மாற்றிப் பிறக்கும் தேவ இரகசியம்

மாற்றிப் பிறத்தல் என்றால் என்ன?  அதுதான் துவிஜத்துவம் எனப்படுவது.  துவிஜத்துவம் என்பது நம்முடைய இரண்டாவது பிறப்பைச் சொல்கிறது.  துவிஜர் என்றால், இரு பிறப்பாளர் – மாற்றிப் பிறந்தவர் என்பதாகும்.  இதன் உண்மை எதுவென்றால், அதுதான் இப்பேச்சுரையின் நோக்கம்.

உடலானது நோய்களால் நலிவடையும்போது – உடலும் உயிரும் துன்பத்தை அடையும்போது அந்நோயை மாற்ற வேண்டும் என்பார்கள் அல்லவா.  அதாவது தீய குணங்கள் நல்லவைகளாக மாற்றமடைய வேண்டும் என்பார்கள்.  துன்பம் இன்பமாக மாறுவதே மாற்றம் எனப்படும்.  எதனாலாவது துன்பம் நீங்கி இன்பம் அடைவதையே அனைவரும் விரும்புவார்கள் அல்லவா. துன்பம் நீங்கி இன்பம் அடைவதுதான் மனித முயற்சியின் நோக்கமே இருக்கும்.  அதுதான் சீவ இயலுக்கு ஐ – சீவ இயற்கை என்றாகும்.

பிணி, மூப்பு, சாக்காடும், பிறவியுமே துன்பத்தைத் தருபவைகளாக உள்ளன. இவை இல்லாமல் போவதுதான் மாறுவதுதான் வீடு எனப்படும்.  செம்பில் களிம்பு போல உடலுயிரில் உள்ள அழுக்கே – பாசமே – அசுத்தமே – அசுத்த நிறையே பிணி, மூப்பு, சாக்காடும், பிறவியுமாகிய துன்பத்துக்கு மூலமாகவும் காரணமாகவும் அமைகின்றன.  காரணமாகிய அசுத்த நிறையானது அமல நிறையாக மாற்றம் அடைய வேண்டும். அவ்வளவுதான்.  அவ்வாறு மாற்றம் அடையும்போது காரியமாகிய பிணி என்ற நோய் முதலானவைகள் அனைத்தும் மாற்றத்தை அடைந்து ஒழிந்துவிடும்.  மாயக் குரம்பையாகிய – மலக்குரம்பையாகிய இந்த அசுத்த தனுவானது அமலக் குரம்பையாக மாற்றம் அடைவதைத்தான் மாற்றிப் பிறத்தல் எனப்படும் துவிஜத்துவ நிலையாகும்.

“மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அவ்வழியே போது நாமே” எனவும், “பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாத புலால் துருத்தி போக்கலாமே” எனவும் அருளிச் செய்தார் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர்.  இதனால் குருநெறி கடைப்பிடித்து வழுவற ஒழுகி வந்தால், புலால் துருத்தியான நம்முடைய மருளுடம்பைப் பூந்துருத்தியாக மாற்ற வேண்டும் என்பதும், அதுவே மாற்றிப் பிறப்பதாகிய முத்தி நெறி என்பதும் நன்றாக உணர்த்தப்படும் தேவ இரகசியமாகும்.  இதை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள் மாணவர்களே.  உடல் மாற்றமடையவே அதனின் வேறாகாத உயிரும் மாற்றமடையும் என்பது இங்கு நாம் சொல்லாமலே உங்களுக்கு விளங்கியிருக்கும்.

அசுத்த நிறையாகிய உடலுயிரே சீவன் எனப்படுவது.  சீவ  சப்தத்தால் குறிக்கப்படுவது சத்தும் சித்துமாகிய – சத்து சித்தாகிய உடலுயிரின் கூட்டுறவே அன்றி வேறில்லை.  உடல் மாற்றமடையாத இடத்து உயிர் மாற்றமடைதல் முடியாத காரியமே.  உடல் நலம் குன்றிய காலத்து உணர்ச்சிகள் மழுக்கமடைதல் கண்கூடாக காணும் காட்சியல்லவா.  உடல் பிணமாகும் காலத்து அதாவது இறக்கும் போது அறிவு – உணர்ச்சி கெடும் அல்லவா?  இதைத்தான் பிருதிவி ரூப, அன்ன காரியம் மனம் எனவும், ஜல காரியம் பிராணன் எனவும் சாந்தோக்கிய உபநிடதம் வற்புறுத்திச் சொல்கிறது. இதனால் உடலுயிர்களின் அன்னினோன்ய சம்பந்தம் வெள்ளிடை மலையாக விளங்கிடும்.

உடலுயிர் மாற்றமடைந்து துன்பம் நீங்கி இன்புறுதல் என்பது கட்டுக்கள் அற்று வீடடைதல் சீவ முயற்சியால் முடியாத காரியமே என்று முழுமையாகச் சொல்லி விடலாம்.  சீவ முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் எந்தவகையான உபாயங்களாலும் தந்திர-மந்திர-யோக-சமாதிகளாலும் குட்டிக்கரணங்களாலும் நிலையான இன்பம் – வாய்மையான இன்பம் – சுகம் கைகூடி வந்துவிடாது என்பது கண்கூடான உண்மையாகும்.  இந்த வகையான தந்திரம் சீவ முயற்சியால் அறிவியல் மூலமாகக் கண்டுபிடிக்கக் கூடியது என்றால், வாலறிவனும் தனக்குவமை இல்லாதவனும் ஆகிய குருபரன் எதற்கு?  இறைவன் எதற்கு? சீவர்கள் முனைப்போது கூடிய ஆராய்ச்சி வகையால் பலவகையான பொறிகளையும் – யந்திரங்களையும் – விமானங்களையும் உலக வியாபார தந்திரங்களையும் கண்டுபிடிக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள்.  ஆனால், மாற்றிப் பிறந்து பிணி, மூப்பு, சாக்காடும், பிறவியும் ஒழிந்து பேரின்பம் பெறுவதென்றால், அதற்கேற்ற அறத்தாறு – உபாயம் சிற்றறிவுடைய சீவர்களது முயற்சியால் கண்டுபிடிக்கப்பட முடியாது.  அது சீவர்களாகிய நம்மோர்களின் சிந்தனை – சொல் – செயல்களுக்கு எட்டாத விசயமாகத்தான் இருக்கும். அறத்தாறு என்பது அறத்தின் வழியே செல்வது என்று பொருளாகும்.

