இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!
இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.
அடுத்த வரி “ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே (36)” என்பது.
ஓங்காரமான சுழிமுனை நாடியானது இடகலை, பிங்கலை ஆகிய நாடிகளின் மத்தியில் கீழிலிருந்து மேலாக செங்குத்துப் பாதையில் தாமரையின் நூலைப் போல உள்நுழைந்து தேகம் முழுக்க பரவி வியாபித்து நிற்கிறது. சுழிமுனை நாடி வெள்ளிக் கம்பியைப் போல் இருப்பதால், தாமரை நூல் போன்று என ஔவைத்தாய் கூறியுள்ளார்.
ஆதாரத்து உள்ளே அறிந்து சிவன்உருவைப்
பேதம்அற அர்ச்சிக்கு மாறு (74)
பொருள் : சிவத்தின் ரூபத்தை ஆதாரங்களின் உள்ளே கண்டு அறிந்து பேதமில்லாமல் (சந்தேக மில்லாமல்) அந்த சிவத்தை அர்ச்சிக்க வேண்டும்.
ஞான மெய்ப்பொருளுரை : ஆதாரம் எதுவென்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். யோக நூல்களில் சொல்லப்பட்ட ஆதாரங்கள் ஏழு. அவை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை, சகஸ்ராரம். உடம்பின் முதுகுத்தண்டில் ஆறு ஆதாரங்களும் தலையின் உச்சியில் ஏழாம் ஆதாரமும் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது யாவரும் அறிந்ததே.
மேலும், உடம்பில் கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் அமைந்துள்ளன. கர்ம இந்திரியங் களைக் கொண்டு கர்மத்தை வெல்ல முடியும். ஞான இந்திரியங்களைக் கொண்டே ஞானத்தை அடைய முடியும். கர்ம இந்திரியங் களைக் கொண்டு ஞானத்தை அடைய முடியாது என்பது ஞானிகளின் சித்தர்களின் கூற்று.
எனவே, தலைக்கு கீழே ஞானம் இல்லை. தலையே – சிரசே பிரதானம். சிரசினைக் கொண்டே ஞானத்தை அடைந்திட முடியும். ஆறு ஆதாரங்களும் சிரசில் மட்டுமே இருக்க முடியும். சிரசின் முக்கிய இந்திரியம் கண்களே ஆகும். கண்தான் அனைத்திற்கும் மூலம். கண் போனால் ஒலியும் போச்சு ; ஒளியும் போச்சு. “கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம்” என்று இதைத்தான் நம் முன்னோர்கள் மறைமுகமாக சொல்லியுள்ளார்கள்.
“மூலமதில் ஆறுதலங் கீழே தள்ளி
முதிர்ந்துநின்ற மேலாறும் எடுத்து நோக்கிக்
கோலமுடன் உன்மனையைத் தாண்டி ஏறிக்
கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா!
பாலம்என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றிப்
பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக்
காலமொடு பிறப்பிறப்புங் கடந்து போகுங்
கைவிட்ட சூத்திரம்போல் சடமும் ஓங்கே” (சட்டைமுனி – முன் ஞானம் 6வது பாடல்)
உன்னிநின்ற மூலமுதல் ஆறும் பார்த்தே
உருகிநின்ற சுழுமுனையை அறிந்த பின்பு
மன்னிநின்ற மதிமேல் சாம்பவியைக் கண்டு
மருவிநின்று மனம்உறைந்து தேர்ந்த பின்பு,
பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்;
பகல்இரவும் அற்றவிடம் ஞான மார்க்கம்;
கன்னிநின்ற விடங்கண்டால் அவனே ஞானி
காட்டுவான் கேசரியைக் காட்டு வானே. (சட்டைமுனி – முன் ஞானம் 10வது பாடல்)
இந்த கண்ணில்தான் ஆறு ஆதாரம் ஷடாட்சரம் அடங்கியுள்ளது. மேலும், பஞ்சபூதங்களும் இங்குதான் வாசம் செய்துகொண்டு, கண்களுக்கு பிரபஞ்ச சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆச்சரியமான விசயம் இது. ஆனால், சத்திய மெய்ப்பொருள் இதுவொன்றுதான்.
இந்நூலினை எவரெல்லாம் வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் சிவத்தை அடைவது திண்ணம். ஏனெனில், எவரும் வெளிப்படுத்தாத சிவத்தை உண்மை ஞானத்தை எம் உயிர்க்குருவான ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களின் அருளாசியோடும் சம்மதத்தோடும் அவரின் தாயுள்ள பரிவினாலும் இந்த உண்மை சத்தியத்தை உலக மக்களின் ஆன்ம வேட்கைக்காக வெளிப்படுத்துகின்றோம். எல்லாம் குருவின் அருள், குருவின் செயல். அவர் செயலன்றி வேறொன்றுமில்லை. யாம் அவரின் அடிமையே.
ஆறு ஆதாரங்களில் நிலை கொண்ட ஆற்றல்களை விளக்க வந்த சித்த மாமுனிவர்கள் மனிதனை அலைக்கழிக்கும் மனமானது மதம் பிடித்த யானை போல உலக ஆசைகளில் அலையாதவாறு “விவேகம்” அதை நெறிப்படுத்தும் அங்குசமாகச் செயல்பட்டு வருகிறது! என்று கூறி உள்ளனர். யானையை அடக்க அங்குசம் தேவைப்படுவது போல ஆதாரம் ஆறு ஆதாரங்களில் செயல்கள் எழுந்து தொழில் பட விவேகம் என்ற அங்குச முறையே பரமஞான குருபிரான் விளக்கி தெளிய வைக்கிறார்.
திரூமூலரின் பாடலொன்றை பார்ப்போம்.
பார்ப்பனர் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பர் இல்லாமல் வெறித்து தெரியுது
மேய்ப்பார் இருந்து வெறியும் அடங்கினால்
பார்ப்பனர் அகத்து பாற்பசு ஐந்தும் பாலாய் சொரிந்திடுமே (தி.ம.)
திருமந்திரப் பாடலில் உவமை தான் மாறுபடுகிறது. இங்கே அங்குசம் என்று ஔவையார் கூற, திருமூலரோ ‘மேய்ப்பார்’ (அடக்குபவர் என்றபொருளில்) கூறுகிறார்.
ஆறு ஆதாரங்களில் நடைபெறுகின்ற இந்த ஞான ஆற்றலின் மூலமாக மனம் ஒடுங்கி வரும்பொழுது, ஒவ்வொரு புலன்களாகச் செயல்பாடுகள் குறைந்து வரும் என்கினாறனர் யோகியர்.
