணாகதியில் உங்களது சக்தியானது எப்போதுமே எதிர்வினையை மட்டுமே ஆற்றக் கூடியது.  உங்களால் தடுக்க மட்டுமே முடியும்.  ஆனால், உங்கள் வாழ்வில் பூரண சரணாகதியை கொண்டுவரவே முடியாது.

சரணாகதி என்பது உங்களால் செய்யப்படுகின்ற ஒரு விசயமல்ல.  அப்படி நீங்கள் அதைச் செய்வதாக இருக்குமேயானால், அதன் பெயர் சரணாகதியே கிடையாது.  காரணம் என்ன தெரியுமா? சரணாகதியைச் செய்பவன்தான் அங்கிருப்பானே.  நான் என்ற உணர்வு இருந்து கொண்டுதான் சரணாகதி என்ற ஒன்றை செய்ய முற்படுமே தவிர, நான் அற்ற நிலையில் அல்லவே.  அதனால் “நான் இல்லை” என்ற ஒரு மாபெரும் புரிதல், மாபெரும் விழிப்பு நிலையே சரணாகதி ஆகும்.  அதாவது நான் என்னும் உணர்வு இல்லாத விழிகளின் உள்நோக்கிய அகப்பார்வை ஒன்றுதான் சரணாகதியாக இருக்கும்.  சரணாகதி என்பது ஒரு செயல்பாடோ, செயலோ அல்ல. அது ஒரு நானற்ற – மனமற்ற – இயக்கமற்ற ஒரு விழிப்புணர்வின் துள்ளலாகும்.  விழிப்புணர்வு என்றால் என்ன தெரியுமா? விழிகளின் புணர்வுநிலையே விழிப்புணர்வாகும். இரு விழிகளும் புணர்ச்சி நிலையில் இருந்தாக வேண்டும். அப்போதே சரணாகதி பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும். இவையெல்லாம் அகத்திலும் அகப்புறத்திலும் நடந்தாக வேண்டும்.

முதலில் நாம் இந்த ‘நான்’ என்ற உணர்வுகளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘நான்’ என்ற உணர்வு உண்மையில் அது இல்லாத ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். எந்தவொரு மனிதனுமே பிரிந்து இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  நானோ, நீங்களோ, ஞானிகளோ, சித்தர்களோ, முனிவர்களோ, ரிஷிகளோ, புத்தரோ, இயேசுவோ யாருமே பிரிந்திருக்கவில்லை.  நாம் அனைவரும் இந்த இயற்கையோடுதான் ஒன்றாக இருக்கின்றோம். இதை மறந்து விட்டால், நான் தனித்தே இருக்கின்றோம் என்ற உணர்வோடுதான் சரணாகதியை அணுகுவோம்.

‘நான்’ வந்தபின் அங்கே சரணாகதி இருப்பதில்லை. இந்த ‘நான்’ என்ற தன்னுணர்வை – தன் முனைப்பை நம் முதுகில் நம் மூளையில் சுமந்து கொண்டேதான் திரிகிறோம் என்ற அர்த்தம். அத முதல்ல நீங்க தெரிஞ்சிக்கணும். யாம் இதை நன்றாக அறிஞ்சிக்கின்றோம்.  நீங்க….. எப்படி? நீங்க அதை அறிந்திருக்கல என்பதுதான் உங்களது பிரச்சினையே.  வேறுபாடு என்பது அதை அறிந்து கொள்றதுலதான் இருக்கு.  எப்பவுமே இருப்பு நிலையில மாறுபாடு இருப்பதில்லை.  நாம நான் அறிஞ்சிருக்கிறேன் என்ற முட்டாள் தனத்தை இன்னும் வைத்துக் கொண்டிருப்பதாலதான் நாம இன்னமும் இயற்கையிலிருந்து பிரிஞ்சே இருக்கிறோம்.

“நான் சரணடைவேன், இப்போது நான் சரணாகதி அடையப் போகிறேன்” என்று நாம நினைச்சுக் கொண்டிருந்தா, அங்கே சரணாகதி இருக்காது ; நான் என்ற தன் முனைப்புதான் இருக்கும்.  தன்முனைப்பு சரணாகதி ஆகுமா?  ஆகவே ஆகாது.