உலகத்திலேயே சீவர்கள் பக்குவங்களுக்கு ஏற்றவாறு போலியாக – கற்பனையாக அமைந்துள்ள அறத்தாறுகள் – நெறியல்லா நெறிகள் பலப்பல உண்டு.   அவையெல்லாம் வாய்மையான அறத்தாறு என்னும் குருநெறி ஒன்று உள்ளது என அதனை நாடச் செய்யும் ஆற்றல் உடையதாகப் பயன்படுமே அன்றி, மாற்றிப் பிறக்கும் வகையை அதாவது சீவர்கள் சடபேதம், கர்மபேதம் என்பனவற்றிற்கு ஏற்ற சாதக யோகங்களைக் கூறாது என்பதை நாம் இங்கே நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.  சகல சீவராசிகளுக்கும் உடையதாய் வாய்மையான அறத்தாறு எனப்படும் குருநெறியானது வாலறிவனாகிய சற்குருநாதனால் – கயிலை முதற்குரவனாகிய நந்தி பெருமானால் வகுக்கப்பட்டுள்ளது – அருளப்பட்டுள்ளது என்பதை நாம் நன்றாகப் புரிந்திருக்க வேண்டும்.

சைவ சமயத் தனிநாயக நந்தி

உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு

தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய

வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே            (திருமந்திரம்)

என அருளிச் செய்தார் வாய்மையான குரு நெறி கண்டு மாற்றிப் பிறந்து உலக குருவாய் வந்து வேத உண்மைகளை வெளிப்படுத்தி உண்மை முத்திநிலையை அடைந்த எம் அண்ணலாகிய நம் குலகுருவான திருமூலர் அவர்கள்.

சைவ சமயத்தின் தனிநாயகன் தனிப்பெரும் தலைவன் நந்தி.  நம் தீ என்பதே நந்தியாகும்.  ஆன்மாவே சைவ சமயத் தலைவன் என்பதை நாம் முதலில் உணர்ந்திருக்க வேண்டும்.  அந்த இறைவன்தான் நந்தியாக நம் தீயாக நம்முள்ளே வந்தமர்ந்து கொண்டு சீவர்களாகிய நாம் மேன்மை அடைவதற்காகவும் பிரமஞானத்தைப் பெறுவதற்காகவும் குருநெறியை சற்குருவாக வந்து உபதேசித்தார், தக்ஷிணாமூர்த்தியாக.  பிரமஞானத்தை பிரமஞானத் தீக்ஷை மூலமாகவே பெற வேண்டும்.  அது என்ன தெரியுமா? தெய்வ சிவநெறி என்பது சன்மார்க்க நெறியே.

எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுவது அவர்களுக்கு எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுவது அவர்களுக்கு இரக்கம் காட்டி நன்நெறிப்படி ஒழுக்கமாக இருப்பதே தவம்.  அதை சற்குரு மூலம் கற்றுச் செய்வதுதான் சன்மார்க்கமாகும்.  சன்மார்க்க சாதனையே நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் என எல்லா ஞானிகளும் உபதேசித்து வந்துள்ளார்கள்.  சைவ சமயம் என்றால் சன்மார்க்க நெறியே.  சன்மார்க்க நெறி காட்டுவது நந்தியை அடையவே.  நந்தியை அடைந்தாலே சிவத்தைக் காண முடியும்.  சிவமே – ஒளியே அருட்பெருஞ்சோதியே இறைவனாம்.

மாற்றிப் பிறக்க வகை அறியாது கற்பனையாகிய போலிகளையே உண்மை என நம்பி அமைவதால், துன்பம் நீங்கி இன்பமடைந்து நித்தியத்துவம் அடைவது முயற்கொம்பே என்பதைப் பட்டினத்தார் பாடலில் காணலாம் வாருங்கள்.

நீற்றைப் புனைந்துஎன்ன நீராடப் போய்என்ன நீ மனமே

மாற்றிப் பிறக்க வகைஅறிந்தாய் இல்லை மாமறைநூல்

ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம்என்ன கண்டாய்

ஆற்றில் கிடந்து துறைதெரியாமல் அலைகின்றையே.   (பட்டினத்தார்)

அரிய பெரிய வேத இரகசியத்தை உள்ளுறையாகக் கொண்ட இச்செய்யுள் குருவருளால் மாற்றிப் பிறந்து நித்தியத்துவம் பெற்ற பட்டினத்தடிகள் அருளியதாகும்.  மாற்றிப் பிறக்கும் வகைக்குரிய தந்திரத்தை – சாகாக் கல்வி என்னும் வாய்மையான கல்வியைக் குருவருளால் அறிந்து மேன்மையடையாத இடத்து, கற்பனையாகிய நீற்றையே வாய்மையான நீறு என நம்பிப் பட்டை பட்டையாக அணிவதாலும், உலகில் உள்ள தீர்த்தங்களில் முழுகுவதாலும், உலகில் நூல்களாக வழங்கும் வேதங்களில் நம : சுவாஹா : முதலிய ஏழு ஈறு (கோடி) களையுடைய மந்திர வாக்கியங்களை உச்சரிப்பதாலும் உண்மைப் பயன் அடைய முடியாது.  இம்மாயாப் பிரபஞ்சமாகிய ஆற்றில் கிடந்து கரை தெரியாமல் வருந்த வேண்டியதேயாகும் என்பது இதன் பொருளாகும்.   ஆகவே, வாய்மையான குரவன் அருளால் பெறப்படும் அறத்தாறுகளால் மாற்றிப் பிறப்பதே இம்மாயை வலையினின்றும் நீங்கி இன்பமுற்று நித்தியத்துவம் அடையும் நெறி என நன்றாக வலியுறுத்திக் கூறப்படவேண்டிய கட்டாயம் அன்றைய காலத்திலேயே நம் பிரமஞானிகளால் பாடப்பட்டுள்ளது.

கங்கையில் ஆடில்என் காவிரியில் ஆடில்என்

கொங்குதண் குமரித்துறையில் ஆடில்என்

பொங்குமா கடலோத நீராடில்என்

எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

(அப்பர் – பாவநாசத் திருக்குறுந்தொகை, செய்யுள்-2)

எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லை – மாற்றிப் பிறத்தலால் எங்கும் சிவமாக வாய்மையில் கண்டு நிற்கும் சகச நிட்டை கைவரப் பெறாதவர்க்கு வீடுபேறு இல்லை.