கட்புலன், செவிப்புலன் ஆகிய இரண்டும் தன்னை மறந்த நிலையில் அதாவது யோக நிலையில் ஒருவன் இருக்கும்பொழுது பார்ப்பதும், கேட்பதும் குறைந்து விடுகிறது. மூக்கு சுவாச நிலைகளை இழந்து சமாதி நிலையில் நின்றதைப்போல வருகிறது. நாவோ சுவைக்க மறுக்கிறது.
தொடு உணர்வு கூட தெரியாது மறைந்து விடுகிறது.
திருமூலர் கூறுவது இதையே. அதாவது ‘பாற்பசுக்கள்’ என்று அவர் கூறுவது, நமது ஐம்புலன்களை. ஐம்புலன்களானது அதை அடக்க வழி இல்லாமல்(மேய்ப்பவர் இல்லாமல்) கண்டபடி அலைகின்றன. அந்த ஐம்புலன்களை ஒரு மனிதன் சரியாக அடக்கி ஆண்டால், ஞான நிலை கிடைத்திடும் என்பதே திருமூலரின் அந்த பாடலின் பொருள்.
இதையே ஔவையாரும் மதம் கொண்டு அலையும் யானை போன்ற ஐம்புலன்களையும் _அங்குசம் கொண்டு மதயானையை அடக்குவதைப் போல, “விவேகம்” என்ற அங்குசத்தால் அடக்கினால், ஞானமடையலாம் என்பதே ஔவையார் கூறுவதாகும்.
“ஆறா தாரத்து அங்குச நிலையும்” என்பதன் பொருள் அதுவே.
“காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணாய் என வந்து காட்டினன் நந்தியே”
என்பது திருமூலர் வாக்கு. ஆம் மோன நிலையை அனுபவித்ததும், நம் பேச்சுரை அறுபடும்! என்பது யோக நிலையை கற்ற பலரும் கூறுவது. இதையே நம் தமிழ் ஞானக் கவி ஔவையார் “பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே” என்கிறார்.
அடுத்த வரி : இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழிமுனை கபாலமும் காட்டி (38) என்பது.
குண்டொளி என்பது பிரணவத்தின் பீடமாகும். மண்டலங்கள் என்பது சூரிய மண்டலம், சந்திரமண்டலம் மற்றும் அக்கினி மண்டலம் ஆகும். அகாரம், உகாரம், மகாரம் ஆகியவை ஃ வடிவத்தில் நமது முகத்தில் அமைந்துள்ளது.
இந்த மூன்றுக்கும் மேலாக பிரணவமானது சிவக்கலையாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதனுள்ளே மத்தியப் பகுதியில் சிவம் நமக்கு உயிர்கொடுத்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். நமக்கு உயிராக இருக்கும் இச்சிவனை எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருந்தால், பிறப்பை அறுத்து விடலாம்.
இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே (தி.ம.817)
குண்டலினியைப் பூவாக உருவகப்படுத்தப் பட்டுள்ளது. விரிந்த பூ என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது என்றால் அது இரு முனைகள் கொண்டு விரிந்த பூவைப் போல் இரு வழி செல்கிறது. அதனாலேயே அது விரிந்துள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது அது சுழுமுனை நாடி வழி செலுத்தப் படும் நிலையில் உள்ளது. இதெல்லாம் நமது எண்ணங்களாலேயே உள்ளே நிகழும் நிகழ்வாகும். அந்த விரிந்த பூவாகிய குண்டலினியுடன் சேர்ந்து பிராணனும் தண்டின் உள்ளே எழும், அண்டமெல்லாம் அடங்கும். இவ்வாறு செய்ய மண்டலம் மலர்ந்தது. தான் மறைந்து இறக்கும் நிலையில்லை இது. எப்போதும் வாழும் நிலையாகும்.
ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே (தி.ம.1990)
பிங்கலையாகிய வலப்பால் உயிர்ப்பு எனப்படும் ஞாயிறும், அனலாகிய தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும், கலையெனப்படும் நடுநாடியும் ஆகிய நான்கும் கலையென்று அழைக்கப்படும். அருக்கனாகிய வலப்பால் உயிர்ப்பும், மூலத் தீயும், திங்களாகிய இடப்பால் உயிர்ப்பும் நடுநாடிக்கண் கூடிப் பொருந்த மேலோதிய நிறைநிலா ஆகுமென்றறிக. அகத்தே காணும் நிறைநிலாவென்பது திங்கள் அமிழ்தத் தீஞ்சுவை வெண்ணிலா என்க. இதற்கு இடம் நெற்றிப்புருவம் என்க.
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே (தி.ம.628)
எண்ணங்களை சிதறவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி குண்டொளி சக்தியின் மேல் பார்வை, மனம், பிராணனை வைத்து அதை சுழிமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று, இந்த உலகையெல்லாம் அழகாக செதுக்கி உருவாக்கிய பேரொளியாகிய இறைவனின் பொன் போன்ற அழகிய பாதத்தை நாடி அறிவால் இறைவனை உணர்ந்து சிவமும் தாமும் இரண்டாக (அகம் பிரம்மாஸ்மி) இல்லாமல் ஒன்றாகக் கலந்து இருத்தலே சமாதி நிலையாகும்.
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே (தி.ம.752)
வீணாத் தண்டமாகிய முதுகுத்தண்டோடு பிணைந்து சென்று பிரமரந்திரத்தை அடைந்த ஞானயோகிக்கு சோம, சூரியாக்கினியாகிய மண்டலங்கள் மூன்றும் ஒத்து உடற்கண் மகிழும்படி யாய்ப் பொருந்தி இருக்கும். இவ்வுண்மையைக் கண்டவர்களே மெய்ப்பொருள் கண்ட மெய்ஞ் ஞானிகள். என்னுடைய குருநாதர் என்னுடைய 21வது வயதில் சதுரகிரியில் மலையில் இதைப்பற்றிய சத்சங்கத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, இதைப் பற்றிய தேடுதலையும் புரிதலையும் கேள்வியையும் எழுப்பினேன்.
“குருவே, மும்மலங்கள் நமது திருவடிகளில்தான் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன என்றும் அவைகளை எரித்தொழிக்க பிரமஞானத் தவத்தையும் போதித்து அருளினீர்கள். ஆனால், இப்போது நமது முதுகுத்தண்டுகளில் உள்ள எலும்புக் கட்டங்களில் எவ்வாறு இந்த மும்மலங்கள் இருக்கக்கூடும்? அதை எப்படி அறிந்து கொள்வது?” என்று கேட்டேன்.
