பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாஅழ்க !

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !

            ஓ………………ம்       ஓ………………ம்   ஓ…………………ம்

            சாகா வரமும் தனித்த பேரறிவும்

                        மாகாதலில் சிவவல்லப சத்தியும்

            செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்

                        மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்

            பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி

                        ஆரண முடியுடன் ஆகம முடியும்

            கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு

                        நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே

            சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே

                        மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே

            ஆனந்த அமுதே அருளொளி அமுதே

                        தான்அந்தமிலாத் தத்துவ அமுதே

            நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே

                        சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே

            பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே

                        கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே

            அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்

                        உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே

            பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே

                        தனிமுதலாய சிதம்பர அமுதே

            உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே

                        அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே    (அகவல் : 1255-1290)

அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி

வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !

குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !

 நமது தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுகிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞான உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு சென்ற வாரத்தின் தொடர்ச்சியான பகுதியாகத்தான் வருகிறது.  அது மகா நிர்வாணத்தின் முழு வெறுமை. வாருங்கள் தலைப்பிற்குள் செல்லலாம்.

முதலில் நாம் தியானம் என்றால் என்னவென்பதைத் தெரிந்து கொண்டுவிட்டு, அதன்பின் இந்த வெறுமை உலகத்திற்குள் பிரவேசிக்கலாம்.

தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு என்று தெரிந்து வைத்திருக்கின்றோம்.  ஆனால், உண்மை அதுவல்ல.  மனதை ஒருமுகப்படுத்தும் போது அங்கே ஒரு பொருளும் இருந்தாக வேண்டும் ; ஒருமுகப்படுத்துபவரும் இருந்தாக வேண்டும்.  இது இரண்டுபட்ட நிலைப்பாடு.  அதாவது ஒன்றை இரண்டாகப் பிளவுபடுத்தும் செயல்.  ஒன்றை எத்தனை முறைப் பிளந்தாலும், அது எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.  அதுதான் தியானம், தவம் என்பதாகும்.  இது சாத்தியப்படுகின்ற விசயமா? சிறிது யோசியுங்களேன்.

ஆனால், தியானம் செய்யும்போது நமக்குள்ளே யாராவது இருக்கின்றார்களா? இல்லை அல்லவா.  அதைப் போல வெளியேயும் யாரும் இருப்பதில்லை.  அப்படியென்றால் ஒருமுகப்படுத்தும் செயல் அங்கு தேவைப்படுவதில்லையே.  உள்ளே, வெளியே ஆகிய இரண்டு நிலைகளுக்கும் இடையே எந்தப் பாகுபாடும் மாறுபடலும் இல்லை.

உள்ளே எது இருக்கின்றதோ, அது வெளியே இருப்பதனுள் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும். அங்கே எல்லைக்கோடு என்பதெல்லாம் இல்லை.  எல்லைக் கோடு இருந்தால்தான் உள்ளே இதுவரை ; வெளியே இதுவரை என்ற வரையறைகளை உருவாக்க முடியும்.  எல்லைக்கோடு அற்றபோது, அங்கே உள்ளேயும் எதுவும் இல்லை ; வெளியேயும் எதுவும் இல்லை.  உள்ளேயும் வெற்றிடம். வெளியிடமும் வெற்றிடமே.  இதன் பெயர்தான் தியானம், தவம்.

பல மாணவர்கள் எம்மிடம் சொல்லக் கேட்டிருக்கிறோம். குருவே, தவம் செய்தால் களைப்பு வருகிறது என்று.  மனம் ஒருமுகப்படும்போது அங்கே களைப்பு வரத்தானே செய்யும். ஒன்றை செய்ய முனையும்போது, அங்கே உங்கள் சக்தி வீணடிக்கப் படுகிறதல்லவா.  சக்தி வீணாகும்போது, பிராணன் நஷ்டம் அடையும் போது களைப்பு என்பது தன்னாலே வந்து உங்களை ஆட்கொண்டுவிடும்.

