அகத்தியர் அடுக்குநிலை போதம் – 3

சற்குருவும் சந்நிதியும் ஆனது எங்கே?
சாகாத கால் எங்கே? வேகாத் தலையும் எங்கே?
முப்பொருளும் ஒரு பொருளாய் நின்றது எங்கே?
முனை எங்கே? தலை எங்கே? முகமும் எங்கே?
நற்கமலமாய் ஆயிரத்தெட்டு இதழும் எங்கே?
நாலுகை ஒருபாதம் ஆனது எங்கே?
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்
தம்மை இறைவன் என்றே கருதி இயம்பலாமே!
(5)

1) சற்குருவும் சந்நிதியும் ஆனது எங்கே?

தாடந்து அளிக்குந் தலைவனே சற்குரு
தாடந்து தன்னை யறியத் தரவல்லோன்
தாடந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாடந்து பாசந் தணிக்கு மவன்சத்தே.
(தி.ம.2011)

சிவகுருவாக எழுந்தருளி வந்து தலையளிபுரியும் சிவனும் அதற்கு வழித்துணையாக நிற்கும் குலகுருவும் கருத்தில் ஒருவரேயாவர். சிவபெருமானின் திருவடியிணையினைத் தந்தருள்பவனே மெய்க்குரவன். மெய்க்குரவன் என்றாலும் சற்குரு என்றாலும் ஒன்றே. திருவடியிணையினைத் தந்தருளித் தன்னையும் உண்மையாக அறிவிப்பவன்தான் மெய்க்குரு. தாளை அருளித் தத்துவாதீதமாகிய அப்பால் நிலைத்த கண்ணில் ஆருயிரைச் சாரச் செய்பவன் குரு திருவடியினைத் தந்தபின் பாசத்தை இல்லாமல் செய்து அருள்பவன். அவன் என்றுமுள்ள மெய்ப்பொருளாவான். சத்து – மெய்ப்பொருள். அந்த மெய்ப்பொருளே குருவாவார்.


பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே.
(தி.ம.2014)

திருவருளால் சிவத்தோடு தன்னையும் அன்பினால் ஆராய்ந்து அருளால் பாசத்தை நீங்கியவரும், மற்றவர்களுக்கும் அவ்வருளாலேயே மலமற நீக்குபவர் மெய்க்குரவராவர். அவ்வாறில்லாமல் நல்லறிவு சிறிதுமில்லாது மாயப்போக்கு மனமிரங்கும் – கோழையாகும் மிகச்சிறியோரே ஆவர். அவர் ஒருக்காலும் மெய்யுணர்வுக் குரவர் ஆகார். (அ. சி.) பூசற்கு – கலகத்துக்கு.

தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப்பெற வேண்டுஞ் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே.
(தி.ம.2017)

சிவபெருமான் ஆருயிருடன் பின்னி அவ்வுயிராகவே நின்றருள்கின்றான். அவன் திருமுன் அந் நிலைபோல் அவ் வுயிரைத் தன்னுள் அடக்கி அவ்வுயிர் தானாயே நின்றருள்வன். இது கற்றுவல்ல புலவன் தன் புலமை மேலோங்காது தானாகப் புலமை உள்ளடங்கி நிற்கப் பொதுவாக ஆளெனத் தோன்றுவன் அப் பொதுநிலையாம் ஆளியல்பு உள்ளடங்கப் புலமை மேலோங்கச் சிறப்பாகப் புலவன் எனப் புகழப்படுவன். ஆள்புலவன் ஆர்ந்த புலனடங்க ஆளாமவ், வாளடங்க ஆம்புலவன் அங்கு என்பதனையொக்கும். இம் முறைபோல் உயிர் சிவனாம் தன்மை வெளிப்படில் அவ் வுயிர் திருவடியுணர்வால் தானாகவே தனையுணர்தல் வேண்டும். பெருமைமிக்க இவ் உடம்பிலே உன்னகத்தே உன்னையும் உடையானையும் மெய்யுணர்வால் உன்னி உணர்ந்து கொள்வாயாக.

(அ. சி.) தனைப்பெற – தன்னை அறிய. சதுர் – பெருமை. ஊனே என – இந்த உடலிலேயே என்று.

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

திருநெறி யாவது சித்தசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவமாம் நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1

வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைக்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலும் ஆமே

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே.

குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே

இவ்வாறெல்லாம் குருவானவர் சாதகனுக்கு பரிபூரண ஞானத்தைக் கொடுப்பவராக இருப்பதால், குரு எங்குள்ளாரோ அந்த இடம்தான் சந்நிதி என்ற கோயிலாகும். குரு இருக்கும் இடமே கோயில், சந்நிதி. கோயிலாக இருக்கும் தேகத்தை, அது கோயில்தான் என்று தேகத்திற்குள் இருக்கும் தெய்வத் தத்துவங்களை எல்லாம் தொட்டுக் காட்டி உணர வைத்து, அந்த ஞானச் செல்வங்களை அள்ளிக் கொண்டு பருகிடக் காரணமாக இருக்கும் குரு இருக்கும் இடமே கோயிலாகும் என்று அகத்தியப் பெருமான் உறுதிப்படுத்துகிறார்.

2) சாகாக் கால் எங்கே?


3) வேகாத் தலை எங்கே?

