
ஓ………………ம் ஓ………………ம் ஓ…………………ம்
சாகா வரமும் தனித்த பேரறிவும்
மாகாதலில் சிவவல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு
நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே
சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தான்அந்தமிலாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே
சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதலாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே (அகவல் : 1255-1290)
அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி
வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !
குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !
நமது விதைக்குள் விதை தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞானப் பறவைகளுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு வள்ளற்பெருமான் திருவருட்பா ஆறாம் திருமுறையில் அருளிய சிற்சபை விளக்கம் என்ற பதிகத்தின் ஞானத்தைத்தான் உரையாட இருக்கின்றோம். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம்.
சிற்சபை விளக்கம். முதலில் நீங்கள் அனைவரும் இந்த சிற்சபை என்றால் என்ன என்பது பற்றியும், அது எங்கே இருக்கிறது என்பதைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் என்னென்ன என்பதைப் பற்றியும் தெரிந்தால் அல்லாது, இப்பதிகப் பாடல்களின் ஞானத்தை புரிந்து கொள்ளல் இயலாது. அதனால் வள்ளலாரின் திருவாக்கிலிருந்தே சிற்சபைக்கான விளக்கத்தினைத் தெரிந்து உணர்ந்து கொள்ளலாம், வாருங்கள் அன்பர்களே. அட்டகத்தில் எட்டாம் பாடலாக வரும் பாடலின் ஞானத்தை சிறிது ஆராய்வோமாக.
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
இதுஅது எனஉரைப்ப அரிதாய்
தங்குமோர் இயற்கைத் தனி அனுபவத்தைத்
தந்து எனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய்ப்
புத்தமுத ருத்தி என் உளத்தே
அங்கையிற் கனிபோன்று அமர்ந்து அருள்புரிந்த
அருட்பெருஞ்ஜோதி என் அரசே ! (அட்டகம் பாடல் எண். 8)
இந்தப் பாடலில் சிற்சபையைப் பற்றி வள்ளற்பெருமான் விளக்குகிறார்.
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் நம் அண்ணாக்கு மேலே சிரநடுவுள்ளே எழுந்தருளி இருக்கிறார். எப்படி எழுந்தருளி என்றால், உயிரொளியின் அணுவுக்குள்ளே 1000 கோடி சூரியப் பிரகாசமாக எழுந்தருளியிருக்கிறார்.
சிரநடுவில் கடவுள் விளங்கும் இடம்தான் சிற்சபை இருக்கும் இடமாகும். இந்த சிற்சபை உலகத்தின் அனைத்துயிர்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அணுவினைவிட மிகச்சிறிய அணுத்துகள்களிலும்கூட இறைவன் இருக்கிறார். இதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அணுத்துகளாக இருக்கும் இறைவன்தான் அணுக்கருவிலும் இருந்து கொண்டு, உலக உயிர்களின் கருவையே உருவாக்கிக் கொண்டு வருகிறார்.
தாயின் வயிற்றில் உருவாகும் கருவின் நடுவிலும் இறைவன் பேரொளியாக இருக்கிறார். இந்த அருட்பெருஞ்ஜோதியைச் சுற்றித்தான் முதலில் குழந்தையின் தலைப்பகுதியும், பிறகு மற்ற உடல் பகுதிகளும் உருவாகின்றன.
தாய் வயிற்றில் இருந்து வெளிவந்த குழந்தைக்கு அதன் சிரநடுவில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதிதான் அதற்கு வேண்டிய அத்தனை ஞானங்களையும் சத்தியங்களையும் இயற்கை உண்மைகளையும் உணர்த்துகிறது.
இதுதான் எங்கும் எப்பொருளிலும் நிறைந்துள்ள எல்லையற்ற இறைவனின் இயற்கை விளக்க சத்தியமாகும்.
கருவளர்ச்சியில் முதற் பகுதிகளாக உண்டான அருட்சுடர் ஒளியின் அணுதான் ஆன்மா என்ற சிற்சபை ஆகும். இதில்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருநடனம் ஆடிக் கொண்டு சுயம்பிரகாசமாக வீற்றிருக்கிறார். அவர் நம்முடைய தலையில் நடுவில் இருந்துகொண்டு எல்லா ஞான விளக்கங்களையும் நமக்குத் தந்து கொண்டிருக்கிறார்.
நம் சிரநடுவில் இருப்பதுபோலவே, மற்ற பொருள்களிலும் இறைவன் மையக்கருக்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மற்ற பொருள்களில் இறைவன் இருக்குமிடம் பொற்சபையாகும். பொற்சபையில் ஆண்டவன் இருப்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
ஆனால், நம்முடைய விழிப்புணர்வு மூலமாக பொற்சபையில் இறைவன் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.
நம் ஆன்ம சிற்சபையில் இறைவன் வெளிப்பட்டு இருப்பதையோ, நம் அனுபவ பூர்வமாகவேதான் அறிந்து கொள்ள முடியும். அந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவே பிரமஞானிகள் பிரமஞான வித்தையை நமக்கெல்லாம் அருளியிருக்கிறார்கள்.
நம் சிரநடுவில் இருக்கின்ற சிற்சபையில் விளங்கும் இறைவனை நாம்தான் அனுபவித்து, அனுபவித்து மெய்யின்பம் கொள்ள வேண்டும். மெய்யின்பம் பெற வேண்டுமென்றால், அதற்கு மெய்யாகிய உயிரின் இன்பத்தைப் பருகத் தலைப்பட வேண்டும். அதற்கு நாம் ஒரு ஞானக் கர்மத்தைச் செய்ய வேண்டாம். ஞானக் கர்மம் செய்யாது, ஞானம் கிடைப்பதென்பது குதிரைக்கொம்பான அரிதினும் அரிதான விசயம்தான். ஞானக் கர்மம் ஆற்றாதவர்களுக்கு இதுதான் இறைவன் என்று நேரடியாக நம்மால் சுட்டிக் காட்டியோ, உணர்வால் உணர வைக்கவோ, புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்டோ காட்ட முடியாது.
அவரவர் சிற்சபையில் விளங்கும் இறைவனை அவரவர்கள்தான் அனுபவித்து உணர்ந்து கொள்ள வேண்டும். இதைத்தான் சிவவாக்கியாரும் இப்படிச் சொல்கிறார்.
அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவரெவர்க்கு உதவினர் எவரெவர்க்கு உதவிலர்
தவரவர் நினைவது தமை உணர்வதுவே
நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதியிலார் செய்தவமும் பூரணமாஞ் – சோதி
கழல் அறியா ஆசானுங் கற்பிலரும் சுத்த
விழல்எனவே நீத்து விடு
மற்றவர்களுக்கு சுட்டிக்காட்ட முடியாத இறைவனை எப்படி உணர்ந்து தெளிந்து அனுபவிப்பது ?
நம் சிரநடுவில் இருக்கும் சிற்சபையில் சிற்றொளிப் பிழம்பாக விளங்குகிறான் இறைவன். சிற்றொளிப் பிழம்பாக விளங்கும் இறைவனை நம் புறக் கண்களால் பார்க்க முடிவதில்லை. புறக்கண்களுக்கு அந்த ஆற்றல் இல்லை என்பதைத்தான், நமது பிரமஞானிகளும் ஆதித் தமிழ்ச் சித்தர்களும் பிரமஞானத் தவம் என்ற சாகாக் கல்வி வித்தையை கண்டறிந்து, அனுபவித்து மெய்யால் உணர்ந்து, அது முற்றிலும் சத்தியத்திலும் சத்தியமான ஒரு கலை என்பதைக் கண்டு, அவர்களின் சீடர்களுக்குப் போதித்து வந்தார்கள். அந்த கலைகளின் மூலமாகவே அவர்கள் இறைவனை அவர்களின் சிற்சபையில் சிற்றொளிப் பிழம்பாகக் கண்டு, அதையே நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து பழகிப் பழகி இறைவனை அவர்களுக்குள்ளே கண்டு இன்புற்று பேரின்பம் அடைந்து வருகிறார்கள்.
இந்தப் பழக்கம் முடிவில் அந்தச் சிற்றொளிப் பிழம்புடன் நம்மை அசைவில்லாமல் செய்து அந்த ஒளியோடே தங்கும்படியாகச் செய்துவிடுகிறது.
அந்த ஒளிச் சுடரே நாமாக ஆகிவிடுகிறோம். நாமே அதுவாகவும் ஆகிவிடுகிறோம். அதுதான் நம் உயிரொளியின் தன்மையாகும்.
அது எங்கும் நிறைந்து இருப்பதால் நாமே அதுவாய் எங்கும் இருப்பதாக நினனத்துக் கொள்ள வேண்டும். இந்த நினைவுடன் விருப்பு வெறுப்பின்றி, அன்பும் கருணையும் கொண்ட உணர்வுடன் வாழ்ந்து வர வேண்டும்.