தீர்த்தம் ஆடவேணும் என்று தேடுகின்ற தீனர்காள்

தீர்த்தம் ஆட எவ்விடம் தெளிந்துநீர் இயம்பிலீர்

தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்

தீர்த்தமாக உள்ளதும் சிவாய அஞ்செழுத்துமே

சிவாய அஞ்செழுத்து – இதுவே அமல ஐகாரமாகும்.  மாற்றிப் பிறந்த மெய்யடியார்க்கு எம்பெருமான் திருவடியாகிய இதுவே வாய்மையான தீர்த்தமாகி அமையும்.  உடலுயிரை அமலமாக்கி நித்தியத்துவம் அளிப்பது இதுவேயாகும்.

எளிய வாதுசெய்வார் எங்கள் ஈசனை

ஒளியை உன்னி உருகு மனத்தராயத்

தெளிய ஓதிச் சிவாயநம என்னும்

குளிகையிட்டுப் பொன்னாக்குவன் கூட்டையே                      (தி.ம.2709)

என்று திருமூலர் அருளியிருப்பதை இங்கு நாம் ஒப்பு நோக்க வேண்டும்.

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்றுஆடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்து திரிவரிக்

கள்ள மனமுடைக் கல்வி இல்லோரே    (தி.ம.509)

மாற்றிப் பிறந்து வாய்மையான தீர்த்தங்களைத் தம்முள்ளே கண்டு ஆடுபவரே பாசங்கள் பற்றுக்கள் நீங்கி மேன்மையடைய வல்லார் என்பதும், கற்பனையாக விளங்கும் தீர்த்தங்களில் ஆடும்படி அலைந்து திரிவோர் வாய்மையான கல்வி இல்லாதவர் என்பதும், படிற்றொழுக்கம் உடையவர் என்பதும் இத்திருமந்திரப் பாடலால் நமக்கு நன்கு விளங்கிடும்.

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்

வானூறல் பாயும் வகையறிவார் இல்லை

வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்

தேனூறல் உண்டு தெளிதலும் ஆமே.      (தி.ம.804)

தேனாறு பாயுமடி அகப்பேய்

திருவடி கண்டவர்க்கே

ஊனாறும் இல்லையடி அகப்பேய்

ஒன்றையும் நாடாதே          (அகப்பேய்ச் சித்தர் – 58)

இவற்றால் வாய்மையான தீர்த்தம் இன்னதென்று கூறப்பட்டிருக்கிறது. உயர்வரை உச்சி – சந்திர மண்டலம்.  வான் ஊறல் – ஆகாய கங்கை – அமுதம்.  இதுதான் உண்மையான வாய்மையான கங்கை ; சிவன் தன் சடையில் விளங்குவது ; மாற்றிப் பிறந்தவரால் அடையப்படக் கூடியது.  இதனை அடைவது அத்தனை எளிதானக் காரியமல்ல.  பகீரதப் பிரயத்தனம் ஒவ்வொரு பிரமஞானச் சாதகனுக்கு வேண்டும்.  பகீரதப் பிரயத்தனமாக மாற்றிப் பிறந்தால் வாய்மையான உண்மையான கங்கை முதலிய தீர்த்தங்களில் திளைத்து ஆடி நித்தியத்துவத்தை அடைந்திடலாம்.

இவ்வாறு சொல்லப்பட்டிருப்பதால் இந்த வேத நூல்களெல்லாம் கற்பனைகளையும் புறக்கணிக்குமாறு கூறியதாகுமோ? இல்லை அல்லவா.  மற்றபடி கற்பனைகளாகிய இடுகுறிகளால் உண்மையை நாடி மேன்மையை அடைய முடியாது என்பதை நம்பி சாதலை அதாவது இறப்பினை அடையும் மூடக்கொள்கையை இவைகள் கண்டித்தன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

மாற்றிப் பிறப்பதால்தான் நித்தியத்துவம் அளிக்கும் வாய்மையான நீறு அணியப்படும்.  அதுதான் சரீரத்துள்ள அசுத்த பௌதிகமாகிய மலம் சிவாக்கினி என்னும் அமல அக்கினியால் தகிக்கப்பட்டமையால் ஆன நீறு – மல பௌதிகம் விமல பௌதிகமாக மாறிய நீறு ஆகும்.  இதுதான் பொற்சுண்ணம் – செம்பொன் செய் சுண்ணம்.  இந்த நீறுதான் விபூதி – விசேசமான செல்வம் அளிப்பது ; மஹைஸ்வர்யம் என்னும் இந்திர போகம் அளிப்பது – பிணி, மூப்புச் சாக்காடும் பிறவியும் ஒழித்து நித்தியத்துவம் அளிப்பது.  இந்த நீறுதான் எம்பெருமான் செம்பவளத் திருமேனியில் விளங்குவது.  இதுதான்

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாம்ஆகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே             (தி.ம.1666)

இதுவே ரக்ஷை – ரக்ஷக தேகம் – விதேகம் – விமல தேகம் என்க. பிரமஞானத் தவத்தைச் செய்திடும் மெய்யடியார்கள் அணியும் நீறு இதுதான்.  இதற்கு அறிகுறியாகவே சுகாதார முறைக்கு ஏற்றதாகிய பசுவின் சாணத்தை – மலத்தை அக்கினியால் சுட்டு சுண்ணமாக்கி நீறாக அணிவது உலகியலாயிற்று.  கற்பனையாகிய இந்த நீறுதான் எம்போலிய போலிச் சைவர் வாய்மை எனக் கொள்வது.  மாற்றிப் பிறந்த போதுதான் – துவிஜத்துவம் அடைந்த போதுதான் வாய்மையான நீறு தீர்த்தம் முதலியன காணப்படும். கற்பனையாகிய போலியை உண்மை என நம்பி அமைவதால் அறமுதல் நாற்பொருட்பயனை அடைய முடியாது என்பதைப் புலப்படுத்துவதற்காகத்தான், “நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன” என்றார் அப்பர் சுவாமிகள்.

மாற்றிப் பிறந்தபோதுதான் வாய்மையான வேதங்கள் – மந்திரங்கள் காணப்படும் – கண்டு ஓதப்படும்.

“அரவொலி யாகமங்கள் அறிவாரறி தோத்திரங்கள்

விரவிய வேதஒலி விண்ணெலாம் வந்துஎதிர்ந்து இசைப்ப”

என்றனர் தம்பிரான் தோழர்.