இம்மூன்றையும் அறியும் முன்பு வேகும்கால், சாகும்தலை, போகும்புனலை அறியவேண்டும் இதனை அறியாமல் சாகாகல்வியை தெரிவிக்கும் இம்மூன்றை அறியமுடியாது. மற்ற நெறிகளெல்லாம் உடலினை(மாயை) விட்டால்தான் முத்தி என்றது, ஆனால் சைவம் உடலினை விட்டுவிட்டால் அறியாமையாகிய ஆணவம் சூழ்ந்துவிடும் என்றது, இதன் உண்மையை ஆழமாய் அறிந்திருக்கின்றார் வள்ளலார். சைவமும் மாயை கடக்கவேண்டுமென்று சொன்னாலும் சைவம் மாயையை வென்று சுத்தமாயா தத்துவமாக உடலினை வேதிக்க வேண்டுமென்றும் பின்பே ஆணவ இருளாகிய அறியாமை அணுகாதவண்ணம் வான்புக வேண்டும் என்கிறது, இதுவும் உடலினை மண்ணில் போடாமல் நிகழவேண்டும் என்பதை திருமூலர், மாணிக்கவாசகர் போன்றவரின் பாடலில் காணலாம், இல்லையென்றால் மீண்டும் பிறப்பெடுக்கும்.

கால் என்றால் காற்று. இது பலவகை, இதன் துணையாலே ஆற்றல் வெளிப்படும் இல்லையென்றால் நம்மை இறந்தவரென்று முடிவு செய்துவிடுவர். தலை என்றால் உயிர், இதனை கனல் என்பார் வள்ளலார். எப்படி பிரபஞ்ச உயிர்ப்புக்கு உட்சூடு முக்கியமோ அதைப்போன்றே உடலின் இருப்புக்கும் உட்சூடு முக்கியம். உயிரானது கனலென்ற உடல் உட்சூட்டின் மீதாக அமர்ந்திருக்கும் ஒன்று இல்லையென்றால் உயிரே இல்லையெனலாம்.

பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
போகாத புனலேஉள் வேகாத காலே – வள்ளலார்
மேற்சொன்ன இரண்டின் உண்மையே சிவனின் அடிமுடி தேடிய புராணத்தின் மறைப்பு, இதனை திருமூலரின் உதவியால் அறியலாம்.


காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே – திருமூலர்.
சிவனின் கால் – வேகாக்கால், சிவனின் தலை (கனல்) – சாகாத்தலை.

காலால் வேதித்து வெளிப்படுவதுதான் கனல், இந்த கனல் வெளிப்படும் போது புனலான நீர் உண்டாகும். வேகும்காலால் சாகும்தலையான கனல் வெளிப்படும் போது உருவாகும் நீரையே போகும்புனல் என்பர். ஆனால் வேகாக்காலால் சாகாத்தலை வெளிப்படும் போது உருவாகும் அந்நீர் உடலைவிட்டு வெளியே போகாமல் உடலுக்குள்ளே தொண்டை வழியே இறங்கிக் கொண்டிருக்கும். அந்த வெளியே போகாப்புனலைத்தான் அமுதம் என்பார்கள் நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள். இவனைப் பொருத்தவரையில் உண்மையில் இந்த இரண்டு வேதியியல் நிகழ்விலும் நீரானது (H2O) வெளிப்படவேண்டும் என்பதில் எந்தவித ஐயமும் மாற்றமும் இல்லை.


அமுதமென்பது அதன் ஜலம் – வள்ளலாரின் உபதேசம்.
அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே – திருமூலர்
காலால் கனல் வெளிப்படுவதலை குறிக்கும் வள்ளலாரின் பாடல், இது முக்கியமான குறிப்பு
சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் – சாகாத்
தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.

இப்பொழுது வேகும்கால், சாகும்தலையினை வள்ளலாரின் உபதேசத்தில் விஷக்காற்று என்ற குறிப்பால் அறியலாம். வேகும்கால் – O2, சாகும்தலை – ATP வேதியியல் ஆற்றல். (வேகும்காலால் நிகழும் சுவாசம் சகல அவத்தை) ATP யானது வெளிப்படவில்லை என்றால் உடலின் அமிலத்தன்மை அதிகரித்து உடலே தன்னைத்தானே அழிக்கத் தொடங்கிவிடும். ஆனால் இந்த வேகும்காலால் உடலானது மெல்லமெல்ல அழிந்துகொண்டே வருகிறது. காலால் இயங்கும் நம்முடலை ஒரு இயந்திரமாக கருதுகின்றார் திருமூலர்.


மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே – திருமூலர்.


O2
அதிகமான இடகலையும், CO2 அதிகமான பிங்கலையும் இடுப்பு, மார்பென பிரிந்து போவதை மூன்று மடக்குடைய பாம்பு இரண்டு என்கிறார் (உடலினை பிரித்து (Operation) பார்த்திருப்பார்கள் போலும், இதனை அனைவருக்கும் பொதுவாக்கி வளர்க்காதது நமது குறைதான். இதனை புராணமாக மறைத்தற்கு வள்ளலார் வெகுண்டெழுவார்)

C6H12O6(s) + 6 O2(g) → 6 CO2(g) + 6 H2O (l) + Heat
சர்க்கரையை வேகும்கால் எரிக்கும்போது சாகும்தலையும் போகும்புனலும் வெளிப்படுகின்றது. இதில் எந்தவித ஐயமும் இல்லை. இப்பொழுது நமக்கிருப்பதெல்லாம் வேகாக்காலும், சாகாத்தலையும் என்ன என்பதே. இதிலும் இவனுக்கு நமது உடலானது கரிமசேர்மத்தால் ஆனது என்பதால் வேகாக்காலாலும் ATPயை வெளிப்பட வேண்டும். இதற்குமேல் திருமூலர், வள்ளலார் போன்ற அருளாலர்களின் குறிப்புகளில் கருதலளவையால் இவன் எண்ணுவதை கூறுவேன், ஏற்பதும் மறுப்பதும் உங்களுடைய விருப்பம் எதிர்க்க போவதில்லை, மாறாக இருக்குமென்றால் குறிப்பிடவும்.