என்னுடைய சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்கள் அடிக்கடி சொல்லுவார். நம்மைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு அவர்களின் உயிர் பற்றிய ஞான விளக்கப் பணியும், ஞான அறிவு விளக்கப் பணியும் செய்து வர வேண்டும் என்று. எம் சற்குருவின் வேத மொழிகளை சிரமேற்கொண்டே இப்படி உங்களோடு ஒவ்வொரு வாரமும் விதைக்குள் விதை தளத்தில் ஞான சத்சங்கத்தை நிகழ்த்திக் கொண்டு வருகின்றோம். நல்லது.
இவ்வாறு மற்ற உயிர்களுக்கு அவர்களின் ஞான விடுதலைக்காக உயிர்ப்பணி செய்து வந்தால் நம் சிரநடுவுள்ளே சுயம்பிரகாசமாக இருக்கும் ஞானச் சுடரே அமுத ஜோதியாக மாறி, உயிருக்கு மேல்தளத்தில் இருக்கும் அமுதக் கலசத்தை உருக்கி, அமுதப்பாலை சொரிய ஆரம்பிக்கும். அதனால் நம் தேகம் அமுத ஆற்றலோடு விளங்க ஆரம்பிக்கும். அமுதத் தேன் நம் உயிரிலும், உடம்பிலும் நிரம்பித் ததும்ப ஆரம்பிக்கும். அப்போதுதான் இறைவனின் தன்மய ஆனந்தத்தை நாம் உணர்ந்து அனுபவிக்க முடியும்.
இறைவனின் தன்மை என்ன தெரியுமா? அவன் எப்போதுமே தன்மய ஆனந்தம் என்ற தண்வெப்ப நிலையில்தான் சதா ஜீவித்துக் கொண்டிருப்பான். நம் தேகம் சுடுவெப்பத்தால் அதாவது அசுத்த உஷ்ணத்தால்தான் இருந்து வருகிறது. இந்த அசுத்த உஷ்ணம் நீங்க வேண்டுமென்றால், நம் தேகத்தின் வெப்ப ஆற்றல் குளிர் வெப்பமாக அதாவது தண்வெப்ப ஆற்றலாக மாற வேண்டும். நாம் தண்வெப்பமாக மாறாத வரையில் இறைவனைக் காண்பதென்பது முடியாத காரியமாகும்.
இந்த பேரின்ப அனுபவத்தைத்தான், மரணமிலாப் பெரு வாழ்வைத்தான். முத்தேக சித்தியைத்தான், வள்ளலார் அடைந்து அனுபவித்து வருகிறார்.
வள்ளலார் சிற்சபை முன் நிற்கிறார். அவர் மனம் அருள் உணர்வாகவும். சித்தம் அருள் விளக்கமாகவும், புத்தி அருள் அறிவாகவும். அகங்காரம் அருள் செயலாகவும் விளங்குகின்றன.
அவர் உள் இருக்கும் உள் ஒளியான அருட்பெருஞ் ஜோதியை அருளாட்சி செய்யும் அருட்பெருஞ் ஜோதி அரசே என்கிறார் வள்ளலார்.
தம் சிரநடுவில் இருக்கும் சிற்சபையே எங்குமாய் விளங்குவது என்கிறார். எங்கும் நிறைந்துள்ள இறைவனே தம் முழு இயல்போடு தன் சிர நடு சிற்சபையில் எழுந்தருளி தம்மை ஆட்கொண்டுள்ளார் என்கிறார்.
வள்ளலார் பெற்ற இந்த இறை அனுபவம், வள்ளலாரைப் போன்ற பரிபூரண பக்குவியின் ஆன்ம சிற்சபையில் மட்டுமே வெளிப்படும். மற்றவர்களிடம் வெளிப்படுவதில்லை.
சுத்த சன்மார்க்கத்துக்குப் படிகள் மூன்றுள்ளன. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.
சுத்த சன்மார்க்க நடை உடையவர்கள், தாம் ஏறவேண்டிய படிகள் மூன்றுதான். இந்த மூன்று படிக்கட்டுகளில் முதலில் ஒன்றாம் படிக்கட்டு என்பது என்ன? என்று பார்ப்போம்.
“சடாந்த சன்மார்க்கம்” என்பதே அந்த ஒன்றாம் படிக்கட்டு. இந்தப் படிக்கட்டைத்தான் நாம் முதலில் ஏறி கடக்கவேண்டும். சடாந்த சன்மார்க்கம், சடாந்தங்களின் பொதுவாக அமைந்துள்ளது. ஆறு வகையான முடிவுகள்தான் சடாந்தம் எனப்படுகின்றது.
சைவ சமயம் கூறும் ஆறு முடிபுகளை வள்ளற்பெருமான் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆறு முடிபுகளையும் தமது அனுபவத்தால் செம்மைப் படுத்தினார். அதற்கு அடையாளமாக ஒவ்வொன்றிற்கும் அடை மொழியினை சேர்க்கின்றார். 1.தூய கலாந்தம், 2.ஞான யோகாந்தம், 3.விமல போதாந்தம், 4.பெரிய நாதாந்தம், 5.சுத்த வேதாந்தம், 6.சுத்த சித்தாந்தம் என்று தமக்கே உரிய அனுபவத்தால் வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றார். ஏன் வேறுபடுத்தினார் என்றால்? சைவ சமயவாதிகளால் அனுபவிக்கப்பட்ட ஆறு முடிபுகளின் அனுபவங்களும் “சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள்” என்றும் அவற்றை பின்பற்ற வேண்டாம் என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளற்பெருமானுக்கு தடை செய்து அருளியிருக்கின்றார். (சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்)
எனவே வள்ளற்பெருமான் கூறும் ஆறு முடிபுகள் என்பது சைவ சமயம் கூறும் ஆறு அந்தம் அல்ல என்பது தெளிவாகின்றது. ஆனாலும் சமயத்தில் உள்ள ஆறு அனுபவங்களும், மிகச்சிறிய அனுபவங்களாக சுத்த சன்மார்க்க அனுபவத்திலும் தோன்றும்.
வள்ளற்பெருமான் கூறியிருக்கும் மேற்காணும் ஆறு முடிபுகளுக்கும் பொது என்பது எதுவெனில்?, சுத்த வேதாந்த அனுபவமும், சுத்த சித்தாந்த அனுபவமும் இணைந்த அனுபவத்தைத்தான் பொது எனக்கூறுகின்றார். இந்த “பொது”தான் சடாந்த சன்மார்க்கமாகும். இவ்வனுபவம் சுத்த சன்மார்க்கத்தின் முதல் படியாகும்.
இரண்டாம் படிக்கட்டு “சமரச சன்மார்க்கம்” ஆகும். மேற்காணும் ஆறு முடிபுகளின் முடிபும் தனக்கு முதன்மையாக்கி அதனையும் கடந்து மேல் நிலை அனுபவம் அடைவது சமரச சன்மார்க்கம் ஆகும். இவ்வனுபவத்திற்கு பெயர் குருதுரிய அனுபவம் ஆகும். தத்துவராயர் போன்ற மகான்கள் பெற்ற அனுபவமானது சமரச சன்மார்க்க அனுபவமாகும் என்று வள்ளலார் குறிப்பிடுகின்றார். இந்த அனுபவம் இரண்டாம் படிக்கட்டு ஆகும்.
மூன்றாம் படிக்கட்டு “சுத்த சன்மார்க்கம்” ஆகும். மேற்காணும் இரண்டு படிக்கட்டுகளை சைவ வேதாகமங்களிலும், தத்துவராயர், தாயுமானவர் போன்ற மகான்களாலும் ஒருவாறு (முழு அனுபவம் இல்லாமல்) அனுபவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் படிக்கட்டு என்பது இதுவரை எவர் ஒருவராலும் ஏற முடியாமல் இருந்து வந்துள்ளது. மூன்றாம் படிக்கட்டை அடைந்தவர் நமது வள்ளற்பெருமான் மட்டுமே.
இவ்வனுபவத்தை சுத்த சிவ துரியாதீத நிலை என்பார் வள்ளலார். சிவ அனுபவம், பரசிவ அனுபவம் இவை இரண்டினையும் மறுத்தது சுத்த சிவ அனுபவமாகும். சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இவை இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். முதலில் நின்ற சமய மத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். எனவே சடாந்த சன்மார்க்கம் எனவும், அதன் மேற்பட்டு சமரச சன்மார்க்கம் எனவும், அதன் உச்சியில் சுத்த சன்மார்க்கம் எனவும் மூன்று நிலை சன்மார்க்க அனுபவங்களை பெறுவதே நமது நோக்கம்.
சத்தென்னும் உண்மையை தெரிவிக்கின்ற மார்க்கம். ஆதலால் இம்மார்க்கம் எவ்வகையிலும் உயர்வுடையது. பாவனாதீத அதீதம், குணாதீத அதீதம், லட்சியாதீத அதீதம், வாச்சியாதீத அதீதம் ஆகியவையே சுத்த சன்மார்க்கமாகும். எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யசானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மூன்றாவது படிக்காட்டாகிய சுத்த சன்மார்க்கத்தின் முடிபாகும்.