தியானத்திலோ, தவத்திலோ ஒருகட்டத்தில், ஒரு மாயப்புள்ளியில் மனம் இல்லாமல் போகும்போது, அங்கே வெற்றிடமானது திடீரென்று தோன்றி உங்களை மூழ்கடித்துவிடும்.  அப்போது அங்கே காலம், நேரம், வெளி எதுவுமே இருக்காது.  வெளியே பூமியில் அடிக்கடி பல இடங்களில் சிறியதான சுழற்காற்றுகளை நாம் அனைவருமே பார்த்திருக்கின்றோம் அல்லவா.  அது எதனால் ஏற்படுகிறது என்பதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அவ்விடம் எப்போது காற்றில்லாமல் வெற்றிடமாகிறதோ, அந்த வெற்றிடத்தை இந்தப் பிரபஞ்சமானது உடனே நிரப்புவதற்கு சுழல் வேகத்தில் பாய்ந்தோடி வருவதே, அந்த சுழற்காற்றின் செயல்பாடு.

அதைப்போல, உங்களுக்குள் எப்போது மனம் இல்லாமல் போகிறதோ, அப்போது உள்ளுக்குள் வெற்றிடமானது உருவாக ஆரம்பித்திடும். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வெட்டவெளியின் ஆற்றல்கள் அவ்விடத்தில் குழும ஆரம்பித்திடும்.  வெட்டவெளிகளால் நிரம்பிய நீங்கள், வெற்றிடமாகவே மாறிப் போய்விடுவீர்கள்.  வெறுமை உண்டானால், அந்த வெற்றிடம் பரவெளியால் தானாகவே நிரம்ப ஆரம்பித்திடும்.  இது செய்யும் மாயங்கள் அனேகம், அநேகங்கோடிகளாகும். காரணம் வெட்டவெளியில்தான் மெய்ப்பொருளும் ஆதி மெய்யாகிய பரப்பிரம்மமும் இருக்கிறது.  இந்த மெய்ப்பொருளும் ஆதிமெய்யும் நம்மை நிரப்பும்போது நாம் என்ன ஆவோம் என்பதை யாம் சொல்லத்தான் வேண்டுமோ, அன்பர்களே. இந்த இடத்தை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்குள்ளே வெற்றிடத்தை, வெறுமையை உண்டாக்குவது தான் எம் சேவை.  அதன்பின் வெட்டவெளி உங்களைப் பார்த்துக் கொண்டுவிடும். இதற்குத்தான் குரு கடாட்சம், குருவின் அனுக்கிரகம், குருவின் கருணை உங்களுக்குத் தேவைப்படும். ஞானத்தைத் தருவது குருவின் வேலையில்லை ; அந்த ஞானம் வரும் தளத்தை உங்களில் உருவாக்கித் தருவதுதான் குருவின் மகத்தான வேலை.

ஞானம் வரும்போது நீங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தால், இறைவனே நினைத்தால்கூட உங்களை நிரப்ப முடியாதே. நீங்கள் வெற்றிடமாக இருப்பீர்களென்றால், குருவால் உங்களை முழுமையாக நிரப்பிவிட முடியும்.  யாம் இப்போது உங்களை நிரப்பவா? வேண்டாமா? நீங்களே முடிவு செய்து கொள்ளவும்.

இந்த நிலைப்படுத்துதல் என்பது ஒருபோதும் உங்களது இயற்கையான குணமாக இருக்க முடியாது.  தியானத்தில் நீங்கள் களைப்படையவே கூடாது.  முழுமையான தியானம் உங்கள் சக்தியை தொடர்ந்து நிரப்பத்தான் செய்யும், நஷ்டம் அடையச் செய்யாது.  நஷ்டம் நிகழாதபோது களைப்பு என்பது எப்படி வரும் சொல்லுங்கள். தியானம் என்பது அதன் அளவில் அது ஓய்வில் இருப்பதே ஆகும்.