உலகில் வழங்கும் கற்பனை வேதங்கள் – மந்திரங்கள் எல்லாம் வாய்மை ஒன்றுள்ளது என அதனைக் குரு நெறியால் அடையச் செய்யும் அளிவிற்கு பயன்படுவனவே அன்றி வேறில்லை.

உலகில் வழங்கும் வேதங்களை ஓதுவதால் உண்மைப் பயனடைய முடியாது என்பதனையும், மாற்றிப் பிறந்து வாய்மையான வேதங்களைக் கண்டு ஓதுதலால்தான் நித்தியத்துவம் உளதாகும் என்பதனைச் சிவவாக்கியார் வற்புறுத்திச் சொல்வார்.

சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்

சேமமாக ஓதினும் சிவனை நீர்அறிகிலீர்

காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்

ஊமையான காயமாய் இருப்பன் எங்கள்ஈசனே            (சிவவாக்கியார்-18)

காம நோயை விட்டுக் கருத்துளே உணர்தல் என்றால் என்ன என்றால், அருந்தல் பொருந்தல்களால் காமம் வெல்லப்பட வேண்டும்.  காமத்தால் அடையப் படுவது காதல்.  காமமுடையான் வேதமோத அருகதை உடையவனல்ல. அப்படியென்றால், யார் நம் தேகத்தில் காமத்தை உண்டாக்கினாரோ அவருக்கே அதன் பயனானது உரியது.  ஆதலால்தான்,

“காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி

ஓதுவார் ………………………”

என வேதம் ஓதுவோர் இலக்கணத்தை அருளிச்செய்தார் ஞானசம்பந்தர். இக்காதலைத் தான் “நமச்சிவாய” என்னும் நாமத்தால் சதுரப் பாடுடையார் கூறுகின்றனர்.  இவ்வாறு வாய்மையான வேதம் ஓதுவாரை நன்னெறிக்கண் உய்க்கும் இக்காதல் என்க.  இக்காதலே கந்தழியின் வடிவம்.

“…………………………………. காதலும்

ஆக்கி அளித்து அழிக்கும் கந்தழியின் பேருருவே

நோக்கிலரை நோவது எவன்”

என்றனர் நம் முன்னோர்கள். “கண்ணீர் மல்கி” என்பது கண்ணில் நின்று அசுத்த நீர் வடிதலைக் குறித்ததன்று ; இது உலகில் வழங்கும் அழுகை அன்று ; நீலிக் கண்ணீராகிய மாய அழுகையைக் குறித்ததன்று.  கண்ணிற் கருவிழி மையத்து அசையும் நீர் அசுத்தமானது.  காதல் ஏற்படும் காலத்து இச் அசுத்த நீர் அமல நீராக மாற்றமடையும்.  “மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி” (திருவாசகம் – திருக்கழுக்குன்றப் பதிகம், செய்-3) என்று அருளியது மாணிக்கம் அல்லவா?

கண்ணை அப்புதல் – அணிதல் – அழகு செய்தல் என்பதும் இதுவே என்க.  ஏற்ற சாதகங்களால் அசுத்த நீரை மாற்றிக் கண்ணை அப்பினால் – அணிந்தால் – அழகு செய்தால் அமல நீர் பெருக்கமுறும் என்க.  இத்தன்மை வாய்ந்தவரே – கண்ணப்பர் – மெய்யடியார் என்க.

 “கடிமலர்ந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்

கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்…..”

(திருமாற்பேறு – திருத்தாண்டகம், செய்யுள்-6)

விண்ணப்பு – அமல நீர்.  விண் ஞானாகாசம்.  கண்ணப்பல் – அசுத்த நீரை மாற்றிக் கண்ணை அழகு செய்தல்.  மெய்யடியாரெல்லாம் இப்பெற்றி கைகூடப் பெற்றவரே  என்க.  அமல நீர் பெருக்கமுறின் ஆம் பயன் என்னவென்றால், அமல சத்திகள் – சூக்கும சத்திகள் அனைத்தும் காணப்படும் என்க. இதுதான் ஞான நேத்திரம்.  இதனை அடைவது எளிதன்று.  இதற்குத்தான் பாடு அதிகம்.  இதுதான் உபநயனம் என அறியப்படும்.  இத்தகைய வாய்மையான உபநயனமுடைய துவிஜரே – மாற்றிப் பிறந்த மெய்யடியாரே வாய்மையான வேதங்களை தம்முள்ளே கண்டு ஓதுவதற்கு அருகராவார்.  இவ் வேதங்களை ஓதுதலால் ஆம் பயன் என்ன? என்றால், அதுதான் அறத்தாறுகள் யாவற்றையும் உணர்ந்து ஒழுகி அமலம் பெற்று நித்தியத்துவம் அடைதலே  – வீடு பேறு அடைதலே என்று கூறப்படும். இதைத்தான்,

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே    (தி.ம.51)

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்

வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்

வேதன் உரைத்தானும் மெய்ப் பொருள் காட்டவே.   (தி.ம.52)

இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே

உருக்கு உணர் வாய் உணர் வேதத்துள் ஓங்கி

வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்

கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே.         (தி.ம.53)

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி

அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்

அருக்கனும் சோமனும் ஆர்அழல் வீச

உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.                    (தி.ம.93)

திருநெறி ஆவது சித்தசித்து அன்றிப்

பெருநெறி ஆய பிரானை நினைந்து

குருநெறி ஆம் சிவமாநெறி கூடும்

ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.                (தி.ம.54)

ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்

கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை

வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்

பேறு அங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே.                        (தி.ம.55)

என அருளிச் செய்தார் நம் குலகுருவான திருமூலர்.  வாய்மையான வேதங்களை ஓதுவதால் தர்க்கவாதங்கள் ஏற்படமாட்டாது ; சர்ச்சைகள் விளையமாட்டாது ; பூரண ஞானமே – வாய்மையான சாந்தியே ஏற்படுவதாகும்.  இவற்றால் வீடுபேறு உண்டாகும்.  அமல ஐகார விளைவே ஒவ்வொரு சீவனுக்கும் வேதமும் ஆகமும் ஆகி அமையும்.  இத்தகைய வாய்மையான வேதங்களை ஓதும் துவிஜர் எம்பெருமான் வடிவமாகி நித்தியத்துவம் அடைதல் திண்ணம் என்பார் “ஊமையான  காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே” என்றார் சிவவாக்கியார்.