மேற்காணும் மூன்று படி நிலைகளையும் சிற்சபை, பொற்சபை, சுத்த ஞானசபை அனுபவங்களாக குறிக்கின்றார். சிற்சபை அனுபவமானது சடாந்த சன்மார்க்க அனுபவமாகும். பொற்சபை அனுபவமானது சமரச சன்மார்க்க அனுபவமாகும். சுத்த ஞானசபை அனுபவமானது சுத்த சன்மார்க்க அனுபவமாகும்.
சிற்சபைக்கு அடுத்து பொற்சபை, பொற்சபையை கடந்து சுத்த ஞானசபைக்கு செல்ல வேண்டும். இதனை விளக்கவே வடலூரில் சுத்த ஞானசபைக்குள் சிற்சபையும், பொற்சபையும் வள்ளற்பெருமான் அமைத்துள்ளார்.
சிற்சபை என்பது நெற்றிக்கண் அல்லது புருவ மத்தி என்பதாகும்.
புருவமத்தியில் அதாவது சிற்சபையில் ஆன்மா இருக்குமிடம் பொற்சபையாகும்.
ஆன்மாவின் ஒளி / வெளிச்சம் / பிரகாசமே ஞானசபையாகும்.
சிற்சபையை அறிவதற்கு நாம் சடாந்த சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும்.
பொற்சபையை அறிவதற்கு நாம் சமரச சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும்.
ஞானசபையை அறிவதற்கு நாம் சுத்த சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும்.
இவை மூன்றும் ஒருங்கே அடைந்த மகான் நமது வள்ளலார் மட்டுமே. மற்ற மகான்கள் எல்லாம் சிற்சபை அனுபவத்தையே பெரிதும் அடைந்துள்ளனர். அதில் மிகச்சிலரே பொற்சபை அனுபவத்தையும் அடைந்துள்ளனர். சமயம், மதம், சடங்குகள் கடந்து ஆன்ம நேய உணர்வுடன் உயிரிரக்கம் கொண்டவர்களால் மட்டுமே ஞானசபை அனுபவத்தைப் பெறமுடியும்.
சிற்சபை அனுபவம் பெற்றவர்கள் சுவர்ணதேகம் உடையவர்கள்.
பொற்சபை அனுபவம் பெற்றவர்கள் பிரணவ தேகம் உடையவர்கள்.
ஞானசபை அனுபவம் பெற்றவர்கள் ஞான ஒளிதேகம் உடையவர்கள்.
இந்த மூன்று தேகங்களும் பிறர் பார்வையிலிருந்து மறைபடும். முதல் இரண்டு தேகத்திற்கு மரணம் உண்டு. மூன்றாவது ஞான தேகத்திற்கு மட்டுமே மரணமில்லா பெருவாழ்வு உண்டு.
பெரிய நாதாந்தப் பெருநிலை வெளியெனும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ் ஜோதி – 40
யோகத்தின் பயனாய் விளைவதே அந்தங்கள் ஆறும். இங்கே நாதாந்தம் பேசப்பட்டாலும், அவை சமயங்களில் கூறப்பட்டுள்ள நாதாந்த அனுபவத்தையும் கடந்து பெரிய நாதாந்தமாக குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். இப்படிப்பட்ட பெரிய நாதாந்த அனுபவத்தை நமக்கு யோக அனுபவங்கள் கொடுக்காது. ஆன்ம தயவினை பெருக்கவித்து அதன் மூலம் நாம் ஈட்டும் சாதனையே இந்த பெரிய நாதாந்தமாகும். வள்ளற்பெருமான் கூறும் ஆறு அந்தங்களுமே யோக நெறியால் வரத்தக்கது அல்ல. ஆன்ம தயவினால் வரக்கூடியது என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். ஆனாலும் யோக நெறியில் நாம் அடையும் அனுபவத்தையே இன்னும் முழுமையாக தயவு வழியில் காண்கின்றோம்.
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுத டி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுத டி. -4947
தமது ஆன்ம ஒழுக்கத்தினால் தாம் அனுபவித்ததை பாடலாக தெரிவித்துள்ளார் வள்ளற்பெருமானார். இங்கே ‘வானம்’ என்றதை ‘பெருநிலை வெளி’யாக அகவலில் குறிப்பிட்டுள்ளார். ‘குயில்’ என்பதே ஒலி என்கின்ற நாதத்தை குறிக்கின்றது. ‘மயில்’ என்பது ஒளி என்கின்ற விந்துவைக் குறிக்கின்றது.
நமக்கு ‘ஒளி’ அனுபவம் கிடைத்தப் பிறகே ‘ஒலி’ அனுபவம் கிட்டும். ஒளி என்பது காட்சி பொருள். ஒலி என்பது கேள்வி பொருள். முதலில் கண் அனுபவம். அதன் பிறகு காது அனுபவம். கண் காது இவை இரண்டுமே புற இந்திரியங்கள் அல்ல. அகக்கண், அகக்காது கொண்டு பார்த்தும் கேட்டும் மகிழ்பவையாகும். அகத்திலே நாம் காணும் ஒளிக்காட்சி மறைவை நாம் கலாந்தம் என்றும் ஒளிப்பாழ் என்றும் கூறுவோம். கலாந்த நிலைக்கு அடுத்து யோகாந்த நிலையும் போகாந்த நிலையும் கடந்துதான் நாதாந்த நிலைக்கு வரவேண்டும். நாதாந்த நிலை என்பது ஒலி பாழாக வேண்டும். மேற்காணும் பாடலில் ‘மயில் குயில் ஆச்சுதடி’ என்பது நாத நிலையினைக் குறிக்கும். அதற்கும் மேற்பட்டு மயிலும் குயிலும் இல்லாத நிலையே நாதாந்த நிலையாகும். இதனை ‘வெளிப்பாழ்’ என்பர்.
இப்படிப்பட்ட பெரிய நாதாந்த அனுபவத்தை பெருநிலை வெளியாகக் காண்கின்றார் வள்ளற்பெருமான். யார்க்கும் எளிதில் கிடைக்காத அரிய சிற்றம்பலத்திலே பெரிய நாதாந்த அனுபவத்தை கொடுத்த அருட்பெருஞ்ஜோதி இறைவனே.
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 42
சமயத்தில் கூறுகின்ற போதாந்தம், யோகாந்தம் மற்றும் வேதாந்தம் இவைகளின் மொத்த அனுபவமே ‘சுத்த வேதாந்தம்’ என்கின்றார் வள்ளற்பெருமான். “வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-401)
போதாந்தம் – அறிவின் முதிர்ச்சி
யோகாந்தம் – யோகத்தின் முதிர்ச்சி
வேதாந்தம் – வேதத்தின் முதிர்ச்சி
இவை மூன்று முதிர்ச்சியின் முதிர்ச்சி எதுவோ அதுவே சுத்த வேதாந்தம் ஆகும். அது எது என்றால்? துரிய மேல் வெளியே சுத்த வேதாந்த அனுபவமாக உள்ளது. துரிய நிலை அனுபவமானது ஆன்ம ஆனந்தத்தை கொடுக்கும். எல்லா சித்துக்களும் இந்நிலையில் கைகூடும். அப்படிப்பட்ட துரிய நிலைக்கும் மேற்பட்ட நிலையான துரியாதீத நிலையே சுத்த வேதாந்த அனுபவமாக உள்ளது.
துரியாதீத நிலையினை, சுத்த வேதாந்த அனுபவத்தை தருகின்ற சிற்சபை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
சுத்த சித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 44
சமயத்தில் கூறுகின்ற கலாந்தம், நாதாந்தம் மற்றும் சித்தாந்தம் இவைகளின் மொத்த அனுபவமே ‘சுத்த சித்தாந்தம்’ என்கின்றார் வள்ளற்பெருமான்.
கலாந்தம் – ஒளியின் முதிர்ச்சி
நாதாந்தம் – ஒலியின் முதிர்ச்சி
சித்தாந்தம் – சிந்தனையின் முதிர்ச்சி
இவை மூன்று முதிர்ச்சியின் முதிர்ச்சி எதுவோ அதுவே சுத்த சித்தாந்தம் ஆகும். அது எது என்றால்? சுகப்பெரு வெளியே சுத்த சித்தாந்த அனுபவமாக உள்ளது. நாம் இதற்கு முன்னர் சுகோதய வெளி(32) மற்றும் சுகந்தரு வெளி(34) ஆகியவைகளை கண்டோம். ஒன்று சுகம் உதயமாகின்ற வெளி மற்றது சுகத்தை தருகின்ற வெளி. நாம் இப்போது காண்பது சுகமே பெருவெளியாக இருப்பது. சுத்த சித்தாந்தத்தின் அனுபவமாக சுகப்பெரு வெளியினை நாம் அடையலாம்.