ஏனென்றால், உடலின் மூச்சே மாறவேண்டுமானால் உடலில் என்னென்ன மாற்றம் நிகழவேண்டும், இது சாத்தியமாகுமா என்பதில் இவனுக்கு சிறிது ஐயம், ஆனால் திருமூலர், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றவர்களின் பாடலில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் அறக்கருணை, சிவகதி, பரகதி, அவ்வுலகதி போன்ற குறிப்புகளால் அறியலாம். வேகாக்கால் என்பது H (hydrogen) ஆக இருக்கும் என்பது இவனது கருதலளவை. இதற்கு சான்றாக வள்ளலாரின் உபதேசத்தில், பிரமாண்டாதிகளில் அமுதக்காற்று (H) விசேஷ வியாபகமாயுள்ளதால், அவ்வண்டங்களிலுள்ள சூரிய, சந்திர உடுக்கள் முதலியவைகளும் சொற்பகாலத்தில் அழிவடைதலின்றி இருக்கின்றன. குறிப்பு: சூரியனின் கதிர்களால் ஹைட்ரஜனை உருவாக்கும் துணைக்கோளாக சந்திரன் இருந்தாலும், தனித்து ஒளிரும் தன்னையில்லாது ஆதலால் இதில் சந்திரனை குறித்தது தவறே. திருமூலரின் மறைமுக குறிப்பு, இது ஹைட்ரஜனைப் பற்றி இல்லையென்றாலும் உடல் அழியாதிருக்க பிராணக் கிரியாவும் சுடராழிக் கிரியாவும் முக்கியம் என்பார், இதில் இரகசியமே அபான வாயுவை ஆவியாக்கி அமுதக்காற்றோடு பிரணவத்தின் உச்சியில் இருக்கும் பிராணனோடு சேர்ப்பிப்பதில் இருக்கிறது. அடக்குதலான ஆபானனான CO2 யை கும்பித்து (அடக்கி) ஏற்றுவதில் இருக்கின்றது. காய சித்தி பகுதியில் திருமூலரின் பாடல்,


உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே – திருமூலர்.

சித்தர்களும் CO2 அதிகமான பிங்கலையான சூரியகலையில் சுவாசிக்க வேண்டுமென்பர். மேலும் நீரான அமுதம் வெளிப்பட்டே ஆகவேண்டும். அதற்கு ஹைட்ரஜன் முக்கியம். சரி இப்பொழுது சூரியகலையில் கும்பித்து எழுப்பும்போது இதற்கான வினை என்னவாக இருக்குமென்றால், (சுவாசிக்கும் காற்றில் 100 சதவிதம் O2-காவே எப்பொழும் இருக்காது)

CO2 + 4H2 → CH4 + 2H2O

மேற்சொன்ன வினையிலும் ATP ஆற்றலானது வெளிப்படும், ஆனால் இதில் கரணங்கள் அடங்கும் என்பர். இதில் முக்கியமானதே மீத்தேன் தான், இந்த மீத்தேனில் ஒரு H நீக்கம் பெற்று நமது DNAவுடன் சேர்வதை ஒரு குறையாகவும், வயதை அதிகரிப்பதில் நிறையாகவும் கூறுகின்றார்கள், இதற்கு மேல் உயிரியலாளர்களிடம் விட்டுவிடுவோம். உண்மையான குரு கிடைத்துவிட்டால், இந்த கும்பிக்கும் சாதனையை செய்து உடலை அழியா நிலைக்குக் கொண்டு செல்லலாம்.


சாகாத கல்வியே கல்வி ஒன்றேசிவம்
தான்என அறிந்தஅறிவே தகும்அறிவு
மலம்ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்
வேகாத கால்ஆதி கண்டுகொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே மெய்த்தொழில தாகும்
இந் நான்கையும் ஒருங்கே வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித்தாகி நிறைவான வரமே இன்பமாம்
மன்னும்இது நீ பெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.

இதன் உண்மை பொதுவானது என்பதால் வள்ளலார் சைவ சமயம் கடந்து சன்மார்க்கமாக அனைவருக்கும் தெரிவிக்கின்றார்.


மேலும் அழுகணி சித்தர் பாடல்களில்,
ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலை அறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோசம் ஆனேனடி
நோகாமல் நொந்து அல்லோ என் கண்ணம்மா!
நொடியில் மெழுகானேன் அடி

1. சாகாத்தலை:
சாகாத்தலை என்பது ஞானம். அருள் விளங்கும் இடம்..அதாவது ஆன்மா இருக்கும் இடம். இது பிறவி தோறும் உயிர் உடம்பு எடுத்து தொடர்ந்து பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கின்றது. அதன் விளைவு இறுதியில் மரணம் வந்து கொண்டே இருக்கின்றது.

சாகும் தலையாக உள்ள ஆன்மாவை சாகாத்தலையாக மாற்ற வேண்டும். அதாவது உயிர் உடம்பை அழிக்காமல் தன்வசமாக மாற்றி அருள் ஒளியாக மாற்றுவதே சாகாத்தலை என்றும் அதை பயில்வதற்கு சாகாக்கல்வி என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

ஆன்மாவை மாயா பூத தத்துவங்கள் மறைத்துக் கொண்டுள்ளன. தத்துவங்களை கடந்து தத்துவா தீதமாக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். அதுவே சாகாத்தலையாகும் மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்வதே ஆன்ம லாபம் என்பதாகும். இது ஆன்ம அனுபவ காட்சியில் அனுபவிப்பதாகும்.அனுபவத்தால் மட்டுமே அறியமுடியும்.

2. வேகாக் கால்
வேகாக்கால் என்பது அழியும் ஜீவனை அழியாத ஜீவனாக (உயிர்) மாற்றுவதே பிராணவாயுவாகிய உயிர்க்காற்றாகும். அமுதக் காற்றாகும் நாம் சுவாசிக்கும் காற்று நான்கு வகை கலவையாக உள்ளது. விஷக்காற்று, உஷ்ணக்காற்று, பூதக்காற்று, அமுதக்காற்று என்பவையாகும்.