அதற்கு எம் சற்குரு, “மகனே, சிவநேசா. இப்படித்தான்” என்று சொல்லி, என் முதுகுப் பக்கம் நின்று கொண்டு, என் முதுகுத் தண்டில் கீழிலிருந்து மேலாக சில முதுகெலும்புகளில் அவரின் விரல்களால் ஒரு பூங்காற்றைப் போல, ஒளி தேகத்தில் படுவதைப் போல தட்ட ஆரம்பித்தார். 30 விநாடிகள் கடந்திருக்கும். என் முதுகெலும்புகளிலிருந்து சிறிய அளவிலான மெல்லிய நாதங்கள் கேட்க ஆரம்பித்தது. அந்த நாதங்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் எனக்குக் கேட்க ஆரம்பித்தன.
எனக்கோ என் காதுகளை நம்பவே முடியவில்லை. அதெப்படி வாயில்தானே சப்தத்தைக் கொடுக்க முடியும். பேசவும் பாடவும் ஒலி எழுப்பவும் இறைவன் நமக்கு காதுகளைத் தானே கொடுத்திருக்கின்றான். அப்படியிருக்க இது எப்படி முதுகெலும்புகள் நாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறதே? இது எப்படி சாத்தியம்? இப்படிப்பட்ட ஞானத்தையே தன் உடலாக, மூச்சாக, ஒளியாக வைத்திருக்கும் எம் சற்குருவிடம் என்னவென்று கேட்பது? இருந்தும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கேட்க முற்பட்டேன். அருகிலுள்ள என்னுடைய சக சகோதரியான ஞானாம்பாளும் இருந்தாள். அவள் என்னை கேட்க வேண்டாம். உள்வாங்கு, உள்வாங்குடா சிவா என்று மௌனமாக சொல்லிக் கொண்டே இருந்தாள்.
ஞானாம்பாளின் மௌன மொழியைப் புரிந்து கொண்ட குருவோ, “என்ன ஞானா, உனக்கென்ன இதில் சந்தேகம்? ஏதாவது கேட்க வேண்டுமென்றால் நீ கேளு. அவனை ஏன் தூண்டிக் கொண்டிருக்கிறாய்?” என்றார்.
ஞானாம்பாள் பதில் சொல்வதற்குள் நான் முந்திக் கொண்டு, “பொறுத்துக் கொள்ள வேண்டும் குருவே. அவள் என்னை அமைதியாக வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் நீங்கள் சொல்லும் ஞானங்களை செவிமடுத்து உள்வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத்தான் பலவாறு எனக்குப் புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். என் முதுகெலும்பில் எழும்பிக் கொண்டிருக்கும் நாதங்கள் எங்கிருந்து புறப்படுகின்றன என்றும் அவைகள் எப்படி என் காதுகளுக்கு எட்டிக் கொண்டிருக்கின்றன என்றும் என் மூளை இவ்வொலிகளை பதிவு செய்து கொண்டிருக்கிறதா என்றும்தான் கேட்டாள் குருவே” என்றேன்.
“அப்படியென்றால் சிவநேசா, நீ முயற்சித்துப் பார். உன்னால் இப்படி முதுகெலும்பில் நாதத்தை எழுப்ப முடிகிறதா என்று பரிசோதித்துப் பாரேன்” என்றேன்.
“என்ன குரு, விளையாடுறீங்களா, நீங்கள் பிரமஞானத்தை அடைந்த ஞான குரு. நானோ ஒரு கற்றுக்குட்டி மாணவன். என்னால் இப்படி இந்த ஞானத்தை பரிசோதித்துப் பார்ப்பது? அதெல்லாம் ஆகாது குருவே” என்றேன்.
“டேய், எத்தனை முறை உனக்குப் பாடம் எடுக்கிறது. குரு சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டும் என்று எத்தனை முறை உன் மரமண்டைக்குச் சொல்லிக் கொண்டிருப்பது. உடனே பரிச்சித்துப் பார்டா” என்று உத்திரவே போட ஆரம்பித்தார்.
இவர் நம்மை விடமாட்டார் போலிருக்கே. என்ன செய்வது என்று பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தேன். நான் மீண்டும் எம் சற்குரு என் முதுகைத் தொடுவதற்குமுன் என்னென்னவெல்லாம் செய்து கொண்டிருந்தார்? அவரின் உடற்செய்கைகள் எப்படியெல்லாம் இருந்தன? அவருடைய திருவடிகள் எந்த நிலையில் இருந்தன? என்பதையெல்லாம் மீண்டும் என் மனக்கண் முன் கொண்டுவர ஆரம்பித்தேன். குருவின் வாய் ஏதோ ஒரு சொல்லை தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டே இருந்ததை நன்றாக இப்போது காட்சியாகத் தெரிய வந்தது. நான் ஞானாம்பாளிடம் இதுபற்றி விவாதித்தேன். குரு முணுமுணுத்துக் கொண்டிருந்தது இந்த சொல்லா என்று கேட்டேன். அவள் சிறிது யோசித்துப் பார்த்துவிட்டு, ஆமாம் சிவா, ஆனால் கூடவே மற்றொரு சொல்லையும் சேர்த்துக் கொண்டு சொல்லிக் கொண்டிருந்தார் என்று சொல்லி அந்த சொல்லை என் காதுகளில் முணுமுணுத்தாள். எங்களுடைய இந்த செயல்பாடுகளை எல்லாம் குரு பார்த்துக் கொண்டு புன்னகைத்த வண்ணம் இருந்தார். ஒரு 15 நிமிடங்கள் போயிற்று. நான் என் மூளைக்குள் குருவின் வாயிலிருந்து வந்த சொற்களை முணுமுணுக்க ஆரம்பித்தேன். வாயால் அல்ல ; மூளைக்குள். ஆரம்பத்தில் மறுத்த என் மூளை 1 நிமிடம் கழிந்திருக்கும்.
அதன்பின் என் மூளையானது வேறுவிதமான காந்த அலைகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அந்தக் காந்த அலைகள் சொன்ன அதிர்வுகளுக்கும் நான் என் மூளைக்குள் பதிவிட்ட வார்த்தைகளுக்கும் ஓரளவுக்குத்தான் பொருத்தம் இருந்தது.
நான் உடனே இன்னும் நன்றாக குருவின் வார்த்தைகளை உள்வாங்கி அதை மூளையில் பதிவிட்டு, அதன் அதிர்வெண்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். ஒரு இரண்டு நிமிடம் இருக்கும். முன்பு வெளியிட்ட காந்த அலைகளைவிட இப்போது வெளிவந்த காந்த அலைகள் கிட்டத்தட்ட சரியாக இருந்தது. ஆனால், இன்னும் முழுமை அடைந்தபாடில்லை. இன்னும் நன்றாக உள்வாங்க வேண்டுமே என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் என் குருவின் திருவடிகள் என்ன செய்து கொண்டிருந்தன என்பதை மறந்து போய்விட்டது ஞாபகத்திற்கு வந்தது. உடனே திருவடிகளை மகாரத்தின் மௌனப் புள்ளியில் குவிக்க ஆரம்பித்தேன். அடுத்த நொடியே குருவின் மந்திர வார்த்தைகளை என் மூளை பிரதிபலிக்க ஆரம்பித்து, பின் ஒரு அலசலுக்குப் பின் சரியான ஒலி அலைகளையும் அதன் காந்த அதிர்வுகளையும் அலைகளாக வெளிப்படுத்த ஆரம்பித்தது. அருமை, அருமை. அப்படியே குருவின் வார்த்தைகளை பிடித்துக் கொண்டு, உள்ளே ஆன்மாவின் கூட்டிற்குள் கொண்டு செல்ல ஆரம்பித்தேன்.