நான் தனியாகத்தான் பிரிந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஒருநாள் அல்ல ஒருநாள் தான் அவ்வாறு பிரிந்திருக்கவில்லை என்ற உண்மையை நேருக்கு நேர் சந்திப்பீங்க.  அப்போது தன் முனைப்பின் மூக்கு உடைக்கப்படும், சரணாகதியால். அப்படீன்னா, எப்படித்தான் சரணாகதி அடைவது என்ற கேள்வி இப்போது உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் படபடவென்று ஓடிக் கொண்டிருக்கும்.

சரணாகதி அடையும்போது அங்கே, அவ்விடத்துல யாருமே இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை, சத்தியம். ஒருவர் சரணடைகிறார் என்றால், அங்கே அவர் இருக்க மாட்டார் என்றே பொருள்.  அவர் இருக்கும்வரை சரணாகதி நடைபெறப் போவதில்லை.  அவர் என்ற உணர்வு காலியாகி, வெற்றுக் கோப்பையாகும்போது சரணாகதி தானே வந்து குடிபுகும்.

சரணாகதி என்பது இங்கு இல்லை என்பது மட்டுமல்ல, அது எங்குமே இருப்பதில்லை ; காணப்படுவதுமில்லை.  நீ உனக்குள்ளே போய்ப் பார்க்கும்போது அங்கே சரணாகதி என்ற ஒன்றை உன்னால் காணவே முடியாது. இதுதான் வியப்பின் உச்சமே.  அந்தத் தருணத்துலதான் சரணாகதி அங்கே குடிபுகும்.  சரணாகதி என்பதை நீ எப்போது கண்டுகொள்ளாமல் போகிறாயோ, அந்த நொடிப்பொழுதில் உனக்குள் சரணாகதி மலராகப் பூத்து மணம்வீச ஆரம்பிக்கும்.

அதனால்தான் யாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, சரணாகதியை நம்மால் ஒருபோதும் செய்ய முடியாது என்று. நீ அதைச் செய்தால் அது பொய்யான விசயமாகத்தான் இருக்கும்.  பொய்யிலிருந்தே அனைத்துப் பொய்களும், அதனைச் சார்ந்த புரளிகளும் பூகம்பங்களும் எழும்.  அப்போது நீயே பொய்யாகிப் போய்விடுவாய்.  பொய்யில் மெய் பூப்பதில்லை.  சரணாகதியை செய்ய வேண்டுமென்று பிரயத்தனப் பட்டுக் கொண்டே நீங்கள் இருந்தீர்களென்றால், பொய் மேல் பொய்தான் உங்களுக்குள் கட்டமைத்துக் கொண்டே வரும்.  இது கர்மவுடல் என்பதை மறவாதீர்கள்.  ஏற்கனவே நாம் செய்த பலகோடி கர்மங்களால் இத்தனை துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். கர்மவுடலை வெல்ல வேண்டுமென்றால், அங்கே அணுயளவுகூட பொய் இருக்கக் கூடாது.  நாம இங்கேதான் முழுமையாகப் போயிடுவோம், இல்லையா அன்பர்களே, மாணவர்களே. கர்மவுடலையே வெல்ல முடியாதபோது, இன்னும் நம் தேகத்தில் மீதமிருக்கும் 11 தேகத் தத்துவங்களை எப்படி வெல்லப் போகிறோம்? கண்ணும் தலையும் சுற்றுகிறதா உங்களுக்கு. பின்ன செஞ்சிருக்கும் கர்மங்கள் கொஞ்சமா, நஞ்சமா. அத்தனையையும் எரித்து கொளுத்தியாகவேண்டுமே.  பற்ற வைக்க யாம் தயார் ; உங்களை நீங்க எரித்துக் கொள்ளத் தயாரா?  பதில் வேண்டும்.

இந்த நொடிப்பொழுதில் நீங்கள் உங்களுக்குள் இல்லாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

‘நான்’ என்ற தன்முனைப்பு எங்கில்லையோ, அங்கே கடந்த காலமும் இல்லை ; எதிர்காலமும் இல்லை. நிகழ்காலம் மட்டுமே மலர்ந்திருக்கும்.