சுகப்பெரு வெளியினை, சுத்த சித்தாந்த அனுபவத்தை தருகின்ற சிற்சபை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
நாம் இதுவரை ஆறு அந்தங்கள் பற்றி பார்த்தோம். இவை யாவும் சமயங்களில் கூறப்பட்டுள்ள அனுபவங்களை உள்ளடக்கியும் அதனையும் கடந்த பேரனுபவமாக இருப்பதையும் அறிந்தோம். சமயங்களில் உள்ள ஆறு அந்தங்களையும் வள்ளற்பெருமான் மறுப்பதால், அதன் வழிமுறையான யோக பயிற்சியினையும் மறுப்பதாகவே கொள்ள வேண்டும்.
“வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்” என்று வள்ளற்பெருமான் தமது சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில் உரைத்திருக்கின்றார்.
யோகத்தின் வழி இவ்வனுபங்களை பெறாமல் அதற்கும் மேற்பட்ட அனுபவங்களை ஆன்ம தயவினால் பெறலாம் என்கின்ற புரட்சிகரமான வழியினையும் காட்டியிருக்கின்றார். சிறிய தயவினைக் கொண்டு பெரிய தயவினை அடைதல். ஜீவகாருண்யம் என்கின்ற சிறிய தயவினைக் கொண்டு ஆன்ம தயவு என்னும் பெரிய நிலையினை அடைதல். இவர்களே சன்மார்க்க யோகம் செய்யும் ‘யோக மாந்தர்கள்’ ஆவார்கள். அதாவது நமது ஆன்மாவினை ஏழு திரைகளுக்கும் மேற்பட்ட திரைகள் மறைத்துள்ளன. நம்மை மறைத்துள்ள இத்திரைகளை நாம் ஒவ்வொன்றாக விலக்கிக்கொள்ளும்போது நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமே நாம் இதுவரை பேசிவந்த ஆறு அந்தங்களாகும். இந்த ஆறு அந்தங்களின் அந்தங்களை அடைந்தால் நாம் நம்மைக் காணலாம். அதாவது ஆன்ம தரிசனம் கிட்டும்.
வ.எண். | ஆறு அந்தங்கள் | ஆறு அனுபவங்கள் | மறைக்கும் திரைகள் |
1. | தூய கலாந்தம் | சுகந்தரு வெளி | கருப்புத் திரை |
2. | ஞான யோகாந்தம் | நடத்திரு வெளி | நீலத் திரை |
3. | விமல போதாந்தம் | மெய்ப்பொருள் வெளி | பச்சைத் திரை |
4. | பெரிய நாதாந்தம் | பெருநிலை வெளி | செம்மைத் திரை |
5. | சுத்த வேதாந்தம் | துரியமேல் வெளி | பொன்மைத் திரை |
6. | சுத்த சித்தாந்தம் | சுகப்பெரு வெளி | வெண்மைத் திரை |
சுத்த வேதாதாந்தம் மற்றும் சுத்த சித்தாதாந்தம் | சுத்த சன்மார்க்க வெளி | கலப்புத் திரை |
தகர மெய்ஞ்ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ் ஜோதி – 46
தகரம் என்பதை வெள்ளீயம் என்றும் அழைப்பர். இது தனிம வகையைச் சார்ந்தது. இதன் படிக அல்லது அணு அமைப்பானது செவ்வகப் பட்டகமாக இருக்கும். இதன் தோற்றம் பளபளப்பாக வெண் சாம்பல் நிறத்தில் இருக்கும். தகரம் என்கிற வெள்ளீயம் இயற்கையில் தனித்து கிடைப்பதில்லை. பெரும்பாலும் ‘கேசிட்டரைட்டு’ என்கிற தாதுவிலிருந்து வெள்ளீயம் பிரித்து எடுக்கப்படுகின்றது. இதன் ஆங்கிலத்தில் ‘Tin’ என்று வழங்குகின்றோம். வேதியியல் பாடத்தில் தகரத்தை பற்றி இன்னும் விரிவாக நாம் படித்திருப்போம். இப்படிப்பட்ட தகரத்திற்கும் மெய்ஞ் ஞானத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
தகரக்கொட்டகையில் நீங்கள் சினிமா பார்த்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தகரக்கொட்டகையில் நீங்கள் வசித்திருந்தால் அதனையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இதே போன்ற தகரக் கொட்டகையில்தான் சிதம்பரத்தில் பொற்சபை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற தகரக்கொட்டகையில் தான் வடலூரில் ஞானசபையும் அமைக்கப்பட்டுள்ளது. சினிமா கொட்டகையும் நமது வசிப்பிடங்களும் தகரத்தால் மூடுவது என்பது பொருளாதாரம் கருதி எனலாம். ஆனால் சிதம்பரம் கோயிலில் எவ்வளவோ பிரமாண்டங்கள் இருந்தாலும் அதன் இதயம் போன்று அமைந்துள்ள பொற்சபையை மிகச்சாதாரண தகரத்தால்தான் வேய்ந்தார்கள். அதுபோல வள்ளற்பெருமானும் அதே தகரத்தால் தமது ஞானசபையையும் வேய்ந்திருக்கின்றார்.
சைவ சமயத்தில் ‘தகர’ என்பது இதயத்தைக் குறிக்கும். ஏனெனில் சிதம்பரத்தில் அமைந்துள்ள பொற்சபையானது மனித இதயத்தின் குறியீடாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சுத்த சன்மார்க்கத்தில் ‘தகர’ என்பது மனிதத் தலையினைக் குறிக்கும். ஏனெனில் ஞானசபை மனிதத் தலையின் குறியீடாகும். ஞானசபையில் வள்ளலார் ஏற்றிய தீபத்திற்கு “தகர விளக்கு” (சாகா விளக்கு – அணையா விளக்கு) எனப்பெயர். தகர விளக்கு எரிவதால் வடலூரில் உள்ள ஞானசபையை ‘தகராலயம்’ மற்றும் ‘தகராகாசம்’ என வழங்கலாம்.
நமது சன்மார்க்க அன்பர்கள் தகரத்தால் செய்யப்பட்ட கண்ணாடி கூண்டில் விளக்கை ஏற்றிவைத்து, இதுதான் ‘தகர விளக்கு’ என்றால் அது தவறு. இருப்பினும் தத்துவப்பெயரை அது அறிவிப்பதனால் அவ்வழக்கத்தை பின்பற்றலாம். ஞானசபையின் மேற்கூரை தகரத்தால் வேயப்பட்டிருப்பினும், அதன் பொருட்டு ‘தகர விளக்கு’ என பெயர் தோன்றிவிட்டது என்பதும் தவறு.
அப்படியென்றால், வடலூரில் கட்டப்பட்டுள்ள ஞானசபை எதனைச் சுட்டுகிறது என்றால், அது தகர விளக்கென்ற சாகா விளக்கால் – அணையா விளக்கால் ஞான சபை கட்டப்பட்டிருக்கிறது. தகராகாசம் என்றால் விண்ணில் இருக்கும் அணையா விளக்காகும். அது எதுவென்றால், அமுத விளக்கே விண்ணில் இருக்கும் அணையா – சாகா விளக்காகும். ஆக நமது தேகம் என்ற ஆலயத்தில் தகராகாசமாக இருக்கும் தகராலயத்தை, அமுத விளக்கின் வெளிச்சத்தில் – சோதியில் – அணையா தீபத்தில் ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால்தான், நம் தேகம் என்றும் சாகா நிலையை அடையும். இதுவே சாகாக் கல்வியின் இரகசியம். புத்தியுடையோர் பிழைத்துக் கொள்க. நல்லது.
அப்படியென்றால் நாம் நம் சிரசிற்குள்ளே இருக்கும் தகராலயத்தில் இருக்கும் ஞான சபையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கானது தொடர்ந்து அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்று இப்போது புரிகிறதா உங்களுக்கு. அமுதக்காற்றின் ஒளித் தன்மையை – அமுத ஒளியணுக்களை யாரொருவர் அது வருகின்ற நேரத்தில் நம் ஆன்மக் கூட்டிற்குள் செலுத்துவார்களோ, அவர்களே அமுதக்காற்றினைப் போல, ஞான சபையில் இருக்கும் அணையா விளக்கினைப் போல நித்திய தேகத்தைப் பெற்று என்றும் இப்பூமியில் ஜீவித்து இருப்பார்கள், சிரஞ்சீவிகளைப் போல.
உயிருக்கான உணவினை நாம் வழங்கும்போதுதான், நம் உயிரானது மேலும் மேலும் உயிராற்றல்களைப் பெற்றுக் கொண்டு பெருஞ்சோதியாக மாறிக் கொண்டே வரும். அப்படி உயிராற்றல்கள் பெருகிக் கொண்டு வரும்போது, ஞான சபைக்குள்ளே இருக்கும் இறைவனின் அருட்கலை ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளும் வல்லமை உயிருக்கு வந்து சேரும். உயிராற்றல்களைத் தாங்கிக் கொள்ள முதலில் தேகம் தயாராக வேண்டும்.