உடனே, ஞானாம்பா, “சிவா, நேரம் கடக்கிறது. குரு நம்மை சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பிச்சுட்டாரு. உடனே பரிட்சைக்குள் இறங்கிடு” என்றாள்.
நான் அதை ஆமோதித்துவிட்டு, என் குருவை நோக்கி, “குருவே, முதலில் உங்களிடம் எனக்கு ஒரு அனுமதி வேண்டும், இல்லையில்லை இரண்டு அனுமதிகள் வேண்டும். தருவீர்களா?” என்றேன்.
குரு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு, “அப்படியா மகனே. சரி பரிட்சைக்குள் இறங்கிடு. ஆனால், பதில் மிகச்சரியாக இருக்க வேண்டும்” என்றார்.
நான் இதை ஏற்றுக் கொண்டு, “குருவே, முதல் அனுமதி உங்களை நான் முதலில் பரிட்சித்துப் பார்க்க அனுமதிக்க வேண்டும். இரண்டாவது அனுமதி ஞானாம்பாளிடம்” என்றேன்.
ஞானாவோ, “டேய், என்னடா உனக்கு கிறுக்குப் பிடிச்சு போச்சா, இது என்ன சுத்த அபத்தமான எண்ணம். குருவையே பரிட்சித்துப் பார்ப்பாயா? அறிவில்லை உனக்கு. ஏதோ நீ பெரிய தவறு செய்யப் போகிறாய்? வேண்டுமென்றால் என்னை சோதித்துக் கொள்” என்றாள்.
நான் வச்சக் கண் வாங்காம குருவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் கண்களிலேயே பதில் சொன்னார் சம்மதம் என்று.
உடனே நான் குருவின் திருவடிகளை (பாதங்களை அல்ல) தொட்டு என் திருவடிகளால் வணங்கிவிட்டு, அவரின் முதுகுப்பகுதிக்கு சென்றேன். குரு என் முதுகில் எந்தெந்த எலும்புகளை தொட்டாரோ அந்த எலும்புகளுக்கு சென்று, குரு சொன்ன அந்த மந்திரச் சொற்களை பலமுறை பிரயோகித்துவிட்டு, குரு எப்படி என்னைத் தட்டிப் பார்த்தாரோ அதைப் போலவே மிக மிக மெல்லிய பதத்தில் ஒரு குறிப்பிட்ட விரலால் (அதைச் சொல்ல அனுமதி இல்லை அன்பர்களே) பூவைப் போல, தென்றலைப் போல தட்டி வருடிவிட்டேன். ஒரு 5 நொடிகள் கடந்திருக்கும். அடுத்த 6 வது நொடியிலிருந்து நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாக ச – ரி – க – ம – ப – த – நி என்ற சுரங்கள் இசை பாட ஆரம்பித்து விட்டன. இந்த நாதத்திலேயே நானும் ஞானாவும் மெய்மறந்து போனோம். என் முதுகு 10 நிமிடம்தான் சுரங்களை வெளியிட்டது. ஆனால், குருவிடம் மணிக்கணக்கில் வெளிவிட ஆரம்பித்தது. இந்த சுரங்களுக்கும் நம்முடைய மும்மலங்களுக்கும் ஒருவகை பந்தம் – தொடர்பு இருப்பதை பின்னார் குருவிடம் தனித்துக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
இந்த பரிட்சையை ஞானாம்பாளின் முதுகுத்தண்டிலும் சோதித்துப் பார்த்தபோது, அவள் முதுகெலும்புகளும் இந்த ஏழு சுரங்களை ஒலிக்க ஆரம்பித்தன. இந்த இசை ஞானத்தைக் கொடுத்த என் சற்குருவிற்கு எத்தனை கோடி வணக்கங்களையும் நன்றிகளையும் சொல்லி சேவை செய்தாலும் அதெல்லாம் ஒரு சிறுதுளியே ஆகும்.
மேலே சொன்ன திருமந்திரப் பாடலுக்கு எம் சற்குருவும் நானுமே உதாரணங்களாக இப்போது உங்கள் முன்னே இருக்கின்றோம். திருமந்திரத்தின் முதல் வரி என்ன சொல்ல வருகிறது என்றால், வீணாத் தண்டமாகிய முதுகுத்தண்டோடு பிணைந்து சென்று பிரமரந்திரத்தை அடைந்த ஞானயோகிக்கு சோம, சூரியாக்கினியாகிய மண்டலங்கள் மூன்றும் ஒத்து உடற்கண் மகிழும்படி யாய்ப் பொருந்தி இருக்கும். இவ்வுண்மையைக் கண்டவர்களே மெய்ப்பொருள் கண்ட மெய்ஞ் ஞானிகள் என்றே சொல்வதை இப்போது உங்கள் மூளையில் உள்வாங்கிப் பதிவிட்டுக் கொள்ளுங்கள் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம். இதனை அறியாத அஞ்ஞானிகள்தான் வினையால் விளைந்த உடம்பு அழியுமாறு இறந்து கொண்டிருக்கிறார்கள். மும்மண்டலத்தையும் ஒத்துக் கண்ட ஞான யோகிகள் என்றும் அழிய மாட்டார்கள்.
கொண்ட விரதங் குறையாமற் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே (தி.ம.612)
பிரமஞான யோகிகள் தாங்கள் எடுத்துக் கொண்ட வைராக்கியம் குறையாமல் பிரமஞானத் தவத்தில் ஒன்றியபடி இருந்தால், அகார, உகார, மகாரத்தில் இருக்கக்கூடிய சூரியன், சந்திரன் மற்றும் அக்கினியின் ஒளிக்கலைகள் மூன்றும் ஒருசேர வளர்ந்து திருவடிகளில் உள்ள சுழிமுனை நாடி வழியாக குண்டொளியை மேலே ஏற்றினால் அந்த பிரமஞான யோகிகளின் உடல் உயிரைவிட்டு பிரியாது நிலைத்து இருக்கும்.