எம்பெருமான் வடிவமாய இவ் அமல தனுவே “ஈசமில் காயம்” (திருமந்திரம் – நின்மலாவத்தை) எனத் திருமூலரால் அருளப்பட்டது.  இதுவே ஓ வடிவம் – பிரணவ வடிவம் – சுத்த மாயா வடிவம் – சூக்கும வடிவம் என்க.  இவ்வடிவம் சீவன் முத்தி நிலை பூரணப்பட்டோர்க்கே உரியது.  அசுத்த மாயா வடிவமாகிய மருளுடம்பே உரிய சாதகங்களால் முறையே விமலமாய் அமலமாவது – சூக்குமமாவது என்க.

துவிஜத்துவம் என்னும் மாறிப் பிறத்தலாகிய இவ் உண்மையை அறியாதார் மருளுடம்பு பிணமாகி விழுந்த பின் உயிர் அதனைப் பிரிந்து சுத்த மாயா வடிவம் பெறும் என இயற்கை விரோதமாகப் பிதற்றி அமைவர்.

அசுத்தத்தின் ஈற்றில் துலங்குவதே சுத்தமாதலால், அவ் அசுத்தம் நிறைமுறையோடு பஞ்சீகரணிக்கப்பட்டுத் துவிஜத்துவம் அடையப் பெற்றாலன்றி, சுத்த மாயா வடிவமாகிய சூக்கும வடிவம் ஏற்படுவது முயற்கொம்பேயாகும்.  மாற்றிப் பிறந்த காலத்துச் சத்தும் சித்தும் எவ்வாறாகும்? என்றால், சத்துக்குச் சித்து உணவும் சித்துக்குச் சத்து உணவுமாகியச் சமநிறை கொண்டு சிவமும் சத்தியுமாய்க் கூடிக் குழையும் என்று கூறப்படும்.  பின்வரும் பிரமாணம் இந்த உண்மையை நமக்கு நன்றாகப் புலப்படுத்திடும்.

மதுரகவி ஆழ்வார்

வினா : செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?

நம்மாழ்வார்

விடை : அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.

தம்முள்ளே திருவடியைக் கண்டவரே – குரு தரிசனம் பெற்றவரே மாறிப் பிறந்து பிணி மூப்புச் சாக்காடும் பிறவியும் ஒழிந்து நித்தியத்துவம் பெறுபவராவர்.

பிறப்பு மூப்புப் பெரும் பசிவான் பிணி

இறப்பு நீங்கி இங்கு இன்பம் வந்தெய்திடும்

சிறப்பர் சேறையுட் செந்நெறியான்கழல்

மறப்பதின்றி மனத்தினுள் வைக்கவே    (திருச்சேறை – திருக்குறுந்தொகை, செ.3)

மருளுடம்பினர் திருவடியைக் காணுதலும் அதனை மறவாது மனத்துள் வைத்தலும் முடியாத காரியம்.  முடியும் காரியம் என்றால், அது வெற்றுரையே அன்றி வாய்மை அல்ல.  ஏன்? அவர் மாற்றிப் பிறந்து நித்தியத்துவம் பெறாது பிணி மூப்புக்காளல் பிணமாகிச் சாக்காடு அடைதல் கண்கூடாகும்.  மாற்றிப் பிறக்கும் வகையை நாடாது மாயை வலைப்பட்டு அசுத்த ஊசல் ஆடும் எம்போலிய சீவர்கள் திருவடியைக் கண்டு மேய்மை அடைய முடியுமா? திருவடியைக் காண்பதும் அதனை மறப்பதின்றி மனத்துள் வைத்தலும் அதனால் மாற்றிப் பிறந்து பிணி மூப்புச் சாக்காடுகள் நீங்கி நித்தியத்துவம் பெறுதலும் எம்போலிய சீவர்களுக்கு எளிதாகுமா? திருவடி காணுதலின் அருமை திருவாசகம் திருவண்டப் பகுதி அகவலிலும், செத்திலாப் பத்து இரண்டாவது செய்யுளிலும் நன்றாக வலியுறுத்தப்பட்டது.

வாய்மையான அருந்தல் பொருந்தல்களால் – ஒப்புர ஒழுகுதலால் பஞ்ச பௌதிக தனு நிறையோடு பஞ்சீகரணிக்கப்பட்டால், ஆரூர்ப் பங்கஜதள மத்தியில் நடனமிடும் அப்பன் திருவடித் தாமரை காணப்படும்.  திருவடித் தாமரையே நமது சரீரமாகிய ஆலயத்துள் மறைந்திருக்கும் – மறையாயிருக்கும் வேதம் என்க.  அமல ஐகார ஒலி என்க.  இதுவே அனவரதம் ஒலித்துக் கொண்டிருப்பது – அசையாமல் அசைந்து கொண்டிருப்பது – நடனம் புரிவது என்க.  சத்துச் சித்தாய், பெண்ணும் ஆணுமாய் இவ்விரண்டும் கூடிக் குழையும் காலத்து உண்டாகும் அசைவாய், அவ் அசைவே ஆண் ஒலி பெண் ஒலி சேர்ந்த அலி ஒலியாய், அர்த்தநார ஒலியாய் விளங்குவது அப்பன் திருவடிக்கமலம் என்க.  இத்தகைய திருவடியைக் காண்பது என்றால், சரீர பாவனை ஒழிந்து – தற்சுதந்திரம் ஒழிந்து பெருந்துறைத் தரிசனம் பெற வேண்டும்.