நீங்கள் தியானத்தைச் செய்யவோ பழகவோ கூடாது.  தியானமாகவே மாறியிருக்க வேண்டும்.  தவத்தைச் செய்யக் கூடாது. நீங்கள் தவமாகவே உருமாறி இருக்க வேண்டும்.  தியானத்தை, தவத்தை யாரும் செய்ய முடியாது.  அது அதன் போக்கில் ஒரு வெற்றிடத்தில், வெட்டவெளியின் பொட்டலில் எப்போதும் ஓய்வாகவே இருந்து கொண்டிருக்கிறது.  நீங்கள் அவ்விடம் சென்றால் நீங்கள் உடனே காலிப்பாத்திரம் ஆகிவிடுவீர்கள்.  காலிப்பாத்திரத்தைத்தான் ஒருவரால் நிரப்ப முடியும்.  பாத்திரம் ஏற்கனவே நிரம்பி வழிந்து கொண்டிருந்தால், அங்கே செயல்கள்தான் நடந்து கொண்டிருக்கும்.  அதனால்தான் சொல்கிறோம், தியானத்தை, தவத்தைச் செய்ய முயலாதீர்கள்.  தியானமாக, தவமாக இருந்து விடுங்கள்.  அவ்வளவுதான்.

அதற்கு ஒரு மிகச்சுலபமான வழி ஒன்று இருக்கிறது.  தியானம் நிகழ வேண்டும் ; ஆனால் நீங்கள் தியானம் செய்யக் கூடாது.

தவம் ஆற்ற வேண்டும் ; ஆனால் தவசி அங்கிருக்கக் கூடாது.

நீங்கள் நடக்க வேண்டும் ; ஆனால் உங்களுக்கு கால்கள் இருக்கக் கூடாது.

நீங்கள் சிந்திக்க வேண்டும் ; ஆனால் சிந்திக்க அங்கே மனம் இருக்கக் கூடாது.

நீங்கள் வெட்டவெளியில் பறந்து பறந்து மகிழ வேண்டும் ; ஆனால், உங்களிடம் இறக்கைகள் இருக்கக் கூடாது.

இந்த வார்த்தைகள் சொல்லும் மெய்ப்பொருள் உங்களுக்குப் புரிந்து விட்டால், அப்போதுதான் நீங்கள் ஞானி, அதுவும் பரப்பிரம்ம ஞானி.

தியானத்தை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அங்கே நீங்கள் இல்லாது மறைந்து போய்விட வேண்டும். அப்போது நீங்கள் வெறுமனே உயிராக, உயிர் உணர்வாக, உயிரொளியாக மட்டுமே இருப்பீர்கள்.  உயிர் இருக்கும் ஆன்மாவில் முக்காலங்களும் இருப்பதேயில்லை.  காலங்களைக் கடந்த நிலைதான் உயிரின் நிலை.

இதைத்தான் ஜென் குருமார்கள், எதையும் செய்யாமல் அமைதியாக வெற்றிடத்தில் இருந்து கொண்டிருந்தால், உங்களுக்குள் வசந்தம் தானே வந்து அமர்ந்து கொள்ளும் என்றார்கள். வசந்தம் வந்துவிட்டால், புற்கள் தானாகவே வளரத் தொடங்கிவிடும்.  அதனால் புற்கள் யாரும் வளர்க்காமல் தானாகவே வளரும் என்றார்கள். இந்த புற்கள் கோடைக்காலம் வந்தால் வாடி, இறந்து போகிறதே மண்ணில். ஆனால், வசந்த காலம் தொடங்கியதும் இறந்த புற்களெல்லாம் யாரும் நீர் வார்க்காமல் தானாகவே வளருகிறதே. அது எப்படி? அதுதான் இயற்கையின் மெய்யியல் கோட்பாடு.  புற்கள் வளர நாம் எதையும் செய்யத் தேவையில்லை.  அதற்கு வசந்த காலத்தைக் கொண்டு வந்து சேர்த்தால் போதும். வளருதல் என்பது தானே நிகழும்.  இதைத்தான் நாம் அனைவரும் நன்கு உள்வாங்கிக் கொண்டு நம் வாழ்வை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

வாழ்க்கையை அதன் சொந்த வழியில் செல்ல நீங்கள் அனுமதிக்கும்போதும்,

அதை நீங்கள் செயல்படுத்துவதற்கு விரும்பாதபோதும்,

அதன்மீது எந்த கட்டுத்திட்டங்களையும் கொடுப்பதற்கு விரும்பாதபோதும்,

அதைத் திறமையாகச் செயல்படுத்தாதபோதும்,

அதன்மீது எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் நீங்கள் கட்டாயமாக திணிக்காத போதும்

ஒரு கட்டுப்பாடற்ற, தானே நடக்கின்ற ஒரு தூய்மையான மெய்மை நிலை உருவாகிடும்.  அதன் பெயர் என்ன தெரியுமா? அதன் பெயர் தியானம்.