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. (சிவவாக்கியார்)
உருவம் தடிக்க வேண்டும். எந்த உருவம் என்றால் மெய்ப்பொருளின் வடிவம். அதாவது கண்மணியில் தெரியும் ஒளியின் வடிவம் தடிக்க வேண்டும். அப்படித் தடிக்க வேண்டு மென்றால், காந்தப் பிராண ஆற்றல் மெய்ப்பொருளுக்குள் ஒடுங்கி வர வேண்டும்.
மெய்ப்பொருளில் ஒடுங்கும் வாயு ஒன்றுதான். அதுதான் பிரபஞ்சத்திலிருந்து வரக்கூடிய காந்தப் பிராண ஆற்றல். அப்படி சுழிமுனை நாடியில் ஒடுங்கும் குண்டொளியாகிய நிலை பெற்ற காந்தப் பிராண வாயுவை கருத்தினால் அழியாதவாறு இருத்தி, அதை பிரமநாடியின் வழியாக உயிர் இருக்கும் கபாலத்திற்குள் ஏற்ற முடியுமானால் சாதகன் வயோதிகனாக இருந்தாலும் அவன் இந்த பிரமஞானத் தவத்தால் இளைஞனாவான். சாதகனின் உடல் சிவந்திடும், இந்த வார்த்தைகள் அருளையே உருவாகக் கொண்ட இறைவன் மற்றும் இறைவியின் திருவடிகள்மீது சத்தியம் என்றவாறு.
இன்னம் பிறப்பதற்கு இடமென்னில் இவ்வுடலம்
இறவாது இருப்ப மூலத்து எழுமங்கி யமிர்தொழுகு
மதிமண் டலத்திலுற என்னம்மை குண்டலினிபால்
பின்னம் பிறக்காது சேயென வளர்த்திடப்
பேயேனை நல்கவேண்டும் (தாயுமானவர்)
இன்னும் நான் பிறந்தே ஆக வேண்டும் என்றால் இவ்வுடல் இறக்காமல் இருக்க மூலத்தில் எழும் அங்கி அமிர்தமொழுகும் மதி மண்டலத்தில் இருக்க வைக்க குண்டலினியானது பின்னமாகாமல் இயங்க வேண்டும். (இடகலை, பிங்கலையில் பிரிந்து இயங்காமல் சுழிமுனையில் ஒரே நொடியில் போய் வரவேண்டும்). என்னம்மை குண்டலினி பின்னமாகாமல் அதை சேய் போல் வளர்க்கும் திறனை இந்த சிறியோனுக்கு நல்க வேண்டும்.
இடகலை, பிங்கலை வழியாக சுவாசிக்க உடல் பிரிந்து பின்ன்மாகிப் போகிறது. துவைதம் இதுவே. கருமங்கள் உண்டாகின்றன. சிந்தனை உண்டாகிறது. ஒரே வழியான நடுவழியே பிராணனை தடையின்றி செலுத்த பூரண அறிவு நிலை உண்டாகிறது. தன்னை உணரும் நிலையும், எண்ணங்களற்ற நிலையும், நாதாந்த நிலையும் (மனமாக வேறு நாடியில் உணரும் நிலை பெற்ற பிராணனை அந்திப்பது. தன நாடியில் உள்ள நிலை பெற்ற பிராணன் அறிவதால் அதைப் பற்றிய பேச்சில்லை இது) உண்டாகிறது.
பிரமரந்திரத்தையும் தாண்டி செல்ல வேண்டும் என்று கூறும் பாடல்கள் இவை.
இடையின் எழுத்து உகாரம் என்ற உ, பிங்கலையின் எழுத்து அகாரம் அ. இந்த இரண்டு உயிர் எழுத்துக்களையும் தனக்கு உபதேசித்தருள வேண்டுமென்று விநாயகப் பெருமானிடம் பிரார்த்திக்கிறார் ஔவைத்தாய்.
அ என்பது அகாரம் என்ற வலது திருவடி ; உ என்பது உகாரம் என்ற இடது திருவடி. இந்த அகாரத்தையும் உகாரத்தையும் திருவடிகளில் தொட்டுக் காட்டி உணர்த்திட வேண்மென்றே முழுமுதற் கடவுளான கணபதியிடம் பலவாறு இறைஞ்சிக் கொள்கிறார்.
இறுதியில் திருவடிகளின் கடைப்பகுதியில் அதாவது கடைசிப் பகுதியில் சிரசினையும் அதற்குள் காத்துக் கொண்டிருக்கும் கபால என்ற சிரசினையும் தொட்டுக் காட்டி அமர்க்களப் படுத்த வேண்டுகிறார். கபாலமாகிய தலையில்தான் இரு திருவடிகளும் அமைந்துள்ளன. அந்தத் திருவடிகளுக்குள்ளேதான் சுழிமுனை இருக்கிறது. இந்த சுழிமுனை பீடத்தை விநாயகப் பெருமானே எனக்குக் கொடுத்துவிடு என்றே பேசுகிறார் ஔவைத் தாய்.
இதைத்தான், “இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையில் சுழிமுனை கபாலமும் காட்டி” காட்டி என்றார்.
அடுத்த அகவல் வரிகள் : “மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி (40)”
மூன்று மண்டலங்கள் என்று எதை ஔவைத்தாய் சொல்கிறார்.
96 உடற்தத்துவங்களைக் கற்று, அந்த ஒவ்வொரு தத்துவங்களையும் தனித்தனியே குருவின் அருளால் யாரெல்லாம் கடந்து செல்கின்றார்களோ, அவர்கள் ஒளிதேகம் அடைவதற்கான தகுதியை அடைகிறார்கள் என்று வள்ளற்பெருமான் கூறியிருப்பதை இங்கே ஒப்புநோக்க வேண்டுகிறோம்.
மூன்று மண்டலங்கள் : 1.சூரிய மண்டலம், 2.சந்திர மண்டலம், 3.அக்கினி மண்டலம்.
சூரிய மண்டலம் : சூரிய மண்டலம் என்பது வலது திருவடியையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் குறிக்கக் கூடிய சுடு வெப்பத்தைத் தன்னகத்தே கொண்ட வெப்ப மண்டலமாகும்.
சந்திர மண்டலம் : இது இடது திருவடியையும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் குறிக்கக்கூடிய குளிர் வெப்பத்தை (தண்வெப்பத்தை) அதனிடத்தே கொண்ட அமுத மண்டலமாகும்.
அக்கினி மண்டலம் : இது இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் உயிருக்கு நேரடித் தொடர்பினைக் கொடுக்கக்கூடிய அமுதக்காற்றின் குளிர்வெப்பத்தைக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் நேரடித் தொடர்பினைக் கொண்டிருக்கும் அக்கினியால் ஆன மண்டலமாகும்.