மாற்றிப் பிறக்கும் வகையறியாது கற்பனையாகிய மாயா சொரூபங்களையே – நாம ரூபங்களையே உண்மை என நம்பி அமைவோர் பெருந்துறை கண்டு மேன்மை அடைதல் முடியாத காரியம்.  அவர்கள் இம்மாயாப் பிரபஞ்ச சாகரத்துள் முழுகி வருந்துபவரேயாவார்கள்.  இதுபற்றியே, “ஆற்றிற் கிடந்து துறை தெரியாமல் அலைகின்றையே” என்றார் பட்டினத்தடிகள்.  (பெருந்துறை – அகண்ட வெளி ; பிரபஞ்சக் கூட்டம் அற்ற இடம்). பெருந்துறை கண்டு கோகழியாகிய சமுத்திரத்தை நீந்தி அதன் மத்தியில் உள்ள திருவடி காண்பது – குரு தரிசனம் பெறுவது (குருந்தம் – குருவின் இடம் அடைவது) எளிதன்று.  கழியை நீந்துவது என்றால் எளிதாகுமோ?  கோகழியின் கரையாகிய வரையைக் காண்பதே அரிதினும் அரிதாம்.  திருவாசகம் திருவண்டப்பகுதி அகவலில்,

 “திருவார் பெருந்துறை வரையில் ஏறி”

என வரை கண்டு வரையில் ஏறியமை கூறப்பட்டது.  வரை கண்டு வரையில் ஏறியவன் படும்பாடு என்னவென்று உரைக்கப்படும்?  ஐம்பூதப் பிரளயத்தால் இவன் படும் பாடு அளவு படுவதாகுமா?  ஐம்பூதப் பிரளயம் என்றால் என்ன?  அதுதான் சரீரத்திலுள்ள பஞ்ச பௌதிகங்களும் ஒன்றாகிச் சேர்ந்து விடுதல் – குழைதல் என்பது.  நினைக்கவும் சொல்லவும் பட முடியாத துன்பங்களைப் பிறர் அறிந்து ஐயுறவும் இடனாகாதவாறு அனுபவிக்கும் இவன்,

“செஞ்சுடர் வெள்ளந் திசை திசை தெவிட்ட வரையுற”

என்ன செய்வான்? எவர் அறிவார்? அப்பன் கருணை நோக்கு இல்வழி இவன் பணி செய்து கிடக்கும் திறனுடையன் ஆவேனோ? அப்பால் நிகழ்வது யாது என்றால், அது இப்பாடலால் அறிந்து கொள்ளலாம்.

ஐம்புலப் பந்தனை வாளர விரிய

வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப

நீடுஎழில் தோன்றி வாள்ஒளி மிளிர

எந்தம் பிறவியிற் கோப மிகுத்து

முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கி (திருஅண்டப்பகுதி – 70-74)

பிரமஞானத் தவத்தில் ஆற்றப்படும் செயலானது ஐம்புலன்களையும் அதைப் பீடித்திருக்கும் (பந்தித்திருக்கும்) மும்மலப் பந்தங்களை அறுத்தெறிந்து  விடுவதைத்தான், “ஐம்புலன் பந்தனை வாள்அரவு இரிய” என்றார்.

அப்போது சூரியக் கலையில் உண்டாகும் அனலானது சிரசை மறைத்துக் கொண்டு ஒரு நீண்ட ஒளியானது பிரகாசமாகத் தோன்றி நீண்டநேரம் நிலைத்து நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதைத்தான், “வெம்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடுஎழில் தோன்றி வாள்ஒளி மிளிர” என்றார்.

பிரமஞானத் தவங்களைச் செய்யும்போது தேகத்தில் பலநிறங்களைக் கொண்ட ஒளிக்கலைகள் தோன்றிக் கொண்டிருக்கும்.  அவை பெரும்பாலும் சிவப்பு நிறங்களைக் கொண்டு இந்திரகோபப் பூச்சிகளைப் போல மின்னிக் கொண்டிருப்பதால், “எந்தம் பிறவியில் கோபம் மிகுந்து” என்றார்.

சுடராழித் தவத்தில் ஒளிக் கலைகள் ஒலிக் கலைகளோடு ஒன்று சேரும் வைபவம் நடந்தேறும்.  ஒளியும் ஒலியும் புணரும்போது அங்கே ஒலிக்கலைகள் ஒளியோடு உராய்ந்து கொண்டு செல்லும் நிலை ஏற்படும்.  ஒரு பொருளோடு மற்றொரு பொருள் மோதினால் உராய்வு என்கிறோம்.  இதை ஆற்றல் அழிவின்மை விதி கொண்டு சிறிதுமட்டும் ஆராயலாம்.

ஆற்றல் அழிவின்மை விதிப்படி, உராய்வு விசையால் எந்த ஆற்றலும் அழிக்கப்படுவதில்லை. மாறாக அது வேறொரு வகையில் இழக்கப்படுகிறது. ஆற்றல் பிற வடிவங்களில் இருந்து வெப்பமாக மாற்றப்படுகிறது. தரையில் உருளும் ஒரு பந்து நின்றுவிடுவதெதனால் என்றால் அதன் இயக்க ஆற்றல் வெப்பமாக மாற்றப்பட்டு அது இயக்கமற்று போகிறது. வெப்பம் விரைவில் சிதறடிக்கப்படுவதால் அரிஸ்டாட்டில் போன்ற பல பழங்கால தத்துவ மேதைகள் ஒரு இயக்க விசை இல்லையெனில் நகரும் பொருட்கள் ஆற்றல் இழந்துவிடுவன என்று எண்ணினார்.

நியூட்டனின் இயக்கவியல் விதிகளின்படி ஒரு பொருள் சீரான வேகத்தில் செல்ல எந்த விசையும் தேவையில்லை (நியூட்டனின் முதல் விதி). பொருளின் வேகத்தைக் குறைக்கவோ அல்லது கூட்டவோதான் விசை தேவை.

ஒரு விசை (force) ஒரு பொருளின் மேல் செயல்படும்பொழுது அப்பொருள் ‘முடுக்கம்(acceleration) பெறும். அதாவது, அதனின் வேகம் சீராக அதிகரிக்கும்.

குறிப்பிட்ட விசை (F) செயல்பட்டால் ஒரு பொருள் எவ்வளவு முடுக்கம் (a) பெறும் என்பதை அப்பொருளின் நிறைதான் (mass, m) முடிவு செய்யும். ஒரே விசைக்கு நிறை அதிகமுள்ள பொருள் குறைந்த முடுக்கமும் நிறை குறைந்த பொருள் அதிக முடுக்கமும் பெறும். எனவே,

a=F/m (F=ma என்பது நியூட்டனின் இரண்டாவது விதியின் ஒரு கணித வடிவம்!)

நியூட்டனின் இயக்கவியலின் இரண்டாம் விதிப்படி, நிறை குறைந்த பொருளை அதிகளவில் முடுக்கிவிட குறைந்தளவு விசையே போதுமானது. நிறை குறைந்த பொருள்களுக்கு அதிகமாக செயல்பட வைக்க, குறைந்த விசையே போதுமானது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதைத்தான் நாம் சுடராழித் தவத்தில் மறைமுகமாகச் சொல்லாமல் சொல்லி கற்றுக்கொடுத்து வருகிறோம்.