அதனால்தான் நாம் மீண்டும், மீண்டும் சொல்வது யாரும் தியானத்தைச் செய்ய முடியாது.  நம்மால் தியானத்தில் இருக்க முடியுமென்று. மனதை ஒருமுகப்படுத்துவது என்பது மனிதனால் செய்யப்படக்கூடியது.  ஆனால், தியானம் என்பது மனிதனால் செய்ய முடியாத தெய்வீகச் சக்தியாக இருக்கக் கூடியது.  அந்த பரிபூரண தெய்வீகத்தில் நாம் வாழ வேண்டுமே தவிர, அந்த தெய்வீகத்தை செய்வதற்கு, கொண்டு வருவதற்கு பிரயத்தனப்படவே கூடாது.

தியானம் செய்பவர் சக்தி நிறைந்த மனிதராக என்றும் ஆவதில்லை.  அவர் அமைதி கொண்டவராக மாறிவிடுகிறார். அவர் எப்போதும் சாந்தத்திலேயே திளைத்துக் கொண்டிருப்பார்.

ஆனால், இந்த சண்டைகள், சச்சரவுகள் எல்லாமே சக்தி உங்களுக்குள் உருவாவதால்தான் ஏற்படுகின்றன.  அனைத்துச் சக்திகளுமே உராய்வினாலும் எதிர்ப்புத் தன்மையாலும்தான் உருவாகின்றன. உராய்வின்மூலம் தீப்பொறியும் மின்சாரமும் உண்டாகின்றன.  அதனால்தான் அதிகாரத்தைத் தேடுகின்ற மக்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். போராட்டமானது எப்போதும் சக்தியை உருவாக்கிக் கொண்டே போகும்.  ஒருவர் சொல்லும் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, அவரின் கருத்தோடு உங்கள் கருத்து மோதி உராய ஆரம்பிக்கும். அதனால் அங்கே எதிர்ப்புத் தன்மை உருவாகிவிடும்.  எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று விலக்கத்தான் பார்க்கும் ; என்றுமே ஒன்று சேர்ந்திடாது.  காந்தப் புலன்களில் இந்த துருவ நிலைப்பாட்டை உங்களால் நன்றாக காண முடியும்.  அதனால்தான் இந்த உலகமானது எப்போதும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டும், உராய்ந்து சக்திகளை உருவாக்கிக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறது.  உலகை அதிகாரம் ஆட்சி செய்ய ஆரம்பிப்பதால்தான் இந்த சண்டைகளும் சச்சரவுகளும் இன்றுவரை நீடித்துக் கொண்டே செல்கின்றன.

தியானமோ உங்களை சமாதானப்படுத்திக் கொண்டே இருக்கும்.  சமாதானத்திற்கும் ஒரு சக்தி இருக்கிறது. அச்சக்தி முற்றிலும் வேறுபட்ட, மாறுபட்ட ஒரு சக்தியின் பரிமாணமாகும்.  எதிர்ப்பே காட்டாத ஒரு அற்புத சக்தி அது.  எதிர்ப்புகளும் சண்டைகளும் சச்சரவுகளும் எப்போதும் போராட்டச் சக்திகளையே பிரதானமாகக் கொண்டிருக்கும். அது ஆண் சக்தியாகும். ஆனால், சமாதானத்தின் சக்தியோ என்றும் அடங்கிப் போகக்கூடிய பெண் சக்தியைக் கொண்டதாகும். ஆண் சக்தி அழிய வைக்கக் கூடியது ; பெண் சக்தி நம்மை அமுதக் குளத்தில் வாழ வைக்கக் கூடியது.  அதனால்தான் பிரமஞானத் தவத்தில்கூட சுடுவெப்பத்தை அசுத்த உஷ்ணம் என்றும் அது சூரியச் சக்தி என்றும் ; தண்வெப்பமான சுத்த உஷ்ணம் என்றும் அது குளிர்சந்திரனின் அமுதச் சந்திரச் சக்தி என்றும் வகுப்பெடுத்து கற்றுக் கொடுத்து வருகிறோம். அதனால் சமாதானச் சக்தியை பெண் சக்தி என்றே அழைக்கலாம்.  பெண் சக்தியிடம் எதிர்ப்போ, எந்தவித வன்முறையோ இருப்பதில்லை என்பார்கள்.