தேகம் தயாராகிவிட்டால், உயிராற்றல்கள் பெருக ஆரம்பித்து விடும். அடுத்தபடியாக இறைவனின் அருளாற்றல்களைப் பெற்றுக் கொள்ள உயிர் தயாராக வேண்டும். அப்படி உயிர் தயாராகிவிட்டால், இறைவன் அவனின் அருட்கலைகளை உயிருக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பான். அப்போதுதான் நம் உயிர் அழியா அருட்கலைகளைப் பெற்றுக் கொண்டு சிரஞ்சீவியாக மரணமிலாப் பெருவாழ்வை பெற்று வாழும்.
தகர வித்தைக்கான இரகசியம் இங்கே மறைப்பில்லாமல் கொடுத்திருக்கிறோம். இந்த இரகசியங்களை உணர்ந்து நீங்கள் அனைவரும் சீரஞ்சீவியாக வாழ உங்கள் வாழ்க்கையை பண்படுத்திக் கொண்டு என்றும் நித்திய ஒளி தேகத்தோடு வாழ்வீர்களாக என்று வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்.
எனவே, சுத்த சன்மார்க்கத்தில் தகர வித்தை (சாகாக் கல்வி) பயின்றால் மட்டுமே மரணமில்லா பெருவாழ்வு கிடைக்கும். சுத்த சன்மார்க்கத்தில் தகர வித்தை எவ்வாறு செய்வது என்பதை அருட்பெருஞ்ஜோதி இறைவனிடமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று வள்ளற்பெருமான் கூறுகிறார். நானோ எம் சற்குரு எமக்குக் கற்பித்த வித்தையை உங்களிடம் முடிந்தவரை மறைப்பில்லாமல் கூறிக்கொண்டு வருகிறோம். என்றாலும் வள்ளற்பெருமான் தமது உரைநடை நூலில் சாகாக் கல்விக்கு ஏதுவாக இரண்டு குறிப்புகளை மட்டும் கொடுத்துள்ளார். அதில் முதல் குறிப்பு ஆயுள் விருத்திக்கும், அடுத்த குறிப்பு சாகாக்கல்விக்கு வழியாகவும் அருளியுள்ளார்.
“தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை (1 மணி நேரம் மட்டும்) தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்து கொண்டிருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-411)
முதலில் மனித குலங்கள் அவர்களின் தூக்கப் பேயை விரட்டியாக வேண்டும். சாகாக் கல்வி வேண்டுமென்றால், தூக்கத்தைத் தியாகம் செய்தாக வேண்டும். தூங்காமல் இருப்பதே தவம்தான். மீறித் தூக்கம் வந்தால் ஒரு நாளில் 1 மணி நேரம் மட்டும் தூங்கிப் பழகிக் கொள்ள வேண்டும்.
பிரமஞானத் தவத்தைச் செய்ய வலுவில்லாதவர்கள், இயலாதவர்கள், பலகீனர்கள் அனைவருமே இப்படி அவர்களின் தூக்கத்தைத் தியாகம் செய்து, தினமும் 1 மணி நேரம் மட்டுமே தூங்கிக் கழித்து, மற்ற 23 மணி நேரங்களில் சுத்த ஞானசபை இருக்கும் இறைவனின் திருவடிகளை சிரசிற்குள்ளே கண்டு, இன்புற்று, அந்த ஆனந்த பரவசத்திலேயே வாழப் பழகிக் கொண்டு வர வேண்டும்.
இது இயலாதவர்கள் அனைவருமே கண்டிப்பாக பிரமஞானத் தவத்தை செய்துதான் சாகாக் கல்வியை கற்றுக் கொள்ள முடியும்.
தவமா? தூக்கமற்ற நிலையா?
தவமா? விழிப்பு நிலையா?
எது உகந்தது என்று நீங்களே முடிவு செய்து இறைவனை வந்து அணைந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
சற்குருவினுடைய திருவடிகளை சதா நினைவுக்குள் இருத்திக் கொண்டு, அம்மெய் வழியில் சென்றால் சாகாக் கல்வியான தகர வித்தையினை இறைவனே நமக்கு சொல்லித் தருவான். அது மட்டுமல்லாமல் யோக நிலையிலும் அதன்பின் ஞான நிலையிலும் சாகாக் கல்வியினை அனுபவிக்கலாம்.
சாகாத்தலை என்பது ஆகாசம்-தகராகாசம்,
வேகாக்கால் என்பது அமுதக்காற்று,
போகாப்புனல் என்பது பிராண நீர்.
இம்மூன்றும் சாகாக் கல்வியைத் தெரிவிக்கின்றது. ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இந்த சாகாத் தலையும் வேகாக் காலும் போகாப் புனலும் உண்டு. இவ்வாறு 43 நிலைகளையும் சற்குருவின் துணையோடு, அவரின் ஞான வழிகாட்டலோடு ஒவ்வொரு படியாக ஏறி, ஏறி கடந்து இறுதிப்படிக்கு வந்துவிட வேண்டும். அப்படி ஒவ்வொரு படியாக ஏறி வரும்போது சாதகனுக்கு மெய்ஞான அனுபவங்கள் ஒவ்வொன்றாக சித்தித்துக் கொண்டே வரும். அப்படி ஞான அனுபவங்களைப் படிப்படியாக பெறுபவனே காலத்தை கடந்து நிற்கும் ருத்திரனை – இறைவனை – ஈசனை புணர்ந்து இணைவான்.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-440)
யோக நிலையில் சாகாக் கல்வியினை கற்பது, சுத்த சன்மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. “யோகம் செய்தல் வேண்டுவதில்லை. அதில் ஆழ்ந்து சென்றுவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவது ரொம்ப கடினம். அதனால் சதா சிவக்கலப்பாய்க் கிடந்தாலும் மீண்டு வருவது ஒன்றுதான் அருமையான விசயமாக இருக்கிறது. மூடம் உண்டாகும் உண்மை.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-388) என்று அறிவித்திருப்பதால் சிவக்கலப்பான திருவடியை சதா ஞாபகம் செய்து கொண்டிருக்கக் கூடிய சுடராழித் தவத்தை செய்வது ஒன்றுதான் சன்மார்க்க தகர வித்தையின் தொடக்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஞான சபையில் உள்ள தகர விளக்கு போல, தகர மெய்யில் (உடம்பில்) தகர விளக்கை அடைவதே “தகர மெய் ஞானம்” ஆகும். இதைத்தான் திருமூலரும் அவருடைய திருமந்திரப் பாடலில் இவ்வாறு அருளியிருக்கிறார்.
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலும் ஆமே. (தி.ம.2773)
இறைவனின் திருவருளால் நம்முள்ளே இருக்கும் ஆருயிர் அறிவொளியாக ஆன்மாவிற்குள்ளே சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் பிரமஞானச் சாதகர்கள் முதலில் ஆன்மா என்ற விளக்கைப் பிளந்து கொண்டு உள்ளே புக வேண்டும். அதற்கு ஆணவ மலம் தடையாக இருக்கிறது. முதலில் அந்த ஆணவ மலத்தை வேரோடு பிடுங்கி எடுத்து, அதை முழுமையாக எரித்தொழிக்க வேண்டும். அதற்கு மனிதங்களுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு உபாயம் – தந்திரம் – ஞானம் ஆதித் தமிழ்ச் சித்தர்களால் அருளப்பட்ட பிரமஞானத் தவம் ஒன்றே ஒன்றுதான்.
நம் உயிரையும் நம் உயிருக்குள் இருக்கும் இறைவனையும் காண முடியாமல் நிர்க்கதியாக இருக்கும் நமக்கிருக்கும் ஒரேயொரு மெய்யியல் பாதை இந்த பிரமஞானத் தவத்தில் வரக்கூடிய சுடராழிக் கிரியா மட்டும்தான். அந்த சுடராழித் தந்திரத்தை முறையாக சற்குருவிடம் ஞான உபதேசம் பெற்று பிரமஞானத் தீக்ஷையில் நம் உயிருக்கான ஞான விதையை நம் உயிருக்குள் பெற்றுக் கொண்டாக வேண்டும். அப்படி பெறப்பட்ட தவமுறையின் மூலமாக நாம் இறைவனைக் காணக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நம் ஆன்மக் கூட்டை போர்வை போல போர்த்தி மூடி மறைத்து வைத்திருக்கும் ஆணவத்தை முதலில் வேரோடு பிடுங்கி எடுத்து எரித்து ஒழிக்க வேண்டும். அதன்பின்புதான் நம்மால் ஆன்மக் கூட்டிற்குள் ஒளியாகப் பிரவேசிக்க முடியும். ஒளியைத் தவிர வேறெந்த பௌதிகப் பொருளும் ஆன்மாவிற்குள் நுழையவும் பிரவேசிக்கவும் முடியாது. அதை ஆன்மாவானது அனுமதிப்பதும் கிடையாது. இதை முதலில் நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து உணர்ந்து கொண்டாக வேண்டும்.