ஒளி என்பது நிறை குறைந்த ஆற்றலாகும்.  இந்த நிறை குறைந்த ஆற்றலை முடுக்கிவிட ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது.  அதுதான் ஒலியாற்றல்.  ஒளியாற்றலோடு ஒலியாற்றல் உரசும் மோதும்போது, அங்கே உராய்தல் நிகழ்ந்து ஒலியாற்றல் வெப்பமாக மாறிவிடுகிறது.  ஒலி வெப்பமாக மாறும்போது, உடன் இருக்கும் ஒளியாற்றலை மேலும் வெப்பத்திற்கு ஆளாக்கிவிடுகிறது.  இதன் காரணமாக ஒளியின் வெப்பஆற்றல் மேலும் அதிகமாகி, அதிகமாகி பேரொளியாகி நம் உயிர் இருக்கும் இடத்தை நோக்கி பெருவெடிப்பாகப் போய்ச்சேரும்.  இந்த ஒளியோடு ஒலி மோதும் பெருவெடிப்பால் அங்கே பலவித நாதங்கள் உண்டாகும்.  இந்த நாதங்களைத்தான் தசவித நாதங்கள் என்கிறார் திருமூலர். இந்த பத்துவகை நாதங்களில் பேரிகை என்ற மேளச் சத்தமும் ஒன்று. ஒளியும் ஒலியும் சேர்ந்தாடிக் கொண்டு, உயிரை அடையும்போது அங்குள்ள உயிரொளியும் இவைகளின் உராய்வு விசைகளால் தூண்டப்பட்டு சத்தமிட்டுக் கொண்டே அசைய ஆரம்பிக்கும்.  இது பார்ப்பதற்கு நடனத்தைப் போன்றே இருக்கும். அதைத்தான், “முரசு எறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கி” என்றார்.

இவ்விடத்தில்தான் இருவினையும் சமரசப்பட்டன ; பட்டு வேறாகத் திரிந்தன.  இருவினை சொரூபமாகிய உடலுயிர் சமரசப்பட்டு வேறாகத் திரிந்தனவாகும் – வேறு செய்யப்பட்டனவாகும் – மாற்றமடைந்தனவாகும்.  எவ்வாறு திரிந்தன – மாற்றம் அடைந்தன?  என்றால் அதனை உணர்த்துதற்காகவே பின்வரும் அரிய பெரிய திருவாக்குகள் எழுந்தன என்பது,

பூவில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும்

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை

இன்றுஎனக்கு எளிவந்து அருளி

அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்

இன்றுஎனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி

அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி                (திருவாசகம் – திருஅண்டப்பகுதி)   

மணம் இருந்தால்தான் அது மலர்.  மணம் வீசாத மலர்களை மனித உயிர்கள் விரும்புவதில்லை.  அதுபோலத்தான் இறைவனும் அவனது அருட்கலைகளை மலராகிய திருவடிகளில் ஒளிமணம் கமழ வீசிக் கொண்டு மலரொளியாக வீற்றிருக்கிறான்.  மலர்களில்தான் மணம் வரும் ; கண்மலர்களில்தான் அருள்மணம் வீசும்.  இந்த அருள்மணமானது இடைவிடாது, திருவடி மலர்களில் தோன்றி மறையாமல் நிறைந்திருக்கும் பெருமையைத்தான், “பூவில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை” என்றார்.

ஞான சற்குருவால் பிரமஞானத் தவம் உபதேசமாகக் கிடைக்கப் பெற்ற சாதகனைச் சுற்றிலும் சிவக் கலைகளும் பஞ்சேந்திரியச் சத்திகளும் சூழ்ந்து கொண்டு நிற்கும்.  இந்த பஞ்சேந்திரியச் சத்திகளின் நடுவில் நின்று (பஞ்சாக்கினி தவம் என்று இதைச் சொல்வார்கள்) சாதகன் சுடராழித் தவத்தைச் செய்வதைத்தான், “இன்று எனக்கு எளிவந்து அருளி” என்றார்.

அழியக்கூடிய இந்த தேகத்தை அழிந்து போகாமல் செய்யக்கூடிய ஒரு சிறந்த பொருள் (ஒண்பொருள்) நமது திருவடியின் மெய்ப்பொருளின்கண்ணே மறைபொருளாகவும் பழம்பொருளாகவும் செம்பொருளாகவும் சிவப்பொருளாகவும் அமைந்துள்ளது என்பதைத்தான், “அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்” என்றார். தேகம் அழியாதபடி இருக்கும் சூக்கும ஞானச் செல்வங்களை தேகத்தில் கொண்டே நாம் பிறவி எடுத்துள்ளோம்.

மூன்று மடக்குஉடைப் பாம்பு இரண்டும் எட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டியிட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே.           (தி.ம.728)

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடன் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே       (தி.ம.752)

அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை

பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்

உண்டி சுருங்கில் உபாயம் பலஉள

கண்டம் கறுத்த கபாலியும் ஆமே            (தி.ம.735)

அதனை குருவின்பால் தீக்கையாகப் பெற்று ஞானச் சாதனைகளை சாதகன் செய்து வருவானேயாகில் அவன் தேகம் அழியா நிலையை அடையும்.  இது முழுக்க முழுக்க பிரமஞானத் தவத்தால் ஒழுகப்படும் ஒரு ஞானதவ நெறியாகும். இந்நிலை அடைய இறைவன் எனக்குள்ளே மிகவும் எளிமையாக எம் உயிருக்குள் வீற்றிருக்கிறான். அத்தகைய எம் இறைவனைப் போற்றிப் புகழ்கின்றேன் என்பதைத்தான், “இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி” என்றார்.

அழிதரும் ஆக்கை – பிராரத்த தனுவாகிய – வினைப்போக தேகமாகிய மருளுடம்பு.  இது அளிதரும் ஆக்கையாக – விமல தேகமாக – விதேகமாக – ரக்ஷக தேகமாக மாற்றமடைந்தது – திரிந்தது எனலாம்.