புத்தரும் பிரமஞானிகளும் சக்தி நிறைந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  அவர்களது சமாதானத்தில் ஆழ்ந்த அமைதி இருக்கிறது.  அவர்கள் உண்மையில் ஒரு தாமரை மலரைப் போல, ரோஜா மலரைப் போலவே இருக்கிறார்கள்.  ஆனால், வெடிக்கும் தன்மை கொண்ட வெடிப்பொருள்களாக அவர்கள் இல்லை.  ஒரு குழந்தையின் புன்னகைத் தன்மை கொண்டவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சிறிய அகல்விளக்கின் தீபச்சுடரைப் போலத்தான் இருக்கிறார்கள்.  இருட்டில் அந்த அகல் விளக்கு எவ்வளவு வெளிச்சத்தைக் கொடுக்கிறது என்பதைப் பாருங்கள்.  அந்த சிறிய ஒளிதீபம் நமக்கு வேறொரு பரிணாமத்தைக் காட்டுகிறது.  அந்த சக்தியைத்தான் நாம் தெய்வீகச் சக்தி என்றே அழைக்க முடியும்.  அதனிடம் எந்தவித உராய்தலும், எதிர்ப்புத் தன்மையும் இருப்பதில்லையே.

மனதை ஒருமுகப்படுத்தலில் எதிர்ப்புத் தன்மையே மிகுதியாக இருக்கிறது.  மனதோடுதான் நாம் மோதிக் கொண்டு உராய்கிறோமே.  நமது சொந்த மனதிடமே சண்டை போடுகிறோம்.  நீங்கள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கும், குறிப்பிட்ட தூரத்தை அடைவதற்கும்தான் மனதை பாடாய்படுத்துகிறீர்கள்.  எப்படியாவது மனதை ஒரு புள்ளியில் குவித்துவிட வேண்டுமென்று மன்றாடித் தொலைக்கிறீர்கள்.  பலவந்தமாக உங்கள் மனதை நிர்ப்பந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.  ஆளை விடுடா சாமி என்று மனது ஓடிப்போனாலும், நீ எப்படி என்னை விட்டு ஓடிப் போகலாம் என்று ஓடிப்போன மனதை எண்ணம் என்ற கயிற்றால் கட்டியிழுத்துக் கொண்டு வருகிறீர்கள்.  உங்களிடமிருந்து தப்பிக்க மனம் பாடாய்படுகிறது ; தவியாய் தவிக்கிறது ; பசியால் துடிக்கிறது.  மனம் வெளியே ஓட ஓட உங்களுக்குள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் புதிது புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கிறது.  தியானம் செய்ய உட்கார்ந்தா போதும், எங்கிருந்துதான் இவ்வளவு எண்ணக் கூட்டங்கள் சாரைசாரையாக வருமோ தெரியல என்பீர்கள்.  காரணம் என்ன தெரியுமா? நீங்கள்தான் உங்கள் மனதோடு சண்டையாக சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறீர்களே, ஒன்று போனால் நாலு வரத்தானே செய்யும்.

நீங்கள் மனதோடு சண்டை போடப் போட, மனதிற்குச் சக்தி அதிகமாகிக் கொண்டே போகும்.  சக்தி அதிகமாக, அதிகமாக எண்ணக் கூட்டங்களும் அதிகமாகிக் கொண்டுதான் போகும். அப்புறம் எங்கே மனதை ஒருமுகப்படுத்துவது.  அதெல்லாம் வேலைக்கே ஆகாது அன்பர்களே.  மனம் அமைதி அடைந்தால்தான் எண்ணங்கள் தோன்றாமல் இருக்கும்.  உங்கள் மனதை நீங்கள்தான் சமாதானமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது உங்களை மனவுறுதி படைத்த மனிதராக மாற்றிடும்.  தியானமோ, உங்களை ஒரு காலிப் பாத்திரமாக, வெற்றிடமாக, வெறுமையாளனாக மாற்றிடும்.  இதை பிரக்ஞ பரமிதா என்பார்கள் புத்த மதத்தில்.