இதைத்தான் திருமூலர் விளக்கைப் பிளந்து என்றார். அதாவது ஆன்மா என்ற ஞான விளக்கை முதலில் பிளந்து கொண்டு உள்ளே பிரவேசிக்க வேண்டும் என்கிறார்.
இந்த ஆன்ம விளக்கைப் பிளந்து கொண்டு உள்ளே பிரவேசித்தால், அங்கே ஒரு விளக்கு சதா சுடர்விட்டு எரிந்து கொண்டே இருக்கும். அந்த விளக்கை ஏற்றிவிட வேண்டும் என்கிறார். அந்த விளக்கு வேறெதுமில்லை. நம்முடைய உயிர் விளக்குதான் அது. நாம் ஆன்ம விளக்கில் பிளந்து உள்ளே நுழைவோம் அல்லவா, எப்படி, எத்தன்மையில் உள்ளே நுழைவோம் என்றால், ஒளியாகத்தான் நுழைந்து செல்வோம். அந்த ஒளியின் துணையால் உள்ளே இருக்கும் உயிர் விளக்கு மேலும் பிரகாசம் அடைந்து பெருஞ்சுடராக மாறி ஒளிவீச ஆரம்பிக்கும். இதைத்தான் திருமூலர் விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி என்றார்.
சரி, இப்போது ஆன்ம விளக்கைப் பிளக்கவும் செய்தாயிற்று. அதற்குள்ளே இருக்கும் உயிர் விளக்கையும் ஏற்றியாகிவிட்டது. அடுத்த மெய்ச் செயல் ஒன்றை செய்திட வேண்டும் நாம் அனைவருமே. அந்த உயிர் விளக்கிற்குள்ளே மேலும் ஆழ்ந்து நுணுகி உள்ளே நுழைந்து செல்ல வேண்டும். அப்படி நுணுகிக் கொண்டு உள்ளே சென்றால், அங்கே ஒரு விளக்கு உயிர் விளக்கைவிட பெரும் பெருஞ்சோதியாக சுடர்விட்டுக் கொண்டு சுயம்பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும். அதுதான் நம் உயிரையும் சேர்த்து வாழ்வித்துக் கொண்டிருக்கும் பேருயிராகிய சதாசிவ விளக்கு – அதுதான் அருட்பெருஞ்சோதி விளக்கு. இந்த பெருஞ்சோதி எப்படி இருக்குமென்றால், அருட்கலைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் தன்மையோடு எரிந்து கொண்டிருக்கும். அதை நன்றாக உற்று உற்றுப் பார்த்து தவத்தை செய்து வந்தோமென்றால், நம் தலை முழுக்க கொள்ளும் அளவுக்கு பெருஞ்சோதியாக வடிவெடுத்து நிற்கும். இதைத்தான் வள்ளற்பெருமான் சோதி – பெருஞ்சோதி – அருட்பெருஞ்சோதி என்றார்கள். இதை நாம் நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இப்படி நம் உயிர் விளக்கிற்குள்ளே விளங்கும் அருட்பெருஞ்சோதியாகிய இறையொளியை – இறை விளக்கை நம் உயிர் விளக்கின் தண்வெப்பத்தால் தூண்டிவிட வேண்டும். அப்படி தண்வெப்பத்தால் தூண்டப்படும் இறையொளி மேலும் மேலும் ஒளிக்கலைகளைப் பெற்றுக் கொண்டு நம் சிரசு முழுக்க பிரகாசிக்க ஆரம்பிக்கும். இதைத்தான் திருமூலர் விளக்கினுக்கு உள்ளே விளக்கினைத் தூண்டி என்றார்.
இவ்வாறாக முதலில் ஆன்ம விளக்கைப் பிளந்து கொண்டு, உள்ளே பிரவேசித்து, அங்கிருக்கும் உயிர் விளக்கை ஏற்றிவிட்டு, அந்த உயிர் விளக்கிற்குள்ளே மேலும் உள்ளே நுழைந்தால், அங்கிருக்கும் இறை விளக்கைத் தூண்டி பெருஞ்சோதியாக எரிய வைத்து விட்டால், அந்த இறை விளக்கில் இருக்கக் கூடிய ஞான விளக்கை நம்மால் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியுமல்லவா. அப்படி உணர்ந்து விடும் பட்சத்தில், பேருயிர் விளக்கை உடைய இறைவனின் கழலாகிய திருவடிகளை நம்மால் அடைந்து விட முடியுமல்லவா. இதைத்தான் திருமூலர், விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு விளக்குடையான் கழல் மேவலும் ஆமே என்றார்.
வள்ளற்பெருமான் சொல்லும் தகர மெய்ஞ்ஞானத்தை மேற்சொல்லப்பட்ட சுடராழித் தந்திரத்தின் மூலமாகத்தான் நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும். இது எல்லாம் மறைக்கப்பட்ட திருமந்திர இரகசியங்களாகும். உலக உயிர்களின் ஆன்ம ஞானத்திற்காக இங்கே மறைபொருள் நீக்கி சத்தியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
‘அகர’ என்றால் ‘8’ என்கின்ற எண்ணைக் குறிக்கும். நமது எண் சாண் உடம்பிற்கு ‘அகரம்’ எனப்பெயர். ‘எறும்பும் தன் கையால் எண் சாண் உடையதே” என்று ஒளவையார் கூறுவார். எனவே உயிர் கொண்ட உடல்கள் எல்லாம் “அகரம்” என வழங்கப்படும். அகரத்தில் நிலைக்கின்ற இறைவன் ஆகையால் ‘அகர நிலைப்பதி’ ஆயிற்று.
தகர மெய் ஞானம் நான் பெற்றவுடன் தனிப்பெரு வெளியாய் எனது அகரத்தில் நிலைக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
தத்துவாதீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத்து அருட்பெருஞ் ஜோதி – 48
“தத்துவம் என்பது சிவத்தின் தன்மை” சிவம் என்பது சச்சிதானந்தம். தன்மை என்பது குணம். எனவே சத்து சித்து ஆனந்தம் இவைகளின் குணங்களான எல்லாம் உள்ளதாய் விளங்குவது, எல்லாம் விளங்குவதாய் உள்ளது, இவை இரண்டினாலும் நிரம்பிய இன்பம் ஆகிய குணங்களுக்கும் மேற்பட்டதே தனிவெளி என்கின்ற திரு அம்பலத்தில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆகும்.
இவ்வுலகில் வழங்கப்படும் எந்த ஒரு தத்துவப் பொருளுக்கும் அடங்காது அதனைக்கடந்து தனிப்பொருள் வெளியென்னும் அரங்கில் (அம்பலம் – அரங்கம் – சிற்சபை) விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி – 50
வள்ளற்பெருமானின் வழியில் சச்சிதானந்தம் என்றால் “சிவம்” எனப் பொருளாகும். சத்து, சித்து மற்றும் ஆனந்தம் என்பதன் கூட்டு வாக்கியமே சச்சிதானந்தம்.
“சி” என்கின்ற சிகரம் “சத்து” – எல்லாம் உள்ளதாய் விளங்குவது.
“வ” என்கின்ற வகரம் “சித்து” – எல்லாம் விளங்குவதாய் உள்ளது.
“ம்” என்கின்ற மகரம் “ஆனந்தம்” – இவை சத்தையும் சித்தையும் தன்னகத்தே கொண்டு நிரம்பி வழியும் பேரின்பமாக உள்ளது.
இந்த உலகத்திற்கு ஒரு ஞானத்தை இங்கே இந்தப் பேச்சுரையின் வாயிலாக அறிவிக்க விரும்புகின்றோம். அது என்ன தெரியுமா உயர் ஆன்மாக்களே? அதுதான்
“சி” என்கின்ற சிகரம் “உடலாகவும்”
“வ” என்கின்ற வகரம் “உயிராகவும்”
“ம்” என்கின்ற மகரம் “பேருயிராகவும்”
நம்முள்ளே விளங்கிக் கொண்டிருக்கிறது. மேலும்,
“சி” என்கின்ற சிகரம் “சிற்சபையாக”
“வ” என்கின்ற வகரம் “பொற்சபையாக”
“ம்” என்கின்ற மகரம் “சுத்த ஞானசபையாக”
நம்முள்ளே விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆக, இறைவனாகிய சிவம்தான் சத்தென்ற உடலாகவும் சிற்சபையாகவும் ; சித்தென்ற உயிராகவும் பொற்சபையாகவும் மற்றும் ஆனந்தம் என்ற பேருயிராகவும் சுத்த ஞானசபையாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறான்.