நம் உயிர், உடம்பு பஞ்ச பூதங்களால். ஆன்மா வாழ்வதற்கு கட்டிக் கொடுக்கப்பட்ட பஞ்ச பூத உடம்பாகும். இதற்குள் 96 தத்துவங்கள் அடங்கிய உறுப்புக்களால் பின்னப்பட்டதாகும்.
தத்துவங்களை வெல்லுவதற்கும். தத்துவங்களை கடப்பதற்கும் வேகாத காற்றை சுவாசிக்க பழகிக் கொள்ள வேண்டும். இவ்வுலகில் உடம்பை உயிரை. வளர்க்க வாழ்வதற்கு விஷக்காற்று. உஷ்ணக் காற்று. பூதக் காற்று. ஏகதேச அமுதகாற்றை சுவாசித்துக் கொண்டு உள்ளன.

விஷக்காற்றை, உஷ்ணக்காற்றை, பூதக்காற்றை சுவாசிக்காமல் அழியாத காற்றாகிய வேகாத காற்றாகிய அமுதக் காற்றை மட்டும் சுவாசிப்பதே வேகாக்கால் என்பதாகும். அதற்கு அமுதகாற்று என்று பெயர். அமுதக்காற்றே வேகாக்கால் என்பதாகும் ஆன்மாவானது உடம்பு உயிரை விட்டு பிரியாமல் வாழ்வதற்கு வேகாக்காலான அமுதக்காற்றை சுவாசிக்க பழகிக் கொள்ள வேண்டும். அமுதக்காற்று காலை 03.00 முதல் 4.12 மணிவரை உயிர்களின் நன்மைக்காக பூமியை நோக்கி இயற்கையாக இறைவனால் அனுப்பப்படுகிறது.


3. போகாப்புனல்

நம் உடம்பில் பஞ்ச பூதங்கள் நிறைந்து இருக்கின்றது. அதில் உஷ்ணம். காற்று. தண்ணீரால் உடம்பு இயங்கிக் கொண்டு உள்ளது. போகும் தண்ணீர் போகாத தண்ணீர் என இருவகை உண்டு. போகும் புனல் என்பது உணவினால் உண்டாகும் இரத்தம்.போகாப்புனல் என்பது அருள் அமுதம். அமுதக்காற்றினால் ஆன்ம உணர்வால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையினால் உண்டாகுவதுதான் அருள் என்னும் அமுதமாகும். அமுதத் தாரகையாகும்.

பூத உணவால் உண்டாவது இரத்தம் இது நிலைக்காது வயோதிக காலத்தில் வற்றிவிடும் இறுதியில் மரணம் நிச்சயம். போகும்புனல் என்பதாகும் காலம் கடந்தாலும் மரணம் வந்து விடும் போகாப்புனல் என்பது அருள் அமுதம். உடம்பு உயிர் நிறைந்து ஒளி உடம்பாக மாற்றும் தன்மை உடையது. பஞ்ச பூதங்கள் அற்றது எனவே அதற்கு போகாப்புனல் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார். மனித வாழ்க்கையில் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் சன்மார்க்கிகள் மிகவும் முக்கியமாக தெரிந்து கொள்வதே. சாகாத் தலை. வேகாக்கால். போகாப் புனல் என்பதாகும்.

இது படிப்பால் அறிவது அல்ல. அனுபவத்தால் அறிவதாகும். சாகாத்தலை என்பது உடம்பை உயிரை விட்டு பிரியாமல் இருக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியாகும் வேகாக்கால் என்பது பூத சூடு பற்றாத கலவை இல்லாத அமுதக்காற்றாகும் போகாப்புனல் என்பது உடம்பை உயிரை ஆன்மாவை பிரியாமல் பாதுகாக்கும் அருள் அமுதமாகும். அமுத நன்னீராக அகத்திலே இருந்து சுரப்பதே போகாப்புனலாகும். உயிர் விளங்க உடல் விளங்க பூத உடம்பை அருள் ஒளியாக மாற்றுவதே போகாப்புனலாகும். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து, என்றும் அழியாத சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று மரணத்தை வெல்லும் துவாரமாகும். மனிதப் பிறவியில் மட்டும் தான் அனுபவ பக்குவத்தே இம்மூன்றும் வெளிப்படுகிறது. மற்றபடி எப்பொருளிலும், எவ்வுயிரிலும் இவை மறைமுகமாகவே செயல் படுகின்றது. இதற்கு அனுபவம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக சுருக்கமாக நிரப்பி வைத்துள்ளார்.


மேலும் சுத்த சன்மார்க்க மரபு என்பதை பாடல் மூலம் தெரியப்படுத்துகின்றார்.!
சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்¬ரை அறியேன்

ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்

மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ

ஏகாய உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே!.

சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்

மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே

தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.!

என்னும் பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்.

4) முப்பொருளும் ஒருபொருளாய் நின்றது எங்கே?
முப்பொருள்கள் என்பது அகார, உகார, மகாரங்களே. இந்த மூன்றும் ஒரு பொருளாய் நிற்பது ஓங்காரம் என்ற பிரணவத்தில்தான். பிரணவம்தான் ஒரு பொருளாக நமது மெய்ப்பொருள்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஓம் என்பதே ஒரு பொருள். அது நமது தேகத்திலும், மெய்ப்பொருளிலும், உயிரிலும் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதை சாதகன் அவனின் கட்செவியாலும், மெய்ப்பொருளினாலும் என்று காண்கிறானோ அப்போதே அவன் ஒரு பொருளான ஓங்கார நாதமாய் உருமாற ஆரம்பிப்பான்.

ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து வைத்துள்ள ஒரு பெயராகும்.

மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடப்படும் பெயர்கள் எல்லாம்
வேதத்திலிருந்து எடுத்தே இடப்பட்டன. அதாவது அந்த பெயர்கள் அவர்களுக்கோ, மற்ற பொருட்களுக்கோ அதன் தன்மையை வெளிப்படுத்துமாறு சூடப்பட்டன. ஆனால் மனிதர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் சில சமயம்? அவர்களுக்கு பொருந்தாமல் போய்விடுவதுண்டு. உதாரணமாக, வீரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு அதற்கு பொருத்தமில்லாமல் கோழையாக இருப்பான்.