மேலும் நமது ஆதித் தமிழ்ச் சித்தர்கள் இந்த மூன்று மண்டலங்களும் ஒவ்வொரு திருவடிகளிலும் அமைந்திருப்பதாக அவர்களின் தலைசிறந்த சீடர்களுக்குக் கற்பித்து வருகிறார்கள். மெய்ப்பொருளின் மையப்புள்ளியில் மௌனப் புள்ளியில்தான் அக்கினி மண்டலத்தின் மகா சக்தியான சுழிமுனை நாடி அமைந்திருக்கிறது. இந்த சுழிமுனையின் மொத்தப் பகுதிகளைத்தான் அக்கினி மண்டலம் என்றார்கள் ஆதித் தமிழ்ச் சித்தர்கள். இந்த நாடியைத்தான் நெருப்பாறு என்றும் மயிர்ப்பாலம் என்றும் ஒளித்திண்டு என்றும் ஒளிக்கம்பம் என்றும் மறைத்து மறைந்து பிரமஞானங்களைப் பாடி வைத்தார்கள்.
இந்த மூன்று மண்டலங்களையும் ஒரு தூண் போன்ற பொருளானது பிணைத்தும் இணைத்தும் வைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது இந்த மூன்று மண்டலங்களும் ஒரு இடத்தில் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு நிற்கும். அந்தத் தூண்தான் முதுகெலும்பின் உச்சியில் அமைந்திருக்கும் மூளைத் தண்டின் மிகப்பெரிய பகுதியாகும். இதை PONS என்கிறார்கள் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும். இது மெடுல்லாவிற்கு மேலேயும் நடுமூளைக்குக் கீழேயும் அமைந்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மேலிருக்கும் பகுதியில்தான் பீணியல் சுரப்பி அமைந்திருக்கிறது. இது பெருமூளைக்கும் சிறுமூளைக்கும் இடையே இணைப்பாக செயல்படக்கூடிய நரம்புகளின் குழுக்களாக இருக்கின்றன. பிரமநாடியின் முடிவுப்பகுதி இங்கிருந்துதான் ஆன்மக் கூட்டை நோக்கிச் செல்கிறது. அமுதக்காற்றின் இணைப்பாக, அமுதக்காற்றின் ஆற்றல்களை மூளை முழுக்கக் கடத்திக் கொண்டு போகவும், பீணியலுக்குத் தேவையான அமுதக்காற்றினை கொண்டு போய்ச் சேர்க்கும் நரம்பு இழைகளாக இந்த PONS நரம்புகள் செயல்படுகின்றன. மேற்கண்ட மூன்று மண்டலங்களும் இந்த பொன்ஸ் நரம்பின் உச்சிப்பகுதியில் ஒன்றிணைந்து மோத ஆரம்பிக்கும்போது, மும்மலங்களும் ஆட்டங்காண ஆரம்பிக்கின்றன. Pons நரம்புகளோடு அமுதக்காற்றும் சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்களின் ஆற்றல்கள் ஒன்றாகக் குழுமினால் ஒழிய, உயிருக்கான உணவினை உங்களால் தர இயலாது. உங்களுக்கு மூன்றாவது கண் விழிப்பு நிலைக்கு வந்துவிட்டால், இந்த PONS நரம்புகள் உங்களுக்காகவும் அமுதக்காற்றின் வரவுக்காகவும் செயல்பட தன்னைத் தயார்படுத்திக் கொண்டுவிடும்.
இதைத்தான் ஔவைத்தாய் அவர்கள் நம் மூளைக்குள்ளும் முதுகுத் தண்டிலும் நடக்கக் கூடிய அறிவியல்பூர்வமான பிரமஞானத் தந்திரங்களின் இரகசியங்களை உள்ளடக்கிய சொற்களாக, “மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்” என்று பாடி வைத்தார்கள்.
பிரமஞானத் தவத்தின்போது, சாதகனின் மகாரத் திருவடியில் இருந்து ஒரு நீலநிற ஒளியானது வெண்சாரைப் பாம்பினைப் போன்று உயிர் இருக்கும் ஆன்மக் கூட்டை நோக்கி வளைந்து நெளிந்து வேகமாகச் செல்லும். இந்த நீலநிற ஒளியலைகள் ஒருவித ஓசையோடு – நாதத்தோடு மெய்யுணர்வுகளை சிரசு முழுக்கு ஏற்படுத்திக் கொண்டே அசைந்தாடி அசைந்தாடி வேகமாகப் பாய்ந்து செல்லும். இதைத்தான் ஔவைத்தாய், “நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி” என்றார்கள்.
அடுத்த அகவல் வரிகள் : “குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து (42)” என்பது.
குண்டொலி என்ற வார்த்தையைத்தான் குண்டலி என்று மருவிப் போய்விட்டது. குண்டலியை குண்டொலி என்றும் குண்டொளி என்றும் சொல்லலாம்.
குண்டொலி = குண்டு + ஒலி.
குண்டொளி = குண்டு + ஒளி.
இந்த ஒலியும், ஒளியும் குண்டாக இருக்கக்கூடிய இடத்தில்தான் உற்பத்தி ஆகிறது. இயங்கிக் கொண்டும் இருக்கிறது. குண்டம் என்பது நமது இரு திருவடிகளையே குறிக்கிறது. குண்டமாக இருக்கக்கூடிய ஒரு ஞான உறுப்புதான் நமது திருவடிகள். அந்த திருவடிகளில்தான் ஒலி என்ற நாதமும் இருக்கிறது ; ஒளி என்ற வெளிச்சமும் இருக்கிறது. ஒளியும் நாதமும் திருவடிகளின் அடிப்படைப் பண்புகளாக இருக்கின்றன.
பிரமஞானத் தவத்தை இந்த திருவடிகளைக் கொண்டுதான் ஞான சற்குரு சொல்லிக் கொடுக்கும் அற்புத ஞான வித்தையை செய்து கடைத்தேற வேண்டும். அப்படி பிரமஞானத் தவத்தைச் செய்து வரும்போது, இந்த ஒளியும் நாதமும் ஒரு குறிப்பிட்ட மையப்புள்ளியில் ஒன்றோடு ஒன்றாகச் சந்திக்கும்போது, அங்கே இவையிரண்டிற்கும் இடையில் உராய்தல் என்பது நிகழ ஆரம்பிக்கிறது. அப்படி உராய்வு நிகழும்போது, அங்கே ஒருவித நாதங்கள் கேட்க ஆரம்பிக்கும். இந்த நாதங்களைத்தான் திருமூலர் உட்பட அனைத்துப் பிரமஞானிகளும் சித்தர்களும் தசவித நாதங்கள் என்றழைத்தார்கள். இதைத்தான் ஔவைத்தாய், “குண்டொலி அதனில் கூடிய அசபை” என்றார்.