உங்களால் தியானத்தைக் கொண்டு வர முடியாதுதான்.  ஆனால், உங்களுக்குள் அதை நுழைந்திட உங்களை நீங்கள் திறந்து வைத்திருக்க முடியும்.  அதை இந்த உலகிற்குக் கொண்டு வர, நீங்கள் எதையுமே செய்ய வேண்டிய தேவையே இல்லை.  உங்களால் அதைக் கொண்டு வர முடியாது.  அது உங்களைத் தாண்டி அப்பால் வேறிடத்தில் நிலை கொண்டிருக்கிறது. அது உங்களுக்குள் வந்துவிட வேண்டுமென்றால், நீங்கள் அப்பால் போய் மறைந்து விட வேண்டும்.  தியானம் இருக்க வேண்டுமென்றால், அங்கே மனம் இருக்கக் கூடாது.  மனம் இல்லாமல் இருக்கும் நிலைப்பாடே தியானம் என்பது.  தியானம் ஒரு தூய்மையான விழிப்புணர்வு மலராகும்.  அதற்குள் எந்தவொரு உள் எண்ணமும் துளியும் இல்லை.

தியானம், ஒரு விதை இல்லாமல் வளர்கின்ற ஒரு மரம்.  அதுதான் உலகத்தின் அதிசயமான மாயாஜால தியான மரம்.  மனதை ஒருமுகப்படுத்தத்தான் நமக்கு விதை தேவைப்படும்.  ஆனால், தியான மரத்திற்கு விதையே தேவையில்லை.  காரணம் அது எப்போதுமே விழித்திருக்கும் விதையாகும். விழித்திருப்பவனை நாம் எழுப்பத் தேவையில்லை. ஆனால், தூங்குபவர்களை விழிப்புநிலைக்குக் கொண்டு வர வேண்டுமல்லவா. அங்குதான் விதை என்ற விழிப்பு தேவை.  உங்களுக்குள் ஞான விதையை விதைத்துவிட்டால், அது வளர வளர மனம் முழுமையாக இல்லாது போய்விடும்.  மனமற்ற மனிதன் ஞானியாவான்.  ஞானி மரமானால்தான், மற்றவர்களுக்கு உரமாகவும், விதையாகவும், நிழலாகவும் இருக்க முடியும்.  எம் நிழலில் விதையாக உங்களை விதைத்துக் கொள்ள அனைவரும் வாருங்கள் என்று விதைக்குள் விதையாக இருந்துகொண்டு அன்போடு அழைக்கின்றோம்.  அவ்வளவே.

எந்தவொரு உள்நோக்கமும் எப்போதும் வெற்றி பெற்றதேயில்லை.  எந்தவொரு உள்நோக்கமும் எப்போதும் யாருக்கும் எந்தவொரு ஆசிர்வாதத்தையும் வாழ்த்துதலையும் கொண்டு வந்து கொடுப்பதில்லை. உள்நோக்கங்கள் எப்போதுமே வாக்குறுதிகளைத் தான் கொடுக்கும். பொருட்கள் ஒருபோதும் கொடுக்கப்படுவதில்லை.  ஒரு எண்ணம் தோற்றுப் போனால் உடனே மற்றொரு எண்ணம் உள்ளே நுழைந்து விடுகிறது.  தொடர்ந்து தோற்றுப்போகும் நிகழ்வுகளே நம் வாழ்வில் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.  அதனால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகிறீர்கள்.  இவ்வாறு உங்கள் உள்நோக்கங்கள் தொடர்ந்து உங்களை ஏமாற்றிக் கொண்டு வரும்போது, ஒருநாள் திடீரென்று நீங்கள் விழிப்புணர்வை அடைவீர்கள்.  அதாவது திடீரென்று அதனை நீங்கள் உங்களுக்குள் பார்க்க ஆரம்பிப்பீர்கள்.  நீங்கள் அவ்வாறு பார்ப்பதுதான் தியானத்தின் ஆரம்பம். தியானமானது தனக்குள் எந்தவொரு விதையையும் வைத்துக் கொண்டிருப்பதேயில்லை.  நீங்கள் ஏதாவது ஒன்றிற்காக தியானம் செய்ய ஆரம்பித்தால், அதன்பின் நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தும் செயலில்தான் இறங்குவீர்கள்.