அதே போல் இலட்சுமி என்ற பெயர் கொண்டவள் பிச்சைக்காரியாக இருப்பாள். சரஸ்வதி என்ற பெயர் வைத்துக் கொண்டு படிப்பறிவில்லாதவளாக இருப்பாள். ஆனால் இறைவனின் ஓம் என்ற நாமமும் அதன் முடிவற்ற பொருளும் அந்த ஒப்பற்ற ஓர் இறைவனுக்கே முழுமுதலாய் பொருந்தியிருக்கிறது.

மனிதன் பிறக்கும் போது நாமம் இன்றி பிறக்கிறான். பிறந்த சில நாட்கள் கழித்து? அவனுக்கு, பெயர் சூட்டும் விழா எடுத்து பெயர் இடப்படுகிறான். பின்பு? அவன் பெற்றோர், உறவினர் மற்றும் இந்த சமூகத்தார் அவனை அந்த பெயரால் அழைக்கின்றனர். மேலும் அவன் பெற்றோர் இட்ட பெயரைத் தவிர உறவுமுறை பெயர்களாலும் அவன்? அழைக்கப்படுகிறான்.

எடுத்துக்காட்டாக, அவனுக்கு திருமணம் ஆகியதும் கணவன் என்ற நாமமும், குழந்தை பிறந்தவுடன் அப்பா என்ற நாமமும், தன்னுடைய தாய் தந்தைக்கு மகன் என்ற நாமமும், தந்தையின் தந்தைக்கு பேரன் என்ற நாமமும், இவனுடைய மகனின் / மகளின் குழந்தைக்கு தாத்தா என்ற நாமமும் உறவுமுறைகளால் ஏற்படுகின்றன. இது தவிர, சில குணங்களையோ, குற்றங்களையோ குறிக்க சில பட்டப் பெயர்களும் அவனுக்கு சமுதாயத்தால் வாய்க்கின்றன.

உதாரணத்திற்கு இராமனையும், ஹனுமானையும், கிருஷ்ணனையும் நாம் பல பெயர்களால் அழைக்கிறோம்.காரணம் அவர்களின் பலம், வீரம், தீரம், சூர பராக்கிரம செயல்களைப் பாராட்டி. அதே போல் இறைவனையும் நாம் சிவன், விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி, சனி, குரு, இலட்சுமி, இந்திரன், மித்ரன், வருணன், யமன், வாயு, அக்னி, ஆப: என்று பல பெயர்களால் அழைக்கிறோம். மேற்கூறிய நாமங்கள் யாவும் இறைவனின் குணங்களையோ, தத்துவங்களையே குறிப்பனவே அல்லாமல் உருவங்களை அல்ல. மேலும் மற்ற எல்லா பெயர்களும் இறைவனின் நிஜ நாமமான ஓம் என்பதிலிருந்தே வெளி வந்தன. ஓம் இறைவனின் மிக முக்கியமான, தன்னியற்கையான நாமம். மற்ற நாமங்களெல்லாம் குணவாகுப் பெயர்களே!

ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க “ஓம்” என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது. வால்மீகி மூல இராமாயணத்தில் இராமன்பிரான் காலையில் எழுந்து ஓங்காரத்தை உபாசனை செய்தார் என்று சொல்லியிருக்க நாமோ வெறும் இராம நாமம் சொல்வது இராமபிரான்செய்ததற்கு எதிராக செய்வதாகும்.

மாண்டூக்ய உபநிடதம்: ஒன்றென்றிருக்கும் ஓங்காரம் அதர்வண வேதத்தைச் சேர்ந்த சில உபநிடதங்களில் மாண்டூக்ய உபநிடதம் முதன்மையானது. மண்டூகம் என்றால் தவளை. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளில் மனித மனம் மாறி மாறி சஞ்சரிப்பதைப் பற்றி இந்த உபநிடதம் விவரிக்கிறது. இம்மூன்று நிலைகளிலும் மனம் தவளைபோல் தாவிக்குதிப்பதாகக் கொண்டு இப்பெயர் வழங்கப்பட்டதாகவும் கூறுவர்.

இதனை அருளிய முனிவரின் பெயரால் வழங்கப்படுகிறது என்றும் கூறுவர். உலகம், உயிர்கள், இறைவன் என்று தனித்தனியாக எதுவும் இல்லை. இருப்பவை அனைத்தும் ஒன்றே என்ற மிக உயர்ந்த உண்மை இந்த உபநிடத்தில் ஓங்கார மந்திரத்தின் வாயிலாக விளக்கப்படுகிறது.

உயர்ந்தவற்றை நாடி
பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே உடையது மாண்டூக்ய உபநிடதம். ஒவ்வொரு மந்திரமும் ஆழ்ந்த கருத்துச் செறிவுடையது. இவற்றைப் புரிந்துகொள்வது கடினம் என்பதால் ஸ்ரீசங்கரரின் குருவிற்கு குருவாகிய ஸ்ரீகெளடபாதர் 215 சுலோகங்கள் கொண்ட ‘மாண்டூக்ய காரிகை’ என்ற நூலை இயற்றி உள்ளார்.

முதலில் சாந்தி மந்திரம் ஓதப்படுகிறது. உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள், உயர் வாழ்க்கையை நோக்கிய விஷயங்கள் இரண்டும் மனித வாழ்வில் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கின்றன. உயர்வாழ்க்கையை நோக்கிய பயணத்தைத் தேர்வு செய்ய நமது புலன்களுக்கு தெளிவும் உறுதியும் அவசியம். வேத காலத்தில் இயற்கையின் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவகப்படுத்தி வழிபடும் பழக்கம் இருந்தது.