அப்படி குண்டமாக இருக்கக்கூடிய திருவடிகளில் தசவித நாதங்களை சதா உண்டாக்கிக் கொண்டே வந்தால், உயிரானது நன்றாக மலர்ந்து பிரமஞானத் தேனை நமக்குள் தாய்ப்பாலைப் போல கொடுக்க ஆரம்பிக்கும். அப்போது நாதமும் ஒளியும் ஒன்றோடு ஒன்று இணைந்து அமுதத்தை மழைபோல நம் மூளைக்குள் பொழிய வேண்டும். அதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. ஓங்காரத்தை குருவிடம் உபதேசமாகப் பெற்று பிரமஞானத் தவத்தைச் செய்து வந்தால், அந்த ஓங்காரம் சாதகனுக்குள் வெளிப்புறத்திலும் நாத காந்தக் கலைகளை வெளிப்படுத்திக் கொண்டே வரும். இவ்வாறு திருவடிகளில் உண்டாகக்கூடிய அசைவுகளையும், நாதங்களையும் நம்மால் நேரடியாகவேக் கண்டு இன்புற முடியும் என்பதைத்தான் ஔவைத்தாய், “விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து” என்றார்கள்.
அடுத்த அகவல் வரிகள் : “மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே (44)” என்றார்.
மூலாதாரம் = மூலம் + ஆதாரம். அனைத்து ஆதாரங்களுக்கும் எது மூல முதற்பொருளோ அதுவே மூலாதாரமாகும். இங்கே விநாயகப் பெருமானே நம் அனைத்துச் செயல்களுக்கும் மூலமான ஆதாரமாக இருக்கக் கூடியவர்.
மூலம் என்ற சொல் யோக சாஸ்திரத்தில் சொல்லப் படுவதைப் போல மூலாதாரச் சக்கரத்தை குறிப்பன அல்ல. அது மூலங்களின் ஆதாரம் என்பதைச் சுட்டுகிறது. ஒவ்வொரு பொருளும் எங்கு உதிக்கிறதோ, அவ்விடமே அதன் ஆதாரம் – மூலாதாரம் ஆகும்.
குண்டலி என்பது குண்டொளி என்பதன் திரிபு நிலையே. குண்டம் + ஒளி = குண்டொளி. நாளடைவில் அது குண்டலி என்றும் குண்டலினி என்றும் மாறிவிட்டது.
தலை உச்சிக்கு மேலே பன்னிரெண்டு அங்குலத்திற்கு மேல் காணப்படும் ஆதாரமே துவாதசாந்தச் சக்கரமாகும்.
முதலில் வாயு மூலத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு வாயு உதிக்குமிடத்தில் நான்கு திசைகளிலும் இரண்டாகப் பிரிய வேண்டும். அதன்பின் அவ்வாயு உச்சிக்குச் சென்று மேலே பன்னிரெண்டு அங்குலத்தில் துவாதசாந்த வெளியில் சிவமாய் நிறைந்து உறுதிப்பட நிற்கும்.
அவ்விடம் இராப்பகலற்ற இடம் என்று ஞான யோகியர்களால் அழைக்கப்படுகிறது. இரவும் பகலும் அற்ற இடம் எது?
இரவு என்பது சந்திரக் கலை. பகல் என்பது சூரியக் கலை. இவ்விரு கலைகளும் எவ்விடத்தில் சந்திக்கிறதோ அவ்விடம் இரவும் பகலும் அற்ற ஒருபொழுதாக (வேளையாக) இருக்கும். இரவு இருக்கும் ; ஆனால் அது இரவல்ல. பகல் இருக்கும் ; ஆனால் அது பகலல்ல. அது தலை உச்சிக்கு மேலாக பதினாறு அங்குல இடைவெளியில் வியாபித்து ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
சட்டைமுனி சித்தர் சொல்லும் மூலம் எது என்பது பற்றிய பாடல்…….
பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று ;
பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று ;
போங்கான புருவமைய மூலம் ஒன்று ;
புகழான விந்துவிலே மூலம் ஒன்று ;
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று ;
மருவிநின்ற பராபரத்தில் மூலம் ஒன்று
தேங்காமல் இவைஆறும் கண்ட ஞானி
சேர்ந்துநின்ற மும்மூல யோகி யாமே. (சட்டைமுனை முன் ஞானம் – பாடல் எண்.26)
ஆமப்பா நகாரமுதல் யகாரம் நிற்கும்
அவ்வளவும் யோகத்தின் மூல மாச்சு;
தாமப்பா அகாரமுதல் உகாரந் தொட்டுச்
சாதகமாய் மகாரவரை ஞான மூலம்
ஓமப்பா திசைநாத மவுனத்திற் காணும்
உற்றேற உற்றேற அகண்ட வீதி
காமப்பால் உண்டக்கால் யோக சித்தி
கடுங்கானற் பாலுண்ட ஞான மாச்சே. (சட்டைமுனை முன் ஞானம் – பாடல் எண்.27)
அரன் எனப்படும் இறையின் திருவருள் நம்டத்தில் வந்து சேர வேண்டுமென்றால், கலைகளை இடக்கலையிலும் பிங்கலையிலும் ரேசிக்கும் (ஒன்றுசேர்க்கும்) உபாயத்தை மாற்றி மாற்றிச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
ஞான மெய்ப்பொருளுரை : ரெட்டிகுடி வால்மீகியார் பாடலில்,
“பிங்கலையும் இடகலையும் மாறும்போது
அறிவுடனே சுழிமுனையில் மனத்தை வைத்து
அசையாமல் ஒரு நினைவாய்த் தாக்கும்போது
குறியான சிவயோகம் சித்தியாச்சி
கோடி ஜென்மம் சித்தனைப் போல் ஆளலாமே”
என்று ஞான கர்மத்திற்கு வழிகாட்டுகிறார்.
இடக்கலை என்பது சந்திர கலையாகும். பிங்கலை என்பது சூரிய கலையாகும். களி என்பது ஆனந்தப்படுதல் என்பதாகும். ரேசகம், ரேசித்தல் என்பது ஒன்று சேர்தலாகும்.
அதாவது சூரிய கலையினையும் சந்திர கலையினையும் ஒன்று சேர்க்கும் தந்திரமே இடபிங்கலை ரேசித்தலாகும்.