தியானம் என்பது செய்யப்படுவதில்லை.  அப்போது நீங்கள் இன்னமும் இந்த உலகில்தான் இருந்து வருகிறீர்கள் என்று அர்த்தமாகிறது.  உங்கள் மனம் இன்னமும் அற்பமான விசயங்களில்தான் ஆர்வத்துடன் இருந்து வருகிறது என்றுதான் பொருளாகிறது.  நீங்கள் நிர்வாண நிலையை அடைவதற்கு தியானம் செய்தாலும்கூட நீங்கள் உலக விசயங்களைச் சார்ந்தவராகவே இருக்கிறீர்கள். நீங்கள் இறைவனை அடைவதற்காகத்தான் தியானம் செய்கிறேன் என்றாலும்கூட, நீங்கள் உலக விசயங்களைத்தான் சார்ந்தவராக இருக்கிறீர்கள்.  ஆனால், தியானத்தில் எந்தவொரு குறிக்கோளும் இருப்பதில்லை ; அப்படி எதுவுமே கிடையாது.

உலகில் விளங்கும் அனைத்துக் குறிக்கோள்களும் பொய்யானவைதான் என்ற அகப்பார்வை ஒன்றுதான் தியானம்.  ஆசைகள் உங்களை தியானத்தின் பக்கம்கூட அழைத்துச் செல்லாது.  ஒரு புரியாத புரிதல்தான் தியானம்.  அறியாத அறிதல்தான் தியானம்.  தியானம் என்பதை என்ன அது என்று உங்களுக்கு உள்ளே தான் சென்று சிறிதுநேரம் பாருங்களேன்.  இந்தப் பேச்சுரைகளில் எதையும் கற்றுக் கொடுக்க யாம் வரவில்லை.  உங்களை வெறுமனே விழிப்படைந்துவிடுங்கள் என்றே சொல்ல வந்திருக்கிறோம்.

மனம் எப்போதுமே பலமான சிக்கலான விசயங்களில்தான் காரியம் ஆற்றத் துடித்துக் கொண்டிருக்கும் ; ஆசையும் கொண்டிருக்கும்.  தியானம் எப்போதுமே ஆழ்ந்த அமைதியில் சமாதானம் கொண்டிருக்கும்.  எதிர்வினை ஏதும் ஆற்றாது.  தனக்குள் தானே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடும், ஒரு ஆமையைப் போல.

தியானம் என்பது நீங்கள் காலையில் மட்டும் ஏதோ செய்துவிட்டு அதோடு முடிந்து போகின்ற ஒன்றல்ல.  தியானம் என்பது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் வாழ்ந்து கொண்டு போகின்ற ஒன்றாகவே இருக்கும்.  நீங்கள் நடக்கும்போதும், தூங்கும்போதும், அமர்ந்திருக்கும்போதும், பேசும்போதும், பிறர் பேசுவதைக் கேட்கும்போதும் அது ஒருவகையான பருவநிலை மாற்றமாக மாற வேண்டும்.  ஓய்வாக இருக்கும் மனிதன், அதில் இருக்கிறான்.  கடந்த கால எண்ணங்களைக் கைவிட்டுக் கொண்டே போகின்றன ஒரு மனிதன் எப்போதுமே தியானத்திலேயே இருந்து கொண்டிருப்பான்.  ஏற்கனவே முடிவான தீர்மானங்களில் ஒருபோதும் செயல்படத் துணியாதீர்கள்.  அந்தத் தீர்மானங்கள் அனைத்துமே தப்பான எண்ணங்களாகவோ, ஆசை எண்ணங்களாகவோ, பயமாகவோ, இப்படி எல்லாமாகவே இருக்கும்.  காரணம், நீங்கள் அங்கே இருப்பதனால்தான்.