சூரியன் உதிப்பது, கடல் அலைகள் தவழுவது, வானவெளியில் நட்சத்திரங்கள் மின்னுவது என்ற எல்லா இயற்கையின் ஆற்றல்களும், இந்திரன், வருணன், வாயு என்ற தேவர்களாக உருவகப்படுத்தப்பட்டன. இவ்வுலகில் மனித வாழ்வு வளம் பெற வேண்டும் என்றால், இந்த இயற்கை ஆற்றல்களும் வளமுற்றதாக இருக்க வேண்டும். அதற்கு தேவர்கள் துணை புரிய வேண்டும் என்று தொடங்குகிறது சாந்தி மந்திரம்.

உலகெங்கும் ஓங்காரம்
அடிப்படை உண்மைகளான உலகம், மனிதன், இறைவன் ஆகிய மூன்றும் ஓங்காரமே, ஒன்றே என்பதையே மாண்டூக்ய உபநிடதம் விளக்குகிறது. அகர உகர மகர ஒலிகளின் சேர்க்கையாகிய ஓங்காரம், இறைவனைக் குறிக்கிற குறியீடாகும். இந்த ஒலி மிகவும் புனிதமானதாக, மந்திரங்களுக்கெல்லாம் ஆதி மந்திரமாகப் போற்றப்படுகிறது.

“இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே. சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் ஓங்காரமே. மூன்று காலங்களையும் கடந்ததாக எது உள்ளதோ அதுவும் ஓங்காரமே” என்று முதல் மந்திரம் கூறுகிறது. “இவை அனைத்தும் இறைவனே. இந்த ஆன்மாவும் இறைவனே. இந்த ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது” என்று இரண்டாவது மந்திரம் கூறுகிறது. படைப்பில் காணப்படும் அனைத்தும் இறையம்சம் உடையவையே எனும் போது, நாமும் அதில் அடக்கம். நம்மில் உள்ள ஆன்மாவும் இறைவனும் ஒன்றே. இதில் உள்ள “அயமாத்மா ப்ரஹ்ம” என்ற சொற்றொடர் மிக முக்கியமானதாகும்.

நான்கு பரிமாணங்கள்
நாம் புற உலகை அனுபவிப்பது நமக்குத் தெரிந்த, நாம் காண்கின்ற நமது தூல உடம்பினால் ஆகும். மனம், புத்தி, நான்-உணர்வு, சித்தம் ஆகிய நான்கும் மனத்தின் பல்வேறு நிலைகள் ஆகும். ஆன்மாவின் முதல் பரிமாணம் வைசுவானரன் எனப்படுகிறது. ஏழு அங்கங்களும், பத்தொன்பது வாய்களும் கொண்ட வைசுவானரன் விழிப்பு நிலையில் புறவுலகை அனுபவிக்கிறான்.

கண்ணுக்குத் தெரிகின்ற பூமி, தெரியாத நுண்ணுலகமான சொர்க்கம் மற்றும் பஞ்ச பூதங்கள் ஆகியவை வைசுவானரனின் அங்கங்களாகக் கூறப்படுகின்றன. ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பிராணன் 5 மற்றும் மனம், புத்தி, நான் எனும் உணர்வு, சித்தம் ஆகியவை சேர்த்து 19 கருவிகளின் மூலம் நாம் புற உலகை அனுபவிக்கிறோம். இதுவே நமது முதல் பரிமாணம்.

ஆத்மாவின் இரண்டாம் பரிமாணம் தைஜஸன் எனப்படுகிறது. இதன் உணர்வு அகமுகமாக உள்ளது. ஏழு அங்கங்களும், பத்தொன்பது வாய்களும் கொண்ட தைஜஸன் கனவுநிலையில் மனவுலகை அனுபவிக்கிறான். இந்நிலையில் அனுபவங்கள் அனைத்தும் மனவுலகிலேயே நிகழ்கின்றன. ஆழ்மனம் விழித்திருக்கிறது. அந்த மனம் ஒரு புதிய உலகத்தை உருவாக்குகிறது. அதுவே கனவு.

ஆசைகளோ கனவுகளோ எதுவும் இன்றி ஆழ்ந்து தூங்குகின்ற நிலை ஆன்மாவின் மூன்றாம் பரிமாணமாகும். இந்த நிலையை அனுபவிப்பவன் பிராஜ்ஞன். இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. உணர்வு திரண்டிருக்கிறது. இவ்வாறு தூக்க நிலையை அனுபவிக்கிற ஆன்மா பிராஜ்ஞன் எனப்படுகிறது.

நான்காம் பரிமாணம் என்பது செயல்களற்ற புரிந்துகொள்ள முடியாத, அடையாளங்கள் இல்லாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட, விளக்க முடியாத நிலை அது. அதனை ஆன்ம உணர்வால் மட்டுமே அறிய முடியும். அங்கே பிரபஞ்ச உணர்வு இல்லை. இன்னும் விவரித்துச் சொல்ல வேண்டுமெனில் விழிப்பு நிலை, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் ஆன்மா இருக்கிறது. அம்மூன்றும் சேர்ந்ததும், அதே வேளையில் அவற்றைக் கடந்ததுமான ஒரு நிலைதான் இது.

ஆன்ம அனுபூதி
இந்த ஆன்மாவை ஒரு சொல்லால் குறிப்பிட வேண்டுமானால் அதுவே ஓம் என்னும் ஓங்காரம். ஸ்ரீ கெளடபாதரின் “மாண்டூக்ய காரிகை” இவ்வாறு சொல்கிறது. “அகாரத்தை உச்சரிக்கும் போது இதயத் தாமரை அவிழ்கிறது. உகாரத்தை உச்சரிக்கும்போது இதயத் தாமரை மலர்கிறது. மகாரத்தை உச்சரிக்கும்போது இதயத் தாமரையில் நாதம் எழுகிறது. அர்த்த மாத்திரை வேளையில் அது அமைதியில் ஆழ்ந்து போகிறது. இந்த இதயம் தூய படிகம் போன்றது. பகுதிகள் அற்றது. இதயத்தாமரை மலரும் போது பாவங்கள் அழிகின்றன. யோகத்தில் நிலைபெற்றவன் இந்த இதயத் தாமரையில் மேலான இறைவனைப் பெறுகிறான்”.