அதனால் இந்த நொடிப்பொழுது மட்டுமே எப்போதும் இருந்து கொண்டிருக் கட்டும். அப்போதுதான் நீ அங்கு இல்லாமல் இருப்பாய். மேலும் நீ இல்லாமல் இருந்து கொண்டே இரு. அப்போது திடுமென ஒரு பூரண அமைதி உனக்குள் பாய ஆரம்பிக்கும்.  இது நிகழ்ந்தபின், உனக்கு உள்ளேயும் வெளியேயும் ஆழ்ந்த அமைதி மட்டுமே இருந்து கொண்டிருக்கும்.  அதன்பின் நீ சரணாகதி என்ற ஒரு விசயத்தைப் பற்றி எண்ணவே தேவையில்லை.  அப்போது சரணாகதியை நீ அடையவே தேவையிருக்காது.  அந்நிலைப்பாடுதான் உன்னில் உருவாகும் ‘நான்’ உணர்வு உனக்குள் இல்லாமல் போய் விட்டிருப்பதைத் தெளிவாகக் காண்பாய்.  ‘நான்’ உணர்வு இல்லாமல் இருப்பதே பூரண சரணாகதி. இதுதான் மெய்யியல் கோட்பாடு சொல்லும் பூரண சத்தியம்.

அதனால் ஒருவன் சரணாகதி அடைய வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லாமல் போய்விடுகிறதல்லவா.  இறைவனிடமோ, குருவிடமோ நீ சரணாகதி அடைய வேண்டும் என்ற கேள்வியும் அங்கே இல்லாமல் போய்விடுகிறது.  “நான்” எனக்குள் இல்லை என்ற அந்தப் புரிதல்தான் உங்களின் சிறந்த அகப்பார்வையான சரணாகதி.

“நான் இல்லை”, “நான் ஒரு வெறுமை”, “நான் ஒரு வெற்றிடம்”, “நான் ஒரு வெற்றுக் கோப்பை”, “நான் ஏழு துளைகொண்ட ஒரு வெற்றுப் புல்லாங்குழல்” என்பதை எப்போது நாம் நமக்குள் கண்டுகொள்கிறோமோ, அப்போது நமக்குள் சரணாகதி வளர ஆரம்பிக்கிறது என்று பொருள்.  வெறுமை என்ற மரத்தில்தான் சரணாகதி என்ற தேன்மலர் பூக்கும்.  மரத்தை நட வேண்டியதுதான் நம் செயல். அம்மரத்தில் உண்டாகும் பூவையோ, காயையோ, கனியையோ நாம் உருவாக்குவதுமில்லை, செய்வதுமில்லை.  வெறுமை என்ற மரத்தை வைத்தால் போதும். சரணாகதி என்ற பூ, காய், கனி தானே வளர்ந்து பூத்துக் கனிந்துவிடும். அதனால்தான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறோன் – அது ஒரு இலக்கினை நோக்கியதாக இருக்கக் கூடாது என்று.  ‘நான்’ என்ற உணர்வு எப்போது இலக்கினைத்தான் கொண்டிருக்கும்.

அதனால நாம என்ன சொல்றோம்முன்னா சரணாகதியைப் பார், சரணாகதிக்குள் உன்னைப் பார், அதைப்பற்றி சதா சிந்தித்துக் கொண்டிரு என்றெல்லாம் கூற வரவில்லை.  நீங்கள் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தாய் என்றால், நீங்கள் அதைத் தவறவிட்டு விடுவீர்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்.  எண்ணுவதும், சிந்திப்பதும் எப்போதுமே கடந்த காலத்திலும், எதிர்காலத்திலுமே இருந்து கொண்டிருக்கும்.  காலம் என்பது உங்களுக்குள் நுழையும் போதெல்லாம் நீங்கள் தனியாகத்தான் பிரிந்திருப்பீர்கள். அது பொய்யான வாழ்வாகும். பொய்யான வாழ்வு என்றைக்கும் வீழ்ச்சியைத்தான் கொடுக்கும்.