நீங்கள் என்றால் உங்களது கடந்த காலமாக இருக்கிறீர்கள் என்றே பொருள்.  நீங்கள் என்றால் கடந்த காலத்தின் உங்களது எல்லா அனுபவங்களாகவே இருக்கிறீர்கள் என்றே பொருள். உயிரற்ற போய்விட்டவைகள் உயிர் உள்ளவைகள்மீது ஆட்சி செலுத்த எப்போதுமே அனுமதிக்க வேண்டாம்.  கடந்த காலம் நிகழ்காலத்தை ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள்.  அதுதான் தியானம்.  சுருக்கமாகச் சொல்லப் போனால், தியானத்தின் போது நீங்கள் அங்கு இருப்பதில்லை.  இறப்பானது உங்கள் வாழ்வின்மீது அதிகாரமோ, ஆட்சியோ செலுத்த அனுமதிக்கவே அனுமதிக்காதீர்கள்.  உயிரற்றுப் போனவைகள் உயிரோடு இருப்பவைகள்மீது ஆளுமைப்படுத்தாமல் இருப்பதற்குப் பெயர்தான் தியானம் என்பது.

தியானம் என்பது உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒருவகை தூய உணர்வைக் கொடுக்கின்ற ஒரு பரவசநிலை அனுபவமாகும். அப்போது நீங்கள் வெறுமனே தன்னுணர்வில் வாழ்வீர்கள். அந்த நொடிப்பொழுதில் நீங்கள் வாழும்போது, எதுவும் இடையில் குறுக்கிடாத போது, உங்களது கவனமானது முழுமையானதாக இருக்கிறது.  ஏனெனில், அங்கு திசை திருப்புதல் இருப்பதில்லை.  திசை திருப்புதல் என்பது கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தில் இருந்து வருகிறது.  கவனம் முழுமையாக இருக்கும்போது, செயலும் முழுமையானதாகவே இருக்கும்.  அது எந்தவொரு மீதிப்பகுதியையும் வைத்து விட்டுப் போவதில்லை.  அது உங்களை சுதந்திரமானவராக ஆக்கிக் கொண்டேதான் போகும்.  அது உங்களை அடைக்கின்ற கூண்டுகளை ஒருபோதும் உருவாக்காது.  அது எப்போதும் உங்களை சிறைப்படுத்துவதே இல்லை.  அதுதான் புத்தரின் இறுதி குறிக்கோளாக இருந்தது.  அதைத்தான் அவர் நிர்வாணா என்று அழைத்தார்.

‘நிர்வாணா’ என்றால் விடுதலை என்று பொருள்.  முற்றிலுமான, முழுமையான, தடையேதும் இல்லாத விடுதலை என்று பொருள்.

நீங்கள் அங்கே ஒரு பரந்த வானம் போல ஆகிவிடுகிறீர்கள் என்று பொருள்.

அங்கே எல்லைக் கோடுகளே இருப்பதில்லை.  அது எல்லைகள் அற்றது ; எல்லைகளைக் கடந்தது.

அது வெறுமனே மட்டும் இருக்கும்.

அதன்பின்னர் அங்கு உங்களைச் சுற்றிலும் உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும், ஒன்றுமில்லாமையும்தான் இருக்கும்.

ஒன்றும் இல்லாமைதான் தன்னுணர்வின் ஒரு தியான நிலையின் செயல்பாடாக இருக்கும்.

மேலும், அந்த ஒன்றுமில்லாமையில்தான் வரப்பிரசாதம் இருக்கிறது.  அந்த ஒன்றுமில்லாமையே ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அந்த வரப்பிரசாதத்தின் பெயர்தான் மகா நிர்வாணம் என்ற முழு வெறுமையான நீரோட்டத்தில் நீந்துதல் என்று சொல்லி, இந்த பேச்சுரையை இனிதே நிறைவு செய்து மகிழ்கின்றோம்.

மீண்டும் அடுத்த வாரம் வியாழன்று இரவில் ஒன்றுமில்லாமல் நதிக்குள் எப்படி முழுமையாய் நீந்துவது? என்பதைப் பற்றிக் கலந்துரையாடலாம், அவசியம் வாருங்கள்.

பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து

உங்கள் ருத்ர ஷிவதா.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

திருச்சிற்றம்பலம்