அதனால் ஒரு பொருள் ஓங்காரம் அன்றி வேறில்லை இப்போது புரிகிறதல்லவா.
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக உணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே எழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே. வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கும் என்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,

“ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி”
(திருமந்திரம் 765)

“ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்”
(திருமந்திரம் 941)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே – திருமந்திரம் 2627

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே – திருமந்திரம் 2628

என்பவற்றாலும் அறியலாம்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் “அ” என்பது எட்டும் “உ”என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு) “உ” எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. “ம்” ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் ஏற்படும் இன்பத்தை அது குறிக்கும் அத்துடன் “ஓம்” என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும். இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் “ஓ” என பிள்ளையார் சுழியாகவும், “உ” எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக ‘சிவலிங்கமும்’ ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.
முதல் எழுத்து:


“ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பரசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி”
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
“ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு”

– என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்கும் முதல் எழுத்தாகவும் இதுவே ” அ ” உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.


“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும்”
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது. ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார் என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.


“கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே” – மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
– அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத் தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.


இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 – ல்
அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி”

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல் காரணமென நன்கு தெளிந்துணரலாம். ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.


இதை விளக்கும்படி திருமூலர்,
ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.

அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.

“ஓம்” எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.

குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும். மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும். “ஓம்” என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.

ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக் கொள்ளும் போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம். போன்றவை எளிதானவைதானே! பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து – சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.

அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ‘ஓம்’ என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட வேண்டும்.


“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே” – என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.

வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக’ என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை ‘காகபுசண்டர்’ பாடலைக் காண்போம் :


பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ….

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்ப்பிக்கவே சிவனும் – சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப – துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.


ஓங்காரத்து உள்ளொளி உள்ளே உதயமுற்று
ஆங்காரம் அற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.

ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. அதனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.

“ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

5) முனை எங்கே? தலை எங்கே? முகமும் எங்கே?
முனை என்பது முக்கோணத்தைக் குறிக்கும் சொல்லாகும். முக்கோணங்களுக்கு மூன்று முனைகள் இருக்குமல்லவா. ஒரு முனை அகாரம், மறுமுனை உகாரம். மேல்முனை மகாரம். இந்த மூன்று முனைகளும் உருவாகாமல் மூன்றாவது கண் தோன்றாது. எப்போது இம்மூன்று முனைகளும் சமபக்க முக்கோணமாக உருமாற்றம் பெறுமோ, அப்போதுதான் ஞானக்கண் தோன்றும். எப்போது இந்த முக்கோணத்தில் பிராண, அபான வாயுக்கள் பயணம் செய்ய ஆரம்பிக்குமோ, அப்போதுதான் உயிர்க்கண் நம் முன்னே தோன்றும். எப்போது இந்த பிராண, அபான வாயுக்களோடு அமுதக்காற்று ஒன்று சேர்ந்து சுழிமுனை நாடியில் பிரவேசம் செய்யுமோ, அப்போதுதான் உயிருக்குள் இருக்கும் அருட்கண் சிவக்கலையோடு வெளித்தோன்றி காட்சியளிக்கும்.

ஏழாவது சக்கரம்தான் தலை ஆகும். சகஸ்ராரம்தான் தலை. நம் இருவிழிகள் தான் முகமாகும். சகஸ்ராரத்தில் இருக்கும் விழிகளில் அருட்கண்ணைப் பார்ப்பதைத்தான் அகத்தியர் முனை, தலை, முகம் என்றார்.

6) நற்கமலம் ஆயிரத்தெட்டு இதழும் எங்கே?
நமது குலகுருமார்களில் ஒருவரான போகர் சித்தரின் 7000 பாடலில் 75 மற்றும் 76வது பாடலாக வரும் இப்பாட்டை நன்றாகக் கேளுங்கள்.

தானான மனோன்மணியைத் தாண்டி அப்பால்
தனித்ததோர் எட்டுவிரல் மேலேகேளு
கோனான குருபதம்தான் கூட்டிப்பாரு
குறிப்பான இதழ்களோ ஆயிரத்தெட்டு
ஆனான நடுமையம் ஐங்கோணமாகும்
அகாரம் உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து அஞ்சும்
நலத்த ஐங்கோணத்தில் நிற்கும் பாரே.

பார்க்கவே உகாரமாய் நடுமையத்தில்
பரிசுத்த ஒளியாகி உதிக்கும்பாரு
பார்க்கவே நிகாரத்த நிர்மலம்தன் வடிவாம்
பார்த்ததொரு வாசியைத்தான் அதற்குள் வைத்து
நேர்க்கவே ஓடாமல் நிறுத்திப்பாரு
நிலையாத பிறவிஅறும் பூரணமும் உட்கொள்ளும்
ஆர்க்கவே அடிவாழ வேதாந்தத்தின்
அனாதிஎன்ற பொருள் ஒருவர்க்கு அறியொண்ணாதே.

மனோன்மணி என்றால் என்னவென்பதை முதலில் தெரிந்து கொண்டால்தான், தனித்திருக்கும் எட்டுவிரல் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மனோன்மணி = மனம்+உன்+மணி. உன் மணியான கண்மணியில்தான் மனம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள். இதை விட்டுவிட்டு மண்டைக்குள்ளே போய் மனோன்மணியைத் தேடி அதற்கு ஒரு பிரமாண்ட வேதாந்த, நாதாந்த, சித்தாந்த விளக்கமெல்லாம் கூறி தானும் அறியாது கேட்பவர்களையும் அறியவிடாது அறியாமையிலேயே சாகக்கூடாது.