ஆனால், இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அது பௌர்ணமி திதிபோல வானமே பிரகாசிப்பது போல அகத்தில் பார்த்து இன்புற்றிருக்கலாம். இதைத்தான் ஒரு அமாவாசை திதியன்று தியானத்தில் இருந்த அபிராம பட்டரிடம் சரபோஜி மன்னர், “இன்று என்ன திதி?” என்று கேட்க, அபிராம பட்டரோ தனக்குள் திருமூலர் பாடிய
“நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று சேர்ந்து கொண்டேனே” (தி.ம.2770)
என்ற திருமந்திரப் பாடலுக்கேற்ப இடபிங்கலை நாடிகளை ரேசிக்கும் தந்திரத்தை துவாதசாந்த வெளியில் செய்து கொண்டு, அகத்தில் பௌர்ணமி நிலவாக அபிராம அம்மன் முகத்தை முழு நிலவாகக் கண்டு இன்புற்றுக் கொண்டிருந்ததை வைத்து, மன்னரிடம், “இன்று பௌர்ணமி திதி” என்று கூறிவிட்டார். பின் தியானம் கலைந்து தான் திதி மாற்றிச் சொன்னதை அறிந்து, அபிராமி அன்னையின் கருணையினால் அமாவாசையை பௌர்ணமியாக மாற்றிக் காட்டி, கலைகளை ரேசிக்கும் தந்திரம் உண்மைதான் என்பதை இவ்வுலகுக்கு அபிராமி பட்டர் நிரூபித்துக் காட்டினார். இதை உணர்வோரே அறிவர் ; மற்றோர் தெரியார்.
எப்பொழுது சூரியக் கலையும் சந்திரக் கலையும் ஒன்று சேர்கிறதோ அப்பொழுதுதான் மனிதனின் ஞான வேள்விக்கான காலம் தொடங்குகிறது. வேள்வியில் வளர்ப்பது அக்கினி. ஞான வேள்வியில் வளர்ப்பது ஞானாக்னி. அது ஒன்றுதான் நமக்கு ஞானத்தை நல்க வல்லதாகும்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே (தி.ம.571)
மூலத் துவாரத்தை முக்காரம் விட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேல்ஒத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்துஇது தானே (தி.ம.583)
ஏற்றி இறக்கி என்பது பிராண, அபானன்களைக் குறிக்கிறது. திருவடியின் மெய்ப்பொருளின் கீழ்ப்பகுதியில் இருக்கும் திரவ அபானனைச் சுடராழித் தவத்தினால் சூடாக்கி ஆவிநிலைக்கு மடைமாற்றம் செய்தபிறகு, அந்த ஆவி அபானனை அமுதக்காற்றின் துணையோடு பிரணவத்தின் உச்சியில் இருக்கும் பிராணனோடு கலப்புறச் செய்திட வேண்டும். இப்படி இந்த இரு காலும் (பிராண, அபானன்கள்) பூரிக்க வைக்கக்கூடிய சுடராழித் தவம் என்ற கணக்கினை அறிந்துவிட்டால், அத் தவத்தின் சூக்குமக் கணக்குதான் எமனை நம்மிடம் வரவொட்டாமல் செய்யக்கூடிய காலக்குறிக் கணக்காகும். இதுதான் இத்திருமந்திரப் பாடல் 571 சொல்லும் பிரமஞான இரகசியக் கணக்கு. இதை அறிந்திடாது அடயோகத்தில் மூச்சுக்களை மேலும் கீழும் இறக்கிக் கொண்டு செய்யக் கூடிய பிராணாயாமக் கணக்கெல்லாம் எமனிடம் வேகாது. இதை இன்றைய மனித ஆன்மாக்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் இந்த பிரமஞான இரகசியத்தை வெளிப்படுத்தினோம்.
வேல் போன்ற கண்ணை விழித்திருந்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எங்கே பார்க்க வேண்டுமென்றால், கண்ணின் மையப்புள்ளியான மெய்ப்பொருளின்மீது அதாவது கண்மணியின்மீது. அங்கேதான் மூலத் துவாரமும், மேலைத் துவாரமும் அமைந்திருக்கிறது. இந்த கண்மணிக்குள்ளே இருக்கும் மெய்வழித் துவாரத்தில் மனதை வைக்க ஆரம்பித்தால், மும்மலங்கள் அழிந்து நாசமடைந்து, மனமற்ற நிலை உண்டாகிடும். மனமற்றுப் போகும் நிலை எப்போது வாய்க்குமோ அப்போதுதான் மூன்றாம் கண்ணாகிய ஞானக் கண் அங்கே தோன்ற ஆரம்பிக்கும். ஞானக்கண் தோன்றி, அதை நித்தமும் கண்டு ஆனந்தப் பரவசத்தில் மூழ்கியிருந்தால், காலனாகிய எமனையும் காலத்தையும் வென்றுவிடலாம். இதுதான் திருமந்திரப் பாடல் 581 சொல்லும் பிரமஞான இரகிசயம்.
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே (சிவவாக்கியார்)
அல்லல்வாசல் ஒன்பதும் அறுத்துஅடைந்த வாசலும்
சொல்லுவாசல் ஓர்ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாசலைத் திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே (சிவவாக்கியார்-111)
அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார் (ஔவை ஞா.கு.288)
உண்ணாடி வாயு அதனை உடன்நிரப்பி
விண்ணோடு மெள்ள விடு (ஔவை ஞா.கு.252)
உரு என்றால் வடிவம். அந்த உருவான வடிவம் நன்றாகத் தடித்திருக்க வேண்டும். அதாவது பெரிதாக இருக்க வேண்டும். பெரிதாகும்படி செய்திருக்க வேண்டும். நாடி என்பது சுழிமுனை நாடி. இது திருவடி மெய்ப்பொருளின் மையப்புள்ளியில் நடுநாயகமாக அமைந்திருக்கிறது. இந்த சுழிமுனை நாடியை சுடராழித் தவத்தினால் கண்டு கண்டு பெரிதாக்கி விடவேண்டும். ஒடுங்குகின்ற வாயு என்பது அபானனாகும். இந்த சுழிமுனை நாடி எந்த அளவுக்கு பெரிதாக இருக்குமோ அந்த அளவுக்கு அபான வாயுவை எளிதாக மேல்நோக்கி எடுத்துச் செல்ல முடியும். கவனமாக சுழிமுனை நாடியில் கவனம் வைத்துச் சுடராழித் தவத்தின் மூலமாக அபானனை கபால உச்சியில் இருக்கும் பிராணனிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் நாம் என்றும் இளமையோடே இருக்கலாம் என்கிறார் சிவவாக்கியார்.
இப்படியாகத்தான் மூலாதாரத்தில் மூண்டு எழக்கூடிய வெப்பத்தினை கால் என்ற அமுதக்காற்றின் துணையோடு பிரமஞானத் தவத்தால் கருத்தாய் பார்த்து ஆன்மக் கூட்டை நோக்கிச் செலுத்த வேண்டும் என்பதைத்தான், “மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து” என்று பாடி அருளினார் நமது ஔவைத்தாய் அவர்கள்.
நல்லது. இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும்
@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai என்ற வலையொளி தளத்திலும்
www.bramagnanaporsabai.com என்ற வலைப்பூத் தளத்திலும்
கொடுத்து வருகின்றோம். நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!