அதனால் அது இங்கேயே, இந்த நொடிப் பொழுதிலேயே இருக்கட்டும்.  அப்போது திடீரென்று உண்மையான நீங்கள் அங்கே இருப்பதைக் கண்டு பிரமித்துப் போவீர்கள்.  உங்களை நீங்களே அங்கு கண்டு இன்புற்று மகிழ்ந்து போவீர்கள்.  மேலும் நீங்கள் எங்குமே போவதுமில்லை ; எங்கிருந்தும் வருவதுமில்லை.  நீங்கள் எப்போதுமே இங்குதான், இவ்விடத்தில்தான் இருக்கின்றீர்கள்.  இங்கு என்பது நிகழ்காலமே.  இங்கு என்பதில் மட்டும்தான் இடம் இருக்கிறது.  இப்போது என்கின்ற ஒன்று மட்டுமே இருக்கிறது.  அந்த இப்போது என்கின்ற பொழுதில், சரணாகதியானது இருந்து கொண்டிருக்கிறது.

சரணாகதியைப் பற்றி சற்று விரிவாகச் சொல்லியிருப்பது போதும் என்றே நினைக்கின்றேன்.  நல்லது.

எமது சற்குருவின் கருணையினாலும் ஆசிர்வாதத்தாலும் ;  விநாயகப் பெருமானின் அனுக்கிரகத்தாலும் ; ஔவைத் தாயின் பூரண ஆசிர்வாதத்தாலும் ; நம்மையெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் இறைவனின் மகா அருளாற்றாலும்தான் இந்த அற்புதமான ஞானப் பொக்கிசமான விநாயகர் அகவலுக்கு ஞான மெய்ப்பொருள் உரை விளக்கத்தினை எவ்விதத் தடைகளும் விக்கினங்களும் இல்லாது சிறப்பாக தர முடிந்தது கண்டு உண்மையிலேயே பெருமகிழ்வு கொள்கின்றோம்.  எல்லாம் குருவின் ஆசிர்வாதமே.  அவரில்லாமல் இங்கே உங்கள் முன்னே நானில்லை.  அந்த அளவுக்கு அவர் என்னை என் உயிரை கடந்த 40 ஆண்டுகளாக இன்னும் செதுக்கிக் கொண்டேதான் இருக்கிறார்.

உங்கள் அனைவரின் சார்பாக எம் சற்குருவின் பொன்னடி திருவடிகளைத் தொட்டு வணங்கி சரணாகதியில் திளைக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்தும் ஆசிர்வாதங்களும் உரித்தாகட்டும்.  இந்நாள்வரை மிகப் பொறுமையாக என்னுடைய ஞானப் பிதற்றல்களைக் கேட்டுக் கொண்ட உங்களின் பொறுமை குணங்களை கண்டு வியந்து நன்றி கூறிக் கொள்கிறேன்.

இவ்வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த சிவத்திரு பெர்ரி.முத்துராமன், கனடா அவர்களுக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகட்டும்.  அவர் நீண்ட ஆயுளைப் பெற்று மென்மேலும் எண்ணற்ற ஆன்மீகத் தொண்டுகளை செய்து வர ஒரு குருவாக இருந்து அவரை – அவரின் உயிரை வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்.

இந்த காணொளிக் காட்சிகளை அமைத்துக் கொடுத்த ஏகன் அநேகன் குழுவினர் அனைவருக்கும் எனது மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் அனைவருக்கும் இந்த வாய்ப்புகளை வழங்கிய இந்த பிரபஞ்சத்திற்கும் இவ்வகவலின் கதாநாயகனாகிய விநாயகப் பெருமானுக்கும் எம் உயிர் மலரிலிருந்து எண்ணற்ற நன்றிகளை காணிக்கையாக்கி சரண் அடைகின்றோம் என்று சொல்லி இந்த ஞானப் பேச்சுரையை இனிதே நிறைவு செய்கின்றோம்.    பிரமஞானப் பொற்சபையிலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.

நல்லது. இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும் காண வேண்டுமென்றால் கீழே கண்ட எங்களது வலைப்பூத் தளத்திலும் காணொளித் தளத்திலும் இணைந்து ஞானம் பெறுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.

www.bramagnanaporsabai.com

@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!