அப்ப, மனோன்மணி என்பது கண்மணி என்பது தெரிந்தாகிவிட்டதல்லவா. அடுத்து தனித்ததோர் எட்டுவிரல் மேலே என்ற வாக்கியம். எட்டுவிரல் என்றால் தனியாக எட்டு விரல்களை எண்ணி எடுத்துக் கொள்ளக் கூடாது. எட்டுவிரல் என்பது, வலது திருவடியில் கைகளால் செய்யப்படும் அஞ்சலித் தந்திரமாகும். அது இன்னும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அந்த அகாரமான வலது திருவடியில் கைகளைக் கொண்டு அஞ்சலி செலுத்தி, கண்மணிக்குள் பயணிக்க வேண்டும்.

அடுத்த வார்த்தை கோனான குருபதம்தான் கூட்டிப் பாரு என்பது. கோனான என்பது எந்தவிடத்திலும் வளைந்து, நெளிந்து காணப்படாதது என்று பொருள். குருபதம் என்பது குரு கற்றுக் கொடுக்கும் பிரமஞானக் கலை. அப்படிப்பட்ட ஞான சற்குருவிடம் பதமாக, இதமாக, கனிவாக, பணிவாக இருந்து கொண்டு கற்றுக் கொள்ளும் வித்தையே குருபதம் என்று சொல்லப்பட்டது.

அடுத்து இருப்பது அதாவது கண்மணியாகிய மெய்ப்பொருளைத் தாண்டி மூளைப்பகுதி இருக்கிறதல்லவா. அந்த மூளையில்தான் ஆயிரம் இதழ்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மூளையானது வலது மூளை, இடது மூளை என இரு பிரிவாக பிளவுபட்டுள்ளன. மூளையானது மடிப்பு மடிப்புகளாக உள்குழிந்து மேடு தட்டியும் காணப்படுகிறது. இந்த மூளைப்பகுதியானது ஒளி அணுக்களால் ஒளிரக்கூடிய தன்மை கொண்டதாக விளங்குகின்றன. இந்த ஒரு பக்க மூளையில் மொத்தம் 500 மடிப்புகள் இதழ்களைப் போல மடிந்து மடிந்து காணப்படும். இந்த 500 இதழ்களும் நான்கு மடல்களாகப் பிரிந்து காணப்படும். இதைத்தான் முன் மடல், பாரிட்டல் லோப், டெம்போரல் லோப் மற்றும் ஆக்ஸிபிடல் லோப் என விஞ்ஞானம் அழைக்கிறது. இதைப்போல மற்றொரு பக்க மூளையும் 500 இதழ்களாகவும் 4 மடல்களாகவும் பிரிந்திருக்கும். ஆக மொத்தம் 500+4+500+4=1008 இதழ்கள் மூளையில் நிரம்பிக் காணப்படும். இந்த 1008 இதழ்கள் நம் உயிரை மலர வைத்து ஒளிநிலைக்குக் கொண்டு செல்வதற்காக இறைவனால் சூக்கும ரகசியமாக நமக்குள் பொதித்து வைக்கப்பட்டுள்ளன. இதை நாம் உணராமல்தான் இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு ஆயிரத்தெட்டு நாமாவளை சகஸ்ர நாமாவளி என்று சொல்லிக் கொண்டு இறைவனை புறத்திலேயே வாய் விட்டுச் சொல்லி சத்தியத்தை அறியாமல், உணராமல் இருக்கின்றோம்.

ஆயிரெத்தெட்டு நாமாவளி நூல்களில் போடப்பட்டிருக்கும். ஆனால், அதன் பெயர் சகரஸ்ரம் என்றே அழைக்கப்படுகிறது. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்றுதான் பொருள். அப்படியிருக்க ஆயிரெத்தெட்டு எப்படி வந்தது? மேலே சொன்னபடி தான் வந்தது. அந்த 8 மடல்களும் சேர்ந்தே ஆயிரம் 1008 இதழ்களாக விரிந்தது. இந்த இதழ்களை எல்லாம் ஒன்று பார்த்தோம் என்றால் அது தாமரைப் பூவின் வடிவொத்தை ஒத்திருக்கும். அதனால் மூளையை கமலம் என்ற தாமரையோடு ஒப்பிட்டுப் பாடினார்கள் கவிஞர்கள், ஞானிகள். உயிரை மலர வைக்கும் அளவுக்கு நன்மையைத் தரக்கூடிய தாமரை மலராக மூளை விளங்குவதால், அகத்தியப் பெருமான் மூளையை நற்கமலம் ஆயிரத்தெட்டு இதழ்கள் என்றார்.

7) நாலு கை ஒரு பாதம் ஆனது எங்கே?
பாதம் என்றால் அடியாகிய திருவடியைக் குறிக்கும். அது இருப்பது தலையில். பாதம் என்றால் திருவடியே. அடுத்து நாலு கை என்றது திருவடியில் இருக்கும் அடுத்தடுத்த நான்கு பாதைகளைக் குறிக்கும். 1.சுழிமுனை நாடி, 2.வஜ்ர நாடி, 3.சித்திரிணி நாடி, 4.பிரம நாடி. இவையே நான்கு கைகள். இந்தக் கைகளின் வழியாகத்தான் அமுதக்காற்று உயிர்க்கூட்டிற்குப் பயணம் செய்து சென்றடையும். இந்த நான்கு நாடிகளைப் பற்றி நாம் ஏற்கனவே பல இடங்களில் விவரமாகச் சொல்லியிருக்கிறோம். பிரமஞானத் தீக்ஷையின்போது இதை விரிவாகச் சொல்லியிருக்கிறோம். மறந்தோர் நமது இணையதளத்தில் சென்று மீண்டும் ஒருமுறை கேட்டு அறிவில் ஏற்றிக் கொள்ளலாம்.