இந்த மூன்றும்தான் நம் சிரசிற்குள்ளே பரவிந்துவாகவும் பரநாதமாகவும் அபர நாதவிந்துவாகவும் இருக்கின்றது.
இத்தனை நிலைப்பாடுகளையும் ஞான அனுபவங்களையும் நீங்கள் அனைவரும் ஒற்றைத் தவத்தால் பெற்றுக் கொண்டுவிட முடியும். அதுதான் பிரமஞானத் தவம் என்பது. இந்த பிரமஞான வித்தையானது அத்தனை எளிதில் கிடைத்துவிடக் கூடியதல்ல. அப்படி கிடைத்துவிடும் பாக்கியம் இருந்துவிட்டால், அதன்பிறகு உங்களால் பிரமஞானத்தை அடையாமல் இருக்கவே முடியாது.
சத்து என்கின்ற சுத்த சன்மார்க்கம் கடைபிடிப்பவர்களுக்கு சித்து என்கின்ற மரணமிலா பெருவாழ்வு கிடைக்கும். சுத்த சன்மார்க்கமும் அதன் மூலம் கிடைக்கின்ற பெருவாழ்வும் இணைவதே ஆனந்தம் ஆகும். இதுவே சிவம் என்கின்ற சச்சிதானந்தம் ஆகும்.
இப்படிப்பட்ட சிற்சபை இரகசியங்களை ஒருவர் அனுபவித்தே அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அனுபவப்பட்ட ஒரு பிரமஞானிதான் வள்ளற்பெருமான் அவர்கள். அவர் சிற்சபையாகிய ஆன்மாவிற்குள் நுழைந்ததும் அவர் பெற்ற ஞான அனுபவங்களை சிற்சபை விளக்கம் என்ற பதிகத்தில் பத்து பாடல்களில் பாடியுள்ளதை நாம் இங்கே உணர்ந்து இன்புறலாம் வாருங்கள்.
- சிற்சபை விளக்கம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
வேறு வேண்டினும் நினை அடைந்தன்றி
மேவொணாது எனும் மேலவர் உரைக்கே
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்
சாறு வேண்டிய பொழில் வடல்அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3770)
சத்திய ஞானசபையில் விளங்கும் இறைவா ! நீ எனது தேகத்தில் வடல் திசைக்கு அரசனாக இருக்கின்றாயே. வடல் என்றால் தேகத்தின் இடதுபக்கமாகும். வடநாட்டை வடக்கு – வடல் என்றும் தென்னாட்டை தெற்கு – தென் என்றும் அழைப்பார்கள். வடல் என்ற தேகத்தின் இடது பாகத்தில் அதாவது இடது திருவடியில் விளங்கும் சிற்சபையாகிய இறைவனே. எனக்கு சோறு வேண்டாம் ; ஆடைகள் வேண்டாம் ; அணிகலன்களாகிய பொன் நகைகள் வேண்டாம் ; சுகங்கள் அனைத்தும் வேண்டாம் ; சுகம் அல்லாத மற்ற சுகங்களும் வேண்டாம் ; நீதான் எனக்கு முழுமையாக வேண்டும் இறைவா. ஆனால், பிரமஞானத் தவத்தைச் செய்து கொண்டிருக்கும் மேலவர்களாகிய பிரமஞானச் சாதகர்கள் உன் திருவடிகள் ஒன்று மட்டுமே போதுமென்று தவத்தைச் செய்து கொண்டிருக்கிறார்களே, அவர்களைப் போல நானும் உன் அருட்திருவடிகளை பெற்றிட வேண்டும். அதற்காக இப்போது உன்முன் வந்து வேண்டி நிற்கின்றேன். வள்ளலாகிய இறைவனே, உன்னுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கின்றேனே. பூக்களிலிருந்து சொரியும் தேனைப் போல, உன் அருட்கலைகளால் எம் சிரநடுவுள்ளே இருக்கும் அமுதமானது பூத்தேனைப் போல நிரம்பி வழிய அருள் புரிய வேண்டும் என்கிறார் வள்ளற்பெருமான்.
இந்த சிற்சபை விளக்கம் என்ற பதிகத்தின் 10 பாடல்களிலும் வள்ளற்பெருமான் பத்து இடங்களில் வடல் அரசே என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரை அழைக்கின்றார். இப்பதிகத்தின் தலைப்பு சிற்சபை விளக்கம் என்பது. ஆக இடது திருவடியில்தான் சிற்சபை அமைந்திருக்கிறது என்பதுதான் வள்ளற்பெருமான் கூற வரும் ஞான இரகசியச் சொல்லாடல். இதை நீங்கள் அனைவரும் படித்துப் பாருங்கள். உங்களுக்கே உண்மை என்னவென்று தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும். ஆக வடல் என்றால் இடது திருவடியாகிய சிற்சபை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே யாம் இந்த சிற்சபை விளக்கப் பதிகத்தைப் பற்றி உரையாட வந்தோம்.
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
இடுக்குண்டைய நின் இன்னருள் விரும்பி
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப்பறியேன்
அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3771)
சொல்ல முடியாத அளவுக்கு என்னிடத்தில் குறைகள் நிரம்ப உண்டு. துன்பங்களும் அதிகமுண்டு. இருப்பினும் உன்னையே தஞ்சம் என்று அடைக்கலம் புகுகின்றேன். உன் மனதில் என்ன நினைக்கின்றாய் என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. நீ எதற்கும் பயப்படாதே என்று சொல்ல மாட்டாயா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். வள்ளலே எனக்கு அருள் புரிவாயாக என்கிறார் வள்ளற்பெருமான்.
சூழ்விலாது உழல் மனத்தினால் சுழலும்
துட்டனேன் அருட்சுகப் பெரும்பதி நின்
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக்குறிப்பு அறியேன்
ஊழ்விடாமையில் அரைக்கணம் எனினும்
உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்றறியேன்
தாழ்விலாத சீர்தரு வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3772)
சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனாகிய சிற்சபையின் கண்ணே விளங்கும் இறைவா ! என் மனதில் ஆட்கொள்ளும் அளவுக்குக்கூட இடமில்லாமல் துன்பத்தில் ஒரு கெட்டவனைப் போல வருந்திக் கொண்டிருக்கின்றேனே. வள்ளலே, உன் மனதில் என்னைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை அறியாமல் தவிக்கின்றேனே. இந்த பாழாப் போன ஊழ்வினைகள் என்னை விடாமல் ஒரு அரைக்கணம்கூட என்னைவிட்டு நீங்காமல் பற்றிக் கொண்டு பாடாய் படுத்துகிறதே. அப்படியிருப்பினும் உன்னை அல்லால் வேறொரு பொருளைக்கூட நான் நாடாமல் உன்னையே கதி என்று நினைத்து வாழ்கின்றேனே. அதனால் நீ எனக்கு நின் திருவருள் வழங்கிடத்தான் வேண்டும்.
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
அலை தந்தையவோ அயர்ந்து உளம் மயர்ந்து
வாட்டம் ஓடிவண் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்
நாட்டம் நின்புடை அன்றி மற்றறியேன்
நாயினேன் பிழை பொறுத்து இது தருணம்
தாட்டலம் தருவாய் வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3773)
சத்திய ஞான சபையையுடைய ஒப்பற்ற பெரிய தலைவனே; வடலூரின்கண் எழுந்தருளும் அருளரசே; ஒயாது ஆடுகின்ற வஞ்ச நினைவுகளை மனத்தின் வழி நின்று அலைந்து தளர்ந்து மனம் மயங்கி வாடிய நிலையில் இங்கே நின் திருமுன் வந்து நிற்கின்றேன்; வள்ளற் பெருமானாகிய உன்னுடைய திருவுள்ளக் குறிப்பை அறிகிலேன்; என்னுடைய விருப்ப மெல்லாம் உன் திருவருள்பாலன்றி வேறு எதன்பாலும் உண்டாவதில்லை; நாய் போன்ற கடையவனாகிய என் பிழைகளைப் பொறுத்து இச்சமயத்தில் நினது திருவருள் நிழலை அடியேனுக்குத் தருவாயாக.
இதனால், மனத்தின் வழி நின்று வருந்தி மெலிந்த திறம் எடுத்தோதித் திருவடி ஞானம் நல்குக என்றே கேட்கின்றார் வள்ளற்பெருமான்.
கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
காடு மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ
வருண நின்புடைய வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்
அருணன் என்று எனை அகற்றிடு வாயேல்
ஐயவோ துணை அறிந்திலன் இதுவே
தருணம் எற்கருள் வாய் வடல்அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3774)
சத்திய ஞான சபையில் வாழும் வள்ளற்பெருமானே ! சிற்சபையைக் கோயிலாகக் கொண்ட அருளரசே; இரக்கம் சிறிதுமில்லாத கல்லைப் போன்ற மனமாகிய குரங்கினால் நாடு முழுவதும் அலைந்து திரிந்து உள்ளம் மெலிந்து போய், இப்போது சிவந்த திருமேனியையுடைய உன் திருவடி முன்னே வந்து வணங்கிக் கொள்கின்றேன்; வள்ளலாகிய உன்னுடைய மனதில் இருக்கும் எண்ணங்களை அறியாமல் இருக்கின்றேனே. ஆட்டின் இயல்புடைய கீழ்மக்கள் என்று என்னை நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டால், ஐயோ, எனக்குத் துணையாக யாருமில்லாமல் இருப்பேனே. உனக்காக மெலிந்து போய் கிடக்கும் எனக்கு இத்தருணத்தில் உனது திருவருள் ஞானத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று பாடிப் பரவுகிறார் வள்ளற்பெருமான்.
இதனால், தன் கீழ்மைப் பண்பு கண்டு புறக்கணிக்காமல் திருவருள் வழங்க வேண்டுமென முறையிடுகிறார் வள்ளற்பெருமான்.
கரண வாதனையால் மிக மயங்கிக்
கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிதோர்
இச்சை ஒன்றிலேன் எந்தை நின்உபய
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3775)
சத்திய ஞான சபையையுடைய ஒப்பற்ற பெருந் தலைவனே; சிற்சபையில் எழுந்தருளும் அருளரசே; கருவி கரணங்களாகிய அந்தக்கரணங்கள் செய்யும் துன்பத்தால் மிகவும் மயங்கிக் கலக்கமுற்று ஆதரவு ஒன்றும் தெரிந்து கொள்ளாதவனாக, இறப்புப் பிறப்புக்கள் நீக்கிவிடுமாறு உன் திருவடி முன்னே நிற்கின்றேன்; ஆயினும் வள்ளலாகிய உனது திருவுள்ளக் கருத்தினை அறியாமல் இருக்கின்றேனே ; கொலை புரியும் கொடியவன் என்று என்னை எண்ணிப் புறக்கணிக்கக் கூடாது ; வேறு எதன்மீது எனக்கு விருப்பமில்லை என்பதால் எந்தையாகிய உன்னுடைய திருவடிகளை எனக்குத் தந்தருள்வாயாக.
இதனால், இறைவன் திருவடி நீழலில் வாழ வேண்டும் என்ற தமது பெருவிருப்பத்தை வள்ளற்பெருமான் இப்பாடலில் தெரிவித்துக் கொள்கிறார்.
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணைச்
சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்
ஈய வாய்த்த நல்தருணம் ஈது அருள்க
எந்தை நின்மலர் இணையடி அல்லால்
தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3776)
சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; ஒப்பற்ற சிற்சபையின்கண் உள்ள அருளரசே; தூய நெஞ்சினை உடையவனாய் முன் நாட்களில் உனது திருவருள் இன்பத்தை விரும்பாமல் ஒழிந்து போனேன் என்றாலும், பொய்யான உலகியல் வாழ்வின் மயக்கத்தை விரும்பாமல் உன்னுடைய திருவடி முன்வந்து நிற்கின்றேன்; வள்ளலாகிய உனது திருவுள்ளக் கருத்தினையும் அறிந்திடாமல் இருக்கின்றேன் ; எனக்கு உனது திருவருள் ஞானத்தை வழங்குவதற்கு ஏற்ற தருணம் இதுவாகும்; ஆதலால் எனக்கு உன் திருவடி ஞானத்தை கொடுத்தருள்க; எந்தையாகிய உன்னுடைய மலர் போன்ற இரண்டு திருவடிகளை (பரவிந்து, பரநாதம்) அன்றி உன்னிடமிருந்து உரிமையாகப் பெறக் கூடிய பொருள் வேறு எதுவும் இல்லை என்கிறார் வள்ளற்பெருமான்.
இதனால், இறைவன் திருவடிக்குத் தமக்குள்ள உரிமையை வற்புறுத்தவாறாம்.
சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
சேர்ந்திலேன் அருட்செயலிலேன் சாகா
வரத்தை வேண்டினேன் வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்
கரத்தை நேர் உளக் கடையன் என்று எனைநீ
கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன்
தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3777)
சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; சிற்சபையில் எழுந்தருளிக் கொண்டிருக்கும் அருளரசே; சிரத்தை முதலிய நற்குணங்கள் சிறிதும் இல்லாதவனும், அருட்செயல் புரியாதவனுமாகிய நான், சாகா வரம் வேண்டி உன் திருவடி முன்வந்து நிற்கின்றேன்; இருப்பினும் வள்ளலாகிய உன்னுடைய திருவுள்ளக் கருத்தை அறிந்திலேன்; அதனால் நஞ்சையொத்த நெஞ்சினை உடையவன் என்று கருதி நீ என்னை கைவிட்டு விடுவாயானால், நான் ஒருகணப் பொழுதும் இனிப் பொறுக்க மாட்டேன்; எனக்கு உன் திருவருள் ஞானத்தைப் பெறுதற்குரிய தகுதியினைத் தந்தருள்வாயாக.
இதனால், செய்த குற்றங்களை நினைந்து மெலிவுற்று வருந்தும் எனக்குத் திருவருள் ஞானப் பேற்றிற்குரிய மனத் திட்பத்தைத் தந்தருள்க என வேண்டிக் கொள்கின்றார்.
பத்தியஞ் சிறிது உற்றிலேன் உன்பால்
பத்தி ஒன்றிலேன் பரம நின்கருணை
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்
எத்தி அஞ்சலை என அருளாயேல்
ஏழையேன் உயிர் இழப்பன் உன்ஆணை
சத்தியம் புகன்றேன் வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3778)
சிற்சபையின்கண் எழுந்தருளும் அருளரசே; சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; உணவு வகையில் பத்தியமென்று எதையும் பின்பற்றாதவனாக திரிந்து கொண்டு இருக்கின்றேன் ; உன்னிடத்தில் பத்தி சிறிதும் இல்லாதவனாக இருக்கின்றேன்; பரமனாகிய உனது கருணையாகிய தேனையுண்டு மகிழ்தற்கு உன் திருவடி முன்வந்து நிற்கின்றேன்; வள்ளற் பெருமானாகிய உனது திருவுள்ளக் குறிப்பை அறிகிலேன்; என் கவலையைப் போக்கி இனி அஞ்சுதல் ஒழிக என்று நீ எனக்கு அருள் புரியாது போனால், ஏழையாகிய நான் என் உயிரை விட்டுவிடுவேன்; இதனை உன் மேல் ஆணையாக உரைக்கின்றேன்; இது சத்தியமாகும்.
இதனால், திருவருள் பெற முடியாது போனால், தாம் உயிர் வாழ்வதால் எந்தப் பயனுமில்லை என்கிறார் வள்ளற்பெருமான்.
கயவு செய் மதகரி எனச் செருக்கும்
கருத்தினேன் மனக் கரிசினால் அடைந்த
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்
உயவு வந்து அருள்புரிந்திடாய் எனில்என்
உயிர் தரித்திடாது உன்அடி ஆணை
தயவுசெய்து அருள்வாய் வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியே. (3779)
சிற்சபையின்கண் எழுந்தருளும் அருளரசே; சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; பெரிய மதம் சொரிகின்ற யானையைப் போல ஆணவம் மிக்க மனத்தை உடையவனாகிய நான், மனத்தின்கண் உண்டாகிய குற்றத்தால் விளைந்த மயக்கத்தை நீக்கி அருளுமாறு உன் திருவடிமுன் வந்து நிற்கின்றேன்; எனினும் வள்ளலாகிய உன்னுடைய திருவுள்ளக் கருத்தினை அறியாமல் இருக்கின்றேன் ; நான் மேன்மை அடையும்படி மனமுவந்து நீ எனக்கு அருள் புரியவில்லை என்றால், என்னுடைய உயிர் கெட்டொழியும்; இது உன் திருவடி ஆணையாகத் தெரிவிக்கின்றேன்; அருள் கூர்ந்து எனக்கு உன் திருவருள் ஞானத்தை அருளுவாயாக.
இதனால், மனதிலே படியக்கூடிய குற்ற மயக்கத்தை நீக்கியும் அதனைப் போக்குதற்குரிய திருவருள் ஞானத்தை வழங்கினால் அன்றித் தமக்கு வழியில்லை என முறையிடுகிறார்.
இப்படி நம்மை நமக்குள் பார்க்கும் சுடராழி தவத்தினால், நாம் யார் என்பதைத் தெரிந்து கொண்டு “யார் நீ” என்ற கேள்விக்கு உயிரே பதிலாக இருப்பதைக் கண்டு கண்டு, விண்டு விண்டு, சதா பேரின்பத்திலேயே திளைத்துக் கொண்டிருக்கலாம்.
தொடர்ந்து சிந்திக்கலாம் ; பேச்சுரை செய்யலாம் ; கலந்தும் உரையாடலாம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!