தடப்பெரும் மதமாகிய விந்து மதம் என்னும் இந்து மதம் சித்திக்கப் பெற்றது என்க.  என்புக்குள் அன்பு என்னும் அப்பில் உள்ள உப்பு கைப்பு என்னும் களிம்பு நீங்கி – துப்பு நீங்கி இன்பமாயிற்று என்பார் “அவயவம் சுவை தரு கோற்றேன் கொண்டு செய்தனன்” என்றார்.  (அவயவம் – உறுப்பு. உறு+உப்பு.)  இது மட்டுமா.  இல்லை, இல்லை.  மூதூர் என்னும் கடவூரைப் (கடத்தை – சரீரத்தை) பற்றிய மும்மலத்தை அருட்பெருந்தீயில் ஒடுக்கினன்.  ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்.  “முத்தி முதல்” எனத் தொடங்கும் திருமந்திரத்தில் சரீரத்தில் இருக்கும் முப்பத்தாறு தத்துவங்களையும் அமலமாக்கினன்.  மயிர்க்கால்தொறும் அமுத தாரைகள் தேக்கின. (மலம் அமலமாயிற்று என்பது) சாதலுறாச் சாதலடையச் செய்தனன்.  அடிக்குடில் வீடு பெற்று மேன்மை அடைந்தது.  அமுதத் தாரைகள் எலும்புத் துவாரங்களில் ஏற்றப்பட்டன.  அள்ளூராக்கை (அள்+ஊறு+ஆக்கை) அமைந்தது. அருட்சத்தி விளைவேறியதால் உடல் அமுதவடிவா யிற்று.  பிணி, மூப்புச் சாக்காடு பிறவியும் ஒழிந்து நித்தியத்துவம் சித்திக்கப் பெற்றது.  ஈதன்றோ மாற்றிப் பிறத்தல் ! ஈதன்றோ துவிஜத்துவம் ! இதுவே நித்தியத்துவம் – முத்தி நெறி என்க.  பின்வரும் திருவாக்குகள் இதனை உண்மையெனச் சொல்ல வரும்.

இவ்வடிவமுடைய சீவன்முத்தர் சிலகாலம் உலக குரவராய் அமைந்து திருவருட் செயலாக ஆவன புரிந்து பின் இவ் அமல வடிவம் அருளாகிக் கரைந்து அருவமாகச் சிதாகாசப் பெருவெளியில் மறைந்து சிவாங்கமாவர் – உண்மைச் சைவ முத்தி அடைவர் என அறிந்து கொள்ள வேண்டும்.  வேத உண்மை இதுவேயாகும்.

இவ்வாறு மாற்றிப் பிறந்து அமலமாய் அருளாய் – வெளியாய் – ஞானாகாச வடிவாய் உலகு கண்டிட மறைந்தவரே – மெய் விண் உறப் பெற்றவரே விதியை வென்றவர் – மாயையை வென்றவர் – மீண்டு வாரா நெறி கண்டவர் – கண்டு நித்தியத்துவம் பெற்றவர் எனலாம்.

மாற்றிப் பிறக்கும் வகை அறியாது மெய்யாகிய உடலைப் பொய்யாக்கி – அதாவது பிணமாக்கி மாயை வலையில் அகப்பட்டு மாண்டு போன மற்றைய சீவர்கள் அசுத்தமான மாயாப் பிரபஞ்சத்துள் மீண்டு வரும் நெறியாகிய பிறவி நெறி கண்டவரே என்பதில் எந்தவித சந்தேகமுண்டோ? சந்தேகம் அடையவும் வேண்டுமோ? “மெய் விண் உறுவார்க்கில்லை விதி” என்று வெள்ளிடை மலைபோல் கூறி விட்டாளே ஆதி சத்தியின் அவதாரம் என்று போற்றப்பட்ட ஔவை இதனை நோக்கினார் உண்டோ? இதனினும் சிறந்த பிரமாணம் வேறு வேண்டுமோ? உடல் பிணமாதல் பிறவி நெறி என்பது இதனால் நன்கு புலப்படவில்லையா?

உணர்வது எல்லாம் உடம்பின் பயனே

உணர்க உணர்வு உடையார்

என்றார் ஔவை. “உள்ளது சொன்னோம் உணர்வுடையோர்க்கே” என்றார் திருமூலர்.  “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்றார் தொல்காப்பியர்.  ஆதலால் உணர்வுடையார் உணர்ந்து கொள்க.  அல்லாத அபிமானிகள் அந்தளவிலேயே மகிழ்ந்து கொள்ளட்டும்.

இதுவரை நாம் பேசியதிலிருந்து கற்பனைகள் வாயிலாக உண்மை கண்டுணர்ந்து குரு நெறி கடைப்பிடித்து மாற்றிப் பிறக்கும் வழி தெரியாது, அக்கற்பனைகளையே உண்மை என நம்பி வாழ்வதால் அற முதல் நாற்பொருட் பயனை அடைதல் என்பது முடியாத காரியம் என்பதும், இருவினை சமரசப்படுதலால் உடலுயிர் விமலமாய் அமலமாய் மாற்றமடைதலே மாற்றிப் பிறத்தலாகிய துவிஜத்துவம் என்பதும், அத்தகைய மாற்றிப் பிறப்பதற்காக நித்தமும் பிரமஞானத் தவத்தைச் செய்து வாழும் அமல மெய்யடியார்களே விதியை வென்று அருளாய் வெளியாய்ச் சிதாகாசப் பெருவெளியில் உலகு கண்டிட மறைந்து உண்மை முத்தி அடைவார்கள் என்பதும், இதுவே மீண்டும் வாரா உண்மை நெறியான மருவா நெறி என்பதும் நாம் முடிவாக உணர்ந்து கொள்வோம் என்று சொல்லி, கேட்டுக் கொண்டிருக்கும் அத்தனை ஆன்மாக்கள் பிரமஞானம் அடைவதற்காக இப்பேச்சுரையை வழங்கியதற்கும், இந்த அனைத்து ஆன்மாக்களும் மாற்றிப் பிறக்கும் தேவ இரகசியத்தை அறிந்து கொண்டதற்கும் என்றென்றும் குருவின் சேவையே சுவாசமாக கொண்டு விளங்கும் உங்கள் ருத்ர ஷிவதா எம் சற்குருவான ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகளையும் திருவடி வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து பணிவோடு விடை பெறுகிறோம்.

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் என்னும் தேன்

அனைத்து ஆன்மாக்களும் மாற்றிப் பிறந்து

பரிபூரண நித்தியத்துவ பிரமஞானம் அடைவீர்களாக !

அடையக் கடவீர்கள் என்று ஆசிர்வதித்து மகிழ்கின்றோம் !!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் !!  திருச்சிற்றம்பலம் !!!